ஷாஹெத் ட்ரோன் தாக்குதல்: நிலைகுலையுமா உக்ரைன்?

தி கார்டியன் - தமிழில்: விஜயன்

ஷாஹெத் ட்ரோன் தாக்குதல்: நிலைகுலையுமா உக்ரைன்?

நாளுக்கு நாள், தாக்குதல்கள் தீவிரமடைந்து கொண்டே செல்கின்றன. ரஷ்யா, ஆளில்லா விமானங்கள், போலியான குண்டுகள், சீர்வேக ஏவுகணைகள் மற்றும் எறிவிசை(பாலிஸ்டிக்) ஏவுகணைகளை முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் உக்ரைனுக்குள் ஏவி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் ஒரு நகரம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையே குறிவைக்கின்றன. இது உக்ரைனின் தற்காப்பு அமைப்புகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், மற்றொரு குளிர்காலப் போரை அந்நாடு எந்தளவிற்கு தாக்குப்பிடிக்கும் என்ற கேள்விகளையும் எழுப்புகிறது.

இந்த மாதத் தொடக்கத்தில், ஒரே ஒரு நாளில், ரஷ்யா 728 ஆளில்லா விமானங்களையும், 13 ஏவுகணைகளையும் ஏவியது. இவற்றில் பெரும்பாலானவை மேற்கு நகரமான லுட்ஸ்க்-ஐ நோக்கியே செலுத்தப்பட்டன. பல உக்ரேனிய இராணுவ விமான தளங்கள் லுட்ஸ்க் பகுதியில்தான் அமைந்துள்ளன. பெரிய அளவிலான தாக்குதல்கள் இப்போது மிகவும் அடிக்கடி நிகழ்கின்றன – முன்பு 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை நடந்ததற்கு மாறாக, தற்போது மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. பொதுமக்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் 232 பேர் கொல்லப்பட்டனர், இது கடைசி மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த அதிகபட்ச மாதாந்திர உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.

இராணுவ வல்லுநர்கள், ரஷ்யா விரைவில் ஒரே நேரத்தில் 1,000 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடங்கும் என எதிர்பார்க்கின்றனர். கடந்த வார இறுதியில், ஜெர்மன் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் கிறிஸ்டியன் ஃபிராய்டிங், "ஒரே நேரத்தில் 2,000 ட்ரோன்களைக்" கொண்டு உக்ரைனை தாக்குவதே ரஷ்யாவின் நோக்கம் என்று முன்கூட்டியே அறிவித்திருந்தார். ட்ரோன்கள், ஏவுகணைகளின் உற்பத்தியை ரஷ்யா அதிகப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் முறைகளும் மெருகேறியுள்ளன.

ரஷ்யா, பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லா விமானங்களை, எண்ணற்ற போலி இலக்குகளுடன் ஒருசேரப் பெருந்திரளாக ஏவுவதுடன் நில்லாமல், அவற்றை மிகத் தாழ்ந்த அல்லது மிக உயர்ந்த பறக்கும் மட்டங்களில் இயக்குகிறது. சில தருணங்களில், பகைவர்களை நிலை குலையச் செய்யும் நோக்கில், இந்த ஆளில்லா விமானங்கள் பல்வேறு மட்டங்களில் அடுக்குகளாக அணிவகுக்கப்படுகின்றன. பின்னர், அவை திடீரென செங்குத்தான நிலையில் இலக்குகளை நோக்கி மின்னலெனப் பாய்ந்து தாக்குகின்றன. ஆளில்லா விமானங்கள் உயரமான வான்வெளியில் பறக்கும்போது, வாகனத்தின் மீது அமர்ந்துள்ள உக்ரேனியத் துப்பாக்கி வீரர்களின் சுடும் எல்லைக்கு அப்பால் சென்றுவிடுகின்றன. குறைந்த செலவில் ஆளில்லா விமானங்களை வீழ்த்துவதே இந்தத் துப்பாக்கி வீரர்களின் பிரதான கடமையாக உள்ளது.

உக்ரேனிய விமானப்படையின் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதிக எண்ணிக்கையிலான ஆளில்லா விமானங்கள் தற்போது உக்ரைனிய இலக்குகளை வெற்றிகரமாகச் தாக்கியிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏறத்தாழ 5% ஆக இருந்த அவற்றின் தாக்குதல் விகிதம், மே மற்றும் ஜூன் மாதங்களில் 15% முதல் 20% வரை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ரஷ்யா தனது ஷாஹெட் ஆளில்லா விமானங்களை மேலும் நுணுக்கமாகவும் தந்திரமாகவும் பயன்படுத்துகிறது என்று இராணுவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிவேகமும் பெரும் அழிவையும் ஏற்படுத்தக்கூடிய குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குப் பாதை அமைத்து தருவதற்கே இந்த ஆளில்லா விமானங்களை ரஷ்யா ஏவுகிறது. ஏனெனில், ஒரு ஷாஹெட் ட்ரோன் சாதாரணமாகச் சுமந்து செல்லும் 50 கிலோகிராம் (110 பவுண்டு) வெடிபொருள், ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான சேதத்தையே ஏற்படுத்தும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்

முக்கோண வடிவ இறக்கை அமைப்பைக் கொண்ட ஷாஹெட் 136 ரக ஆளில்லா விமானங்கள், ஈரானில்தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டன. இவை தற்போது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு, ‘ஜெரான்-2’ எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. இராணுவ நிபுணர்கள் குறைந்தது இரண்டு உற்பத்தி மையங்கள் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர் – அவற்றில் ஒன்று இஷெவ்ஸ்க் நகரில் அமைய, மற்றொன்று உக்ரைனிலிருந்து 700 மைல்களுக்கும் அப்பால் உள்ள, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த யெலபுகா நகரில் அமைந்துள்ளது. சமீபத்தில், ரஷ்யத் தொலைக்காட்சி நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு அசெம்பிளிங் தளத்தைக் காட்சிப்படுத்தியது. அதன் பின்னணியில், பல்வேறு தனித்தன்மை வாய்ந்த ஃபைபர் கிளாஸ், கார்பன்-ஃபைபர் சட்டகங்கள் மிரட்டும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.

ஷாஹெட் ட்ரோன் மூலமாக ஏற்படும் அபாயம் குறித்து இராணுவ வல்லுநர்கள் முன்கூட்டியே எச்சரித்து வந்துள்ளனர். இப்போர் முனையின் "T-34 டாங்கி எதுவாக அமையும்?" என்னும் கேள்வி ரஷ்யாவின் மனதை நெடுங்காலமாகவே குடைந்து வந்திருப்பதாகக் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வு நிறுவனத்தின் இராணுவ நிபுணர் ஜாக் வாட்லிங் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை வீழ்த்த சோவியத் யூனியனுக்குப் பெரும் பக்கபலமாகத் திகழ்ந்ததாகப் பலராலும் போற்றப்படும் அந்த டாங்கி போன்ற ஒன்றைத்தான் அவர் இங்கு குறிப்பிடுகிறார்.

ரஷ்ய இராணுவ வியூக வகுப்பாளர்கள் மனதில் ஒரு முதன்மையான கவலை குடிகொண்டிருப்பதாக வாட்லிங் மேலும் விளக்கினார். அக்கவலை யாதெனில்: "நாம் முதலீடு செய்யவிருக்கும் தொழில்நுட்பம் எது? அது உயர்தரம் கொண்டதாகவும், போதுமானளவிற்கு மலிவானதாகவும் இருந்து, நமக்கு வெற்றிகரமான விளைவுகளைத் தர வேண்டும்.".

இந்த இலக்கை எய்துவதற்காக ரஷ்யா இரண்டு முதன்மைத் தொழில்நுட்பங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அவை ஷாஹெட் ட்ரோன்களும், இஸ்கந்தர் ஏவுகணைகளுமேயாகும். இந்த இரு தொழில்நுட்பங்களிலும் ரஷ்யா பெரும் அளவில் முதலீடு செய்துள்ளதாக வாட்லிங் சுட்டிக்காட்டினார். இந்த ஆயுதங்கள் வழியாக நீண்டகால இராணுவம் மட்டுமல்லாது தொழில்சார்ந்த வெற்றியை ஈட்டுவதே ரஷ்யாவின் நோக்கமாகும்.

யெலபுகா தொழிற்சாலையின் ரஷ்ய காணொலிக் காட்சி ஒன்றில், வர்ணனையாளர் ஒரு முக்கியத் தகவலை எடுத்துரைக்கிறார். அங்கு, 15 வயதே ஆன இளம் பருவத்தினரும் கூட தொழிற்சாலையில் பணியாற்ற அழைக்கப்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இவர்கள் அருகமைந்த ஒரு தொழில்நுட்பக் கல்லூரியைச் சார்ந்தவர்கள். உற்பத்திச் செலவுகளைக் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதில் கிரெம்ளின் அரசு எத்துணை முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இது தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஷாஹெட் 136 ரக ட்ரோனின் உற்பத்திச் செலவு மிகவும் குறைவானது. சென்டர் ஃபார் நேவல் அனாலிசிஸ் ஆய்வு நிறுவனத்தின் ட்ரோன் நிபுணர் சாமுவேல் பென்டெட் கூற்றுப்படி, ஒரு ட்ரோனைத் தயாரிக்க தோராயமாக $50,000 (£37,000) முதல் $100,000 வரை செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.

இதேவேளையில், ஷாஹெட் ஆளில்லா விமானங்களுக்கான உதிரி பாகங்கள், அதை தயாரிப்பதற்கான உபகரணங்களின் விநியோகம் கணிசமாக உயர்ந்துள்ளது. போர் ஆய்வுக் கழகத்தின் (Institute for the Study of War) ஆய்வுப் பிரிவில் பணியாற்றும் காடெரினா ஸ்டெபனென்கோ, "சீனா தற்போது ரஷ்யாவிற்கு நேரடியாகவே உதிரி பாகங்களை வழங்கி வருகிறது" என்றார். யெலாபுகா நகருக்கு அண்மையிலுள்ள சீனாவுடனான நேரடி ரயில் இணைப்பு இந்த முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றியிருக்கக் கூடும். "சீன உதரி பாகங்களின் ஒருங்கிணைப்பு, முன்னர் ஈரானிலிருந்து வந்த விநியோகத்திற்குப் மாற்றாக அமைந்துவிட்டது. இதன்மூலம், உற்பத்தியாளர்களுக்கு தற்போது அதிக எண்ணிக்கையிலான உதிரிபாகங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

உக்ரைனில், மக்கள் ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ளனர். தற்போதுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த கடும் கவலை, அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியை, அமெரிக்க பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை பெறுவதற்கு மீண்டும் மீண்டும் வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கத் தூண்டியுள்ளது. ஜெர்மனியும் கூடுதலாக ஐந்து பேட்ரியாட் வான்காப்பு அமைப்புகளுக்கான செலவை ஏற்க உறுதியளித்துள்ளது. ஆனால், பேட்ரியாட் அமைப்புகளை, க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக மட்டுமே செலவு குறைந்த வழியில் பயன்படுத்த இயலும்; ஷாஹெட் ட்ரோன்களுக்கு எதிராக அவை பலனளிக்காது. ஏனெனில், அதிநவீன PAC-3 இடைமறிப்பு ஏவுகணைகள் ஒவ்வொன்றும் சுமார் $4 மில்லியன் செலவுபிடிக்கக்கூடியதாகும்.

ஷாஹெட் ட்ரோன்களைத் தகர்க்க வல்ல, மலிவான ட்ரோன்களை உருவாக்குவதற்கு உக்ரைன் தொடர்ச்சியான, இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்த ட்ரோன் எதிர்ப்பு முயற்சிகள் குறித்த விரிவான தகவல்கள் இணையத்தில் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே காணக் கிடைக்கின்றன. இதற்குக் காரணம், செயல்பாட்டுப் பாதுகாப்பிற்காக இந்த முயற்சி ரகசியமாகப் பேணப்பட்டு வருவதே ஆகும். இரு வாரங்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிடத்தக்க உக்ரேனிய நிதி திரட்டுபவரான செர்ஹி ஸ்டெர்னென்கோ, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தனது அறக்கட்டளையின் "ஷாஹேடோரிஸ்" திட்டத்தின் ஒரு பகுதியாக, நூற்றுக்கும் மேற்பட்ட எதிரியின் வான் இலக்குகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கிடைத்துள்ள தகவல்கள், ட்ரோன் எதிர்ப்புத் தொழில்நுட்ப உருவாக்கத்தில், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதைச் சுட்டுகின்றன. ஆனால், "தொழில்நுட்பம் கைவசம் இருந்தபோதிலும், இந்தத் தற்காப்பு அமைப்புகளின் உற்பத்தி இன்னும் அதிகரிக்கவில்லை," என்பதே இந்தத் தருணத்தில் முக்கியச் சிக்கல் என வாட்லிங் வலியுறுத்துகிறார்.  இந்த உற்பத்திச் சிக்கல், இம்மாதத் தொடக்கத்தில் ஜெலன்ஸ்கி அறிவித்த ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாகத் தீர்க்கப்படலாம். இந்தக் ஒப்பந்தம், கூகுளின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான எரிக் ஷிமிட்டுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடைமறிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களைப் பெருமளவில் உற்பத்தி செய்வதே இவர்களின் முதன்மையான இலக்கு. ஆயினும், இந்தப் திட்டம் குறித்த விரிவான தகவல்கள் இப்போதும் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை.

இதற்கிடையே, கடந்த மாதத்தில், உக்ரேனிய அதிகாரிகள் தங்கள் முயற்சிகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். உக்ரைனின் மேற்குப் பகுதியிலுள்ள வான்வெளியைப் பாதுகாக்கும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள ஐரோப்பிய வல்லரசுகளை இணங்கச் செய்ய அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். மார்ச் மாதத்தில், 'வானக் கவசம்' (Sky Shield) எனும் பெயரில் ஒரு பாதுகாப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 120 போர் விமானங்கள் டினிப்ரோ நதியின் மேற்குப் பகுதியில் தற்காப்பு வான் ரோந்துப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ள இயலும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரே இத்திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமாகும் என இராணுவ வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர். இத்தகைய போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ரஷ்யா ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது.

மோதலுக்குப் பிந்தைய, 'நம்பிக்கை ஏற்படுத்தும் படைகளை'(reassurance force) உருவாக்குவது என்ற திட்டத்தின் ஒரு அங்கமாக, வான் ரோந்துப் பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்படைகளுக்கு பிரிட்டனும் பிரான்ஸும் தலைமையேற்கும். ஆயினும், உக்ரேனிய வான்வெளியைப் பாதுகாக்க இதுவரை எந்தவொரு மேற்குலக நாடுகளும் முன்வர விருப்பம் தெரிவிக்கவில்லை. அத்தகையதொரு நடவடிக்கை, ஒரு நேட்டோ நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டிவிடும் என அஞ்சுகின்றன.

ஐரோப்பிய வான் பாதுகாப்பு ஆதரவைப் பெறுவதற்காக மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள முயற்சியில் ஈடுபட்டுள்ள ஓர் முக்கியப்புள்ளி, "இந்த நிலைமை மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது," என்று வேதனையுடன் கூறினார்.

"பல ஆண்டுகளாக, அச்சுறுத்தல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகப் பல நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்குப் படைகளை அனுப்பியிருந்தன. ஆனால், உக்ரைன் தனது வான்பரப்பைச் முறையாகப் பாதுகாத்துக் கொள்ள எவருமே உதவ முன்வரவில்லை."

இராஜதந்திரத் தீர்வுகள் பலனளிக்கும் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லாவிட்டாலும்கூட, வான்வெளி ஆதிக்கத்திற்கான போராட்டத்தில் சமநிலை ரஷ்யாவுக்குச் சாதகமாகத் திரும்பிவிட்டது. இந்த நிலைமை வரும் வாரங்களில் மேலும் பேரழிவை ஏற்படுத்தும் அச்சுறுத்தலாக உருவெடுக்கக்கூடும். குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாக, ரஷ்யா, உக்ரைனின் மின் கட்டமைப்பையும், பிற அத்தியாவசியப் பயன்பாட்டு அமைப்புகளையும் குறிவைத்து ஒரு தீவிரமான, தீர்மானகரமான தாக்குதலை முன்னெடுக்கக்கூடும்.

தற்போதைய நிலவரப்படி, அதிகரித்துள்ள ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களின் தீவிரம் ஒரு முக்கியமான விடயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் "தனது இலக்குகளில் அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறார் என்பதை இது திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறது. அவர் உக்ரைன் முற்றிலும் சரணடைந்து, முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்," என்று ஸ்டெபனென்கோ குறிப்பிடுகிறார். "இந்த போர் நிச்சயமாக ஒரு தேக்கமடைந்த போராக இனி இருக்காது".

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.theguardian.com/world/2025/jul/25/russia-record-attacks-ukraine-struggles-defend-itself?utm_source=whatsappchannel