உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் கடன் - அமெரிக்கா அறிவிப்பு

விஜயன்

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் கடன் - அமெரிக்கா அறிவிப்பு

செப்டம்பர் 11, 2023 அன்று, உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதியுதவியை வழங்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக  அமெரிக்காவின்  வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் எவ்வித முன்னறிவிப்புமின்றி கியூவுக்குச் சென்றார்.

இந்த உதவியில் பாதுகாப்புத் துறையின் ஆயுதங்களும், உபகரணங்களும் அடங்கும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அவற்றின் மதிப்பு 175 மில்லியன் டாலர்களாகும்.

இந்த நிதி உதவியில் சிறப்பு வாய்ந்த அம்சம் என்னவென்றால் ஆப்ராம்ஸ் டாங்கிகளில் பயன்படுத்தத்தக்க 120மிமீ அளவிலான டாங்கி தோட்டாக்களை வழங்கவிருப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னவெல்லாம் வழங்கவிருக்கிறோம் என்பது குறித்த பட்டியலையும்  பென்டகன் வெளியிட்டிருந்தது. இந்த டாங்கி தோட்டாக்கள் கதிர்வீச்சுகளை வெளியிடக்கூடியவையாக இருப்பதே இதில் கவனிக்கத்தக்க அம்சமாகும். உக்ரைனுக்கு அமெரிக்கா இதுபோன்ற தோட்டாக்களை வழங்குவது இதுவே முதல் முறை.

வான் பாதுகாப்பு ஆயுதங்கள், ராக்கெட்டுகள், வெடிமருந்துகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான கருவிகளையும் வழங்கவிருப்பதாக அந்த அறிவிப்பில் அமெரிக்கா கூறியுள்ளது.

எதிர்காலத்தில் உக்ரைனின் இராணுவத் தேவைகளுக்கு உதவ 100 மில்லியன் டாலர்களை வழங்குவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இதற்காகவென்று அமெரிக்கா வெளிநாட்டு ராணுவ நிதியளிப்பு திட்டத்தை பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளனர்.

உக்ரைன் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக 206 மில்லியன் டாலர்களை வழங்கப்போவதாக கூறியுள்ளனர். இத்தொகையைக் கொண்டு போர் காரணமாக நாட்டைவிட்டே வெளியேற வேண்டியிருக்கும் மக்களுக்கு தேவையான சுத்தமான தண்ணீர், உணவு மற்றும் தங்குமிடம் போன்றவற்றை வழங்க முடியும் எனக் கூறுகின்றனர். போர்க்களங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்வதற்கென்று தனியாக 90.5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு பிறகு, அரசாங்கப் பதவிகளில் தங்களுக்கு விசுவாசமானவர்களை மட்டுமே வைத்துக் கொள்வதற்காக அமெரிக்கா 203 மில்லியன் டாலர்களை வழங்குவதாகத் தெரிகிறது. இதன் மூலம் தங்களுக்கு எதிராக கலகக் குரல் எழுப்புபவர்களை ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் களையெடுப்பதற்காக, அந்நாட்டின்  நீதிமன்றங்களை பயன்படுத்தி ஒழித்துக்கட்ட முடியும் என அமெரிக்கா நம்புகிறது.

இந்த உதவியில் புதிய விஷயம் என்னவென்றால், ரஷ்ய முதலாளிகளிடமிருந்து அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட தொகையிலிருநது 5.4 மில்லியன் டாலர்களும் இந்த நிதியுதவியில் பயன்படுத்தப்படவிருக்கிறது. உக்ரைன் இராணுவ அதிகாரிகளை தன்பக்கம் தக்க வைத்துக்கொள்வதற்காக இதை பயன்படுத்துவதென்று அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் தலைநகரான கியூவிற்கு அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் பிளிங்கனின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் அதிபர் ஜோ பிடன் உக்ரைனுக்குச் சென்றிருந்தார். அதன்பிறகு, அமெரிக்க அதிகாரி ஒருவர் உக்ரைனுக்கு வருகைதந்த மிக முக்கியமான பயணமாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, உக்ரைன் குடியரசுத் தலைவர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோரை பிளிங்கன் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

- விஜயன்

based on: https://www.telesurenglish.net/news/The-US-Announces-1-Billion-in-New-Aid-for-Ukraine-20230907-0003.html