வறுமை, வேலையின்மை, ஊழல்: நாட்டை இருண்ட காலத்திற்குள் தள்ளிய மோடியின் பத்தாண்டு கால ஆட்சி

சமரன் சிறப்புக் கட்டுரை

வறுமை, வேலையின்மை, ஊழல்: நாட்டை இருண்ட காலத்திற்குள் தள்ளிய மோடியின் பத்தாண்டு கால ஆட்சி

குறிப்பு: இந்த கட்டுரை மேமாதம் முதல் வாரத்திலேயே எழுதப்பட்டது என்பதை கணக்கில் கொண்டு வாசிக்குமாறு வாசகர்களை கேட்டு கொள்கிறோம் - சமரன் ஆசிரியர்.   

2024 நாடாளுமன்ற தேர்தல் 7கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு சற்று முன்புதான் காங்கிரசும் பாஜகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன - காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 5ம் தேதியும், பாஜக ஏப்ரல் 14ம் தேதியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. காங்கிரஸ், நீதி பத்திரம் - நியாய் பத்ரா (Nyay Patra) என்ற பெயரிலும் பாஜக, உறுதிமொழி பத்திரம் - சங்கல்ப் பத்ரா (Sankalp Patra) என்ற பெயரிலும் அவற்றை அறிவித்தன. 

பாஜகவின் தேர்தல் அறிக்கை அரசியல்-பொருளாதார மையப்படுத்துதலையும் இந்துராஜ்ஜியத்தை கட்டியமைப்பதையும் (பாசிச நடவடிக்கைகளை) அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. அதோடு சிற்சில ஏமாற்று சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. காங்கிரசோ தங்களை ஒரு ஜனநாயக கட்சி போல காட்டிக் கொள்ளும் முற்றிலும் வார்த்தைஜால வாக்குறுதிகளை அள்ளிவீசும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாஜகவின் இந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களில் மாய்ந்து வருகின்றனர். அதற்கு அடிப்படையாக இருப்பது அது அமல்படுத்திவிரும் தனியார்மய-தாராளமய புதிய பொருளாதாரக் கொள்கைகள்தான். அதை கைவிடுவோம் என்ற வாக்குறுதி ஒன்றுதான் இந்த துயரங்களில் இருந்து கொஞ்சமாவது விடுபட வழிவகுக்கும். பாசிசத்திற்கு எதிராக இன்று ஜனநாயக வேடம் போடும் காங்கிரஸ் அந்த வாக்குறுதியை கொடுக்குமா? நிச்சயம் அப்படியொரு வாக்குறுதியை கொடுக்காது. ஏனெனில் காங்கிரசும் பாசிசத்தை வளர்த்தெடுத்த கட்சியே ஆகும். காங்கிரசின் இந்த ஜனநாயக முகமூடி என்பது ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் நிலையே ஆகும். 

பாஜகவின் 10 ஆண்டு இருண்டகால ஆட்சி 

மோடியின் உத்திரவாதம் என்பது உத்திரவாதத்திற்கே உத்திரவாதம் என பேசிவரும் பாஜக கும்பல் தங்களது உத்திரவாதங்களாகவும் சாதனைகளாகவும் ராமர் கோவில், குடியுரிமை சட்டம், காஷ்மீர் 370 ரத்து ஆகியவற்றை பட்டியலிடுகின்றது. அவற்றை சொன்னபடி நிறைவேற்றிவிட்டோம், அடுத்து ஆட்சிக்கு வந்தால் பொதுசிவில் சட்டத்தையும் நிறைவேற்றிவிடுவோம் என்கின்றது. இந்துராஜ்ஜியத்தை நிறுவும் தங்களது நோக்கத்தில் வெற்றிபெற்று வருவதாக அறிவிக்கின்றன. மதவெறியை தூண்டும் வகையில் இசுலாமியர்களுக்கு எதிராக விசத்தை கக்கி வருகிறார் மோடி. காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் (தாலி அறுத்து) பொருளாதாரத்தை பிடுங்கி வந்தேறிகளான இசுலாமியர்களுக்கு கொடுத்துவிடும் என்கிறார். இந்திய வரலாற்றில் இப்படி ஒரு பிரதமர் விசமத்தை அப்பட்டமாக கக்கியது இதுவே முதல்முறை. தனது ஆட்சியின் அமெரிக்க ஏகாதிபத்திய அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட்களின் சேவையை மூடிமறைக்க அப்பாவி இசுலாமிய உழைக்கும் மக்களை எதிரிகளாக சித்திரிக்கிறது இந்த நயவஞ்சக ஓநாய். இதைத்தவிர பாஜக ஆட்சி செய்த இந்த 10 ஆண்டில் சாதித்தது என்ன? பாஜக ஆட்சியின் பல்வேறு கார்ப்பரேட் நலத் திட்டங்கள் பற்றியும், பாசிச சட்டங்கள் பற்றியும் நாம் தொடர்ச்சியாக பார்த்து வந்துள்ளோம். இன்று பேசுபொருளாக இருக்கும் - பாஜகவின் 10 ஆண்டு இருண்டகால  ஆட்சியின் - 3 முக்கியமான அம்சங்கள் வறுமை, வேலையின்மை மற்றும் ஊழல். இவற்றை பற்றி மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பார்ப்போம். 

வறுமை

2023-ஆம் ஆண்டின் உலக பட்டினி குறியீடு (GHI)  தரவரிசை பட்டியலில் உள்ள மொத்த 125 நாடுகளில் இந்தியா 111வது இடத்தை பிடித்துள்ளது. மோடி ஆட்சிக்கு முன்பு, 2014ம் ஆண்டில் 120 நாடுகளில் 55வது இடத்தில் இருந்து இன்று மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. உலக அளவில், 44 நாடுகள் 'தீவிரமான' அல்லது 'ஆபத்தான' நிலையில் உள்ள நாடுகளாக வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக இந்தியா இடம்பெற்றுள்ளது. அண்டை  நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது.  சோமாலியா, சூடான், நைஜீரியா போன்ற பட்டினித் தேசங்களுள் பட்டினித் தேசமாய் மாறிவிட்டது. இந்த அறிக்கையின் படியே சுமார் 28.7% சதவிகிதம் பேர் உணவுப் பற்றாக்குறையில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 80கோடி மக்கள் ரேஷன் அரிசியை நம்பியே வாழும் நிலையில்தான் உள்ளனர் என்பதை அரசே ஒப்புக் கொள்கிறது எனில் அதன்படியான சதவிகிதமே சுமார் 60% சதவிகிதமாகும். வறுமையை ஒழித்து விட்டதாக நாடகமாடும் இந்த பாஜக அரசு உண்மைக்கு புறம்பான கணக்கீடுகளை காண்பித்து ஏமாற்றுகிறது. 

குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கடுமையான வளர்ச்சி குறைபாடு (35.5%) இருப்பதாகவும், ஐந்தில் ஒரு குழந்தை (19.3%) ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் மெலிந்துபோய் மரணத்திற்கு தள்ளப்படுவதாகவும் (child wasting), உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளில் சராசரியாக 42 குழந்தைகள் (4.19%) 5 வயதிற்குள்ளாகவே இறந்துவிடுகின்றனர் என்றும் அரசாங்கத்தின் தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பிலேயே (NFHS-5) தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மெலிந்துபோய் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்றும் இந்த GHI தரவரிசையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தகவல்களே மிகை மதிப்பீடாகதான் உள்ளன.

ஏனெனில், 1973-74 நிதியாண்டில் திட்டக் கமிஷன், ஒருவருக்கு ஒருநாளுக்கு தேவையான குறைந்தபட்ச உணவு அளவு கிராமப்புறங்களில் வாழ்வோருக்கு 2200கலோரிகள் என்றும் நகர்புறங்களில் வாழ்வோருக்கு 2100கலோரிகள் என்றும் நிர்ணயித்து இதற்கு குறைவான உணவோடு வாழ்பவர்கள் வறுமையில் வாழ்வதாக வரையறுத்தது. இந்த வரையறையே குறைபாடு உடையதாகத்தான் உள்ளது. விவசாயத் தொழிலில் ஈடுபடும் உழைப்பாளி 8மணிநேர உழைப்பில் ஈடுபடும்போது சுமார் 4500 கலோரிகளை இழக்கிறார். கட்டுமான தொழிலாளி சுமார் 4000 கலோரிகளை இழக்கிறார். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 75% சதவிகிதம் பேர் இவ்விரு தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். நீங்கள் உழைப்பிலேயே ஈடுபடாவிட்டாலும் குறைந்தபட்சம் 2000 கலோரிகளாவது ஒரு மனிதனுக்கு தேவை. எனவே 3700 கலோரி என்பதுதான் இந்த நாட்டின் இன்றைய உற்பத்தி முறைக்கு ஏற்ற உணவு தேவையாக இருக்க முடியும். ஆனால் உண்மையில் இன்றைய உணவு சராசரி மிக மோசமான நிலையில் உள்ளது. 1973-74ல் கிராமப்புறங்களில் 56% சதவிகிதம் பேரும் நகர்புறங்களில் சுமார் 60% சதவிகிதம் பேரும், 1993-94ல் கிராமப்புறங்களில் 58% சதவிகிதம் பேரும் நகர்புறங்களில் சுமார் 57% சதவிகிதம் பேரும், 2011-12ல் கிராமப்புறங்களில் 68% சதவிகிதம் பேரும் நகர்புறங்களில் சுமார் 65% சதவிகிதம் பேரும் உணவுப்பற்றாக்குறையுடன் இருந்து வந்துள்ளனர். 2017-18ம் நிதியாண்டின் கணக்கீட்டின் படி கிராமப்புறங்களில் சுமார் 80% சதவிகிதம் பேரும் நகர்புறங்களில் சுமார் 60% சதவிகிதம் பேரும் திட்டகமிஷனின் வரையறைபடி கூட உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.   இந்நிலை கொரோனா கால நெருக்கடிக்கு பின்பு இன்னும் மோசமடைந்துள்ளது என்பது கண்கூடாக தெரியும் ஒன்று. இந்த கணக்கீட்டின் படி பார்த்தால் கூட சுமார் 75% சதவிகிதம் மக்கள் அவர்களுக்கு தேவையான ஒரு நாளைய உணவில் பாதியை கூட எடுத்துக் கொள்ள முடியாமல் வறுமையில் உழல்கின்றனர் என்பதே உண்மை. இத்தனைக்கும் இந்தியர்கள்தான் தனது சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை உணவுக்காக செலவிடுவதில் முன்னிலையில் இருக்கின்றனர் என மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனில் சராசரி இந்திய உழைக்கும் மக்களின் வருமானம் எந்த அளவிற்கு குறைவானதாக உள்ளது என பாருங்கள். எனவே வெறும் 28.7% சதவிகிதம் பேர்தான் உணவுப்பற்றாக்குறையால் வாழ்வதாக GHI அறிக்கை கூறும் புள்ளி விவரங்கள் கூட மோசடியானதே. இவ்வாறு இருக்கையில் 25கோடி மக்கள் வாழ்க்கையை வறுமைகோட்டிற்கு மேல் உயர்த்திவிட்டதாகவும், வறுமையை ஒழித்துவிட்டதாகவும் நிர்மலா சீத்தாராமன் கும்பல் கூச்சமே இல்லாமல் பொய்யை பேசி வருகின்றது.  

வேலையின்மை

நாட்டில் வேலையில்லா நெருக்கடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மோடி கும்பல் இன்று, இருக்கும் வேலையையும் பறித்து உழைக்கும் மக்களை வேலைத்தேடி நாடோடிகளாக திரியும் அவலநிலைக்குத் தள்ளியுள்ளது. 

தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR - அதாவது மொத்த மக்கள் தொகையில் வேலையில் ஈடுபடும் மற்றும் வேலைத்தேடி அலையும் மொத்த மக்களின் சதவிகிதம்) புள்ளி விவரங்களை குறைத்து காண்பித்தே வருகின்றன. 15-59 வயதிற்கு உட்பட்ட தொழிலாளர் படை விகிதம், 2000ம் ஆண்டில் 54% சதவிகிதமாக இருந்து 2022ல் 42% சதவிகிதமாக குறைந்துவிட்டதாக சர்வதேச தொழிலாளர் கழகம் (International Labour organization -ILO) தெரிவிக்கிறது. அதேபோல், இந்திய பொருளாதார மையத்தின் (CMIE) புள்ளிவிவரப் படி 2016 ம் ஆண்டில் 46.2% சதவிகிதத்தில் இருந்து 2023ல் 39.5% சதவிகிதமாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பை முடிக்காமல் கொடுக்கப்படும் இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் உத்தேசமானவையே. மீதமுள்ள 60% சதவிகிதம் மக்களை அதாவது 80கோடி மக்களை உழைக்க தகுதியற்றவர்கள் என்று வரையறுப்பதாகவே அர்த்தமாகும். 

இந்த புள்ளி விவரங்களின் படியே கூட 1980களில் 4% சதவிகிதமாக இருந்த வேலையின்மை 2023ம் ஆண்டில் 8.1% சதவிகிதமாக உயர்ந்துவிட்டது. அதிலும் 15-29 வயதுடைய வேலையில்லாத இளைஞர்களின் சதவிகிதம் மட்டும் 2000ம் ஆண்டுகளில் 5.6% சதவிகிதத்தில் இருந்து 2019ல் 18% சதவிகிதமாக உயர்ந்து பின் 2020களுக்கு பிறகு 15.1% சதவிகிதமாக மாறியுள்ளது. அதாவது இந்த 20 ஆண்டுகளில் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.       

மற்றொரு அவலம் என்னவெனில் வேலையில்லாமல் காத்திருப்போரில் பெரும்பாலும் இளைஞர்கள்தான் அதாவது, வேலையற்றவர்களில் 83% சதவிகிதம் பேர் இளைஞர்களாகவே உள்ளனர். இதிலும் படித்தவர்களின் நிலைதான் மிகவும் மோசமாக உள்ளது. இந்த மொத்த வேலையில்லாத இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கு இடைநிலை அல்லது உயர்கல்வி படித்தவர்களாவர். படித்த இளைஞர்களின் இந்த பங்கு 2000 ஆம் ஆண்டில் 35.2% சதவிகிதத்திலிருந்து 2022 இல் 65.7% சதவிகிதமாக - இரு மடங்காக அதிகரித்துள்ளது. வேலையில் இருக்கும் சுமார் 85% சதவிகித இளைஞர்களும் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத திறன்குறைவான வேலையிலேயே ஈடுபடுகிறார்கள். அறிவியல், இஞ்சினியரிங் படித்த பட்டதாரிகள் கூட சுவிக்கி, சொமேட்டோ போன்ற கிக் (gig) தொழிலாளர்களாக மாறியுள்ளனர். பி.ஹெச்.டி. படித்தவர்கள் டாஸ்மாக் வேலைக்கு செல்கின்றனர். ஒருபுறம் கல்வியை வணிக பொருளாக மாற்றி தரமில்லாத கல்வியை கொடுத்து தனியார் முதலாளிகள் லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டிக் கொள்ள அனுமதிக்கிறது இந்த அரசு. அப்படியே பல லட்சங்களை கொட்டி படித்தாலும் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் அல்லல்படும் அவலநிலையை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் என கூறப்படும் ஐஐடி (IIT) மற்றும் பிட்ஸ் பிலானி (BITS Pilani)களில் படித்த பட்டதாரிகளில் 36% சதவிகிதம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. இந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இதுவரை இப்படியொரு மோசமான நிலையை சந்தித்ததில்லை. இந்த கல்வி நிலையங்களில் பயின்றோருக்கே இந்த நிலை எனில் மற்ற பட்டதாரிகளின் நிலையை சொல்லவா வேண்டும்.       

வேலைவாய்ப்பில் மாநிலங்களுக்கிடையேயும் ஏற்றத்தாழ்வு நீட்டிக்கிறது. பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களும் பல ஆண்டுகளாக மோசமான வேலைவாய்ப்புகளை கொண்டுள்ளன. விவசாயம் நசிந்து வருவதாலும் விவசாயத்தில் இருந்து வெளியேறும் கூலித் தொழிலாளிகள் நகரங்களை நோக்கி வேலைதேடி புலம்பெயர்கின்றனர். அவர்களை ஈர்த்துக் கொள்ளும் அளவிற்கு தொழிற்துறை இந்தியாவில் இன்னும் வளர்ச்சியடையவில்லை. அது 1960களில் எந்த நிலையில் இருந்ததோ அதைவிட பின்தங்கியே உள்ளது. கட்டுமானத்துறை மட்டுமே அவர்களுக்கு ஓரளவுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. அல்லது சேவைத் துறைகளில் முறைசாரா வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் பெரும்பாலான தொழிலாளர்கள் - சுமார் 90% சதவிகிதம் பேர் எந்தவித பணி உத்திரவாதமும் இல்லாத முறைசாரா வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில் இருக்கும் பெரும்பாலானோருக்கு பணிவிடுப்பு, ஓய்வூதியம், போனஸ், விபத்து காப்பீடு உள்ளிட்ட எந்தவித அடிப்படை உரிமைகளும் கிடையாது. அவர்கள் அத்துக் கூலிகளாகவோ அல்லது காண்டிராக்ட் கொத்தடிமைகளாகவோதான் மாற்றப்பட்டுள்ளனர். காண்டிராக்ட் என்றால் நீண்ட காலத்திற்கு கூட கிடையாது; 1 வருடத்திற்கும் குறைவான குறுகிய காலத்திற்குதான். அவர்கள் எப்போது வேண்டுமானலும் பணியிடத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் அபாய நிலையிலேயே வேலை செய்து வருகின்றனர். 

இந்திய அளவில் 62% சதவிகிதம் விவசாயத் தொழிலாளர்களும் கட்டுமானத்துறையில் 70% சதவிகிதம் தொழிலாளர்களும், தொழிலாளர் நலத்துறை ஆணையர் நிர்ணயிக்கும் தினசரி குறைந்தபட்ச ஊதியத்தை கூடப் பெறுமுடிவதில்லை என ஐ.எல்.ஓ. (ILO)வே தெரிவிக்கிறது. இந்த முதலாளித்துவ உலகில் தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் எப்போதும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் இன்று அவர்களின் உணவுக்கேற்ற ஊதியம் கூட கிடைக்கப் பெறாமல் வறுமையில் அவதியுறுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் உணவுப் பொருட்களின் விலை 71% சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் ஊதியத்தின் சராசரி 37% சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. எனில், பணவீக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் உண்மையான சம்பளம் 

5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 40% சதவிகிதம் குறைந்துள்ளது என்பதே அதன் பொருள். காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் (Periodic Labour Force Survey - PLFS) 2022-23 நிதியாண்டிற்கான அறிக்கையின்படி, மொத்தமுள்ள 43கோடி கிராமப்புற தொழிலாளர்களில் 24.6% சதவிகிதம் பேர் நாளொன்றுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தையும், 11.2% சதவிகிதம் பேர் 100லிருந்து 200ரூபாய்க்குள்ளும்தான் ஊதியம் பெறுகின்றனர். அதேபோல், மொத்தமுள்ள 13.8கோடி நகர்ப்புற தொழிலாளர்களில் சுமார் 10% சதவிகிதம் பேர் நாளொன்றுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தையும், 6.5% சதவிகிதம் பேர் 100லிருந்து 200ரூபாய்க்குள்ளும்தான் ஊதியம் பெறுகின்றனர்.   

சுயதொழில் செய்பவர்களின் உண்மையான வருமானமும் 2019க்குப் பிறகு வெகுவாக குறைந்துள்ளது. அவர்களில் கிராமப்புறங்களில் 17% சதவிகிதம் பேரும் நகர்ப்புறங்களில் 12% சதவிகிதம் பேரும் 200க்கும் குறைவான ஊதியம் பெறும் நிலையிலேயே உழைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் கொடுமை என்னவென்றால், ஊதியமே கிடைக்காத குடும்ப உழைப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் 22% சதவிகிதமும் நகர்ப்புற உழைப்பாளர்களில் 6.6% சதவிகிதமும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உயர்ந்துள்ளது. மொத்தத்தில் பார்த்தால் ஒருபக்கம் வேலையின்மை அதிகரித்து வருகிறது அல்லது வேலை கிடைத்தாலும் அது கொத்தடிமைகளை விட மோசமான நிலையிலேயே உள்ளது. இதுதான் மோடி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. இது சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையைவிட வானளாவ உயர்ந்து மோடி ஆட்சியின் அவலத்தை பறைசாற்றுகிறது.

ஊழல் 

ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்கப்போவதாக கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு ஊழல் புரிவதில் உலகிற்கே வழிகாட்டியாக திகழ்கிறது. 

 • 60ஆயிரம் கோடி ரூபாய் ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் 
 • 69,381 கோடி ரூபாய் தொலைத்தொடர்பு நிர்வாக அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல்
 • 312 கோடி ரூபாய் ஓஎன்ஜிசி ஒப்பந்த ஊழல் 
 • 8300 கோடி ரூபாய் கேமன் தீவு அந்நிய மூலதன (FDI) ஊழல் 
 • 91,000 கோடி ரூபாய் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீசிங் & ஃபைனான்சியல் சர்வீசஸ்  நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் ஊழல்
 • 3லட்சம் கோடி ரூபாய் 5ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் ஊழல்
 • 7லட்சம் கோடி ரூபாய் உள்கட்டமைப்பு திட்ட ஊழல்
 • 134 கோடி ரூபாய் (5 சுங்க சாவடிகளில் மட்டும்) சுங்கச்சாவடி ஊழல். 
 • 160 கோடி ரூபாய் விமான எஞ்சின் தயாரிப்பு ஒப்பந்த ஊழல் 
 • 4.78லட்சம் கோடி ரூபாய் வரிவருவாய் கணக்கில் ஊழல்
 • 2.19லட்சம் கோடி ரூபாய் அந்நிய கடன் கணக்கில் ஊழல்
 • 4.5லட்சம் கோடி ரூபாய் செபி பங்குச் சந்தை மோசடி ஊழல்
 • 29,000 கோடி ரூபாய் இந்தோனேஷிய நிலக்கரி கொள்முதல் ஊழல்
 • 18லட்சம் கோடி அதானி குழும பங்குச் சந்தை மோசடிக்கு துணை போனது.
 • 25லட்சம் கோடி ரூபாய் மல்லையா, நீரவ் மோடி, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களுக்கு வாரக்கடன் தள்ளுபடி செய்ததில் ஊழல் 
 • 35000 கோடி ரூபாய் வங்கி மினிமம் பேலன்ஸ் மோசடி ஊழல்
 • 70 லட்சம் கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்களை கூறுபோட்டு வித்த பணமாக்கல் திட்ட ஊழல்
 • 6060 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் (2019க்கு பிறகு மட்டும், இதில் பல பத்திரங்கள் கணக்கில் காட்டாமல் மூடிமறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது) மூலம் பெற்றதில் 3.7லட்சம் கோடி ரூபாய் வரை ஒப்பந்த ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. 

இவ்வாறு மோடி அரசு ஊழல் செய்யாத துறைகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை படரவிட்டுள்ளது.

மோடியின் பத்தாண்டுகால ஆட்சி நாட்டை இவ்வாறு ஓர் இருண்ட காலத்தில் இழுத்துச் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில்தான் 18வது நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவும் காங்கிரசும் ஆட்சியை பிடிப்பதற்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. அந்த வாக்குறுதிகள் நாட்டை இருண்ட பாதையில் இருந்து மீட்டு மக்களுக்கு விடியலை பாய்ச்சுமா என்பதையும் பார்ப்போம். 

சங்கல்ப் பத்ரா Vs நியாய் பத்ரா

2014ல் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறிய பாஜக 2019 மற்றும் தற்போதைய அறிக்கைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறவில்லை. மாறாக உள்கட்டமைப்பு, ஸ்டார்ட் அப், மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீடுகள் செய்தல், வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பொத்தாம் பொதுவாகவே கூறியுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் கடந்த 2019 தேர்தல் அறிக்கையில் 20 லட்சம் மத்திய அரசுப்பணிகள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது. தற்போதைய அறிக்கையில் அதை 30 லட்சம் என்று கூறியுள்ளது. சமூக பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் நிரப்பப்படாமல் இருக்கும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டு இடங்களை அனைத்து துறைகளிலும் ஓராண்டுக்குள் நிரப்புவதாகவும் பெண்களுக்கு 50% சதவிகிதம் ஒதுக்குவதாகவும் கூறியுள்ளது. அதைத்தாண்டி தொழில்துறையில் முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் புதிய தொழில்களை ஊக்குவிப்பதன் வழியாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரசும் கூறியுள்ளது. "மினிமம் கவர்ன்மெண்ட் மேக்சிமம் கவர்னென்ஸ் (Minimum government, Maximum governanace)" என்பது புதிய பொருளாதாரக் கொள்கையின் தாரக மந்திரமாக உள்ளது. அதாவது அரசாங்க பணிகளை குறைத்துவிட்டு அதை தனியாருக்கு தாரை வார்ப்பது. காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட துறைகளில் அதிமுக்கியமான நிர்வாக பணிகளுக்கு மட்டும் அரசு ஊழியர்களை வைத்துக்கொள்வது ஏனைய அனைத்து பணிகளையும் தனியாருக்கு விட்டு விடுவது. இந்த நிலையில் 30லட்சம் பணியிடங்களை நிரப்புவோம் என்ற காங்கிரசின் வாக்குறுதி முற்றிலும் மோசடியானதே ஆகும். இவ்விரு கட்சிகளும் வளர்ச்சி திட்ட மாயைகளை காட்டி வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாக ஏமாற்றுகின்றன. அப்படி உள்கட்டமைப்பு, ஸ்டார்ட் அப் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்குமெனில் வேலையில்லா நெருக்கடி தீர்ந்திருக்க வேண்டுமே. அப்படி ஏதும் கடந்த 10 ஆண்டுகளில் நிகழவில்லையே ஏன்? 

நிதி மூலதனங்கள் உற்பத்தி துறையில் வருவதற்கு மாறாக பங்குச் சந்தை மற்றும் ஊக வாணிபத்துறையிலும் தான் வருகிறது. உள்கட்டமைப்புத் திட்டங்கள் முழுவதும் இங்கு கொட்டிகிடக்கும் கனிமவளங்களை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிப்பதை நோக்கமாக கொண்டே உருவாக்கப்படுகின்றன. அவை நாட்டின் விவசாயம், சுதேசிய தொழில் வளர்ச்சி அனைத்தையும் காவுவாங்கி மூலதனத்தை திரட்டி பறந்தோடுகின்றன. இந்தியா போன்ற நாடுகளின் 80% சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தையும், சிறுகுறு உற்பத்தித் தொழில்களையும் ஆதாராமாக கொண்டே வாழ்கின்றனர். இந்த நிதி மூலதன ஆதிக்கம் இவை இரண்டையும் நலிவடைய செய்துவிட்டது. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும் என்கிறது பாஜக அரசு. ஏற்கெனவே விவசாயம், சிறுகுறு தொழில்களுக்கான மானியங்களை ஒழித்துவிட்டது. அவர்களை மேலும் கடன்காரர்களாக மாற்ற கடனளிப்புத் திட்டங்களை ஊக்குவிக்கிறது. மோடி அரசு அமல்படுத்திய ஜி.எஸ்.டி வரி விதிப்பும் சிறுகுறு தொழில்கள் நசிவில் ஒரு முக்கிய பங்காற்றியது. காங்கிரசு இந்த தேர்தல் அறிக்கையில் கூட ஜி.எஸ்.டி வரியை நீக்குவோம் என வாக்குறுதி அளிக்கவில்லை; மாறாக அதில் சில திருத்தங்களை செய்வோம் என்றுதான் கூறியுள்ளது. அதனால் ஜி.எஸ்.டியை நீக்கவும் முடியாது.    

குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டரீதியான உத்திரவாதத்தை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வரும் சூழலில் குறைந்தபட்ச ஆதாரவிலையை அதிகரிக்கப்போவதாக பாஜகவும் எம்எஸ்.சுவாமிநாதன் அறிக்கை பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்று காங்கிரசும் தெரிவித்துள்ளன. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் எனில் தற்போதைய விவசாயிகளின் போராட்டத்திலேயே நிறைவேற்றி இருக்கலாமே ஏன்? தேர்தல் மூலம் வெற்றிபெற்று அடுத்த ஆட்சி அமைத்தால்தான் நிறைவேற்ற முடியுமா? யாரை ஏமாற்றுகிறது பாஜக? இந்திய விவசாயத்துறையை உலக வர்த்தக கழகத்தின் காலடியில் வைத்துவிட்டு இவ்விரு கட்சிகளும் நடைமுறையில் நிறைவேற்ற முடியாது என தெரிந்தும் மோசடியான வாக்குறுதிகளையே அள்ளி வீசி வருகின்றன.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 2030-க்குள் 7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று பாஜக கூறுகிறது. இந்திய பொருளாதாரத்தை இரட்டிப்பாக்குவோம் என காங்கிரசு கூறுகிறது. ஆனால் இவர்கள், நாட்டை ஏற்கெனெவே 195 லட்சம் கோடிக்கும் மேலான கடனாளி நாடாக மாற்றி விட்டார்கள். இந்த பத்தாண்டுகளில் மட்டும் 140 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளது பாஜக அரசு. இதில் பொருளாதாரத்தை உயர்த்துவோம் இரட்டிப்பாக்குவோம் என்பது மோசடி கண்வித்தைகளே ஆகும். தனிநபர் ரீதியான பொருளாதார வளர்ச்சியில் (GDP per capita) இந்தியா அதலபாதாளத்தில் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் வளர்வதாக காண்பித்தாலும் அது கடன் பொருளாதாரமாகவும், ஊகமூலதன பொருளாதாரமாகவும், குமிழிப் பொருளாதாரமாகவுமே இருக்குமே ஒழிய உண்மையான சுதேசிய பொருளாதார வளர்ச்சியாக இருக்கப் போவதில்லை. இதன் மூலம் பலனடையப் போவது ஒட்டுண்ணி  முதலாளித்துவ கும்பலான அம்பானி -அதானிகளே ஒழிய பரந்துபட்ட உழைக்கும் மக்கள் அல்ல.

பாஜக அதிகாரத்தை மையப்படுத்துகிறது. காங்கிரஸ் கூட்டாட்சிக்கு ஒத்திசைவு அளிக்கிறது என்று தேர்தல் வாக்குறுதிகளை காண்பித்து திருத்தல்வாதிகள் சிலர் ஏமாற்றுகிறார்கள். இந்திராவின் எமெர்ஜென்சி காலத்தில் மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை திமுகவும், அதிமுகவும் மாநிலப்பட்டியலுக்கு மாற்ற சொல்கின்றன. ஆனால் காங்கிரஸ் அது குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று மட்டுமே கூறியிருக்கிறது. எனவே மாநில சுயாட்சி என்பது இந்த இரண்டு பாசிச கட்சிகளின் பட்டியலிலும் இடம்பெறவில்லை. மாநில சுயாட்சி, கூட்டாட்சி முறைக்கு இரண்டு கட்சிகளுமே எதிரிகள்தான். அதேபோல், பாஜகவின் அண்ணாமலை பேசுகையில் "நாங்கள் செத்தாலும் சாவோமே ஒழிய, நீட் தேர்வை ரத்து செய்யமாட்டோம்" என்கிறார். இம்முறை தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது. நீட், கியூட் உள்ளிட்ட தேர்வுகளை அந்தந்த மாநிலங்கள் விருப்பப்படி நடத்திக் கொள்ளலாம் எனவும் தேசிய கல்விக்கொள்கை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் காங்கிரஸ் கூறியுள்ளது. ஆகையால் நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்வதோ அல்லது தேசியக் கல்விக் கொள்கையை கைவிடுவதோ காங்கிரசின் நோக்கமல்ல; வார்த்தை ஜாலங்கள் மூலம் பாஜக அரசின் மீதான மக்களின் எதிர்ப்பை பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறது.  

ஏற்கெனெவே ஔவையாரின் "வரப்புயர நீர் உயரும்.." மற்றும் "இதனை இதனால் இவன் முடிக்கும்..." போன்ற சில திருக்குறள்களையும் தமிழ்நாட்டில் சில கூட்டங்களில் பேசுகையில் தமிழை சிதைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இந்த லட்சணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளது பாஜக. ஆனால், "தமிழை செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட கிளாசிக்கல் இன்ஸ்டிட்யூட்டுக்கு இன்னமும் பணியாளர்களை நியமிக்கவில்லை. தமிழுக்கு கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் பயன்பாட்டில் இல்லாத செத்தமொழியான சமஸ்கிருதத்துக்கு 1400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி, தெய்வீக தமிழ் என பேசி தமிழ் மொழியை காப்பதாக ஏமாற்றி வருகிறது பாஜக. ஆனால் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக மாற்ற கோரியும் கல்வி முதல் ஆராய்ச்சி வரை அனைத்து துறைகளில் தமிழை ஆட்சிமொழியாக்க கோரியும் நூறாண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பாஜக, காங்கிரசு இவ்விரு பாசிச கட்சிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய இனங்களின் சுதேசிய வளர்ச்சி ஏகாதிபத்திய அடிவருடிக் கூட்டத்திற்கு ஆபத்தாக அமையும் என்பது தெரிந்தேதான் அதனை தடுத்து வருகின்றன. ஆனால் இந்த தேர்தலில் திருவள்ளுவரையும் தமிழையும் காட்டி ஏமாற்றி வருகின்றன.

இந்துராஜ்ஜியத்தை அமைக்கும் பாதையில் பாஜக, ஏற்கெனவே காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கம், ராமர் கோவில் திறப்பு, சிஏஏ சட்டம் ஆகியவற்றை நாடு முழுவதும் எழுந்த பலத்த எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றியுள்ளது. இதோடு பொது சிவில் சட்டத்திற்கான வரைவையும் ஏற்கெனவே தயார் செய்துவிட்டது. இந்த முறை ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது, ஒரே நாடு ஒரே தேர்தல், பொது வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை நிறைவேற்றுவோம் என இந்துராஜ்ஜிய வாக்குறுதிகளை அப்பட்டமாக வெளியிட்டு வருகிறது பாஜக. பாஜக கொண்டுவந்த பாசிச கருப்புச் சட்டங்களை கைவிடுவோம் என உறுதியாக வாக்குறுதியளிக்க வக்கற்ற காங்கிரசு அவற்றில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்வோம் என்று பூசி மொழுகுகிறது.

பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காங்கிரசு. 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் போன்ற மாபெரும் ஊழல்களில் சிக்கிதான் ஆட்சியை இழந்தது காங்கிரசு. அதற்கு ஊழல் ஒழிப்பு பற்றி பேச என்ன அருகதை உள்ளது. அப்படியே ராகுல்காந்திக்கு ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளக் கொள்கைகளால் அது நிச்சயம் சாத்தியமில்லை என்பதே உண்மை. ஊழலின் ஊற்றுக்கண் ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கம்தான் அதனை ஒழிக்காமல் ஊழல் ஒழிப்பு என்பதெல்லாம் வெற்று நாடகமே. பாஜக எவ்வாறு காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்க ஊழலை சாக்காகப் பயன்படுத்தியதோ அதேபோல ஐ.டி. அமலாக்கத்துறை உள்ளிட்ட கருவிகளை பாஜக போன்ற கட்சிகளை மிரட்டி பணிய வைக்க வேண்டுமானல் காங்கிரசு பயன்படுத்தும் அவ்வளவே.   

இவை தவிர ஐந்தாண்டுகளுக்கு இலவச ரேஷன், மூன்று கோடி ஏழைகளுக்கு வீடுகள், மூன்று கோடி பெண்களுக்கு தீதீ (லட்சாதிபதி அக்கா) திட்டம், திருநங்கைகளுக்கு ஆயுஷ்மான் யோஜனா திட்டம் என பாஜகவும்; 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும், மகாலட்சுமி யோஜனா திட்டம் மூலம் ஒவ்வொரு ஏழைக் குடும்ப பெண்களுக்கும் ஆண்டுக்கு 1லட்சம் ரூபாய் வழங்கப்படும், மருத்துவக் காப்பீடு 25லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று காங்கிரசும் அறிவித்துள்ளன. நாட்டின் இன்றைய நெருக்கடிகளை மூடிமறைத்து அதனை தீர்ப்பதற்கான எவ்வித ஆரோக்கியமான திட்டங்களையும் முன்வைக்காமல் சொற்ப சலுகைகளை காண்பித்து மக்களை ஏமாற்றுகின்றன. இந்த ஏமாற்றுத் திட்டங்கள் வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடிகளில் இருந்து மக்கள் மீள்வதற்கு எள்ளளவும் பயன்படப் போவதில்லை.  

கார்ப்பரேட்களுக்கு வரிசலுகைகளை வாரி வழங்கியது பாஜக அரசு. சுமார் 26லட்சம் கோடியை கார்ப்பரேட்களுக்கு வரிசலுகை அளித்துள்ளது. அந்த வரிச்சுமை அனைத்தையும் சாமானிய உழைக்கும் மக்கள் தலையில் கட்டியுள்ளது. கார்ப்பரேட்கள் மீது கூடுதலாக 2% சதவிகிதம் வரியை உயர்த்தினாலே பலகோடி பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டையும், கல்வியை அனைவருக்குமான கட்டாய உரிமையாக மாற்றவும் முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். அதை செய்வதாக இவ்விரு கட்சிகளும் எவ்விடத்திலும் தெரிவிக்கவில்லை; அவை தெரிவிக்கவும் செய்யாது. ஆனால் மோசடி (நலத்) திட்டங்களை காண்பித்து ஏமாற்றுகின்றன. அந்த சுமைகளையும் உழைக்கும் மக்கள் மீதே மறைமுக வரிகளாக சுமத்துமே ஒழியே கார்ப்பரேட்கள் மீதான வரியை உயர்த்தாது. இதற்கான அடிமை ஒப்பந்தங்களை ஏற்கெனெவே இவ்விரு கட்சிகளும் செய்துள்ளன.    

காங்கிரசு பாஜகவிற்கு மாற்று அல்ல! மக்கள் ஜனநாயக குடியரசே மாற்று!!

நாட்டின் வளங்களை ஏகாதிபத்தியங்களும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கும் தாரை வார்க்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வறுமை, வேலையின்மை, ஊழல் தலைவிரித்தாடும் ஓர் இருண்டகாலத்திற்குள் நாட்டைத் தள்ளியுள்ளது பாஜக. "பாரத் மாதா கி ஜே" என்று தேசபக்தி நாடகமாடிக்கொண்டே பாரதமாதாவை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு கூட்டிக் கொடுக்கிறது. சிதைந்த பாரதமாதாவை ஏகாதிபத்திய வல்லூறுகள் கொத்திக் குதறும்போது பீடில் வாசிக்கிறது. எனவே தேசபக்தி கொண்ட ஒவ்வொருவரும் இந்த பாசிச காட்டாட்சிக்கு எதிராக கொதித்தெழ வேண்டும்; இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  இந்த ஆர்.எஸ் எஸ் - பாஜக கும்பல்களை மிச்சமீதியின்றி துடைத்தெறிய வேண்டும்.  

அதேபோல், இந்த தேர்தலில் பாஜக தோல்வியுற்று அடுத்து காங்கிரசு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது பாசிசத்தின் பொருளியல் அடித்தளத்தை நிச்சயம் மாற்றியமைக்காது; அதனால் மாற்றியமைக்கவும் முடியாது. இவை இரண்டு கட்சிகளும் அமல்படுத்தும் அரசியல்-பொருளாதார கொள்கைகளும் ஒன்றுதான். இவர்களின் ஆட்சி வடிவங்களில் வேண்டுமானால் சிறிய மாற்றம் இருக்கலாம். உலகமயக் கொள்கைகளை அமல்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற, சட்டமன்ற கட்சியாலும் பாசிசத்தை ஒழிக்க முடியாது. நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய ஆதிக்கத்தின் கீழ் நிதிமூலதனத்துடன் பல்வேறு ஒப்பந்தங்களில் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது. பாசிசத்தின் ஆணிவேரான நிதிமூலதன ஆதிக்கத்திற்கு இவ்விரு கட்சிகளும் சேவை செய்யும் கட்சிகளே. எனவே இவ்விரு கட்சிகளின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாறக் கூடாது. அப்படி ஏமாற்றும் திருத்தல்வாத கயவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.

நிதிமூலதன ஆதிக்கத்திற்கு குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இந்திய ஆளும் வர்க்க கும்பல்களுக்கு எதிராகவும் போர்தொடுக்காமல் - உலகமய-தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையிலான ஒப்பந்தங்களையும் கிழித்தெறியாமல் - நாட்டிற்கும் உழைக்கும் மக்களுக்கும் விடிவு கிடையாது. மக்கள் ஜனநாயக குடியரசை அமைக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான பாதையில் அணிதிரள்வதே இந்த துயரங்களில் விடுபடுவதற்கான ஒரே வழியாகும். 

- சமரன் (ஜூன் மாத இதழில்)