விதைகள் மீதான பெருநிறுவனங்களின் ஆதிக்கம்: சிறு விவசாயிகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் ஒரு பெரும் தடைக்கல்

தமிழில்: விஜயன்

விதைகள் மீதான பெருநிறுவனங்களின் ஆதிக்கம்: சிறு விவசாயிகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் ஒரு பெரும் தடைக்கல்

பன்னெடுங்காலமாக, விவசாயிகள் –எண்ணற்ற பெண் விவசாயிகள் உட்பட– பல்வேறு தேவைகளுக்கும், உள்ளூர் நிலைகளுக்கும் ஏற்ப, கணக்கிலடங்கா விதையினங்களைப் பேணிப் பாதுகாத்து வந்தனர். தங்களின் ஆழ்ந்த அறிவு, கைத்திறன், அயராத உழைப்போடு அளவற்ற அக்கறை செலத்தி இவ்விதைகளைப் பராமரித்து வந்தனர். இவ்விதைகள் முதன்மையாகத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்காகவே சேகரிக்கப்பட்டிருந்தாலும், விவசாயிகள் எவ்வித விலையுமின்றி அவற்றை மற்றவர்களோடும் தாராளமாகப் பகிர்ந்துகொண்டனர் அல்லது பண்டமாற்று செய்துகொண்டனர். இதன் காரணமாக, விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் விதைகளுக்காகப் பணத்தைச் செலவு செய்ய வேண்டியிராமல், தங்களுக்குத் தேவையானவற்றை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

இது, விவசாயிகளை, தகுந்த விதைகளைப் பெறுதல் என்ற உழவுத் தொழிலின் மிக முக்கியமான அம்சத்தில், சுயசார்புடன் திகழ வழிவகுத்தது. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளில் ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெரிய தனியார் நிறுவனங்களும் – குறிப்பாகப் பன்னாட்டுப் பெருநிறுவனங்களும் – விதைகளின் மீது தங்களின் கட்டுப்பாட்டுப் பிடியை மேன்மேலும் இறுக்கி வருகின்றன. விதைகளையும், பிற தாவர இனங்களையும் சட்டபூர்வமாகத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள அனுமதிக்கும் காப்புரிமைச் சட்டங்களின் துணைகொண்டு இதனைச் சாதித்துள்ளன. முன்னெப்போதும் இத்தகையதொரு கட்டுப்பாடு அனுமதிக்கப்பட்டதில்லை. தனியார் நிறுவனங்களின் இந்த உச்சபட்ச கட்டுப்பாடு, பெரும் தடைக்கல்லாக உருவெடுத்துள்ளது. இது, இப்புவிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றிற்குப் பெரும் முட்டுக்கட்டையாய் அமைகிறது – அதாவது, சிறு விவசாயிகள் பாதுகாப்பான, நலந்தரும் உணவை விளைவிப்பதற்கும், இயற்கையைப் பேணிக்காக்கும் நீடித்த நிலைத்த வேளாண் முறைகளைப் பின்பற்றி, ஆரோக்கியமான வேளாண் மற்றும் உணவு முறையொன்றை உருவாக்கும் அரும் முயற்சிக்கும் இது தடையாக மாறி நிற்கிறது.

இத்தகைய சூழல்களில், பலன்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு மேலோட்டமான விவாதங்கள், ஒருபோதும் உண்மையில் செய்யவேண்டிய ஆழமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்காது. தாவர ஒப்பந்தம் தொடர்பான மாநாடுகள் உள்ளிட்ட பல பன்னாட்டுச் கூட்டங்களிலும் காணப்படுவது போலவே, இத்தகைய விவாதங்கள் பெரும்பாலும் ஒற்றை மையப்புள்ளியைச் சுற்றியே சுழல்கின்றன: அதாவது, விதை நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் இலாபத்தின் ஒரு பங்கை விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்ள முன்வருகின்றனவா என்பதே அது. வழக்கமாக, இது அவர்கள் ஈட்டும் இலாபத்தில் மிகச் சிறியதொரு பங்கை வழங்குவதையே குறிக்கும். இந்த விவாதம் இவ்வளவு குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுழலுமானால், 'சீர்திருத்தம்' எனப் பெயரிடப்பட்டு ஏதேனும் ஒரு தீர்மானம் எட்டப்பட்டாலும் கூட, அது பகிரப்படும் இலாபத்தின் அளவை மிகச் சொற்பமாகவே — ஒருவேளை அது நடந்தால் கூட — அதிகரிக்கும்.

உண்மையில் சொல்லப்போனால், பல நிறுவனங்கள் இந்தச் சொற்பத் தொகையைக்கூட பகிர்ந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கான புதிய வழிகளைத் தேடி வருகின்றன. ஆனால், இதுவே பிராதனப் பிரச்சினை அன்று. மேலும், பிரதானமான பிரச்சினை விவாத வட்டத்திற்குள் கெண்டு வராத வரை, உண்மையான, அத்தியாவசியமான சீர்திருத்தம் – அதாவது, இன்றியமையாத மாற்றம் – ஒருபோதும் சாத்தியமே இல்லை.

விதைகள் மீது கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வாறு தம் ஆதிக்கத்தைப் பெருக்கிக்கொண்டன எனும் வரலாறு, ஒரு தெள்ளத் தெளிவான போக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. இந்நிலை, சிறிய நிறுவனங்களிடமிருந்து துவங்கிக், காலப்போக்கில் பெரிய பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி மெல்லப் பரவி, இன்று உலகளாவிய விதைச் சந்தைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முனைவதைக் காட்டுகிறது. இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் தலையாய நோக்கம், நெடுங்கால நோக்கில் மிக மிகப் பெருமளவிலான இலாபங்களை ஈட்டுவதேயாகும். விதைகள் மீதான தங்கள் பிடியை மேலும் இறுக்குவதன் மூலமே இதைச் சாத்தியப்படுத்த முடியும் என அவை உறுதியாக நம்புகின்றன. இத்தகைய கட்டுப்பாட்டைச் சாத்தியப்படுத்த, காப்புரிமைச் சட்டங்களையும், மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற நவீன அறிவியல் உத்திகளையும் அவை துணையாகக் கொள்கின்றன. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் இந்தக் குறிக்கோள், சிறு விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். 

மேலும், இது சுற்றுச்சூழலுக்குத் துளியும் உகந்ததல்ல. மக்களுக்குப் பாதுகாப்பானதும், ஆரோக்கியமானதுமான உணவை உற்பத்தி செய்ய இது ஒருபோதும் துணை நிற்பதுமில்லை. இதற்கு மாறாக, இந்த விதை நிறுவனங்கள் விவசாயச் செலவினங்களை மேன்மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. அவை விதைகளின் விலைகளை அபரிமிதமாக உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், தங்கள் விதைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளை, களைக்கொல்லிகள் மற்றும் இதர இரசாயனப் பொருட்களையும் கட்டாயமாகப் பயன்படுத்தச் செய்கின்றன. இத்தகைய இரசாயனப் பொருட்கள் பெரும்பாலும் அவற்றின் விதைகளுடன் பிரிக்க முடியாதவாறு இணைந்தே விற்கப்படுகின்றன. இதன் காரணமாக, விவசாயத்திற்கான செலவினம் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அதே வேளையில், விவசாயம் இயற்கைக்கு மேலும் மேலும் கேடு விளைவிப்பதாகவும் மாறிவிடுகிறது. அதிக அளவிலான அபாயகரமான இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாலேயே இது நிகழ்கிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த நிறுவனங்கள் ஒற்றைப் பயிர் சாகுபடி முறையை (மோனோகல்ச்சர் எனப்படும்) மிகத் தீவிரமாக ஊக்குவிக்கின்றன. விவசாயிகள் வெவ்வேறு வகையான பயிர்களை, உள்ளூர் விதை வகைகளைப் பயன்படுத்தி, பரவலாக்கப்பட்ட முறையில் சாகுபடி செய்த பாரம்பரிய முறைகளுக்கு இது முற்றிலும் எதிரானதாக அமைகிறது. பாரம்பரிய முறை பல்லுயிர்ப் பெருக்கத்தையும், விவசாயிகளின் சுய சார்புநிலையையும் நிலைநிறுத்த பெரிதும் உதவியது. ஆனால் புதிய முறை இவை இரண்டையும் வெகுவாகக் குறைத்துவிடுகிறது. கார்ப்பரேட் விதை நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி மிகத் தீவிரமாகச் செயல்பட்டுள்ள பகுதிகளை ஆராய்ந்த போது, விவசாயிகளிடையே எந்தளவிற்கு பாதகமான விளைவுகள் ஏற்ப்பட்டுள்ளன என்பதை பல்வேறு ஆய்வறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. அதாவது, பொருளாதார ரீதியான சிக்கல்கள், சூழலியல் சீர்கேடு மட்டுமல்லாது விவசாயிகள் மத்தியில் சமூக, உளவியல் ரீதியான அழுத்தங்களும் அதிகரித்துள்ளன என்பதையே இந்த ஆய்வறிக்கைள் எடுத்துக் காட்டுகின்றன.

இவற்றுடன், பகாசுர பன்னாட்டு விதை நிறுவனங்கள், உலகின் தென்கோலத்தில் அமைந்துள்ள நாடுகளிலிருந்து மரபணுச் செல்வங்களை நியாயமற்ற, அறமற்றவழிகளில் சூறையாடி வருவதாகப் பல ஆய்வறிக்கைகள் அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே, இந்தப் பிரச்சினை வெறும் இலாபப் பங்கீடு அல்லது நலன் பகிர்வுடன் நின்றுவிடுவதில்லை. இதனைவிடப் பேரபாயம், அதாவது அடிப்படையிலேயே அநியாயமான விதைக்கட்டுப்பாட்டு முறைமை நிலவிவருகிறது என்பதை மாற்றியமைக்கப்பட வேண்டியத் தேவை உள்ளது. இம்முறைமை கடந்த சில பத்தாண்டுகளாகவே கோலோச்சி வருகிறது என்றாலும், இது மனிதகுலம் இதுவரை உருவாக்கி வந்த பொதுவுரிமை அடிப்படையிலான விதை மரபுக்குக் கடும் அச்சுறுத்தலாக ஏற்கெனவே உருமாறிவிட்டது. இந்தப்பொதுவுரிமை மரபுதான், நெடுங்காலமாக, நூற்றுக்கணக்கான தலைமுறை உழவர்களால் பொன்னெனப் போற்றப்பட்டு, சீரிய முறையில் பேணிக் காக்கப்பட்டு வந்துள்ளது.

இத்தகைய அநீதியான கார்ப்பரேட் ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு, விதைகள் அனைவரின் பொதுச்சொத்தாகப் போற்றப்பட்ட தொல்மரபினை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, பலரும் இப்போதைய முறைமையின் வெளித்தோற்றத்தை மேம்படுத்தவே முனைப்புக் காட்டுகின்றனர். ஆனால் இது முற்றிலும் அர்த்தமற்றது. ஏனெனில், இப்போதைய முறைமையின் அடிப்படையே நியாயமற்றது, எவ்வித அறத்தகுதியுமற்றதாக இருப்பதோடு அசுர வேகத்தில் பரவி வருவதுமாகவும் இருக்கிறது. ஆகவேதான், இலாபப் பங்கீடு குறித்து விவாதிப்பதில் காலத்தைப் பாழாக்காமல், நாம் உண்மையிலேயே இன்றியமையாத பணியில் கவனம் செலுத்த வேண்டும். உழவர்களின் சொந்தப் பண்ணைகளிலேயே விதைகளின் பல்வகைத்தன்மையைப் பேணிக்காக்கும் ஒரு விதை முறைமையை நாம் கட்டமைக்க வேண்டும்.

உழவர்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப, பல்வகைப்பட்ட விதைகளைப் பயன்படுத்தும் தங்குதடையற்ற சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் சேமித்து வைத்த, பகிர்ந்துகொண்ட அல்லது பரிமாறிக்கொண்ட விதைகளைக் கொண்டே இதைச் செய்ய இயல வேண்டும் — சந்தையில் விலையுயர்ந்த விதைகளை விலைகொடுத்து வாங்குவதன் மூலமல்ல. சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான விதைகள், உழவர்களை தீங்கு விளைவிக்கும், விலைமிகுந்த இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, நமக்குத் தேவைப்படும் விதை முறைமை என்பது, உழவர்கள் தங்கள் பண்ணைகளில் விதைப்பல்வகைத்தன்மையைப் பேணிப் பாதுகாத்து, ஒருவருக்கொருவர் விதைகளை எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றிப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கட்டமைப்பே ஆகும். இத்தகையதொரு அமைப்பையே நாம் கட்டியெழுப்பிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

பாரத் தோக்ரா: புவியை இன்றே பாதுகாப்போம் இயக்கத்தின் கௌரவ ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். குழந்தைகளுக்காக புவியைப் பாதுகாப்போம், அழியும் பூவுலம், 2071 ல் ஒரு நாள், சுற்றுச்சுசூழலை பாதிக்காத வேளாண்மையும், ஆராக்கியமான உணவுக்கான இந்தியாவின் தேடலும் ஆகிய நூல்களை இவர் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/07/corporate-control-of-seeds-is-a-big-obstruction-in-the-path-of-protecting-small-farmers-and-environment/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு