இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

ஜே.வி. ஸ்டாலின்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும்  வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிய லெனினியக் கட்சியின் உலகக் கண்ணோட்டம் ஆகும். இயற்கைத் தோற்றங்களை அணுகும் முறையிலும் அவற்றைக் கூர்ந்து பரிசீலித்து மனதால் உணரும் முறையில் இயக்கவியலைப் பயன்படுத்துவதிலும், இயற்கைத் தோற்றங்களை விளக்குவதிலும் அவற்றுக்கு கருத்து உருவம் கொடுப்பதிலும் பொருள்முதல் வாதத்தைப் பயன்படுத்துவதாலும், இந்த உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் (பொருள்முதல்வாதம்: "உலகாயதவாதம்" என்றும் யதார்த்தவாதம் என்றும் பொருள்முதல்வாதம் என்றும் பலவாறாக எழுதப்பட்டிருக்கிறது. பௌதீகப் பொருட்களை விஞ்ஞானத்தால் கண்டறியப்படக்கூடிய பொருட்களை - முதன்மையாகக் கொண்டு புரியப்படும் வாதம். இந்தப் பகுதியில் பொருள் என்று வரும் இடங்களிலெல்லாம் பௌதீகப் பொருட்களையே குறிக்கிறேன். (மொ-ர்)) என்றழைக்கப்படுகிறது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது சமூக வாழ்க்கையை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆராய்வதாகும். சமூக வாழ்க்கையின் நிகழ்ச்சிகளையும் சமூகத்தையும் அதன் வரலாற்றையும் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆராய்வதே வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பதாகும்.

மார்க்சும் ஏங்கெல்சும் தங்கள் இயக்கவியல் அணுகுமுறையைக் குறிப்பிடும்போது, இயக்கவியலின் முக்கியமான அம்சங்களை ஹெகல் எனும் தத்துவ ஆசிரியரே உருவாக்குகிறார் என பொதுவாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோரின் இயக்கவியல் அணுகுமுறையும் ஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையும் ஒன்றுதான் என்று இதற்குப் பொருளல்ல. உண்மையில் சொல்லப்போனால், ஹெகலின் தத்துவம், கருத்துமுதல்வாதம் எனும் கூண்டுக்குள் சிக்கிக்கிடந்தது. இந்தக் கூண்டைத் திறந்து, ஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையில் இருந்த 'பகுத்தறிவுப் பூர்வமான சாராம்சத்தை' மட்டும் மார்க்சும் ஏங்கெல்சும் எடுத்துக் கொண்டு, நவீன அறிவியல் வடிவம் கொடுப்பதற்காக அந்த சாராம்சத்தை மென்மேலும் வளர்த்தார்கள்.

மார்க்ஸ் பின்வருமாறு கூறுகிறார்:

"என்னுடைய இயக்கவியல் அணுகுமுறை ஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையினின்று மாறுபட்டது மட்டுமல்ல, அதற்கு நேர் எதிரானதாகும். ஹெகல், 'கருத்து என்றதன் பெயரில் சிந்தனையின் இயக்கப் போக்கையே ஒரு சுயேச்சையான பொருளாக மாற்றிவிடுகின்றார். மேலும், இந்தச் சிந்தனையின் இயக்கமே யதார்த்த உலகைப் படைத்துவிடுகிறது என்றும், யதார்த்த உலகம் என்பதே 'கருத்தின்' வெளித்தோற்றம் என்றும், கூறுகின்றார், ஆனால் உலகு பற்றிய என் பார்வை இதற்கு நேர்மாறானதாகும். பொருளியல் உலகத்தை மனித மூளை பிரதிபலித்து எண்ணங்களாக மாற்றுகிறது. மனதிலிருக்கும் எண்ணம் என்பது, பொருளியல் உலகத்தின் பிம்பமே தவிர, வேறு எதுவுமில்லை." (கார்ல் மார்க்ஸ் - மூலதனம்)

மார்க்சும்   ஏங்கெல்சும்   பொருள்முதல்வாதத்தை விளக்கும்போது, ஃபாயர்பேக் என்ற தத்துவவாதியைக் குறிப்பிடுவர். இவர்தான் பொருள்முதல்வாதத்தை அதற்கு உரித்தான இடத்தில் ஏற்றி வைத்தவர் என்று பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. எனினும், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோரின் பொருள்முதல்வாதமும் ஃபாயர்பேக்கின் பொருள்முதல்வாதமும் ஒன்றுதான் என்றல்ல இதன் பொருள். உண்மையாகச் சொல்லப்போனால் ஃபாயர்பேக்கினுடைய பொருள்முதல்வாதக் கோட்பாடு கருத்துமுதல்வாதத்திற்குள்ளும் மத சம்பந்தமான தார்மீக நெறிமுறைகளுக்குள்ளும் சிக்கிக்கிடந்தது. மார்க்சும் ஏங்கெல்சும் இதையெல்லாம் விலக்கிவிட்டு, ஃபாயர்பேக் பொருள்முதல்வாதத்தின் 'உள்சாராம்சத்தை' எடுத்து, அதை அறிவியல் தத்துவக் கோட்பாடாகவே வளர்த்துச் சென்றார்கள். ஃபாயர்பேக் அடிப்படையில் பொருள்முதல்வாதியாக இருந்த போதிலும்கூட, அவர் 'பொருள்முதல்வாதம்' என்ற பெயரையே மறுத்தார் என்று நாம் அறிவோம். "ஃபாயர்பேக் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், பரம்பரையான கருத்துமுதல்வாத விலங்குகளால் கட்டுண்டு கிடந்தார்" என்றும், "ஃபாயர்பேக் மதத்தைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் வரையறுத்த சித்தாந்தத்தைப் படித்தாலே, அவரது கருத்துமுதல்வாதம் வெட்ட வெளிச்சமாக அம்பலமாகும்" என்றும் பலதடவை ஏங்கெல்ஸ் கூறியிருக்கிறார். (கார்ல்மார்க்ஸ் - தேர்வுநூல் 1 - பக்கங்கள் 373 - 375)

இயக்கவியல் என்பதின் ஆங்கிலச்சொல் டைலக்டிக்ஸ் (Dialectics) என்பதாகும். இதன் மூலச்சொல் கிரேக்கமொழியில் உள்ள டையலெகோ (Dialego) என்பதாகும். இதன் பொருள், உரையாடல், விவாதித்தல் என்பதாகும். எதிரிகளின் வாதத்தில் காணப்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்தி, அந்த முரண்பாடுகளை அகற்றுவதன் வாயிலாக உண்மையைக் கண்டறியும் கலைக்கு பண்டைக் காலத்தில் 'டைலக்டிக்ஸ்' என்று கூறுவதுண்டு. சிந்தனையில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துவதும் ஒன்றுக்கு ஒன்று எதிரான கருத்துகளை மோதவிடுவதும்தான் உண்மையைக் கண்டறிவதற்கான மிகச் சிறந்தமுறை என்று பழங்காலத் தத்துவவாதிகள் நம்பினர். சிந்தனைகளில் உண்மையைக் கண்டறிவதற்குக் கையாளப்பட்ட இந்த முறை, பிற்காலத்தில் இயற்கைத் தோற்றங்களின் உண்மையைக் கண்டறிவதற்கு கையாளப்பட்டது. இயற்கைத் தோற்றங்கள் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன என்றும் அவை ஒவ்வொரு கணமும் தொடர்ச்சியான மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்றும் இந்த இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது. மேலும், இயற்கையினுள்ளே இயங்கும் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதன் விளைவாகவும், இயற்கையினுள்ளே இயங்கும் எதிரெதிரான சக்திகள் மோதிக்கொண்டு இயங்குவதன் விளைவாகவும் இயற்கை வளர்ச்சி அடைகிறது என்றும் இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது. சாராம்சத்தில் சொல்லப் போனால், இயக்கவியல் என்பது மாறாநிலைத் தத்துவத்திற்கு நேர்மாறான தத்துவம் ஆகும்.

1. மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

அ. இயற்கைப் பொருள்களும் அவற்றின் தோற்றங்களும் ஏதோ தற்செயலாக குவிந்து கிடக்கும் குவியல் என்றும், அவை ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் இருக்கின்றதென்றும், ஒவ்வொன்றும் மற்றவைகளிலிருந்து பிரிந்து இருக்கிறதென்றும், ஒன்றையொன்று சார்ந்து இல்லாது சுயேச்சையாக இருக்கின்றன என்றும் மாறாநிலைத் தத்துவம் கருதுகிறது. இதற்கு மாறாக, இயற்கைப் பொருள்களும் அவற்றின் தோற்றங்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை என்றும், ஒரு முழுத்தன்மை உடையவை என்றும், ஒன்றையொன்று சார்ந்து இருக்கிறது என்றும், ஒன்றின் தன்மையை இன்னொன்றின் தன்மை நிர்ணயிக்கும்படி உள்ளதென்றும் இயக்கவியல் தத்துவம் கருதுகிறது.

எனவே, இயற்கையின் தோற்றம் எதையும் அதைச் சூழ்ந்துள்ள பிற தோற்றங்களிலிருந்து பிரித்து தனியாக ஆராய்ந்தால் அதைப் புரிந்துகொள்ளவே முடியாது என இயக்கவியல் தெளிவாகக் கூறுகிறது. அதாவது ஒரு தோற்றத்தைச் சுற்றியுள்ள மற்ற இயற்கைத் தோற்றங்களிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்த்தால் அந்தக் குறிப்பிட்ட தோற்றத்தின் தன்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது; மேலும், அப்படிப் பார்த்தால் அந்தத் தோற்றமே அர்த்தமற்றதாகக் காணப்படும். வேறுவிதமாக விளக்குவோம். ஒரு குறிப்பிட்ட இயற்கைத் தோற்றம் உள்ளது. அதைச் சுற்றி வேறு பல தோற்றங்கள் உள்ளன. இந்த சுற்றுப்புறத் தோற்றங்களால் பாதிக்கப்பட்டு, அது குறிப்பிட்ட தோற்றமாகக் காட்சியளிக்கிறது. எனவே, அந்தக் குறிப்பிட்ட தோற்றத்திற்கும் சுற்றுபுறத் தோற்றங்களுக்கும் இடையே உள்ள இணைப்பு - உறவு பிரிக்க முடியாததாகும். இந்த உறவோடு அந்தக் குறிப்பிட்ட தோற்றத்தைப் பரிசீலனை செய்தால்தான், அதைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியும்.

ஆ. இயற்கை என்பது அசையா நிலையிலும் இயங்கா நிலையிலும் உள்ளது என்றும், தேங்கிய நிலையிலும் என்றென்றும் மாறாநிலையிலும் உள்ளது என்றும் மாறாநிலைத் தத்துவம் கருதுகிறது. ஆனால் இதற்கு மாறாக இயக்கவியல் கருதுகிறது. இயற்கை என்பது இடையறாது இயங்கிக் கொண்டிருப்பது - இடையறாது மாறிக்கொண்டிருப்பது - இடையறாது தன்னைத் தானே புதிப்பித்துக் கொண்டிருப்பது - வளர்ந்துகொண்டிருப்பது என்று இயக்கவியல் கருதுகிறது. மேலும் இயற்கையில் எப்பொழுதும் ஏதாவதொன்று நொறுங்கிச் சிதைந்துகொண்டும் அழிந்து கொண்டும் உள்ளது என்றும், எப்பொழுதும் ஏதாவதொன்று தோன்றி வளர்ந்து கொண்டேயிருக்கிறது என்றும் இயக்கவியல் கருதுகிறது.

எனவே, பல்வேறு தோற்றங்களைப் பற்றி ஆராயும்போது, அவற்றிகிடையே நிலவும் பரஸ்பரத் தொடர்புகளையும்; பரஸ்பரச் சார்புநிலைகளையும் வைத்துப் பரிசீலித்தால் மட்டும் போதாது, அத்தோற்றங்களின் இயங்கும் தன்மை, மாறும் தன்மை, வளரும் தன்மை, தோன்றும் தன்மை, மறையும் தன்மை ஆகியவற்றையும் சேர்த்து அவற்றை ஆராயவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருள் அல்லது ஒரு தோற்றம் நீண்ட நாள் நீடித்து நிலைபெற்றிருக்கக் கூடியதாகத் தோன்றலாம்; இருந்த போதிலும், அது ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்திருக்கின்றது. இத்தகைய பொருள் அல்லது தோற்றத்தை இயக்கவியல் முதன்மைப்படுத்தி முக்கியமானதாகக் கருதவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக எந்தவொரு பொருள் - எந்தவொரு தோற்றம் - தோன்றி வளர்ந்து வருகிறதோ அது நிலைத்து நிற்காது என அந்த நேரத்தில் தோன்றிய போதிலும், அதைத்தான் இயக்கவியல் முதன்மைப்படுத்தி முக்கியமானதாகக் கருதுகிறது. ஏனெனில், எது தோன்றி வளர்ந்து வருகிறதோ அது வெல்லற்கரியது என்று இயக்கவியல் கருதுகிறது.

எனவேதான் ஏங்கெல்ஸ் கூறுகிறார்:

"சிறிய நுட்பமான பொருள் முதலாக மிகப் பெரிய பொருள் ஈறாக, சிறு மணல் துகள் முதலாக சூரியன் ஈறாக, உயிரணு முதல் மனிதன் ஈறாக இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும் இடையறாது தோன்றி, வளர்ந்து, மறைந்து கொண்டேயிருக்கிறது. எந்நேரத்திலும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இடையறாது இயங்கிவரும் நிலையிலும் மாறிக்கொண்டே இருக்கும் நிலையிலும் உள்ளது" (இயற்கையின் இயக்கவியல்)

ஆகவே, பொருள்களையும் அவற்றின் பிரதிபலிப்பான சிந்தனைகளையும் ஆராய வேண்டுமானால், அவற்றின் பரஸ்பரத் தொடர்புகளிலும், அவற்றின் இயக்கப் போக்கிலும், அவை தோன்றி வளர்ந்து மறையும் நிலைமையிலும் நின்று ஆராய வேண்டும் என்கிறார் ஏங்கெல்ஸ் (பிரடெரிக் ஏங்கெல்ஸ் - டூரிங்கை எதிர்த்து)

இ. வளர்ச்சியின் போக்கை, சாதாரணமாக வளர்ந்து கொண்டேயிருக்கும் ஒரு போக்காக மாறாநிலைத் தத்துவம் கருதுகிறது. அந்தக் கருத்தின்படி, ஒரு பொருளின் அளவில் ஏற்படும் மாறுதல்கள் அந்தப் பொருளின் குணத்தில் மாறுதல்களை உண்டாக்குவதில் கொண்டுபோய் விடுவதில்லை. இயக்கவியல் அப்படிக் கருதவில்லை. இதன் கருத்து நேர் எதிரானது. ஒரு பொருளின் அளவில் ஏற்படும் அற்பமான புலனுக்கெட்டாத, மாறுதல்கள் அந்தப் பொருளில் பகிரங்கமான, அடிப்படையான மாறுதல்களை - குணத்தில் மாறுபாடுகளை உருவாக்கும் மாறுதல்களை உண்டாக்குவதில் கொண்டு போய் விடுவதுதான் வளர்ச்சி என்று இயக்கவியல் கருதுகிறது. அவ்வாறு, ஒரு பொருளின் குணத்தில் ஏற்படும் மாறுதல்கள் படிப்படியாக பொதுவாக ஏற்படுவதில்லை - அவை துரிதமாக திடுதிப்பென்று நிகழ்கின்றன - ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு ஒரே பாய்ச்சலில் தாவிக் குதிக்கிற முறையில் அந்த மாறுதல் இருக்கிறது. வளர்ச்சியின் போக்கு இதுவே என்று இயக்கவியல் கருதுகிறது. குணத்தில் ஏற்படும் இந்த மாறுதல்கள் தற்செயலாக நிகழ்வதில்லை - புலனுக்கெட்டாதபடி, படிப்படியாக, சிறுகச்சிறுக, அளவில் ஏற்படுகிற மாறுதல்கள் அத்தனையும் திரண்டு ஒரே குவியலாகக் குவித்ததின் இயற்கையான விளைவாகவே அவை நிகழ்கின்றன. வளர்ச்சியின் போக்கு என்பது இதுதான் என்று இயக்கவியல் கருதுகிறது.

ஆகவே, ஒரு வட்டத்தைச் சுற்றிச்சுற்றி வருகிற இயக்கமாக - ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்ச்சியே மீண்டும் மீண்டும் நிகழ்வதாக - வளர்ச்சியின் போக்கைப் புரிந்துக்கொள்ளக் கூடாது. அதற்கு மாறாக, முன்னோக்கிச் செல்லும்படியான இயக்கமாக - மேல்நோக்கிச் செல்லும்படியான இயக்கமாக - ஒரு பழைய குண நிலையிலிருந்து புதியதொரு குணநிலைக்கு மாறிவரும் போக்காக எளிமையான நிலையிலிருந்து சிக்கலான நிலைக்கு மாறிச் செல்லும் போக்காக - கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்கு மாறிச் செல்கிற போக்காக - வளர்ச்சியின் போக்கைப் புரிந்துகொண்டாக வேண்டும் என்று இயக்கவியல் வலியுறுத்துகிறது. ஏங்கெல்ஸ் கூறுகிறார்:

"இயக்கவியல் சரியா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க இயற்கையே உதாரணமாக விளங்குகிறது. இதற்கு இயற்கை பற்றிய நவீன விஞ்ஞானம் மிகவும் வளம்பொருந்திய ஆதாரங்களை, தினந்தோறும் அதிகமாகிக் கொண்டே வரும் ஆதாரங்களைத், தந்துகொண்டேயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித் தந்துகொண்டிருக்கும் நவீன இயற்கை விஞ்ஞானம் கடைசிப் பரிசீலனையின் முடிவாக நிரூபித்துள்ளது என்ன? இயற்கையின் போக்கு இயக்கவியலின்படி அமைந்ததே மாறாநிலைத் தத்துவத்தின்படி அமைந்திருக்கவில்லை என்று நிரூபித்திருக்கிறது. என்றென்றைக்கும் ஒரே மாதிரியாக இயங்கி வருகிற, இடையறாது ஒரே வட்டத்தைச் சுற்றி சுற்றி வருகிற இயக்கமாக இயற்கையின் போக்கு இல்லை. அதற்கு மாறாக உண்மையான வரலாற்றையே உருவாக்குகிறது என்று நிரூபித்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் டார்வின் பெயரை முக்கியமாகக் குறிப்படவேண்டும். இன்றைய உயிரினங்களின் உலகம் - தாவர, மிருக இனங்களும் மனிதனும் அனைத்தும் வளர்ச்சிப் போக்கில் ஒரு பயனாக ஏற்பட்டவையே. இந்த வளர்ச்சிப் போக்கு கோடானுகோடி வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்து, இயற்கையைப் பற்றி இருந்தவந்த மாறாநிலைத் தத்துவப் பார்வைக்கு டார்வின் பலமான அடி கொடுத்தார்." (மேற்சொன்ன நூலையே பார்க்கவும்).

இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒரு பொருளின் வளர்ச்சியில் அளவில் ஏற்படும் மாறுதல்கள் அதன் குணத்திலும் மாறுபாடுகளை உண்டாக்கும் போக்குதான் என்று விளக்கும் போது ஏங்கெல்ஸ் சொல்கிறார்:

"அளவில் மாறுதல் ஏற்படும் நிலையிலிருந்து குணத்திலும் மாறுதல் ஏற்படும் நிலைக்கு போய்க் கொண்டிருப்பதைத்தான் பௌதீக விஞ்ஞானத்தின் ஒவ்வொரு மாறுதலும் குறிக்கிறது. ஒரு பொருளின் இயல்பிலேயே இருக்கிற அல்லது வெளியிலிருந்து அதன்மீது செலுத்தப்படக்கூடிய ஏதாவதொரு இயக்கம் காரணமாக, அளவில் ஏற்படும் மாறுதலின் விளைவே இது. உதாரணமாக, திரவ ரூபத்திலுள்ள நீரில் உஷ்ணம் ஆரம்பத்தில் அதன் திரவநிலையைப் பாதிப்பதில்லை. ஆனால், அதன் உஷ்ணம் அதிகரித்து அல்லது

குறைந்து ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியவுடன் அதன் திரவநிலை மாறி முறையே நீராவியாகவோ அல்லது ஐஸ் கட்டியாகவோ ஆகி விடுகிறது......ஒரு பிளாட்டின உலோகத்தால் செய்யப்பட்ட கம்பி இருக்கிறது. அந்தக் கம்பி ஜொலிக்க

வேண்டுமானால் அதில் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவுக்கு மின்சார ஓட்டத்தைச் செலுத்தியாக வேண்டும்; ஒவ்வொரு உலோகமும் திரவநிலைக்கு உருக வேண்டுமானால், அதற்கு ஒரு குறிப்பிட்ட உஷ்ண அளவு வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு உருகுநிலை உண்டு. ஒரு குறிப்பிட்ட அமுக்கத்தின் கீழ் ஒவ்வொரு திரவமும் ஒரு கொதி நிலையையோ அன்றி, உறையும் நிலையையோ அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டம் உண்டு. இவற்றைக் கண்டு பிடிப்பது நம்மிடமுள்ள சாதனங்களைக் கொண்டு தேவையான உஷ்ணத்தையோ குளிச்சியையோ உண்டாக்குவதற்கு எவ்வளவு தூரம் முடிகிறதோ அதைப் பொறுத்திருக்கிறது. போதிய அழுத்தமும் கொடுத்து, போதிய அளவுக்கு குளிரவைத்தால், ஒவ்வொரு வாயுவும் ஒரு நுட்பகட்டத்தை எட்டுகிறது. அதை எட்டியவுடன் அது தனது வாயு நிலையை இழந்து திரவ நிலைக்கு மாறிவிடுகிறது. ஒரு நிலையைவிட்டு மற்றொரு நிலைக்கு மாறிவிடும்படியான நுட்பகட்டத்துக்கு பௌதீக விஞ்ஞானத்தில் "கான்ஸ்டன்ட்" என்று பெயர். இவை வேறொன்றுமில்லை. ஒரு பொருளின் இயக்கப் போக்கில் ஏற்படும் அளவு மாற்றம் அந்தப் பொருளின் நிலையில் குண மாற்றத்தை உண்டாக்கும்படியான - அளவில் ஏற்படும் மாறுதல் குணத்தின் மாறுதலை உண்டாக்கும்படியான முக்கிய இடங்களையே - கட்டங்களையே பெரும்பாலும் இவை குறிக்கின்றன." ("இயற்கையின் இயக்கவியல்" என்கிற ஏங்கெல்ஸ் எழுதிய நூலைக் காண்க.)

இரசாயன விஞ்ஞானத்திற்கு வரும்பொழுது, ஏங்கெல்ஸ் கூறுவதாவது:-

"கூட்டுப் பொருட்களின் அளவில் ஏற்படும் மாறுதல்களின் விளைவாக ஏற்படும் குணமாற்றங்களைப் பற்றிய விஞ்ஞானமே இரசாயன விஞ்ஞானம் என்று கூறலாம். இது ஹெகலுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது......பிராண வாயுவை எடுத்துக் கொள்வோம்; சாதாரணமாக இதன் மூலக்கூறு ஒன்றில் இரண்டேயிரண்டு பிராணவாயு அணுக்கள்தான் உண்டு. ஆனால் அதோடுகூட இன்னொரு பிராணவாயு அணு சேர்ந்தால் அது ஓஜோன் என்கிற ஒரு முற்றிலும் வேறான புதியதொரு பொருளாக ஆகிவிடுகிறது. வண்ணத்திலும் சரி அந்தரங்க குணங்களிலும் சரி, ஓஜோன், பிராணவாயுவிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. மேலும், நைட்ரஜனுடனும், கந்தகத்துடனும் பிராணவாயு பல்வேறு அளவுகளில் கூடி பல கூட்டுப் பொருட்களைப் படைக்கிறது. அவை ஒவ்வொன்றும் மற்றவைகளிலிருந்து குணரீதியில் மாறுபட்டிருக்கின்றன. (மேலே குறிப்பிட்ட நூலையே பார்க்கவும்.)

டூரிங் என்பவர் தன்னாலான மட்டும் வகைதொகையின்றி ஹெகலைத் திட்டினார் என்றாலும், ஹெகலுடைய ஒரு ஆய்வுரையைக் கள்ளத்தனமாக எடுத்துத் தன்னுடையது போலக் கையாண்டார். அந்த ஆய்வுரை பிரசித்தி பெற்ற ஒன்று. உணர்ச்சியற்ற உலகத்திலிருந்து உணர்ச்சியுள்ள உலகத்திற்கு மாறிவிடும் கட்டமானது - ஜடப் பொருள்களின் நிலையிலிருந்து ஜீவராசிகளின் நிலைக்கு மாறிவிடும் கட்டமானது - ஒரு புதிய நிலைக்குப் பாய்ந்துவிடும் பாய்ச்சலைக் குறிக்கிறது என்பதே அந்த ஆய்வுரை, டூரிங்கைக் கண்டித்து விமர்சிக்கும் காலத்தில் ஏங்கெல்ஸ் கூறுவதாவது: "இதுதான் ஒரு பொருளின் வளர்ச்சியை அளவிடுவதற்கு ஹெகெல் நிர்ணயித்த நுட்பக் கட்டங்கள் என்பவை அந்தக் கட்டங்களில் சில நிர்ணயமான முக்கியக் கட்டங்களை அடைந்தவுடன் ஒரு பொருளில் ஏற்படுகிற வெறும் அளவு மாற்றம் (அதிகமாவது, குறைவது) திடீரென ஒரு பாய்ச்சலில் குணமாற்றத்தை உண்டாக்குக்கிறது. உதாரணமாக, நீரை உஷ்ணப்படுத்தினாலும் சரி, குளிரவைத்தாலும் சரி, கொதிநிலையை அடைவதும் உறைநிலையை அடைவதும் அதன் முக்கியக்கட்டங்களாகும். அடுத்த முக்கியக்கட்டங்களை அடைந்தவுடன் - சாதாரணக் காற்று அமுக்கத்தின்கீழ் - அது ஒரு புதிய நிலைக்குப் பாய்ந்து செல்கிறது. சூடேறிக் கொண்டே செல்லும்படியான, குளிர்ச்சியடைந்துக் கொண்டே போகும்படியான, அளவு மாற்றம் போய் ஒரு புதிய குணத்தையே பெற்று விடுகிறது." ("டூரிங்கை எதிர்த்து")

ஈ. எல்லா பொருட்களுக்குள்ளேயும், எல்லா இயற்கைத் தோற்றங்களுக்குள்ளேயும் முரண்பாடுகள் அடங்கியுள்ளன..... ஏனென்றால், அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு நேர் நிலையும் ஒரு எதிர் நிலையும் உண்டு. ஏதோ ஒன்று மடிந்து கொண்டேயிருக்கிறது. ஏதோ ஒன்று வளர்ந்துகொண்டேயிருக்கிறது - பழமைக்கும் புதுமைக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் என்று இயக்கவியல் கருதுகிறது. மாறாநிலைத் தத்துவம் இதற்கு நேர் விரோதமாகக் கருதுகிறது, மேலும், இப்படிப்பட்ட எதிர்மறைகளுக்கிடையே நடந்துவரும் போராட்டம்தான் - பழமைக்கும் புதுமைக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் - மடிந்து வருவதற்கும் தோன்றி கொண்டிருப்பதற்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் - மறைந்து வருவதற்கும் வளர்ந்து வருவதற்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் - வளர்ச்சிப் போக்கின் உள்ளடக்கம் என்றும் அளவு மாற்றங்கள் குணமாற்றங்களாக மாறியமைவதின் உள்ளடக்கம் என்றும் இயக்கவியல் வலியுறுத்துகிறது.

எனவே கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குச் செல்கிற வளர்ச்சியின் போக்கு என்பது நேரான நிகழ்ச்சிப் போக்கு அல்ல; அதற்குப் பதிலாக, பொருட்களிலும் அவற்றின் தோற்றங்களிலும் உள்ளடங்கியுள்ள முரண்பாடுகள் வெளிப்படுவதையே அந்த நிகழ்ச்சிப்போக்கு குறிக்கிறது - அந்த முரண்பாடுகளின் அடிப்படையில்  கிளம்பி  இயங்குகிற  எதிர்மறையான போக்குகளிடையே நடக்கும் ஒரு "போராட்டமாக" அதுவெளிப்படுவதையே குறிக்கிறது என்று இயக்கவியல் கருதுகிறது. லெனின் கூறுகிறார்:

"சரியான அர்த்தத்தில் சொல்லவேண்டுமென்றால், இயக்கவியல் எனப்படுவது பொருட்களின் உள்ளுக்குள்ளேயிருக்கும் சாராம்சத்தில் பொதிந்துள்ள முரண்பாடுகளை ஆராய்வதுதான்" (லெனின் எழுதிய "சித்தாந்தத்தைப் பற்றிய குறிப்புப் புத்தகங்கள்" என்ற நூலில் ருஷ்யப் பதிப்பு பக். 26).

மேலும் லெனின் கூறுகிறார்:

"வளர்ச்சி என்பது எதிர் மறைகளிடையே நடக்கும் "போராட்டத்தையே" குறிக்கிறது" (லெனின் நூல்களின் தொகுப்பு ருஷ்யப் பதிப்பு, 13வது பாகம், பக்கம் 301).

சுருங்கச் சொன்னால் இவைதான் மார்க்சிய ரீதியிலமைந்த இயக்கவியலின் பிரதான அம்சங்கள் ஆகும்.

சமூக வாழ்வையும், சமூகத்தின் சரித்திரத்தையும் ஆய்ந்தறிவதற்கு இந்த இயக்கவியல் முறையின் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதின் அளவிடற்கரிய முக்கியத்துவத்தை இப்பொழுது புரிந்து கொள்வது சுலபம். மேலும், சமுதாயத்தின் சரித்திரத்துடனும், தொழிலாளிவர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகளுடனும் இந்தக் கோட்பாடுகளைப் பொருத்திக் கையாள்வதின் அளவிடவொண்ணாத முக்கியத்துவத்தையும் இப்பொழுது புரிந்து கொள்ளுவது சுலபம்.

எனவே, உலகத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனியான தோற்றங்கள் என்பவையில்லை என்றாலும் எல்லா தோற்றங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளவை ஒன்று மற்றொன்றைச் சார்ந்திருப்பவை என்றால் - வரலாற்றில் காண்கின்ற ஒவ்வொரு சமுதாய அமைப்பும், ஒவ்வொரு சமுதாய இயக்கமும் எப்படி மதிப்பிடப்பட வேண்டும் என்பது தெளிவாகிறதல்லவா? "நிரந்தர நீதி" என்ற பார்வையைக் கொண்டோ, அல்லது முன்கூட்டியே முடிவு செய்த வேறு ஏதாவதொரு கருத்தைக் கொண்டோ, வரலாற்று ஆசிரியர்கள் சாதாரணமாக மதிப்பிடுவது போல், அவற்றை மதிப்பிடக் கூடாது; அதற்குப் பதிலாக, அந்தச் சமுதாய அமைப்பும் அந்தச் சமுதாய இயக்கமும் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த நிலைமைகளை மதிப்பிட வேண்டும் என்பது தெளிவாகிறது.

நவீன காலத்திய நிலைமைகளில் அடிமைச் சமுதாய அமைப்பு அர்த்தமற்றதாகவும், மூடத்தனமாகவும் இருக்கும். ஆனால், நொறுங்கிச் சிதைந்து வரும் ஒரு புராதன கம்யூனிஸ்ட் சமுதாயத்தின் சூழ்நிலைமைகளில் அடிமைச் சமுதாய அமைப்பு தோன்றி வளர்வது புரிந்து கொள்ளக்கூடிய, இயற்கையாக அமைந்துள்ள ஒரு தோற்றம்தான். ஏனென்றால், அடிமைச் சமுதாய அமைப்பு எனப்பட்டது, புராதன கம்யூனிஸ்ட் சமுதாய அமைப்பை விட்டுவிட முன்னேறியதைக் குறிக்கிறது.

ஜாரிசமும் பூர்ஷ்வா சமுதாயமும் 1905ம் ஆண்டில் ருஷ்யாவில் இருந்ததை உதாரணமாகக் கொள்ளலாம். இந்த நிலைமைகளில் ஒரு பூர்ஷ்வா ஜனநாயகக் குடியரசு வேண்டும் என்று எழுகிற கோரிக்கை புரிந்துகொள்ளத்தக்கது, சரியானது, புரட்சிகரமானதுங்கூட, ஏனென்றால், அன்றைய சூழ்நிலைமைகளில் ஒரு பூர்ஷ்வா குடியரசு என்பது ஒருபடி முன்னேற்றத்தைக் குறித்திருக்கும். ஆனால், சோவியத் சோசலிஸ்ட் குடியரசுகளின் யூனியன் அமைந்துள்ள இன்றுள்ள நிலைமைகளில் ஒரு பூர்ஷ்வா ஜனநாயகக் குடியரசு வேண்டுமென்றுகோரும் கோரிக்கை அர்த்தமற்றது, புரட்சிக்கெதிரானதுங்கூட. ஏனென்று கேட்டால் சோவியத் குடியரசுடன் ஒப்பு நோக்கினால் பூர்ஷ்வா ஜனநாயகக் குடியரசு எனப்படுவது ஒருபடி பின்னுக்கிழுப்பதாகும், பிற்போக்கானதாகும்.

நிலைமை, காலம், இடம் - ஆகியவற்றைச் சார்ந்துதான் சகலமும் இயங்குகின்றன.

ஆகவே, சமுதாயத் தோற்றங்களைப் பற்றி இத்தகைய வரலாற்று ரீதியான கண்ணோட்டம் இல்லாமல் வரலாற்றைப் பற்றிய ஒரு விஞ்ஞானம் நிலை பெற்றிருக்கவோ, வளர்ச்சியடையவோ சாத்தியமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஏனென்றால், கேவலம் தற்செயல் நிகழ்ச்சிகளின் ஒரு கதம்பமாகவும், மிக மதியீனமான தவறுகளின் ஒரு அவியலாகவும் சரித்திரம் பற்றிய விஞ்ஞானம் உருக்குலைந்து போவதிலிருந்து இந்தக் கண்ணோட்டம்தான் காப்பாற்றுகிறது.

மேலும், பிரபஞ்சம் என்பது இடையறாது இயங்கிக் கொண்டேயிருக்கும், இடையறாது வளர்ந்து கொண்டேயிருக்கும் நிலையிலுள்ளது என்று ஏற்பட்டால் - பழைமை மங்கிமறைவதும் புதுமை பிறந்து வளர்வதும் வளர்ச்சியின் ஒரு விதி என்று ஏற்பட்டால் - அப்பொழுது "மாற்ற முடியாத" சமுதாய அமைப்புகள் என்பவை இருக்கவே முடியாது, தனிச் சொத்துரிமை, சுரண்டல் ஆகியவை சம்பந்தமான "நிரந்தரமான கோட்பாடுகள்" என்பவை இருக்கவே முடியாது. நிலப்பிரபுவுக்கு விவசாயி அடிமையாயிருக்க வேண்டும். முதலாளிக்கு தொழிலாளி அடிமையாக இருக்க வேண்டும் என்கிற "நிலையான கருத்துகள்" இருக்கவே முடியாது என்பது தெளிவு.

எனவே, ஒரு காலத்தில் எப்படி, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு நீக்கப்பட்டு, முதலாளித்துவச் சமுதாய அமைப்பு உருவானதோ, அதைப் போலவே முதலாளித்துவச் சமுதாய அமைப்பையும் நீக்கிவிட்டு அதன் இடத்தில் சோசலிசச் சமுதாய முறையை ஏற்றி வைப்பதும் சாத்தியமே.

ஆகவே, சமுதாயத்திலுள்ள எந்த மக்கட் பிரிவு தற்சமயம், ஆதிக்கம் வகிக்கும் சக்தியாக இருந்தபோதிலும் வளர்ச்சியற்றுப் போய்விட்டனவோ அந்த மக்கட் பிரிவை நமது கண்ணோட்டத்துக்கு ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. அதற்கு மாறாக, எந்த மக்கட்பிரிவுகள் - தற்சமயம் சமுதாயத்தில் ஆதிக்கம் வகிக்கும் சக்தியாக இல்லாதிருந்த போதிலும்-வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கின்றனவோ, எதிர்காலம் ஒன்று எதிர் கொண்டழைத்து நிற்கிறதோ, அந்த மக்கட் பிரிவைத் தான் நமது கண்ணோட்டத்துக்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில், 1880 - 1890ஆம் ஆண்டு காலகட்டத்தில் மார்க்சிஸ்டுகளுக்கும் நரோத்னிக்குகளுக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், மொத்த மக்கள் தொகையில் தொழிலாளி வர்க்கம் ஒரு அற்பசொற்பமான சிறுபான்மைப் பகுதியாக இருந்தது. ஆனால், விவசாயிகள் மொத்த  மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலோராக இருந்தனர். ஆனால், வர்க்க ரீதியில் தொழிலாளி வர்க்கம் அன்று வளர்ந்து கொண்டிருந்தது - வர்க்க ரீதியில் விவசாயிகள் சமூகம் நொறுங்கிச் சின்னாபின்னமடைந்து கொண்டிருந்தது. ஆக, வர்க்க ரீதியில் தொழிலாளி வர்க்கம் வளர்ந்து கொண்டிருந்த காரணத்திற்காகவே மார்க்சிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தைத் தமது கண்ணோட்டத்துக்கு ஆதாரமாகக் கொண்டனர். அதனால், மார்க்சிஸ்டுகள் தவறொன்றும் செய்யவில்லை. ஏனெனில், அற்பசொற்பமான சக்தியாயிருந்த நிலையிலிருந்த தொழிலாளி வர்க்கம் பிற்காலத்தில் ஒரு வரலாற்றை உருவாக்கும் முதல் தரமான சக்தியாக, அரசியல் சக்தியாக, வளர்ந்தது என்பதை நாம் அறிந்தோம்.

எனவே, கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டும் என்றால், நமது பார்வை முன்னோக்கியவாறு இருக்கவேண்டும். பின்னோக்கியவாறு இருக்கக்கூடாது.

மேலும், மெதுவாக ஏற்பட்டுவரும் அளவுமாறுபாடுகள் துரிதமாக, திடீரெனக் குணமாறுதல்களாகப் பரிணமிப்பது வளர்ச்சியின் ஒரு விதி என்று ஏற்பட்டால் - அப்பொழுது ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் உண்டாக்குகிற புரட்சிகள் என்பவை இயற்கையான, தவிர்க்க முடியாத தோற்றமே என்பது தெளிவு.

ஆகவே, முதலாளித்துவ அமைப்பிலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறிச் செல்வதும், முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலையடைவதும், மெதுவாக ஏற்படும் மாறுதல்கள் மூலமாக - சீர்திருத்தங்கள் மூலமாக - சாத்தியமில்லை; அதற்கு மாறாக, முதலாளித்துவ முறையில் குணாம்ச ரீதியான மாறுதலை உண்டாக்குவதின் வழியாகத்தான், புரட்சியின் வழியாகத்தான், அவை சாத்தியமாகும்.

ஆகவே,  கொள்கையில்  தவறிழைக்காமல்  இருக்க வேண்டுமென்றால், நாம் புரட்சியாளனாக இருந்து தீரவேண்டும். சீர்திருத்தவாதியாக அல்ல. மேலும், உள்ளிருக்கும் முரண்பாடுகள் வெளிப்படுவதின் வழியாகத்தான் - இந்த முரண்பாடுகளை ஆதரமாகக் கொண்டு எழும் எதிர்மறையான சக்திகள் அதே முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதின் வழியாகத்தான் வளர்ச்சி ஏற்படுகிறது என்று ஏற்பட்டால் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் என்பது மிகவும் இயற்கையான, தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சிப் போக்கே என்பது தெளிவு.

ஆகவே, முதலாளித்துவ முறையின் முரண்பாடுகளை நாம் மூடி மறைக்கக்கூடாது. அதற்குப் பதிலாக, அதன் முரண்பாடுகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும். சிக்கவிழ்த்துக் காட்ட வேண்டும். வர்க்கப் போராட்டத்தை நாம் தடுக்கக்கூடாது. அதற்குப் பதிலாக அதை அதன் முடிவுக்குக் கொண்டுபோக வேண்டும்.

ஆகவே,  கொள்கையில்  தவறு  ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால், சமரசமற்ற தொழிலாளி வர்க்கக் கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் நலன்களையும் சுமூகமாகப் பிணைக்கும் ஒரு சீர்திருத்தவாதக் கொள்கையைப் பின்பற்றக்கூடாது. "முதலாளித்துவம் வளர்ந்து தானாகவே சோசலிசமாக மாறிவிடும்" என்ற கொள்கையைப் பின்பற்றக் கூடாது.

சமூக வாழ்வையும் சமூகத்தின் வரலாற்றையும் ஆய்ந்தறிய கையாளப்படும் மார்க்சிய இயக்கவியல் முறை என்பது இதுதான்.

மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதத்தை இனிபார்ப்போம். அடிப்படையாகவே அது, கருத்துமுதல்வாதத் தத்துவத்துக்கு நேர் எதிராயுள்ளது.

2. மார்க்சியத் தத்துவப் பொருள்முதல்வாதத்தின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு

அ. ஒரு "பரிபூரணமான கருத்தின்" பிரதிபிம்பமே இந்த உலகம் என்றும், எங்கும் நிறைந்த பரம்பொருளின் உருவமே உலகம் என்றும் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. மார்க்சியத் தத்துவப் பொருள்முதல்வாதம் இதற்கு நேர் எதிரானது. உலகம் என்பது அதன் தன்மையிலேயே - இயல்பிலேயே ஒரு பொருளாக அமைந்துள்ளது என்று அது கருதுகிறது; இயங்கிக்கொண்டிருக்கும் பொருளின் வெவ்வேறான வடிவங்களாகத்தான் உலகின் பல்வேறு தோற்றங்களை அது கருதுகிறது; இயக்கவியல் முறை நிரூபித்துள்ளபடி, தோற்றங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதும் ஒன்றையொன்று சார்ந்துள்ளதும், இயங்கும் பொருளின் வளர்ச்சியின் ஒரு விதியேயாகும் என்று கருதுகிறது. மேலும், பொருளின் இயக்க விதிகளின்படியேதான் உலகம் வளர்கிறது. அதன் வளர்ச்சிக்கு ஒரு "பரமாத்மா" தேவையில்லை என்றும் அது கருதுகிறது.

ஏங்கெல்ஸ் கூறுகிறார்:

"இயற்கையை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் உணர்வது என்பது, அந்நிய அம்சங்கள் எதுவும் அத்துடன் கலந்து விடாமல் இயற்கையை உள்ளது உள்ளபடியே உணர்ந்து கொள்வது என்றுதான் அர்த்தம் வேறொன்றுமில்லை."

ஹெராக்ளிடஸ் என்பவர் ஒரு புராதன காலத்திய தத்துவ ஆசிரியர். அவர் சொல்கிறார்: "உலகம் சர்வமும் உள்ளடங்கிய ஒன்று என்பது எந்தக் கடவுளாலும், எந்த மனிதனாலும் படைக்கப்பட்டதல்ல, முறையாகக் கொழுந்துவிட்டு எரிந்தும் முறையாக மங்கியும் வருகிற ஒரு அணையா, தீப்பிழம்பு அது அன்றும் அப்படித்தான் இருந்தது; இன்றும் அப்படித்தான் இருக்கிறது, என்றும் அப்படியே இருக்கும்" ஹெராக்ளிடசின் இந்த உரையைப்பற்றி லெனின் பின்வருமாறு கருத்து தெரிவித்தார். "இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மூல அம்சங்களைப் பற்றிய ஒரு அருமையான விரிவுரை இது."

ஆ. உணர்வு ஒன்றுதான் உண்மையில் இருக்கிறது என்று கருத்துமுதல்வாதம் கருதுகிறது. பௌதீக காலம், வாழ்வு, இயற்கை என்பவை நமது மனதில், புலன்களின் உணர்ச்சிகளில், கருத்துகளில், புலன்கள் புலப்படுத்தும் தோற்றங்களில் மட்டுமே இருக்கின்றன என்றும் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. மார்க்சியப் பொருள்முதல்வாதத் தத்துவத்தின் கருத்து இவற்றிற்கு நேரெதிரானது. பொருள், இயற்கை, வாழ்வு என்பவைதான் புறநிலை உண்மை. நமது உணர்வுக்கு அப்பால் - நமது உணர்வைச் சார்ந்திராமல், ஆதாரமாகக் கொண்டிராமல், சுயேச்சையாக - இயங்குபவை அவை. பொருள்தான் முதல். ஏனெனில், அதுதான் புலன் உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கும் உணர்வுக்கும் மூலாதாரம், தோற்றுவாய்; உணர்வு என்பது இரண்டாம் பட்சமானது. மூலத்திலிருந்து பெறப்படுவது. ஏனெனில், பொருளின் பிரதிபிம்பமே உணர்வு, வாழ்வின் பிரதிபிம்பமே உணர்வு என்று மார்க்சியப் பொருள்முதல்வாதத் தத்துவம் கருதுகிறது. மேலும் பொருள் வளர்ச்சியுற்று, மிகவும் உயர்ந்த, உன்னதமான நிலையை எட்டும்போது அது மூளை ஆகிறது. சிந்தனை என்பதே பொருளின் படைப்பு. மூளைதான் சிந்தனையின் உறுப்பு. எனவே, பொருளிலிருந்து சிந்தனையைப் பிரிக்க முடியாது. அப்படிப் பிரிப்பது மிகப் பெரிய தவறு செய்வதாகும் என்று மார்க்சியத் தத்துவப் பொருள்முதல்வாதம் கருதுகிறது.

ஏங்கெல்ஸ் கூறுகிறார்:

"சிந்தனைக்கும் வாழ்வுக்கும் உள்ள உறவு என்ன என்கிற கேள்வி - ஆத்மாவுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு என்ன என்கிற கேள்வி. இந்த கேள்விதான் தத்துவம் முழுவதிலும் கேட்கப்படும் மூலமுதல் கேள்வி; எல்லாக் கேள்விகளுக்கும் மேலான கேள்வி......இந்தக் கேள்விக்கு தத்துவவாதிகள் கொடுத்த விடைகளே அவர்களை இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிரித்து விட்டன. ஆத்மாதான் முதலிடம் வகிக்கிறது, இயற்கை இரண்டாம் பட்சம்தான் என்று அடித்துப் பேசியவர்கள்தான், கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இயற்கைதான் மூலாதாரமானது என்று கருதிய மற்றெல்லோரும் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்களாயினர்." (கார்ல் மார்க்ஸ் - தேர்வு நூல் 1, பக்கம் 430-431) 

"பௌதீக பிரபஞ்சம் - புலன்களால் உணரப்படும் பிரபஞ்சம் - நாமும் அந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்தவர்கள்தான் - அந்தப் பிரபஞ்சம் ஒன்று மட்டுமே பிரத்யட்ச உண்மை.....நமது உணர்வும், நமது சிந்தனையும் இருக்கிறதே, அவை புலன்களுக்கு அப்பாற்பட்டவை போல எவ்வளவு மயக்கம் தந்தாலும் சரி, அவையனைத்தும் ஒரு பௌதீகப் பொருளான, மனித சரீர சம்பந்தமான உறுப்பாக விளங்கும் மூளையின் படைப்பேயாகும். பொருளை உணர்வு படைக்கவில்லை. பொருள் எனப்படுவது உணர்வின் படைப்பு அல்ல. அதற்கு மாறாக, உணர்வு எனப்படுவது பொருளால் படைக்கப்படுகிற அனைத்து படைப்புகளிலும் மேலான உன்னதமான, ஒரு படைப்புத்தான்." (Ibid, பக்கம் 435) 

பொருள், சிந்தனை ஆகிய விஷயத்தைப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:

"சிந்தனை செய்கிற பொருளிலிருந்து சிந்தனையைப் பிரிப்பது என்பது அசாத்தியம். எல்லா மாறுதல்களுக்கும் உட்பட்டது பொருள்." (Ibid, பக்கம் 391)

மார்க்சியத் தத்துவப் பொருள்முதல்வாதத்தை விளக்கும் காலத்தில், லெனின் கூறுவதாவது:

"புற நிலையில் பிரத்யட்சமாயுள்ள வாழ்வு (பொருள்) உணர்வையும், புலன் நுகர்ச்சியையும், அனுபவத்தையும், சார்ந்து நிற்காமல் சுயேச்சையாக இருக்கிறது என்று பொதுவாக பொருள்முதல்வாதத்தைச் சேர்ந்த வகுப்பாரும் ஏற்றுக் கொள்கின்றனர்.... வாழ்வின் பிரதிபிம்பமே உணர்வு எனப்படுவது. மிகவும் உயர்வாகப் பேசுவதானால், கிட்டத் தட்ட சரியான (போதிய அளவுக்கு முழுமையாக, நுட்பத்திலும் நுட்பமாக, உள்ளது உள்ளபடியே காட்டுகிற பிரதிபிம்பமே உணர்வு என்பது." (லெனின் - தேர்வு நூல்கள், தொகுதி 11, பக்கம் 377) 

மேலும் லெனின் கூறுகிறார்:

".......நமது ஐம்புலன்களையும் தாக்கி இயங்க வைத்து உணர்ச்சியைச் சிருஷ்டிப்பது எதுவோ அதுவே பொருள் என்பது. உணர்ச்சியின் வாயிலாக நுகர்ந்து பெறப்படும் புற உண்மையே பொருள் என்பது......பொருள், இயற்கை, வாழ்வு, பௌதீக சம்பந்தமானவை - இவைதான் மூலமும் முதலும். ஆத்மா, உணர்வு, உணர்ச்சி, மனம் சம்பந்தமானவை - இவை இரண்டாம் பட்சமானவை."  (Ibid, பக்கம் 207-208)

"எப்படி பொருள் இயங்குகிறது, எப்படி 'பொருள் சிந்திக்கிறது' என்பதைக் காட்டும் சித்திரமே பிரபஞ்சத்தின் சித்திரமாகும்." (மேற்கூறிய நூல், 367ம் பக்கம்)

"மூளை என்பது சிந்தனையின் உறுப்பு." (மேற்படி நூல் 152ம் பக்கம்)

இ. பிரபஞ்சத்தையும், அதன் இயக்க விதிகளையும் உணர்வது அசாத்தியம் என்கிறது கருத்துமுதல்வாதம். நமது அறிவு உண்மைதான் (மாயை அல்ல) என்று கருத்துமுதல்வாதம் நம்பவில்லை. புறநிலை யதார்த்தத்தை அது அங்கீகரிக்க மறுக்கிறது. விஞ்ஞானத்திற்கு என்றென்றும் எட்டமுடியாத, அறிய முடியாத, தூய அறிவு பிரபஞ்சத்தில் நிறைந்துள்ளது என்று அது சாதிக்கிறது.

இதற்கு நேர் எதிராகக் கருதுகிற மார்க்சியத் தத்துவப் பொருள்முதல்வாதம், பிரபஞ்சத்தையும் சரி, அதன் இயக்க விதிகளையும் சரி, நாம் அறிவது முற்றிலும் சாத்தியமே என்கிறது அது. இயற்கையின் விதிகளைப்பற்றியே நமது அறிவு பரிசோதனைகளை நடத்திச் சோதிக்கப்பட்டதாகும். எனவே அது உண்மை அறிவு (மாயை அல்ல). அது புறநிலை உண்மையைப்போல செல்லத் தக்கதே என்று மார்க்சியத் தத்துவப் பொருள்முதல்வாதம் சாதிக்கிறது. மேலும், அறிய முடியாத விஷயங்கள் என்று சொல்லத் தகுந்தவை எதுவுமே கிடையாது; ஆனால் இன்னும் அறியப்படாமலிருக்கும் விஷயங்கள் என்பவைதான் உண்டு, அவையுங்கூட விஞ்ஞானத்தின் முயற்சியால் நடைமுறையின் முயற்சியால் கண்டு பிடிக்கப்பட்டு தெரியப்படுத்தப்படும் என்று அது சாதிக்கிறது.

பிரபஞ்சம் என்பது அறிவுக்கு எட்டாதது என்றும் அறிவுக்கு எட்ட முடியாத 'பிரம்மங்கள்' இருக்கின்றன என்றும் "கான்ட்" முதலான கருத்துமுதல்வாதத் தத்துவவாதிகள் சமர்ப்பித்த ஆய்வுரையை, ஏங்கெல்ஸ் விமர்சித்தார். விமர்சித்ததோடு நில்லாமல், நமது அறிவு என்பது உண்மை அறிவுதான் என்று சாதிக்கிற புகழ்வாய்ந்த பொருள்முதல்வாத ஆய்வுரையை ஆதரித்து ஏங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்.

"கான்டினுடைய இந்த ஆய்வுரையையும் இதைப் போன்று இதர தத்துவப் பின்னல் வேலைப்பாடுகளையும் ஆணித்தரமாக மறுப்பது நடைமுறை அனுபவம்தான். நடைமுறை அனுபவம் என்றால் பரிசோதித்தலும், உழைத்தலும்தான். இயற்கையின் ஒரு போக்கைப் பற்றி நாம் கொண்டுள்ள கருத்து சரியானதே என்பதை நிரூபிக்க அதை நாமே செய்து காட்ட முடிகிறது என்றால், கான்ட் முதலானவர்கள் கூறக்கூடிய, அறிவுக்கெட்டாத "பிரம்மங்கள்" அனைத்திற்கும் அதோடு சமாதி கட்டப்பட்டு விடும். தாவரங்களிலும், மிருகங்களின் உடம்பிலும் உண்டாக்கப்படுகிற இரசாயன பொருட்களும் இப்படித்தான் "பிரம்மங்களாய்" இருந்தன - இராசயன விஞ்ஞானம் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகதானே உற்பத்தி செய்து காட்டும்வரை, அப்படி உற்பத்தி செய்ய ஆரம்பித்தவுடன் நமது அறிவுக்கு எட்டாதிருந்த இந்த "பிரம்மங்கள்" நமது தேவைக்குரிய பொருள்களாக ஆகிவிட்டன. உதாரணமாக அலிஜரின் என்கிற நீலச்சாயம். இது ஒரு செடியில் உள்ளது. அந்தச் செடியை நிலத்தில் பயிர் செய்து சாயத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதைச் சுலபமாகவும் மலிவாகவும் நிலக்கரித்தாரிலிருந்து எடுக்கிறோம். மேலும் கோபர்னிகஸ் என்கிற வானவியலாளர், சூரிய மண்டலத்தின் அமைப்பு முறையைப் பற்றி அளித்த விஞ்ஞானப் பூர்வமான ஒரு அனுமான சித்தாந்தம் உண்டு. அந்த அனுமானம் சரிதான் என்றாலும், அது முந்நூறு ஆண்டுகள்வரை நிரூபிக்கப்படாத ஒரு அனுமானமாகவே இருந்து வந்தது. ஆனால், இதுவே சூரிய மண்டலம் அளித்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு லெவேரியே என்கிற விஞ் ஞானி நமக்குத் தெரியாத ஒரு கிரகம் இருந்து தீரவேண்டியதின் அவசியத்தை ஒரு தெளிந்த முடிவாக எடுத்துக்காட்டியதோடு அந்தக் கிரகம் வான வெளியில் இடம் பெற்றுத் தீரவேண்டிய இடத்தையும் கணக்கிட்டுச் சொன்ன பொழுது - பிறகு, காலே என்கிற வானவியலாளர் உண்மையிலேயே இந்தக் கிரகத்தைக் கண்டுபிடித்த பொழுது - கோபர்னிகஸ் முறை உண்மைதான் என்று நிரூபிக்கப்பப்பட்டது." (கார்ல் மார்க்ஸ்- தேர்வுநூல்கள், தொகுதி 1, பக்கம் 432-433)

மாக் என்பவரின் சீடர்களான போக்டனோவ், பாஜ்ரோவ், யுஷ்கேவிச் முதலானோர் நம்பிக்கை வாதத்தைப் பின்பற்றுவதாக லெனின் கண்டித்தார். அதோடுகூட, இயற்கையின் விதிகளைப்பற்றிய நமது விஞ்ஞான அறிவு நிஜ அறிவுதான் என்றும், விஞ்ஞான விதிகள் புற உண்மையைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்றும் கூறுகிற பிரசித்திபெற்ற பொருள் முதல்வாத ஆய்வுரையை ஆதரித்தும் லெனின் கூறுகிறார்;

"நம் காலத்திய கடவுள் நம்பிக்கைவாதம் விஞ்ஞானத்தை அடியோடு நிராகரிப்பதில்லை. அது நிராகரிப்பதெல்லாம் "விஞ் ஞானம் தனது தகுதியைப்பற்றி அளவுக்கு மீறி உரிமை பெருமை கொண்டாடுவதைத்தான்" - சுருங்கச் சொன்னால், தான் புறநிலை உண்மையைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக விஞ்ஞானம் கூறிக் கொள்வதை நிராகரிக்கிறது. பொருள்முதல்வாதிகள் நினைப்பதுபோல புறநிலை உண்மை என்கிற ஒன்று இருக்குமேயானால், வெளிப்பிரபஞ்சத்தை மனித அனுபவமாக பிரதிபலிக்கும் இயற்கை விஞ்ஞானம் ஒன்று மட்டுமே புறநிலை உண்மையை நமக்கு அறிவிக்கவல்லது என்றானால், அப்பொழுது நம்பிக்கைவாதம் முழுவதும் பூரணமாக நிராகரிக்கப்படுகிறது." (லெனின்- தேர்வு நூல்கள், தொகுதி 11, பக்கம் 188)

சுருங்கச் சொன்னால், இவைதான் மார்க்சியத் தத்துவப் பொருள்முதல்வாதத்தின் சிறப்பு அம்சங்கள்.

சமூக வாழ்வையும் சமுதாய சரித்திரத்தையும் அறியப் புறப்படும் ஆராய்ச்சியுடன், தத்துவப் பொருள்முதல்வாதத்தின் கோட்பாடுகளைப் பொருத்தி பார்ப்பது எவ்வளவு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பொழுது புரிந்து கொள்வது சுலபம், மேலும், சமுதாய சரித்திரத்திலும் தொழிலாளி வர்க்கக்கட்சியின்  நடைமுறை  வேலைகளிலும்  இந்தக் கோட்பாடுகளைக் கையாள்வதன் முக்கியத்துவம் எவ்வளவு பெரியது என்பதை இப்பொழுது புரிந்து கொள்வது சுலபம்.

இயற்கைத் தோற்றங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று ஆதாரமாயுள்ளதும் தான் இயற்கை வளர்ச்சியின் விதிகள் என்று ஏற்பட்டால், அப்பொழுது சமுதாய வாழ்வின் தோற்றங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று ஆதாரப்பட்டிருப்பதும்தான் அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சி விதிகள் என்று ஆகும்; ஏதோ தற்செயலாக அவை ஏற்பட்டவை அல்ல என்பதாகும். 

எனவே, சமூகவாழ்வும், சமுதாய சரித்திரமும் "தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளின்" ஒரு குவியல் என்கிற கருத்து தவறாகிறது. ஒழுங்கான விதிகளின்படி நடக்கும் சமுதாயத்தின் வளர்ச்சி பற்றியதே சரித்திரம் என்றும் அது ஆகிறது. மேலும், சமுதாய சரித்திரத்தின் ஆராய்ச்சி ஒரு விஞ்ஞானமாக மாறுகிறது.

எனவே, தொழிலாளி வர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகள் எவற்றை ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும்?

"தலை சிறந்த மனிதர்களின்" நல்லாசிகளை ஆதாரமாகக் கொண்டல்ல - "பகுத்தறிவின்" தீர்ப்புகளை ஆதாரமாகக் கொண்டல்ல - "பிரபஞ்ச தர்மங்களை" வளர்ச்சி விதிகளை அடிப்படையாகக் கொண்டு, அந்த விதிகளைப் பற்றிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளிவர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகள் இருக்க வேண்டும்.

மேலும், பிரபஞ்சம் அறியப்படக்கூடியதே இயற்கையின் வளர்ச்சி விதிகளைப்பற்றிய நமது அறிவு உண்மை அறிவுதான். புறநிலை உண்மையைப்போலவே அதுவும் செல்லுபடியாகும் என்று ஏற்பட்டால், அதைத் தொடர்ந்து, சமூக வாழ்வும் சமுதாயத்தின் வளர்ச்சியும் அறியக்கூடியவையே என்றும், சமூகத்தின் வளர்ச்சி விதிகளைப் பற்றிய விஞ்ஞான விஷயாதாரங்கள் உண்மையானவையே, அவையும் புறநிலை உண்மைகளைப் போலவே செல்லுபடியாகும் என்றும் ஏற்படுகிறது.

எனவே, சமூக வாழ்க்கையின் தோற்றங்கள் எவ்வளவு சிக்கல் நிறைந்திருந்தபோதிலும் சரி; சமூக சரித்திரத்தைப் பற்றிய விஞ் ஞானம்கூட பிற விஞ்ஞானப் பிரிவுகளைப்போல - உதாரணமாக உயிரியலைப்போல - அவ்வளவு கறாரான விஞ்ஞானமாக விளங்க முடியும். மேலும், சமூக வளர்ச்சியை நடைமுறை காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் அதற்குச் சாத்தியமே.

எனவே, தொழிலாளி வர்க்கத்தின் கட்சி தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்கு மேம்போக்கான நோக்கங்களை வழிகாட்டியாகக் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக வளர்ச்சியின் விதிகளையும், அந்த விதிகளைக் கொண்டு எடுக்கும் நடைமுறைக்குரிய முடிவுகளையும்தான் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும்.

எனவே, மனித குலத்தின் இன்பகரமான எதிர்காலம் என்ற ஒரு கனவாக இருந்து வந்த சோசலிசம் இப்பொழுது ஒரு விஞ்ஞானமாக மாற்றப்படுகிறது.

ஆகவே, விஞ்ஞானத்துக்கும் நடைமுறை வேலைக்கும் உள்ள இணைப்பு, தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலுள்ள இணைப்பு, அவற்றின் ஒற்றுமை - அவைதான் தொழிலாளி வர்க்க கட்சிக்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக இருக்கவேண்டும்.

மேலும், இயற்கையும், வாழ்வும், பௌதீகப் பிரபஞ்சமும் மட்டும் முதன்மை என்றானால் - உணர்வும், சிந்தனையும் இரண்டாம் பட்சமான மூலத்திலிருந்து தோன்றியவை என்றானால் - அதைத் தொடர்ந்து என்ன முடிவு வரும்? மானிட உணர்விற்கு அப்பால் சுதந்திரமாக இயங்கும் புறநிலை உண்மையைத்தான் பௌதீக பிரபஞ்சம் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஆனால், உணர்வு எனப்பட்டதோ இந்த புறநிலை உண்மையின் வெறும் பிரதிபிம்பம் மட்டுமே என்பதானால் அதைத் தொடர்ந்து என்ன முடிவு ஏற்படும்? சமுதாயத்தின் பௌதீக வாழ்வு, அதன் நிலைமை என்பவையும் முதன்மையானவைதான் - சமுதாயத்தின் ஆன்மீக வாழ்வு இரண்டாம் பட்சமானது. ஒரு மூலத்திலிருந்து உதித்ததுதான். சமுதாயத்தின் பௌதீக வாழ்வு, மனிதர்களின் சித்தத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக இருந்து கொண்டிருக்கும் புறநிலை உண்மைதான் - ஆனால் சமுதாயத்தின் ஆன்மீக வாழ்வு எனப்பட்டது, இந்தப் புறநிலை உண்மையின் பிரதிபிம்பம் மட்டுமே, யதார்த்த நிலையின் பிரதிபிம்பம் மட்டுமே என்ற முடிவுகள் ஏற்படும்.

ஆகவே, சமுதாயத்தின் ஆன்மீக வாழ்வு எதிலிருந்து பிறந்தது? சமுதாயக் கருத்துகளும், சமுதாயக் கொள்கைகளும், அரசியல் கருத்துகளும், அரசியல் நிறுவனங்களும் எதிலிருந்து உதிக்கின்றன? அவற்றின் தோற்றுவாய் எது? என்று கண்டு பிடிக்க வேண்டுமானால், அந்தக் கருத்துகளையே, கொள்கைகளையே அபிப்பிராயங்களையே, அரசியல் அபிப்பிராயங்களையே,துருவிப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது, அவற்றிற்குள்ளேயே பொதிந்து கிடக்கிறதா என்று தேடக்கூடாது. அதற்கு மாறாக, இந்தக் கருத்துகளும், கொள்கைகளும், அபிப்பிராயங்கள் முதலியனவும் எதனுடைய பிரதிபிம்பமாக இருக்கின்றனவோ அதை - சமுதாயத்தின் பௌதீக வாழ்வையும், அதன் நிலையையும் - துருவிப் பார்க்க வேண்டும்.

ஆகவே, சமுதாய சரித்திரத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சமுதாயக் கருத்துகளும் கொள்கைகளும், அபிப்பிராயங்களும் அரசியல் நிறுவனங்களும் காணக்கிடக்கின்றன என்றால் - அடிமைச் சமுதாய முறையின் கீழ் சில சமூகக் கருத்துகளையும் கொள்கைகளையும் அபிப்பிராயங்களையும், அரசியல் நிறுவனங்களையும் காண்கிறோம் என்றால் - நிலப்பிரபுத்துவ முறையின்கீழ் வேறு சிலவற்றைக் காண்கிறோம் என்றால்..... முதலாளித்துவ முறையின்கீழ் இன்னும் வேறு சிலவற்றைக் கண்கிறோம் என்றால் அதை எப்படி விளக்குவது? அந்தந்தக் கருத்துகளின் கொள்கைகளின், அபிப்பிராயங்களின், அரசியல் நிறுவனங்களின் "தன்மையை" வைத்து அவற்றின் "குணாம்சங்களை" வைத்து, அதை விளக்கக் கூடாது; அதற்கு மாறாக, சமுதாயம் வளர்ந்துவந்ததின் வெவ்வேறு காலகட்டங்களில் நிலவிய சமுதாய பௌதீக வாழ்வின் வெவ்வேறு நிலைமைகளைக் கொண்டு விளக்க வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் நிலை எப்படியிருக்கிறதோ, ஒரு சமுதாயத்தின் பௌதீக வாழ்வின் நிலைமைகள் எப்படியிருக்கிறதோ, அப்படித்தான் அந்த சமுதாயத்தின் கருத்துகளும், கொள்கைகளும், அரசியல் அபிப்பிராயங்களும் அரசியல் நிறுவனங்களும் உள்ளன.

இது சம்பந்தமாக, மார்க்ஸ் கூறுவதாவது:

"மனிதர்களின் நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல; அதற்கு மாறாக, மனிதர்களின் சமூகநிலைதான் அவர்களின் உணர்வை நிர்ணயிக்கிறது". (கார்ல் மார்க்ஸ் - தேர்வுநூல்கள், தொகுதி1, பக்கம் 356)

ஆக, கொள்கையில் தவறாமலிருக்க வேண்டுமானால் - வீண் கனவு காண்பவர்களைப் போல ஆகாமலிருக்க வேண்டுமானால் - தொழிலாளி வர்க்கத்தின் கட்சி என்ன செய்ய வேண்டும்? புற நிலைக்கப்பால் நிற்கும் "மனிதன் பகுத்தறியும் கோட்பாடுகளை" ஆதாரமாகக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்யக்கூடாது. சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும் சக்தி எது? சமூகத்தின் பௌதீக வாழ்விலுள்ள ஸ்தூலமான நிலைமைகள் தாம் அந்த சக்தி. எனவே, அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் தொழிலாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்யவேண்டும். "பெரிய மனிதர்களின்" நல்லெண்ணங்களையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது - அதற்குப் பதிலாக சமூகத்தின் பௌதீக வாழ்வு வளர்வதற்கு வேண்டிய உண்மையான தேவைகளை ஆதாரமாகக் கொண்டுதான் தொழிலாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும்.

நரோத்னிக்குகள், அராஜகவாதிகள், சோசலிச புரட்சிவாதிகள் அடங்கலாக, கற்பனை உலகில் உலவியவர்கள் பலர் வீழ்ச்சியடைந்தார்களே அதற்குக் காரணமென்ன? காரணங்கள் பல உண்டு. அதில் ஒன்று சமூகம் வளர்வதில் சமுதாயத்தின் பாத்திரத்தை அவர்கள் அங்கீகரிக்காததோடு கூட, கருத்து முதல்வாதக் குட்டையில் இறங்கிவிட்டனர். சமுதாய பௌதீக வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் வேலைகளைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, இந்தத் தேவைகளைப் புறக்கணித்து அவற்றிற்குச் சம்பந்தமில்லாத வகையில், சமுதாயத்தின் யதார்த்த வாழ்வுடன் தொடர்பற்ற "இலட்சியத் திட்டங்களையும்", "சர்வாம்சத்திட்டங்களையும்" தங்களுடைய வேலைகளுக்கு ஆதாரமாகக் கொண்டனர்.

மார்க்சிய - லெனினியத்தின் பலம், அதன் உயிர்நாடி எதிலிருக்கிறது? சமுதாய பௌதீக வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை ஆதாரமாகக் கொண்டு அது தனது வேலைகளைச் செய்கிறது - சமுதாயத்தின் யதார்த்த வாழ்விலிருந்து எப்பொழுதும் தன்னை கத்தரித்துக் கொள்வது கிடையாது என்கிற உண்மையில் அடங்கியுள்ளது.

அப்படியென்றால், சமுதாயக் கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும், அரசியல் அபிப்பிராயங்களுக்கும், அரசியல் நிறுவனங்களுக்கும் சமுதாய வாழ்வில் ஒரு முக்கியத்துவமும் கிடையாது என்று முடிவு செய்வதா? சமுதாய நிலைமையும், சமுதாய வாழ்வின் பௌதீக நிலைமைகளையும் அவை பரஸ்பரம் பாதிப்பதில்லை என்று முடிவு கட்டுவதா? மார்க்சினுடைய வார்த்தைகளிலிருந்து எழுவது இந்த முடிவுதானா? இல்லவே இல்லை. சமுதாய கருத்துகளுக்கும், கொள்கைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும், அரசியல் ஸ்தாபனங்களுக்கும் எது மூலஸ்தானம் என்பதைப் பற்றித்தான் இதுவரை நாம் பேசிக் கொண்டிருந்தோம். அவை எப்படி உதிக்கின்றன என்பதைப் பற்றித்தான் - சமுதாய பௌதிக வாழ்வு நிலைமைகளின் பிரதிபிம்பம்தான் அதன் ஆன்மீக வாழ்வு என்கிற விஷயத்தைப் பற்றித்தான் - இதுவரை நாம் பேசிக் கொண்டிருந்தோம். சமுதாயக் கருத்துகள், கொள்கைகள், அபிப்பிராயங்கள், அரசியல் ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் என்ன? - சமுதாயத்தில் அவை என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று கேட்கலாம். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அவற்றை மறுக்கவில்லை. மறுப்பதற்குப் பதிலாக சமுதாய வாழ்வில், சமுதாய சரித்திரத்தில், அவை வகிக்கும் முக்கியமான பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

சமூகக் கருத்துகளிலும், கொள்கைகளிலும் வெவ்வேறு வகைப்பட்டவை உண்டு. என்றோ மறைந்தொழிந்து போயிருக்க வேண்டிய பழைய கருத்துகளும் கொள்கைகளும் இன்னும் இருந்து வருகின்றன. சமுதாயத்தில் நசிந்து வரும் சக்திகளின் நலன்களை அவை பேணிப் பாதுகாக்கின்றன. சமுதாயத்தில் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் குறுக்கே விழுந்து தடங்கல் செய்வதில்தான் இவற்றின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. அப்புறம் புதிதான, முற்போக்கான கருத்துகளும் கொள்கைகளும் வேறு உள்ளன. சமுதாயத்திலுள்ள முற்போக்கான சக்திகளின் நலன்களுக்கு இவை சேவை புரிகின்றன. இவற்றின் முக்கியத்துவம் எதில் அடங்கியுள்ளது? சமுதாயத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இவை சுலபமாக்குகின்றன என்பதில்தான் இவற்றின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. மேலும், சமுதாயத்தின் பௌதீக வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை எவ்வளவுக் கெவ்வளவு, சரியான அளவை பிரதிபலிக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு, அவற்றின் முக்கியத்துவம் அதிகமாகிறது. புதிதான சமுதாயக் கருத்துகளும், கொள்கைகளும் எப்பொழுது உதிக்கின்றன? சமுதாயத்தின் பௌதீக வாழ்வின் வளர்ச்சியானது சமுதாயத்தின் முன், சாதனைக்குரிய புதிய கடமைகளை வைத்த பிறகுதான் அவை உதிக்கின்றன. அதற்கு முன் உதிப்பதில்லை. ஆனால், ஒரு தடவை உதித்து விட்டால் போதும், அப்புறம் அவை மிகவும் வேகமான சக்தியாக மிளிர்கின்றன. சமுதாய பௌதீக வாழ்வு வளர்ச்சி நம் முன்வைக்கும் புதிய கடமைகளை நிறைவேற்றுவதை அந்தச் சக்தி சுலபமாக்குகின்றது. சமுதாயம் முன்னேறுவதை அது சுலபமாக்குகிறது. இங்கேதான் புதிய கருத்துகளின் மக்கள் ஸ்தாபன ரீதியாக அமைக்கும் சக்தி, மக்களை அணி திரட்டும் சக்தி மக்களை புதிய சமுதாயமாக மாற்றியமைக்கும் சக்தி, வெளிப்படுகிறது. புதிய சமுதாயக் கருத்துகளும், கொள்கைகளும் ஏன் தோன்றுகின்றன? ஏனென்றால், அவை சமுதாயத்துக்குத் தேவைப்படுகின்றன. ஏனென்றால், அவற்றின் அணிதிரட்டும்படியான ஸ்தாபன ரீதியாக அமைக்குபடியான, புதிய நிலையைச் சிருஷ்டிக்கும்படியான, வேலைகள் நடக்காமல் சமுதாயத்தின் பௌதீக வாழ்வு வளர்ச்சி நம்முன் வைக்கும் கடமைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. சமுதாயத்தின் பௌதீக வாழ்வு வளர்ச்சி முன் வைக்கிற கடமைகளினின்று தோன்றி இந்தப் புதிய சமுதாயக் கருத்துகளும் கொள்கைகளும் பலவந்தமாக வெடித்துக் கொண்டு வெளிக் கிளம்புகின்றன; மக்களின் சொந்தச் சொத்தாகின்றன. சமுதாயத்திலுள்ள நசித்து வரும் சக்திகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி ஸ்தாபன ரீதியாக அமைக்கின்றன. அப்படி செய்வதின் மூலமாக சமுதாய பௌதீக வாழ்வின் வளர்ச்சியைத் தடுக்கும் இந்தச் சக்திகளைத் தகர்த்தெறிவதை எளிதாக்குகின்றன.

எனவே, சமுதாயத்தின் பௌதீக வாழ்வின் வளர்ச்சி சமுதாய நிலைமையின் வளர்ச்சி முன்வைக்கிற அவசரக் கடமைகளை அடிப்படையாகக் கொண்டுதான், சமுதாயக் கருத்துகளும் கொள்கைகளும் அரசியல் ஸ்தாபனங்களும் எழுகின்றன. அவ்வாறு எழுந்தவுடன் அவை சமுதாய நிலைமையின் மீதும் சமுதாய பௌதீக வாழ்வின் மீதும் வேலை செய்கின்றன. சமுதாய பௌதீக வாழ்வின் வளர்ச்சி முன் வைக்கின்ற கடமைகளைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கும் சமுதாயம் மேலும் வளர்வதற்கும் அவசியமான நிலைமைகளை உருவாக்குகின்றன.

இது சம்பந்தமாக மார்க்ஸ் கூறுவதாவது:

"மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டவுடன் தத்துவம் எனப்பட்டது ஒரு பௌதீக சக்தியாக ஆகிவிடுகிறது." (மார்க்ஸ் எழுதிய 'ஹெகெலினுடைய உரிமைப் பற்றிய தத்துவத்தின் மீதான ஒரு விமர்சனம்' என்கிற நூலிற்கு எழுதிய முன்னுரை 1843ன் பிற்பகுதிக்கும் 1844 ஜனவரிக்கும் இடையில் எழுதப்பட்டது.)

எனவே, சமுதாயத்தின் பௌதீக நிலைமைகளை உருவாக்கும் சக்தி பெறவேண்டுமென்றால் - அவற்றின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டுமென்றால் - எப்படிப்பட்ட சமுதாயத் தத்துவத்தை தொழிலாளி வர்க்கத்தின் கட்சி பற்றுகோடாகக் கொள்ள வேண்டும்? சமுதாயத்தின் பௌதீக வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை எந்தச் சமுதாயத் தத்துவம் சரிவர பிரதிபலிக்கிறதோ, அப்படிப்பட்டதொரு தத்துவத்தை தொழிலாளி வர்க்கத்தின் கட்சி பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும். அப்படி சரிவர பிரதிபலிக்கும் ஒரு சமுதாயத் தத்துவம்தான், பெருவாரியான மக்களை இயங்கும்படி செய்து, அணி சேர்த்து பிற்போக்குச் சக்திகளைத் தூள்தூளாக்கவும் சமுதாயத்தின் முற்போக்குச் சக்திகள் முன்னேறுவதற்குப் பாதையை ஒழுங்குப்படுத்தத் தயார் என தொழிலாளி வர்க்கக் கட்சியின் மாபெரும் பட்டாளமாக மக்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டுவதற்கும் சக்தி படைத்திருக்கும்.

"பொருளாதாரவாதிகளும்" "மென்ஷ்விக்குகளும்" வீழ்ச்சியுற்றதின் காரணமென்ன? காரணங்கள் பல, அவற்றில் ஒன்று; முற்போக்கான ஒரு தத்துவமும், முற்போக்கான கருத்துகளும் மக்களைத் திரட்டும் சக்தி வாய்ந்தவை என்பதையும் ஸ்தாபன ரீதியாகத் திரட்டும், மாற்றியமைக்கும் அதன் பாத்திரத்தையும் அவர்கள் அங்கீகரிக்காததுதான். பொருள்முதல்வாதக் கருத்துகளைக் கொச்சையாகப் புரிந்து கொண்டு மேற்கூறிய அம்சங்கள் வகிக்கும் பாத்திரத்தைச் சுருக்கி, அநேகமாக ஒன்றுமில்லாதபடி அடித்துவிட்டனர். அதனால் கட்சி செயல்திறன் இழந்து உயிரற்ற நடைப்பிணமாக ஆக்கப்பட்டது. மார்க்சிய - லெனினியத்தின் வலிமையும் சக்தியும் எதிலிருந்து பிறக்கின்றன? சமுதாயத்தின் பௌதீக வாழ்வின் வளர்ச்சியின் தேவைகளைச் சரிவரப் பிரதிபலிக்கும்படியான ஒரு முற்போக்கான தத்துவத்தை ஒரு சரியான மட்டத்துக்கு உயர்த்தி வைத்ததிலிருந்துதான் - மக்களைத் திரட்டவும் ஸ்தாபன ரீதியாக அணிவகுக்கவும், மாற்றியமைக்கவும் இந்தத் தத்துவம் பெற்றுள்ள சக்தியை ஒரு துளிகூட விடாமல் முழுக்கமுழுக்கப் பயன்படுத்திக் கொள்வது தனது கடமை என்று கருதுவதிலிருந்துதான் அந்த வலிமையும், சக்தியும் பிறக்கின்றன.

சமுதாய நிலைமைக்கும், சமுதாய உணர்வுக்கும் இடையிலுள்ள உறவு என்ன - பௌதீக வாழ்வின் வளர்ச்சியின் நிலைமைகளுக்கும் சமுதாயத்தின் ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கும் இடையிலுள்ள உறவு என்ன என்று கேட்கப்படும் கேள்விக்கு வரலாற்றுப்பொருள்முதல்வாதம் கொடுக்கும் பதில் அதுதான்.

3. வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

இப்போது கீழ்க்கண்ட கேள்விக்குப் பதில் தெரிந்து கொள்வதுதான் பாக்கி:

சமுதாயத்தின் குணாம்சங்களையும் அதன் கருத்துகளையும் அபிப்பிராயங்களையும் அரசியல் ஸ்தாபனங்களையும் கடைசி முடிவுப்படி நிர்ணயிப்பது, சமுதாயத்தின் பௌதீக வாழ்வின் நிலைமைகள்தான் என்கிறோமல்லவா? இந்த சமுதாயத்தின் பௌதீக வாழ்வின் நிலைமைகள் என்ற சொற்றொடருக்கு அர்த்தமென்ன? வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் கண்ணோட்டத்தின்படி இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?

இந்த "சமுதாயத்தில் பௌதீக வாழ்வின் நிலைமைகள்" என்பவை தான் என்ன? - அவற்றின் அடையாளம் காட்டும் குணவிசேஷங்கள் என்ன?

"சமுதாயத்தின் பௌதீக வாழ்வின் நிலைமைகள்" என்கிற கருத்தில் சமுதாயத்தைச் சூழ்ந்துள்ள இயற்கை பூகோளச் சுழ்நிலைமை முதன் முதலாக அடங்கும் என்பதில் சந்தேகமேகிடையாது. சமுதாய குணாம்சத்தின் பௌதீக வாழ்வுக்குத் தேவையான, அத்தியாவசியமான, நிரந்தரமான நிலைமைகளில் அதுவும் ஒன்று. சமுதாய வளர்ச்சியில் அதுவும் நிச்சயமாக பாதிக்கிறது. சமுதாய வளர்ச்சியில் பூகோளச் சூழ்நிலைமை வகிக்கும் பாத்திரம் என்ன? சமுதாயத்தின் லட்சணங்களையும், மனிதனின் சமுதாய அமைப்பின் தன்மையையும், ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து இன்னொரு சமுதாய அமைப்பு முறைக்கு மாறிச்செல்வதையும் நிர்ணயிப்பதில் பூகோளச் சூழ்நிலைமைதான் பிரதான சக்தியாக உள்ளதா?

இல்லை - என்று பதிலளிக்கிறது பொருள்முதல்வாதம்:

சமுதாய வளர்ச்சிக்குத் தேவையான, அத்தியாவசியமான நிரந்தரமான நிலைமைகளில் பூகோளச் சூழ்நிலைமையும் ஒன்று என்பது கேள்விக்கிடமற்ற உண்மைவிஷயமாகும். சமுதாயவளர்ச்சியை அது பாதிக்கிறது. அதன் வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும் தடுக்கவும்செய்கிறது அது. ஆனால் சமுதாயத்தின் வளர்ச்சியையே நிர்ணயிக்கும்படியான செல்வாக்குப் பெற்ற அம்சம் அல்ல அது. ஏனெனில் பூகோளச் சூழ்நிலைமையில் ஏற்படும் மாறுதல்களை வளர்ச்சியைக் காட்டிலும் சமுதாயத்தில் ஏற்படும் மாறுதல்களும் வளர்ச்சியும் ஒப்பிட முடியாதபடி எவ்வளவோ வேகமாக நடக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளில் மூன்றுவிதமான சமுதாய அமைப்பு முறைகள் ஐரோப்பாவில் ஒன்றுக்குப்பின் ஒன்றாக ஏற்பட்டிருக்கின்றன. முதலாவது, புராதன கம்யூனிஸ அமைப்பு முறை; இரண்டாவது, அடிமைச் சமுதாய அமைப்புமுறை. மூன்றாவது, நிலப்பிரபுத்துவ முறை என்றவாறு. சொல்லப்போனால், ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் சோவியத் ரஷ்யாவில் நான்கு சமுதாய அமைப்பு முறைகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக ஏற்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும்கூட, இந்த மூவாயிரம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் பூகோள சூழ்நிலைமை - ஒன்றும் மாறவேயில்லை; ஒரு வேளை மாறியிருந்தாலும் அந்த மாறுதல் மிகவும் அற்பமாயுள்ளதால் அதைப் பூகோள சாஸ்திரம் கணக்கில் எடுப்பதில்லை. மிகவும் இயற்கைதானே அது. பூகோளச் சூழ்நிலைமையில் மாறுதல்கள் ஏற்படுவதற்கு கோடிக்கணக்கான வருடங்கள் பிடிக்கும். ஆனால். மனித சமுதாயத்தில் மிகவும் முக்கியமான மாறுதல்கள்: ஏற்படவேண்டுமென்றாலுங்கூட ஒரு சில நூற்றாண்டுகளோ ஒரு சில ஆயிரம் ஆண்டுகளோ போதும்.

இதிலிருந்து கிடைக்கிற முடிவு என்ன? சமுதாய வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகளின் அல்லது காரணங்களில் முக்கியக் காரணம் பூகோளச் சூழ்நிலைமை அல்ல. சமுதாய வளர்ச்சியை நிர்ணயிக்கும்படியான செல்வாக்குள்ள அம்சம் அதுவல்ல. என்பதுதான் அந்த முடிவு. ஏனெனில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அநேகமாக - மாறாமலே இருந்து வருகிற ஒன்று, ஒரு சில நூற்றாண்டுகளில் அடிப்படையான மாறுதல்களைச் செய்யக்கூடிய மற்றொன்றின் வளர்ச்சிக்குப் பிரதானக் காரணமாக இருக்கவே முடியாது. இனி, "சமுதாய வாழ்வின் நிலைமைகள் என்கிற கருத்தில், 'மக்கள் தொகையின் வளர்ச்சியும்' ஏதாவது ஒரு அளவில் ஏற்படும் மக்கள் தொகையின் நெருக்கமும், அடங்கும். ஏனென்றால் மக்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்சத் தொகையில் இல்லாமல் சமுதாயத்தின் பௌதீக வாழ்வு இருக்கவே சாத்தியமேயில்லை. எனவே, மனித சமுதாய அமைப்பு முறையின் தன்மையை நிர்ணயிப்பதில் பிரதான சக்தியாக இருப்பது ஜனப் பெருக்கம்தானே?

இல்லை - என்று இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.

ஆம், சமுதாய வளர்ச்சியை மக்கட்பெருக்கம் பாதிக்கிறது என்பது உண்மையே. அது சமுதாய வளர்ச்சியை எளிதாக்குகிறது அல்லது தடுக்கிறது என்பதெல்லாம் உண்மையே; என்ற போதிலும், சமுதாய வளர்ச்சிக்கு பிரதான சக்தியாக அது இருக்க முடியாது, சமுதாய வளர்ச்சியையே நிர்ணயிக்கும்படியான செல்வாக்குப் பெற்ற சக்தி அதற்கில்லை. காரணம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சமுதாய அமைப்பு முறையை அகற்ற இன்னொரு குறிப்பிட்ட சமுதாய அமைப்பு முறையே ஏற்படுவது ஏன்? வேறு ஏதாவது ஒரு சமுதாய அமைப்புமுறை ஏற்படாமலிருப்பதற்குக் காரணமென்ன? புராதன சமுதாய அமைப்பு முறையைத் தொடர்ந்து அடிமைச் சமுதாய அமைப்பு முறையே ஏற்படுவானேன்? அடிமை சமுதாய அமைப்பு முறையைத் தொடர்ந்து, நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையே ஏற்படுவானேன்? - நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையைத் தொடர்ந்து கணக்காக முதலாளித்துவ சமுதாய அமைப்பு முறையே ஏற்படுவானேன்? வேறு ஏதாவது ஒரு சமுதாய அமைப்புமுறை ஏன் பின் தொடர்வதில்லை? - என்கிற கேள்விக்கு ஜனப்பெருக்கத்தைக் கொண்டுமட்டும் விடை கண்டுபிடிக்க முடியாது. அது விடை தருவதுமில்லை.

ஜனத்தொகைப் பெருக்கம்தான் சமுதாய வளர்ச்சியை நிர்ணயிக்கும்படியான சக்தி என்று கூறினால் ஜனத்தொகையின் பெருக்கம் எங்கு அதிகமாக ஏற்படுகிறதோ, அங்குதான் மற்றைய இடங்களைக் காட்டிலும் உயர்தரமான சமுதாய அமைப்புமுறை ஏற்படவேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நடப்பதில்லை. அமெரிக்காவைவிட சீனாவின் ஜனப் பெருக்கம் நான்கு மடங்கு அதிகம் என்றபோதிலும் சமுதாய வளர்ச்சி ஏணியில் சீனாவைவிட அமெரிக்கா மேல்படியில் இருக்கிறது. ஏனெனில், சீனாவில் ஒரு அரை நிலப்பிரபுத்துவ சமுதாய முறை நிலவுகிறது. (சீனப் புரட்சி ஏற்படுவதற்கு முந்தியநிலை - பதிப்பாளர்) அமெரிக்காவிலோ முதலாளித்துவ சமுதாயமுறை நீண்ட காலத்துக்கு முன்பே தனது வளர்ச்சியின் உச்சியை எட்டிப் பிடித்து விட்டது. அமெரிக்காவைவிட பெல்ஜிய நாட்டு ஜனத்தொகையின் நெருக்கம் 19 மடங்கு அதிகம். சோவியத் யூனியனைவிட அதன் ஜனத்தொகையின் நெருக்கம் 26 மடங்கு அதிகம். என்றாலுங்கூட, சமுதாய வளர்ச்சி ஏணியில் பெல்ஜியத்தைவிட மேல்படியில் அமெரிக்கா இருக்கிறது. சோவியத் யூனியனோடு ஒப்பிடுவதென்றால், சோவியத் யூனியனை எட்டிப் பிடிப்பதற்கு ஒரு முழு சரித்திர சகாப்தத்தையே பெல்ஜியம் தாண்ட வேண்டியிருக்கும்! ஏனெனில் பெல்ஜியத்தில் முதலாளித்துவ முறை நிலவுகிறது. சோவியத் யூனியனில் முதலாளித்துவ முறையை ஏற்கனவே ஒழித்துக்கட்டி சோசலிச சமுதாய முறையை நிர்மாணித்துள்ளது.

இதிலிருந்து என்ன முடிவு ஏற்படுகிறது? சமுதாய வளர்ச்சிக்குப் பிரதான சக்தியாக இருப்பது மக்கள் தொகைப் பெருக்கம் அல்ல; அது பிரதான சக்தியாக இருக்கவும் முடியாது - என்பதே அந்த முடிவு. சமுதாய அமைப்பு முறையின் தன்மையையும் சமுதாயத்தின் குணாம்சங்களையும், நிர்ணயிக்கும்படியான சக்தி அதுவல்ல; அப்படி நிர்ணயிக்கும்படியான சக்தியாக அதனால் இருக்கவும் முடியாது - என்பதே அந்த முடிவு.

அ. அப்படியானால், சமுதாயத்தின் குணாம்சங்களை நிர்ணயிக்கும்படியான பிரதான சக்தி - சமுதாய அமைப்பு முறையின் தன்மையை நிர்ணயிக்கும்படியான பிரதான சக்தி - ஒரு அமைப்பு முறையிலிருந்து இன்னொரு அமைப்பு முறைக்குச் சமுதாயம் வளர்ந்து செல்வதை நிர்ணயிக்கும்படியான பிரதான சக்தி எது? சமுதாய பௌதீக வாழ்வு நிலைமைகள் எனப்படுகிற சிக்கல் மிகுந்த பின்னலின் பிரதான சக்தியாக எதைக் கொள்வது?

இதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் தரும் பதில் பின்வருமாறு: மனித வாழ்வுக்குத் தேவையான வாழ்க்கைச் சாதனைகளைச் உற்பத்தி செய்யும் முறைதான் - சமூகம் வாழ்வதற்கும், வளர்வதற்கும் இன்றியமையாதத் தேவைகளாயிருக்கும் உணவு, உடை, செருப்பு, வீடுகள், எரிபொருட்கள் உற்பத்திக் கருவிகள் முதலிய பௌதீக ரீதியான செல்வங்களை உற்பத்தி செய்யும் முறைதான் - இந்தப் பிரதான சக்தி என்று வரலாற்றுப் பொருள்முதல்வாதம் சாதிக்கிறது.

மக்கள் வாழ வேண்டுமானால் அவர்களுக்கு உடை, செருப்பு, வீடு எரிபொருட்கள் முதலியன இருந்தாக வேண்டும். அவற்றை அடைந்து அனுபவிக்க வேண்டுமானால், மக்கள் அவற்றை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், அந்த உணவையும், உடையையும் செருப்பையும், எரிபொருளையும் வீடு முதலானவற்றையும் உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்திக் கருவிகளை உற்பத்தி செய்யவும் உபயோகிக்கவும், சக்தி பெற்றிருக்கவேண்டும்.

பௌதீகரீதியான செல்வங்களை உற்பத்தி செய்கிற உற்பத்திக் கருவிகளைக் கையாள்கிற மக்கள் - பௌதீக ரீதியான செல்வங்களை உற்பத்தி செய்துகொண்டே போவதற்கு மக்கள் பெற்றிருக்கும் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி அனுபவம், வேலைத்திறன் - ஆகிய அந்த எல்லா அம்சங்களும் சேர்ந்து மொத்தமாக சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் என்று அமைகின்றன.

ஆனால், உற்பத்திச் சக்திகள் என்பவை உற்பத்தியின் ஒரு அம்சம்தான் - உற்பத்தி செய்யும் முறையின் ஒரே ஒரு அம்சம் மட்டுமே, பௌதீகரீதியான செல்வங்களைப் படைப்பதற்கு மக்கள் இயற்கையிலுள்ள பொருட்களையும், சக்திகளையும் உபயோகித்துக் கொள்கிறார்களே அந்த இயற்கைச் சக்திகளுக்கும் மக்களுக்கும் இடையேயுள்ள உறவைக் குறிக்கும் அம்சம்தான் அது. அதுபோல, உற்பத்தியைப் பற்றிய அம்சம் இன்னொன்றிருக்கிறது - உற்பத்தி செய்யும் முறையில் இன்னொரு அம்சம் இருக்கிறது - அது என்ன? உற்பத்தியிலே ஈடுபடுகிற மனிதர்களிடையே நிலவும் உறவும், மனிதர்களிடையே ஏற்படும் உற்பத்தி உறவுகள் என்பதே இந்த மற்றொரு அம்சம். இயற்கையோடு மனிதர்கள் போராடுகிறார்கள், போராடிக் கொண்டேயிருக்கிறார்கள் - பௌதீகரீதியான செல்வங்களை உற்பத்தி செய்வதற்காக மக்கள் இயற்கையைப் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படிச் செய்கிற போது, ஒவ்வொரு மனிதனும் தன்னந்தனியே நின்று, மற்ற மனிதர்களுடன் சம்பந்தமில்லாமல் தனித்தனி நபர்களாக, இயற்கையோடு போராடுகின்றனரா, இயற்கையைப் பயன்படுத்துகின்றனரா - என்று பார்த்தால் இல்லை. கூட்டாகச் சேர்ந்துதான் செய்கிறார்கள். கூட்டம் கூட்டமாக அமைந்து, சமூகம் சமூகமாக அமைந்துதான் செய்கிறார்கள். ஆகவே என்ன தெரிகிறது? உற்பத்தி என்பது எல்லாக் காலங்களிலும், எல்லா நிலைமைகளிலும் சமூக ரீதியான உற்பத்தியாகத்தான் இருக்கிறது. பௌதீக ரீதியான செல்வங்களை உற்பத்தி செய்கிறபோது உற்பத்தித் துறையில் மனிதர்கள் ஏதாவதொருவிதமான பரஸ்பர உறவுகளில் ஈடுபடுகின்றனர். ஏதாவதொரு விதமான உற்பத்தி உறவுகளில் ஈடுபடுகின்றனர். சுரண்டலிலிருந்து விடுபட்ட மக்களிடையே நிலவும்படியான கூட்டுறவு, பரஸ்பர உதவி, உறவுகளாக அவை இருக்கக்கூடும். ஒருவன் ஆதிக்கம் செலுத்த, இன்னொருவன் அடிமைப்பட்டிருக்கும் உறவுகளாகவும் அவை இருக்ககூடும். கடைசியாக, ஒரு உற்பத்தி உறவு வடிவத்தை விட்டு, இன்னொரு உற்பத்தி உறவு வடிவத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் இடைக்கால உறவுகளாகவும் அவை இருக்கக் கூடும். ஆனால், உற்பத்தி உறவுகளின் தன்மை எப்படியிருந்தாலும் சரியே, என்றென்றைக்கும் ஒவ்வொரு சமுதாய அமைப்பு முறையிலும் சமுதாய உற்பத்திச் சக்திகள் எவ்வளவு முக்கியமானதொரு உற்பத்தி அம்சமாயுள்ளனவோ அதே அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற உற்பத்தியும் சமமாக உற்பத்தி உறவுகளும் இருக்கின்றன.

மார்க்ஸ் சொல்கிறார்:

"உற்பத்தியிலீடுபடும் மனிதர்கள் இயற்கையின்மீது மட்டும் ஆதிக்கம் செலுத்தி வேலை செய்வதில்லை; ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொண்டுதான் வேலை செய்கிறான். இயற்கையை மட்டும் பாதிப்பதில்லை. ஒருவனை இன்னொருவன் பாதிக்கிறான். ஒரு குறிப்பிட்ட வகையில் ஒத்துழைத்துத்தான் - ஒரு குறிப்பிட்ட வகையில் தமது வேலைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டுதான் - மனிதர்கள் உற்பத்தி செய்கிறார்கள். உற்பத்தி செய்யும் பொருட்டுத் தம்மிடையே குறிப்பிட்ட தொடர்புகளை உறவுகளை மனிதர்கள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும் இந்தச் சமூகத் தொடர்புகளின், சமூக உறவுகளின், கட்டுக்கோப்புக்குள் நின்று கொண்டுதான் இயற்கையைக் கட்டுப்படுத்தி வேலை செய்கின்றனர். இவ்வாறு உற்பத்தி நடக்கிறது." (மார்க்ஸ் நூல்களின் தொகுப்பு, ஆங்கிலப் பதிப்பு, மாஸ்கோ - 1946 முதல் பாகம், 211ம் பக்கம்).

எனவே, உற்பத்தி என்பது - உற்பத்திமுறை என்பது - சமூகத்தின் உற்பத்திச் சக்திகளையும், மக்களின் உற்பத்தி உறவுகளையும் ஒருங்கே குறிக்கிறது; எனவே பௌதீகரீதியான செல்வங்களைப் படைக்கும் உற்பத்தித் துறையில் மக்களிடையே நிலவும் ஒற்றுமையின் உருவமாக அது திகழ்கிறது.

ஆ. உற்பத்தியின் முதல் குணவிசேஷம் என்ன? நீண்ட காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே உற்பத்தி முறை தங்குவதில்லை; அது என்றென்றைக்கும் மாறிக்கொண்டேயிருக்கிறது; மேலும் உற்பத்தி முறையில் ஏற்படும் மாறுதல்கள் சமுதாய அமைப்பு முறை, சமுதாயக் கருத்துகள், அரசியல் அபிப்பிராயங்கள், அரசியல் நிறுவனங்கள் முழுவதிலும் தவிர்க்க முடியாதபடி மாறுதல்களை உண்டாக்குகின்றன - சமூக - அரசியல் அமைப்பு முழுவதையும் புனர் நிர்மாணம் செய்கிறது. இவைதான் உற்பத்தியின் முதல் குணவிசேஷம். வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் மக்கள் வெவ்வேறு வகைப்பட்ட உற்பத்தி முறைகளைப் பயன்படுத்துகின்றனர். அதாவது - இன்னும் சாதாரணமாகச் சொல்வதென்றால் - வெவ்வேறு வகைப்பட்ட வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுகின்றனர். புராதனக் கம்யூனிஸ சமுதாய அமைப்பு முறையில் ஒரு உற்பத்திமுறை இருக்கிறது; அடிமைச் சமுதாய அமைப்பு முறையில் இன்னொரு உற்பத்திமுறை இருக்கிறது; நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்புமுறையில் மூன்றாவதொரு உற்பத்திமுறை இருக்கிறது; இப்படியே மற்றவையும் அந்தந்த உற்பத்தி முறைக்கேற்ப மனித சமுதாய அமைப்பு முறையும், மக்களின் ஆன்மீக வாழ்வும், மக்களின் கருத்துகளும் அரசியல் நிறுவனங்களும் மாறுபட்டிருக்கின்றன.

ஒரு சமுதாயத்தின் உற்பத்தி முறை எப்படியிருக்கிறதோ, அப்படித்தான் பிரதானமான அம்சங்களில் அந்தச் சமுதாயமும் அதன் கருத்துகளும், கொள்கைகளும், அரசியல் அபிப்பிராயங்களும், நிறுவனங்களும் உள்ளன.

அல்லது - இன்னும் சாதாரணமாகச் சொல்வதென்றால் - மனிதனின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் அவனுடைய சிந்தனைமுறையும் இருக்கிறது. எப்படி வாழ்கிறானோ, அப்படிதான் சிந்திக்கிறான்.

இதற்கு என்ன அர்த்தம்? சமுதாய வளர்ச்சியின் சரித்திரம் என்பது, பிரதானமாக உற்பத்தி எப்படிஎப்படி வளர்ந்தது என்பதைக்கூறும் சரித்திரம்தான்; பலப்பல நூற்றாண்டுகளின் காலபோக்கிலே ஒன்றன்பின் ஒன்றாய் வந்துபோன உற்பத்தி முறைகளைக் கூறும் சரித்திரம்தான்; உற்பத்திச் சக்திகள் எப்படி எப்படி யெல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன என்பதைக் கூறும் சரித்திரம்தான் - மக்களின் உற்பத்தி உறவுகள் எப்படியெல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன என்பதைக் கூறும் சரித்திரம்தான்.

ஆகவே, சமுதாய வளர்ச்சியின் சரித்திரம் என்பது, அதே சமயத்தில் பௌதீகரீதியான செல்வங்களை படைக்கிற உற்பத்தியாளர்களின் சரித்திரமாக - உழைப்பாளி மக்களின் சரித்திரமாக விளங்குகிறது. உழைப்பாளி மக்கள்தான் உற்பத்தித் துறையில் பிரதான சக்தியாக உள்ளனர்; அவர்கள்தான் சமுதாயம் உயிர்வாழ்வதற்குத் தேவையான பௌதீக ரீதியான செல்வங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே, சரித்திரத்தைப் பற்றிய விஞ்ஞானம் ஒரு உண்மையான விஞ்ஞானமாயிருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அரசர்களின், தளபதிகளின் செயல்களை மட்டும் கூறுவதோடு நின்றுவிடுகிற - அரசுகளை வென்ற மாவீரர்களின் அரசுகளை அடக்கியாண்ட மாமன்னர்களின் செயல்களை மட்டும் கூறுவதோடு நின்றுவிடுகிற - ஒரு சரித்திரமாக, சமுதாய வளர்ச்சியின், சரித்திரத்தை இனிமேல் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு மாறாக, பௌதீக ரீதியான செல்வங்களை உற்பத்தி செய்கிற உற்பத்தியாளர்களின் சரித்திரத்தைக் கூறுவதில் - உழைப்பாளி மக்களின் சரித்திரத்தைக் கூறுவதில் - பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் சரித்திரத்தைக் கூறுவதில் - சரித்திர விஞ்ஞானம் பிரதானமாகக் கவனம் செலுத்த வேண்டும்.

சமுதாயத்தின் சரித்திர விதிகளை ஆராய்ந்து கண்டு பிடிப்பதற்கு மனிதனின் மனதையும், சமுதாய அபிப்பிராயங்களையும், கருத்துகளையும், கிண்டிக் கிளறிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குப்பதிலாக, அந்ததந்த குறிப்பிட்ட சரித்திர சகாப்தத்திலிருந்து சமுதாயம் எந்த உற்பத்தி முறையைக் கையாண்டு வந்ததோ அந்த உற்பத்தி முறையை - சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையை - ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆகவே, சரித்திர விஞ்ஞானத்தின் பிரதான கடமை என்ன? உற்பத்தியின் விதிகளை - உற்பத்திச் சக்திகளின், உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியைப் பற்றிய விதிகளை - சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய விதிகளை ஆராய்ந்து உலகுக்குப் புலப்படுத்துவதுதான் அதன் பிரதான கடமையாகும்.

எனவே, தொழிலாளி வர்க்கத்தின் கட்சி ஒரு உண்மையான கட்சியாக விளங்க வேண்டுமென்றால், உற்பத்தி வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும், சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும், அந்தக் கட்சி அறிவு பெற்றிருக்க வேண்டும்; மற்றெல்லா விஷயங்களுக்கும் மேலாக இதில் அறிவு பெற்றிருத்தல் அவசியம்.

எனவே, தனது கொள்கையில் தவறிழைக்காமலிருக்க வேண்டுமென்றால், தொழிலாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைத் திட்டத்தை வகுத்துக் கொள்வதிலும், நடைமுறை வேலைகளைச் செய்வதிலும், முதன் முதலில் எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? உற்பத்தியின் வளர்ச்சியைப் பற்றிய விதிகளிலிருந்து - சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியைப்பற்றிய விதிகளிலிருந்து, முதலில் ஆரம்பிக்க வேண்டும்.

இ. உற்பத்தியின் இரண்டாவது குணாம்சம் என்ன? உற்பத்திச் சக்திகளில் மாறுதல்களும், வளர்ச்சியும் ஏற்பட்ட பிறகுதான் - அதாவது உற்பத்திக் கருவிகளில் மாறுதல்களும், வளர்ச்சியும் ஏற்பட்ட பிறகுதான் - எப்பொழுதுமே உற்பத்தியில் மாறுதல்களும், வளர்ச்சியும் ஆரம்பிக்கிறது, எனவே, உற்பத்தியில் மற்றெல்லாவற்றையும்விட மிகவும் நிலையற்ற, புரட்சிகரமான, அம்சமாக இருப்பது உற்பத்திச் சக்திகளே. ஆரம்பத்தில், சமுதாயத்திலுள்ள உற்பத்திச் சக்திகள் மாறுகின்றன, வளர்கின்றன. அதற்குப் பிறகு இந்த மாறுதல்களை அடிப்படையாகக் கொண்டும், அவற்றிற்கு ஏற்ற வகையிலும், மனிதர்களுடைய உற்பத்தி உறவுகள் - மாறுகின்றன. ஆனால், இதற்கு அர்த்தம், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை உற்பத்தி உறவுகள் பாதிப்பதில்லை என்பதல்ல - உற்பத்தி உறவுகளை உற்பத்திச் சக்திகள் சார்ந்து நிற்கவில்லை என்பதல்ல. உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி உற்பத்திச் சக்திகளைச் சார்ந்துள்ளது என்பது உண்மையே என்றாலும், உற்பத்தி உறவுகள் தமது பங்குக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பாதிக்கத்தான் செய்கின்றன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தவோ அல்லது தாமதப்படுத்தவோ செய்கின்றன. இது சம்பந்தமாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குப் பின்தங்கியபடி உற்பத்தி உறவுகள் நீண்ட காலத்துக்கு நிற்கவும் முடியாது, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு எதிராக முரண்பட்ட நிலையில் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கவும் முடியாது. ஏனெனில், உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கும் நிலைமைக்கும் தக்கவாறு உற்பத்தி உறவுகள் இருந்து, அவை வளர்வதற்கு முழு சந்தர்ப்பம் அளித்தால்மட்டுமே, உற்பத்திச் சக்திகள் பூரணமாக வளர்ச்சியடைய இயலும். ஆகவே, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம்தான் பின்தங்கிவிட்டிருந்தாலும் அவை சிறிது காலத்திற்குள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டத்துக்கும்; தன்மைக்கும் ஏற்றவாறு முன்னேறித் தீரவேண்டும்; முன்னேறி வரவும் செய்கின்றன. இல்லாவிட்டால் உற்பத்திமுறையின் கட்டுக்கோப்புக்குள்ளேயே உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கு மிடையே இருக்கும் ஒற்றுமைக்கு அடிப்படையிலேயே பங்கமேற்படும். உற்பத்தி முழுவதுமே சீர்குலைந்துவிடும், உற்பத்தியில் நெருக்கடி தோன்றும்; உற்பத்திச் சக்திகள் நாசமாக்கப்படும்.

உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் தன்மைக்குப் பொருந்தாத வகையில் அமைந்திருப்பதற்கு, உதாரணமாக, முதலாளித்துவ நாடுகளிலுள்ள பொருளாதார நெருக்கடிகளைப் பார்க்கலாம். அங்கே உற்பத்திக் கருவிகள் தனிப்பட்ட முதலாளிகளின் உடைமையாயிருப்பது உற்பத்தி முறையின் சமுதாயத் தன்மைக்கோ, உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கோ கொஞ்சங்கூடப் பொருத்தமானதாயில்லை. இதன் விளைவாக, பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன, அவை உற்பத்திச் சக்திகள் அழிக்கப்படுவதில் கொண்டுபோய் விடுகின்றன. அது மட்டுமா? இவ்வாறு உற்பத்திச் சக்திகளும், உற்பத்தி உறவுகளும் பொருந்தா நிலையில் இருப்பதே சமுதாயப் புரட்சிக்கு ஒரு பொருளாதார அடிப்படையாக அமைகிறது. அந்தப் புரட்சியின் நோக்கம் - அமலிலிருக்கும் உற்பத்தி உறவுகளை அழிப்பதும், உற்பத்திச் சக்திகளின் தன்மைக்குப் பொருத்தமான புதிய உற்பத்தி உறவுகளை உருவாக்குவதும்தான்.

இதிலிருந்து மாறுபட்ட சித்திரம் இன்னொன்றும் உள்ளது. உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கு முற்றிலும் பொருத்தமாக உற்பத்தி உறவுகள் இருந்து வருவதற்கு சோவியத் யூனியனிலுள்ள சோசலிஸ்ட் பொருளாதாரம் ஒரு உதாரணம். அங்கே உற்பத்திச் சக்திகள் சமுதாயத்தின் உடைமையாயிருப்பது உற்பத்தி முறையின் சமுதாயத் தன்மைக்கு முற்றிலும் பொருத்தமாயிருக்கிறது; அதனால்தான் அங்கு பொருளாதார நெருக்கடிகளையும், உற்பத்திச் சக்திகளை அழிப்பதையும், யாரும் கண்டதில்லை.

ஆகவே, உற்பத்தி முறையில் உற்பத்திச் சக்திகள்தாம் மற்றெல்லாவற்றையும்விட மிகவும் நிலையற்ற, புரட்சிகரமான அம்சம் என்பது மட்டுமல்ல - அவைதாம் (உற்பத்திச் சக்திகள்) உற்பத்தியின் வளர்ச்சியையே நிர்ணயிக்கும்படியான அம்சமாகவும் விளங்குகின்றன.

உற்பத்திச் சக்திகள் எப்படி இருக்கின்றனவோ, அப்படித்தான் உற்பத்தி உறவுகளும் அமையும். எந்த உற்பத்திக்கருவிகளைக் கொண்டு மனிதர்கள் தங்களுக்குத் தேவையான பௌதீக செல்வங்களை உற்பத்தி செய்து கொள்கின்றனர் என்கிற கேள்விக்குப் பதிலளிப்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலையே. மற்றபடி, உற்பத்திக் கருவிகள் (அதாவது, நிலம், காடுகள், நீர் நிலைகள், உலோகத் தாதுப் பொருட்கள், கச்சாப் பொருட்கள், உற்பத்திக் கருவிகள்.., உற்பத்தி நடக்கும் தொழிற்கூடங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், தபால்தந்தி சாதனங்கள் முதலியன) யாருக்குச் சொந்தமாயுள்ளன? - என்கிற கேள்விக்குப் பதில் தருவது, உற்பத்தி உறவுகளின் நிலைதான். உற்பத்திச் சாதனங்களுக்கு எஜமானன் யார்? - சமூகம் முழுவதுமா? - அன்றி, பிற மனிதர்களையும், மனிதக் கூட்டங்களையும், வர்க்கங்களையும் சுரண்டுவதற்காக உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தும் தனிப்பட்ட மனிதர்களா, தனிப்பட்ட கூட்டமா, தனிப்பட்டவர்களா? யார் எஜமானன்? என்கிற கேள்விக்குப் பதில் தருவது, உற்பத்தி உறவுகளின் நிலைதான்.

பண்டைக் காலத்திலிருந்து இன்றைய நாள்வரை உற்பத்திச் சக்திகள் வளர்ந்து வந்துள்ளதின் ஒரு சரியான சித்திரம் இதோ பாருங்கள்; ஆரம்பத்தில் ஒழுங்காகச் செதுக்கப்படாத கல் ஆயுதங்கள்; பிறகு, வில்லும், அம்புகளும் வந்தன; அவற்றைத் தொடர்ந்து, வேட்டையாடிப் பிழைத்து வந்த வாழ்விலிருந்து மாறி மிருகங்களை வளர்த்தல், ஆதிகால முறையிலமைந்த மேய்ச்சல் நடந்தது; அப்புறம் கல் ஆயுதங்களிலிருந்து உலோக ஆயுதங்களுக்கு (இரும்புக் கோடாரி, இரும்புக் கொழு பொருத்திய மரத்தினாலான கலப்பை முதலியன) மாறிய நிலை அந்த நிலைக்குப் பொருத்தமாக அப்புறம் தாதுப் பொருட்களை நன்கு பயன் படுத்துவதற்காக உலோக ஆயுதங்களை மேலும் மேம்படுத்தியது.

கொல்லனின் துருத்தி உபயோகத்திற்கு வந்தது; மண்பாண்டத் தொழில் ஆரம்பமாகியது; அவற்றிற்குப் பொருத்தமாகக் கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டு விவசாயத்திலிருந்து கைத்தொழில் வேறாகப் பிரிந்தது, ஒரு சுயேச்சையான கைத் தொழில் முறை வளர்ந்தது; அதையும் தொடர்ந்து பட்டறைத் தொழில் வளர்ந்தது; அப்புறம் கைத்தொழில் ஆயுதங்களைத் தாண்டி யந்திரங்களுக்கு மாறிய நிலை கைத்தொழில் முறையும், பட்டறைத் தொழில்முறையும் மாறி இயந்திரத்தொழில் உருவெடுத்தது. அதற்குப் பிறகு, இயந்திர உற்பத்தி முறைக்குமாறி, நவீன காலத்திய பெருமளவு இயந்திரசாதனத் தொழில்முறை பிறந்தது. மனித சமுதாய சரித்திரத்தின் போக்கில் சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகள் வளர்ந்ததின் சித்திரம் இதுவே. இந்தச் சித்திரம் ஒரு பொதுப்படையான, அரை குறையான சித்திரமே, இந்த உற்பத்தி சாதனங்களை வளர்த்து மேம்படுத்தியது யார்? இந்த உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள்தான். மனிதர்களுக்கு அப்பாற்பட்டு தானாக அவை வளர்ந்துவிடவில்லை, மேம்பாடு அடையவில்லை என்பதை இந்தச் சித்திரத்திலிருந்து தெளிவாக அறியலாம். எனவே, உற்பத்திச் சாதனங்களின் மாறுதலையும் வளர்ச்சியையும் தொடர்ந்து மனிதனும், உற்பத்தி சக்திகளின் மிக முக்கியமான அம்சமாகிய மனிதனும் - மாறினான்; வளர்ச்சி பெற்றான். அவனுடைய உற்பத்தித் தொழில் அனுபவம் மாறியது; வளர்ந்தது; அவனுடைய வேலைத்திறன் மாறியது, வளர்ந்தது; உற்பத்திக் கருவிகளை உபயோகிக்கும் அவனுடைய திறமையும் மாறியது, வளர்ந்தது.

சரித்திரப் போக்கில் உற்பத்திச் சக்திகளில் ஏற்பட்ட மாறுதலுக்கும் வளர்ச்சிக்கும் பொருத்தமாகவே மனிதர்களின் உற்பத்தி உறவுகளும் - பொருளாதார உறவுகளும் - மாறின, வளர்ந்தன.

முக்கியமாக, ஐந்து வகைப்பட்ட உற்பத்தி உறவுகளை சரித்திரம் கண்டிருக்கிறது. அவையாவன: (1) ஆதிகால கம்யூனிஸ முறை, (2) அடிமைச் சமுதாய முறை, (3) நிலப்பிரபுத்துவ முறை, (4) முதலாளித்துவ முறை, (5) சோசலிஸ முறை. புராதன கம்யூனிஸ்ட் சமுதாய அமைப்பு முறையில் நிலவிய உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை எது? உற்பத்திச் சாதனங்கள் சமூகத்தின் பொதுவுடைமையாக இருந்ததே அந்த அடிப்படை. இது அந்தக் காலகட்டத்தில் உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கு மொத்தத்தில் பொருத்தமாகவே இருந்தது. கல் ஆயுதங்களும் அவற்றிற்குப் பிறகு வந்த வில்லும் அம்பும் இயற்கைச் சக்திகளையும், காட்டு மிருகங்களையும் எதிர்த்து மனிதன் ஒவ்வொருவனும் தன்னந்தனியே நின்று போராடுவதற்கு வாய்ப்பளிப்பனவாயிருக்கவில்லை. காட்டுக் கனிகளைச் சேகரிப்பதற்காகவும், மீன் பிடிப்பதற்காகவும் ஏதாவதொருவிதமான வீடு கட்டிக் கொள்வதற்காகவும் மனிதர்கள் ஒன்று கூடி பொதுவாகப் பாடுபடவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. பட்டினிக்கு இரையாகி சாகாமலிருக்க விரும்பிய மனிதனுக்கு - கொடிய மிருகங்களுக்கு இரையாகாமல் தப்பிக்க விரும்பிய மனிதனுக்கு - அல்லது அக்கம்பக்கத்து ஜனக்கூட்டங்களுக்கு இரையாகமலிருக்க விரும்பிய மனிதனுக்கு அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி நடத்திய போது உழைப்புதான் உற்பத்தி சாதனங்களையும், உற்பத்திப் பயனையும் பொதுவான உடைமையாக்கி அனுபவிப்பதில் கொண்டுபோய் விட்டது. இங்கே உற்பத்தி சாதனங்களின் தனியுடைமை என்கிற கருத்து இன்னும் எழவில்லை. உற்பத்திக் கருவியையும் அதே சமயத்தில் மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புச் சாதனங்களாகவும் ஒருங்கே அமைந்த ஒரு சில உற்பத்திக் கருவிகள் மட்டுமே தனிப்பட்ட மனிதனின் சொந்த உடமையாயிருந்தன. இங்கே சுரண்டல் கிடையாது; வர்க்கங்கள் கிடையாது.

அடிமைச் சமுதாய அமைப்பு முறையில் நிலவிய உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை எது? உற்பத்திச் சாதனங்கள் அடிமைகளின் எஜமானுக்குச் சொந்தம். உற்பத்தியிலீடுபடுகிற உழைப்பாளியாகிய அடிமையும் அவனுக்குத்தான் சொந்தம்; அந்த அடிமையை ஒரு மிருகம்போல பாவித்து எஜமானன் விற்கலாம், வாங்கலாம், அல்லது கொல்லலாம். இதுதான் அடிமைச் சமுதாய முறையில் நிலவிய உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை, அந்தக் காலத்திய உற்பத்தி சக்திகளின் நிலைக்கு மொத்தத்தில் பொருத்தமாகவே இந்த உற்பத்தி உறவுகள் இருந்தன. கல் ஆயுதங்களுக்குப் பதிலாக மனிதர்களின் வசம் உலோக ஆயுதங்கள் இருந்தன மேய்ச்சலையோ, விவசாயத்தையோ செய்தறியாத வேடனின் இழிந்த, புராதன காலத்திய வேளாண்மை முறைக்குப் பதிலாக இப்பொழுது மேய்ச்சலும் உழுதலும், கைத்தொழிலும், இந்த உற்பத்தித் துறைகளிடையே வேலைப் பிரிவினையும் உதிக்கின்றன.

மனிதர்களிடையேயும், சமூகங்களிடையேயும், பண்டங்களின் பரிவர்த்தனை சாத்தியப்படும் நிலை தோன்றுகிறது ஒரு சிலர் கையில் செல்வம் குவிவது சாத்தியமாகும் நிலையும் தோன்றுகிறது. ஒரு சிறுபான்மைக் கூட்டத்தின் கையில் உற்பத்திச் சாதனங்கள் நடைமுறையில் குவியும் நிலை தோன்றுகிறது. பெரும்பான்மையான மக்களை ஒரு சிறுபான்மைக் கூட்டம் அடக்கவும், அந்த பெரும்பான்மையான மக்கள் அடிமையாக மாற்றப்படுவதற்கும் சாத்தியமான நிலை தோன்றுகிறது. முன்பு பார்த்த மாதிரி உற்பத்தித் துறையில் சமூக அங்கத்தினர்கள் அனைவரும் ஈடுபட்ட ஒரு பொது உழைப்பை, சுயேச்சையான உழைப்பை இங்கே இனிமேல் பார்ப்பதற்கில்லை. இங்கே எதைப் பார்க்கிறோம்? அடிமைகளை நிர்பந்தித்து வாங்குகிற நிர்பந்த உழைப்புத்தான் இங்கு நிலவுகிறது. உழைக்காத எஜமானர்கள் அடிமைகளைச் சுரண்டுகிறார்கள். எனவே, இங்கு உற்பத்திச் சாதனங்களும், உற்பத்தியின் பலனும் பொதுவுடைமையாயில்லை. அது விலக்கப்பட்டு அதன் இடத்தில் தனி உடைமை அமர்த்தப்பட்டு விட்டது. முக்கியமான முதன்மையான சொத்துடைமைக்காரனாக இங்கே அடிமைச் சொந்தக்காரன் காட்சியளிக்கிறான்.

ஏழை - பணக்காரன், சுரண்டுபவன் - சுரண்டப்படுவன், உரிமைகள் அத்தனையும் படைத்த மனிதர்கள் -உரிமைகள் எதுவும் இல்லாத மனிதர்கள் - அவர்களிடையே நடக்கிற உக்கிரமான வர்க்கப்போர் - இதுதான் அடிமைச் சமுதாய முறையின் சித்திரம்.

நிலப்பிரபுத்துவ முறையில் நிலவும் உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை எது? உற்பத்திச் சாதனங்கள் நிலப்பிரபுவுக்குச் சொந்தம்; ஆனால், உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளியான பண்ணையடிமையை முன்போல் கொல்ல முடியாது. ஆனால் அவனை விற்கலாம்; அல்லது வாங்கலாம். இதுதான் இந்தச் சமுதாயத்தில் உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை, நிலப்பிரபுத்துவ உடைமைக்குப் பக்கத்திலேயே தனது உற்பத்திக் கருவிகளை தனது உடைமையாகக் கொண்டு, தனது சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்டு சொந்தத்திற்குத் தொழில் செய்யும் விவசாயி, கைத் தொழில்காரன் ஆகியோரின் தனியுடைமையும் இருக்கிறது. அந்தக் காலத்திய உற்பத்திச் சக்திகளின் நிலைக்கு மொத்தத்தில் பொருத்தமாகவே அந்த உற்பத்தி உறவுகளும் உள்ளன. இரும்பைக் காய்ச்சி உருக்குவதிலும் பயன்படுத்துவதிலும் மேலும் தேர்ச்சியடைந்தது; இரும்புக் கலப்பையும் தறியும் பரவலாக உபயோகத்திற்கு வந்தது; விவசாயமும், தோட்ட வேலையும், திராட்சை வளர்ப்பு வேலையும், பால் பண்ணை வேலையும், மேலும் வளர்ச்சியடைந்தன; கைத்தொழில் களங்கள் ஒருபுறமிருக்க இன்னொரு புறத்தில் பட்டறைகள் உருவெடுத்தன - இவைதான் அக்காலத்திய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலையைக் காட்டும் பிரதான குணாம்சங்கள்.

உறபத்தித் துறையில் ஏதாவது ஒருவகையில் சுயமுயற்சியைக் காட்டும்படியும், வேலையை மேற்கொள்ளும்படியும், வேலையில் அக்கறை செலுத்தும்படியும், உழைப்பாளியை இந்தப் புதிய உற்பத்திச் சக்திகள் கோருகின்றன. எனவே, அடிமையை நிலப்பிரபு கைவிடுகிறான். ஏனெனில் அடிமையாயிருக்கும் உழைப்பாளிக்கு வேலையில் அக்கறை கிடையாது. அவனுக்குச் சுயமுயற்சி என்பது அறவே கிடையாது. அதனால் அவனைக் கைவிட்டு நிலப்பிரபு பண்ணையடிமையுடன் உறவு வைத்துக் கொள்ளப் பிரியப்படுகிறான். ஏனெனில், பண்ணையடிமைக்குச் சொந்த வேளாண்மையுண்டு, சொந்தமான உற்பத்திக் கருவிகள் உண்டு, நிலத்தைப் பயிர் செய்யவும் சாகுபடியின் ஒரு பகுதியை தானியமாக நிலப்பிரபுகளுக்குச் செலுத்தவும் அவசியமாகிய வேலையைச் செய்வதில் அவனுக்கு கொஞ்சம் அக்கறையும் உண்டு. இங்கே தனிவுடைமை மேலும் வளர்ச்சியடைகிறது. அடிமைச் சமுதாய முறையிலிருந்த சுரண்டலின் கொடுமை அநேகமாக அப்படியே இருக்கிறது - சுரண்டலின் கொடுமை குறைந்திருப்பது ரொம்பவும் சொற்பம். சுரண்டுபவனுக்கும், சுரண்டப்படுபவனுக்கும் இடையில் நடக்கும் வர்க்கப்போர், இந்த நிலப்பிரபுத்துவ சமுதாய முறையின் பிரதான குணாம்சமாக விளங்குகிறது.

முதலாளித்துவ சமுதாய முறையில் உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை எது? உற்பத்தி சாதனங்கள் முதலாளிக்குச் சொந்தம்; ஆனால், உற்பத்தியில் ஈடுபடுகிற தொழிலாளிக்கு அவையெதுவும் சொந்தமில்லை. அவன்தான் கூலிக்கு உழைப்பவன். தனிப்பட்ட முறையில் அவன் சுதந்திரமானவன்தான். எனவே, முதலாளி அவனை கொல்லவும் முடியாது; விற்கவும் முடியாது. ஆனால் அவனிடம் உற்பத்திக் கருவிகள் விட்டுவைக்கப்படவில்லை. எனவே பசியால் சாகாமலிருக்க வேண்டுமானால் அவன் உழைக்கும் சக்தியை முதலாளிக்கு விற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சுரண்டல் நுகத்தடியைப் பூட்டிக் கொண்டு சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. உற்பத்திச் சாதனங்களின் மீதுள்ள இந்த முதலாளித்துவ தனியுடைமை ஒரு புறமிருக்க அதற்குப் பக்கத்தில் ஆரம்பத்தில் உற்பத்திச் சாதனங்களை தனியுடைமையாகக் கொண்ட விவசாயிகளையும் கைத்தொழில் புரிபவர்களையும் பரந்து அளவில் காணலாம். அந்த விவசாயிகளும், கைத்தொழில்காரர்களும் இனிமேல் பண்ணையடிமைகளாக இல்லை. அவர்களுடைய தனிச் சொத்து சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதுவரை இருந்து வந்த கைத்தொழில் நிலையங்களும், பட்டரைகளும் போய், அங்கே இயந்திரங்களைப் பெற்றுள்ள பிரம்மாண்டமான மில்களும் தொழிற்சாலைகளும் காட்சியளிக்கின்றன. விவசாயியின் ஆதிகால உழுபடைகளைக் கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலப்பிரபுத்துவப் பண்ணைகள் இருந்த இடத்தில் இப்போது பெரிய பெரிய முதலாளித்துவ விவசாயப் பண்ணைகள் விவசாய இயந்திரங்களைக் கொண்டு விஞ்ஞான முறைப்படி நடத்தப்படும் காட்சியைக் காண்கிறோம்.

இந்தப் புதிய உற்பத்திச் சக்திகள் என்ன செய்கின்றன? உற்பத்தியில் ஈடுபடுகிற தொழிலாளிகள், முன்பு மிதிப்பட்டுக் கிடந்த அறிவிலிகளாயிருந்த, பண்ணையடிமைகளைவிட நன்கு கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் என்றும், இயந்திரங்களின் நுணுக்கத்தை அறிந்து அவற்றை சரியாக உபயோகிக்கத் தெரிந்தவர்களாயிருக்க வேண்டுமென்றும் இந்தப் புதிய உற்பத்திச் சக்திகள் கோருகின்றன. எனவே, கூலித் தொழிலாளியுடன் உறவு வைத்துக்கொள்ள முதலாளி விரும்புகிறான். ஏனெனில், அவர்கள் பண்ணையடிமைத் தனத்திலிருந்து விடுபட்டவர்கள்; மேலும் இயந்திரங்களை ஒழுங்காக ஓட்டுமளவுக்குத் திறமைபெற்ற படிப்பாளிகளாகவும் உள்ளவர்கள்.

ஆனால், உற்பத்திச் சக்திகளை பிரம்மாண்டமான அளவுக்கு வளர்த்துவிட்டு பின்னர் முதலாளித்துவம் முரண்பாடுகளில் சிக்கிக்கொண்டு விட்டது. அந்த முரண்பாடுகளை அதனால் களைந்தெறிய  முடியவில்லை.  பண்டங்களை  மேலும் மேலும்  அதிகமாக  உற்பத்தி  செய்துகொண்டே  போய் விலைவாசிகளைக் குறைப்பதின் காரணமாக, முதலாளித்துவம் போட்டியைக் கடுமையாக்குகிறது. சிறிய, நடுத்தர தனிச் சொத்துரிமையாளர்களின் பெரும் பகுதியை நாசம் செய்கிறது. அவர்களை தொழிலாளர்களாக்குகிறது. அதன் விளைவாக, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விற்பது முடியாத காரியம் என்கிற நிலைமை ஏற்படுகிறது. இன்னொரு பக்கத்தில் உற்பத்தியை அதிகரித்து, மிகப் பெரிய மில்களிலும் லட்சக்கணக்கான தொழிலாளிகளை ஒருங்கே குவித்து உற்பத்திக்கு ஒரு சமுதாயத் தன்மையை முதலாளித்துவம் அளிக்கிறது; அதன் வழியாக தனது அடித்தளத்தைத் தானே இடித்து பலவீனப்படுத்திக் கொள்கிறது. எப்படி என்று கேட்டால், உற்பத்தியின் சமுதாயத் தன்மையானது உற்பத்திச் சாதனங்களைச் சமுதாய உடைமையாக்குக என்கிற கோரிக்கையை முழங்குகிறது. ஆனால் உற்பத்திச் சாதனங்களோ முதலாளித்துவ தனியுடைமையாகவே கிடக்கின்றன. அது உற்பத்தி முறையின் சமுதாயத் தன்மைக்கு விரோதமானது, பொருத்தமற்றது.

உற்பத்திச் சக்திகளின் சமுதாயத் தன்மைக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே எழுந்த இந்த சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகள் மீண்டும் அவ்வப்பொழுது நிகழும் படியான அபரிமித உற்பத்தி நெருக்கடிகளிலே வெளிப்படுகின்றன. அப்படி நிகழும் போதெல்லாம் தாங்களே படைத்த பொதுஜன சீரழிவின் காரணமாக, தங்களுடைய பொருட்கள் வாங்குவாரற்று கிடப்பதைப் பார்க்கும் முதலாளிகள் பொருட்களை எரித்து நாசம் செய்யும்படியும், செய்பொருட்களை அழிக்கும் படியும், உற்பத்தியை நிறுத்தி வைக்கும்படியும், உற்பத்திச் சக்திகளை அழிக்கும்படியும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும், பட்டினிக் கொடுமையிலும் நிர்ப்பந்தமாக - போதிய பண்டங்கள் இல்லை என்ற காரணத்திற்காக அல்ல - பண்டங்கள் அபரிமிதமாக உற்பத்தி செய்யப்பட்டு விட்டன என்ற காரணத்திற்காக - கோடிக் கணக்கான மக்கள் வீழ்த்தப்பட்டுத் துடித்து நிற்கின்றனர்.

இதற்கு என்ன அர்த்தம்? சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளின் நிலைக்குப் பொருத்தமாக இனிமேல் இந்த முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் இல்லை - அவற்றோடு இந்த உற்பத்தி உறவுகள் சமரசத்திற்கிடமற்ற முறையில் விரோதித்துக் கொண்டு முரண்பட்டுவிட்டன என்பதே இதற்கு அர்த்தம். இதற்கு அர்த்தம் என்ன? இதற்கு அர்த்தம்: முதலாளித்துவம் கர்ப்பம் தரித்துள்ளது; புரட்சி என்கிற கரு வளர்ந்து கொண்டிருக்கிறது; அந்தப் புரட்சியின் பிறவிப்பணி உற்பத்திச் சாதனங்களின் மீதுள்ள இன்றைய முதலாளித்துவ தனியுடைமையை அகற்றி அதன் இடத்தில் சோசலிச பொதுவுடமையை ஏற்றிவைப்பதுதான் என்பதே.

இதற்கு அர்த்தம் என்ன? இதற்கு அர்த்தம்; சுரண்டுபவனுக்கும், சுரண்டப்படுபவனுக்கும் இடையே நடக்கிற மிகக் கடுமையான வர்க்கப் போர்தான் முதலாளித்துவச் சமுதாய முறையின் பிரதான குணாம்சம் என்பதே.

சோசலிச சமுதாய முறையில் உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை என்ன? சோசலிச சமுதாயமுறை இதுவரை சோவியத் யூனியனில் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. உற்பத்திச் சாதனங்கள் சமுதாய உடைமையாக இருப்பதே அதன் அடிப்படை. இனிமேல் இங்கே சுரண்டுபவனும் இல்லை. சுரண்டப்படுபவனும் இல்லை. உற்பத்தி செய்யப்பட்ட, பொருட்கள் உழைப்புக்குத் தக்கவாறு வினியோகிக்கப்படுகின்றன. அந்த வினியோகத்திற்கு அடிப்படையாகவுள்ள கோட்பாடு: "யார் வேலை செய்யவில்லையோ, அவனுக்குச் சோறு கிடையாது" என்பதுதான். இங்கே உற்பத்தியில் மக்களிடையே நிலவும் உறவுகள் தோழமையுணர்ச்சி நிரம்பிய கூட்டுறவு, சுரண்டலிருந்து விடுதலை பெற்ற தொழிலாளிகளின் பரஸ்பர சோசலிஸ்ட் ஒத்திசைவு என்கிற அம்சங்களைப் பெற்றுள்ளன. இங்கே உற்பத்திச் சக்திகளின் நிலைக்கு முற்றிலும் பொருத்தமாக உற்பத்தி உறவுகள் உள்ளன. ஏனெனில் உற்பத்தி முறையின் சமூகத் தன்மையைப் புலப்படுத்தியபடி உற்பத்திச் சாதனங்களின் மீதுள்ள சமுதாயப் பொதுவுடைமை இருக்கிறது.

இதன் காரணமாகத்தான், சோவியத் யூனியனில் சோசலிஸ்ட் உற்பத்தியில் அவ்வப்பொழுது அதிக உற்பத்தி நெருக்கடிகளையும், அவற்றைப் பின் தொடர்ந்து வரும் மதியீனமான நிகழ்ச்சிகளையும் காணமுடியாது. இதன் காரணமாகத்தான் இங்கே உற்பத்திச் சக்திகள் இன்னும் அதிக வேகத்தில் வளர்கின்றன. ஏனென்றால், அவற்றிற்கு முற்றிலும் பொருத்தமாயுள்ள உற்பத்தி உறவுகள் இவ்வாறு வளர்வதற்கு முழுச் சந்தர்ப்பம் அளிக்கிறது. மனித சரித்திரத்தின் காலப் போக்கில் உற்பத்தி உறவுகள் வளர்ச்சியடைந்ததின் சித்திரம் இதுவே.

உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை, குறிப்பாக உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியைச் சார்ந்திருப்பதும் இப்படித்தான். இவ்வாறு சார்ந்திருப்பதின் காரணமாகத்தான் உற்பத்திச் சக்திகளில் ஏற்படும் மாறுதல்களும், வளர்ச்சியும் சிறிது காலத்தில் அதற்கு ஏற்ற மாதிரி உற்பத்தி உறவுகள் மாறுவதிலும், வளர்ச்சி பெறுவதிலும் கொண்டு போய் விடுகின்றன.

மார்க்ஸ் கூறுகிறார்:

"உற்பத்திக் கருவிகளை உபயோகிப்பது, உண்டாக்குவது என்பது சில இனங்களைச் சேர்ந்த மிருகங்களிடையே கரு வடிவத்தில் இருந்து வருகிறது என்றாலும்கூட, மனிதனின் உழைப்பு முறையில்தான் அது ஒரு விசேஷமான குணாம்சமாகத் திகழ்கிறது. அதனால்தான் மனிதனை, "கருவிகளைச் சிருஷ்டிக்கும் மிருகம்" என்று பிராங்லின் வர்ணித்தார். என்றோ மடிந்து மறைந்துபோன மிருக இனங்களை இன்று அடையாளம் கண்டு பிடிப்பதற்கு பூமியில் புதையுண்டு போன எலும்புகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மறைந்துபோன சமுதாயப் பொருளாதார படிவங்களை ஆராய்ந்தறிவதற்கு மறைந்தொழிந்த உற்பத்திக் கருவிகளின் மிச்ச சொச்சங்களும் முக்கியமாயுள்ளன. வெவ்வேறு பொருளாதார சகாப்தங்களை இனம்பிரித்து அடையாளம் கண்டு பிடிப்பதற்கு உற்பத்தி செய்த பொருட்கள் பயன்படவில்லை. என்னென்ன பொருட்களைச் செய்தார்கள் என்கிற கேள்வியும், ஆராய்ச்சியும் பயனற்றது. பொருட்களை எப்படிச் செய்தார்கள்? எந்தெந்த உற்பத்திக் கருவிகளைக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்தார்கள் என்கிற கேள்வியும், ஆராய்ச்சியும்தான் அவற்றை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு உதவுகின்றது. மனித உழைப்பு எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்கு உற்பத்திக் கருவிகள் ஒரு அளவு கோலாக விளங்குகிறது என்பது மட்டுமல்ல; எப்படிப்பட்ட சமுதாய சூழ்நிலைமைகளில் அந்த மனித உழைப்பு நடந்துக்கொண்டிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிற ஒரு சாதனமாக உற்பத்திக் கருவிகள் உள்ளன." (கார்ல் மார்க்ஸ் - மூலதனம் தொகுதி 1, பக்கம் 109)

மார்க்ஸ் மேலும் கூறுவதாவது:

"உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளுடன் இறுகப்பிணைந்து கிடக்கின்றன. புதிய உற்பத்திச் சக்திகளை மனிதர்கள் பெறும்பொழுது, தங்களுடைய உற்பத்தி முறையை மாற்றுகிறார்கள். அவ்வாறு உற்பத்தி முறையை மாற்றும் காலத்தில் - தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுகிற காலத்தில் - தங்களுடைய சமூக உறவுகள் முழுவதையும் மாற்றுகிறார்கள். கையினால் கட்டப்பட்ட மில் நமக்கு நிலப்பிரபுவைக் கொண்ட ஒரு சமுதாயத்தைக் கொடுக்கிறது: நீராவியினால் கட்டப்பட்ட மில் நமக்கு யந்திர சகாப்த முதலாளியைக் கொண்ட ஒரு சகாப்தத்தை கொடுக்கிறது." (கார்ல் மார்க்ஸ் - மெய்யறிவின் வறுமை, பக்கம் 91) 

"உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் ஒரு தொடர்ச்சியான இயக்கம் இருக்கிறது; உற்பத்தி உறவுகளின் அறிவிலும் ஒரு தொடர்ச்சியான இயக்கம் இருக்கிறது; கருத்துகள் உருப்பெற்று எழுவதிலும் ஒரு தொடர்ச்சியான இயக்கம் இருக்கிறது. மாற்ற முடியாத தன்மையோடு இருப்பது இயக்கம் என்கிற விஷயம் ஒன்றே ஒன்றுதான்." (மேலே குறிப்பிட்ட நூலில் 93 பக்கம்)

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் வரையறுத்துக் கூறிய வரலாற்று பொருள்முதல்வாதத்தைப் பற்றி பேசுங்காலத்தில் ஏங்கல்ஸ் சொல்கிறார்:

"பொருளாதார உற்பத்தி அதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சரித்திர சகாப்தத்திலும் அவசியமாக எழுகிற சமுதாய அமைப்புமுறை - இவ்விரண்டுமே அந்தந்த சகாப்தத்தில் அரசியல் சரித்திரத்துக்கும், சிந்தனையின் சரித்திரத்துக்கும் அடித்தளமாக அமைந்துள்ளன...... எனவே (நிலத்தின் மீது இருந்த புராதன கம்யூனிஸ பொதுவுடமை உறவுகள் அழிந்து மறைந்த காலந்தொட்டு) சரித்திரம் முழுவதுமே வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமாக - சுரண்டுபவனுக்கும் சுரண்டப் படுபவனுக்கும் இடையில் நடக்கிற போராட்டங்களாக - சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும், அடக்கியாண்ட வர்க்கங்களுக்கும் இடையே நடக்கிற போராட்டங்களாக - இருந்து வந்திருக்கிறது. ......ஆனால், இந்தப் போராட்டம் இப்பொழுது ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த கட்டத்தில் சுரண்டப்பட்டு அடக்கப்பட்டு வருகிற வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கம் தன்னைச் சுரண்டி அடக்கி வருகிற வர்க்கமாகிய முதலாளி வர்க்கத்திடமிருந்து விடுதலை பெறவேண்டுமென்றால், அதே பொழுது சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவித்தாக வேண்டும்." (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, ஜெர்மன் பதிப்பிற்கான முன்னுரை) 

ஈ. உற்பத்தியின் மூன்றாவது குணாம்சம் எது? புதிய உற்பத்திச் சக்திகளும் சரி, அவற்றிற்குகந்த உற்பத்தி உறவுகளும் சரி, பழைய சமுதாய அமைப்பு முறைக்கு அப்பால் நின்றபடி, அந்த அமைப்புமுறை அழிந்துபோன பிறகு, தனியே முளைத்தெழுவதில்லை. அதற்குப் பதிலாக, அந்தப் பழைய சமுதாய அமைப்பு முறைக்குள்ளேயேதான் அவை முளைக்கின்றன. மனிதன் ஆறஅமரச் சிந்தித்து உணர்வுப்பூர்வமாக வேலைசெய்வதின் விளைவாக அவை எழுவதுமில்லை. போகிற போக்கிலே, உணர்வற்ற வகையிலே, மனிதச்சித்தத்திற்கு அப்பாற்பட்டு, அவை உதிக்கின்றன. போகிற போக்கிலே, மனித சித்தத்திற்கு அப்பாற்பட்டு அவை நிகழ்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவதாக: இந்த உற்பத்திமுறை வேண்டுமா அல்லது அந்த உற்பத்திமுறை வேண்டுமா என்று தேர்ந்தெடுத்துக்கொள்ள மனிதர்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பது ஒரு காரணம். ஏனென்றால், ஒவ்வொரு புதிய தலைமுறையும் பிறந்து வாழத் தொடங்கும்போது தனக்கு முன்சென்ற தலைமுறைகளின் நடவடிக்கைகளின் விளைவாக ஏற்கனவே அமலிலிருக்கும்படியான உற்பத்திச் சக்திகளையும், உற்பத்தி உறவுகளையும் அது காண்கிறது. எனவே, உற்பத்தித் துறையில் ஏற்கனவே தயார் செய்யப் பட்டுள்ள எல்லாவற்றையும் அந்தத் தலைமுறை ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு ஏற்ற வகையில் தன்னைச் சமாளித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் முதன்முதலில் ஏற்படுகிறது. அப்படிச் செய்தால்தான் பௌதீக ரீதியான செல்வங்களை அதனால் உற்பத்திசெய்ய இயலும்.

இரண்டாவதாக:  ஏதாவதொரு உற்பத்திக் கருவியை முக்கியமாகக் கருதுகிற முக்கியக்காலத்தில் - உற்பத்திச் சக்திகளின் ஏதாவதொரு அம்சத்தை முதன்மைப் படுத்துக்கிற காலத்தில் - அப்படி முக்கியப்படுத்துவதினால் சமுதாயத் துறையில் என்ன விளவுகள் உண்டாகும் என்று மனிதர்கள் அறிவதில்லை; புரிந்து கொள்வதுமில்லை, சிந்திக்கவும் காத்திருப்பதில்லை; தங்களுடைய அன்றாட நலன்களைப் பற்றித்தான் தங்களுடைய உழைப்பின் பளுவை எப்படி குறைப்பது என்பதைப் பற்றித்தான் - நமக்கு ஏதாவது நேரடியாக கைமேல் கிடைக்கக் கூடிய உருப்படியான அனுகூலங்களைப் பெறுவதைப் பற்றித்தான் அவர்களின் சிந்தனை உள்ளது.

புராதன கம்யூனிஸ சமுதாய முறையில் சில மனிதர்கள் கற்கருவிகளை உபயோகிப்பதிலிருந்து படிப்படியாக, இருட்டில் தடவிக்கொண்டு செல்வதுபோல, முன்னேறி இரும்புக் கருவிகளை உபயோகிக்கும் நிலைக்கு மாறிய காலத்தில் அந்தப் புதிய கருவிகள் சமுதாயத் துறையில் என்னென்ன விளவுகளுக்குக் கொண்டுபோய்விடும் என்று அவர்கள் அறிந்திருந்தார்களா, அல்லது சிந்திக்கத்தான் நிதானித்தனரா? இல்லை, உலோகக் கருவிகளுக்கு மாறிச் செல்வது உற்பத்தி முறையில் ஒரு புரட்சியைக்குறிக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை, புரிந்துக்கொள்ளவு மில்லை. அந்த மாறுதல் நீண்ட காலப்போக்கில் அடிமைச் சமுதாய அமைப்பு முறைக்குக் கொண்டுபோய்விடும் என்பதை அவர்கள் அறியவில்லை, புரிந்துகொள்ளவு மில்லை. அவர்கள் விரும்பியதெல்லாம் உழைப்பின் பளுவைக் குறைக்க வேண்டும். உருப்படியான கைமேல் கிடைக்ககூடிய உடனடியான அனுகூலங்கள் பெறவேண்டும் என்பதைத்தான், இந்த அன்றாட தனிமனித நலன் என்கிற குறுகிய வட்டத்திற்குள்ளேதான் அவர்களுடைய உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள் அடைந்துகிடந்தன.

நிலப்பிரபுத்துவ சமுதாய முறையின் காலகட்டத்தில் கில்டு தொழிற்சாலைகள் ஒருபுறமிக்க, இன்னொருபுறத்தில் இளம்பருவத்திலிருந்த ஐரோப்பிய முதலாளி வர்க்கம் பெரிய பெரிய பட்டறைகளை நிர்மாணித்து அவற்றின் வழியே சமுதாய உற்பத்திச் சக்திகளை முன்னேறச் செய்தார்களோ - அந்தச் சமயத்தில் இந்தப் புதிய முறை சமுதாயத்துறையில் என்னென்ன விளவுகளில் கொண்டு போய்விடும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை அதைப்பற்றிச் சிந்திக்கவுமில்லை. இந்த "அற்பமான" நூதன ஏற்பாடு சமுதாய சக்திகளை புதிய முறையில் அணிவகுத்து நிறுத்தும் என்றோ, அந்தப்புதிய அணிவகுப்பானது, தான் எந்த மன்னர்களின் தயவை மிகவும் மதித்து விரும்பினார்களோ அதே மன்னர்களின் அதிகாரத்துக்கும் - எந்த பிரபுத்துவ வம்சங்களின் அணிகளில் தமது தலைசிறந்த பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்று அடிக்கடி முயற்சித்தார்களோ அதே பிரபுத்துவ வம்சங்களுக்கும் - எதிராகக் கிளம்புகிற ஒரு புரட்சியில் போய் முடியும் என்றோ, அது (முதலாளிவர்க்கம்) அறியவுமில்லை புரிந்து கொள்ளவுமில்லை. அது விரும்பியதெல்லாம் பண்டங்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பதைத்தான் - ஆசியாவில் சந்தைகளிலும், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்காவின் சந்தைகளிலும், இன்னும் அதிகமாக பண்டங்களைக் குவிப்பதைத்தான் - இன்னும் அதிகமாக லாபம் சம்பாதிப்பதைத்தான் இந்த சர்வ சாதாரணமான காரிய லட்சியத்தின் குறுகிய வட்டத்துக்குள்ளேதான் - அதன் உணர்வு பூர்வமான நடவடிக்கைகள் இருந்தன.

ஜாராட்சியை அலுங்காமல், குலுங்காமல் வைத்து விட்டு நிலப்பிரபுக்களின் கொடுங்கோன்மையின் கீழ் விவசாயிகளையும் விட்டுவிட்டு, அந்நிய முதலாளிகளுடன் சேர்ந்து ருஷ்ய முதலாளிகள் நவீன காலத்திய பெரிய அளவு இயந்திரத் தொழிலை ருஷ்யாவில் மிகவும் சுறுசுறுப்புடன் நிறுவினார்களோ - அந்த நேரத்தில் உற்பத்திச் சக்திகள் இவ்வாறு விரிவாக வளர்ச்சி பெறுவது சமுதாயத் துறையில் என்னென்ன விளைவுகளை உண்டாகும் என்று அவர்கள் அறியவுமில்லை; அதைப் பற்றிச் சிந்திக்கவுமில்லை. சமுதாய உற்பத்திச் சக்திகளின் விரிவு ஒரு பிரம்மாண்டமான பாய்ச்சலைக் குறிக்கும்; இது சமுதாய சக்திகளை ஒரு புதிய முறையில் அணிவகுத்து நிறுத்தும்; அந்தப் புதிய அணிவகுப்பானது தொழிலாளி வர்க்கம் விவசாயிகளுடன் ஐக்கியம் ஏற்படுத்திக் கொள்ள உதவும், ஒரு வெற்றிகரமான சோசலிஸ்ட் புரட்சியை சாதிக்கவும் உதவும் என்றெல்லாம் அவர்கள் அறியவும் இல்லை, புரிந்து கொள்ளவுமில்லை. அவர்கள் விரும்பியதெல்லாம் இயந்திரத் தொழில் உற்பத்தியை அதன் எல்லையை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு விரிவுப்படுத்துவதைத்தான் - உள்நாட்டுச் சந்தையின் மீது ஆதிக்கம் பெறுவதைத்தான் - ஏகபோக முதலாளிகளாக ஆகவேண்டுமென்பதைத்தான் - நாட்டின் பொருளாதாரத்திலிருந்து சாத்தியமான அளவுக்கு லாபத்தைக் கசக்கிப் பிழிந்தெடுப்பதைத்தான். அவர்களுடைய சாமானியமான காரியார்த்தமான நலன்களுக்கப்பால் அவர்களுடைய உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

இதை அனுசரித்துத்தான் மார்க்ஸ் சொல்லுகிறார்:

"மனித வாழ்க்கையின் சமுதாய உற்பத்தியில் (அதாவது, மனிதனின் ஜீவியத்துக்கு அவசியமான பௌதீகச் செல்வங்களைப் படைக்கும் உற்பத்தியில் -ஸ்டாலின்) சில திட்டவட்டமான உறவுகளில் மனிதர்கள் சம்பந்தப்படுகிறார்கள். அந்த உறவுகள் அத்தியாவசியமானவை; அந்த உறவுகள் மனிதனுடைய சித்தத்துக்கும் - விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டவை. பௌதீக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்துக்கு பொருத்தமாக இந்த உற்பத்தி உறவுகள் அமைகின்றன." (கார்ல் மார்க்ஸ் - தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 300)

என்ற போதிலும், உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாறுதல்களும், பழைய உற்பத்தி உறவுகளை விட்டு புதிய உற்பத்தி உறவுகளுக்கு மாறுவதும், தடைப்படாமல் சாந்தமாக சண்டை சச்சரவுகளின்றி, எழுச்சிகளின்றி நிகழ்கின்றன என்று இதற்கு அர்த்தமல்ல. அதற்கு மாறாக, பழைய உற்பத்தி உறவுகளை புரட்சிகரமான முறையில் மாற்றிவிட்டு புதிய உற்பத்தி உறவுகளை அமைப்பதின் வழியேதான் இந்த மாறுதல் வழக்கமாய் நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும் உற்பத்தி உறவுகள் துறையில் ஏற்படும் மாறுதல்களும் போகிறபோக்கில் மனிதனின் சித்தத்திற்கு அப்பாற்பட்டு இயங்கியவாறு முன்செல்கின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டும் வரைக்கும்தான் அப்படி நடக்கிறது. புதிய உற்பத்திச் சக்திகள் பக்குவமடைந்த பிறகு ஏற்கனவே அமலிலிருக்கும் பழைய உற்பத்தி உறவுகளும் அதன் பாதுகாப்பாளர்களும் - ஆளும் வர்க்கங்களும் - 'வெல்ல முடியாத' இடையூறாகக் குறுக்கே வருகின்றனர். அப்பொழுது புதிய வர்க்கங்களின் உணர்வுப் பூர்வமான செயல்களைக் கொண்டுதான் - புதிய வர்க்கங்களின் பலவந்தமான நடவடிக்கைகளைக் கொண்டுதான் - புரட்சியைக் கொண்டுதான் அந்த இடையூறை அகற்ற முடியும். புதிய சமுதாயக் கருத்துகள், புதிய அரசியல் ஸ்தாபனங்கள்: ஒரு புதிய அரசியல் அதிகாரம் வகிக்கிற பிரமாண்டமான பாத்திரம் இங்குதான் வெட்ட வெளிச்சமாகத் தென்படுகின்றன. அவற்றின் பிறவிப்பணி பலாத்காரத்தைக் கொண்டு பழைய உற்பத்தி உறவுகளை ஒழித்துக் கட்டுவதுதான். புதிய உற்பத்திச் சக்திகளுக்கும், பழைய உற்பத்தி உறவுகளுக்கும் இடையே நடக்கிற சண்டையிலிருந்து - சமுதாயத்தின் புதிய பொருளாதாரக் கோரிக்கைகளிலிருந்து - புதிய சமுதாயக் கருத்துகள் பிறக்கின்றன. அந்தக் கருத்துகள் மக்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டி அணிசேர்க்கின்றன. ஒரு புதிய அரசியல் சேனையாக மக்கள் ஒரு புதிய புரட்சிகரமான அதிகாரத்தை சிருஷ்டிக்கின்றனர். பழைய உற்பத்தி உறவுகளின் அமைப்பு முறையை, பலாத்காரத்தைக் கொண்டு வீழ்த்தி புதிய உற்பத்தி உறவுகளின் அமைப்பு முறையை நிலையாக நிறுவுவதற்காக அந்த அதிகாரத்தை உபயோகிக்கின்றனர். போகிற போக்கிலே தன்னிச்சையாக நடைபெற்று வந்த வளர்ச்சி மாறி, அதனிடத்தில் மக்களின் உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள் பரிணமிக்கின்றன - அமைதியாக நடைபெற்ற வளர்ச்சி பலாத்காரமான எழுச்சியாகப் பரிணமிக்கிறது - படிப்படியாக நடைபெற்றுக் கொண்டிருந்த வளர்ச்சி புரட்சியாகப் பரிணமிக்கிறது.

மார்க்ஸ் சொல்கிறார்:

"முதலாளி வர்க்கத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் சண்டையிடும் காலத்தில், சூழ்நிலைமைகளின் நிர்பந்தத்தால், தன்னை ஒரு வர்க்கமாக ஸ்தாபன ரீதியாக அமைத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஒரு புரட்சியின் மூலமாக ஆளும் வர்க்கமாக தன்னை ஆக்கிக் கொள்கிறது. அந்த வழியில் பழைய உற்பத்தி நிலைமைகளை அது பலாத்காரத்தைக் கொண்டு துடைத்தெறிகிறது." (கார்ல் மார்க்ஸ் - தேர்வு நூல்கள், தொகுதி1, பக்கம் 131) 

மேலும் மார்க்ஸ் சொல்லுகிறார்:

"முதலாளி வர்க்கத்திடமிருந்து படிப்படியாக அனைத்து மூலதனத்தையும் பிடுங்கிக்கொள்வதற்காகவும் அரசின் கையில் - அதாவது ஆளும் வர்க்கமாகத் தன்னை ஆக்கிக் கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் கையில் - எல்லா உற்பத்திக் கருவிகளையும் குவித்து மத்தியப்படுத்துவதற்காகவும், எவ்வளவு துரிதமாக முடியுமோ அவ்வளவு துரிதமாக உற்பத்திச் சக்திகளைப் பெருக்கவும் - தொழிலாளி வர்க்கம் தனது அரசியல் மேலாதிக்கத்தை உபயோகப்படுத்தும்." (Ibid, பக்கம்.129)

"புதிய சமுதாயத்தை கர்ப்பத்தில் தரித்துள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்துக்கும் மருத்துவச்சியாயிருப்பது பலாத்காரமே." (கார்ல் மார்க்ஸ் - மூலதனம், தொகுதி 1, பக்கம் 776)

தனது மிகப் புகழ்பெற்ற "அரசியல் பொருளாதராத்தைப் பற்றிய விமர்சனம்" என்கிற நூலுக்கு கார்ல்மார்க்ஸ் 1859ம் ஆண்டில் அதில் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் பற்றி ஒரு வரையறுப்பை கொடுத்திருக்கிறார். இதோ அந்த வரையறுப்பு:

"தமது வாழ்க்கையில் சமூக உற்பத்தி நடத்துவதில் மனிதர்கள் திட்டவட்டமான உறவுகளில் சம்பந்தப்படுகின்றனர். இந்த உறவுகள் அத்தியாவசியமானவை; மனிதனுடைய சித்தத்துக்கு - விருப்பு வெறுப்புக்கு - அப்பாற்பட்டவை இந்த உறவுகள் இந்த உற்பத்தி உறவுகள் அவர்களுடைய பௌதீக உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்துக்கும் பொருத்தமாயுள்ளன. இந்த உற்பத்தி உறவுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு முழுமைதான், சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக அமைகிறது. அதுதான் உண்மையான அடிப்படை, அதன் மீதுதான் சட்டம், அரசியல் என்கிற கட்டுக் கோப்பு நிர்மாணிக்கப்பட்டு நிற்கிறது. அந்த அஸ்திவாரத்துக்குப் பொருத்தமாகத்தான் சமுதாய உணர்வின் திட்டவட்டமான வடிவங்கள் அமைகின்றன.

பௌதீக வாழ்வின் உற்பத்தி முறைதான் சமூக வாழ்க்கையின், அரசியல் வாழ்க்கையின், சிந்தனைப் போக்கின் ஓட்டத்தைப் பொதுவாக நிர்ணயிக்கிறது. மக்களின் நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல; அதற்கு மாறாக, அவர்களுடைய சமூக நிலைமைதான் மக்களின் உணர்வை நிர்ணயிக்கிறது, சமுதாயத்தின் பௌதீக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியவுடன், அவை அன்று உள்ள உற்பத்தி உறவுகளுடன் - அல்லது சட்டபூர்வமாக அதையே குறிப்பிடுவதென்றால் சொத்து உறவுகளுடன் - எந்த உற்பத்தி உறவுகளின் கட்டுகோப்புக்குள்ளேயே அதற்கு முன்பு இயங்கி வந்தனவோ, அந்த உற்பத்தி உறவுகளுடன் - மோதுதல் ஏற்படுகிறது. உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடைவதற்கு அனுகூலமாக அமைந்திருந்த அதே உற்பத்தி உறவுகளின் கட்டுகோப்புகள் இப்போது அந்த உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைத் தடைப்படுத்தும்படியான விலங்குகளாக மாறிவிடுகின்றன. அதற்குப் பிறகு தான் ஒரு சமுதாயப் புரட்சியின் யுகம் ஆரம்பிக்கிறது.

பொருளாதார அஸ்திவாரம் மாறுதல் அடைகிற பொழுது அதன் மீது எழுப்பப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டிடம் முழுவதும் அதிதுரிதமாக மாற்றப்படுகிறது. இந்த மாறுதல்களைக் கவனிக்கும் காலத்தில் இரண்டையும் - அதாவது, ஒரு புறத்தில் இயற்கை விஞ்ஞானத்தை எவ்வளவு கணக்காக வரையறுக்க முடிகிறதோ, அவ்வளவு கணக்காக வரையறுக்கப்படக் கூடிய உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பௌதீக மாறுதலையும் - இன்னொரு புறத்தில் சட்டம், அரசியல், மதம், கலாச்சாரம், ஞானம், தத்துவம் முதலான, சுருக்கமாகச் சொன்னால் சித்தாந்த ரீதியான வடிவங்களையும் - எப்பொழுதும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இந்தச் சித்தாந்த வடிவங்களுக்குள்ளேதான் இந்த மோதுதல் பற்றிய உணர்வு மனிதர்களுக்கு ஏற்பட்டு ஒரு முடிவைக் காணும்வரை சண்டை செய்கிறார்கள்.

ஒரு மனிதன் தன்னைப்பற்றி என்னென்னவெல்லாமோ நினைத்துக் கொண்டிருக்கலாம்: ஆனால் அவனுடைய நினைப்புகள் அவனைப்பற்றி நமது அபிப்பிராயத்துக்கு அடிப்படையாக இருப்பதில்லையல்லவா? இதே மாதிரி இந்த மாறுதலின் காலப்பகுதியை பற்றி அதனுடைய சுய உணர்வைக் கொண்டு நாம் தீர்ப்புக்கூற முடியாது. அதற்கு மாறாக, பௌதீக வாழ்விலுள்ள முரண்பாடுகளைக் கொண்டுதான் சமுதாய உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே நிகழ்ந்துவருகிற சண்டையைக் கொண்டுதான், அந்த உணர்வையே நாம் விளக்க வேண்டும்.

எந்தச் சமுதாய அமைப்பை எடுத்துக் கொண்டுபார்த்தாலும் சரி - எப்பொழுதுமே ஒரு சமுதாயத்திற்குள்ளே வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புகளுள்ள அத்தனை உற்பத்திச் சக்திகளும் வளர்ச்சியடைவதற்கு முன்னால் அந்தச் சமுதாயத்தின் கர்ப்பப் பைக்குள்ளேயே புதிய, உயர்தரமான, உற்பத்தி உறவுகள் வளர்வதற்கு வேண்டிய பௌதீக நிலைமைகள் பக்குவமடைவதற்கு முன்னால், அப்படிப்பட்ட உற்பத்தி உறவுகள் என்றைக்குமே தலைதூக்குவதுமில்லை. ஆகவேதான், தன்னால் எப்படிப்பட்ட கடமைகளை நிறைவேற்றமுடியுமோ அப்படிப்பட்ட கடமைகளைத் தான் எப்போதுமே மனித குலம் சாதனைக்கு எடுத்துக்கொள்கிறது. ஏனென்று கேட்டால், விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டினால், நாம் எப்பொழுதுமே ஒன்றைக் காணமுடியும்.

அதாவது, எப்பொழுது ஒரு கடமையை நிறைவேற்றுவதற்கு அத்தியாவசியமான  பௌதீக  நிலைமைகள்  ஏற்கனவே இருக்கின்றனவோ - அல்லது குறைந்து பட்சம் உருப்பெற்றாவது வந்து கொண்டிருக்கின்றனவோ அப்பொழுதுதான் அந்தக் கடமையும் எழுகின்றது - என்பதை காணலாம். (கார்ல் மார்க்ஸ் - தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 300-301) 

சமூக வாழ்வுக்கும், சமுதாய சரித்திரத்துக்கும் நடைமுறைப் பொருத்தமாக அமைந்துள்ள மார்க்சிய பொருள் முதல்வாதம் என்பது இதுவே.

இயக்கவியல்   பொருள்முதல்வாதத்தின்   பிரதான குணாம்சங்களும், வரலாற்று பொருள் முதல்வாதத்தின் பிரதான குணாம்சங்களும் இவையே.

கட்சியின் நன்மைக்காக எத்தகைய தத்துவப்பொக்கிஷத்தை லெனின் காப்பாற்றினார் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்கும். "திருத்தல்வாதி"களுடைய கட்சி துரோகிகளுடைய - தாக்குதல்களிலிருந்து எத்தகைய செல்வத்தை லெனின் பாதுகாத்தார் என்பது விளங்கும். "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" என்ற லெனினுடைய புத்தகம் வெளிவந்ததானது, கட்சியின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமாகும் என்பது தெரியும்.

செப்டம்பர், 1938.

நூலினைப் பெற