பிரிவு 370 ரத்து | லடாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் நிலைப்பாட்டை பாதிக்காது - சீனா

தி இந்து

பிரிவு 370 ரத்து | லடாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் நிலைப்பாட்டை பாதிக்காது - சீனா

லடாக் சம்பந்தமான சட்டப்பிரிவு 370 குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சீன நிலைபாட்டை பாதிக்காது என்று சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார். இந்திய-சீன எல்லையின் மேற்கு பகுதி "எப்போதும் சீனாவுக்கு சொந்தமானது" என்றும் அவர் வாதிட்டார்.

டிசம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 2019 இல் 370 வது பிரிவை ரத்து செய்தது செல்லும் என உறுதி செய்தது. அது ஜம்மு -காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைக்க வழிவகுத்து அதன் சிறப்பு அங்கீகாரத்தை மறுத்தது.

“இந்தியாவால் ஒருதலைப்பட்சமாகவும் சட்டவிரோதமாகவும் உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இந்திய நீதித்துறை தீர்ப்பு சீன-இந்திய எல்லையின் மேற்குப் பகுதி எப்போதும் சீனாவுக்கு சொந்தமானது என்ற உண்மையை மாற்றாது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், தீர்ப்பு குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

இந்த கருத்துக்கள்தான் சீனாவின் பொதுவான நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. 370 ரத்து செய்யப்பட்ட உடனேயே, "அது உள்நாட்டு சட்டங்களின் ஒருதலைப்பட்ச தீர்ப்பு" என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதே சீனா கூறியது.

"5 ஆகஸ்ட் 2019 தேதியினது இந்தியாவின் ஒருதலைப்பட்ச மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை சர்வதேச சட்டம் அங்கீகரிக்கவில்லை. நீதித்துறை தீர்ப்புக்கு சட்டரீதியான மதிப்பும் இல்லை." என்று பாகிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி விமர்சித்துள்ளார்.

அதற்கு முன்னதாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கவலை தெரிவித்திருந்தது.

OIC இன் அறிக்கையை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. "தொடர் மனித உரிமை மீறலையும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் ஊக்குவிப்பதன் பேரில் OIC அவ்வாறு செய்கிறது, அதன் போக்குகள் இன்னும் சந்தேகத்திற்குரியதாகிறது" என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார். எனினும் அவர் சீனாவின் கருத்துக்கள் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: The Hindu