ஏகாதிபத்தியம் உருவாக்கிய இனக்கொள்கை (ஆரிய - திராவிட இனவாதம் குறித்து) நூலின் முன்னுரை
ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும்-திராவிடமும் ஒன்றே!!
இந்தியாவில் கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரசின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த இந்திய மக்கள், காங்கிரசை புறக்கணித்து பாஜகவை ஆட்சியில் அமர்த்தினர். காங்கிரஸ் கடைப்பிடித்த அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த பாஜகவும் மற்றும் இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல்வருமான மோடி அவர்கள், காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தப் பிறகு காங்கிரசின் அதே பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை தீவிரமாகவும், பட்டவர்த்தனமாகவும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கடந்த 20 வருடங்களாக காங்கிரசும், பாஜகவும் ஒரே பொருளாதார கொள்கைகளையும், அரசியல் கொள்கைகளையும் கடைபிடித்து வருகிறது. அதாவது உலகமய தனியார்மய தாராளமய கொள்கைகளை அமல்படுத்துவதிலும், தேசிய வெறியை கட்டியமைப்பதிலும், மதவெறி கொள்கைகளை கடைபிடிப்பதிலும் சற்று ஏறக்குறைய ஒரே மாதிரிதான் செயல்பட்டு கொண்டுள்ளன.
அதேபோல தமிழகத்தில், ஆட்சியிலிருந்த அதிமுகவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வந்த திமுக, இந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்த பிறகு மத்திய அரசிற்கு இணக்கமான பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை முன்பிருந்த அதிமுகவைவிட துடிப்பாக அமல்படுத்தி வருகிறது. புதிய கல்வி கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டே நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி உள்ளாட்சி தேர்தலுக்காக சட்டவாத நாடகம் ஆடுகிறது; அரசு பொது விழாக்களில் மதவெறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அரசு நிர்வாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பது, கோயில் போன்ற பொது இடங்களில் கோவில் நிர்வாக எதிர்ப்பையும் தாண்டி திமுக அரசின் துணையோடு ஆர்.எஸ்.எஸ் மோடியின் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியது; திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சியல்ல என்று கூறி, கோவில்களின் சொத்துக்களை மீட்பதாக இறங்கி இந்துத்துவத்திற்கு தீவிரமாக சேவை செய்வதும்; மதத்தை கல்வியில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கையையும், சமூக நீதியையும் கைக்கழுவி விட்டு கல்வி நிலையங்களை மத நிறுவனங்களிடம் பணயம் வைத்து இந்துத்துவத்தையும் சாதிய கட்டுமானத்தையும் பலப்படுத்துகிறது. சமீபத்தில் விசாரணை மற்றும் தண்டனை சிறை கைதிகள் விடுதலை விசயத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து உத்திரவிட்டது. பொருளாதார ரீதியாக அமெரிக்க சார்பு நிலையெடுத்து, குவாட் அமைப்பின் மூலதனங்களை வரவேற்க 1.5 இலட்சம் கோடி அளவுக்கு தமிழக திமுக அரசு நிதி ஒதுக்கி தனது ஏகாதிபத்திய விசுவாசத்தையும் தரகு முதலாளித்துவ பக்தியையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இப்படி ஆரியம் பேசும் பாஜகவும், திராவிடம் பேசும் திமுகவும் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கை அளவில் ஒரே கொள்கையோடு செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் மக்களோட பார்வையில் தாங்கள் எதிர் கட்சிகளாகவும், எதிர் கொள்கையாளர்களாகவும் காட்டிக்கொள்ளும் பாஜக X காங்கிரஸ், திமுக X அதிமுக, பாஜக X திமுக போன்ற சூத்திரங்கள் வெறும் மாயைகளே. உண்மையில் இந்த கட்சிகள் அனைத்தும் ஒரே ஆளும் கும்பலின் இரு வேறு பிரிவுகள்தான். இந்த இரு வேறுபிரிவுகளும் எப்படி ஒரே ஆளும் கும்பலுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக தோழர் ஏ.எம்.கேவின் இந்த கட்டுரை விளக்குகிறது. ஆரியமும், திராவிடமும் எப்படி பழைய காலனியாதிக்கவாதிகள் கட்டமைத்த மாயைகள் என்பதும், இந்த மாயைகளைக் கொண்டு உண்மையாக மக்களை பாதிக்கும் காலனியாதிக்க கொள்கைகளை எதிர்த்து திரளாதபடியும், அவர்களை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திலிருந்து திசை திருப்புவதற்கு பயன்படுத்தினார்கள் என்பதையும் வரலாற்று சான்றுகளோடு விளக்குகிறார். இந்த அனைத்து ஆளும் வர்க்க அணிகளும் ஆரியத்தையோ அல்லது திராவிடத்தையோ பேசிக் கொண்டு ஏகாதிபத்திய சேவையை மூடிமறைத்து மக்களை தங்களுக்குள் மோத விடுவது அவர்களின் தந்திரமாக உள்ளது. வரலாற்றில் இந்த இரு கும்பலும் ஏகாதிபத்திய பிரிட்டிஷ் எதிர்ப்பை கைவிட்டு, மண்டியிட்டு, அவர்களுக்குச் சேவை செய்து தங்களின் விசுவாசத்தை காட்டிக்கொண்டு, நாட்டையும் மக்களையும் காட்டிகொடுத்தனர். ஆரியம் பேசிய காங்கிரசு/பிஜேபியும், திராவிடம் பேசிய நீதிக்கட்சியும் கடுமையான காலனியாதிக்கக் கொள்கைகளே மக்களின் பிரதான பிரச்சனை என்பதை மூடிமறைத்து, திசைதிருப்பி ஏகாதிபத்திய எதிர்ப்பை பின்னுக்குத் தள்ளி, பின் கட்டத்தில் கைவிட்டு, மத ரீதியாகவும், "இல்லாத" மரபின ரீதியாக மக்களை பிளவுபடுத்தி மோதவிட்டனர். அன்று மட்டுமில்லாமல் இன்றுவரை எதற்காக இந்த இரு கோட்பாடுகளையும் காலனியாத்திக்க வாதிகள் உருவாக்கினரோ, அதே விசயத்திற்காக இன்றும் ஏகாதிபத்தியச் சேவையிலும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் சேவகத்திலும் விசுவாசமாக ஊன்றி நின்று ஒரு அணி விட்ட இடத்திலிருந்து ஆட்சி அரியணை ஏறிய மற்றொரு அணி தொடர்ந்து ஓடுவதை அனைவராலும் அறிய முடியும். இந்த தொடர் ஓட்டத்திற்கு பின்னுள்ள ஆரிய X திராவிட மாயை கோட்பாட்டை பிரித்து மீளாய்வு (Decode) செய்து இக்கட்டுரையை கொடுத்தது தோழர் ஏ.எம்.கே இச்சமூகத்திற்கு செய்த கொடையாகும். இதை சமரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறது.
- சமரன்
ஏகாதிபத்தியம் உருவாக்கிய இனக்கொள்கை (ஆரிய - திராவிட இனவாதம் குறித்து) நூலின் முன்னுரை