நூல் அறிமுகம்: செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும் - எஸ்.பாலச்சந்திரன்

அ.கா.ஈஸ்வரன்

நூல் அறிமுகம்: செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்    - எஸ்.பாலச்சந்திரன்

புதிய கண்டுபிடிப்புகள் வருகின்ற போது, அதனை மார்க்சியப் பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் கம்யூனிஸ்டுகளில் பலருக்கு ஏற்படும். அவர்களின் ஆவலை நிறைவு செய்யும் வகையில், நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும் என்கிற இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

எந்திர மனிதன் (Robot) வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, அதனைப் பற்றி விரிவான நூல் எதுவும் தமிழில் வரவில்லை, ஆனால் செயற்கை நுண்ணறிவைப் பற்றி செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும் என்கிற தலைப்பில் ஒரு சிறந்த விரிவான நூலை எஸ்.பாலச்சந்திரன் எழுதியுள்ளார்.

இந்த நூல் சுமார் 480 பக்கங்களைக் கொண்டுள்ளது, இப்படி அதிகமானப் பக்கங்களைக் கொண்டிருந்தாலும் செயற்கை நுண்ணறிவு – ஒரு மார்க்சியப் பார்வை என்கிற தலைப்பில் முதலிலேயே சுமார் 80 பக்கங்களுக்கு இந்நூலாசிரியர் எழுதி உள்ளார். இதனோடு 25 பக்கங்களைக் கொண்ட 12ஆம் அத்தியாயத்தையும் படித்தாலேயே தேவையானப் புரிதல் கிடைத்துவிடுகிறது.

இந்த நூல் எத்தகையக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை நூலின் தலைப்பே எடுத்துக் காட்டிவிடுகிறது. இந்த நூல் செயற்கை நுண்ணறிவும்            அதனால் உழைப்பின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றியே விரிவாகப் பேசுகிறது.

புதுப்புது இயந்திரங்களை புகுத்தாமல் ஒரு முதலாளி மற்ற முதலாளிகளுடனானப் போட்டியில் வெற்றிபெற முடியாது. அதனால்தான் முதலாளித்துவத்தில் மற்ற உற்பத்தி முறைகளில் காணமுடியாத அளவுக்கு புதிய இயந்திரங்கள் புகுத்தப்படுகிறது. அப்படி வந்ததுதான் செயற்கை நுண்ணறிவு.

செயற்கை நுண்ணறிவு என்பது என்ன என்பதை, நூலாசிரியர் தமது முன்னுரையிலேயே வரையறுத்து கொடுத்துள்ளார்.

கம்ப்யூட்டர் துறையின் பரந்த கிளையில் ஒன்று செயற்கை நுண்ணறிவு. இது மனிதனது நுண்ணறிவு செய்கின்றப் பணிகளை செய்யும் திறன் கொண்ட இயந்திரம். திட்டமிடல், சிந்தித்தல், கற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு நுண்ணறிவுத் திறன்களை மனிதனைப் போன்றே சிந்தித்து செயல்படுகிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு மனிதப் பிழைகளைக் குறைப்பதுடன் உற்பத்தியை விரைவு படுத்துகிறது, அதிக உற்பத்தியையும் செய்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் வணிகத்தின் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு 270% அதிகரித்துள்ளது என்று நூலாசிரியர் சொல்லும் போது அதன் பயன்பாட்டு அதிகரிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

புதிய இயந்திரங்களின் வரவு என்பது பல தொழிலாளர்களை அப்புறப்படுத்துகிறது என்பது எப்போதும் நடைபெறுகிற நிகழ்வுதான், ஆனால் செயற்கை நுண்ணறிவு என்பது உழைப்பை மட்டுமல்லாது, சிந்தித்து செயல்படுவதுடன், திட்டமிட்டு முடிவுகளையும் எடுப்பதால் இதனை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. உழைப்பை முழுவதுமாக செயற்கை நுண்ணறிவு அப்புறப்படுத்திவிடுமா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. அத்துடன் மார்க்சியத்தின் உபரி மதிப்புக் கோட்பாடு செல்லாததாகிவிடுமா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதனை மறுத்து பல்வேறு விளக்கங்களை போதுமான அளவுக்கு இந் நூலாசிரியர் கொடுத்துள்ளார்.

"உயிருள்ள உழைப்பு இல்லாமல் முதலாளித்துவம் இருக்க முடியாது என்பதே மார்க்சியத்தின் முக்கியமான முடிவு. ஏனெனில் உயிருள்ள உழைப்புதான் உபரி மதிப்பின் இறுதி ஆதாரமாகும். செயற்கை நுண்ணறிவு, உற்பத்தியைத் தானியங்கி மயப்படுத்தினாலும், அந்த உற்பத்தியின் மதிப்பு (மற்றும் அதன் மூலம் இலாபம்) இறுதியில் செயற்கை நுண்ணறிவின் உருவாக்கம், பராமரிப்பு, உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான ஒட்டுமொத்த அமைப்பில் உள்ள மனித உழைப்பிலிருந்து பெறப்படுகிறது. மனித உழைப்பு உண்மையிலேயே மறைந்துவிட்டால், இலாபத்தின் ஆதாரம் மறைந்துவிடும்; இது முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமேயல்லாமல், அம் முதலாளித்துவத்தின் புதிய, மேம்பட்ட வடிவத்திற்கு அல்ல. எனவே, செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் முதலாளித்துவம் நிலைத்திருப்பது, மனித உழைப்பின் தொடர்ச்சியான, இருப்பினும் மாற்றியமைக்கப்பட்ட, இருத்தலையும். உழைப்புச் சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால்தான்." (பக்கம் -218-219)

மேலும் இந்த செயற்கை நுண்ணறிவு என்பது தொழிலாளர்களின் வேலை பளுவை குறைப்பதற்கு பதிலாக, முதலாளிகளின் லாபத்தைக் கூட்டுவதற்கே பயன்படுகிறது என்பதையும் இந் நூலாசிரியர் மிகவும் சிறப்பாக பல பக்கங்களில் திரும்பத்திரும்பக் கூறியுள்ளார்.

மார்க்சியவாதிகளுக்கு தேவைப்படுகிற பார்வை என்னவென்றால், இந்த செயற்கை நுண்ணறிவு சமூகப் பொருளாதாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், அதன் எதிர் விளைவு என்னவாக இருக்கும் என்பதே ஆகும்.

வழக்கமான புதிய இயந்திரங்களைப் போல செயற்கை நுண்ணறிவைப் பார்க்க முடியாது. கம்ப்யூட்டர் தரவுகளில் இருந்து கற்றுக் கொள்ளவும், வடிவங்களை அடையாளம் காணவும், அதனடிப்படையில் முடிவெடுக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவிடுகிறது. இப்படி அலசி ஆராயும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் செயல்படுகிறது. குறிப்பிட்டு சொல்லக்கூடிய துறைகள் என்றால், மருத்துவம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, தொழில் மற்றும் உற்பத்தி, கல்வி, நிதி, விவசாயம், வாடிக்கையாளர் சேவை, பொழுது போக்கு. இதே போன்று பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு செயல்படுகிறது.

பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் போது, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்கிறப் பார்வையோடு இதனை நிறுத்த முடியாது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சியானது, உழைப்பு, வருமானம், வாழ்க்கை முறையின் மீது செலுத்தும் தாக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை உணர்ந்து இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியுள்ளார்.

அப்படி செய்யும் போது செயற்கை நுண்ணறிவு என்பதை உற்பத்தி சக்தியாகப் பார்க்கிறார். 

"செயற்கை நுண்ணறிவு ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றமாக, இந்தக் கட்டமைப்பிற்குள் ஒரு புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த உற்பத்தி சக்தியாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. உற்பத்தி சக்திகள் என்பவை தொழிலாளர் சக்தி, தொழில்நுட்ப நிபுணத்துவம், நிறுவன அறிவு, கருவிகள், இயந்திரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது." (பக்கம்- 46) 

இத்தகைய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவுகளை அடுத்துக் கூறுகிறார். 

"செயற்கை நுண்ணறிவு ஒரு சக்திவாய்ந்த புதிய உற்பத்தி சக்தியாக முதலாளித்துவத்தின் கீழ் பயன்படுத்தப்படும்போது, அது மூலதனக் குவிப்பை மேம்படுத்துவதற்கும், அதிக உபரி மதிப்பைச் சுரண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம், முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துகிறது. வாழும் உழைப்பை (living labour- மார்க்சின் கோட்பாட்டில் மதிப்பின் ஆதாரம்) அகற்றுவதன் மூலம், செயற்கை நுண்ணறிவு இலாப வீதம் குறையும் போக்கைத் தீவிரப்படுத்துகிறது; தொழிலாளர் வர்க்கத்தின் வாங்கும் சக்தியைக் குறைப்பதன் மூலம் அதிக உற்பத்தி நெருக்கடிகளுக்குப் பங்களிக்கிறது. செயற்கை நுண்ணறிவானது முதலாளித்துவத்தின் கீழ் செயல்படுவதுடன் மட்டுமல்லாமல் அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துகிறது; அதன் நெருக்கடி மற்றும் மாற்றத்திற்கான பாதையைச் சாத்தியமான அளவுக்குத் துரிதப்படுத்துகிறது. எனவே, செயற்கை நுண்ணறிவுப் புரட்சி, மார்க்சியப் பார்வையில், முதலாளித்துவத்தின் சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் அமைப்பு ரீதியான நிலையற்ற தன்மை ஆகிய உள்ளார்ந்த போக்குகளை அதிவேகப்படுத்துவதாகும்." (பக்கம் – 47-48) 

முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டையே செயற்கை நுண்ணறிவு என்கிற புதிய உற்பத்தி சக்தி ஏற்படுத்துகிறது என்பதை நூலாசிரியர் சரியாகவே சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அந்த உள்முரண்பாட்டை நேரடியாக சுட்டிக்காட்டாமல் அதன் வடிவங்களையே எடுத்துச் சொல்கிறார், அதாவது வடிவங்களை முதன்மைப்படுத்துகிறார்.

உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர்களான முதலாளி வர்க்கத்துக்கும், உழைப்பு சக்தியை விற்பவர்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள அடிப்படையான பகைமையானது, முரண்பட்ட நலன்களால் இயக்கப்படுகிறது. அதாவது செயற்கை நுண்ணறிவானது வர்க்கப் பிரிவினைகளை வலுபடுத்துகிறது, முதலாளித்துவ வர்க்கத்திடம் செல்வத்தைக் குவிக்கிறது, பாட்டாளி வர்க்கத்தின் மீதான சுரண்டலின் புதிய வடிவங்களை உருவாக்குகிறது. (பக்கம்-49)

ஓரிடத்தில் செல்வத்தைக் குவிப்பதும் மற்றொரு இடத்தில் சுரண்டலை அதிகரிப்பது மட்டுமே முதலாளித்துவ உற்பத்தி முறையில், வர்க்கப் போராட்டத்துக்குக் காரணமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் அடிமை சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் இத்தகைய வர்க்க வேறுபாடு காணப்பட்டது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் இந்த முரண்பாடு முற்றிய நிலையில் காணப்படுகிறது. அதனடிப்படையில் வர்க்கப் போராட்டத்தை விளக்குவதே மார்க்சிய வழியில் சரியானதாக இருக்கும். 

பணம் இல்லாதவன் பணம்படைத்தவரைப் பார்த்து, இல்லாமையினால் கோபம் கொண்டு வர்க்கப் போராட்டத்தை நடத்துவதாக கருதுவது அடிப்படையைப் பற்றி பேசாமல் வடிவத்தை மட்டும் முன்னிறுத்துவதாக இருக்கிறது. இதன் அடிப்படை பொருளாதாரத்தில் காணப்படுகிறது. இதனை எங்கெல்ஸ் தமது டூங்குக்கு எதிர்ப்பு என்கிற நூலில் தெளிவாக விளக்கி இருக்கிறார். அதில் ஒன்று, “சமூகமயமாகிவிட்ட பொருள் உற்பத்திக்கும் முதலாளித்துவ சுவிகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.” (முன்றேற்றப் பதிப்பகம், பக்கம் - 473)

வர்க்கப் போராட்டம் வெறும் கருத்தியல் வழிப்பட்டது அல்ல, அதற்கென்று பொருளாதார அடித்தளம் இருக்கிறது. இத்தகையப் பொருளாதார அடித்தளத்திடமே, முதலாளித்துவம் வீழ்த்தப்படுவதின் தவிர்க்க முடியாமை அடங்கி இருக்கிறது. சமூகமயமாகிவிட்ட பொருள் உற்பத்திக்கும், தனிச்சொத்தின் அடிப்படையிலான முதலாளித்துவ சுவிகரிப்புக்கும் இடையிலான முரண்பாடே பொருளாதார அடிப்படை ஆகும்.

இதனை இந்த நூலாசிரியர் அறிந்திராதவர் அல்ல, ஆனால் அவர் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்நியமாதல் என்பதற்கே அழுத்தம் கொடுக்கிறார். மனிதத் தன்மையற்ற அந்நியமாதலே வர்க்கப் போராட்டத்தைத் தூண்டுவதாக கருதுகிறார்.

"தொழிலாளர்கள் தங்கள் உழைப்பை விற்கவும், முதலாளிகளால் அபகரிக்கப்படும் உபரி மதிப்பை உருவாக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். புதிய சூழலிலும் இதுவேதான் நடைபெறுகிறது. செயற்கை நுண்ணறிவு உழைப்புச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், உபரி மதிப்புச் சுரண்டலை அதிகரிப்பதன் மூலமும், "மறைமுக உழைப்பு" மூலமும், உலகளாவிய தெற்கில் அதீதச் சுரண்டலை (super - exploitation) உருவாக்குவதன் மூலமும் சுரண்டலைத் தீவிரப்படுத்துகிறது.

முதலாளித்துவத்தின் கீழ், தொழிலாளி தனது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்த பண்டம், தனது உழைப்புச் செயல்முறை, தனது சக மனிதர்கள், தனது சொந்த ஆன்மா ஆகிய அனைத்திடமிருந்தும் அந்நியமாதல் நிகழ்கிறது. முதலாளித்துவ உலகில் "செயற்கை நுண்ணறிவுப் புரட்சியின்" போதும் இதேதான் நிகழ்கிறது. திறனிழப்பு உழைப்புச் செறிவாக்கம், மனிதச் செயல்பாடுகளை டிஜிட்டல் அடிப்படையில் வணிகமயமாக்கல் ஆகியவை மூலம் அந்நியமாதல் ஆழப்படுத்தப்படுகிறது.

உழைப்பால் உருவாக்கப்பட்ட மதிப்புக்கும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலிக்கும் இடையிலான வேறுபாடு, முதலாளிகளால் இலாபமாக அபகரிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவானது, உழைப்பு உள்ளீடுகளைக் குறைப்பதன் மூலம் உபரி மதிப்பை அதிகரிக்க முதலாளிகளுக்கு உதவுகிறது. இது அதிக இலாபத்திற்கு வழிவகுக்கிறது.

முதலாளித்துவ அமைப்பின் உள் முரண்பாடுகள் (எ.கா., ஒரு சிலர் வசம் செல்வக் குவிப்பு Vs. வெகுஜன வறுமை, அதீத உற்பத்தி VS அதீதச் சுரண்டல்), நெருக்கடிகளுக்கும் அமைப்பு ரீதியான நிலையற்ற தன்மைக்கும் வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு இந்த முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துகிறது. குறிப்பாக, இலாப வீதம் குறைதல் மற்றும் அதிக உற்பத்தி நெருக்கடி, தொழிலாளர்களின் உழைப்பு இடம்பெயர்க்கப்படுவதன் மூலம் நுகர்வோர் சக்தி குறைதல், இன்ன பிற." (பக்கம்-50)

அதீத உற்பத்தி, அதிக உற்பத்தி என்று நெருக்கடிக்கு மிகை உற்பத்தி காரணம் என்று நூலாசிரியர் இங்கே பேசினாலும் அவரது அடிப்படைக் கண்ணோட்டம் அந்நியமாதலிலேயே இருக்கிறது. மற்ற இடங்களிலும் இதனையே பேசுகிறார். 

“தொழிலாளி தனது உழைப்பு மற்றும் அதன் விளைபொருட்களில் இருந்து அந்நியமாதலை ஆழப்படுத்தவும், முதலாளித்துவ உற்பத்தியின் மனிதத் தன்மையற்ற அம்சங்களை வலுப்படுத்தவும் தீவிரமாகப் பயன்படுத்தப்படுகிறது.” (பக்கம் -55). 

“தொழில்நுட்பப் புரட்சிகள் நடுநிலையானவை அல்ல, மாறாக அவை தற்போதுள்ள வர்க்கப் போராட்டத்திற்குள் உட்பொதிந்து வைக்கப்பட்டுளன, மேலும் இந்தப் புதிய உற்பத்தி சக்திகளின் கட்டுப்பாடு மற்றும் பலன்கள் தொடர்பான மோதல்களாகவும் வெளிப்படுகின்றன.” (பக்கம் -65). 

“மார்க்சியர்கள், செயற்கை நுண்ணறிவின் பலன்கள் ஒரு சிலரின் இலாபத்திற்காக அல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய, உற்பத்தி சாதனங்களின் மீது ஜனநாயகக் கட்டுப்பாடு தேவை என்று வாதிடுகின்றனர். இது உழைப்புச் சுரண்டலையும் ஏற்றத்தாழ்வையும் தீவிரப்படுத்துவதற்குப் பதிலாக, மனித வாழ்வின் செழிப்பு, உழைப்பிலிருந்து விடுதலை ஆகியவற்றை எளிதாக்கும் ஒரு சமூகத்தை நோக்கிய ஒரு மாற்றத்தை நாடுகிறது. இது "டிஜிட்டல் உற்பத்தி சாதனங்களை மீட்டெடுப்பதை”யும் உள்ளடக்கியதாகும்.” (பக்கம் -82). 

“தொழிலாளர் வர்க்கம் தங்கள் நலன்களைப் பாதுகாக்கவும், தொழில்நுட்பத்தின் பலன்கள் அனைவருக்கும் பகிரப்படுவதை உறுதி செய்யவும் தொடர்ந்து போராடி வருகிறது. மார்க்சியக் கோட்பாடு, இந்தப் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும், தற்கால மூலதனத்தின் சிக்கலான இயக்கவியலைப் புரிந்து கொள்வதற்கும், ஒரு நியாயமான, சமத்துவமான எதிர்காலத்திற்கான போராட்டத்திற்கு வழிகாட்டுவதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக விளங்குகிறது” (பக்கம் -83). 

இந்த அந்நியமாதல் என்பது மார்க்சின் தொடக்கக் கால கோட்பாடு என்பதை குறிப்பிட்டு இந்நூலாசிரியர் கூறியுள்ளார். (பக்கம் -305). அதாவது தமது பொருளாதார ஆய்வுகளை முடிப்பதற்கு முன்பு மார்க்ஸ் கொண்டிருந்தக் கோட்பாடு.

மனிதத் தன்மையற்ற போக்காக அந்நியமாதலை முதன்மைப்படுத்துவதால் இந்நூலாசிரியர் இதற்கானத் தீர்வைப் பொருளாதார அடிப்படையில் தேடாமல், அறநெறியின் அடிப்படையில் வைக்கிறார். அதாவது நியாயம் அநியாயம் என்கிற வழியில் வர்க்கப் போராட்டத்தை முன்வைக்கிறார்.

“மார்க்சிய அணுகுமுறையின்படி, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காவும் ஒரு நியாயமான சமூகத்திற்காகவும் போராடுவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தும். கூட்டு நடவடிக்கையின் மூலம் அதிகாரமற்ற தன்மையையும் அந்நியமாதல் உணர்வுகளையும் எதிர்த்துப் போராடலாம்” (பக்கம்-257). 

நூலாசிரியர் இந்த அந்நியமாதலை வர்க்கப் போராட்டத்துக்கு அடிப்படையாக கொண்டுள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது.

முதலாளி தொழிலாளி என்கிற வர்க்கப் போராட்டத்துக்குத் தீர்வை அறநெறியில் காண முடியாது. இது பொருளாதாரப் பிரச்சினை, இதனை பொருளாதார வழியில்தான் தீர்க்க முடியும். நூலாசிரியர் அந்நியமாதல் என்கிற இளம் மார்க்சின் சிந்தனையுடன், எங்கெல்சின் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்கிற நூலில் காணப்படும் கருத்தோடும் நின்றுவிடுகிறார்.

இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்கிற நூலில். 1790 முதல் 1840 வரையிலான தொழில்துறைப் புரட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, தொழிலாளர் வர்க்கத்தின் உண்மையான ஊதியங்களை அதிகரிக்கச் செய்யாத ஒரு காலக்கட்டத்தை இடை நிறுத்தம் (Engles’s Pause) என்கிறதை அடிப்படையாக விளக்குகிறார். இந்த இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்கிற நூலின் மறுபதிப்பை 1892ஆம் ஆண்டில் வெளியிடும் போது, அதில் எழுதிய முன்னுரையில், இருபத்தி நான்கு வயதுடைய இளைஞரின் சிறப்பானத் தன்மையும் குறைகளையும் இந்த நூல் கொண்டுள்ளதாக எங்கெல்ஸ் கூறியுள்ளார்.

நூலாசிரியர் எங்கெல்சின் இளமைக் கால நூலுக்குப் பதிலாக, பிற்காலத்தில் எழுதிய டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற நூலில் காணப்படும் பொருளாதார அடிப்படையில் விளக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். எங்கெல்சின் டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற நூல் மார்க்சின் மூலதனம் (தொகுதி-1) நூலின் அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கங்கள் இந்நூலாசிரியருக்கு தெரியாமல் இருந்திருக்காது, மார்க்சின் அரசியல் பொருளாதார குறிப்புகளான கிரண்டிஸ்ஸே என்பதில் உள்ளதை சரியாகவே எடுத்துக் காட்டியுள்ளார். இதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை முரண்பாடு.

"மார்க்சின் தொலைநோக்குப் பார்வையில், முதலாளித்துவம் உள்ளார்ந்த முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதை கிரண்ட்ரிஸ்ஸே வெளிப்படுத்துகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள மோதல்கள், காலப்போக்கில் பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர் இதில் உணர்த்துகிறார். உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், உடைமையின் தனியார் தன்மைக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு, முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று அவர் வாதிடுகிறார்." (பக்கம் -334)

இதன் அடிப்படையில்தான் செயற்கை நுண்ணறிவு என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அந்நியமாதல், இடை நிறுத்தம் என்பது போன்றவற்றில் தீர்வைத் தேடாமல் பொருளாதார அடிப்படையில் அணுகுவதே சரியானதாக இருக்கும். சோஷலிசப் புரட்சி தவிர்க்க முடியாமை என்பதை பொருளாதார அடிப்படையில்தான் மார்க்சியம் விளக்குகிறது.

செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும் என்கிற நூலில் ஆசிரியர், செயற்கை நுண்ணறிவை முதலாளித்துவம் ஏன் உருவாக்கியது, எதற்கு பயன்படுத்துகிறது என்பது பற்றியதில் மிகச் சரியான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். இதற்கான தீர்வை மட்டுமே பொருளாதார அடிப்படையில் இல்லாது அந்நியமாதல் என்பதை முன்வைத்து அறநெறியின் அடிப்படையில் வைத்துள்ளார். தீர்ப்பைத் தவிர மற்றதை நூலாசிரியர் மிகவும் சிறப்பாக விளக்கி எழுதியுள்ளார். குறிப்பாக நூலின், செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி மய யுகத்தில் மார்க்ஸின் உழைப்பு மதிப்புக் கோட்பாட்டின் நீடித்து நிலைத்திருக்கும் பொருத்தப்பாடு என்கிற 12ஆம் அத்தியாயத்தில் நூலாசிரியர் மிகமிக சிறப்பாக விளக்கி இருக்கிறார்.

நூலாசிரியர் முதலாளித்துவம் செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதன் நோக்கத்தை சுட்டிக்காட்டுகிறார்.

"செயற்கை நுண்ணறிவு, மூலதனத்தின் ஒரு கருவியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று மார்க்சியப் பகுப்பாய்வு தெளிவு படுத்துகிறது. அதன்படி, இலாபத்தை அதிகப்படுத்தவும் சுரண்டலைத் தீவிரப்படுத்தவுமே செயற்கை நுண்ணறிவு வடிவமைக்கப்பட்டுள்ளது."  (பக்கம்-226)

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதற்கும், ஒப்பீட்டு உபரி மதிப்பை பெறுவதற்குமே ஆகும் என்பதை நூலாசிரியர் சரியாகச் சுட்டிக்காட்டுகிறார்.

"மார்க்சியக் கண்ணோட்டத்தில், செயற்கை நுண்ணறிவும் தானியங்கி மயமாக்கலும் சுதந்திரமாகத் தாமே மதிப்பை உருவாக்குபவை அல்ல. “இறந்த உழைப்பை” - இயந்திரங்கள் மற்றும் மென்பொருளில் உள்ள கடந்தகால மனித உழைப்பை – அவற்றால் புதிய பொருட்களுக்கு மாற்ற முடியும்; அதன் மூலம் உயிருள்ள உழைப்பின் உற்பத்தித்திறனைக் கணிசமாக அதிகரிக்க முடியும். ஒரு முதலாளித்துவ அமைப்பிற்குள் செயற்கை நுண்ணறிவின் முதன்மை நோக்கம், சமூக ரீதியாக அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதன் மூலம் உபரி மதிப்பைப் பிரித்தெடுப்பதை மேம்படுத்துவதாகும். இதன் மூலம் சார்பு உபரி மதிப்பு அதிகரிக்கப்படுகிறது. இது முதலாளிகள் குறைந்த அளவிலான நேரடி உயிருள்ள உழைப்பைக் கொண்டு அதிகமாக உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது; ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் சுரண்டப்படும் மதிப்பின் விகிதத்தைத் தீவிரப்படுத்துகிறது." (பக்கம்-223)

செயற்கை நுண்ணறிவு போன்ற புதியவை, உபரி மதிப்பைப் படைப்பதை தடுக்கவில்லை என்பதையும் அதன் பொருத்தப்பாடு இதிலும் இருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

"ஒரு கறாரான மார்க்சியப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் உழைப்பு மதிப்புக் கோட்பாடு ஆழமான பொருத்தத்தைக் கொண்டுள்ளது, உலகப் பொருளாதாரம் மற்றும் வேலையின் தன்மையில் நடந்து வரும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கு ஒரு வலுவான கட்டமைப்பை வழங்குகிறது என்பதை நிரூபிக்கிறது." (பக்கம்-222) 

சோஷலிச மாற்றத்துக்கான பொருளாதார முரணை சுட்டிக்காட்டாமல் உழைப்பின் நிச்சமற்ற தன்மை, அதீத செல்வக் குவிப்பு ஆகியவைகளையே சமூகப் போராட்டத்துக்கான அடிப்படையாக நூலாசிரியர் காட்டுகிறார். இது வடிவமே ஆகும் இதன் உள்ளடக்கம் பொருளாதாரத்தில் இருக்கிறது.

"செயற்கை நுண்ணறிவு யுகம், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்துடன் ஆழமான ஈடுபாட்டை அவசியமாக்குகிறது. வேலையின் தொடர்ச்சியான மாற்றம், உழைப்பின் நிச்சயமற்ற தன்மை அதிகரித்தல், அதீத செல்வக் குவிப்பு ஆகியவை சமகால வர்க்க உறவுகள், தொழில்நுட்பத்தின் மீதான கட்டுப்பாடு, உற்பத்திமுறை ஆகியவற்றின்மீதான எதிர்கால சமூகப்போராட்டங்களுக்கான மார்க்ஸின் நுண்ணறிவின் நீடித்த பொருத்தப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. விவாதம் உழைப்பின் மறைவு பற்றியது அல்ல, மாறாக அதன் மாறிவரும் தன்மையையும், ஒரு வளர்ந்து வரும் முதலாளித்துவ அமைப்பிற்குள் அதன் சுரண்டல் நிலைமைகளையும் பற்றியதாகும்." (பக்கம்-227)

நூலாசிரியர் அந்நியமாதலை தொட்டுவிட்டு பொருளாதார அடித்தளத்துக்கு முதன்மை இடம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதே போல எங்கெல்சின் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை தொடர்ந்து டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற நூலினை எடுத்து விளக்கி இருந்தால் முழுநிறைவு பெற்றிருக்கும்.

நவீன இயந்திரங்கள் முதலாளித்துவத்தில் முடிவின்றி அதிகரித்து வருவதன் கட்டாய விதியினால் உற்பத்தியில் அராஜகம் அதாவது ஆதித உற்பத்தி ஏற்படுவதை, எங்கெல்ஸ் டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற நூலில் சுட்டிக்காட்டுகிறார். நவீன இயந்திரம் என்பதை இன்றைய நிலையில் செயற்கை நுண்ணறிவு என்பதாகப் பொருள் கொண்டால் புரிதல் எளிதாகும்.

"நவீன இயந்திர சாதனங்களின் முடிவின்றி அதிகரித்து வரும் செம்மைத்திறன், சமுதாயப் பொருளுற்பத்தியின் அராஜகத்தால் தனிப்பட்ட தொழில்துறை முதலாளி ஓயாமல் தனது இயந்திர சாதனங்களை மேம்படுத்துமாறும், ஓயாமல் அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறும் வலுவந்தம் செய்யும் கட்டாய விதியாக மாற்றப்படுகிறது …” (டூரிங்குக்கு எதிர்ப்பு, பக்-480)

நவீன இயந்திரங்களைப் புகுத்துவதன் மூலம் சந்தையின் தேவையைவிட உற்பத்தியில் அதிகம் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

“உண்மை நடப்பைக் கூறுமிடத்து, முதலாவது பொது நெருக்கடி வெடித்த 1825ஆம் ஆண்டு முதலாய், பத்து ஆண்டுகளுக்கு ஒரு தரம் தொழில் மற்றும் வாணிப உலகு முழுவதிலும் எல்லா நாகரிக மக்களிடையிலும் அதிகமாகவோ குறைவாகவோ வளர்ச்சி குன்றிய நிலையில் இவர்களைச் சார்ந்து வாழ்வோரிடையிலும் பொருளுற்பத்தியும் பரிவர்த்தனையும் நிலைகுலைந்து விடுகின்றன. வாணிபம் தடைபட்டு நின்று போகிறது; சந்தைகள் விற்பனை இன்றி நிரம்பி வழிகின்றன; எந்தளவு விலைபோகவில்லையோ அந்தளவு பண்டங்கள் எண்ணிறந்தவையாய்க் குவிந்து கிடக்கின்றன; ரொக்கப் பணம் மறைந்து விடுகிறது; கடன் செலாவணி இல்லாமற் போய் விடுகிறது; ஆலைகள் மூடிக் கிடக்கின்றன; பெருந்திரளான தொழிலாளர்கள் பிழைப்புக்கு வேண்டிய சாதனங்கள் இல்லாது தவிக்கிறார்கள், காரணம் இந்த சாதனங்களை அவர்கள் மிதமிஞ்சி உற்பத்தி செய்துவிட்டார்கள்; முறிவுகளுக்கும் ஜப்திகளுக்கும் முடிவில்லாமற் போகிறது. பல ஆண்டுகளுக்கு மந்தம் நீடிக்கிறது; உற்பத்தி சக்திகளும் பொருள்களும் பெருவித அளவில் விரயமாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன; பிறகு, திரண்டு அம்பாரமாய்க் குவிந்து விட்ட பண்டங்கள் அதிகமாகவோ குறைவாகவோ மதிப்புத் தேய்ந்து கரைந்து இறுதியாய் மறையும் வரை, பொருளுற்பத்தியும் பரிவர்த்தனையும் மெதுவாக மீண்டும் இயங்கத் தொடங்கும் வரை நிலைமை இதுவே. சிறிதுசிறிதாக வேகம் அதிகரிக்கிறது. இது பெருநடையாகிறது. தொழில்துறையின் பெருநடை ஓட்டமாய் மாறுகிறது; ஓட்டம் பெருகி, தொழில்துறை, வாணிபக் கடன் செலாவணி, ஊக வாணிபம் ஆகிய எல்லாமாய்ச் சேர்ந்து தாவிக்குதித்துத் தலைதெறிக்க ஓடி முடிவில் குப்புற விழும்படி துள்ளிப் பாய்ந்தோடியபின் தொடங்கிய நிலைக்கே—நெருக்கடியின் சாய்க் குழியில் வந்து முடிவுறுகின்றன. தொடர்ந்து திரும்பத் திரும்ப இதே கதைதான். 1825ஆம் ஆண்டு முதலாய் ஐந்து தடவை இதை அனுபவத்திருக்கிறோம், தற்போது (1877) ஆறாவது தடவையாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.”( டூரிங்குக்கு எதிர்ப்பு, பக்-481-482) 

இந்தப் பொருளாதார நெருக்கடி சமூகமயமான சரக்கு உற்பத்திக்கும் தனிச்சொத்தின் அடிப்படையிலான முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையே வர்க்கப் போராட்டமாய் வெடிக்கிறது என்கிறார் எங்கெல்ஸ்.

“இந்த நெருக்கடிகளில் சமூகயமயமான பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலுள்ள முரண்பாடு மூர்க்கமாய் வெடித்தெழுகிறது. பரிவர்த்தனைப் பண்டப் புழக்கம் தற்காலிகமாய் நின்று விடுகிறது. புழக்கத்துக்குரிய சாதனமான பணம் புழக்கத்துக்கு இடையூறாகி விடுகிறது. பண்டங்களின் உற்பத்தி மற்றும் புழக்கம் சம்பந்தமான விதிகள் எல்லாம் தலைகீழாகி விடுகின்றன. பொருளாதார மோதல் அதன் உச்ச நிலையை அடைந்து விட்டது. பொருளுற்பத்தி முறை பரிவர்த்தனை முறையினை எதிர்த்துக் கலகம் புரிகிறது, பொருளுற்பத்தி சக்திகள் எதை மீறி வளர்ந்து விட்டனவோ அந்தப் பொருளுற்பத்தி முறைக்கு எதிராகக் கலகம் செய்கின்றன.” (டூரிங்குக்கு எதிர்ப்பு, பக்-482-483)

புதுப்புது இயந்திரங்களைப் புகுத்துவதன் மூலம் முதலாளித்துவம் தோற்றுவித்த உற்பத்தி சக்திகளை கட்டுப்படுத்த முடியாத வகையில் முதலாளித்துவத்தை நெருக்குகிறது என்பதை எங்கெல்ஸ் கூறுகிறார்.

முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் பொறியமைவு முழுதுமே அதனாலேயே தோற்றுவிக்கப் பட்ட உற்பத்தி சக்திகளால் நெரிக்கப்பட்டுக் குலைந்து போகிறது. பெருவாரியான இந்தப் பொருளுற்பத்தி சாதனங்களை அதனால் மூலதனமாக மாற்ற முடியவில்லை. இவை செயலற்று முடங்கிக் கிடக்கின்றன.” (டூரிங்குக்கு எதிர்ப்பு, பக்-483)

முதலாளித்துவத்தில் காணப்படும் வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கு முடியாமல், முதலாளித்துவம் திறனற்றுப் போனதை எடுத்துக்காட்டுவதுடன், வளர்ச்சி அடைந்துள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவ தனிச் சொத்துடைமை எதிர்த்து கலகம் செய்வதையும் எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

“..ஒரு புறத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை தொடர்ந்து இந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை புரியத் திறனற்றது என்பது நிரூபிக்கப்பட்டுத் தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. மறு புறத்தில் இந்த உற்பத்தி சக்திகள் தற்போது நிலவும் முரண்பாட்டை நீக்குவதற்காக, மூலதனம் என்ற முறையில் தமக்குள்ள இயல்பை ஒழிப்பதற்காக, சமுதாயப் பொருளுற்பத்தி சக்திகள் என்ற முறையில் தமக்குள்ள தன்மை நடைமுறையில் அங்கீகரிக்கப்படுவதற்காக மேலும் மேலும் கூடுதலான ஆற்றலுடன் போராடி முன்னேறிச் செல்கின்றன.

.

உற்பத்தி சக்திகள் மேலும் மேலும் வலிமை மிக்கனவாய் வளர்ந்து, தமது முதலாளித்துவ இயல்பை எதிர்த்துப் புரியும் இந்தக் கலகம், அவற்றின் சமுதாயத் தன்மை அங்கீகரிக்கப்படுவதன் அவசியம் ஆகியவை முதலாளித்துவ நிலைமைகளில் எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு அவற்றை மேலும்மேலும் சமுதாயப் பொருளுற்பத்தி சக்திகளாய் நடத்தும்படி முதலாளி வர்க்கத்தைக் கட்டாயப் படுத்துகின்றன.” (டூரிங்குக்கு எதிர்ப்பு, பக்-483-484)

வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளும் பழைமைப்பட்டுப் போன முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இடையேயான முரண்பாடு சோஷலிச உற்பத்தியிடம் சரணடைய வேண்டியதாகிறது என்கிறார் எங்கெல்ஸ்.

“முதலாளித்துவச் சமுதாயத்தின் உறுதியான திட்டம் ஏதும் இல்லாத பொருளுற்பத்தியானது வரப்போகும் சோஷலிசச் சமுதாயத்தின் உறுதிவாய்ந்த திட்டவழியிலான பொருளுற்பத்தியிடம் சரணடைகிறது.” (டூரிங்குக்கு எதிர்ப்பு, பக்-485)

ஒப்பீட்டு உபரி மதிப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து முதலாளித்துவம் புதியப்புதிய இயந்திரங்களைப் புகுத்துகிறது. இறுதியில் வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை முதலாளித்துவத்தால் நெறியாண்மை செய்ய முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகிறது. மேலும் முதலாளித்துவ உற்பத்தி முறை கூட்டுப் பங்கு கம்பெனிகளாக வளர்ச்சி அடைந்த பிறகு தனித்த முதலாளித்துவ வர்க்கம் தேவையற்றவர்களாகி விட்டனர் என்கிற கருத்தை எங்கெல்ஸ் முன்வைக்கிறார். இன்றைய கார்ப்பரேட் முதலாளித்துவத்தில் இது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. முதலாளியின் நேரடி கண்காணிப்பு இல்லாமலேயே பல கம்பெனிகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

“நவீன உற்பத்தி சக்திகளைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கு முதலாளித்துவம் ஆற்றலற்று விட்டது என்பதை நெருக்கடிகள் எடுத்துக் காட்டுகின்றன என்றால் பொருளுற்பத்திக்கும் வினியோகத்துக்குமான மாபெரும் நிலையங்கள் கூட்டுப் பங்குக் கம்பெனிகளாகவும் [டிரஸ்டுகளாகவும்] அரசு உடைமைகளாகவும் மாற்றப்பட்டிருப்பதானது இந்தக் காரியத்துக்கு முதலாளித்துவ வர்க்கத்தினர் எவ்வளவு தேவையற்றவர்களாகி விட்டனர் என்பதைக் காட்டுகிறது. முதலாளிகள் செய்துவந்த எல்லாச் சமூக வேலைகளையும் இன்று சம்பளம் பெறும் சிப்பந்திகள் செய்து விடுகின்றனர். லாப ஈவுகளை (dividents] மூட்டை கட்டிக் கொள்வதையும், சீட்டுக் கத்தரிப்பதையும் [tearing off coupons], முதலாளிகள் ஒருவர் முதலை ஒருவர் சூறையாடிக் கொள்ளும் பங்கு மாற்றுச் சந்தையில் சூதாடுவதையும் தவிர முதலாளிக்கு இனிச் சமூக வேலை எதுவும் இல்லாமற் போய் விட்டது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை முதலில் தொழிலாளர்களை வெளியே தள்ளுகிறது. இப்பொழுது அது முதலாளிகளையும் வெளியே தள்ளி, தொழிலாளர்களைச் செய்தது போலவே இவர்களையும் உடனடியாகத் தொழில் துறை ரிசர்வ் பட்டாளத்தின் அணிகளுக்கு இல்லாவிட்டாலும், வேண்டாத உபரி மக்கள் தொகையின் அணிகளுக்குத் தாழ்த்தி விடுகிறது.” (டூரிங்குக்கு எதிர்ப்பு, பக்-487)

வளர்ச்சி அடைந்துள்ள உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்ய முடியாமல் போன முரண்பாட்டினால் ஏற்பட்ட நெருக்கடி, சோஷலிசப் புரட்சிக்கு வழிவகுக்கிறது. புரட்சியை நிகழ்த்திய பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்கிறது என்கிறார் எங்கெல்ஸ்.

“ஏற்கெனவே சமூகமயமாகி விட்ட பிரம்மாண்டமான பொருளுற்பத்தி சாதனங்களை மேலும்மேலும் அரசின் சொத்தாக மாற்றமடையும்படி நிர்ப்பந்தம் செய்யும் அதே போதில் இந்தப் பெருமாற்றத்தினைச் செய்து முடிப்பதற்கான வழியையும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை தானே சுட்டிக்காட்டுகிறது. பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்தி சாதனங்களை முதலாவதாக அரசுச் சொத்தாய் மாற்றுகிறது.” (டூரிங்குக்கு எதிர்ப்பு, பக்-490-491)

பாட்டாளி வர்க்கப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து தனிச்சொத்துக்கள் பொதுச்சொத்தாக்கப்படுகிறது, அதன் பிறகு, வினியோகத்திற்கு ஏற்ப திட்டமிட்டு உற்பத்தி நிகழ்த்தப்படுகிறது. இறுதியாக எங்கெல்ஸ் முதலாளித்துவப் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, பாட்டாளி வர்க்கம் செயல்படுவதற்கான விஞ்ஞான சோஷலிசத்தின் கடமையாக சுட்டிக்காட்டுகிறார்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி- முரண்பாடுகளுக்குத் தீர்வு ஏற்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச்சொத்தாய் மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இதுகாறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. சமூகமயமான பொருளுற்பத்தி இனி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவது சாத்தியமாகிறது. 

… …

உலகளாவிய இந்த விடுதலைப் பணியினைச் செய்து முடிப்பது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தச் செயலுக்கான வரலாற்று நிலைமைகளையும் அதோடு கூடவே இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டு, தற்போது ஒடுக்கப்பட்டதாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளையும் அது செய்து முடிக்க வேண்டிய சகாப்தகரச் சிறப்புடைத்த இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும் முழு அளவில் தெரியப் படுத்துவது தான் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவார்த்த வெளியீடாகிய விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை.” (டூரிங்குக்கு எதிர்ப்பு, பக்-500-501)

அதாவது முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் விளைவாகத்தான் தவிர்க்க முடியாத வகையில் சோஷலிசப் புரட்சி ஏற்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் துயரங்களுக்குத் தீர்வாக பாட்டாளிகள் தமது மூளையின் உதவியால் சிந்தித்து எடுத்த முடிவல்ல இது. பாட்டாளி வர்க்கத்தின் தன்மையும் பொறுப்பையும் முதலாளித்துவ பொருளாதார முரணில் இருந்தே பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்கிறது. முதலாளித்துவ பொருளுற்பத்தில் காணப்படும் உள்முரண்பாட்டின் வெளிப்பாடுதான் வர்க்கப் போராட்டம்.

பாட்டாளி வர்க்கத்தின் விஞ்ஞானத் தன்மையிலான முடிவுகளை இளம் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர்களிடம் இருந்து இல்லாமல் முதிர்ந்த மார்க்ஸ் எங்கெல்சிடமே காணமுடிகிறது. முதிய மார்க்சிடமே மார்க்சியம் முழு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மார்க்சியத்தை லெனின் சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுதியுள்ளார். குறிப்பாக, காரல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுடையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்கிற கலைக்களஞ்சியத்துக்கு லெனின் எழுதியது மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது

"... உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்காகவும், மாறும் மூலதனத்துக்கு மற்றொரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. (மூலதனத்தின் மொத்தத் தொகையில்) மாறும் மூலதனத்தின் பங்கைவிட மாறா மூலதனத்தின் பங்கு அதிக வேகத்துடன் வளர்ச்சி பெறுவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும், முதலாளித்துவம் சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்."



மாறா மூலதனத்தின் அதிக வேகத்துடன் வளர்ச்சியினையே செயற்கை நுண்ணறிவு காட்டுகிறது. இது முதலாளித்துவ வளர்ச்சியினை மட்டும் காட்டவில்லை, இதன் வளர்ச்சி முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கையும் காட்டுகிறது, இதுவே இதன் முக்கியத்துவமாகும் என்பதை லெனின் வழியில் அறிந்து கொள்ளலாம். லெனின் மேலும் கூறுகிறார்.

".. .. இன்றைய சமுதாயத்தின் பொருளாதார இயக்க விதியிலிருந்தே மார்க்ஸ், முதலாளித்துவச் சமுதாயம் சோஷலிஸ்டு சமுதாயமாக மாற்றமடைவது தவிர்க்க முடியாததாகும் என்ற முடிவுக்கு வருகிறார். உழைப்பு சமுதாயமயமாக்கப்படுவது பல்லாயிரக் கணக்கான வடிவங்களிலே முன்னைவிட அதிக வேகத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது; மேலும் மார்க்ஸ் மறைந்த பின் கழிந்துள்ள இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் பெருவீத உற்பத்தியின் வளர்ச்சியிலும், முதலாளிகளின் கார்டெல்கள், சிண்டிக்கேட்டுகள், டிரஸ்டுகளின் வளர்ச்சியிலும், நிதி மூலதனத்தின் அளவுகளிலும் சக்தியிலும் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான அதிகரிப்பிலும் இது-அதாவது, உழைப்பு சமுதாயமயமாக்கப்படுவது - வெகு தெளிவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது, தவிர்க்க முடியாதபடி சோஷலிசம் வந்து சேருவதற்கு இதுதான் முதன்மையான பொருளாயத அடிப்படையாகும்."

செயற்கை நுண்ணறிவு என்பது மாறும் மூலதனத்தின் வளர்ச்சியாகவும் உழைப்பு சமூகமயமாதலையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இதன் வளர்ச்சி என்பது முதலாளித்துவ வளர்ச்சியாக மட்டும் பார்க்காமல், இந்த வளர்ச்சி ஏற்படுத்தும் முரணையும் அதற்கு தீர்வாக முதலாளித்துவ உற்பத்தி முறையில் இருந்து சோஷலிச உற்பத்தி முறைக்கு மாற வேண்டியதின் அவசியத்தையுமே இந்த பொருளாதார அடிப்படை நமக்குக் காட்டுகிறது.

முதலாளித்துவ வர்க்கம் மற்றும் பாட்டாளி வர்க்கம் ஆகியவற்றுக்கிடையே காணப்படும் வர்க்கப் போராட்டத்தை பொருளாதார அடிப்படையில் புரிந்து கொண்டால் தான், பாட்டாளி வர்க்கத்தை அதனடிப்படையில் வர்க்க உணர்வையும் வர்க்க அரசியலையும் ஊட்ட முடியும். அவ்வாறு வளர்க்கப்பட்ட பாட்டாளிகளே வர்க்கப் போராட்டத்தை நடத்தும் திறத்தைப் பெறுவர். முதலாளித்துவத்தை வீழ்த்தி சோஷலிசத்தை அமைப்பதற்கு இத்தகையத் திறம் தேவைப்படுகிறது.

எஸ்.பாலச்சந்திரன் எழுதிய செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும் என்கிற நூலை, அவர் குறிப்பிடுகிற அந்நியமாதல் என்பதின் தொடர்ச்சியாக பொருளாதார அடித்தளத்தையும் இணைத்துப் படிக்கும் போது நமது புரிதல் முழுநிறைவு அடைகிறது. இந்தப் புரிதலுக்கு இடமும் வாய்ப்பும் அளித்த இந்த நூலைப் படித்துப் பயனடைவோம்.

(அ.கா.ஈஸ்வரன்)

9884090972

செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்

எஸ்.பாலச்சந்திரன் 

விலை- ரூ.400/-

நூலினைப் பெற தொடர்புகொள்ளவும்

வெளியீடு-இடது பதிப்பகம்

9790133141-9566347319

- நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் ( நவம்பர் மாத இதழ்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு