பொதுசிவில் சட்டம் : இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு கேடு விளைவிக்கும்

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் கே.சி.ஆர், நாடாளுமன்ற விவாதத்திற்கான திட்டத்தை உருவாக்குமாறும் தலைவர்களை கேட்டுக்கொள்கிறார்

பொதுசிவில் சட்டம் : இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு கேடு விளைவிக்கும்

தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி (BRS) தலைவருமான K சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்.) சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டத்தை (UCC) எதிர்க்க திங்களன்று முடிவு செய்து பாரதிய ஜனதா கட்சி (BJP) மீது தாக்குதலை தொடுத்தார்.

அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர்களான ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் பிரகதி பவனில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் கேசிஆரை சந்தித்து UCCயை எதிர்க்குமாறு வலியுறுத்திய சில மணிநேரங்களில் இந்த செய்தி வந்தது. கே.சி.ஆரை ஒத்த எண்ணம் கொண்ட மற்ற கட்சிகளை அணுகி அவர்களையும் குழுவில் கொண்டு வருமாறு வாரிய உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.

"UCC இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் மற்றும் நாட்டைப் பிரிக்கும் முயற்சி" என்றும் "UCC மசோதா மூலம் அரசியல் ஆதாயங்களைப் பெற சமூகங்களுக்கு இடையே மோதல்களைத் தூண்டிவிட்டு மக்களை பிளவுப்படுத்தும் அரசியலை மத்திய அரசு ஊக்குவிக்கிறது" என்றும் அதிகாரபூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி முதலமைச்சர் கேசிஆர் பேசியுள்ளார்.

UCC தொடர்பான விவாதங்கள் பழங்குடியினர், இந்துக்கள் மற்றும் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்ட சமூகத்தின் பிற பிரிவினரை குழப்ப நிலைக்குத் தள்ளியுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார். மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கான செயல் திட்டத்தைத் தயாரிக்குமாறு நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கே.கேசவ ராவ் மற்றும் நாம நாகேஷ்வர் ஆகியோருக்கு அவர் வழிகாட்டினார்..

UCC யை எதிர்த்து ஆந்திர முதல்வரிடம் ஓவைசி முறையீடு

கே.சி.ஆரைச் சந்தித்த பிறகு, ஒவைசி, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் UCC-யை எதிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

UCC என்ற பெயரில் இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் பன்முகத்தன்மையை பாஜக அச்சுறுத்தலுக்குள்ளாக்குகிறது என்றார் ஹைதராபாத் மக்களவை எம்.பி. "UCC அறிமுகப்படுத்தப்பட்டால், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பாதிக்கும். ஒரு குடும்பத்தை எப்படி இரு வேறு சட்டங்களால் ஆள முடியும் என்பது போன்ற கருத்துக்களை பிரதமர் மோடி கூறி நாட்டை தவறாக வழிநடத்துகிறார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரண்டும் இந்தியாவின் பன்முகத்தன்மையின் மீது அடிப்படையிலேயே சிக்கலை கொண்டுள்ளன" என்று அவர் கூறினார்.

UCC பற்றிய AIMIMன் நிலைப்பாட்டை பேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் வாரிஸ் பதான், “நாங்கள் UCC ஐ எதிர்க்கிறோம். நாட்டில் பொது சிவில் சட்டம் தேவையில்லை என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பில், 14, 16, 26 மற்றும் 29 ஆகிய பிரிவுகளின் மூலம் அனைவரின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியப் பிரதேசத்திலோ அல்லது அதன் எந்தப் பகுதியிலோ வசிக்கும் குடிமக்களில் எந்தவொரு பிரிவினரும் தனித்துவமான மொழி, எழுத்து அல்லது அதன் சொந்த கலாச்சாரம் அதைப் பாதுகாக்க உரிமை உண்டு. நாட்டில் பல்வேறு கலாசாரங்களை கடைப்பிடிக்கும் பல்வேறு மக்கள் உள்ளனர். பிறகு எப்படி UCC கொண்டு வர முடியும்? மிக முக்கியமாக, UCC க்கு இதுவரை வரைவு எதுவும் இல்லை. UCCயை பயன்படுத்தி மக்களை பிளவுப்படுத்த பாஜக முயற்சிக்கிறது” என்றார்.

இருப்பினும், UCC அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று பாஜக கூறுகிறது.

UCC மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெலுங்கானா பாஜக துணைத் தலைவர் என்விஎஸ்எஸ் பிரபாகர் தெரிவித்துள்ளார். “இப்போதே, நமது பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்கிறார். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் UCC ஐ ஆதரிக்கின்றனர், மேலும் பிரதமர் அதை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிக்கிறார். இந்த விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டது,” என்று அவர் நியூஸ் 18 க்கு தெரிவித்தார்.

“பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட வழக்கில், கட்சிகள் அதிகாரப்பூர்வமாக ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடித்தாலும், கட்சி கட்டுப்பாடுகளை மீறி பலர் இந்த நடவடிக்கையை ஆதரிப்பதை நாம் கண்டோம். இவ்வகையான ஆதரவின் காரணமாகவே ராஜ்யசபா மற்றும் லோக்சபா இரண்டிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக பல தரப்பினரிடையே கடும் பிளவு ஏற்பட்டது. UCC விவகாரத்திலும், அதேபோல மீண்டும் நிகழலாம்," என்று அவர் மேலும் கூறினார்.

(ஸ்வஸ்திகா தாஸ் & ககோலி முகர்ஜி)

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.news18.com/politics/uniform-civil-code-kcr-asaduddin-owaisi-brs-ucc-parliament-india-diversity-telangana-8302111.html