2022-23 ஆண்டில் கார்ப்பேரட் நிறுவனங்களால் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நன்கொடையில் 90 சதவீதம் பாஜகவிற்கே சென்றுள்ளது
இந்தியத் தேர்தல்கள் குறித்து கண்காணித்து வரும் ஒரு தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, மொத்தமாக 850.438 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது எனத் தேசியக் கட்சிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன; இதில் 719.858 கோடி ரூபாய் பாஜக என்ற ஒற்றைக் கட்சிக்கு மட்டுமே சென்றுள்ளது என அதே அறிக்கை வெளிப்படுத்துகிறது.
2022-23ம் நிதியாண்டில் மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நிதியில், பாஜக என்ற ஒற்றைக் கட்சிக்கு மட்டுமே 90 சதவீத நிதி சென்றுள்ளது என ஜனநாயக சீர்திருத்திற்கான தொண்டு நிறுவனம்(ADR) வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தது. தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெறிவருவதற்கு முன்புதான் இந்த அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஒட்டுமொத்தமாகவே பிற கட்சிகள் கார்ப்பரேட்களிடமிருந்து பெற்ற நிதியென்பது கிட்டத்தட்ட 70 கோடியைத் தாண்டவில்லை, அதே நேரத்தில், பாஜகவிற்கு 610.491 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
இது மட்டுமல்லாது, 2022-23ம் நிதியாண்டில், மொத்தமாக 850.438 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது எனத் தேசியக் கட்சிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன; இதில் 719.858 கோடி ரூபாய் பாஜக என்ற ஒற்றைக் கட்சிக்கு மட்டுமே சென்றுள்ளது என்பதும் அதே அறிக்கையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நேஷனல் பீப்பில்ஸ் பார்ட்டி(NPP) ஆகிய கட்சிகள் இதே நிதியாண்டில் பெற்ற நிதியைவிட பா.ஜ.க.விற்கு ஐந்து மடங்கு அதிக நிதிக் கிடைத்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, 2022-23ம் நிதியாண்டில் 20,000 ரூபாய்க்கு மேல் கிடைத்த நன்கொடைகள் குறித்து தேசியக் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டே ADR தொண்டு நிறுவனத்தின் அய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதே அறிக்கையின்படி, காங்கிரஸ் கட்சிக்கு 79.92 கோடியும், ஆம் ஆத்மி கட்சிக்கு 37 கோடியும், NPP கட்சிக்கு 7.4 கோடியும், CPI(M) கட்சிக்கு 6 கோடியும் கிடைத்துள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட நிதியாண்டில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 20,000க்கு மேற்பட்ட நன்கொடைகள் கிடைக்கவில்லை என சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.
முந்தைய நிதியாண்டோடு(2021-22) ஒப்பிடுகையில், மொத்தமாக தேசிய கட்சிகளுக்கு 91.701 கோடி ரூபாய் அல்லது 12.09 சதவீதம் அளவிற்கு இந்தாண்டு(2022-23) அதிகமாகவே நிதிக் கிடைத்துள்ளது.
பா.ஜ.க.வை பொறுத்தமட்டில், முந்தைய நிதியாண்டோடு(2021-22) ஒப்பிடுகையில், 614.626 கோடி என்ற நிலையிலிருந்து 719.858 கோடி என்ற அளவிற்கு இந்தாண்டு(2022-23) அதிகமாகவே கிடைத்துள்ளது. இதற்கு மாறாக, காங்கிரஸ் கட்சிக்கு முந்தைய ஆண்டு கிடைத்த 95.459 கோடியிலிருந்து குறைந்து இந்தாண்டு(2022-23) 79.924 கோடியே கிடைத்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலவாரியாக பார்க்கும்போது, தேசியக் கட்சிகளுக்கு தில்லி, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலிருந்தே முறையாக 276.202 கோடி, 160.509 கோடி, 96.273 கோடி என்ற அடிப்படையில் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக வழங்கப்பட்ட நிதிகளில், 680.495 கோடி அல்லது 80.017 சதவீத நிதிகள் கார்ப்பரேட் மற்றும் வணிகம் சார்ந்த துறைகளிலிருந்தே அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லாமலிருந்த நிலையில், தேர்தல் பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலை மேலும் பூதாகரமாகியுள்ளது என்ற அம்சமே எதிர்க் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு இடையில் வெடிக்கும் மோதலுக்கான மையப் புள்ளியாக இருக்கிறது.
தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லத்தக்கதா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நடந்த விசாரனைகள், கடந்த 2023ம் ஆண்டு நவம்பரோடு முடிந்த நிலையில் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 15, 2024ல் வெளியானது. தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதெனக் கூறி அதை ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்கள் வழியாக ஊர்பெயர்த் தெரிவிக்காமல், மொட்டையாக வழங்கப்படும் அநாமதேய நன்கொடைகள் தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கும், அரசிலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சரத்து 19(1)(a)விற்கும் எதிரானது எனத் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்பட்ட நிதியாதாரங்கள் குறித்து அதாவது எந்தெந்தக் கட்சிகளுக்கு எவ்வளவு நிதிக் கொடுக்கப்பட்டுள்ளது(இதில் கொடுக்கப்பட்டவரின் பெயரும் இடம்பெறலாம்) என்பன போன்ற விவரங்களையும் உள்ளடக்கிய தகவல்களை எஸ்.பி.ஐ வங்கி தொகுத்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
வருகிற மார்ச் 13-ம் தேதிக்குள்ளாக, அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதை வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படுவதும் இத்தோடு நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் சேர்த்தே தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை : https://thewire.in/politics/bjp-received-almost-90-of-all-corporate-donations-to-political-parties-in-2022-23