நூல் அறிமுகம்: கிளாரா ஜெட்கின்

பாவெல் சூரியன்

நூல் அறிமுகம்: கிளாரா   ஜெட்கின்

தோழர் மஞ்சுளா எழுதிய, கிளாரா ஜெட்கின் பற்றிய குறுநூல் ஒன்றை சமீபத்தில் என்.சி.பி.எச். வெளியிட்டிருக்கிறது. கிளாராவின் வாழ்க்கையை, அந்த  காலகட்டத்தின் பின்னணியை, அவரது   போராட்ட வரலாற்றை, நாற்பது பக்கங்களில் முழுமையாக பதிவு செய்திருப்பது வியப்பளிக்கிறது. கூடுதல், குறைவில்லாமல் மொழியைக் கையாள்வது ஒரு சிக்கலான பணி. தேர்ந்து கொண்ட கருப்பொருள் பற்றிய முழுமையான பார்வையும், மொழித் தேர்ச்சியும் தான் வாசகனுக்கு இச் சிறிய நூலை செறிவாக்கிக் கொடுத்திருக்கிறது. 

இப்படியான சிறிய, கையடக்கமான நூற்கள் தமிழில் நிறைய வெளிவரவேண்டும். அப்படியான படைப்புக்கள்  பெருகும் போதுதான் பெரும் படிப்பில்லாத, படிக்க நேரம் ஒதுக்கமுடியாத தொழிலாளர் அணியினர் வாசிக்க வழி பிறக்கும். மூலதனத்திற்கு நேரடியாக அடிமைப்பட்டவனுக்கு- தொழிலாளிக்கு ஏது, நிறையபடிக்க நேரமும், வசதியும்? ஒரு படைவீரனுக்கு பீரங்கி பற்றிய குறுநூல் அதனை இயக்குவதற்கான அறிவையும், தாக்குதலில் அதன் பரிமாணத்தையும் கொடுத்தால் அதுவே போதுமானது. விரிவான வாசிப்பு,  களத்தில் அவன் நேரத்தைக் கொன்றுவிடும்; சில தருணங்களில்-அவனையும்கூட. அதனால் தான் அறிவுத் தளத்தினர், சிறு முதலாளிய வகுப்பினரின் வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது  பாட்டாளிவர்க்கத்தின் படிப்பு.  முன்னது வாசிப்பு சுகத்திற்கான நுகர்ச்சிக்கும், தனிநபர்  அறிதலுக்கும், அதன்வழி சமூகத்திற்குள் சுய முன்னிலை பெறுதலுக்குமானது; பின்னது செயலூக்கம் பெறவும், அதன் வழி சமூக மாற்றத்திற்கான அடிப்படையை நிறுவிக்கொள்ளவும் உதவக்கூடியது. இப்படியான முன்னோடிகள் பற்றிய நூற்றுக்கணக்கான சிறிய படைப்புக்கள் தான், சமூக மாற்றத்திற்கான போராட்டக் களத்தில் பாட்டாளி வர்க்கத்தை   வழிநடத்தும் ஆயுதங்களாக அமையும். 

முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட,  ஆணும் பெண்ணும்  இணைந்த வர்க்க விடுதலையைத்தான் பொது உடைமை இயக்கம் முன்வைக்கிறது. நாடு, இனம், மொழி, பால் வேற்றுமைகள் கடந்த சொல்லாகத்தான் தோழர்- என்ற சொல் (ஆங்கிலத்தில் காம்ரேட்-Comrade)) இடதுசாரி தளத்தில் பயன்பாட்டில் இருக்கிறது. நாடு, மொழி, இனம், போலவே பாலின முரண்பாடும் முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லோருக்கும் பொதுவான பெண்ணியம் என்ற ஒன்றில்லை, அதிலும் வர்க்கக் கண்ணோட்டம் இருக்கிறது. முதலாளித்துவப் பெண்ணியமோ முதலாளித்துவ  சமூகத்திற்குள்ளேயே தனி நபர் விடுதலையையும், கட்டற்ற சுதந்திரத்தையும் முன் வைக்கின்றது.  பெண்ணடிமைத்தனத்திற்கு அடித்தளமாக இருக்கும் தனி நபர் சொத்துடைமையை ஒழிக்காமலேயே, முதலாளித்துவ சமூகத்திற்குள்ளேயே, பெண்கள் விடுதலை பெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணத்தை அது கொண்டுள்ளது. 

கிளாரா ஜெட்கின் பற்றிய  அறிமுகம், அவரது வாழ்க்கை, முதலாளித்துவ மகளிர் இயக்கம், சமூக ஜனநாயக மகளிர் இயக்கம், கம்யூனிச மகளிர் இயக்கம்- இவற்றின் இயங்கு தளம், இவற்றுள் இறுதி இரண்டு அமைப்புக்களில்  கிளாரா இயங்கிய வரலாறு என  ஐந்து தலைப்புக்களில் சுருக்கமாக எந்த விடுபடலும் இல்லாமல், சாரமாக பதியப்பட்டிருக்கிறது. அவரது மகளிர் இயக்கம் பற்றிய பார்வை, வர்க்கக் கண்ணோட்டம் சார்ந்தது. முதலாளித்துவ  மகளிர் இயக்கம்,  சமூக ஜனநாயக மகளிர் இயக்கம், கம்யூனிச மகளிர் இயக்கம் இவற்றின்  ஒப்பீட்டையும்,  அதில் நிலவும் முரண்பாடுகளையும் துலக்கமாக அறியும்போது தான் பெண்ணியம் என்பதன் முழுமையான உரிமை சார்ந்த பரிமாணத்தை உணரவும், அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கவும்  முடியும். அதை உணர்த்துவதுதான் கிளாரா ஜெட்கினின் வாழ்க்கை. இக்குறுநூல் அதை தெள்ளனக் குறித்து நிற்கிறது.

கிளாரா ஜெட்கின் ஆசிரியர் பயிற்சியும், இதழியல், மொழிபெயர்ப்பியல் கல்வியும் கற்றவர். மகளிர் உரிமையின் கருத்தாயுதமான ’சமத்துவம்’  இதழுக்கு கால் நூற்றாண்டு காலம் (1892- 1917) ஆசிரியராக பணியாற்றியவர். கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் ஜெர்மனியிலும், நாடு கடந்து சுவிஸ் மற்றும் பிரான்சிலும் (1878-1890) 12 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் களமாடியவர். தோழர்கள் எங்கெல்ஸ், லெனின், அகஸ்ட் பெபல், ரோசா லுக்சம்பெர்க், ஸ்டாலின் இவர்களோடு பணியாற்றிய பெருமை பெற்றவர். இவையெல்லாம் நூலில் விரவிக் கிடக்கும் செய்திகள். மக்களிடத்தும், மகளிர் வாழ்விலும் பிரெஞ்சுப் புரட்சி செலுத்திய தாக்கங்களும், பிரெஞ்ச் புரட்சியில் முன்னணிப் பாத்திரம் வகித்த பெண்கள், முதலாளித்துவ மிதவாதிகளான ஜிரோண்டின்கள், மற்றும் ஜாக்கோபின்கள் பற்றிய செய்திகளும், முடியரசு வீழ்த்தப்பட்டு குடியரசான நிகழ்வும் சிறப்பாகப் பதியப்பட்டிருக்கிறது. 

இதைத் தாண்டி, பொதுவெளியில் மகளிர் உரிமைப் போராளியாக மட்டுமே அறியப்பட்ட கிளாராவை, அவர் ஒரு பொது உடைமை செயற்பாட்டாளர், அதைவிட ஒரு மார்க்சீய கோட்பாட்டாளர் என்னும் அவரது இன்னொரு பரிமாணத்தை முதன்மையாக்கிக் கொடுத்திருப்பதுதான் நூலின் ஆகச் சிறப்பான செயல். 

படித்து முடித்ததும், படைப்புக்கு வெளியேயும் சிந்தனை நம்மை இழுத்துச் செல்கிறது. விதிவிலக்கான சில  படைப்புக்கள் மட்டுமே அப்படி எழுத்துக்களைத் தாண்டிய சிந்தனைக்கு இட்டுச்செல்லும். ’சமாதான வழிகளில் சோசலிச வளர்ச்சி’ (ப.36) எனும் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் சீர்திருத்தங்களுக்கு எதிரான கிளாராவின் போராட்டங்கள் வெறுமனே படித்துக்கடந்து போவதற்கல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது. அது சோசலிசத்திற்கெதிரான முதலாளித்துவ சீர்திருத்தங்களில் இடதுசாரிகள் சரிந்துவிடக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கைப் பாடமாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேசியத்தைக் கைவிட்டு, உலக யுத்தத்திற்கு ஆதரவாக ஜெர்மன் தேசியத்தை தேர்வுசெய்த சமூக ஜனநாயகக் கட்சியின் சந்தர்ப்பவாதிகளை கிளாரா ஆழமாக விமர்சித்தார். தேசியவாதத்தின் சாரமாக  யுத்தம் முடியும் வரை உள்நாட்டு அமைதி, வேலைநிறுத்தங்களை விலக்கி வைப்பது எனும் முதலாளித்துவத்துடன் இணக்கம் கொள்ளும் உடன்படிக்கையை(Burgfrieden) கிளாரா எதிர்த்தார். தனக்கு நெருக்கடியான போர்க்காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் முதலாளித்துவ வர்க்கம் அதே காரணத்திற்காக தனது கூடப்பிறந்த சுரண்டலை தற்காலிகமாகவேணும் தள்ளிவைக்க உடன்படுமா? எனும் வினாவையும் நம்முள் எழுப்புகிறது. அதே காலகட்டத்தில்தான் உலகப் போருக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தி வர்க்கப் புரட்சியை சாத்தியப்படுத்தினார் தோழர் லெனின். 

இந்தியாவின்  கம்யூனிஸ்ட் கட்சிகளின் திட்டமும், நடைமுறையும் இன்னமும் (இங்கு ஏற்கனவே முதலாளித்துவ வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்தபோதும், முதலாளித்துவ வளர்ச்சிக்கு இன்னும் நிலப்பிரபுத்துவம் தடையாக இருப்பதாகக் கருதிக் கொண்டு) ஜனநாயகப் புரட்சியை  திட்டமாக வைத்திருப்பதன் மூலம்   முதலாளித்துவ வர்க்கத்திற்கு  சேவை  செய்வதில்  மூழ்கிப்போயிருக்கின்றன. இப்படி வர்க்க எதிரியை சரியாகத் தீர்மானிக்க இயலாத நிலையில்,  எதிரிகளான முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணிக் கட்சியாக அணி சேர்வது-  முதலாளித்துவத்தை, அதன் சுரண்டலைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பித்தலாட்டமான தேர்தல் முறையை மக்களின் பிரதிநிதித்துவ தேர்தலாகக் கருதி,  பாராளுமன்ற  வழிப் புரட்சி என அடையாளப்படுத்துவது, இவையனைத்தும் முதலாளித்துவச் சீர்திருத்தவாதம் அன்றி வேறென்ன? நேரடி மக்களாட்சிக்கு (சோவியத்)  எதிரான மறைமுக மக்களாட்சியை (மக்கள் பிரதிநிதி எனும் போர்வையில் முதலாளித்துவக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆட்சியும், நிரந்தரமான அதிகார வர்க்கமும் இணைந்தது) நிலைநிறுத்தப் போராடுவதென்பது முதலாளித்துவத்தை நீட்டிக்கச் செய்யும் சீர்திருத்தம் தானே தவிர வேறல்ல. 

இந்த சீர்திருத்த அரசியலிலிருந்து இடதுசாரிகள் விடுபடவும், வர்க்க சமரசத்திலிருந்து விடுபட்டு வர்க்கப் போரை முன்னெடுக்கவும் கிளாராவின் வாழ்க்கை நம்மை அறைகூவியழைக்கிறது. கோட்பாட்டு வழியில் கிளாராவை நமக்கு அறிமுகப்படுத்திய இந்த நூலுக்கும், இதன் படைப்பாளருக்கும் நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.  

நூல் : கிளாரா ஜெட்கின்

ஆசிரியர் : ஜி. மஞ்சுளா

வெளியீடு : என்.சி.பி.எச்,(NCBH), சென்னை.

 - பாவெல் சூரியன்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவை சுதந்திர முதலாளித்துவ நாடு என வரையறுத்து ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அது சமரசம் செய்து கொண்ட நிலபிரபுத்துவ எதிர்ப்பையும் பின்னுக்குத் தள்ளும் பார்வை விமர்சனத்துக்குரியது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு