டிரம்ப் வரிவிதிப்பின் தாக்கம்: டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், மருந்து மற்றும் உலோகத் துறைகளை உலுக்கும் நெருக்கடி
விஜயன் (தமிழில்)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுங்க வரிகளை உயர்த்தப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்த மாற்றம் பல இந்திய நிறுவனங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ கணிசமான அளவில் பாதிப்பை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்பத் துறை கார்ப்பரேட்டுகள், டாடா மோட்டார்ஸ் போன்ற வாகனத் துறை கார்ப்பரேட்டுகள், சன் பார்மா மற்றும் சிப்லா போன்ற மருந்துத் துறை நிறுவனங்கள்(இவை தற்போது பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன) மட்மல்லாது நேஷனல் அலுமினியம் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற உலோகத் துறை கார்ப்பரேட் நிறுவனங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
பங்குச் சந்தையில் இதன் எதிர்மறைத் தாக்கம் ஏற்கனவே எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. மருந்து, வாகனம், தகவல் தொழில்நுட்பம், அலுமினியம், எஃகு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகள் கடந்த இரண்டு நாட்களில் கணிசமாக வீழ்ச்சியடைந்தன. வெள்ளிக்கிழமை(ஏப்ரல்-4) அன்று, சந்தையின் முக்கிய குறியீடுகள் 1.22 சதவீதம் சரிந்தன. இத்தகைய உயர்ந்த வரிகள், இந்தியாவின் ஏற்றுமதித் தொழில்களைப் பெரிதும் சீர்குலைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சீர்குலைவு, வேலை இழப்புகளையும், லாபக் குறைவையும், வருவாய் சரிவையும் ஏற்படுத்தலாம். இந்திய வணிக நிறுவனங்கள் இந்த வரி உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், சர்வதேச அளவில் போட்டித்தன்மையுடன் நிலைநிறுத்திக் கொள்ளவும் புதிய வழிகளைத் தேடி வருகின்றன. CareEdge Ratings அறிக்கையின்படி, இந்த உயர்ந்த வரிகளால் இந்தியாவின் ஏற்றுமதியில் ஏற்படும் நேரடி இழப்பு சுமார் 9 பில்லியன் டாலர் முதல் 13 பில்லியன் டாலர் வரை மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது; இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 0.2 முதல் 0.3 சதவீதமே ஆகும். இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவையை வலுவாக சார்ந்திருப்பதால், இந்தத் தாக்கத்தின் கடுமையைத் தணிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இடுபொருள்களின் விலை உயர்வும், நகர்ப்புற நுகர்வோரின் செலவினங்களில் ஏற்பட்ட மந்தநிலையும் ஏற்கனவே டிசம்பர் 2024 இல் முடிவடைந்த காலாண்டிற்கான நிறுவன வருவாயைப் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள சூழலில்தான் டிரம்பின் இந்தக் கடும் வரித்தாக்குதலும் நிகழ்ந்துள்ளது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் 2025 மார்ச்-ல் முடிவடைந்த காலாண்டிற்கான குறைந்த இலாபங்களையும், குறைந்த விற்பனை புள்ளிவிவரங்களையும் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது கடினமான வர்த்தகச் சூழல் நிலவுவதையேக் காட்டுகிறது. இந்த வரி விதிப்பு மாற்றங்களால், நடப்பு(2025-26) நிதியாண்டில் இந்தியாவின் முதல் காலாண்டில் நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறித்து ஒருவித நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. டிரம்பின் வரிகளால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள், ஏறக்குறைய அனைத்துத் தொழில்துறைகளிலும் எதிரொலிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் மேலும் 3.07 சதவீதம் வீழ்ச்சியுற்றன. அதேபோல், இன்ஃபோசிஸ் பங்குகளும் 3 சதவீதம் சரிவைச் சந்தித்தன. அமெரிக்க நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்காகச் செலவழிப்பதைக் குறைத்துக்கொள்ளக்கூடும் என முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் அடிப்படை ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் சுமித் பொக்ரானா கூறுகையில், உயர்த்தப்பட்ட வரிகள் அமெரிக்காவில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கலாம், இது ஏற்கனவே அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் 2 சதவீத இலக்கை விஞ்சி நிற்கிறது. இந்தப் பணவீக்கம் மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புத் திட்டங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம், இது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பொதுவாகவே ஒரு பாதகமான சூழலை உண்டாக்கும் என அவர் விளக்கினார்.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதி வருவாயில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை அமெரிக்காவிலிருந்தே பெறுகின்றன. அமெரிக்காவின் வர்த்தக பங்காளி நாடுகள் அமெரிக்க ஏற்றுமதிகள் மீது பதிலடி வரிகளை விதித்ததால், மெல்லக் குறைந்து வந்த உலகளாவிய பணவீக்கம் மீண்டும் தலைதூக்கக்கூடும். டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகளும் வெள்ளிக்கிழமை 6.15 சதவீதம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. வட அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், இலகு ரக லாரிகள் மற்றும் சில வாகன உதிரி பாகங்கள் மீது 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்ததன் பின்னணியில்தான் இந்த வீழ்ச்சி நிகழ்ந்தது. டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) தனது வருவாயில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை அமெரிக்கச் சந்தையிலிருந்தே பெறுகிறது.
மேலும், ஏறத்தாழ 150 வகையான வாகன உதிரி பாகங்களும் இத்தகைய வரித்தாக்குதலால் பாதிப்பிற்கு உள்ளாகலாம். கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கான அடிப்படை ஆராய்ச்சியின் துணைத் தலைவர் அருண் அகர்வால் கூறுகையில், இந்த நடவடிக்கை அமெரிக்காவில் கார் விலைகளை உயர்த்துவதுடன், உதிரிபாக விநியோகஸ்தர்கள் மீது செலவுகளை குறைக்க வேண்டிய அழுத்தத்தையும் உருவாக்கும். கார் விலைகள் உயர்ந்தால், அமெரிக்க கார் சந்தையில் விற்பனை அளவு கணிசமாகக் குறையலாம், இது அமெரிக்க கார் மற்றும் இலகு ரக லாரித் தொழிலுக்கு உதிரி பாகங்களை வழங்கும் விநியோகஸ்தர்களின் வருவாயைப் பெருமளவில் பாதிக்கும். தங்களது வாகன உதிரி பாகங்களில் 20 சதவீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பாரத் ஃபோர்ஜ்(Bharat Forge) நிறுவனத்தின் பங்கு 8.46 சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், மாருதி சுசுகி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா போன்ற வாகன உற்பத்தியாளர்கள் இந்த நடவடிக்கைகளால் குறைந்த அளவே பாதிக்கப்படுவார்கள் என்றும், கணிசமான இழப்பைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சன் பார்மா, சிப்லா உள்ளிட்ட முன்னணி மருந்து நிறுவனங்களும் டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரஸ்பர வரிகள் விதிக்கப்படும் என்ற கொள்கையின் அடுத்த கட்ட நடவடிக்கையில் மருந்து நிறுவனங்களையும் உள்ளடக்கிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று, சன் பார்மாவின் பங்குகள் 3.43 சதவீதமும், சிப்லாவின் பங்குகள் 5.32 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. 2024ம் நிதியாண்டில், இந்தியா அமெரிக்காவிற்கு 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது, இது இந்திய மருந்துப் பொருட்களுக்குப் பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பொதுவான மருந்துகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்தியா பூர்த்தி செய்கிறது. அமெரிக்க அரசு விதிக்கும் எந்தவொரு வரி உயர்வும் இந்த ஏற்றுமதிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (USFDA) அங்கீகரிக்கப்பட்ட 650க்கும் மேற்பட்ட உற்பத்தி வசதிகள் இந்தியாவில் அமைந்துள்ளன, இது அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளில் இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். அமெரிக்காவிற்கு வெளியே, இத்தகைய சான்றளிக்கப்பட்ட ஆலைகளில் கால் பகுதியை இந்தியா கொண்டிருக்கிறது என்று Crisil மையத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எஃகு மற்றும் அலுமினியத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களும் கடும் சவால்களை எதிர்கொள்ளவுள்ளன. டிரம்பின் வரிகள் விதிக்கப்பட்ட பிறகு, சில ஆசிய நாடுகள் மலிவு விலை உலோகப் பொருட்களை இந்தியச் சந்தையில் கொட்டிக் குவிப்பதற்கும் வாய்ப்புள்ளது என அவை அஞ்சுகின்றன, இது இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையலாம். நேஷனல் அலுமினியம் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 8.6 சதவீதம் சரிந்துள்ளன. வரும் காலாண்டுகளிலும் அவற்றின் லாபம் அதிகரிக்காமல் போவதற்கே வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரவிந்த், ரேமண்ட் போன்ற ஜவுளி நிறுவனங்களின் பங்குகளும் சந்தையின் பொதுவான சரிவுக்கு உட்பட்டு வீழ்ந்தாலும், அவை இந்த புதிய வர்த்தகக் கொள்கையால் பயனடைய வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் மீது அமெரிக்க அரசு 27 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த வரி விகிதம், சீனா (54 சதவீதம்), வியட்நாம் (46 சதவீதம்), பங்களாதேஷ் (37 சதவீதம்) மற்றும் பாகிஸ்தான் (30 சதவீதம்) போன்ற உலகின் பிற முக்கிய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மீது விதிக்கப்படும் வரிகளை விட குறைவானதாகும். இந்த நிலைமை இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதோடு, அமெரிக்காவின் ஜவுளி ஏற்றுமதிச் சந்தையில் அதன் பங்கை விரிவுபடுத்த புதியதொரு வாய்ப்பையும் உருவாக்கித் தரலாம். அரவிந்த் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாகும்.
உயர்த்தப்பட்ட வரிகளின் சுமை, இறுதிப் பொருட்களின் விலையேற்றமாகப் பகுதி அளவில் நுகர்வோர் மீது சுமத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இடைக்கால அளவில் சந்தைத் தேவையைக் குறைக்க வழிவகுக்கும். இந்தியா அல்லது அதன் போட்டி நாடுகள் மீது விதிக்கப்படும் வரிகளில் ஏற்படக்கூடிய எதிர்கால மாற்றங்களை இவற்றை புரிந்துகொள்ள முடியும் என்றும் Crisil ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://indianexpress.com/article/business/trump-tariffs-india-inc-tcs-infy-tata-motors-sun-pharma-9924190/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு