காசா இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களை திசை திருப்பும் டிஜிட்டல் சத்தியாகிரகம்
லிங்கம் தேவா

காஸாவில் நடைபெற்று வரும் இனப்படுகொலை கொடூரங்களைக் கண்டித்து CPI மற்றும் CPI(M) கட்சிகள் digital Protest ஒன்றை அறிவித்துள்ளன. அதாவது, தினமும் இரவு 9 முதல் 9.30 மணி வரை அரைமணி நேரம் செல்போன் போன்ற டிஜிட்டல் கருவிகளை உபயோகப்படுத்தாமல் இருப்பது. அந்த குறிப்பிட்ட நேரங்களில் எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் பதிவு இடுவதோ, லைக், கமெண்ட், பகிர்வுகள் செய்வதோ கூடாது. அப்படி அரை மணி நேரம் நாம் அமைதியாக இருக்கும்பட்சம் Digital traffic இல் திடீர் வேறுபாடு உருவாகி அது இயங்கும் algorithm ஐ குழப்பி பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, மிக வலிமையான இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் எனும் நோக்கில் அந்த அறிக்கை இருக்கிறது.
ஆனால், கொஞ்சம் நிதானித்து நாம் யோசித்துப் பார்த்தால் கூட இது எத்தனை அபத்தமான ஒரு போராட்ட அழைப்பு என்பது நமக்கு விளங்கும்.
- பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், X போன்ற தளங்கள் பயனாளர்கள் வருகையை நம்பி தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், சிறிய அளவிலான இந்த அரைமணி நேர தர்ணா போராட்டம் எந்த வகையிலும் நேரடியாக அந்த நிறுவனங்கள் மீதோ இணையவெளி பயன்பாட்டின் மீதோ தாக்கம் செலுத்தக் கூடியதல்ல.
- உதாரணமாக பேஸ்புக்கை உலக அளவில் 3.07 பில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் ஒரே நேரத்தில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். இயல்பாகவே இரவு/பகல் வேறுபாடு, பணிச்சூழல் போன்றவற்றால் அந்த நேரத்தில் பயன்படுத்தாமல் பலர் இருப்பார்கள்.இதில் போராட்டத்துக்காகத்தான் சிலர் வலைத்தளங்களைப் பயன்படுத்தவில்லை என்பதைத் தெரிந்து, அழுத்தமாக அந்த நிறுவனங்கள் உணர்வதெல்லாம் நடக்காத காரியம்.
- இயல்பாக பயன்படுத்தாமல் இருக்கும் பயனாளர்களைக் கடந்து பெரிய தாக்கம் செலுத்தக் கூடிய அளவிற்கு இந்த செயல் அமைய வேண்டுமானால் மிகப்பெரிய அளவில், மிக அதிகமான கால வெளியில் அது நடைபெற வேண்டும். அப்பவும் கூட போனை switch off செய்து ஆக வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று புரியவில்லை.
- ஐ.நா வைச் சேர்ந்த Francesca Albanese கூகுள், அமேசான், windows, ராக்பெல்லர் உட்பட 60 நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு அவை யாவும் பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலுக்கு உதவுகின்றன எனக் குறிப்பிடுகிறார். எனில் அந்த நிறுவனங்கள் மீது நேரடியாகவே கூட தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் நம் போராட்டத்தை நகர்த்த முடியும்.
- உதாரணமாக, அந்த நிறுவனங்கள் மற்றும் அவர்களின் பொருட்களுக்கு இணையத்தில் மிக குறைந்த rating வழங்கி அதன் காரணத்தில் #Free_Palestine #Dont_Support_Genoside எனக் குறிப்பிடலாம். நிறைய பின்னூட்டங்கள் வரும் போது அது அந்நிறுவனத்தை பாதிப்பதோடு ஒரு பெரிய அதிர்வலையை, பிரச்சாரத்தை ஏற்படுத்தும். மேலும், அந்நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கச் சொல்லி பிரச்சாரம் செய்யலாம், அவற்றின் பொருட்களை பொதுவெளியில் வைத்துக் கொளுத்தலாம், கடைகளில் அந்த நிறுவனங்களின் பொருட்கள் இருக்கக் கூடாது எனக் கூறலாம். இங்கிருக்கும் அந்த நிறுவனங்களின் அலுவலகங்களை முற்றுகையிடலாம். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை இணைத்துப் போராட்டம் நடத்தலாம். இப்படி பல்வேறு வழிமுறைகளும் இருக்க வெகு சிலர் ஒரு 7 நாட்களுக்கு அரை - அரை மணி நேரமாக சமூக ஊடகங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும், கமெண்ட் போட வேண்டாம், லைக் போட வேண்டாம் என்பது எந்த வகையில் சரியானதாக/தாக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கும் ?
- மேலும், உலகம் காஸாவைப் பேச வேண்டிய நேரம் இது. உலகைப் பேச வைப்பதற்கு மாறாக, அவர்களை உரக்க குரலெழுப்ப வைப்பதற்கு மாறாக அரை மணி நேரம் எதையும் பயன்படுத்தாமல் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி அமைதியாக இருங்கள் என்று சொல்வது நேரெதிரான ஒன்றாகவே அமையும்.
--------------------------------.
முக்கியமாக இது உலக அளவில் "silence for Gaza" என்று முன்னெடுக்கப்படும் பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்டு அதனை பலப்படுத்தும் முயற்சி என்று அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்த பிரச்சாரம் உலகின் எந்தெந்த நாடுகளில் எல்லாம் நடக்கிறது. யாரால் தொடங்கப்பட்டது. அதன் பரந்துபட்ட நோக்கம் மற்றும் செயல்முறை என்ன என்பது பற்றி அறிக்கையில் எந்தக் குறிப்பும் இல்லை.
உலக அளவிலான "silence for gaza" முன்னெடுப்பைக் குறித்து தேடும் போது
ICN என்ற ஊடகத்தில் ஜூன் 27 இல் வெளியான ஒரு கட்டுரை தான் மிகப் பிரதானமாகக் கிடைக்கிறது.
அந்தக் கட்டுரையில் "Dr Ezzideen, a medical doctor in Gaza (who posts on X ) has asked that beginning this weekend we share this call to action - A 30 minute silence for Gaza each day for one week. It's the ultimate internet blackout." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் கீழே இந்த முன்னெடுப்பில் பங்கெடுப்பவர்கள் ஜூன் 28 முதல் ஒரு வாரம் அவரவர் நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 9 முதல் 9.30 மணி வரை செல்போன், கணினி ஆகிய அனைத்தையும் மொத்தமாக off செய்து விட வேண்டும். காசாவுக்காக இதை செய்யுங்கள் என்று இருந்தது.
இந்தக் கட்டுரை தான் பலராலும் எடுத்தாளப்பட்டு பல்வேறு வடிவங்களில் பகிரப்பட்டு வருகிறது. லண்டனைச் சேர்ந்த maryclarefoa என்ற கலைஞர் இந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு நான் ஒரு வாரம் இரவு 9 முதல் 9.30 வரை செல்போன் பயன்படுத்தாமல் இருக்கப் போகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். அனால் அவர் பதிவிட்டது ஜூலை 1.
CPI தனது அறிக்கையில் ஜூலை 6 முதல் 13 என்று குறிப்பிட்டிருக்கிறது.
லண்டனில் maryclarefoa ஜூலை 1 முதல் 6 பயன்படுத்தாமல் இருக்கிறார்.
ஜூன் 27இல் வெளியான ICN கட்டுரையில் ஜூன் 28 முதல் ஒரு வாரம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இன்னும் சில X வலைதள கணக்குகள் ஒவ்வொன்றும் வேறு வேறு தேதியைக் குறிப்பிட்டிருக்கின்றன.
இப்படி ஒவ்வொருவரும் வேறு வேறு வாரங்கள் தங்கள் விருப்பப்படி பயன்படுத்தாமல் இருந்தால் அது எப்படி உலக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்கமாக இருக்கும்? ஏற்கனவே பல நேரங்களில் பலர் அவற்றைப் பயன்படுத்துவது இல்லை. இதுவும் அதைப் போன்ற ஒன்றாகத் தான் இருக்குமே தவிர, இதன் விளைவுகள் ஒரு போராட்டமாகக் கூட தோற்றம் அளிக்காது என்பதை நாம் உணர வேண்டும்.
மேலும், ICN இன் இந்தப் பதிவில் காஸாவைச் சேர்ந்த Dr.Ezzideen அவரது X வலைதள பக்கத்தில் பதிவிட்டு இந்தப் போராட்டத்தை துவங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது முற்றிலும் பொய்யான தகவல். அவரது வலைதளப் பக்கத்தில் அப்படியான எந்த அழைப்பும் இல்லை.
Silence for gaza என்பது, ஜூன் 13 ஆம் தேதி அவர் காசாவின் நிலை குறித்து எழுதி வெளியிட்ட ஒரு கவிதையின் தலைப்பு.
"There is no internet.
No signal. No sound. No world beyond this cage.
I walked thirty minutes through ruins and dust.
Not in search of escape, but for a fragment of signal, just enough to whisper, “We are still alive.”
என்பதாக அந்தக் கவிதையில் வருகிறது.
மேலும், பலராலும் எடுத்தாளப்பட்டுக் கொண்டிருக்கும் "silence for gaza" குறித்த இந்த கட்டுரையை வெளிட்ட ICN என்பது அதிகாரபூர்வமான செய்தி ஊடகம் இல்லை. அது Independent Catholic News எனும் மத அமைப்பு.(அவ்வாறு தான் அவர்கள் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.)
------------------------------.
ICN இல் வெளியான இந்தக் கட்டுரை, மிகப் பரவலாக பகிரப்பட்டு, ஆங்காங்கே சில தனிப்பட்ட நபர்களால் வேறு வேறு தேதிகளில் போராட்டமாக பின்பற்றப்படவும் செய்துள்ளது.
ஆனால், ICN இல் வெளியானதே செய்தி அல்ல. அது ஒரு வாட்சப் forward. உலக அளவில் பல்வேறு சமூக வலைதளங்களிலும் 'யாரின் முன்னெடுப்பு, யாரெல்லாம் இணைகிறார்கள்' என்ற எந்த தகவலும் இல்லாமல் வதந்தியாகப் பரவியதை ஜூன் 22 இல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளரான முனாஸா சித்திக் என்பவர் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பதிவைத்தான் வார்த்தை மாறாமல் ICN copy paste செய்துள்ளது. அச்செய்தி ஊடகத்தை தொடர்பு கொண்டு ஆதாரம் கேட்டதற்கு எந்த பதிலும் தரப்படவில்லை.
----------------------
முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழ்நாட்டில் பல forward மெஸேஜ்கள் வலம் வந்தன. "இன்று இரவு 2 மணி நேரம் போனை switch off செய்து நம் எதிர்ப்பைக் காண்பிப்போம்"; "ஒரு நாள் மெசேஜ் வசதியை பயன்படுத்த வேண்டாம். அப்போது நமது எதிர்ப்பு பதிவாகும்"; "இது உலக அளவிலான முன்னெடுப்பு நீங்களும் பங்கு கொள்ளுங்கள் உங்கள் போனை அணைத்து ஆதரவு அளியுங்கள்" - இவ்வாறு வேறு வேறு வடிவங்களில் அந்த வாட்சப் மெஸேஜ்கள் இருந்தன.
அவற்றைப் போன்ற ஒரு வாட்சப் வதந்தி தான் இந்த Silence for gaza என்று நாம் சொல்ல முடியும். இந்த வதந்தி இன்று நேற்றல்ல, மே மாதம் தொட்டே இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இத்தாலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் robertoalborghetti மே 15 லேயே அவரது தனிப்பட்ட வலைப்பக்கத்தில் இந்த வதந்தியைப் பகிர்ந்திருக்கிறார். ஆனால், அதன் நம்பகத் தன்மையை அதிகரிக்க, இந்தப் போராட்டம் மே 8 ஆம் தேதி MTG ஆல் துவங்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.
MTG என்பது உலகின் பல்வேறு நாட்டு மக்களின் ஆதரவை காஸாவில் சேர்ப்பதற்கும் அவர்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்ட March To Gaza என்கிற இயக்கம் ஆகும்.
இதே MTG யை சேர்ந்த குழுவினர்கள் தான் உதவிப்பொருட்களை உள்ளே அனுமதிக்குமாறு ராணுவ வீரர்களுடன் கெஞ்சுவதாக முன்னர் காணொளிகள் வெளியாகின. அந்த இயக்கத்திற்கென உள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலோ, செய்திகளிலோ அதில் உள்ளவர்களின் தனிப்பட்ட குறிப்புகளிலோ இப்படியொரு போராட்ட வடிவம் குறிப்பிடப்படவே இல்லை.
----------
robertoalborghetti இன் வலைப்பக்க பதிவு குறித்து, அதே இத்தாலியைச் சேர்ந்த மனித உரிமை மற்றும் சமூக செயல்பாட்டு அமைப்பின் இணையதளமான www.peacelink.it இல் விரிவான விமர்சனம் ஒன்று மே 12 இல் வெளியாகி உள்ளது. அது மிகவும் முக்கியமானதும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதுமாகவும். அது robert க்கு மட்டுமல்ல இதைப் போராட்ட வடிவமாக அறிவித்த அனைவருக்குமானதாக இருக்கிறது. அதன் சுருக்கமான வடிவம்.
- "MTG மே 8 முதல் புதிய முன்னெடுப்பு ஒன்றைத் துவங்கி உள்ளது. அதன்படி அனைவரும் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி முதல் 9.30 வரை அரை மணி நேரம் உங்கள் செல்போன் போன்றவற்றை switch off செய்து விடுங்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் எந்த விதமான சமூக ஊடகப் பதிவோ, விருப்பமோ, பின்னூட்டமோ இடாதீர்கள்" என ஒரு மெசேஜ் பகிரப்பட்டு வருகிறது. உங்களில் பெரும்பாலோனோர் அதை வாட்சப் அல்லது பிற சமூக வலைதளங்களின் வாயிலாக பெற்றிருப்பீர்கள்.
- இந்த நடவடிக்கை "அவசர முன்னெடுப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இது ஒரு போலிச் செய்தி ஆகும்.
- இந்த வேண்டுகோள் குறிப்பிடும் MTG (மார்ச் டு காசா) இயக்கத்தின் வலைத்தளத்தில் "டிஜிட்டல் அமைதி"க்கான எந்த அழைப்பும் இல்லை.
- பலர் இந்த போலிச் செய்தியை நம்பியுள்ளனர்
- இது algorithm, network traffic போன்ற சில தொழில்நுட்ப வார்த்தைகளைக் கொண்டிருந்தாலும் இது ஒரு உண்மையற்ற பொய்ச் செய்தியே ஆகும்.
- இந்த "டிஜிட்டல் அமைதி" ஆனது, உறுதியான மற்றும் அவசரமான முயற்சிகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் ஒரு ஆபத்தான காரணியாக உள்ளது.
- உதாரணமாக, இஸ்ரேலிடம் இருந்து இராணுவத் தொழில்நுட்பங்களை வாங்குவதற்கு எதிரான பிரச்சாரங்களில் பங்கேற்பது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்புவது, இஸ்ரேலுடன் எந்த இராணுவ ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்துமாறு கோருவது போன்ற உண்மையான முயற்சிகளில் கவனம் செலுத்துவதில் இருந்து இந்த டிஜிட்டல் அமைதி முற்றிலும் நம் கவனத்தை திசை திருப்புகிறது.
- இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான குறுக்குவழியை வழங்குவதைப் போல காட்டிக்கொண்டு, நம்மை ஆன்ம திருப்தி அடையச் செய்கிறது. வெற்றுச் சடங்காகவும் அமைகிறது.
- இது அமைப்பை பாதிக்காது, போர் பொருளாதாரத்தை தொந்தரவு செய்யாது, நமது அரசாங்கங்களின் உடந்தையை நிறுத்தாது
- காசாவிற்கு நமது அமைதி தேவையில்லை; அதற்கு நமது குரல் தேவை
---------------------------------------.
www.peacelink.it இன் விமர்சனம் மிகவும் முக்கியமானது.
பாலஸ்தீனத்தின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. அங்கே மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களும் குழந்தைகளும் ஒரு வேளை உணவு கூட சரியாகக் கிடைக்காமல் பட்டினியால் கொல்லப்படுகிறார்கள்.
நிவாரண முகாமிற்கு வரும் மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் குறிவைத்து சுடப்படுகிறார்கள். சொல்ல முடியாத அளவுக்குத் துயரம் அவர்களைச் சூழ்ந்துள்ளது.
தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே மிகப்பெரிய காரியமாக இருக்கும் நிலையில் அங்கிருந்து - அந்த பாலஸ்தீன மண்ணில் இருந்து - அம்மக்கள் சார்பாக பிரதிநிதிகள் கடந்த 6 ஆம் தேதி இந்தியா வருகை தந்து, இங்கிருக்கும் பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சந்தித்து தோழமைக்கான கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்படியான கோரிக்கைக்குப் பின் வரும் புரட்சிகர போராட்ட அறிவிப்பாக இருக்கிறது இந்த வாட்சப் வதந்திப் போராட்டம்.
உழைக்கும் மக்களின் பக்கம் மிக உறுதியாக நிற்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த நேரம் இதனை மிகப்பெரிய அளவிலான பிரச்சார இயக்கமாகக் கொண்டு சென்றிருக்க வேண்டும். வீதி வீதியாக மக்களைத் திரட்டி இந்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பை பதிவும் செய்திருக்க வேண்டும். எந்தெந்த வகைகளில் எல்லாம் நெருக்கடிகள் கொடுக்க முடியும் என ஆராய்ந்து அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவற்றை விட்டு கொரோனா நேரத்தில் விளக்கு ஏற்றுங்கள், கைகளைத் தட்டுங்கள் என்று வலதுசாரிகள் செய்ததைப் போல வாட்சப் வதந்தியை முன்னிட்டு, எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வெற்றுச் சடங்குகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதுவும் தேசியத் தலைமையின் அறிக்கையாக / அழைப்பாக இது வெளியிடப்படும் போது... இதில் இனி சொல்வதற்கு எதுவும் இல்லை.
உணருங்கள். இது அமைதி காக்கவோ ஆன்ம திருப்தி அடைந்துகொள்ளவோ அல்ல - நாம் உரக்கப் பேச வேண்டியதற்கான தருணம்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொறுப்பற்ற தன்மையை கண்டிப்போம். சடங்குத் தனமான வெற்று குழப்பத்தை, திருதல்வாத முயற்சிகளை அம்பலப்படுத்துவோம்.
காஸாவின் மக்களுக்கு உடன் நிற்போம்.
நன்றி வணக்கம் !
இணைப்புகள் :
https://cpim.org/join-the-digital-protest-against-israel-silence-for-gaza/
https://www.facebook.com/story.php?story_fbid=1257757439052783&id=100044556154166&rdid=uf2fFmXZIsTFNz4C#
https://madhyamamonline.com/india/cpim-joins-silence-for-gaza-the-digital-protest-movement-1425581
https://www.facebook.com/profile.php?id=100064591363750#
https://madhyamamonline.com/india/cpim-joins-silence-for-gaza-the-digital-protest-movement-1425581
https://www.instagram.com/p/DLiAchJIB8n/
https://maryclarefoa.com/about/
https://www.facebook.com/photo.php?fbid=1725105275061990&id=100026876033965&set=a.313186356253896
https://x.com/ezzingaza/status/1933250190804128045
https://chenda.co/poetrybydrezzideen/
https://robertoalborghetti.com/2025/05/15/pictures-for-gaza-colors-and-30-minutes-of-digital-silence-calling-for-the-ceasefire/
https://www.peacelink.it/mediawatch/a/50741.html
- லிங்கம் தேவா
https://www.facebook.com/share/p/1LDoGfrbut/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு