கார்ப்பரேட் - காவி மயமாகும் சைனிக் (இராணுவ) பள்ளிகள்

தமிழில் : வெண்பா

கார்ப்பரேட் - காவி மயமாகும் சைனிக் (இராணுவ) பள்ளிகள்

புதிய சைனிக் பள்ளி ஒப்பந்தங்களில் 62.5% ஆர்எஸ்எஸ்-பாஜக வுக்கு சென்றுள்ளது

அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவென்றால், இதுவரை கையெழுத்திடப்பட்டுள்ள சைனிக் பள்ளி ஒப்பந்தங்களில் 62.5% சதவிகிதம் பாரதிய ஜனதா கட்சி (BJP), ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (RSS) மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ், ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலில் இது கிடைத்துள்ளது.

சைனிக் பள்ளிகள் என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழான மத்திய அரசின் திட்டமாகும். இராணுவ அதிகாரிகளிடையே உள்ள பிராந்திய, சாதி மற்றும் வகுப்பு வேறுபாடுகளைக் களையும் வகையில் 1961 ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிப்ரவரி 2021 ஆண்டின் மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளை தேசிய பாதுகாப்பு அகாடமியில் நுழைவதற்கு தயார்படுத்துவதாகவும் ‘சிபிஎஸ்இ பிளஸ்’ வகைக் கல்வியை அவர்களுக்கு வழங்குவதற்காகவும் 100 புதிய சைனிக் பள்ளிகளை நிறுவுவதாக அறிவித்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அப்பள்ளிகளை நடத்த அனுமதித்தது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஏற்கெனவே இருந்துவரும் சைனிக் பள்ளிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதான பிரத்யேக பள்ளிகளை நடத்துவதற்கான மற்றொரு திட்டத்திற்கு மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 2021 ல் ஒப்புதல் அளித்தது.

அறிக்கையின்படி, சைனிக் பள்ளி சங்கம் (SSS) இதுவரை தனியார் நிறுவனங்களுடன் 40 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதில், 11 பிஜேபியின் தலைவர்கள், கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் நேரடியாகவும், 8 ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளால் நேரடியாகவும் நிர்வகிக்கப்படுகின்றன. 6 பள்ளிகள் இந்துத்துவா அமைப்புகள், வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்களுடன் தொடர்புடையாக உள்ளன. அதானி குழும அறக்கட்டளை நடத்தும் ஒரு பள்ளியும் கூட இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றுள் ஒன்று கூட  மத சிறுபான்மையினரால் நடத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இத்தகைய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, சைனிக் பள்ளிகள் சங்கம் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு 50% வரை கட்டண சலுகையும் வழங்குகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பயிற்சி மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பள்ளிகள் பெரும்பாலும் குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவை. உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ சரிதா பதாரியாவின் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிற சகுந்த்லாம் இன்டர்நேஷனல் பள்ளிகள் முதல் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவின் தவாங் பப்ளிக் பள்ளி வரை இந்தப்பட்டியல் நீண்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கூற்றுப்படி, சைனிக் பள்ளிகள் 7,000 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை ஆயுதப்படைகளுக்கு வழங்குகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் சைனிக் பள்ளி மாணவர்களின் 11%  சதவிகிதம் பேர் ஆயுதப்படையில் சேர்ந்துள்ளனர்.

ஏப்ரல் 3 அன்று, சைனிக் பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் நடத்துவதை சிபிஎம் கண்டித்ததுடன், இந்த போக்கு வகுப்புவாத போதனைகளை வலுப்படுத்துவதோடு இராணுவ நிறுவனங்களை மதச்சார்புடையதாக மாற்றும் என்றது. “இந்தப் புதிய கொள்கையானது, அரசு-தனியார் பங்கேற்பு மாடலில் (PPP) நிதி மற்றும் உள்கட்டமைப்பைப் பகிர்வது பற்றியது அல்ல. சைனிக் பள்ளி சங்கம் மற்றும் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள பள்ளிகளில் பெரும்பான்மை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொடர்புகளைக் கொண்டவையாகும்” என்று அதன் அறிக்கை கூறுகிறது.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை : https://www.thenewsminute.com/news/625-of-new-sainik-school-agreements-went-to-bjp-rss-report