இஸ்ரேல், பாலஸ்தீனம் எவ்வாறு உருவானது என்பதற்குப் பின்னால் இரத்தக்களரி வரலாறு மறைந்துள்ளது

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் என்பது ஒரு சிறிய ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் ஒரு நூற்றாண்டு காலமாக நடந்து வரும் பழம்பெரும் போராட்டமாகும். மதம், அரசியல், மாறிக்கொண்டே வரும் எல்லைகள் போன்றவை இந்த மோதலை தொடர்ச்சியாக நிலைநிறுத்திக் கொண்டே வந்துள்ளது. பைபிள் காலம் முதல், ஒட்டோமான் ஆட்சி, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு, அரபு-இஸ்ரேல் போர்கள் மற்றும் பல தசாப்தங்களாக நடந்து வரும் போர்கள் வரை, தொடர்ச்சியாக மாற்றத்திற்குட்பட்டு வரும் எல்லைகள் மத்திய கிழக்கின் அரசியல் அதிகார மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன.

இஸ்ரேல், பாலஸ்தீனம் எவ்வாறு உருவானது என்பதற்குப் பின்னால் இரத்தக்களரி வரலாறு மறைந்துள்ளது

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியது, என்றாலும் இந்த நிலப்பரப்பின் வரலாற்று முக்கியத்துவம் பைபிள் காலத்திற்கும் முந்தியதாக உள்ளது. லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து மற்றும் மத்தியதரைக் கடலின் எல்லையில் உள்ள தெற்கு லெவன்ட்டின் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய பகுதியே மோதலுக்குரிய பகுதியாக தொடர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக மாறிவரும் எல்லைகள், தங்கள் நிலம் துண்டாடப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள், காலங்காலமாகவே இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என்ற உரிமைக்கோரல்கள் போன்றவற்றுடன் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் மாறிமாறி கொடுத்து வந்த ஆதரவுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் யூதர்களும், அரேபியர்களும், பாலஸ்தீனியர்களும் தங்களுக்கு இடையே மாறிமாறி கடுமையாக மோதிக்கொல்லும் அளவிற்கு இப்பகுதியை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் 165 உறுப்பு நாடுகள் இப்பகுதியை இஸ்ரேல் என்று குறிப்பிடுகையில், மீதமுள்ள 30 நாடுகள் இஸ்ரேலிய அரசை அங்கீகரிக்காமல் இருப்பதோடு இப்பகுதியை பாலஸ்தீனம் என்றே குறிப்பிடுகின்றன. பலவந்தமாக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதன் ஒரு வடிவமாகவே யூத குடியேற்றங்களும், பிரிவினைவாத கொள்கைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை இஸ்ரேலை அங்கீகரிக்கும் எல்லா அரசுகளும் ஏற்றுக்கொள்கின்றன. தற்போது, மேற்குக் கரையின் பெரும்பகுதி இஸ்ரேலால் நிர்வகிக்கப்படுகிறது, இருப்பினும் அதில் தோராயமாக 42 சதவிகித நிலப்பரப்பு பாலஸ்தீனிய அதிகார சபையின் பல்வேறு அளவிலான தன்னாட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளது. எகிப்துக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள காசா பகுதி(41 கிலோமீட்டர் நீளமும் 10 கிலோமீட்டர் அகலமுடையது) தற்போது ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக ஹமாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பூமி

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலை மதப் பிரச்சினை அல்லாது பிரதேசம் சார்ந்த்தாகவே பலரும் கருதி வருகின்றனர். எனினும், யூத மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இஸ்ரேல் என்ற நிலப்பரப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற அம்சத்தை ஆராயமால் இந்த மோதலுக்கான வரலாற்று ரீதியிலான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

உலகின் தொன்மையான மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றான ஜெருசலேம், இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம் ஆகிய மூன்று முக்கியமான ஆபிரகாமிய மதங்களுக்குமே புனிதத் தலமாக கருதப்படுகிறது. இது எபிரேய மொழியில் எழுதப்பட்ட பைபிளிலும் முக்கியத்துவமுடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது. யூத பாரம்பரியத்தின்படி, யூத மதத்தின் முற்பிதாவாக அறியப்படும் ஆபிரகாம் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு தனது மகனை கடவுளுக்கு பலி கொடுத்த இடமாக இஸ்ரேல் குறிப்பிடப்படுகிறது. தாவீது மன்னன் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராகக் கொண்டு இஸ்ரேலை ஆட்சிப்புரிந்தான் என்றும், அவன் மகஙன சாலமன் தனது பெயரில் முதல் கோவிலைக் கட்டிய இடமாகவும் ஜெருசலேம் விளங்கிறது என எபிரேய பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பைபிள் காலங்களில், புனித யாத்திரைக்காக ஜெருசலேம் செல்ல முடியாத மக்கள் ஜெருசலேம் இருக்கும் திசையை நோக்கி பிரார்த்தனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர், இன்றும் கூட, பெரும்பாலான ஜெப ஆலயங்கள் ஜெருசலேமை நோக்கியே அமைந்துள்ளன.

இதேபோல், முஹம்மது நபியின் ஆன்மா ஜெருசலேமிலிருந்தே பரலோகத்திற்கு பயணம் செய்தது என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. அல்-அக்ஸா மசூதி மற்றும் பாறை மாடக் கோயில் உட்பட இஸ்லாம் மதத்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல அடையாளச் சின்னங்கள் ஜெருசலேமில்தான் அமைந்துள்ளது.

ஜெருசலேம் இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான் என்றாலும், பாலஸ்தீனியர்கள் இந்நிலத்திற்கான உரிமைகோரலை மத அடிப்படையில் அல்லாது வரலாற்று அடிப்படையில் தங்களுக்குரியது எனக் கூறுகின்றனர் என்பதை யூத இனத்தைச் சேர்ந்த முக்கியமான அறிஞர் மறைந்த ஆர்தர் ஹெர்ட்ஸ்பெர்க் கூறியுள்ளார். எ ஸ்மால் பீஸ் ஃபார் மிடில் ஈஸ்ட், என்ற நூலில் ஹெர்ட்ஸ்பெர்க் இவ்வாறு எழுதுகிறார்: யூதர்களைப் பொறுத்தமட்டில் இஸ்ரேல் என்பது "அவர்களின் முன்னோர்கள் அவர்களது மதத்தையும் கலாச்சாரத்தையும் ஒரு காலத்தில் வடிவமைத்த தேசத்தில் அவர்களுக்கு ஒர் அமைதியையும் அங்கீகாரத்தையும்" வழங்கக்கூடிய இடமாக பார்க்கின்றனர். அதேசமயம், பாலஸ்தீனியர்களுக்கோ "யூதர்கள் கூறியது போன்ற மதம் சார்ந்த பார்வை இருக்கவில்லை", "ஆக்கிரமிப்பு போர்கள் மூலமாக தங்களிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றப்பட்டதாகவே நம்புகின்றனர், மேலும், தங்களுக்கு உரிமையுடைய நிலத்தில் அமைதியாக வாழ வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகவும் உள்ளது".

இஸ்ரேல் ஒருபுறம் யூதர்களின் புனித பூமியாகவும் மறுபுறம் அரேபியர்களின் வரலாற்று பூமியாகவும் இருக்கிறது என்ற கதைதான் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து கூறப்பட்டு வந்தது. உண்மையில், யூதர்கள், இஸ்லாமியர்கள் என இருவருக்குமே இஸ்ரேலிய நிலப்பரப்பின் மீது தொடர்புண்டு என்றாலும்கூட இஸ்லாமியர்களே நீண்ட காலமாக இந்நிலப்பரப்பை ஆண்டு வந்துள்ளனர்.

20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்ரேல்

பழங்காலத்திலிருந்தே, அசிரியர்கள்(Assyrians), பாபிலோனியர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், பைசண்டைன்கள் மற்றும் ஒட்டோமான்கள் உட்பட எண்ணற்ற பேரரசுகளால் தெற்கு லெவண்ட் பகுதி ஆளப்பட்டு வந்தது.

செமிடிக் கானானியர்களின் வம்சாவளியைச் சேர்ந்த மக்களை அடையாளப்படுத்துவதற்காகவே இஸ்ரேல் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடியேறி, தங்களுக்கு சொந்தமான ராஜ்யங்களை வென்ற பிறகு, இஸ்ரேல் நாடு என்று நாம் இப்போது கருதும் பெரும் பகுதிகளை அவர்கள் ஆளத் தொடங்கினர்.

தொல்லியல் ஆராய்ச்சியின் படி, இஸ்ரேலிய மக்கள் தற்போதைய வடக்கு இஸ்ரேல் (இஸ்ரேல் முடியாட்சி) மற்றும் தெற்கு இஸ்ரேல் (யூதா) பகுதியை ஆக்கிரமித்ததற்கான சான்றுகளெல்லாம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக உள்ளன. அதே காலக்கட்டத்தில், பெலிஸ்தியர்கள் (இவர்களிடமிருந்தே பாலஸ்தீனம் பெறப்பட்டது) இஸ்ரேலின் தெற்கு கடற்கரை சமவெளியில் குடியேறியதாக கூறப்படுகிறது.

கி.மு. 722-இல், புது அசிரியர்கள் இஸ்ரேல் மற்றும் யூதா முடியாட்சியின் கீழிருந்த நிலங்களைக் கைப்பற்றியதால் புவியியல் வரைபடத்தில் இருந்து 'இஸ்ரேல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 135 வரை, யூத முடியாட்சியின்கீழ் இருந்த பழைய இராச்சியங்கள் யூத மதத்திற்கான தளமாக செயல்பட்டு வந்தது. ஆனால் ரோமானிய பேரரசர் ஹட்ரியன் என்பவர் யூதர்களை வெளியேற்றி, நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் "சிரியா பாலஸ்தீனா " என்று குறிப்பிடும்படி ஆணையிட்டபோது அப்பெயர் மாறியது.

ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் மத்திய கிழக்கைக் கைப்பற்றிய பிறகு அரேபியர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கினர். சிலுவைப்போர் வீரர்களின் பிடியில் இப்பகுதி 90 ஆண்டுகளுக்கு மட்டுமே இருந்தது; 1,200 ஆண்டுகளாக இஸ்லாமியர்களே இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர். இஸ்ரேலை ஆட்சி செய்த அரசுகளில், 1516 முதல் 1917 வரை ஆட்சி செய்த ஒட்டோமான் பேரரசின் காலம் குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்தது.

ஹெப்ரான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத் துறைப் பேராசிரியரான Mutaz M Qafisheh என்பவரின் கருத்துப்படி பார்த்தால், ஒட்டோமான் ஆட்சியின் போது, இஸ்ரேலில் வசிப்பவர்கள் ஒட்டோமான் குடிமக்களாகவே கருதப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் குடியுரிமைக்கானத் துவக்கம் என்ற நூலில், "ஓட்டோமான் ஆட்சிக் காலத்தில், சட்டப்படி, பாலஸ்தீனம், பாலஸ்தீனிய தேசியம் அல்லது பாலஸ்தீனியர்கள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை; இஸ்ரேல், இஸ்ரேலிய தேசியம் அல்லது இஸ்ரேலியர்கள் என்று எந்தக் குறிப்பும் இல்லை" என்று எழுதியுள்ளார். யூதர்களுக்கும் அவர்களை ஆட்சி செய்த அரேபியர்களுக்குமிடையில் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டாலும், இப்பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான யூத மக்கள் இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க ஆக்கிரமிப்பாளர்களுடன் அமைதியாகவே வாழ்ந்துள்ளனர்.

இருப்பினும், அந்த அமைதியானது ஐரோப்பிய காலனியாட்சி மற்றும் சியோனிச இயக்கத்தின் எழுச்சிக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள ஐரோப்பியர்கள்

19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் யூதர்கள் மீது அதிகரித்த வெறுப்புக்கு எதிர் வினையாற்றும் வகையிலும், புலம்பெயர்ந்த யூத மக்களுக்கான தாயகம் ஒன்றை நிறுவும் நம்பிக்கையில் சியோனிச இயக்கம் உருவாக்கப்பட்டது. ஆஸ்ட்ரோ-ஹங்கேரியாவைச் சேர்ந்த முன்னணி சியோனிச இயக்கத்தின் செயல்பாட்டாளரான தியோடர் ஹெர்சல் என்பவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சியோனிச இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யூதர்களை இஸ்ரேலுக்கு குடியேற்ற வேண்டுமென போரடத் துவங்கினர். ஜியோனிச இயக்கம் பணக்கார யூத வணிகர்கள், ஐரோப்பிய அரசுகளிடமிருந்தும் கணிசமான ஆதரவைப் பெற்றது.

முன்னணி பிரிட்டிஷ் அரசியல்வாதிகள்தான் அந்தக் காலத்தில் சியோனிச இயக்கத்தை ஆதரித்தவர்களில் முதன்மையானவர்களாக இருந்தனர். 1915-ஆம் ஆண்டில், பாலஸ்தீனத்தை உள்ளடக்கிய ஒரு சுதந்திர அரபு அரசு உருவாவதற்கு உதவுவதாக மெக்காவை ஆண்டு வந்த ஷெரீப்புக்கு பிரிட்டன் வாக்குறுதியளித்தது; அதற்கு கைமாறாக, ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக அரபுப் படைகள் கிளர்ச்சி செய்ய வேண்டுமெனவும் கூறியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,இந்த வாக்குறுதியை மீறும் வகையில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஆர்தர் பால்ஃபோர், பாலஸ்தீனப் பிரதேசத்தில் யூதர்களுக்கென்று ஒரு தாய் நாட்டை அமைத்துக் கொள்வதற்கு ஆதரவாக ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். இதுவொருபுறமிருக்க, அரேபியர்கள் மற்றும் யூதர்கள் என இருவருக்குமே தெரியாமல், ஃபிரான்சும், கிரேட் பிரிட்டனும் சேர்ந்து 1916-ஆம் ஆண்டு சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தத்தின்(Sykes-Picot Agreement) மூலம் ஒட்டோமான் ஆட்சிக்குட்பட்ட மாகாணங்களை தங்களுக்குள் ஏற்கனவே பங்குபோட்டுக் கொண்டன.

முதல் உலகப் போருக்குப் பிறகு, பாலஸ்தீனம் உட்பட முன்பு ஒட்டோமான் பேரரசின்கீழ் இருந்த சில பகுதிகளை நேரடியாக ஆட்சி செய்வதற்கான உரிமையை உலக நாடுகள் சங்கம்(லீக் ஆஃப் நேஷன்ஸ்) பிரிட்டனுக்கு வழங்கியது. 1922 முதல் 1947 வரை, இப்பகுதி பிரிட்டிஷ் காலனிய ஆணைக்குட்பட்ட பாலஸ்தீனம்(British Mandate Palestine) என்றே அழைக்கப்பட்டது; யூதர்களுக்கு ஒரு தாயகத்தை நிறுவுவதோடு, பெரும்பான்மை அரபியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே காலனியாதிக்க ஆணையின் நோக்கம் என்று கூறப்பட்டது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூதர்கள் மட்டுமே குடிபெயர வேண்டும், குடியேற வேண்டுமெனில் யூதர்கள் அங்கு நிலத்தை வாங்க வேண்டும்  என்பன போன்ற கட்டுப்பாடுகளை பிரிட்டன் துவக்கத்தில் விதித்திருந்தது. 1933-இல் நாஜிக்கள் யூதர்களைத் இனப் படுகொலை செய்யத் தொடங்கிய பின்னர், யூத தாயகம் குறித்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என சர்வதேச அரங்கில் சியோனிச இயக்கதினர் திடீரென அழுத்தம் கொடுக்கத் துவங்கினர். 1938-ஆம் ஆண்டு நடந்த ஈவியன் மாநாட்டில் - மடகாஸ்கர், பிரிட்டிஷ் கயானா, அலாஸ்கா மற்றும் சாண்டோ டொமிங்கோ போன்ற பகுதிகளில் - யூத அகதிளுக்கென்று சுதந்திரமான பிரதேசத்தை உருவாக்கித் தருவதற்கான முன்மொழிவுகளும், எல்லையை வரையறுப்பதற்கான திட்ட அறிக்கைளை தயாரிப்பதற்கான வேலைகளும் முடுக்கிவிடப்பட்டன. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஒரு வருடம் கழித்து, பிரிட்டிஷ் அரசாங்கம் 1939-இல் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. பிரிட்டிஷ் காலணியாக உள்ள பாலஸ்தீனம் பெரும்பான்மை அரேபியர்களையும், சிறுபான்மை யூதர்களையும் உள்ளடக்கிய இரு தேசிய இனத்து மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒரு சுதந்திர நாடாக மாற்றப்படும் என்று அறிவித்ததோடு யூத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

போர் முடிவடைந்த பின்னர், காற்று யூதர்கள் பக்கம் மாறி வீசியது. யூத இனப் படுகொலையின் போது யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களை தீர்வு காண வேண்டிய நிலையிலிருந்த பிரிட்டிஷ் அரசியல்வாதிகள், அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழிருந்த பாலஸ்தீனத்தை இரண்டாக பிரிக்கும் திட்டத்தை முன்மொழிந்தனர். பாலஸ்தீனத்தை இரண்டாக பிரிப்பதற்கு, பிரிட்டனுக்கு உரிமை உள்ளது என்பதை நியாயப்படுத்தி, 1942ல், சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி செயற்பாட்டாளர்(சைம் வெய்ஸ்மேன்) பரவலாக எல்லோரிடம் சென்றடையும் வகையில் எழுதப்பட்ட கட்டுரையில் இவ்வாறு கூறினார், "கடைசியாக நடந்த போரின் விளைவாக அரேபியர்கள் இதுவரை பெற்றுள்ளதெல்லாம் மிகப்பெரியதுதான் – தற்போது நடக்கும் போரின் விளைவாக, அவர்கள் இனி வருங்காலங்களில் எதைப் பெற்றாலும் - அவர்கள் ஏற்கனவே சிலவற்றையாவது பெற்றிருக்கிறார்கள், மேலும் பலவற்றைப் பெறுவார்கள் – இவையாவும் ஜனநாயக நாடுகளின் முயற்சியால் கிடைத்தது என்பதால் அவர்கள் முழுக்க முழுக்க ஜனநாயக நாடுகளுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள், இனி வருங்காலங்களிலும் கடன்பட்டிருப்பார்கள். எனவே யூதர்கள் பாலஸ்தீனத்தில் தங்களுக்கென்று சொந்தமாக காமன்வெல்த் குடியரசை உருவாக்குவதற்கான நியாயமான கோரிக்கையை ஜனநாயக நாடுகள் அங்கீகரித்து உருவாக்குவதற்கு உதவ வேண்டும்.”

1947-இல், ஐநா 181-வது தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த பாலஸ்தீனத்தை "சுதந்திரமான அரபு-யூத நாடாக" பிரித்தது. அச்சமயத்தில், காலனிய பாலஸ்தீனத்தில் சுமார் 6 சதவீத நிலம் யூதர்கள் வசமிருந்ததோடு மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு யூதர்களும் குடியேறியிருந்தனர். ஐநா பிரிவினை திட்டத்தின் மூலம், இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கு 56 சதவீத நிலம் யூதர்களுக்கு பறித்துக் கொடுத்தனர்.

யூதர்கள் தங்களுக்கு கிடைத்ததை மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். அரபு நாடுகள் இதற்கெதிராக வெகுண்டெழுந்தன.

அரபு-இஸ்ரேல் மோதல்

மே 14, 1948 இல், இஸ்ரேலின் ஸ்தாபக தந்தை டேவிட் பென்-குரியன், நவீன இஸ்ரேல் நாடு நிறுவப்பட்டதாக அறிவித்தார். பாலஸ்தீனியப் படைகள் மட்டுமல்லாது, பல அரபு நாடுகளின் இராணுவங்களும், புதிதாக உருவாக்கப்பட்ட யூத அரசுக்கு எதிராக கொஞ்ச நாட்களிலேயே போரை அறிவித்தன. அப்போதும் கூட அமெரிக்காவால் வாரி வழங்கப்பட்ட நிதியுதவியை கொண்டு இஸ்ரேல் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளத் தயாராக இருந்தது.

ஏறக்குறைய 7,00,000 பாலஸ்தீனியர்கள், அல்லது பிரிட்டனின் காலனியாக இருந்த பாலஸ்தீனத்தில் இருந்து வந்த அரபு மக்களில் பாதி பேர், அடுத்தடுத்த நடந்த மோதலின் போது தங்கள் சொந்த மண்ணை விட்டு விரட்டியடிக்கப்ட்டதால் காசா, மேற்குக் கரை, ஜோர்டான் மற்றும் சிரியாவில் சென்று தஞ்சமடைந்தனர்.

விடுதலைப் போராட்டம் என்று யூதர்களால் குறிப்பிடப்படும் போரும், அல்லது நக்பா (பேரழிவு) என்று அரேபியர்கள் மனதிலுள்ள விரட்டியடிக்கப்பட்ட நிகழ்வும், இஸ்ரேல் அரசிற்கான புதிய எல்லைக் கோடுகளை உருவாக்கியதோடு "காசா பகுதி” என அறியப்பட்ட கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு துண்டு நிலப்பரப்பும் உருவாகுவதற்கு தற்காலிக போர் தவிர்ப்பு கோடுகள் வழிவகுத்தது. இந்த காசா பகுதியை எகிப்தும், கிழக்கு ஜெருசலேம் பகுதியோடு மேற்குக் கரை பகுதியை ஜோர்டானும் கைபற்றிக்கொண்டன.

(சூயஸ்க்கால்வாய்) நெருக்கடியின் போது, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் துணையுடன் எகிப்திடமிருந்து சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றியதன் மூலம் இஸ்ரேல் தனது பிராந்திய எல்லைகளை மேலும் விரிவுபடுத்தியது. ஏற்கனவே அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்த சமயத்தில் இந்த படையெடுப்பின் காரணமாக  ஆறு நாட்கள் தொடர் போர் வெடிப்பதற்கு வழிவகுத்தது( ஜூன் 5, 1967 - ஜூன் 10, 1967). இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளின் (எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டான்) கூட்டுப் படையினருக்கும் இடையே போர் நடந்தது. எண்ணிக்கையின் அடிப்படையில் அரபு நாடுகள் பலமாக இருந்தபோதிலும், தங்குதடையற்ற நிதியுதவி, ஒழுங்கமைப்பட்ட இராணுவ உதவி இஸ்ரேலுக்கு கிடைத்தது. இதன் விளைவாக சினாய் தீபகற்பம், காசா பகுதி, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியாவிலிருந்த கோலன் குன்றுகளின்(Syrian Golan Heights) பெரும்பாலான பகுதிகளை கைபற்றுவதில் இஸ்ரேலுக்கு தீர்மானகரமான வெற்றியைப் பெற்றுத் தந்தது.

இது இஸ்ரேல் அரசின் கீழிருந்த மொத்த நிலப்பரப்பை மூன்று மடங்காக உயர்த்தியது. இஸ்ரேலிய எழுத்தாளர் அவ்னர் கோஹென், வில்சன் மையத்திற்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டபடி ஆறு நாள் நடந்த போர் "தனது இருப்பிற்காக போரிடும் ஒரு நாடு என்ற நிலையிலிருந்த இஸ்ரேலை பிராந்திய அளவிலான விரிவாதிக்க சக்தியாக, ஆக்கிரமிப்பு சக்தியாக இஸ்ரேலை மாற்றியது."

எகிப்து மற்றும் சிரியாவின் தலைமையில், அரபு நாடுகள் 1973-இல் இஸ்ரேல் மீது மீண்டும் போர்(யோம் கிப்பூர் போர்) தொடுத்தன. இந்தப் போரிலும் இஸ்ரேலே வெற்றி பெற்றது என்றாலும் எந்தவொரு நிலப்பரப்பும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு நாள் போருக்குப் பிறகு இஸ்ரேல் கைப்பற்றிய நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.

இஸ்ரேலுடன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மோதல் இருந்தபோதிலும், 1979-இல், சினாய் தீபகற்பத்திலிருந்து இஸ்ரேலியப் படைகளையும் குடியேறியவர்களையும் திரும்பப் பெறுவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து யூத இஸ்ரேலிய அரசை அங்கீகரித்த முதல் அரபு நாடாக எகிப்து நாடு மாறியது. இந்த ஒப்பந்தம் பாலஸ்தீனியர்களுக்கு பேரழிவைத் தந்தது. சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் எழும் போராட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் க்ரைஸிஸ் குரூப் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மௌனின் ரப்பானி என்பவர், ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எகிப்து மற்றும் இஸ்ரேலிய அரசுக்கிடையில் உள்ளுறைந்திருந்த முரண்பாடு இல்லாமல் போனதால், பாலஸ்தீனியர்கள் வசமிருந்த இராஜதந்திர பலத்தின் முக்கியமான கூறுகளை இழக்க நேரிட்டது என்று கூறியுள்ளார். அதன்பிறகு, இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான மோதல் என்ற நிலையிலிருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலாக மாறியது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்

1970-களின் பிற்பகுதியிலிருந்து, இஸ்ரேல் மேற்குக் கரையிலும், காஸாவிலும் குடியேற்ற காலனிகளை நிறுவத் தொடங்கியது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் இந்த குடியேற்றம் பற்றி "பெருமளவில் நடந்த மனித உரிமை மீறல்" என்று கூறியிருந்தது. கடந்த 50 ஆண்டுகளாக, இஸ்ரேல் அரசாங்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலத்தில் இஸ்ரேலியர்களை குடியேற்றி பாலஸ்தீனியப் பகுதிகளை காலனிகளாக மாற்றி வருவதை தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருங்கிணைந்த அம்சம் என்று கூறி வருகிறது. இவ்வாறிருக்க, 1977 ஆம் ஆண்டின்போதே, அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் மெனாசெம் பெகின், இஸ்ரேலியர்களை குடியேற்றி தங்களது நிலப்பரப்பை விரிவுபடுத்துவதென்பது தேசப் பாதுகாப்புடன் தொடர்புடையது எனக் கூறுவதைக் காட்டிலும் உண்மையில் அந்த நிலப்பரப்பு இஸ்ரேலுக்கே சொந்தமானது என்ற கருத்தியலின் மீதிருந்த உறுதியான நம்பிக்கையின் பேரில்தான் முன்னெடுக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தினார்.

1987-இல்,  பாலஸ்தீனியர்களை விரட்டியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இஸ்ரேலிய அரசின் குடியேற்றக் கொள்கைகளால் கொதித்தெழுந்த பாலஸ்தீனியர்கள் முதல் இன்டிபதா அல்லது எழுச்சியைத் தொடங்கினர். ஒரு வருடம் கழித்து, நாடுகடத்தப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) அல்ஜீரியாவிலிருந்து ஒரு சுதந்திரமான பாலஸ்தீனிய அரசை நிறுவுவதாக அறிவித்தது. இருப்பினும், முதல் இன்டிபதாவின் (எழுச்சியின்) போதே PLO பெரிதும் எதிர்பார்த்த பாலஸ்தீனிய அரசை உருவாக்க முடியவில்லை என்பது மட்டுமல்லாது சர்வதேச அளவில் இஸ்ரேல் அரசு விரும்பிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்த காலகட்டத்தில்தான், ஹமாஸ் எனப்படும் இஸ்லாமியப் போராளிகளின் இயக்கம் துவங்கப்பட்டது. 

போரிடும் இரண்டு பிரிவுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், ஒஸ்லோ உடன்படிக்கை மூலமாக இராஜதந்திர அளவிலான பேச்சுவார்த்கையை முன்னெடுத்தார். 1993 மற்றும் 1995-ஆம் ஆண்டுகளில் கையொப்பமிடப்பட்ட இந்த உடன்படிக்கைகள் நீண்டகாலமாக நடந்து வந்த மோதலுக்கு எதிர்பார்த்த தீர்வை தரும் என நம்பப்பட்டன. உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) இஸ்ரேல் அரசை அங்கீகரிக்க ஒப்புக் கொண்டது, அதற்கு ஈடாக, பாலஸ்தீன மக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக PLO-ஐ இஸ்ரேலும் அங்கீகரித்தது. மேலும், ஒஸ்லோ உடன்படிக்கைகள் மேற்குக் கரையிலும், காஸாவிலும் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நிர்வகிப்பதற்கு ஒரு புதிய சட்ட ரீதியிலான வடிவத்தையும் அறிமுகப்படுத்தியது. 

ஒஸ்லோ உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து தோன்றிய ஆரம்பகால நம்பிக்கையும், - 2000-ஆம் ஆண்டில் இரண்டாம் இன்டிபதா அல்லது இராண்டாவது எழுச்சி வெடித்ததால் - குறுகிய காலமே நீடித்தது. ஓஸ்லோ உடன்படிக்கைகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான வாக்குறுதி இந்த எழுச்சியோடு முற்றிலுமாக முறிந்து போனது. இந்த இரண்டாவது எழுச்சி நான்கு ஆண்டுகளாக நீடித்தது. குண்டுவெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல்கள் ஒரு பக்கமும்,  இஸ்ரேலின் வலுவான இராணுவத் தாக்குதல்களுமாக இரண்டாவது எழுச்சி நடந்தேறியது. இது இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் என இரு பிரிவினருக்குமே சொல்லொன்னா துன்பங்களை ஏற்படுத்தியது. மோதல் தீவிரமடைந்ததால், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரிடையே (பிஎல்ஓ) அரசியல் ரீதியிலான பிளவுகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கின. 

1947-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவினைத் திட்டத்திற்கு முன்னர் 94 சதவீத நிலத்தை பாலஸ்தீனியர்கள் வைத்திருந்த நிலையில், இப்போது அதில் சுமார் 12 சதவீத நிலத்தை மட்டுமே பாலஸ்தீனியர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

2007-ஆம் ஆண்டில், பாலஸ்தீனப் பகுதிகள் அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டது; ஹமாஸ் காசா மீதான கட்டுப்பாட்டைப் பெற்றது; பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) மேற்குக் கரையில் தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டது. மேற்குக் கரையும், காசாவும் பிரிக்கப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தியே வெளிப்பட்டது. ஜூன் 2023-ல் பாலஸ்தீனிய கொள்கை மற்றும் மாதிரி ஆய்வு மையம் நடத்திய ஆய்வின்படி, 1948-இல் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள இந்த பிரிவினை தங்களுக்கு பெருந் தீங்கையே விளைவிக்கும் என்று மூன்றில் ஒரு பங்கு பாலஸ்தீனியர்கள் கூறியுள்ளனர். இந்த பிரிவினைக்கு பிற்பாடு, பிஎல்ஓ மற்றும் ஹமாஸ்க்கு இடையேயான உறவு என்பது சில நேரங்களில் நேரடி மோதலுக்கும் சில நேரங்களில் தயக்கத்துடன்கூடய ஒத்துழைப்பிற்கும் இடையே ஏற்ற இறக்கங்ளுடன்தான் நகர்ந்துள்ளது. எவ்வளவுதான் தங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக காசாவைப் பாதுகாக்கும் ஹமாஸின் உரிமைக்கு PLO எப்போதுமே ஆதரவு தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான எல்லைகளில் ஏற்பட்டுள்ள பலதரப்பட்ட மாற்றங்களை ஆராயும்போது, இப்போது வெடித்துள்ள மோதல் என்பது அரசியல் - மதம் – பிராந்திய அளவிலான மோதல்கள் என்ற பல அடுக்கிலான திரைமறைவின் பின்னால் ஆழமாக புதைந்துள்ளது என்பது தெளிவாகிறது. பல தலைமுறைகள் கடந்த பின்னும்கூட மேற்குக் கரையும், காசா பகுதியும்தான் இந்த மோதலின் குவிமையமாக நீடித்து வருகிறது. மோதலில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கும் இந்த நிலப்பரப்புகளே நிரந்தரமான போர்க்களமாக நீடித்து வருகிறது.

(கட்டுரையாளர்-மீரா படேல்)  

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://indianexpress.com/article/research/the-bloody-history-behind-how-israel-and-palestine-came-into-existence-8980609/?fbclid=IwAR3ewDx0bUlE7kYw1UklpGFhN5LNUGlGIoZ7LOl_5MQnso_KgNm55QXOkO8_aem_Af82-HA4LBbnJYHTMucz15Xn2_2-R4RdLobKqO9dY1NBVVZ-Z9SgzyhqXXBkrJZqF5zpPdPbtOWMbN7L48hnSvn4

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு