ஏஎம்கே நினைவு நீடுழி வாழ்க! ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவை அடிமைப்படுத்தும் மோடி ஆட்சி ஒழிக!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
நவ-25 -2025 - மார்க்சிய லெனினிய புரட்சியாளரும் நமது ஆசானுமாகிய தோழர் ஏஎம்கேவின் 7ம் ஆண்டு நினைவு நாளாகும். இந்நாளில் தோழருக்கு சமரன் தனது சிவப்பு அஞ்சலியை செலுத்துகிறது. வாழ்நாள் முழுவதும் தனது மேதமைமிக்க மார்க்சியப் படைப்பாற்றலால் பல்முனை கலைப்புவாதத் தாக்குதல்களிலிருந்து மார்க்சிய-லெனினியத்தை மீட்டெடுத்துப் பாதுகாத்தார். ஏகாதிபத்தியம் மற்றும் புதியகாலனிய கட்டத்திற்கு ஏற்ப வளர்த்தெடுத்தார். மக்கள் யுத்தம் போல்ஷ்விக் கட்சியை எஃகுறுதிமிக்கதாக பட்டைத் தீட்டினார். ஏஎம்கே, நமது காலத்தின் தலைசிறந்த மா.லெ. தத்துவ ஆசானாகவும், புரட்சியாளனாகவும், ஒப்பற்ற தியாகதீபமாகவும் ஒளிவீசுகிறார்.
இவ்வாண்டு ஏஎம்கே நினைவுதினத்திற்கான தனது நிலைப்பாட்டை முன்வைத்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது. சமரன் வாசகர்களின் பார்வைக்காக மஜஇகவின் 2025ம் ஆண்டு ஏஎம்கே நினைவுநாள் நிலைபாட்டை இங்கு பதிப்பிக்கிறோம்.
அமெரிக்க நெருக்கடியும் மக்களின் "நோ கிங்ஸ்" போராட்டமும்
சர்வதேச அளவில், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சீனா விடுத்து வரும் சவால் மற்றும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியின் காரணமாக டிரம்ப் அரசு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் கடன் சுமார் 37 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 1.25 மடங்கு அதிகமாகும். மாறாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3% சதவிகிதத்தில் இருந்து 1.7% சதவிகிதமாக சரிந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 840 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் கூடுதலாக 5% சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலை இழந்துள்ளனர். பணவீக்கம் நாளுக்குநாள் அதிகரித்து 7% சதவிகிதத்தை நெருங்கிவிட்டது. இத்தகைய நெருக்கடிகளை தீர்க்க வழியின்றி பித்துபிடித்து அலைகிறது. பிற ஏகாதிபத்தியங்கள் மீதும் - மூன்றாம் உலக நாடுகள் மீதும் - சொந்த நாட்டு மக்களின் மீதும் கூட நெருக்கடியின் சுமைகளை ஏற்ற முயற்சி எடுத்து வருகிறது. பாசிச சர்வாதிகார ஆட்சியை உள்நாட்டில் கட்டியமைத்து வருவதை டிரம்ப் ஆட்சியிலேறிய நாள் முதல் நாம் பார்த்து வருகிறோம்.
டிரம்பின் இத்தகைய சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து அமெரிக்காவின் ஏறக்குறைய அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக அமைதியான தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களை டிரம்ப் அரசு இராணுவத்தை குவித்து ஒடுக்கியது. இதன் காரணமாக, போராட்டங்கள் கடந்த சில வாரங்களாக தீவிரம் பெற்றுள்ளது. 70 லட்சத்திற்கும் மேலான மக்கள் ஒன்று திரண்டு அமெரிக்கா அதன் மக்களுக்கே உரியது அரசர்களுக்கு அல்ல "மன்னராட்சி வேண்டாம் - நோ கிங்ஸ் (No Kings)" என்று முழங்கி வருகின்றனர்.
டிரம்பின் பாசிச சர்வாதிகார அரசு மாகாண அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது; மெக்சிகர் உள்ளிட்ட தேசிய இனங்களை படுகொலை செய்கிறது; அவர்களை வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கிறது; வாழ்வாதாரங்கள் அனைத்தையும் பறித்து வருகிறது மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, கல்வி, மருத்துவம்-சுகாதாரம் இவற்றுக்கான மானியங்களை முழுமையாக வெட்டியுள்ளது; ஃபெடரல் அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து மட்ட ஊழியர்களின் வேலைகளை அராஜகமாகப் பறித்து வருகிறது; பாலின உரிமை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நசுக்கி வருகிறது போன்ற பல்வேறு பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். “எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஷூக்கர்பெர்க் போன்ற உலகின் மிகச் செல்வந்தர்கள், தங்களின் தீராத பேராசையினால், நாடு முழுவதும் உள்ள உழைக்கும் குடும்பங்களை சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காக நம் பொருளாதாரத்தையும் அரசியலமைப்பையும் கையகப்படுத்துவதற்கு எதிரானதே இந்த 'நோ கிங்ஸ்' போராட்டம்" என்கின்றனர். அமெரிக்க மக்களின் இத்தகைய ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் ஆதரிக்கத் தகுந்தவையே ஆகும். அதே சமயம் அப்போராட்டங்கள் என்.ஜி.ஓ வகைப்பட்ட போராட்டங்களாக இல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சோசலிச புரட்சியை நோக்கிய போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட்டால்தான் அமெரிக்க மக்களுக்கு உண்மையான விடிவு கிடைக்கும் என்ற அடிப்படையில் இருந்து கம்யூனிச இயக்கங்கள் அமெரிக்காவில் செயல்பட விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையும் எதிர்த்தும் போராட வேண்டும்.
கலையும் டிரம்பின் அமைதிபுறா வேஷம் தீவிரமடையும் பனிப்போர்
தான் ஆட்சிக்கு வந்தால் உக்ரைன் போரை ஒரே போன் காலில் நிறுத்தி விடுவேன் என்று சவடால் பேசினார் டிரம்ப். ஆனால் ஆட்சியிலேறி ஏறக்குறைய ஓராண்டு ஆன பின்பும் கூட உக்ரைன் போர் தொடர்கிறது. உக்ரைனின் அரிய தாதுக்களை பங்கிட்டுக்கொள்ள ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது டிரம்ப் அரசு. மறுபக்கம் உக்ரைனை கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட மிரட்டி வருகிறது. ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளை மறந்துவிட வலியுறுத்தி வருவதோடு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்கு மறைமுகமாக ஆதரவளித்து வருகிறார் ட்ரம்ப். மறுபுறம், ரஷ்யாவை புறநிலையில் பலவீனப்படுத்த பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகிறார். சமீபத்தில், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லூக்கோயில் மீது உலக அளவில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஐரோப்பிய யூனியனும் தங்கள் பங்கிற்கு ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை விதித்து ஐரோப்பாவிலுள்ள ரஷ்யாவின் சொத்துக்களையும் வளங்களையும் முடக்கி வருகிறது. இருப்பினும் ரஷ்யா முன்பைவிட மூர்க்கமாக உக்ரைன் மீது ஆக்கிரமிப்புப் போரை தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனை யார் யாருடன் பங்கிட்டுக் கொள்வது அல்லது முழுவதுமாக யார் கையகப்படுத்துவது என்ற போட்டிதான் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் என முத்தரப்பிலும் உள்ளது. இத்தகைய மறுபங்கீட்டுப் போட்டியில் சிக்கி சின்னாபின்னமாகிறது உக்ரைன்.
உக்ரைன் போரை நிறுத்த முயற்சி எடுத்தேன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் இதற்காக எனக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமைதிபுறா வேஷம் போட்ட டிரம்ப்பின் பிம்பம் காசாவின் கான்கிரீட் குவியலுக்குள் நொறுங்கி கிடக்கிறது. தான் புறா அல்ல -பிணந்தின்னிக் கழுகு என்பதை பாலஸ்தீனர்களின் இரத்தம் குடித்து மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் காசாவில் நடத்திய பேரழிவின் சாட்சியங்கள் இங்கே:
- சுமார் 70000 பொதுமக்கள் நேரடி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 20000க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்
- .சுமார் 170000 பேர் பலத்த காயங்களுடன் முடமாக்கப்பட்டுள்ளனர்.
- இவை போக பசி, பட்டினி, போதிய சுகாதார வசதி, ஏன் குடிநீர் கூட கிடைக்காமல் நா வறண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாக இப்போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
- சுமார் 4.5 லட்சம் வீடுகள் தாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 5% லிருந்து 8% சதவிகிதம் வரையிலான கட்டுமானங்களே எஞ்சியுள்ளன. அவையும் ஏறக்குறைய சிதிலமடைந்த நிலையிலேயே உள்ளன.
- காசாவில் இருந்து 21 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதாவது மக்கள் தொகையில் 95% சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் ஆவர்.
- 90% சதவிகிதத்துக்கும் அதிகமான பள்ளிகள் துடைத்தழிக்கப்பட்டுவிட்டன - சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில்லாமல் தவிக்கின்றனர்.
- சுமார் 700 மருத்துவமனைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. சுமார் 2000 மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர்.
- மக்களை காசா மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் வழிமறித்து எலும்பும் தோலுமாக்கி மென்மேலும் கொன்றுகுவித்து வருகின்றன. நாளொன்றுக்கு 6 லிட்டர் கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளனர். (நாம் நாளொன்றுக்கு சுமார் 250லிட்டர் வரை நபர் ஒன்றுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை கணக்கில் கொண்டு பார்த்தால் எத்தகைய மோசமான நிலையில் அவர்கள் வாடுகிறார்கள் என்பது புரியும்)
- 95% சதவிகிதத்திற்கும் மேலாக ஏறக்குறைய முற்றாக விவசாய நிலங்களும், காடுகளும் அழிக்கப்பட்டுவிட்டன
எஞ்சியிருப்பது தோல் போர்த்திய உயிரை இறுகப்பற்றியுள்ள நடமாடும் எலும்புக்கூடுகளும், பிணக்குவியல்களும், சாம்பல் மேடுகளும், கான்கிரீட் மற்றும் வெடிகுண்டு குவியல்களும்தான்.
காசா மக்களின் குருதி வெள்ளத்தின் கீழ் படிந்திருக்கும் எண்ணெய் எரிவாயு வளங்களுக்காகவும் கடற்கரையோர ரியல் எஸ்டேட் சந்தைக்காகவும்தான் பாலஸ்தீனர்கள் மீது இப்படி மன்னிக்கவே முடியாத கோர யுத்தத்தை இந்த இரத்தக்காட்டேறிகள் அரங்கேற்றியுள்ளன. பாலஸ்தீனர்கள் மீதான இத்தகைய கொடூரமான இனப்படுகொலைக்குதான் இந்த பிணந்தின்னிக் கழுகு டிரம்புக்கு நோபல்பரிசு வேண்டுமாம். இந்த ஓநாய்க்கு கொடுக்க வேண்டியது நோபல்பரிசு அல்ல; சாவு மணி எச்சரிக்கை.
ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போதய இராணுவ அரசுக்கும், துணை இராணுவப் படையான ஆர்.எஸ்.எஃப்-க்கும் (RSF-Rapid Support forces) இடையே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான உள்நாட்டுப் போர் 2023ம் ஆண்டில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்ற வாரத்தில், எல்ஃபாஷர் நகரை கைப்பற்றி ஆர்.எஸ்.எஃப் படை அங்கு வசித்து வரும் 2000க்கும் மேற்பட்ட கருப்பின மக்களை கொன்று குவித்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இப்போரில் சுமார் 1.5லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரபு அல்லாத தேசிய இனங்கள் தேடி தேடி வேட்டையாடப்படுகின்றனர் ருவாண்டோ இனப்படுகொலைக்கு ஈடானதொரு இனப்படுகொலை சூடானில் நடந்தேறி வருகிறது. இத்தகைய இனப்படுகொலைகளை அமெரிக்க சீன ஏகாதிபத்தியங்கள் பின்னிருந்து அரங்கேற்றி வருகின்றன. சூடானில் புதைந்திருக்கும் தங்கம் உள்ளிட்ட அதிமுக்கிய கனிம வளங்களை கொள்ளையடிக்கவுமான போட்டியில் இந்த யுத்தத்தை மறைமுகமாக நடத்தி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகமும் (UAE), தனது பிராந்திய துணை மேலாதிக்க நலன்களிலிருந்தும் ஆயுதங்களை சூடானுக்கு வாரி இறைத்து வருகிறது.
வெனிசுலாவில், ஆட்சியிலிருக்கும் (ரஷ்ய சீன முகாம் ஆதிக்கத்தின் கீழ் உள்ள) மதுரா அரசை கவிழ்த்து அங்கு தனது பொம்மை ஆட்சியை அமைக்க பல வருடங்களாக முயன்று வருகிறது அமெரிக்கா. முந்தைய ஆட்சியின் போதே வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது டிரம்ப் கும்பல். தற்போது, போதைப்பொருளுக்கு எதிரான போர் எனும் பெயரில் அதை தீவிரப்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் வான்வழித் தாக்குதல்களை துவங்கிவிட்டது. சுமார் 60க்கும் மேற்பட்டோர் இத்தாக்குதலில் ஒரு சில நாட்களுக்கும் முன்னர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவை சுற்றி வளைத்து அதன் மீது போர் தொடுக்க தயாராகி வருகிறது. இராணுவங்களையும் போர்க்கப்பல்களையும் குவித்துள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் எரிவாயு வளங்கள் மீதான ரஷ்யாவின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டி அங்கு தனது ஆதிக்கத்தை நிறுவவே யுத்தவெறி கொண்டு அலைகிறது டிரம்ப் கும்பல்.
ஷாங்காய் கூட்டமைப்பின் முக்கிய கூட்டாளியாக பங்கு வகிக்கும் ஈரான் தனது துணை மேலாதிக்க நலன்களிலிருந்து அணு ஆற்றல் மற்றும் அணு ஆயுத கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. ஈரானின் அணு ஆற்றல் துறையை கட்டுப்படுத்த ஷாங்காய் முகாமுக்கு போட்டியாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முகாம்கள் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக JCPOA எனும் திட்டத்தை பத்தாண்டுகளுக்கு முன்பே உருவாக்கி ஈரானை கட்டுப்படுத்தி வந்தன. ஆனால் ஈரான் ஷாங்காய் முகாமில் முக்கிய சங்கிலியாக மாறிய பின் அமெரிக்கா அத்திட்டத்தில் இருந்து வெளியேறியது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஈரானின் அணு கிடங்குகள் மீது பங்கர் பஸ்டர் குண்டூகளை வீசி ஈரானின் அணு ஆற்றல் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலை ஏவிவிட்டது. ஐரோப்பிய யூனியன் ஈரான் அணு ஆற்றல்துறையின் மீது மேலாதிக்கம் செலுத்த ஈடுபட்டு வந்த ஒப்பந்த முயற்சிகள் தோல்வியடந்தன. ஆகையால் தற்போது ஐரோப்பிய முகாமும் JCPOA திட்டத்திலிருந்து வெளியேறி ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கிவிட்டது.
தைவானுக்கு பல ஆண்டுகாலமாக உரிமை கொண்டாடி வருகிறது சீன அரசு. தற்போது "ஒரே நாடு இரண்டு நிர்வாகம் (One country, two systems)" எனும் திட்டத்தை முன்வைத்து தைவானை முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான யுத்ததந்திரக் கொள்கையை வெளியிட்டுள்ளது ஜிங்பிங் அரசு. சீனா முன்வைத்த கொள்கையை ஏற்றால் தைவானும் ஹாங்காங், மக்காவ் போன்ற சிறப்புரிமை பெற்ற சீனாவின் மாகாணமாக மாற்றப்பட்டுவிடும்; தைவானின் இறையாண்மையை நாங்கள் இழக்கமாட்டோம் என வாய்ச்சவடால் அடித்து வருகிறார் தைவான் அதிபர் லாய் ஜிங். ஆனால் மறுபுறம் தைவானின் இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் தாரைவார்த்து வருகிறது லாய்ஜிங் கும்பல். தைவானை சீனாவுடன் இணைக்க போருக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது ஜிங்பிங் கும்பல். 2027 க்குள் ஆக்கிரமிப்புப் போரை நடத்தப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ள தைவானைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளது அமெரிக்கா. ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள சில தீவுகளில் போர் விமான ஏவுதளங்களை அமைத்துள்ளது. தைவானைச் சுற்றி போர்க் கப்பல்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க தைவான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இராணுவ செலவினங்களுக்கான நிதியை மேற்கொண்டு 5% சதவிகிதத்திற்கும் மேல் உயர்த்தியுள்ளது. தனது இராணுவக் கட்டமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. 108 M1A2T வகை பீரங்கிகள் F16 வகை போர்விமானங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க 30 - 40 பில்லியன் டாலர்களை சமீபத்தில் ஒதுக்கியுள்ளது. மேலும், தைவானிலேயே டிரோன்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அது போக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிரோன்களை இறக்குமதி செய்யவுமான ஒப்பந்தங்களிலும் ஈடுபட்டுள்ளது. தைவானின் அதிநுட்பமான செமிகண்டக்டர் துறையில் மேலாதிக்கத்தை நிறுவ போட்டி போடுகின்றன. நேரடிப் போருக்கு வேகமாக தயாராகி வருகின்றன.
அமெரிக்கா முகாமிலிருந்து முரண்பாடு தீவிரமடைந்து தனி முகாமாக செயல்பட துவங்கியுள்ள ஐரோப்பிய யூனியனும் உலகளாவிய மறுபங்கீட்டுப் போட்டியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை புதுப்பித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனுக்கென தனி இராணுவ தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க "ஐரோப்பிய யூனியன் ஆர்மி ரெடினெஸ் 2030" திட்டத்தின் கீழ் 800 பில்லியன் யூரோக்களை ஒதுக்கி துரிதமாக ஐரோப்பிய யூனியனை ராணுவமயமாக்கி வருகிறது.
இவ்வாறு உலகம் முழுவதும் பனிப்போர் நிலைமைகள் தீவிரம் பெற்றுள்ளதானது உலகளவில் நெருக்கடிகள் முற்றியுள்ளதை வெளிப்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நெருக்கடிகள் மற்றும் போர் சூழல் காரணமாக உலகம் முழுவதும் கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளது. அமெரிக்கா முதல் ஜப்பான் வரை வெனிசுலா முதல் நேபாளம் வரை அந்நாட்டு அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களும் உக்கிரமடைந்து வருகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கிடையிலும் ஏகாதிபத்தியங்களுக்கும் மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகிறது. உலகை மாற்றியமைப்பதற்கான புறச்சூழல் கணிந்தே உள்ளது. இத்தகைய பனிப்போர் சூழலை உள்நாட்டுப் போராக மாற்றுவதன் மூலம் ஏகாதிபத்திய அமைப்பை ஆட்டங்காண வைக்க முடியும். இதை மார்க்சிய-லெனினிய வழியில் நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார் நமது ஆசான் ஏஎம்கே. அவரின் நினைவை போற்றுவதென்பது அவரின் வழியில் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்தி பிடிப்பதாகும்.
ஏகாதிபத்தியங்களுக்கு அடிபணிந்து பாசிச ஆட்சியை கட்டியமைக்கும் மோடி அரசு
ட்ரம்ப் ஆட்சியிலேறிய உடன் பிப்ரவரி மாதம் அமெரிக்காவுடன் காம்பாக்ட் எனும் அடுத்த பத்தாண்டுகளுக்கான அடிமை சாசன திட்டத்தில் கையெழுத்திட்டு வந்தது மோடி கும்பல். அத்திட்டத்தின் கீழான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்களை இறுதிசெய்ய பேரத்தில் ஈடுபட்டது - காலம் தாழ்த்தி வந்தது. அதோடு அமெரிக்காவின் கண்டிப்பையும் மீறி அம்பானிகளுக்காக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்துவந்தது; இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது அநியாய தண்டனை வரிகளை 50% சதவிகிதத்திற்கும் மேல் உயர்த்தி இந்தியாவின் ஏற்றுமதிசார் உற்பத்தியை நெருக்கடிக்கு தள்ளினார். இந்நெருக்கடியை தவிர்க்க ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டது சீனாவுக்கு சென்று வர்த்தகம் செய்ய முயற்சிகள் எடுத்தது. அவற்றின் பொருட்களை இந்திய சந்தையில் கொட்டிக் குவித்தது. எதுவும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு குறிப்பிட்ட பலனை வழங்கவில்லை. பொருட்களின் தேக்கநிலையை தீர்ப்பது எனும் பெயரில் ஜிஎஸ்டி வரிகளை குறைப்பதாக நாடகமாடி கார்ப்பரேட்களுக்கான சலுகைகளைத்தான் மேலும் வாரி வழங்கியது.
மீண்டும் அமெரிக்காவின் காலடியிலே சரணடைந்துள்ளது மோடி அரசு. அமெரிக்கா வரிகளை உயர்த்திய போதும் அமெரிக்காவின் பொருட்களுக்கு இருந்த இறக்குமதி தடைகளையும் முற்றிலுமாக நீக்கியது. பால் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் தடைகளையும் ஒழித்துக் கட்டி அவற்றை சொற்ப வரியோடு அல்லது வரியே இல்லாமல் இங்கு கொட்டிக் குவித்து இந்திய விவசாயிகளை கழுவேற்றி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகள் விதித்த பின், ரஷ்யாவிடமிருந்து இறக்குமதியை முற்றிலுமாக கைவிடப்போவதாக வெட்கமே இல்லாமல் அறிவித்துள்ளது. குவாட் கூட்டமைப்பின் பருவநிலை மாற்றத்தை தடுப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு முதலீடு செய்வதையும் கடன்களை வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது அமெரிக்கா. ஜப்பானிடம் தொடர்பு கொண்டு குவாட் கூட்டமைப்பை உறுதிபடுத்த வேண்டும் - அப்போதுதான் நிதி / கடன் கிடைக்கும் என ஜப்பானிடம் கோரியுள்ளது மோடி அரசு. அமெரிக்காவின் இருதரப்பு ஒப்பந்தங்களில் ஈடுபடாமல் மோடி அரசு பேரம் பேசி வருவதால், ஜப்பான் மற்றும் மோடி அரசின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவே இல்லை டிரம்ப். ஓரிரு நாட்களுக்கு பிறகு அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும் ஆணைகளுக்கும் அடிபணிந்து அடுத்த பத்தாண்டுகளுக்கான பாதுகாப்புத் துறை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. காம்பாக்ட் திட்டத்தின் அடிப்படையிலான இரு தரப்பு ஒப்பந்தங்கள் அனைத்திலும் அடுத்தடுத்து ஈடுபடவுள்ளது.
இவை இந்திய மக்களையும், வளங்களையும் மென்மேலும் சுரண்ட வழிவகுக்கும். நெருக்கடியின் சுமைகள் அனைத்தைம் மக்கள் மீது மேலும் மேலும் சுமத்த பாசிச ஆட்சியை எட்டுக்கால் பாய்ச்சலில் கட்டியமைத்து வருகிறது மோடி அரசு. உழைக்கும் மக்களின் மிச்சம் மீதமிருக்கும் உரிமைகளை பகிரங்கமாக பறிக்க பாசிசச் சட்டங்களை தொடர்ச்சியாக கொண்டு வந்த வண்ணம் உள்ளது.
சமீபத்தில் இந்திய விவசாயத்தையும் சிறுகுறு தொழில்களையும் முற்றாக ஒழித்துக் கட்டும் நோக்கில் மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. மின்சார உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது எனும் பெயரில் அரசு மின்கட்டமைப்புகளை முற்றிலும் ஒழித்துக் கட்டி தனியார் மின் உற்பத்தி மையங்களுக்கு நிதிகளை ஒதுக்கீடு செய்து ஊக்குவிக்கிறது. மின்சார விநியோகத்தையும் தனியார்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகளுக்கும் சிறுகுறு தொழில்களுக்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த மின்சாரங்கள் வெட்டப்படுள்ளது. ஃப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி முன்பணம் கட்டினால்தான் இனி மின்சாரம் கிடைக்கும் என்ற அவலநிலையை உருவாக்கியுள்ளது. ஒருபுறம் நிதிமூலதன ஆதிக்க கும்பல்களின் நலன்களிலிருந்து விவசாய நிலங்களை அவர்களுக்கு தேவையான பணப்பயிர் விளைவிக்கும் நிலங்களாக மாற்றி விட்டது. உணவுப் பொருட்களுக்கு ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தும் நிலையை உருவாக்கி விட்டது. தற்போது மிச்ச மீதமிருக்கும் விவசாய உற்பத்திக்கும் மானியவெட்டு, மின்சார வெட்டு மூலம் இந்திய விவசாயிகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக அவர்கள் கொடுக்கும் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. இனி இந்த விவசாயப் படுகொலைகள் மேலும் அதிகரித்து இந்திய விவசாயத்தையே ஒழித்துக் கட்டும்; அது பில் கேட்ஸ் போன்ற கார்ப்பரேட்களின் கைகளில் கொண்டு சேர்க்கும்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக ஏற்கெனவே தொழிலாளர் சட்டங்களை திருத்தி 4 தொகுப்புகளாக மாற்றியது. தற்போது புதிய தொழிலாளர் வேலைவாய்ப்பு சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் தொழிலாளர்களை பண்ணையடிமைகளாக மாற்ற ஏற்பாடு செய்துள்ளது. கார்ப்பரேட்களுக்கு உழைத்துக் கிடப்பது தர்மம் என்று மனுஸ்மிருதியின் மேற்கோள்களை எடுத்துக்காட்டியுள்ளது. புதிய புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். மீதமிருக்கும் தொழிலாளர்கள் இயந்திரத்தை (ரோபோவை) தாண்டி வேகமாக ஓய்வில்லாமல் இயங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றர். ஏஐ உள்ளிட்ட நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தொழிலாளியின் உழைப்பு நேரம் குறைக்கப்படுவதற்கு மாறாக அவர் மேலும் சுரண்டப்படுகிறார்கள். இதை சட்ட ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் நியாயப்படுத்தும் பாசிச நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது மோடி அரசு. நாடாளுமன்ற முறை மூலமே பாசிசம் கட்டியமைக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இப்போது நாடாளுமன்ற முறையில் மற்ற கட்சிகளுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒற்றைக் கட்சி சர்வாதிகார ஆட்சிமுறையை அரங்கேற்றுவதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது பாஜக அரசு. உலகம் முழுவதும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருவது போல, இந்தியாவில் சொல் அளவில் இருக்கும் இத்தகைய ஜனநாயக உரிமைகளும் கூட முற்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஏகாதிபத்தியங்களுக்கு அடிபணிந்து சொந்த நாட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகமிழைக்கும் மோடி ஆட்சியைத் தூக்கியெறியாமல் இந்திய மக்களுக்கு விடிவு இல்லை. அரங்கேற்றி வரும் பாசிச ஆட்சிமுறைக்கு சித்தாந்த நியாயம் கற்பிக்கும் பாஜக -ஆர்.எஸ்.எஸ். கும்பலை மிச்ச மீதமின்றி ஒழித்துக் கட்டவேண்டும்.
தனியார்மய - சாதிமய மாடல்தான் திராவிட மாடல்
மோடி கும்பல் அமல்படுத்திவரும் இந்துத்துவ மாடலின் தமிழக வடிவம்தான் திராவிட மாடல் என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது மு.க.ஸ்டாலின் அரசு.
தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கி வருகிறது சாம்சங் தொழிலாளர்களின் சங்கம் அமைக்க உரிமை கோரியப் போராட்டங்களையும் - நகராட்சி மாநகராட்சிகளின் தனியார்மயமாக்கலுக்கு எதிரான தூய்மைப் பணியாளர்களின் போராட்டங்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. சமூக நீதி வேசம் போட்டுக் கொண்டே அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது. நம்ம ஸ்கூல் திட்டம், இல்லம் தேடிக் கல்வி எனும் ஏமாற்று பெயர்களின் மூலம் தேசிய கல்விக் கொள்கையின் தமிழக பதிப்பை சத்தமின்றி நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது அரசுப் பல்கலைக் கழகங்களுக்கு மூடுவிழா நடத்தும் விதமாக தனியார் பல்கலைக் கழக சட்டத்தை திருத்த முயற்சித்து வருகிறது. காம்பாக்ட் திட்டங்களின் அடிப்படையிலான யு.ஜி.சி வழிகாட்டலுக்கு சட்ட வடிவம் கொடுக்கிறது. பாஜக அரசின் கல்வித் திட்டங்களை தமிழகத்தில் வேறு வார்த்தகைளில் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது திமுக அரசு. உயர்கல்வியை முழுவதும் தனியார்மயமாக்கி பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் கொள்ளைக் கூடங்களாக மாற்றி வருகிறது. நோயாளிகளை மருத்துவப் பயனாளிகளாக்கி, அவர்களுக்கு நோய் தீர்க்கும் மருத்துவ சேவை அளிப்பதை கைவிட்டு மருத்துவ கார்ப்பரேட்களின் கிளைன்ட்களாக (Client) மாற்றி வருகிறது. இனி காசுள்ள மருத்துவப் பயனாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் கிடைக்கும்; மருத்துவம் பார்க்க இயலாத ஏழைகள் கொத்துக்கொத்தாக சாகட்டும் என்கிறது இந்த சமூக அநீதி அரசு. பாஜக அரசின் மின்சார சட்டத் திருத்தத்தை இங்கு ஏற்கெனவே நடைமுறைப்படுத்த துவங்கி விட்டது திமுக அரசு. ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்ந்து கொண்டே வருகிறது.விவசாயம் - சிறுகுறு தொழில்களுக்கான மின்சார மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியின் நிர்வாகம் முழுவதும் சீரழிந்து கிடப்பதன் சாட்சியே கரூர் படுகொலைகள். நித்தம் நடக்கும் சாதிக் கொடுமைகளை தடுக்க வக்கின்றி நிற்கிறது. 4 ஆண்டு கால ஆட்சி முழுவதும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணைநின்று தாழ்த்தப்பட்ட சாதி உழைக்கும் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டது. திமுக அரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அவர்களுக்கு துரோகமிழைத்தன. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் அவர்களுக்கு துணை நிற்பது போல கண்துடைப்பு நாடகமாடி வருகிறது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் இயற்ற ஜனநாயகவாதிகள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். அப்போதெல்லாம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்க ஆணவப் படுகொலைகளுக்கு தனிச்சட்டம் தேவையில்லை என பேசி வந்தார் மு.க.ஸ்டாலின். இப்போது தேர்தலுக்காக தனிச்சட்டம் கொண்டு வருவது போல நாடகமாடுகிறார். இதற்கென தனிநபர் ஆணையத்தை அமைத்துள்ளார். எதற்கெடுத்தாலும் தனிநபர் ஆணையம்தானா? - கரூரில் மரணங்களை விசாரிக்கவும் தனி நபர் ஆணையம் - சாதி ஆணவப் படுகொலைகளுக்கும் தனி நபர் ஆணையம். ஏனெனில் இவர்களின் தேவைக்கு வளைக்க அல்லது ஆணைய பரிந்துரைகளை மூடிமறைக்க இவ்வகையான ஆணையம்தான் இவர்களுக்கு ஏதுவாக இருந்து வருகிறது என்பதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசயத்திலேயே பார்த்தோம். எனவே தனிநபர் ஆணையம் என்பது கண்துடைப்பு நாடகமே ஆகும். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக உடனடியாக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - அதற்கு சட்ட வல்லுநர்கள், இடதுசாரி அமைப்புகள், ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய ஆணையம் அமைக்க வேண்டும்.
ஆனால் இவற்றையெல்லாம் திமுக அரசு செய்யும் என எதிர்பார்ப்பது மாயையாகும். நாம் மேலே கூறியவாறு பாஜக அரசின் இந்துத்துவ பாசிசத்தின் தமிழக வடிவத்தைத்தான் மு.க.ஸ்டாலின் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஏஎம்கே வரையறுத்து கூறியது போல பாசிசத்தின் தொங்குசதை என்பதை நிரூபணமாக்கி வருகிறது.
எனவே மோடி தலைமையிலான பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பாசிச ஆட்சியைத் தூக்கியெறிய அனைத்து உழைக்கும் வர்க்கங்களும், தேசிய முதலாளிகளும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உடனடியாக அணிதிரள வேண்டும். இதையே பாசிச எதிர்ப்பு செயல்தந்திரமாக நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார் நமது ஆசான் ஏஎம்கே. அவரின் நினைவை நெஞ்சிலேந்தி அவரின் லட்சியங்களை அடையும் பயணத்தில் கீழ்க்கண்ட முழக்கங்களின் கீழ் அணிதிரள அழைக்கிறோம்.
* நவம்பர் 25 ஏஎம்கே நினைவு நீடூழி வாழ்க!ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவை அடிமைப்படுத்தும் மோடி ஆட்சி ஒழிக!
* டிரம்ப் கும்பலின் பாசிச ஆட்சிக்கு எதிரான அமெரிக்க மக்களின் "மன்னராட்சி வேண்டாம் (No kings)" முழக்கங்கள் ஓங்குக! போராட்டங்கள் வெல்க!
* கலையும் டிரம்ப்பின் அமைதிப் புறா வேஷம்! தீவிரமடையும் காசா - இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போர்!
* அமெரிக்க, ரசிய - சீன, ஐரோப்பிய யூனியன் ஏகாதிபத்தியங்களே! உக்ரைன், பாலஸ்தீனம், தைவானில் இருந்து வெளியேறுங்கள்!
* ஏகாதிபத்தியங்களின் பனிப்போர் தயாரிப்புகளை எதிர்ப்போம்! பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிப்போம்!
* பாசிச மோடி கும்பலே! குவாட் கூட்டமைப்பில் இருந்து வெளியேறு!
* விவசாயிகளை மேலும் நெருக்கடிக்கு தள்ளும் மோடி கும்பலின் மின்சார சட்ட திருத்தம் 2025 ஐ எதிர்ப்போம்!
* டிரம்ப்பின் வரி விதிப்புகளுக்கு அடிபணியும் மோடி ஆட்சி ஒழிக!
* மோடி கும்பலின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு கார்ப்பரேட் நலன்களுக்கானதே!
* உயர்கல்வியை தனியார்மயமாக்கும் திமுக ஆட்சியின் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்போம்!
* கரூர் படுகொலைகள்: அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், ஜனநாயக அமைப்புகளை உள்ளடக்கிய விசாரணைக்குழு அமைக்கப் போராடுவோம்!
* திண்டுக்கல் - நிலக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை (நாயுடு), படுகொலை செய்த தேவர் சாதிவெறியர்களை கைது செய்! கொலையாளிகளை பாதுகாக்கும் திமுக ஆட்சியை கண்டிப்போம்!
* ஒரு நபர் ஆணையம் என்பது தேர்தல் நாடகமே! சட்ட வல்லுநர்கள், இடதுசாரி அமைப்புகள், ஜனநாயக இயக்கங்களை உள்ளடக்கிய ஆணையம் அமைத்து சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க உடனடியாக சட்டமியற்று!
* மோடி தலைமையிலான பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிச ஆட்சியை தூக்கியெறிவோம்!
(நன்றி: மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்)
சமரன்
(அக்டோபர் - நவம்பர்2025 மாத இதழில்)