பசிபிக் பிராந்தியத்திலுள்ள தைவானின் நட்பு நாடுகளுக்கு எதிராக சீனாவின் அமைதிவழியிலான அச்சுறுத்தல்கள்
தமிழில்: விஜயன்

பெரும் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி களமாகத் திகழும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், தைவானின் நட்பு நாடுகள்—பலாவு, மார்ஷல் தீவுகள், மற்றும் துவாலு—சீனாவின் கடும் அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றன. காலங்காலமாக தைவானுக்கு ஆதரவு நல்கி வரும் இச்சிறு தீவு நாடுகள், தற்போது, சைபர் தாக்குதல்கள், பொய்த் தகவல்கள் பரப்பப்படுதல், பொருளாதார நெருக்கடிகள், மட்டுமல்லாது உள்ளூர் தலைவர்கள் மீது மறைமுகமாக செல்வாக்கு செலுத்துவது போன்ற சூழ்ச்சிகளின் மூலம் சீனாவால் குறிவைக்கப்படுகின்றன. இந்த நாடுகள் சிறியவை, குறைந்த வளங்களைக் கொண்டவை, மேலும் புவிசார் அரசியலில் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மண்டலத்தில் அமைந்துள்ளதாலேயே, சீனா இத்தகைய உத்திகளைக் கையாள்கிறது.
சமீபத்திய நிகழ்வுகள் இந்த போக்கினைத் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன. 2025 ஜூன் மாதத்தில், தைவானும் மார்ஷல் தீவுகளும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதே காலகட்டத்தில், பலாவுவில் சீனக் குற்றக் கும்பல்களின் ரகசியச் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இவை தனித்த நிகழ்வுகள் அல்ல—மாறாக, ஒரு விரிவான போர்த்தந்திரத்தின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். இச்சிறு நாடுகளின் சுதந்திரத்தைப் படிப்படியாக சீர்குலைத்து, தைவானுடனான அவற்றின் பிணைப்பினைத் துண்டித்து, பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கைக் குலைக்கவும் சீனா அமைதிவழியான, இராணுவமல்லாத உத்திகளைக் கையாள்கிறது — இவை பொதுவாக “சாம்பல் மண்டலத் தந்திரங்கள்”( gray-zone tactics) என அழைக்கப்படுகின்றன.
“கலப்பு அச்சுறுத்தல்கள்” என்று பரவலாகக் குறிப்பிடப்படும் இந்த உத்திகள், அரசு அமைப்புகளை ஊடுருவித் தாக்குதல், புரளிகளையும் தவறான தகவல்களையும் பரப்புதல், நாடுகளின் மீது நிதி நெருக்கடியைத் திணித்தல், அத்துடன் பொதுக்கருத்தைக் கட்டுப்படுத்த முயலுதல் போன்ற செயல்களையே கலப்பு அச்சுறுத்தல்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை வெளிப்படையான இராணுவத் தாக்குதல்கள் அல்ல. மாறாக, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதைக் கண்டறிய முடியாத வகையிலும், கடுமையான எதிர்வினையைத் தூண்டாத வகையிலும், இவை மிகவும் தந்திரமாகவே செயல்படுத்தப்படுகின்றன. இந்த நுண்மையான, குழப்பமான அணுகுமுறை, சர்வதேச அளவில் எழக்கூடிய கண்டனத்திலிருந்து சீனா தப்பித்துக்கொள்வதற்கு உதவுவதோடு, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் வழிவகுக்கிறது.
பசிபிக் தீவுப் பகுதிகளில், இத்தகைய அச்சுறுத்தல்கள் விரைவாகக் கிளைத்துப் பலன் தரும் சாத்தியங்கள் மிக அதிகம். பலாவு, மார்ஷல் தீவுகள், துவாலு போன்ற நாடுகள் மிகச் சிறிய மக்கள் தொகையையும், வரையறுக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தையும் கொண்டுள்ளன. இவை தைவானுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதாலும், அமெரிக்காவுடன் 'சுதந்திரக் கூட்டணி ஒப்பந்தங்கள்' (Compacts of Free Association) என்ற சிறப்புப் பாதுகாப்பு மற்றும் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் கூட்டணிகளைக் கொண்டிருப்பதாலும், இப்பிராந்தியத்தில் தற்போது அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்பின் மையப்புள்ளிகளாகத் திகழ்கின்றன.
சீனா தற்போது அதிநவீன, பல்துறைப் பயன்பாட்டிற்கு ஏற்ற உபகரணங்களைப் பயன்படுத்தி வருகிறது. குடிமக்கள் பயன்பாட்டிற்கும், இராணுவத் தேவைக்கும் உரிய மீன்பிடிப் படகுகளையும், ஆளில்லா விமானங்களையும் (drones) பயன்படுத்தி வருகிறது. உலகிலேயே மூன்றாவது பெரிய கடலோரக் காவல்படையான சீனக் கடலோரக் காவல்படை இவற்றுக்குத் துணையாகவும், பலமாகவும் நிற்கிறது.
இத்தகைய உபகரணங்களின் துணை கொண்டு, சீனா இப்பகுதியை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கவும், உள்நாட்டு பொருளாதாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தவும், கடல் பரப்பிலுள்ள பிற நாடுகளின் மீது செல்வாக்கு செலுத்தவும் இயலுகிறது. சீனாவின் பல செயல்பாடுகள் தூதரக உறவுகளின் அல்லது வளர்ச்சித் திட்டங்களின் சாயலில் சித்தரிக்கப்பட்டாலும், அவை உண்மையில் இப்பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த சீனா வகுத்துள்ள ஒரு விரிவான, நுட்பமான திட்டத்தையே வெளிப்படுத்துகின்றன.
கலப்புப் போரைத் தொடுக்கும் சீனா
சீன அழுத்தத்தின் குவிமையமாக மாறிய பலாவு
சீனா தனது கலப்பு போர் உத்திகளைக் (mixed or hybrid tactics) எவ்வாறு கையாள்கிறது என்பதற்குப் பலாவு ஒரு மிகத் தெளிவான எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. 2024 மார்ச் மாதத்தில், சீனக் குழுக்களால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு இணையத் தாக்குதல், பலாவு அரசின் கணினி அமைப்புகளுக்குள் ஊடுருவியது. இந்த இணையத் தாக்குதல் கும்பல்கள், 20,000 அரசு ஆவணங்களைத் திருடியதுடன், சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தையும் விளைவித்தன.
அதே சமயம், 2017 இல் சீனா விதித்த பயணக் கட்டுப்பாடுகள், பலாவுவுக்கு வருகை தந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தன. இப்பயணிகளின் பங்கு 60% இலிருந்து 30% ஆகக் குறைந்ததால், சுற்றுலா ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கும் பலாவுவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஏராளமான விடுதி முன்பதிவுகளை இரத்து செய்ததன் மூலம், சீனா மேலும் பல சிக்கல்களை உருவாக்கியது; இது உள்நாட்டு சந்தையில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.
அரசியல் ரீதியாக, சீனாவுடன் தொடர்புள்ள குழுக்கள் பலாவுவில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு அருகாமையில், சுமார் 3,80,000 சதுர மீட்டர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளன. இந்தக் குழுக்களில் சில, பலாவு அரசியல்வாதிகளுக்கு சட்டவிரோதமாகப் பணத்தையும் வாரி இறைத்துள்ளன. உதாரணத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி தாமஸ் ரெமெங்கேசா ஜூனியருக்கு அளிக்கப்பட்ட 20,000 டாலர் நன்கொடையை, பலாவு நாட்டின் ஊழல் தடுப்பு அலுவலகம் பிற்காலத்தில் சட்டவிரோதமானது என அறிவித்தது. இவை வெறும் தனிப்பட்ட வணிக ஒப்பந்தங்கள்தாம் என்று சீனா வாதிட்டாலும், அவற்றின் பிரம்மாண்டமான அளவும், இராணுவப் பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பதும், நாட்டின் பாதுகாப்புக் குறித்த பெரும் கவலைகளை எழுப்புகின்றன.
அரசியல் ரீதியில் செல்வாக்கு செலுத்த முயன்ற சீனக் குடிமக்களை பலாவு நாடு கடத்தியதன் மூலம் 2024 இல் உறுதியான பதிலடி கொடுத்துள்ளது. 2025 மே மாதத்தில், ஏவுகணை பாதுகாப்பு தளவாடங்களை வழங்குமாறு பலாவு அமெரிக்காவைக் கோரியது. இருப்பினும், அந்நாடு இன்னும் சில பலவீனங்களைக் கொண்டுள்ளது – குறிப்பாக அதன் டிஜிட்டல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதிலும், சீன முதலீடுகளின் வரவைக் கட்டுப்படுத்துவதிலும் சவால்களை எதிர்கொள்கிறது.
போர்த்தந்திர பலப்பரிட்சைக்கான களமாக மாறிய மார்ஷல் தீவுகள்
அமெரிக்காவுடன் சுதந்திரமான கூட்டணி ஒப்பந்தம் மூலம் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ள மார்ஷல் தீவுகள், பசிபிக் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒரு முக்கியப் புள்ளியாகவே மாறியுள்ளது.
2020ஆம் ஆண்டு முதல், சீனா மார்ஷல் தீவுகளில் சாலைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியைச் செலவிட்டுள்ளது. இத்திட்டங்களின் முதன்மையான நோக்கம், நாட்டின் அரசியல் தலைவர்களைத் தன்பால் ஈர்த்து, தைவானுக்கு வழங்கி வரும் ஆதரவை சீனாவுக்கு மாற்றும்படி நாட்டைத் தூண்டுவதே ஆகும் — 2024இல் நவ்ரு நாட்டிலும் சீனா இதைத்தான் செய்தது.
இத்தகைய அழுத்தங்களுக்குப் பதிலடியாக, மார்ஷல் தீவுகள் 2025 ஜூன் மாதம் தைவானுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கடல்சார் செயல்பாடுகளைக் கண்காணித்தல், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மட்டுமல்லாது இணையவழியில் பரவும் தவறான தகவல்களை எதிர்கொள்வது ஆகிய ஒத்துழைப்புக்கான அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன. 2024இல் மார்ஷல் தீவுகளின் அரசாங்க அமைப்புகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இணையத் தாக்குதல்களுக்குப் பின்னரே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதுமட்டுமன்றி, தனது கடல் எல்லைகளில் அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க ஒரு தேசிய பாதுகாப்பு அலுவலகத்தையும் அந்நாடு நிறுவியுள்ளது. இருப்பினும், 2025 மே மாதம் சீனாவின் பசிபிக் உச்சிமாநாட்டில் பங்கேற்றதைப் நோக்கும் போது, சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான இராஜதந்திரப் போராட்டம் இன்னும் தீவிரமாகத் தொடர்வதையே அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது.
பொய்ச்செய்திகள் பரப்பப்பட்டு, சைபர் தாக்குதலுக்கு இரையாக்கப்படும் துவாலு
அரசாங்கச் செயல்பாடுகளில் அதிக டிஜிட்டல் சாதனங்களைப் புகுத்த துவாலு மேற்கொண்டுவரும் முயற்சிகள், அந்நிய சக்திகளுக்கு அந்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தப் புதிய வழிவகைகளைத் திறந்துவிட்டுள்ளன. 2025 ஜனவரியில், ‘ஒரே சீனா கொள்கையை’ சில துவாலு குடிமக்கள் ஆதரிப்பது போன்ற காணொளிகளைப் சீன அரசு ஊடகங்கள் பரப்பின. இந்தக் காணொளிகள் கலாச்சாரப் படைப்புகள் எனக் கட்டமைக்கப்பட்டபோதிலும், மிக முக்கியமான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த வேளையில் அவை பகிரங்கமாக வெளிவந்தன. இது துவாலுவின் வெளியுறவுக் கொள்கையைத் திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்டதா என்ற ஐயங்களை எழுப்பியது.
பசிபிக் பிராந்தியம் எங்கிலும் இணையவழி அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் கடவுச்சீட்டுகள், பிளாக்செயின் போன்ற நம்பிக்கை இணைய கட்டமைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய துவாலுவின் “டிஜிட்டல் தேசம்” திட்டம், இணையத் தாக்குதல்களுக்கு எதிராக தகுந்த பாதுகாப்பு அரணாக விளங்கவில்லை. இப்பகுதியில் வலுவான இணையப் பாதுகாப்பு இல்லாதது, துவாலுவின் இணையவழி பலவீனத்தை மேலும் கடுமையாக்கியது. 2024 ஆம் ஆண்டில், சீன அரசுடன் தொடர்புடைய இணையத் திருடர்கள், பசிபிக் தீவுகள் மன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். அவர்கள் ரகசியத் தரவுகளைக் கையகப்படுத்தினர்; மேலும், அத்தாக்குதலால் விளைந்த சேதங்களைச் சரிசெய்யப் பெருஞ்செலவுகள் ஏற்பட்டன. இந்தத் தாக்குதல், துவாலுவின் டிஜிட்டல்மயமாக்கும் திட்டங்களுக்குள் பொதிந்துள்ள ஆபத்துகளின் தீவிரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
தைவான் வழங்கியதை விடவும், சீனா அதிகமானளவிற்கு வளர்ச்சி நிதிகளை வழங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல், சீனா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்துள்ளது; அதே சமயம் தைவான் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இத்தகைய நிதிசார்ந்த அழுத்தங்கள் சூழ்ந்தபோதிலும், 2025 ஏப்ரலில் தைவானிலிருந்து ஒரு புதிய தூதுவரை வரவேற்றதன் மூலம் துவாலு, தைவானுக்கான தனது உறுதியான ஆதரவை மீண்டும் நிலைநிறுத்தியது. இருந்தபோதிலும், துவாலுவின் இணையப் பாதுகாப்பு அமைப்புகள் இன்னமும் மிகவும் பலவீனமான நிலையிலேயே நீடிக்கின்றன.
ஒப்பாய்வுக் குறிப்புகள்
புவியியல் அமைப்பிலும், அரசியல் கூறுகளிலும் வெவ்வேறாகத் திகழ்ந்தாலும், பாலாவ், மார்ஷல் தீவுகள், துவாலு ஆகிய நாடுகள் மூன்றும் ஒரே விதமான அந்நிய அச்சுறுத்தல்களையே எதிர்கொள்கின்றன. இணையத் தாக்குதல்கள், பொய்த் தகவல்கள் பரப்பப்படுதல் மட்டுமல்லாது அவற்றின் பொருளாதாரங்கள் மீதான அழுத்தங்கள் எனப் பல வழிகளிலும் ஒவ்வொன்றும் பாதிப்படைந்துள்ளன. 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இப்பகுதியில் இத்தகைய கலப்பின தாக்குதல்கள் ஏறத்தாழ 30 விழுக்காடு அதிகரித்துள்ளன.
ஆனால், ஒவ்வொரு நாடும் இலக்கு வைக்கப்படும் விதத்தில்தான் நுண்ணிய வேறுபாடு காணப்படுகிறது:
• பாலாவ் நாட்டின் அரசியல்-பொருளாதார கட்டமைப்புகள் மீது நேரடியான, வெளிப்படையான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
• தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடுமையான இராஜதந்திரப் போராட்டத்திற்கு/பலப்பரீட்சைக்கு இடையில் மார்ஷல் தீவுகள் ஆழமாகச் சிக்கியுள்ளன.
• இணையவழித் குறுக்கீடுகளாலும், பலவீனமான இணையப் பாதுகாப்பு கட்டமைப்பாலும் துவாலு நாடு நாளுக்கு நாள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வேறுபாடுகள் அனைத்தும், சீனா ஒரு மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட வியூகத்தைப் பயன்படுத்துகிறது என்பதையே பறைசாற்றுகின்றன. பசிபிக் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில், ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட பலவீனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, வெவ்வேறு அணுகுமுறைகளை சீனா மேற்கொள்கிறது.
போர்த்தந்திர அளவிலும், பிராந்திய அளவிலும் ஏற்படும் பாதிப்புகள்
கலப்பின போர் முறைகள் என்பவை சாதாரண நிகழ்வுகளோ அல்லது அற்பமான சிக்கல்களோ அல்ல. அவை வெற்றிபெறும்போது, நாடுகள் தைவானுக்கு வழங்கி வரும் இராஜதந்திர ஆதரவைச் சீனாவுக்கு மாற்றுவதற்குக்கூட வழிவகுக்கலாம். நவுரு நாட்டில் ஏற்கனவே இது நடந்திருக்கிறது. இத்தகைய மாற்றங்கள் தைவானின் சர்வதேச அங்கீகாரத்தைக் குறைப்பதுடன், பிற நாடுகளிலும் அதேபோன்ற அழுத்தங்களைத் திரும்பப் பிரயோகிக்கச் சீனாவுக்கு உந்துசக்தியாக அமையக்கூடும்.
பலவீனமான இணையப் பாதுகாப்பு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், தரமற்ற டிஜிட்டல் பாதுகாப்பு காரணமாக பசிபிக் நாடுகளின் அரசுகளுக்குச் சுமார் 1.7 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள் போன்ற அவசரகாலச் சூழ்நிலைகளில் இந்த பலவீனங்கள் குறிப்பாகப் பேரபாயகரமானவை, ஏனெனில் அப்போது இணையத் தாக்குதல்கள் பெரும் சேதத்தை விளைவிக்கலாம் அல்லது மீட்பு நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தலாம்.
விரிந்த நோக்கில் பார்க்கும்போது, பசிபிக் பிராந்தியத்தில் — குறிப்பாக இரண்டாவது தீவுக்கூட்டம் எனப் பரவலாக அறியப்படும் பகுதியில் — ஏற்படும் சவால்கள் அமெரிக்காவின் போர்த்தந்திர நலன்களைப் பாதிக்கக்கூடும். இப்பகுதி நிலையற்றதாக மாறினால், அப்பிராந்தியத்தில் உள்ள சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க இராணுவ வளங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம்.
சீனாவின் கலப்பின அச்சுறுத்தல்களுக்கு எதிராக உதவுவதற்கு ஏற்கனவே சில நாடுகள் முன்வந்துள்ளன:
• ஆஸ்திரேலியா இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் டாலர்களை வழங்க முன்வந்திருக்கிறது.
• ஜப்பான் கடல் ரோந்து பணிகளுக்காக 50 மில்லியன் டாலர்களை உறுதியளித்திருக்கிறது.
• நியூசிலாந்து உள்ளூர் ஊடகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 20 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. இந்த முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், அவை இன்னும் திறம்பட ஒருங்கிணைக்கப்பட்டு, உள்ளூர் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
முதன்மை முன்னுரிமை டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கே வழங்க வேண்டும். தைவான்–மார்ஷல் தீவுகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் போன்றதொரு 5 மில்லியன் டாலர் திட்டம், உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், முக்கியமான அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், தேசிய இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் உதவும்.
அடுத்த முக்கிய நடவடிக்கையாக, பசிபிக் தீவுகள் மன்றத்தின் கீழ், கலப்பின அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு பிராந்திய மையத்தை நிறுவுவது இன்றியமையாதது. 10 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டுடன், இந்த மையம் உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், வெளிநாட்டுத் தலையீட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், பசிபிக் நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடும்.
வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட வரையறைகளை மேம்படுத்தப்படுவது அத்தியாவசியம். அந்நிய முதலீடுகளையும் அரசியல் நன்கொடைகளையும் ஆய்வு செய்வதற்கென ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம் வகுக்கலாம். அரசியல் தலையீடுகளில் ஈடுபட்டவர்கள் எப்படி பலாவு நாட்டில் நாடுகடத்தினார்களோ அதை முன்னுதாரணமாகப் பின்பற்றலாம். அரசியல்வாதிகளுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நிலம் வாங்குவது குறித்த அறிக்கைகளைத் தாக்கல் செய்வதை இத்திட்டம் கட்டாயமாக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்குவது அவசியமாகிறது. ஊடக எழுத்தறிவை மேம்படுத்தவும், உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நிதி உதவிகளை வழங்கவும் இரண்டு மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம் வகுக்கலாம். இது தவறான தகவல்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்கும், உள்நாட்டில் செல்வாக்குமிக்க நபர்கள் அந்நிய சக்திகளின் பிடிக்குள் சிக்கிவிடும் நிகழ்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கும் அவர்களுக்கு உதவும்.
அவசரக்கால எதிர்வினைத் திட்டங்கள் கலப்பின அச்சுறுத்தல்களின் ஆபத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். பேரழிவுகளின்போது அரசாங்கங்கள் திறம்பட செயல்படுவதற்கும், வெளிநாட்டுச் சக்திகள் நெருக்கடிகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதைத் தடுப்பதற்கும் மூன்று மில்லியன் டாலர் மதிப்பிலான பயிற்சி மற்றும் தயார்நிலைத் திட்டம் வகுப்பது பெரிதும் உதவக்கூடும்.
இத்திட்டங்கள், குவாட் அமைப்பின் 50 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தோ-பசிபிக் உதவிக் களம் வாயிலாக நிதியுதவி பெறுவதற்கும் தகுதிபெற்றுள்ளன. இதன்மூலம் திட்டங்கள் நிலைத்தன்மையுடன் திகழ்வதுடன், பிராந்திய பாதுகாப்பு முயற்சிகளுடன் சிறப்பான ஒருங்கிணைப்பையும் எட்டும்.
சீனாவின் 'சாம்பல் மண்டல' உத்திகள் தைவானின் பசிபிக் நட்பு நாடுகளுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்து, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சட்ட விதிகள் சார்ந்த உலக ஒழுங்கமைப்பிற்குச் சவால் விடுக்கின்றன. இக்கலப்பின போர் உத்திகள் ஒத்துழைப்பையும் நெருக்கடியையும், வளர்ச்சியையும் சீர்குலைவையும் ஒருசேரக் கலக்கின்றன. இவை உரிய முறையில் கையாளப்படாவிடின், சிறிய தீவு நாடுகள் பெரும் வல்லரசு நாடுகளின் பலப்பரிட்சைக்குரிய போர்க்களங்களாக மாறிவிடும் அபாயம் உண்டு.
தைவானின் நட்பு நாடுகளைப் பாதுகாக்கவும், பிராந்தியத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் அமெரிக்கா, தைவான், மற்றும் அவற்றின் பங்காளி நாடுகள் வலுவான எதிர்வினையை ஆற்ற வேண்டும். இதற்கான தீர்வு என்பது மேலதிக இராணுவ பலத்தில் இல்லை; மாறாக, அமைதிக்கும் நெருக்கடிக்கும் இடையிலான எல்லைக்கோடு முற்றிலும் மறைந்துபோகுமுன், வலிமையான அமைப்புகள், மிகுந்த வெளிப்படையான ஆட்சிமுறை, உள்ளூர் மக்கள் நலன்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவதிலேயே தங்கியுள்ளது.
ஆசிரியர் குறிப்பு:
டாங் மெங் கிட் (mktang87@gmail.com) சிங்கப்பூரைச் சேர்ந்த சுயேட்சையான ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் 2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள NTU பல்கலைக்கழகத்தின் எஸ். ராஜரத்தினம் சர்வதேச ஆய்வுகள் பள்ளியில் (RSIS) பட்டம் பெற்றவர். இவர் ஒரு விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றுவதுடன், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் தைவான்–சீன உறவுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்.
- விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு