உக்ரைன்- ரஷ்யா மோதலைவிட சீனாவே அமெரிக்காவின் முதன்மை இலக்கு
தி பிரிண்ட்

டிரம்பைப் பொறுத்தவரை, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இந்த மோதல் ஒரு இரண்டாம் நிலை பிரச்சினையே—அவருடைய முதன்மை இலக்கு சீனாவே
சீனாவில் பரவலாகப் பயன்படும் சமூக ஊடகமான வெய்போவில், தைவான் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. டிரம்ப் உக்ரைனுக்கு உதவி செய்வதை நிறுத்தினால், தைவானும் அமெரிக்காவின் ஆதரவின்றி கைவிடப்படுமா என்று பலர் கேள்வி எழுப்பினர். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்பும், துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் வெள்ளை மாளிகையில் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட, ஒரு காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதை உலகம் அதிர்ச்சியுடன் உற்றுநோக்கியது. அந்த உரையாடல் பரபரப்பாக இருந்தது; வழக்கமான ராஜதந்திர மரபுகள் மீறப்பட்டன—அது வெளிப்படையானதாகவும், இதற்கு முன் பார்த்திராத ஒன்றாகவும் இருந்தது. அரசியல் கருத்துகள் கட்டுப்படுத்தப்படும் சீனாவில், தலைவர்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் நிலையில், இத்தகைய பகிரங்க மோதல்கள் எல்லாம் எண்ணிப்பார்க்க முடியாதவை. அதிபர் ஜி ஜின்பிங் நேரடித் தொலைக்காட்சியில் ஒரு விவாதத்தில் பங்கேற்பாரா என்பதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை. இருப்பினும், சீனாவில் இந்த விவாதம் வெறும் பரபரப்பான காட்சி மட்டுமல்ல—இந்த நிகழ்வு உலக அரசியலில் சீனாவின் இடத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் தான்.
உண்மையான இலக்கு?
டிரம்ப் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவது சீனாவின் மீதான அவரது விரிவான உத்தியின் ஒரு பகுதியே என்று பல சீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உக்ரைனுக்கான ஆதரவைக் குறைத்து, ரஷ்யாவுடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அவர் விருப்பம் காட்டுவது, சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் நிலையை வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகத் தெரிகிறது. ஜோ பைடனின் கொள்கைகள் சீனாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாக்கியிருந்தாலும், டிரம்ப் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் போட்டியில் ஒரு வெற்றி பெற முயற்சிக்கிறார். சீனாவைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் Xue Kaihuan, டிரம்ப் உக்ரைன் பிரச்சினையைத் தீர்க்க ஆவலாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார், ஏனெனில் அவர் "சீனாவைக் கட்டுக்குள் வைக்க ரஷ்யாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்க" விரும்புகிறார். "சீனாவே அனைத்திற்கும் காரண கர்த்தாவாக மாற்றும்" தந்திரத்திற்கு பலியாகவிடக்கூடாது என்று மற்றவர்கள் எச்சரிக்கின்றனர்; மேற்கத்திய நாடுகள் சீனா மீது பழி சுமத்தவும், சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நம்பிக்கை குறைவை உண்டாக்கவும், சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் சீனாவின் பங்கை கேற்விக்குறியாக்கவும் முயலலாம் என்று சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், பல சீன அரசியல் ஆய்வாளர்கள் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு பல தலைமுறைகளாக கட்டியெழுப்பப்பட்டது, அதை முறிப்பது என்பது மிகவும் அரிதான காரியம் என்று வாதிடுகின்றனர். ஃபுடான்(Fudan) பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியர் ஷென் யி, டிரம்ப் புதினைச் சந்திக்கும் போதெல்லாம், அது சீனாவுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற யூகம் நிலவுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். சீனா வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமைதியாக எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் எந்தவிதமான அவசர நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்துகிறார். ஷென் இந்த கருத்தை ஒரு பழமையான சீனப் பழமொழியின் மூலம் சுருக்கமாகக் கூறுகிறார்: "அவன் தெளிந்த நிலவொளியில் ஆற்றைக் கடக்கிறான்"— உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் சீனா தனது நீண்ட கால இலக்குகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
சீனாவின் சாதகமான களம்
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் மீது சீனா கொண்டுள்ள நிலைப்பாடு கியூவுக்கு அதிருப்தியை அளித்திருந்தாலும், அமெரிக்காவின் ஆதரவால் ஏமாற்றமடைந்த ஜெலென்ஸ்கி இனி சீனாவை நாடக்கூடும் என்று பல சீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நெடிய சீனப் பண்பாட்டிலிருந்து ஊற்றெடுக்கும் ஞானம், உக்ரைனுக்கு ராஜதந்திரம் குறித்த மிக முக்கியமான படிப்பினைகளை வழங்க வல்லது என்று ஓர் ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார். "வேற்றுமையில் ஒற்றுமை காண முயற்சிப்பது" எனும் தத்துவம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையலாம். சீன மெய்யியலின் நுட்பங்களை உள்வாங்கி, ராஜதந்திரம், பொருளாதாரம், கல்வி, அரசியல் போன்ற துறைகளில் சூழ்நிலைக்கு ஏற்ற உத்திகளை கையாளுவதன் மூலம், உக்ரைனால் நிலைத் தன்மையும், முன்னேற்றமும், நீண்ட கால வளர்ச்சியையும் பெற முடியும்.
அதே வேளையில், போர் முடிவுற்ற பின்னர் புனரமைப்புப் பணிகளுக்கு உதவுவதற்கு சீனா ஒரு வலிமையான இடத்தில் நிற்கிறது. சில சீன நிபுணர்கள் "தானியத்திற்குப் பதிலீடு புனரமைப்பு" என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். இத்திட்டத்தின் வாயிலாக, உக்ரைன் தனது தானியத்தையும், கனிம வளங்களையும் சீனாவின் மேம்பட்ட உள்கட்டமைப்பு கட்டுமானத் திறனைப் பெறுவதற்காக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். இது இரு தரப்பினருக்கும் பரஸ்பர நன்மையை விளைவிக்கும்.
சீனாவின் இந்தச் சாதகமான வாய்ப்பு வெறும் புனரமைப்புடன் நிறைவடைவதில்லை. வளங்களுக்காக நாடுகள் போட்டியிடும், அரசியல் வியூகங்களில் ஈடுபடும் ஒருலகில், சீனாவின் அணுகுமுறை உலகளாவிய சமூகத்திற்கு ஒரு நீதியான, தர்க்கரீதியான தீர்வாக விளங்குகிறது என்று ஒரு சீனக் சமூக ஊடகப் பயனர் தெளிவுபடுத்துகிறார். சீனாவின் பொறுப்புள்ள உலகளாவிய தலைமைப் பண்பு பல உரையாடல்களில் முதன்மை பெறுகிறது, இது மேற்குலக நாடுகளின் பாணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. சீன இணையவெளியில் நிலவும் பல கருத்துகளின்படி, மேற்குலக நாடுகள் அதிகாரப் போட்டிகளையும் பிராந்தியங்களை கூறுபோடுவதையும் ஊக்குவிக்கின்றன.
மேலும், உக்ரைன் மீது ஐரோப்பாவின் செல்வாக்கிலும், ஒத்துழைப்பிலும் உள்ள சிக்கல்கள் பற்றியும் கருத்துகள் நிலவுகின்றன. ஃபூடான் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க பேராசிரியர் ஷிபிங் டாங், வியட்நாமிடமிருந்து உக்ரைன் ஏராளமான படிப்பினைகளைக் கற்க இயலும் என்று கூறுகிறார். கடந்தகால முரண்பாடுகள் மட்டுமல்லாது 1975 முதல் 1989 வரை சீனாவுக்கு எதிராக சோவியத் யூனியனுடன் வியட்நாம் கொண்டிருந்த கூட்டணி நீடித்தபோதிலும், வியட்நாம் சீனாவுடனும் பிற முக்கிய வல்லரசுகளுடனும் தனது உறவுகளைச் சாதுரியமாக சமநிலைப்படுத்திக் கொண்டது. ஒருதலைப்பட்சமான நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதற்கு மாறாக, வியட்நாம் ஒரு நடைமுறை சார்ந்த அணுகுமுறையை பின்பற்றியது. ராஜதந்திரம் என்பது உணர்ச்சிவசப்பட்ட மனநிறைவைத் தேடுவதை விடுத்து சாமர்த்தியமான போர்த்தந்திரத்தின் அடிப்படையிலான சமநிலையை கண்டறிவதே என்பதை வியட்நாம் ஆழமாக உணர்ந்துகொண்டது.
டிரம்பின் உத்தியும், சீனாவின் கணக்குகளும்
டிரம்பின் கணிக்க முடியாத முடிவெடுக்கும் பாணி, சீனா தனது உலகளாவிய செல்வாக்கை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கலாம். சீன சமூக ஊடகமான வெய்போவில், தைவான் குறித்து தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. டிரம்ப் உக்ரைனுக்கு அளிக்கும் ஆதரவை குறைத்தால், தைவானும் கைவிடப்படக்கூடுமோ என்று பல பயனர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்தச் சூழ்நிலை உலக அரங்கில் சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்கை வகிக்க உதவக்கூடும் என்று பலர் நம்புகின்றனர். டிரம்ப் பேச்சுவார்த்தைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தருணத்தில், சீனா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு ஆய்வாளர் சில பரிந்துரைகளை முன்வைத்தார். முதலாவதாக, சீனா மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் மூலம் சர்வதேச அரங்கில் பொறுப்புள்ள நாடாக விளங்க வேண்டும். மேலும், போரில் நேரடியாகத் தலையிடாமல் நடுநிலைமை வகிப்பதோடு, சர்வதேசப் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானத் தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும். அதே வேளையில், சீனா ரஷ்யாவுடனான உறவுகளைத் தொடர வேண்டும், ஆனால் உக்ரைனின் சுதந்திரத்தையும் நலன்களையும் மதித்து நடக்க வேண்டும்.
சீனா ஏற்கனவே உக்ரைனில் புனரமைப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இதனை தனது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியுடன் தொடர்புபடுத்தி மேலும் விரிவாக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இது உண்மையில் சீனாவுக்கு நன்மை அளிக்குமா என்பது காலப்போக்கில் தெரியவரும். இந்த நிலைமை டிரம்பின் எதிர்கால நகர்வுகள், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரின் பரஸ்பர உறவுகளைப் பொறுத்தே அமையும்.
அதேவேளையில், இந்தச் சூழ்நிலை டிரம்புக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. அவர் ஒரு போரைத் தொடங்காமல் முடிவுக்குக் கொண்டுவந்த அமெரிக்க அதிபராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியும் - இதன் மூலம் சீனாவுக்கு இருக்கும் சமாதானத் தூதர் என்ற தோற்றத்தை நீக்க முடியும் . மேலும், ரஷ்யாவை மீண்டும் உலக அமைப்பிற்குள் கொண்டுவந்து, பிற வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சீனா மீதான அதன் சார்பை குறைக்க அவர் முயற்சிக்கலாம்.
நிச்சயமாக, இந்த இலக்கை அடைவதிலுள்ள சவால்களை சீன நிபுணர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் டிரம்பின் திட்டத்தில் ஒரு சிறு பகுதியேனும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால், அவர் சீனா கையாளும் உத்தியையே - அதாவது பெரிய இலக்கை அடைவதற்கு சிறிய தடைகளை அகற்றுவது என்ற உத்தியையே பின்பற்றுவதாகத் தோன்றுகிறது. டிரம்பைப் பொறுத்தவரை, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இந்த மோதல் ஒரு இரண்டாம் நிலை பிரச்சினையே—அவருடைய முதன்மை இலக்கு சீனாவே.
தைவான் ஆசியா உறவுக்கான அறக்கட்டளையின் ஆய்வறிஞராக சனா ஹாஷ்மி பணியாற்றி வருகிறார். அவர் @sanahashmi1 என்ற ட்விட்டர் கணக்கில் தனது தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவை அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://theprint.in/opinion/eye-on-china/for-trump-ukraine-and-russia-are-the-side-battles-china-is-the-endgame/2533464/