சிப் போர் முதல் அருமண் தனிமங்களுக்கான போர் வரை

தமிழில்: விஜயன்

சிப் போர் முதல் அருமண் தனிமங்களுக்கான போர் வரை

தொழில்நுட்பப் போர்கள், வெறும் கணினிச் சில்லுகளுடன் நின்றுவிடாமல், பெரிதும் அறியப்படாத, ஆயினும் மிக இன்றியமையாத 'அருமண் தனிமங்கள்' எனும் புதிய களத்திற்கு நகர்ந்துள்ளன. வேதியியலைப் பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு, அருமண் தனிமங்கள் மர்மமான தனிமங்களாகப் படக்கூடும். ஆயினும், இத்தனிமங்களே தொழில்நுட்பப் போட்டியில் களமிறங்கியுள்ள நாடுகளுக்கு இடையே ஒரு புதிய போர்முனையாகத் திகழ்கின்றன.

 

அருமண் தனிமங்கள் என்பவை புவியின் மேலோட்டில் காணப்படும் 17 உலோக மூலகங்களின் தொகுப்பு ஆகும். இயற்கையில் இவை உண்மையிலேயே அரிதானவை அல்ல; ஆனால், அவை பெரும்பாலும் பிற தனிமங்களுடன் கலந்து, மிகச் சிறிய அளவிலேயே கிடைப்பதால், அவற்றைப் பிரித்தெடுத்தல் கடினமானதாகவும் செலவு மிகுந்ததாகவும் உள்ளது. இதனாலேயே இவை 'அருமண்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இத்தனிமங்கள், பல நவீன சாதனங்களில் பயன்படும் தனித்துவமான மின்காந்தப் பண்புகளைப் பெற்றுள்ளன.

 

இன்றைய உலகில், அன்றாடத் தொழில்நுட்பங்கள் பலவற்றிற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சாதனங்களுக்கும் அருமண்கள் அத்தியாவசியமானவை என்பதை நாம் தற்போது உணர்ந்திருக்கிறோம். கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆடம் தூஸ் கூறுவது போல, புதைபடிவ எரிபொருட்கள் மேற்கத்திய நாடுகளின் தலைமையில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தன என்றால், தற்போதைய பசுமை ஆற்றலை நோக்கிய மாற்றம் ஆசியாவின், குறிப்பாக சீனாவின் தலைமையில் நிகழ்கிறது.

 

கைபேசிகள், மின்சார வாகனங்கள், இராணுவ உபகரணங்கள் மட்டுமல்லாது நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணற்ற பிற சாதனங்களில் இன்றியமையாத மின்காந்தங்களை உருவாக்குவதற்குப் அருமண் தனிமங்கள் பேருதவி புரிகின்றன. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்ப-பொருளாதாரப் போட்டியில், அருமண் தனிமங்கள் ஒரு மைய அங்கமாக மாறிவிட்டதில் வியப்பேதும் இல்லை.

 

மிகவும் மேம்பட்ட உற்பத்தி உபகரணங்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், சிலிக்கான் சில்லுத் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், ஆற்றல் துறை என்ற போர்க்களத்தில், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அருமண்கள் தொடர்பான துறைகளில், பெரும்பாலான அருமண் வளங்களையும், அவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களையும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அதுவே முன்னிலை வகிக்கிறது.

 

நாம் முன்பே அறிந்தவாறு, நெதர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட ASML நிறுவனம், அமெரிக்கக் காப்புரிமையின் கீழ் இயங்கும் தனித்துவம் மிக்க புறஊதா ஒளிமூலங்களைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக, ASML-இன் தொழில்நுட்பம் அமெரிக்க அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாகிறது. லித்தோகிராபி இயந்திரங்கள் தயாரிப்பில் ASML ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்வதுடன், அதிநவீன கணினிச் சில்லுகள் உருவாக்கத்திற்கு அத்தியாவசியமான, அதிதீவிர புறஊதா (EUV) லித்தோகிராபி இயந்திரங்கள் மீது தனக்கே உரித்தான ஏகபோக அதிகாரத்தையும் ASML கொண்டுள்ளது. சிப் தொழில்நுட்பத்தில் மேற்கத்திய நாடுகள் தௌிவான மேலாதிக்கத்தைப் பெற்றிருந்தாலும், அருமண் தனிமங்களின் ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியும் சீனாவின் முழுமையான பிடியில்தான் ஏறக்குறைய உள்ளது.

 

அருமண் தனிமங்கள் எனப்படுபவை, வலிமைமிக்க காந்த மோட்டார்களை உருவாக்கப் பயன்படும் 17 வேதியியல் தனிமங்களின் ஒரு தொகுப்பு ஆகும். மின்கல வாகனங்கள், காற்றாலைகள், விமான இயந்திரங்கள், கைபேசிகள் உள்ளிட்ட பற்பல பொருட்களின் உற்பத்திக்கு இந்த மோட்டார்கள் அத்தியாவசியமானவை. அமெரிக்கா, சீனாவுக்கு சில்லுகள் ஏற்றுமதி செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது போலவே, சீனாவும் சில அருமண் பொருட்களின் மீது கடுமையான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் கண்டிப்பான உரிம விதிகளைப் பின்பற்றுவதுடன், இந்த மூலப்பொருட்களின் தற்போதைய மட்டுமல்லாது வருங்காலப் பயன்பாட்டாளர்கள் குறித்த விரிவான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என சீனா வலியுறுத்துகிறது.

 

இதற்குச் சிறந்ததொரு சான்றாக நியோடிமியம் இரும்பு போரான் (Ne-Fe-B) மின்காந்தங்கள் விளங்குகின்றன. சீனாவின் கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள டிஸ்ப்ரோசியம்(dysprosium) மற்றும் டெர்பியம்(terbium) ஆகிய இரு அருமண் தனிமங்கள் இந்தக் காந்தங்களில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தனிமங்களின் உற்பத்தியில் சீனா கிட்டதட்ட நூறு சதவிகித ஏகபோகத்தைக் பெற்றுள்ளது எனலாம். இக்காந்தங்கள் மிகக் கூடுதலான வலிமையைக் கொண்டிருப்பதுடன், எடை குறைந்தவையாகவும், பல வடிவங்களில் வார்த்தெடுக்கக்கூடியவையாகவும், மேலும் மிக உயர்ந்த வெப்பநிலையிலும் திறம்பட இயங்கும் ஆற்றல் படைத்தவையாகவும் விளங்குகின்றன. இத்தகைய உயர்தர அருமண் காந்தங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கைபேசித் தொழில்நுட்பம், மட்டுமல்லாது இராணுவத் துறை உட்படப் பற்பல தொழிற்சாலைகளுக்கும் இன்றியமையாதவையாகத் திகழ்கின்றன. இக்காரணத்தினாலேயே, இந்த அரிய பொருட்களின் மீது சீனா கொண்டுள்ள அசைக்க முடியாத, ஏறக்குறைய முழுமையான ஏகபோக உரிமையே, அருமண் தனிமங்களை நாடுகளுக்கிடையேயான தொழில்நுட்ப-பொருளாதாரப் போர்முனைகளில் ஒரு முதன்மையான கருவியாக உருமாற்றியுள்ளது.

 

மின்சார வாகனங்கள் (EVகள்), காற்றாலைகள் போன்ற கருவிகளில், மின் மோட்டாரின் செயல் திறன் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. நம் கைப்பேசிகளில், மின்மோட்டாரின் செயல்திறனைப் பொறுத்தே மின்கலன் மறுமின்னூட்டமின்றி எவ்வளவு காலம் செயல்படும் என்பது அமைகிறது. காற்றாலைகள் அல்லது மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, பயன்படுத்தப்படும் காந்தத்தின் செயல்திறனே ஒட்டுமொத்த சாதனத்தின் இயக்கத்திறனைத் தீர்மானிக்கிறது. ஆகையால், பயனர்களைப் பொறுத்தவரை, காந்தத்தின் செயல்திறன் அரும்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

மலிவான, அதே சமயம் மேம்பட்ட செயல்திறன் கொண்ட காந்தங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமல்லாது கைப்பேசிச் சந்தையின் வளர்ச்சிக்கும் அச்சாணியாக விளங்குகின்றன. இவற்றுடன், விண்வெளித் துறை, ஆளில்லா வானூர்திகள் (ட்ரோன்கள்), ஏவுகணைகள் போன்றவற்றுக்கும் இத்தகைய செயல்திறன் மிக்க காந்தங்கள் இன்றியமையாதவையாகும். இன்றைய நவீனக் கருவிகள் பலவற்றில் கணினிச் சில்லுகள் தவிர்க்க முடியாத அம்சமாக இருப்பது போலவே, அருமண் தனிமங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கருவிகளும், குறிப்பாக காந்தங்களும், இன்று பரவலான பயன்பாட்டில் இருக்கின்றன.

 

அருமண் வளக் கையிருப்பின் மீது சீனாவுக்கு ஏகபோகம் உள்ளதா? இல்லை, அருமண் வளக் கையிருப்பின் மீது சீனா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. உலக அருமண் இருப்புகளில் சுமார் 44% ஐ மட்டுமே சீனா தன் பிடியில் உள்ளது. வியட்நாம் (22%), பிரேசில், ரஷ்யா (தலா 21%), இந்தியா (6.9%), மற்றும் ஆஸ்திரேலியா (5.7%) போன்ற பிற நாடுகளும் கணிசமான அளவில் அருமண் கையிருப்பைக் கொண்டுள்ளன. அருமண் தனிமங்களைப் பிற கனிமங்களிலிருந்து பிரித்தெடுக்கும் செயல்முறையில்தான் சீனாவின் உலகளாவிய ஏகபோக ஆதிக்கம் அடங்கியுள்ளது. பல்வேறு தொழில்துறை மற்றும் இராணுவப் பயன்பாடுகளுக்கு அத்தியாவசியமான அருமண் தனிமங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்களின் விநியோகச் சங்கிலியின் பெரும் பகுதியையும் சீனாவே தமது பிடியில் வைத்துள்ளது.

 

"அரிது" என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டாலும், இத்தனிமங்கள் உண்மையில் புவி மேலோட்டில் பரவலாகவே காணப்படுகின்றன. இவை பிற கனிமங்களுடன் கலந்து மிகக் குறைந்த அளவில் காணப்படுவதே இவற்றைப் பிரித்தெடுப்பதில் உள்ள சவாலாகும். சில தருணங்களில், இந்தியாவின் மோனாசைட் மணலில் காணப்படுவது போல, தோரியம் போன்ற கதிரியக்கப் பொருட்களுடனும் இவை கலந்திருக்கக்கூடும். இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் (IREL) இத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், நீண்டகாலமாக தோரியம் உற்பத்தியிலேயே தனது முதன்மையான கவனத்தைச் செலுத்தியது. இதன் விளைவாக, IREL அருமண் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் போதிய கவனம் செலுத்த இயலவில்லை. ஆனால், தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழில்நுட்பங்களில் இவை ஈடு இணையற்ற முக்கியத்துவம் பெற்றுள்ளன.

 

ஐம்பதுகளிலிருந்து எண்பதுகள் வரை, உலகளாவிய அருமண் தனிமங்களின் உற்பத்தியில் அமெரிக்காவே அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்தி வந்தது. அக்காலத்தில், வண்ணத் தொலைக்காட்சிகள், கண்ணாடிக்கு நிறமூட்டுதல், கச்சா எண்ணெயிலிருந்து இலகு ரகப் பொருட்களைப் பிரித்தெடுத்தல் எனப் பற்பல பொருட்களின் உருவாக்கத்தில் அருமண் தனிமங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்றைய காலகட்டத்திலோ, காற்றாலைகள், மின்சார வாகனங்கள், விமானங்கள், ரோபோட்டிக் கருவிகள், அதோடு ஏவுகணைகள், தொலைத்தொடர்பு அமைப்புகள் போன்ற இராணுவத் தளவாடங்கள் எனப் பல்வேறு தொழில்களுக்கு இந்த அருமண் தனிமங்கள் இன்றியமையாத முதுகெலும்பாகத் திகழ்கின்றன.

 

உலகளாவிய அருமண் தனிம உற்பத்தியில் சீனாவின் பங்கு ஏறத்தாழ 60% ஆக இருந்தாலும், அதனை பிரித்தெடுத்து சுத்திகரிப்பு செய்வதில் சுமார் 90% சீனா வசமே உள்ளது. அதாவது, மியான்மர், ஆஸ்திரேலியா, வியட்நாம் போன்ற பிற நாடுகளில் வெட்டியெடுக்கப்படும் அருமண் தனிமங்களையும் தன் ஆளுகைக்குள் கொண்டு சீனா சுத்திகரிப்பு செய்கிறது என்பதையே இது தெளிவாக காட்டுகிறது. மேலும், வலிமை வாய்ந்த காந்தங்கள் போன்ற தயாரிப்புகளில் பயன்படும் கனமான அருமண் தனிமங்கள் மீதான சீனாவின் பிடி 99%க்கும் மேல் எனும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 

அமெரிக்க இராணுவத்திற்கு அருமண் தனிமங்கள் எவ்வளவு அத்தியாவசியமானவை என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. போர்த்தந்திர மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அறிக்கையின்படி, F-35 ரகப் போர் விமானங்கள் (அவற்றுள் 900 பவுண்டுகள் அருமண் தனிமங்கள் உள்ளன), நீர்மூழ்கிக் கப்பல்கள், டோமாஹாக் ஏவுகணைகள், ரேடார் கருவிகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), மற்றும் அதிநவீன குண்டுகள் போன்ற இராணுவத் தொழில்நுட்பங்களுக்கு இந்த அருமண் தனிமங்கள் உயிர்நாடியாக விளங்குகின்றன. இருப்பினும், கனமான அருமண் காந்தங்களை உற்பத்தி செய்வதற்கான வசதிகள் அமெரிக்காவிடமோ அல்லது அதன் நட்பு நாடுகளிடமோ தற்போது இல்லை என்பது ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்கா ஒரு புதிய உற்பத்தி ஆலையை அமைத்தாலும் கூட, 2018-ல் சீனா உற்பத்தி செய்த மொத்த அளவில் வெறும் 1% மட்டுமே அவர்களால் உற்பத்தி செய்ய முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

 

ஆஸ்திரேலியாவின் 'லைனாஸ் ரேர் எர்த்ஸ்' (Lynas Rare Earths) நிறுவனம், சீனாவிற்கு வெளியே அருமண் தனிமங்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. ஆயினும், அந்நிறுவனம் தனது பெரும்பான்மையான அருமண் தனிமங்களை இறுதிப் சுத்திகரிப்புக்காக சீனாவிற்கே அனுப்பிவைக்கிறது. அருமண் கச்சாப் பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கிடைக்கப்பெற்றாலும், அதன் முக்கியமான சுத்திகரித்தல் மற்றும் விநியோகச் சங்கிலி முழுவதும் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பதையே கண்கூடாக வெளிப்படுத்துகிறது.

 

மின்னணுச் சில்லுகளாகட்டும், அருமண் பொருட்களாகட்டும், எந்தவொரு தொழில்நுட்பமும் ஒரு நாட்டிற்கு மட்டுமே நிரந்தர உரிமை ஆகிவிடாது. அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற மாபெரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் இறுதியில் தங்கள் சொந்த உற்பத்தித் திறனையும் தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக் கொள்ளும். ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் ஒரு நாட்டைச் சில காலம் பின்தங்கச் செய்யலாமே தவிர, நிரந்தரமாக அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. கடந்த காலங்களில் அணுசக்தி தொழில்நுட்பம் அல்லது ஏவுகணைகள் மீதான ஏற்றுமதித் தடைகள் கூட, இலக்கு வைக்கப்பட்ட நாடுகள் அத்தகைய தொழில்நுட்பங்களை முழுமையாக உருவாக்குவதைத் தடுத்து நிறுத்திவிடவில்லை.

 

பொருளாதார மேதை ஜான் மேனார்ட் கீன்ஸ் கூறியது போல, "தொலைநோக்குத் திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தால், நாம் அனைவரும் மடிந்தே போவோம்". இன்றைய யதார்த்தமான சிக்கல், நெடுங்காலப் போக்கில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதல்ல; மாறாக, நிகழ்காலத்தில் யார் கட்டுப்பாட்டைத் தங்கள் கைகளில் வைத்துள்ளார்கள் என்பதே. இதுவே, மின்னணுச் சில்லுகள் மற்றும் எரிசக்தி தொடர்பான தற்போதைய அதிகாரப் போட்டிகளில் மையப்புள்ளியாக விளங்கும் பெரும் போராட்டமாகும்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://theaidem.com/en-modern-era-tech-wars-from-computer-chips-to-rare-earth-minerals

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு