அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்பு அழுத்தங்களுக்கு இடையே இந்தியா ஆட்பட்டிருக்கும் வேளையிலும், சீனாவுக்கான ஏற்றுமதிகள் அதிகரிக்கவே செய்கின்றன
விஜயன் (தமிழில்)

2026ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைக் காட்டிலும் 18 விழுக்காடு உயர்ந்து, 4.4 பில்லியன் டாலர்கள் எனும் குறிப்பிடத்தக்க அளவை அடைந்து, வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. முன்னதாக இதே காலகட்டத்தில் இரு ஆண்டுகளாக ஏற்றுமதி சரிவைச் சந்தித்திருந்த நிலையில், இந்த மீட்சி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதைச் சுட்டிக்காட்டி, இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கும் அச்சுறுத்தலான சூழலிலும், சீனாவுடனான வர்த்தக உறவுகள் புத்துயிர் பெற்று வருவது ஆழ்ந்து நோக்கத்தக்கது. இந்த புதிய வரி விதிப்புகள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன.
ஏப்ரல்-ஜூன் மாதங்களில், சீனாவுக்கான பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 452 மில்லியன் டாலர்களிலிருந்து 865 மில்லியன் டாலர்களாக, கிட்டத்தட்ட இருமடங்காகப் பெருகியுள்ளது. பிற முக்கிய ஏற்றுமதிப் பொருட்களும் இதேபோன்று வளர்ச்சியைக் கண்டன: மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி 33 விழுக்காடு உயர்ந்தது; கரிம இரசாயனங்கள் 26 விழுக்காடு அதிகரித்து 147 மில்லியன் டாலர்களை எட்டின; கடல்சார் பொருட்கள் 5 விழுக்காடு வளர்ச்சி கண்டன.
வர்த்தகத்தில் ஏற்பட்ட இந்த ஏற்றம், புத்துயிர் பெற்ற அரசியல் பேச்சுவார்த்தைகளுடன் சேர்ந்தே நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் சிறப்பு அழைப்பின் பேரில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். சிறப்புப் பிரதிநிதிகள் நடத்திய இந்த உரையாடலின் போது, இந்தியா-சீனா உறவுகள் மேன்மேலும் வலுப்பெற்று செழித்திட, எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவதன் இன்றியமையாமை குறித்து இரு தரப்பினரும் ஆழமாக விவாதித்தனர்.
லிபுலேக், ஷிப்கி லா, நாது லா போன்ற கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகப் பாதைகளை மீண்டும் திறப்பது, நேரடி விமானச் சேவைகளை மீண்டும் துவங்குவது, வணிகம் மற்றும் சுற்றுலாவுக்கான விசா விதிமுறைகளைத் தளர்த்துவது, புனித யாத்திரைகளை ஊக்குவிப்பது, மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தையும் முதலீடுகளையும் பெருக்குவதற்கு ஆதரவளிப்பது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் அவர்கள் இசைவு தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்ற 2025ம் ஆண்டுக்கான SCO உச்சி மாநாட்டில், இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் உரையாற்றுகையில், சீனா "வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவிற்கு தோள் கொடுக்கும்" எனத் தெரிவித்தார். மேலும், இருபெரும் அண்டை நாடுகளுக்கு, "ஒத்துழைப்பும் ஒற்றுமையே பொதுவான வளர்ச்சிக்கு உள்ள ஒரே வழி" என்பதையும் அவர் ஆழமாக வலியுறுத்தினார்.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.indiatoday.in/diu/story/india-us-tariff-trade-china-export-beijing-new-delhi-trump-2775370-2025-08-22
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு