இலங்கையில் ஜேவிபி தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்து விட்டதா?
இரா. முருகவேள்
ஜனதா விமுக்தி பெரமுன ஒரு மார்க்சிஸ்ட் அமைப்பு என்றும் இலங்கையில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்து விட்டது என்றும் நிறைய பதிவுகள்.
ஜேவிபி இலங்கையின் இரத்தம் தோய்ந்த இராணுவ, அதிகார அமைப்புக்குள் இயங்க ஒப்புக் கொண்டுதான் முப்பது ஆண்டுகளாக பாராளுமன்ற அமைப்புக்குள் இருக்கிறது.
இப்போதும் அந்நிய முதலீட்டை பாதுகாப்போம் என்கிறது.
ஜேவிபி தலைவர்கள் இந்தியா வந்து மோடி அரசுடனும் இந்திய தலைவர்கள் உடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு உள்ளனர்.
இலங்கையில் IMF செயல் படுத்தி வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் கடுமையை ஜேவிபியை காரணம் காட்டி குறைக்க இலங்கை ஆளும் வர்க்கம் முயல்கிறது போலிருக்கிறது. இலங்கையின் பழைய ஆளும் வர்க்கம் மக்களை திரட்டி imf ஐ வற்புறுத்தும் திறனை இழந்து விட்டது.
வழக்கம் போல தமிழ் தேசிய வாதம், கம்யூனிசம் வந்து விடக் கூடாது என்று இந்தியா ஜெவிபியை கட்டித் தழுவிக் கொள்கிறது.
நேபாள், வங்க தேசம், இலங்கை எல்லாமே IMF வகுத்த எல்லைக்குள் தான் கம்யூனிசமும், அரசியல் இஸ்லாமும் பேசுகின்றன. பாட்டாளி வர்க்க கட்சியாக இருந்த நேபாள மாவோயிஸ்ட் கட்சிக்கே இந்த நிலை. ஜேவிபி அப்படிப்பட்ட கட்சியும் இல்லை.
===================================================================================
ஜேவிபி பதிவின் தொடர்ச்சி.
இந்தியா இலங்கை வங்கதேசம் பாகிஸ்தான் போன்றவை அதிகார வர்க்க ஆட்சிமுறை உள்ள நாடுகள். இங்கே VAO, தாசில்தார், கலெக்டர் போன்ற அதிகாரிகளிடம் தான் அதிகாரம் உள்ளது. இவர்கள் மேல் மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரிகளை மக்கள் கேள்வி கேட்க முடியாது. போராட்டம் நடத்தலாம் அல்லது நீதிமன்றம் போகலாம் வேறு வழி இல்லை.
அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் இருப்பது தாராளவாத முதலாளித்துவ அரசு. அங்கே உள்ளூர் போலீஸ்காரர்கள் உட்பட பெரும்பாலான அதிகாரிகளை மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். உள்ளாட்சிகலில் மக்கள் பிரதிநிதிகளுக்கு executive powers உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் ஒழுங்காக செயல் படவில்லை என்றால் அவர்களை நீக்க மக்களுக்கு சட்ட பூர்வ அதிகாரம் உண்டு. சமீபத்தில் அமெரிக்கா வில் ஒரு கருப்பு இனத்தவரை கொலை செய்த காவல் நிலையத்தின் காண்ட்ராக்ட் ஐ உள்ளூர் நிர்வாகம் ரத்து செய்தது.
ஆனால் முதலாளித்துவ நாடுகளில் மக்களுக்கு தொழிற்சாலைகளில் உற்பத்தியில் அதிகாரம் கிடையாது.
சோசலிச நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கு அதிகாரம் இருப்பது போலவே தொழிற்சாலைகளிலும் கூட்டுப் பண்ணைகளிலும் மக்களுக்கு நிர்வாகத்தில் பங்கும் அதிகாரமும் இருக்கும். அதாவது உற்பத்தி நிலையங்களில் மக்கள் அதிகாரமும் ஜனநாயகமும் இருக்கும். இது முன்பு சோவியத் ஒன்றியத்திலும் சீனாவிலும் இருந்தது. இப்போது சோஷலிச நாடு என்று எதுவும் இல்லை. கியூபா, சீனா, வட கொரியா போன்றவற்றில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றி முதலாளிகள் போல் ஆகிவிட்டன. இந்த நாடுகளில் இருப்பது அரசு முதலாளி போல நடந்து கொள்ளும் அரசு முதலாளித்துவம்.
இலங்கையில் அதே ராணுவம், அதே நீதித்துறை, அதே அதிகாரிகள் தொடர்வார்கள். அதே சொத்துரிமை முறைகள், அரசியல் அமைப்பு சட்டம் தொடரும். அதற்குள் ஜேவிபி ஏதாவது செய்யலாம். மற்றபடி சோஷலிசம் எல்லாம் சாத்தியம் இல்லை.
- இரா. முருகவேள்
(முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு