டிரம்ப்பின் சுங்கவரிப் போரும் இரட்டை ஊன்றுகோலில் தள்ளாடும் மோடி அரசும்

விஜயன் (தமிழில்)

டிரம்ப்பின் சுங்கவரிப் போரும் இரட்டை ஊன்றுகோலில் தள்ளாடும் மோடி அரசும்

டொனால்ட் டிரம்ப்புடன் தமக்குள்ள நட்பை மோடி எவ்வளவு புகழ்ந்து பேசினாலும், டிரம்ப் இந்தியா மீது தொடுத்துள்ள சுங்கவர்ப் போரின் கசப்பான உண்மையை ஒருபோதும் மறைத்துவிட முடியாது. நட்பு குறித்த இந்தச் சொல்லாடல்கள் (கதைகள்) இப்போது நகைப்புக்குரிய ஒன்றாகிவிட்டன. இந்தச் சுங்கவர்ப் போரின் வீரியத்தை அதன் உடனடி விளைவுகளிலிருந்தே நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்: வரிகள் விதிக்கப்பட்ட முதல் நாளிலேயே, சென்செக்ஸ் குறியீடு 849 புள்ளிகள் சரிவைக் கண்டது. முதலீட்டாளர்கள் சுமார் ரூ. 5.41 இலட்சம் கோடியை இழந்ததுடன், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ. 449.45 இலட்சம் கோடியாகக் குறைந்தது.

மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துறை ஜவுளித் துறையே ஆகும். பல ஜவுளித் தொழிற்சாலைகள் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளன அல்லது வெளியீட்டின் அளவைக் கணிசமாகக் குறைத்துள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே தங்கள் வேலைகளை இழந்து, வீதிகளில் அவலப்பட்டு போராடி வருகின்றனர். இது வெறும் ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்தில், ஜவுளித் துறையிலும் மற்ற ஏற்றுமதி சார்ந்த தொழில்களிலும் வேலையின்மை பல மில்லியன்களை (இலட்சக்கணக்கானோரை) எட்டும்.

டிரம்ப்பின் சுங்கவரிகள் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்கக்கூடும் என்று  ஆரம்ப மதிப்பீடுகளின்படி கூறப்பட்டு வந்தது. 2024-ம் நிதியாண்டில், அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 77.5 பில்லியன் டாலர்கள் ஆகும். இதன் பொருள், அமெரிக்காவிற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஏறக்குறைய 62% இப்போது குறைக்கப்பட்டு, வர்த்தக சமநிலை அமெரிக்காவிற்குச் சாதகமாகத் தலைசாய்ந்துவிடும்.

சிங்கி இறால் வகைகள் (lobsters), கரிம இரசாயனங்கள், ஜவுளி, வைரம் மற்றும் தங்க நகைகள், மின் மற்றும் இயந்திர சாதனங்கள், தோல் பொருட்கள், காலணிகள், மரச்சாமான்கள், படுக்கை விரிப்புகள் ஆகிய ஏற்றுமதிப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இனிமேல், இந்தப் பொருட்களில் பெரும்பாலானவற்றின் மீது 50% க்கும் அதிகமான வரிகள் விதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக:

இறால் ஏற்றுமதிக்கு – 60% வரி

தரை விரிப்புகளுக்கு – 53% வரி

ஆடைகளுக்கு – 59% வரி

வைரம் மற்றும் தங்க நகைகளுக்கு – 52% வரி

இவ்வளவு அதிகமான வரிகள் விதிக்கப்படுவதால், இந்தியப் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் மிகவும் விலை உயர்ந்ததாக மாறிவிடும், இது தேவை குறைவதற்கு வழிவகுக்கும். அமெரிக்காவில் கொள்முதல் குறைவது, இந்தியாவில் உள்ள தொழிற்சாலைச் செயல்பாடுகளை நேரடியாக முடக்கும். தொழிற்சாலைகள் மூடப்படும்போது, வேலையின்மை அதிவேகமாக உயரும், தொழிலாளர்களின் வாங்கும் திறன் மேலும் குறையும், இதனால் ஏற்கனவே பலவீனமாக உள்ள இந்தியப் பொருளாதாரம் மற்றுமொரு பொருளாதார மந்தநிலையை நோக்கி நகரும்.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள, "சுதேசியத்தைத் தழுவுவோம்" என்ற பழைய முழக்கத்தை மீண்டும் முழங்குவதைத் தவிர வேறு எந்தச் செயல் திட்டமும் மோடி அரசிடம் இல்லை. ஆனால் இந்த முழக்கம் இன்று எவ்விதப் பொருளுமற்றதாகிவிட்டது. "இந்தியத் தயாரிப்பு" (Made in India) என்பது ஏற்கனவே "இந்தியாவில் தயார் செய்" (Make in India) என்று மாற்றியமைக்கப்பட்ட நிலையில், சுதேசி என்ற கருத்தே ஓரங்கட்டப்பட்டுவிட்டது. தாராளமயமாக்கல் கொள்கைகள் ஒவ்வொரு துறையையும் வெளிநாட்டு மூலதனத்திற்காகத் திறந்துவிட்ட நிலையில், எந்தவொரு பொருளும் முழுமையான சுதேசியமாக இல்லை. உற்பத்தியின் ஒவ்வொரு அலகிலும் வெளிநாட்டு முதலீடு கலந்துள்ளது, மேலும் இலாபம் உலகளாவிய சந்தைகளுடன் பிணைக்கப்பட்டுவிட்டது. பெயரளவுக்குச் சுதேசியமாகத் தோன்றும் பல பொருட்கள் கூட வெளிநாட்டு மூலதனத்தின் துணையுடன்தான் தயாரிக்கப்படுகின்றன.

அதேவேளையில், பெருநிறுவனக் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான அரசாங்கக் கொள்கைகள் காரணமாக, சாமானிய மக்களின் வாங்கும் சக்தி கடுமையாகச் சரிந்துள்ளது. பெரும்பாலான குடும்பங்களுக்குச் சுதேசிப் பொருட்கள் மிக அதிக விலை கொண்டவையாகத் தோன்றும் நிலையில், வெளிநாட்டுப் பொருட்கள் மலிவாகக் கிடைக்கின்றன. தேசபக்திக் கூச்சல்களைக் காட்டிலும் வாழ்வாதாரத் தேவைகளே மேலோங்கி நிற்கின்றன. வாய்ச்சவடால் அடிக்கும், பாஜக தலைவர்களே அந்நியப் பொருட்களைப் பயன்படுத்துவதாகக் தெரியவந்தால், அவர்கள் சாதாரண மக்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

2024–25 ஆம் ஆண்டில், உலகிற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 821 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அமெரிக்க வரிகள் காரணமாக, மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதிகள் பாதிக்கப்படாமல் இருந்தாலும்கூட, இந்திய ஏற்றுமதிகள் நேரடியாக 6% குறையும். இருப்பினும், இந்த மதிப்பீடு நேர்மறையான அம்சங்களைக் கணக்கில் கொண்டு மட்டும் கணிக்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் சுங்கவரிப் போர் என்பது உலகளாவியது. உலகப் பொருளாதாரம் மந்தமடையும்போது, இந்தியாவின் பிற சந்தைகளுக்கான ஏற்றுமதிகளும் நிச்சயம் குறையும்.

டிரம்ப்பின் சுங்கவரிகளிலிருந்து இந்திய விவசாயிகளைப் பாதுகாப்பதாக அரசாங்கம் உறுதியளிக்கிறது. ஆயினும்கூட, அது அமெரிக்காவின் அழுத்தத்திற்குக் கட்டுப்பட்டு, பருத்திக்கான இறக்குமதி வரியை 11% குறைத்துள்ளது. இந்த முடிவு, வெளிநாட்டுப் பருத்தி இந்தியச் சந்தைகளில் வெள்ளமெனப் பாய்வதற்கும், விலைகள் மேலும் சரிவதற்கும் வழிவகுக்கும். சி-2 அடிப்படையிலான குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price - MSP) கிடைக்காததால் இந்திய விவசாயிகள் ஏற்கனவே கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பருத்தியைப் பொறுத்தவரை, விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு 2,365 ரூபாய் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர். இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டதிலிருந்து, பருத்தி விலைகள் ஒரு குவிண்டாலுக்கு 1100 ரூபாய் என ஏற்கனவே வீழ்ச்சியடைந்துவிட்டன. இந்த விலைச் சரிவு பல பருத்தி விவசாயிகளை கடன் சுமையிலும் தற்கொலைக்கும் தள்ளிவிடும். டிரம்ப் இந்தியாவை அழுத்தும்போது, மோடி அரசு சரணடைகிறது, விவசாயிகளைத் தவிக்க விடுகிறது என்பதையே இது காட்டுகிறது.

இந்த ஆண்டு தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது, சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கங்கள் அரிதாகவே கேட்கப்படும். டிரம்ப்பின் சுங்கவரிகளிலிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்காக, மோடி மீண்டும் ஒருமுறை சீன அதிபரிடம் கைகுலுக்கச் சென்றுள்ளார். மலிவான பெட்ரோலியத்தை வழங்குவதால், ரஷ்யாவையும் ஒதுக்கி வைக்க முடியாது. மோடி அரசாங்கம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மத-தேசியவாதக் கட்டமைப்பிற்குள் மறுவடிவமைப்பு செய்துள்ள நிலையில் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வாய்ப்பேயில்லை. இப்போது, உள்நாட்டில் அதிகாரத்தைத் தற்காத்துக் கொள்ளச் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் என்ற இரண்டு ஊன்றுகோலைச் சார்ந்து இருப்பது போலவே, வெளிநாடுகளில் ரஷ்யா மற்றும் சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆளும் சங்பரிவார கும்பல்களால் ஊக்குவிக்கப்படும் போலி தேசியவாதத்தின் யதார்த்தம் இதுவே ஆகும்.

சஞ்சய் பராதே, சத்தீஸ்கர் கிசான் சபாவின் துணைத் தலைவர், அகில இந்திய கிசான் சபாவுடன் தொடர்புடையவர்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/08/trumps-tariff-war-and-modi-government-on-two-crutches/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு