கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களை சூறையாட அனுமதிக்கும் புதிய காலனிய வனப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்க சட்டங்களை எதிர்ப்போம்!
சமரன்

தெற்காசிய பிராந்தியத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய முகாமும் சீனா தலைமையிலான ஏகாதிபத்திய முகாமும் பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு இராணுவ-பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு தனது அடிமை சேவகத்தை மிகத் தீவிரமாக செய்து வருகிறது பாஜக அரசு. குவாட், தடையற்ற இந்தோ - பசிபிக் போன்ற கூட்டமைப்புகளும் அதன் ஒப்பந்தங்களும் அவற்றுள் முக்கியமானவை. அந்த அடிமை ஒப்பந்தங்களை தங்குதடையின்றி நடைமுறைப்படுத்த பல்வேறு பாசிச சட்டங்களை எவ்வித விவாதமுமின்றி ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றி வருகிறது பாஜக அரசு. ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் வனப்பாதுகாப்பு (திருத்த) சட்டம் 2023 (Forest Conservation (Amendment) Act 2023) மற்றும் பல்லுயிர் பெருக்க (திருத்த) சட்டம் 2023 (Bio-diversity (Amendment) Act 2023) என்ற இரு கொடிய சட்டங்களையும் மாநிலங்களவையில் நிறைவேற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக்கி விட்டது. இவை ஒன்றுக்கொன்று சேவை செய்யும் சட்டங்களாகும். இந்திய வனங்கள் வெறும் மரம் அடர்ந்த பகுதி அல்லது பொருளாதார ரீதியான வளங்களை கொண்டது மட்டுமல்ல. அவை பூமியின் தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாகவும் உள்ளன. ஆகையால் இவ்விரு சட்டங்களும் ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்புடையவைகாக உள்ளது. இவ்விரு சட்டங்களையும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பாமல் நேரடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஒப்புதலோடு மட்டும் ஜனநாயக விரோதமாக அரங்கேற்றியுள்ளது. இவ்விரு பாசிச சட்டங்களைப் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாக பார்ப்போம்.
I
வனப்பாதுகாப்பு (திருத்த) சட்டம் 2023
ஏற்கனவே அமலில் இருக்கும் வன (பாதுகாப்பு) சட்டம்-1980-ல் சில முக்கிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதற்கான மசோதா ஜூலை 26ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2 அன்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மாநிலங்களவையில் இச்சட்டத்தை முன்வைத்தார். நாட்டின் காடுகள் மற்றும் அதில் புதைந்துள்ள வளங்களை கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்கவே இச்சட்டத் திருத்தத்தை துரித கதியாக நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு.
மோடி அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள்
1) வன (பாதுகாப்பு) சட்டம் “வன் (சன்ரக்ஷன் அவும் சம்வர்தன்) அதிநியாயம்” என ஹிந்தி மொழியில் பெயர் மாற்றப்படுகிறது.
2) 2070ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத இந்தியாவை உருவாக்குவது; 2030ம் ஆண்டுக்குள் 2.5 முதல் 3 பில்லியன் டன் அளவிற்கான கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில் காடுகளை மேம்படுத்துதல்.
3) சில வகை வன நிலங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும் வகையில் திருத்தப்படுகிறது. இந்திய வனச் சட்டம், 1927 இன் கீழ் காடாக அறிவிக்கப்பட்ட நிலம் அல்லது 1980 சட்டம் அமலுக்கு வந்த பிறகு அரசாங்கப் பதிவேடுகளில் உள்ள வன நிலம் மட்டுமே இதில் அடங்கும். டிசம்பர் 12, 1996க்கு முன் காடு என வரையறுக்கப்படாமல் பிற பயன்பாட்டிற்கு மாற்றப்பட்ட வன நிலத்திற்கு இச்சட்டம் பொருந்தாது.
4) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் சார்ந்த திட்டங்களுக்குத் (Strategic and security projects of national importance) தேவையான - நாட்டின் எல்லையில் (பன்னாட்டு எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு) இருந்து 100 கி.மீ.க்குள் உள்ள – வன நிலம், பாதுகாப்புத் தொடர்பான உள்கட்டமைப்புகளின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள அல்லது தேவைப்படும் பகுதிகளிலிருந்து 10ஹெக்டேர் பரப்பளவு வரை அமைந்துள்ள வன நிலங்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள – அங்கு இராணுவத்தினர் தங்குவதற்கான கட்டமைப்புகள் கொண்ட பகுதிகளிலுள்ள 5 ஹெக்டேர் வன நிலங்கள். ரயில்பாதைகள் மற்றும் சாலையோரம் அமைந்துள்ள சிறிய வனப்பகுதிகள் (0.1 ஹெக்டேர்), (சில வழிகாடுதல்கள் மற்றும் நிபந்தனையின் கீழ்) அரசு கட்டுப்பாட்டில் இல்லாத தனியாருக்கு சொந்தமான வன நிலங்கள் ஆகியவற்றுக்கு சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கிறது.
5) காடுகளில் சோதனைச் சாவடிகள் அமைத்தல், வேலி அமைத்தல் மற்றும் பாலங்கள் போன்றவற்றை நிறுவ இச்சட்டம் அனுமதிக்கிறது. மேலும் உயிரியல் பூங்கா (Zoo), வன உலா (Safari) மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வசதிகள் (eco-tourism facilities), செயற்கையான வனங்கள் – தோட்டங்கள் (silvicultural activities) போன்றவற்றை அமைப்பதை இச்சட்டத் திருத்தம் ஊக்குவிக்கிறது. மத்திய அரசின் உத்தரவின் பெயரில் அறிவிக்கப்படும் இதே போன்ற எந்தவொரு திட்டங்களுக்கும் வனநிலத்தை பயன்படுத்துவதை அனுமதிக்கிறது.
6) மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் சில ஆய்வுகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வழிகாட்டுதலை அவ்வப்போது அளிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு (ஆற்றல் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி போன்ற தேசிய முன்னுரிமைகளுக்கு) உதவும் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைகளுக்கான அளவீடு, விசாரணை அல்லது ஆய்வு மற்றும் நில அதிர்வு ஆய்வுகள் ஆகியவை இதில் அடங்கும். எந்தவொரு வன நிலத்தையும் பயன்படுத்த மாநில அரசு மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இதை விரிவுபடுத்துகிறது.
என வனப்பாதுப்பு சட்டம் 2023ல் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது பாஜக அரசு. இத்திருத்தங்களின் நோக்கங்களையும் அதனால் உருவாகும் பாதிப்புகளையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
சட்டத்தின் உண்மையான நோக்கங்கள் மற்றும் பாதிப்புகள்
முதலாவதாக, சட்டத்தை ஹிந்தியில் மொழி மாற்றுவதன் மூலம் மொழி வழி தேசிய இனங்களின் ஹிந்தி மொழி ஆதிக்கத்தை திணிக்கிறது. ஹிந்தி மொழி தெரியாத தேசிய இனங்கள், பழங்குடிகள் இச்சட்டத் திருத்தம் குறித்து அறிந்து கொள்ள முடியாத வகையில் மூடி மறைத்து அதன் மீதான விவாதங்கள் எழுவதையே தடுக்க முயற்சிக்கிறது. மேலும் சட்டத்தின் பெயரில் இருந்த வனங்களை பேணுதல் (Conservation) எனும் பொருள் தரும் சொல்லை நீக்கிவிட்டு மேம்படுத்துதல் (சம்வர்தன் - Promotion) எனப் பொருள் தரும் சொல்லை சட்டத்தில் இணைத்துள்ளது. இதன் மூலம் காடுகளை வணிகமயமாக்கும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.
இரண்டாவதாக, ஏகாதிபத்திய ஓநாய்கள்தான் இந்த புவி வெப்பமடைவதற்கு அடிப்படை காரணகர்த்தாக்கள். அவைதான் புவி வெப்பமடைவதை கண்டு நீலிக் கண்ணீர் வடிக்கின்றன. கியாட்டோ ஒப்பந்தத்தின் படி, கார்பன் உமிழ்விற்கு காரணமான நாடுகள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அதனால் கார்பன் உமிழ்வின் சுமைகளை காலனிய நாடுகளில் சுமத்துகின்றன. அதற்காக தான் குவாட் போன்ற கூட்டமைப்புகளில் காலநிலை மாற்றம், பசுமைக்குடில் வாயுக்கள் கட்டுப்பாடு போன்ற திட்டங்களை பேசி இந்த பூமியை காக்க வந்த ரட்சகர்கள் போல வேடம் தரிக்கின்றன. அந்த புதிய காலனிய ஒப்பந்தங்களைத்தான் மோடி அரசு தானும் இந்தியாவை காக்க வந்த ரட்சகர் போல பேசி வருகிறது. 2030 ம் ஆண்டுக்குள் 3 பில்லியன் டன் அளவிற்கு கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்ததான் இச்சட்டத்தை கொண்டு வருவதாக வாய்ச் சவடால் அடிக்கிறது.
ஆனால் இந்த வாசகங்களை பயன்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களின் மின்சார வாகனச் சந்தைக்கும் அதற்கு தேவையான செமிகண்டக்டர், லித்தியம் பேட்டரி, ஈவி சார்ஜிங் போன்ற தொழிற்கூடம் அமைப்பதற்கும் இந்தியாவை திறந்துவிட்டுள்ளது; இந்த தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் லித்தியம் உள்ளிட்ட கனிம வளங்களை சுரண்ட வனப்பகுதிகளிலும் கூட அனுமதிக்கிறது; கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த எனும் பெயரில் இயற்கையாக அமைந்த காடுகளை அழித்து அதற்கு பதிலாக செயற்கையாக பாமாயில் கொட்டை மரங்கள் உள்ளிட்ட பணப்பயிர் சார் மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிப்பது - என காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது போன்றவற்றை அமல்படுத்த உள்ளது. இவ்வாறு இயற்கையாய் வளர்ந்த மரங்களை அழித்து விட்டு செயற்கையாக வணிக நோக்கங்களுக்காக மரங்களை நடுவதானது எவ்வகையிலும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தாது என்றே இந்தோனேசியா, கினியா போன்ற நாடுகளின் அனுபவங்கள் தெரிவிக்கின்றன, மாறாக வனங்கள் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த கார்பன் – டை- ஆக்சைடை வெளியேற்றும் போக்குதான் அதிகரிக்கும் எனவும் இது புவி வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கு மாறாக மேலும் அதிகரிக்கவே செய்யும் எனவும் ஏற்கனவே புவியின் சராசரி வெப்பநிலை 1.5% சதவிகிதமளவிற்கு கடந்த 30 ஆண்டுகளுக்குள் உயர்ந்துவிட்டது அது மேலும் அதிகரித்தால் பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு மனித குலம் ஆளாக நேரிடும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
மூன்றாவதாக, பிரிட்டிஷ் அரசு காலனிய நலன்களுக்காக - ரயில்வே ஸ்லீப்பர்கள், ரயில் பெட்டிகள் மற்றும் கப்பல் கட்டுமான தேவைகளுக்காக - தேக்கு உள்ளிட்ட கட்டுமான வகை மரங்களின் (Timber) மீது தனது செல்வாக்கை நிலைநாட்ட இந்திய இந்திய வனச் சட்டம், 1878 ஐ உருவாக்கியது. காடுகளை வெட்ட காண்டிராக்ட் முறையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வன ஜமீந்தார்களை (forest zamindars) நியமித்தது. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இந்திய வனங்கள் வெட்டி பிரிட்டிசாரின் மடியில் கொட்டப்பட்டன. பின்னர் அச்சட்டம், 1927ல் திருத்தப்பட்டது. அது வன வளங்களை நிர்வகிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. அதன்படி வனங்கள் காப்பு காடுகள் (Reserve forests), பாதுகாக்கப்பட்ட காடுகள் (Protected forests), கிராம காடுகள் (Village forests) என மூன்று வகைகளாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மாகாண அரசுகள் தங்களது எல்லைக்குள் உள்ள எந்த வன நிலத்தையும் இந்த வகையினத்தின்படி அடையாளப் படுத்த வேண்டும். அத்தகைய வன நிலத்தில் உள்ள அனைத்து உரிமைகளும் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டவை என்றும் வரையறுத்திருந்தது. 1952ல் வனங்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. பின்னர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அதுவரை இந்திய வனச் சட்டம் என்ற பெயரில் இருந்து வந்த சட்டம் வன (பாதுகாப்பு) சட்டம், 1980 என மாற்றப்பட்டது. வனங்கள் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை மையப்படுத்தும் நோக்கோடு கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில் வனம் அல்லாத நோக்கங்களுக்காக வன நிலத்தை மாற்றுவதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்றது அச்சட்டம். பின்னர் 1995ம் ஆண்டு, பிளைவுட் மற்றும் வெனீர் உற்பத்திக்காக காடுகள் அளவற்று வெட்டப்படுவதை தடை செய்யக் கோரி கோதவர்மன் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்மீது 12.12.1996 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அ) காடு என்ற வார்த்தைக்கான அகராதியின் அர்த்தத்தில் புரிந்துக் கொள்ளப்பட்ட வனப் பரப்பு மட்டுமல்லாமல், அரசாங்க பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத முந்தைய காடுகளாக இருந்த – அழித்து சிதைக்கப்பட்ட – தோட்டப் பகுதிகளாக மாற்றப்பட்ட அனைத்து வகையான வன நிலங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும், ஆ) வனப்பகுதிகளில் குவாரிகள், சுரங்கங்கள் அமைப்பது தடுப்பது, இ) ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் பட்டுப்போன மரங்களை தவிர பிற மரங்கள் வெட்டப்படுவதை கண்காணிக்க வேண்டும், அவற்றை விறகு எரிபொருளுக்கு உள்ளூர் வாசிகள் பயன்படுத்தலாம் போன்ற அம்சங்களை வலியுறுத்தியது.
ஆனால், அதற்கு நேர் மாறாக இச்சட்டத் திருத்தத்தில் அடையாளங்காணப்பட்ட வனப் பரப்புகளுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும் என மாற்றியுள்ளது மோடி அரசு. இந்தச் சட்டம் இனி சில வன நிலங்களுக்கு (காடுகளாக இருக்கும், ஆனால் அதிகாரப்பூர்வமாக காடுகள் என்று பதிவு செய்யப்படாத நிகர்நிலை காடுகள் மற்றும் சமூக காடுகள் போன்றவற்றுக்கு) பொருந்தாது என்றும் மாற்றியுள்ளது. அக்டோபர் 25, 1980 மற்றும் டிசம்பர் 12, 1996 க்குமிடையில் வனமற்ற நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட எந்த வன நிலமும் இச்சட்டத்தின் கீழ் வராது என்பதையும் இது குறிக்கிறது. உதாரணமாக, இந்தக் காலத்திற்குள் ஒரு வன நிலத்தில் சுரங்க குத்தகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், (அத்தகைய குத்தகை காலாவதியாகிவிட்டாலும் கூட) அந்த நிலம் சட்டத்தின் வரம்புக்கு உட்படாது என்கிறது. எனவே, சட்டத்தின் கீழ் எந்த அனுமதியும் பெறாமல் அத்தகைய நிலத்தில் வனம் சாரா நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்திய வனப் பாதுகாப்புச் சட்டம் 1980ன் படி, வனப் பரப்பு என்பது ஒரு ஹெக்டேருக்கு மேல் 10% சதவிகிதத்திற்கும் மேல் விதான அடர்த்தி (canopy density) கொண்ட மரங்கள் நிறைந்த நிலத்தை மட்டுமே குறிக்கிறது. அவ்வகையான வனப் பரப்புகள் ஏற்கனவே இந்தியாவில் குறைந்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 10,140 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர் காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த 20 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி நடத்திய காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் வனங்களை பாதுகாக்க வழிகாட்டப்பட்ட 1996ம் ஆண்டு உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தவே இல்லை. மாறாக காங்கிரசும் சரி, பாஜகவும் சரி வனங்களையும் வளங்களையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதில்தான் அக்கறை காட்டின. ஒரு நாட்டில் 33% சதவிகிதத்திற்கும் மேல் வனப்பரப்பு இருந்தால்தான் அது பசுமையான நாடாக கருதப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே 21% சதவிகிதம்தான் வனப்பரப்பே உள்ளது. அதிலும் இச்சட்டத்திருத்தம் சில வனப்பரப்புகளை கணக்கில் கொள்ளக் கூடாது என்று அறிவிப்பதோடு ஏற்கனவே சிதைக்கப்பட்ட வனப்பகுதிகளை மீட்டமைப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் 96ம் ஆண்டு வழிகாட்டுதல்களையும் கைகழுவுகிறது. மேலும் புல்வெளிகள், புதர் செடிகள் கொண்ட வனப் பரப்புகள் ஈரப்பதத்தை உறிஞ்சி சேமித்து அதை நீராவியாக மாற்றி மழைப் பொழிவிற்கு பெரிதும் உதவுகின்றன, அவ்வகை வனப் பரப்புகளை இச்சட்டத் திருத்தம் கணக்கில் கொள்ளவில்லை என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். இது புல்வெளி காடுகள் உள்ளிட்ட கணக்கில் கொள்ளப்படாத வனப்பரப்புகளை குவாரிகள் மற்றும் சுரங்கங்களாக மாற்றிட கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு துணை போவதாகும்.
நான்காவதாக, நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்காவின் காலடியில் இந்திய இறையாண்மையை பலியிட்டு வருகிறது மோடி அரசு. சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கு தடையை உருவாக்க குவாட், தடையற்ற இந்தோ பசிபிக், போன்ற இராணுவ கூட்டமைப்புகளில் அடிமை ஒப்பந்தங்களின் மூலம் பங்கெடுத்து வருகிறது இந்திய அரசு. அதற்காக நாடு முழுவதும் எல்லையோர பகுதிகளை யுத்த களங்களாக மாற்றுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில், பாகிஸ்தானை ஒட்டி எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (Line of Contorol) மற்றும் சீனாவை ஒட்டி உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control) போன்றவற்றிலிருந்தும் 100கி.மீ.க்குள் உள்ள பரப்புகளுக்கு இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கிறது. நாட்டில் இருக்கும் 50% சதவிகிதத்திற்கும் மேலான வனப் பரப்புகள் இப்பகுதிகளில்தான் அமைந்துள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இந்த எல்லைக்குள் அடைப்பட்டு விடும். அவை மாநிலத்தின் மொத்த புவியியல் பரப்பளவைப் பொறுத்தமட்டில் காடுகளின் பரப்பளவில் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளன. மிசோரம் 85% காடுகளைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் (79%), மேகாலயா (76%), மணிப்பூர் (74%), நாகாலாந்து (74%), மற்றும் திரிபுரா (74%), சிக்கிம், (47%), உத்தரகாண்ட் (45%) கொண்டுள்ளன. இந்த மாநிலங்கள் பல்லுயிர் பெருக்க மையங்களாகவும் உள்ளன. உலகமயமாக்கல் கொள்கைகளால் ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு குறைந்து வருகிறது. அதேப்போல் காஷ்மீர் முதல் அந்தமான் வரை இந்திய எல்லையில் உள்ள பிரதான வனப்பகுதிகளிலும் இராணுவ கட்டமைப்புகளை உருவாக்க வனங்கள் அழிக்கப்படுவதை இச்சட்டம் வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் போர்வெறிக்கு இதன்மூலம் இந்திய வனங்கள் கூட பலியிடப்படுகின்றன.
பழங்குடிகள் அதிகமாக வாழும் பகுதிகளை சிவப்பு தாழ்வாரங்களாகவும் (Red Corridor) நக்சல் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் அதிகமாக உள்ள பகுதிகளாகவும் அறிவித்து அப்பகுதிகளில் வாழும் பழங்குடிகளை வேட்டையாடி வருகிறது. அவர்களின் வாழ்விடங்களை அழித்து அவர்களை தங்களது சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கிறது. அங்கு துணை இராணுவ படைகளின் முகாம்களை அமைத்து வருகிறது. அவர்களுக்கு ஒவ்வொரு கேம்ப்க்கும் 5ஹெக்டேர் எல்லைக்குட்பட்ட பகுதிகளை காலிசெய்ய அதிகாரம் வழங்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள வன நிலங்களையும் பழங்குடிகளையும் காவு வாங்கி வருகிறது. பீகார் கைமூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களை "மாவோயிஸ்ட்கள்" என்று முத்திரை குத்தி வனத்துறையினர் துன்புறுத்துவதோடு ஜனவரி 14 அன்று சுமார் 70 வீடுகளை புல்டோசர் மூலம் அகற்றியது. இவை போன்று இந்திய பழங்குடிகள் சந்திக்கும் அவலங்கள் தினசரி செய்தியாகிவிட்டன.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் என்ற பெயரில் உதான், சாகர்மாலா, பாரத்மாலா போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘போட்’ (BOT - Build - Operate - Transfer) திட்டத்தின் படி உருவாக்கப்படுகின்றன. இவை மூலப்பொருட்களையும் கனிமவளங்களையும் ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்யவும் இங்கு எவ்வித தடையுமின்றி வர்த்தகம் செய்யவும் பயன்படவுள்ளன. அத்திட்டங்களின் படி அமையவுள்ள மற்றும் ஏற்கனவே அமைந்துள்ள ரயில் பாதைகள், சாலைகள் ஒட்டியுள்ள நிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்ற திருத்தத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள வனங்களை சீரழிக்கவும் இச்சட்டம் திருத்தம் வழிவகை செய்துள்ளது. தமிழகத்தில், எட்டு வழி -பசுமைவழிச் சாலை திட்டம், நியூட்ரினோ ஆய்வு மையம் போன்றவை மூலம் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள பெரும் வனங்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள கனிம வளங்கள் கொள்ளைப் போகவிருப்பது ஒரு உதாரணம். இதே போல நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வனங்களை அழிப்பதோடு கனிமங்களை கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கும் வித்திட்டுள்ளது பாஜக அரசு. ஏற்கனவே காடுகளின் அனுமதி காரணமாக (இந்தோ-சீன எல்லைச் சாலைகள் அல்லாத) 51 எல்லைச் சாலைத் திட்டங்கள் நிலுவையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் 2019ம் ஆண்டே தெரிவித்தது. அத்தடைகளை தகர்த்து கனிம வள கொள்ளைக்கு இச்சட்டத் திருத்தம் காவலாக அமைந்துள்ளது. இவ்வாறு நாட்டில் ஏற்கனவே இயற்கையாக அமைந்துள்ள 90% சதவிகிதத்திற்கும் மேலான வன நிலங்களுக்கு இச்சட்டத்தின் மூலம் விலக்கு அளித்து வனங்களை திட்டமிட்டு அழிக்க வகை செய்துள்ளது. இதற்கு பெயர்தான் வனப் பாதுகாப்பா(!?) இது பசுமை ஒழிப்பு (Greenwashing) சட்டமே ஆகும் .
ஐந்தாவதாக, அம்பானி அதானி போன்ற பெரும் கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும் வன நிலங்களை கொள்ளையடிக்க ஏதுவாக காடுகளில் சோதனைச் சாவடிகள் அமைத்தல், வேலி அமைத்தல் மற்றும் பாலங்கள் போன்றவற்றை நிறுவுதல், உயிரியல் பூங்கா (Zoo), வன உலா (Safari) மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வசதிகள் (eco-tourism facilities), செயற்கையான வனங்கள் – தோட்டங்கள் (silvicultural activities) போன்றவற்றை அமைப்பதை இச்சட்டத் திருத்தம் ஊக்குவிக்கிறது. இந்த குறிப்பிட்ட திருத்தம், உச்ச நீதிமன்றத்தின் பிப்ரவரி 2023 ஆணைக்கு எதிரானது. (உத்தரகாண்டில் உள்ள புலிகள் காப்பகங்களில் புலி சஃபாரி நிறுவுதல், சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல் மற்றும் கட்டுமானங்களை உருவாக்குவதை தடை செய்ததோடு புலிகள் காப்பகங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் முக்கிய பகுதிகளுக்குள் கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது). புலிகள் காப்பகம், யானைகள் புத்துணர்வு முகாம் என்ற பெயரில் வன விலங்குகள் அதன் வாழிடங்களில் இருந்து இடம் பெயர்த்து செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரியல் பூங்காக்களில் அடைத்தும் சித்திரவதை செய்யப்படுகின்றன. காடுகளினால் இயற்கையாக அமைந்துள்ள பல்லுயிரி பெருக்கம் மற்றும் உணவுச் சங்கிலியை அறுத்தெறிந்து கொரோனா, நிபா, சார்ஸ் போன்ற கொடிய நோய்கள் பரவுவதற்கு வழிவகை செய்துள்ளது. அதோடு நீராதார வழித்தடங்கள் சீரழிக்கப்பட்டு வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கும் வழிவக்கும். மேலும் வன உலா, எகோ டூரிசம் என்ற பெயர்களில் பெரும் கார்ப்பரேட்கள் நலன்களுக்காக மேட்டுக்குடிகளின் நுகர்வு பொருளாக வனங்களை மாற்றுகிறது.
கிரீன் கிரெடிட் திட்டம் (Green Credit Scheme) என்ற ஒன்றையும் பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவர் மரம் நட்டு வளர்த்தால் அவருக்கு வெகுமதி புள்ளிகள் (incentive points) வழங்கப்படும். அவர் அதனை யாருக்கு வேண்டுமானாலும் கடனாகவோ அல்லது தானமாகவோ வழங்கலாம். அப்புள்ளிகளை சேர்ப்பவர்கள் கார்பன் உமிழ்விற்கு ஈடாக அல்லது இயற்கையாக உருவான மரங்களை அழிப்பதனால் ஏற்படும் நஷ்டஈட்டை சமன் செய்து கொள்ள முடியும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இதை அமைப்பு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மூலம் ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்தோ அல்லது சிறிய பண்ணைகளிடமிருந்தோ திரட்டி தங்களின் கொள்ளைக்காக அழிக்கப்படும் வனங்களுக்கு ஈடாகவும் தங்களின் தொழிற்சாலைகள் மூலம் சுற்றுச் சூழலை மாசுப்படுத்துவதற்கு ஈடாகவும் இப்புள்ளிகளை கணக்கு காட்டி ஏமாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே செயற்கையாக தோட்டங்களும், பூங்காக்களும், சிறிய வனங்களும் ஈடுசெய்யப்பட்ட காடு வளர்ப்பு (Compensatory afforestation) என்ற பெயரில் உருவாக்கப்படுவதை நம்மால் செய்தியாக கேட்கவும் பார்க்கவும் முடிகிறது. ஆனால் இவை எவ்விதத்திலும் இயற்கையாக அமைந்த வனங்களுக்கு ஈடாகாது. இவை கார்ப்பரேட்டுகளின் கனிம வள கொள்ளைக்கும், வனங்களை வர்த்தகப் பொருளாக மாற்றுவதற்குமே வழி வகுக்கும்.
ஆறாவதாக, மத்திய அரசின் உத்தரவின் பெயரில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கும் வனங்களை அழிக்க இச்சட்டம் அனுமதி வழங்குகிறது. அதோடு இந்தியாவின் வளமையான காடுகளில் உள்ள கனிம வளங்களை Extended Reach Drilling தொழில்நுட்பம் மூலம் சுரண்டி எடுப்பதற்கும் இச்சட்டம் அனுமதி வழங்குகிறது. காடுகளின் அருகாமையில் ஓரிடத்தில் பல்லாயிரம் அடி ஆழத்திலிருந்து பக்கவாட்டில் துளையிட்டு காடுகளுக்கு அடியில் இருக்கும் இயற்கை எரிவாயு, எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளையிடவும் இச்சட்டத்திருத்தம் அனுமதித்துள்ளது. மூடப்படாத போர்வெல் குழிக்குள் தவறி விழுந்த இளம் குழந்தைகளை காப்பாற்ற வக்கில்லாத இதேஅரசுதான் இயற்கை வளங்களை கொள்ளையிட மட்டும் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது.
கடைசியாக, 1927 சட்டத்தின் கீழ், வன நிலத்தை வனமற்ற நோக்கங்களுக்காக மாற்றுவது தொடர்பான முடிவுகள் மாநில அரசால் எடுக்கப்படுகின்றன. தற்போது இத்திருத்தம் வனங்களின் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து மத்தியில் குவிக்க வழிவகை செய்துள்ளது. இனிமேல் தமிழ்நாடு அரசு வனத்துறை என்ற பெயர்ப்பலகைகளை ஆங்காங்கே பார்க்க முடியாது. அவை பன்னாட்டு நிறுவனங்களின் குடில்களாக மாற்றப்பட்ட ஏதோ ஒரு மொழிபுரியாத திட்டத்தின் பெயரிலான அறிவிப்பு பலகைகளை மட்டுமே பார்க்க முடியும். வனப்பகுதிகளில் மாநில அரசுகள் எவ்வகையான அளவீடுகளும் (Survey) செய்ய வேண்டுமெனில் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் எனவும் வழிகாட்டியுள்ளது. மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி பழங்குடிகளின் கூட்டமைப்பு, கிராம சபை உள்ளிட்ட வன நிலங்களின் மீது உரிமையுள்ள அனைத்து நிர்வாக அமைப்புகளின் உரிமைகளும் இச்சட்டம் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. வன உரிமைகள் சட்டம் 2006 (Forest Rights Act, 2006) ன் படி எந்த வன நிலங்களையும் பயன்படுத்துவதற்கு கிராம சபையின் ஒப்புதல் கட்டாயமாகும். ஆனால் இச்சட்டத் திருத்தம் அதை மறுக்கிறது. வன தீர்வு அதிகாரிகளுக்கு (Forest Settlement Officers) கிராம சபைகளை விட அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பிரிட்டிஷ் கால சட்டத்தைவிட மோசமானதாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகளும் இதன் மூலம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காஷ்மீரின் உரிமைகள் பறிக்கப்பட்டு அந்நிலம் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது. அதை நாடு முழுவதும் விரிவுபடுத்தவே இச்சட்ட திருத்தத்தை கொண்டு வள்ளது பாஜக அரசு, அதோடு அரசு அமல்படுத்தும் நாசகர திட்டங்களை எதிர்த்து பாதிக்கப்படும் மக்கள் சட்டரீதியாக கூட போராடும் உரிமையையும் இதன் மூலம் பறித்துள்ளது. இனி கேட்பாரின்றி நாடு அமெரிக்கா – ஜப்பான் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் மற்றும் அம்பானி அதானிகளின் வேட்டைக் காடாக மாற்றப்படும்.
அதிமுக்கிய கனிமங்களை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கவே இச்சட்டத் திருத்தம்
லித்தியம், மங்கனீசு, கிராபைட், நிக்கல், கோபால்ட், காப்பர், பெரில்லியம், ஆன்டிமோனி, பிஸ்முத், காட்மியம், கேலியம், ஜெர்மனியம், ஹாப்னியம், இண்டியம், மாலிப்டினம், நையோபியம், பாஸ்பரஸ், பொட்டாஷ், ரீனியம், செலீனியம், சிலிக்கான், ஸ்ட்ரோண்டியம், டேண்டுலம், டெல்லூரியம், டின், டைட்டானியம், டங்ஸ்டன், வனாடியம், ஜிர்கான், பிளாட்டினம் குழும தனிமங்கள் (Platinum Group Elements - PGE) மற்றும் அருமண் தனிமங்கள் (Rare Earth Elements -REE) என 30 வகையான அதிமுக்கிய கனிமங்கள் (Critical Minerals) இதுவரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படிமங்களாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை இன்றைய வளர் தொழில்நுட்பங்களுக்கும், ஆற்றல் துறைகளுக்கும் அத்தியாவசியமான கனிமங்களாக விளங்குகின்றன. புதிய தொழில்நுட்பங்களில் சீனா அமெரிக்காவிற்கு சவால் விடும் அளவிற்கு அதைத் தாண்டி பெரிய வளர்ச்சியடைந்து வருகிறது. அது உலக மேலாதிக்கத்திற்கும் குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்திற்கும் சவாலாக வளர்ந்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்கா பல்வேறு அரசியல் பொருளாதார கூட்டமைப்புகளையும் திட்டங்களையும் உருவாக்குவதை வாடிக்கையாக்கி விட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் வனப் பகுதிகளில் 59லட்சம் டன் எடையுள்ள லித்தியம் படிமங்கள் கொட்டி கிடப்பதாக அறியப்பட்டுள்ளது. இப்படிமங்களை அகழ்ந்தெடுக்க கான்ஜி பிதேஷ் இந்தியா லிமிடெட் (Khanji Bidesh India Ltd. – KABIL) நிறுவனத்துடன் பொதுத்துறை நிறுவனங்களான தேசிய அலுமினியம் கம்பெனி, ஹிந்துஸ்தான் காப்பர் ஆகியவற்றுடன் 2019ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்தியா-ஆஸ்திரேலியா அதிமுக்கிய தனிமங்களுக்கான முதலீட்டு கூட்டமைப்பு (India-Australia Critical minerals investment partnership) ஒன்றை உருவாக்கி அதன் மூலம் 8 மில்லியன் டாலர் மதிப்பிலான இருதரப்பு ஒப்பந்தத்தை செய்துள்ளது. மேலும் இந்த அதிமுக்கிய தனிமங்களுக்கான கொள்கையின் (Critical minerals policy) அடிப்படையில் இதை 100பில்லியன் டாலர் மதிப்பில் விரிவுபடுத்துவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளது.
இந்த இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவைச் சார்ந்த எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவிற்கு இந்திய கனிம வளங்களை தரை வார்க்கவும் முடிவெடுத்துள்ளது. சென்ற ஜூன் மாதம் அமெரிக்கா சென்று வந்த மோடி பைடனுடன் இது சம்பந்தமான முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். அது விவாதம் செய்யப்படாமலேயே மூடி மறைக்கப்பட்டுள்ளது. கனிமங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பில் (Minerals Security Partership) இணைத்துக் கொள்ளதான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது பாஜக அரசு. அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், ஸ்வீடன், தென்கொரியா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியங்கள் உள்ளிட்ட 14 நாடுகள் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பு சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (Environmental, Social and Governanace – ESG) எனும் பெயரில் அதிமுக்கிய கனிமங்களை கார்ப்பரேட் ஏகாதிபத்திய நலன்களுக்காக கொள்ளையடிப்பதற்காக 2022ம் ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. இவ்வகையான அதிமுக்கிய கனிமங்கள் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இந்தியா சீனாவை சார்ந்திருந்த நிலையை தகர்த்து தனது ஆதிக்கத்தை அத்துறையிலும் நிலைநாட்டவே இந்த கூட்டமைப்பில் இந்தியாவும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அடிமை ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியாவின் அதிமுக்கிய கனிம வளங்கள் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் வனப்பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் பூமிக்கடியில் நிறைந்து காணப்படுகின்றன. ஏற்கனவே சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம் 2020 ஐ கொரோனாவால் மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருந்த கட்டத்திலும் கூட கொண்டு வந்து சட்டமாக்கியது. ஏகாதிபத்திய கனிம வள கொள்ளைக்கு நாட்டை கபளீகரம் செய்ய அனுமதித்தது. ஏற்கனவே அமலில் இருக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் சரத்துக்கள் சில தடைகளாக இருப்பதால்தான், இந்த கொள்ளை தங்கு தடையின்றி அரங்கேற தற்போது இந்த வனச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
II
பல்லுயிர் பெருக்க (திருத்த) சட்டம் 2023
வாஜ்பாய் காலத்தில் முதன்முதலில் கொண்டு வரப்பட்ட உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002 (Biological Diversity Act -2002)-ல் சில முக்கிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது மோடி அரசு. ஜூலை 25ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 அன்று, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமுமாக்கப்பட்டுவிட்டது. வனப் பாதுகாப்புச் சட்டம் விவாதிக்கப்பட்ட அளவுக்கு கூட இந்த சட்டம் சிறிதும் விவாதிக்கப்படாமலேயே சட்டமாக்கப்பட்டுவிட்டது. ஆயுஷ் (AYUSH) எனப்படும் ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கவும் அத்துறையை கார்ப்பரேட்களின் சந்தை நலன்களுக்கான வர்த்தகப் பொருளாக மாற்றவுமே இச்சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு. கொரோனா 2ம் அலை ஓய்ந்த கட்டத்தில் 2021ம் ஆண்டு டிசம்பரிலேயே சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ்வால் இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின் விவாதமின்றி நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆலோசனைக்கு அனுப்பியது. அதை தற்போது நிறைவேற்றியுள்ளது.
உலகின் மிக முக்கியமான பல்லுயிர் மண்டலமாக விளங்கும் இந்திய காடுகள்
இந்திய காடுகள் உலகின் 12 மிகப்பெரிய பல்லுயிர் மண்டலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளும் கிழக்கு இமயமலைப் பகுதிகளும் உலகில் உள்ள 32 பல்லுயிர் பெருக்க மையங்களில் (biodiversirty hotspots) சிறந்தவையாக விளங்குகிறது.
உலகில் அரிய வகையாக பதிவு செய்யப்பட்ட தாவரங்களில் 12% சதவிகிதம் இந்தியாவில் உள்ளது. சுமார் 47000 வகையான பூக்கும் மற்றும் பூக்காத தாவரங்கள், 17000 வகையான மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டு காய்கனிகள் விதைகள் வழங்கும் ஆஞ்சியோஸ்பெர்ம் (Angiosperm) தாவரங்கள் உள்ளன. 59000 வகையான பூச்சினங்கள், 2500 வகையான மீன்கள் வாழ்கின்றன. பூமியின் பதிவு செய்யப்பட்ட விலங்கினங்களில் 7% சதவிகிதத்துக்கும் அதிகமான - 90000 விலங்கினங்கள் இந்திய காடுகளில் காணப்படுகின்றன. 4000க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு காணப்படுகின்றன. அறியப்பட்ட பறவை இனங்களில் சுமார் 12.5% சதவிகிதம் உள்ளது. இவற்றில் பல தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. மேலும் இந்திய காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் கண்டம்தாண்டி வரும் பறவைகளுக்கும் தற்காலிக இல்லமாக விளங்குகின்றன. இவை ஒன்றையொன்று உணவாக்கி வாழ்வதுடன் இயற்கையான சங்கிலி பிணைப்பில் பல்லுயிரிகளின் பெருக்கத்துக்கும் வழி செய்கின்றன. இந்த சங்கிலியை அறுத்தெறிந்து அதை சிதைக்கும் நோக்கிலேயே இச்சட்டத் திருத்தத்தை கொண்டுவந்துள்ளது மோடி அரசு.
மோடி அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் மற்றும் நோக்கங்கள்
இது வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்திற்கு துணை செய்யும் வகையில் திருத்தப்பட்ட சட்டமாகும்.
1. காடுகளில் இருந்து இயற்கையாக பெறப்படும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள், தேன் உள்ளிட்ட தாவரங்கள், விலங்குகள் நுண்ணுயிரிகள் மற்றும் பிற உயிரினங்களிடமிருந்து பெறப்படும் மருந்துகள் இவற்றின் மீது அறிவுசார் உரிமை (Intellectual rights) மற்றும் காப்புரிமையை (Patent rights) பெற வலியுறுத்துகிறது. அப்படி காப்புரிமை பெற்றவர்கள். வனங்களில் உள்ள பல்லுயிர்கள் மீது ஆதிக்கம் செலுத்த எவ்வித அனுமதியும் பெற தேவையில்லை.
2. இந்தியாவில் கம்பெனிகள் சட்டத்தின் பதியப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அல்லது வெளிநாட்டு நிதிமூலதனத்துடன் இந்தியாவில் இயங்கும் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கிறது.
3. எந்த நிறுவனமோ அல்லது தனிநபரோ அவர்கள் ஆராய்ந்து கண்டறிந்து முடிவுகளை பொது வெளியில் வெளியிட அனுமதி மறுக்கிறது. அதை தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்திடம் (National Biodiversity Authority) மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்கிறது.
4. ஏற்கனவே இந்திய ஆய்ஷ் மருத்துவ துறைகளில் நிறுவனமயப்பட்ட பாரம்பரிய அறிவு (Codified traditional knowledge) பெற்றவர்களுக்கு அவற்றிலிருந்து விலக்கு அளிக்கிறது.
5. அதேப்போல, மேலே கூறப்பட்ட அந்நிய மூலதனத்துடன் இயங்கும் நிறுவனங்களுக்கும் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளிக்கிறது. அவர்கள் தங்களின் ஆராய்ச்சி முடிவுகளை இந்திய அரசின் அமைப்புகளுக்கோ, அரசு நிதியுதவியுடன் இயங்கும் அமைப்புகளுக்கோ அல்லது வெளிநாட்டில் உள்ள இதே போன்ற அமைப்புகளுக்கோ வழங்கலாம் அதற்கு எவ்வித தடையும் இல்லை என்கிறது.
6. இந்த ஆராய்ச்சி முடிவுகளை வைத்து நாட்டின் உள்ளேயோ அல்லது வெளிநாட்டிலோ செயல்படும் எந்த நிறுவனமும் அறிவுசார் உரிமை பெற முன்வந்தால் அவர்கள் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்திடம் சமர்பித்து காப்புரிமை பெறலாம் என்கிறது.
7. இத்துறைச் சார்ந்த அதிகாரம் முழுவதையும் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்திடம் ஒப்படைக்கிறது. மாநில அரசுகள் இந்த ஆணையத்திடம் அனுமதி பெறாமல் சுயேச்சையாக முடிவுகளை எடுக்க தடை விதிக்கிறது. அதேப் போல மாநில உயர்நீதிமன்றங்களுக்கு இணையாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை (National Green Tribunal) வைக்கிறது.
8. ’உயிரியல் ஆதாரம் அல்லது அறிவு (biological resource or knowledge)’ என்பதை ‘ஆராய்ச்சியின் முடிவுகள் (results of research)’ என மாற்றியுள்ளது.
9. ஆராய்ச்சியின் முடிவுகள் அனைவருக்கும் சமமாக பகிரப்படும் (equitable) என்பதை மாற்றி உரிமைகளின் அடிப்படையில் சமமாக பகிரப்படும் (fair and equitable) என்கிறது.
10. இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கிறது.
இவ்வாறு இச்சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு, அதில் முக்கியாமான திருத்தங்களை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளோம்.
ஆயுஷ் மருத்துவ முறைகளில் அந்நிய முதலீடுகளுக்கும் கார்ப்பரேட்களின் ஏகபோகத்திற்கும் சட்டத்தில் இருந்த சிறு சிறு தடைகளையும் இதன் மூலம் தகர்த்துள்ளது மோடி அரசு. வனங்களில் உள்ள மூலிகைகள், தேன் உள்ளிட்ட மருத்துவம் குணம் கொண்ட பல்லுயிரிகளை பழங்குடிகள் பயன்படுத்த முடியாது. அவ்வகையான மூலிகைகளையும் மருந்து பொருட்களையும் கொண்டு சிறிய பாரம்பரிய மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க முடியாது. அவ்வகையில் இயற்கையாக கிடைக்கும் மருந்துகள் இனி அனைவருக்கும் பொது அல்ல. அவற்றை காப்புரிமை பெற்ற நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அலோபதி மருத்துவத்துடன் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளும் ஒரு குடையின் கீழ் அமைக்கப்பட்டு அனைத்தும் மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவத்துறை உருவாக்கப்பட வேண்டும் என்பது அனைத்து மக்களின் நீண்ட நாள் தேவையாக உள்ளது. அதற்காக இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு நிதி ஒதுக்கி ஆராய்ந்து அவற்றை பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வக்கற்ற அரசு, தற்போது அதை உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் ஆராய்ச்சிக்கு தடையின்றி திறந்துவிட்டுள்ளது. அதோடு அந்த ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் அவை காப்புரிமை எளிதாக பெறுவதற்கும் வசதி அமைத்துள்ளது இந்த மோடி கும்பல். காப்புரிமை பெற்ற பல்லுயிர்களை கார்ப்பரேட்கள் எவ்வித தடையுமின்றி வனங்களில் இருந்து சுரண்டவும் அல்லது தனியாக விளை நிலங்களில் செயற்கையான பல்லுயிரி தொகுப்பு மையங்களை உருவாக்கவும் அனுமதி வழங்குகிறது. அதேப் போல நிறுவனமயப்பட்ட பாரம்பரிய அறிவு (Codified traditional knowledge) பெற்றவர்கள் என்ற பெயரில் பதஞ்சலி போன்ற உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும் பல்லுயிரி வளங்களையும் பாரம்பரிய மருத்துவமுறைகளையும் குவிக்கிறது.
காப்புரிமைப் பெற்ற அல்லது அனுமதிக்கப்பட்ட இந்த கார்ப்பரேட்களை தாண்டி பழங்குடிகளோ அல்லது சிறிய பாரம்பரிய மருத்துவர்களோ மூலிகைகள் உள்ளிட்ட பல்லுயிரி மருத்துவ அம்சங்களை பயன்படுத்தவோ அல்லது தங்களது நிலங்களில் அவற்றை விளைவிக்கவோ முயன்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழிகாட்டுகிறது. அதேப் போல பறவைகளை விலங்குகளை பழங்குடிகள் வேட்டையாடுகின்றனர் என்ற பொய்யான அவதூறை பரப்பி அதை தடுப்பது எனும் பெயரில் உலகின் அரிய வகை பறவையினங்களையும், விலங்கினங்களையும் சந்தைப் பொருளாக்கி வர்த்தகம் செய்யும் உரிமையையும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது. அதை சட்டரீதியானதாக இத்திருத்தத்தின் மூலம் மாற்றியமைக்கிறது. வன பாதுகாப்புச் சட்டத்தின் உரிமைகளை பழங்குடிகளின் அமைப்புகள், மாநில பல்லுயிர் வாரியங்கள் (SBBs) மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பறித்ததைப் போலவே, பல்லுயிர் பெருக்கத்தின் மீதான உரிமைகளையும் பறித்து மத்தியில் குவித்துள்ளது. மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்த சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட பிரிவுகளை இழுத்துமூடி அவை இயற்கை மருத்துவம் என்ற பெயரில் யோகா மையங்களாக மாற்றப்பட்டுவிட்டன. அலோபதி மருத்துவம் பணம் கொழிக்கும் துறையாக மாற்றப்பட்டது போலவே இந்திய பாரம்பரிய மருத்துவமுறைகளும் ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாற்றப்பட்டுள்ளது.
இனி மாட்டு மூத்திரத்தை குடிப்பதையும், எருமை சாணியை பூசிக்கொள்வதையும் மட்டுமே இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளாக இந்த மோடி கும்பல் அறிவித்து விடும். அதற்கும் காப்புரிமை கொண்டு வந்தாலும் வந்துவிடுவார்கள்(!) இந்த மானங்கெட்ட ஆட்சியாளர்கள்.
புதிய காலனிய டங்கல் திட்டத்தின் நடைமுறை வடிவமே இந்த பல்லுயிர் பெருக்கச் சட்டம்
பல்லுயிர்ச் சட்டத்தை இயற்றியதன் முக்கிய நோக்கம், 1992ம் ஆண்டு ரியோ உச்சிமாநாட்டில் (சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு) ஒப்புக்கொண்ட மூன்று முடிவுகளில் ஒன்றுதான் உயிரியல் பன்முகத்தன்மை பாதுகாப்பு (Convention of Biological diversity - CBD) விதிகளை சட்டப்பூர்வமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதாகும். இதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை மற்றும் அதன் பயன்பாடு பற்றிய அறிவு போன்றவை உயிரியல் பன்முகத்தன்மை பாதுகாப்பு (CBD) அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும், இது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐ.நா. சபையின் ஓர் உறுப்பு அமைப்பாகும். ரியோ மாநாட்டு ஒப்பந்தத்தின் துணை ஒப்பந்தமாக 2000ம் ஆண்டு ஜனவரியில் கொலம்பியாவின் கார்டஜீனா நகரில், கார்டஜீனா நெறிமுறை (Cartagena Protocol) ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. அது ஒரு நாட்டில் உள்ள (நவீன உயிரி தொழில்நுட்பம் மூலம்) மரபுமாற்றம் செய்யப்பட்ட உயிரினங்களை (living modified organism –LMOs) பிற நாட்டினர் நிர்வகிக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இதனடிப்படையில்தான் வாஜ்பாய் அரசு உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்-2002ஐ அமல்படுத்தியது. 2010 அக்டோபரில் ஜப்பான் நகோயா நகரில், நகோயா நெறிமுறை (Nagoya Protocol) ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. அது மரபியல் மற்றும் பல்லுயிர் பெருக்க வளங்களின் பயன்களையும் நன்மைகளையும் யார் பெறுவது என்பதையும் அவற்றின் பயன்பாட்டில் இருந்து நியாயமான மற்றும் சமமான பகிர்வு (Fair and Equitable Sharing of Benefits Arising from their Utilization (ABS)) என்பதையும் வலியுறுத்தும் ஒப்பந்தமாகும். அதாவது, யார் காப்புரிமை மூலம் ஆதிக்கம் செலுத்திகிறார்களோ அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்லுயிர் பெருக்க வளங்கள் மாற்றியமைக்க வேண்டும் என வழிகாட்டப்பட்டது. இது 2014ம் ஆண்டு முதல் உலகளவில் நடைமுறைப்படுத்தப்பட துவங்கியது. அதை அப்போதே தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் இந்தியாவில் அமல்படுத்த துவங்கிவிட்டது. இப்போது அதை சட்டாமாக்கியுள்ளது. ஆகையால் ஐ.நாவின் அந்த அமைப்பு எதை வழிகாட்டியதோ அதைத்தான் இச்சட்டம் மூலம் பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பல்லுயிரி பெருக்க நிதிமுதலீட்டு திட்டத்தின் (UNDP’s Biodiversity Finance Initiative – BIOFIN) கீழ் 41 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இது உலகளவில் 800பில்லியன் டாலர் சந்தையை கொண்டுள்ளது. இந்தியாவில் டாட்டவின் ஐபிபிஐ, ஐடிசி, மஹிந்திரா, விப்ரோ, கோத்ரேஜ் மற்றும் போய்சி போன்ற பெரும் கார்ப்பரேட்கள் இத்துறையில் முதலீடு செய்ய உள்ளனர்.
இச்சட்டங்களுக்கு மூல அடிப்படை ஒப்பந்தமாக விளங்குவது டங்கல் திட்டமே ஆகும். 1990ம் ஆண்டுகளில் உலக வர்த்தக கழகத்தின் (WTO) வணிகம் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தனிக்காப்புரிமை (Trade Related Intellectual Patents sight –TRIPS)யை முன் வைத்தது. அதாவது விஞ்ஞான கண்டுபிடிப்புகள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றின் புதிய ரக கண்டுபிடிப்புகளுக்கு தனிக்காப்புரிமை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை டங்கல் திட்டம் மூலம் முன் வைத்தது. நிதிமூலதனத்தின் நலன்களுக்காகவும் பன்னாட்டு கார்ப்பரேட்களின் நலன்களுக்காகவும் மனித குலத்தின் அறிவு திறனை அடகு வைக்க ஏற்பாடு செய்திருந்தது அந்த அடிமை சாசன திட்டம். அத்திட்டத்தின் படி காப்புரிமை பெற்றவர்கள்தான் இந்திய பாரம்பரிய மருத்துவ சந்தையை தீர்மானிக்க முடியும். ஏற்கனவே 90% சதவிகிதத்திற்கும் மேலான கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகளை ஏகாதிபத்தியங்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டம் அவர்களின் காலடியில் மேலும் நாட்டை அடிபணிய வைக்கவே செய்யும். வாஜ்பாய் மற்றும் மோடி அரசுகள் இச்சட்டத்தை நடைமுறைப் படுத்தியிருந்தாலும் இதற்கு அச்சாணியாக விளங்கும் டங்கல் திட்டங்களில் கையெழுத்திட்டது காங்கிரஸ் அரசுதான்.
இவ்வாறு நாட்டை புதிய காலனிய பிடியில் மேலும் இறுக வைக்கும் மோடி அரசு, நாட்டின் சுற்றுச் சூழல், வளங்கள், வனங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை அழிப்பதோடு நாட்டின் சுகாதார மேம்பாடு குறித்த எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவற்றை தனியார்மய கோரப்பற்களின் பிடியில் சிக்கவைத்துள்ளது. மனிதர்கள் போதிய மருத்துவம் கிடைக்காமல் நோயுற்று சாவதற்கும், நாட்டை பாலைவனமாக்கி வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ வழியின்றி செத்துமடிவதற்குமே இக்கொடிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளது மோடி அரசு. ஏகாதிபத்திய பிணந்தின்னி வல்லூறுகளுக்காக நாட்டையே சுடுகாடாக மாற்றி வருகிறது.
III
கார்ப்பரேட் நலன்களுக்காக பாசிசத்தை அரங்கேற்றும் பாஜக
சட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜகவின் ஜனநாயக விரோதப் போக்கும் காங்கிரசின் கள்ளக்கூட்டும்
இவ்விரு சட்டங்களையும் நிறைவேற்றுவதில் எள்முனையளவும் ஜனநாயக முறைகளை கடைபிடிக்கவில்லை பாஜக அரசு. “வழக்கமான நடைமுறைக்கு எதிராக இவ்விரு மசோதாக்களும், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பதிலாக நாடாளுமன்றக் கூட்டு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது நாடாளுமன்ற செயல்முறையின் முழுமையான கேலிக்கூத்து" என்றார் காங்கிரசைச் சார்ந்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் - தற்போதைய அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ்.
பாஜகவின் ராஜேந்திர அகர்வால் தலைமை வகிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு நேரடியாக இம்மசோதாக்களை அனுப்பி வைத்தது மோடி கும்பல். வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து இயற்கை ஆர்வலர்கள், முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், சமூக அக்கறையுள்ள குடிமக்கள் மற்றும் பிற ஜனநாயக ஆதரவு சக்திகளிடமிருந்து 1300க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. அது எதையும் பொருட்படுத்தாமல் மத்திய அமைச்சரவை எதை சட்டமாக்க முன் வைத்ததோ அதை எவ்வித மாற்றமுமின்றி நிறைவேற்ற நாடாளுமன்றங்களின் அவைகளுக்கு அப்படியே அனுப்பி வைத்தது கூட்டுக் குழு.
பொதுமக்கள் மற்றும் பழங்குடி மக்கள் இச்சட்டத்தின் பாதிப்புகளை அறிந்துகொள்ள முடியாத வகையில் இச்சட்ட மசோதாக்களை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிட்டது. இச்சட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படும் அவர்களின் பார்வைக்கே இதை கொண்டு செல்லாமல் ஜனநாயக விரோதமான முறையில் நிறைவேற்றியுள்ளது. சட்டம் அமல்படுத்தப் படுவதற்கு முன்பே அவர்களை புறக்கணித்துள்ளது.
இச்சட்டங்கள் அமல்படுத்துவதை கண்டிக்க துப்பில்லாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அது அமல்படுத்தப்படும்போது நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆகையால் எந்த கருத்து வேறுபாடும், எதிர் விவாதங்களும் முன்வைக்கப்படாமல் இச்சட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டங்களுக்கு சேவை செய்யும் வகையில் தமிழ்நாட்டில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை வரவேற்று கையெழுத்திட்டுள்ளார் ஆளுநர் ரவி. இதன்மூலம் ஆளும் வர்க்க கட்சிகள் தங்களுக்கிடையிலான கள்ளக்கூட்டை நிரூபித்துள்ளன. குடியுரிமை, காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் சட்டக் கொள்கைக்கான விதி மையத்தின் மூத்த தலைவரான தேபாடித்யோ சின்ஹா மற்றும் ஆரவல்லி பச்சாவோ குடிமக்கள் இயக்கத்தினர் உள்ளிட்ட பலர் எதிர்க் கட்சிகளின் இந்த துரோகத்தையும் கண்டித்துள்ளனர்.
புதிய காலனியாதிக்கம் மற்றும் கார்ப்பரேட் நலன்களுக்காக நாடு முழுவதும் கலவரங்களை கட்டியமைக்கும் மோடி கும்பல்
ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் நெருக்கடியை தீர்த்துக்கொள்ள நவீன ஆதிதிரட்டல் வடிவில் காலனிய நாடுகளின் வளங்களை கொள்ளையடித்து வருகின்றன. அவர்களின் புதியகாலனிய நலன்களுக்கு சேவை செய்யவே மோடி கும்பல் நாடு முழுவதும் கலவரங்களை கட்டியமைத்து வருகிறது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து-370 ரத்தின் மூலம் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கூடாரமாக்கியது. அப்பகுயில் கண்டெடுக்கப்பட்டுள்ள லித்தியம் படிமங்கள் உள்ளிட்ட கனிம வளங்களை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்க அப்பகுதியை இராணுவமயமாக்கி காஷ்மீரிகளை வேட்டையாடி வருகிறது. பெருந்தேசிய வெறி அடிப்படையில் காங்கிரசு அன்று அவர்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை நசுக்கியது; இந்துராஷ்டிர நோக்கிற்காக இன்று அவர்களை ஒடுக்கி வருகிறது பாஜக.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரே பற்றி எரிகிறது. மணிப்பூரின் வனங்களையும், குரோமைட் படிமங்களையும் கார்ப்பரேட்களும் ஜப்பான் ஏகாதிபத்தியமும் கொள்ளையடிப்பதற்காக மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே மத ரீதியான பிளவுகளை உண்டாக்கி மோதவிட்டு அவர்களின் இரத்தம் குடித்து வருகிறது.
சென்ற மாதம் ஹரியானாவையும் கலவர பூமியாக மாற்றியது. ஹரியானா மாநிலத்தின் ஆரவல்லி மலைத் தொடர் பகுதியில் உள்ள வனங்களை கொள்ளையடிப்பதற்காக அம்மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள குர்கான் மற்றும் நூஹ் மாவட்டங்களில் பசுவதை தடுப்பு என்ற பெயரில் இசுலாமிய வெறுப்பை திட்டமிட்டு கட்டியமைத்து கலவரத்தை உண்டாக்கியது.
தமிழகத்திலும் கூட மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், சேலம்-தருமபுரி மண்டலங்களிலும் உள்ள வனங்களையும் கனிம வளங்களையும் கொள்ளயடிக்க அப்பகுதிகளிலும் கூட சாதி மோதல்களை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. மணிப்பூர் – ஹரியானா மாடல் கலவரங்களை நாடு முழுவதும் உருவாக்க திட்டமிட்டுள்ளன.
இக்கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகளின் துணையோடு கட்டியமைத்து வருகிறது. இவ்வாறு அரசியல் அரங்கில் இந்துராஷ்டிரத்தின் நிகழ்ச்சி நிரலை தீவிரமாக அரங்கேற்றி வருகிறது மோடி கும்பல். இவர்களின் இந்துராஷ்டிரம் இந்துமக்களில் உள்ள உழைக்கும் மக்களுக்கானதல்ல; அது அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் – அம்பானி, அதானிகளின் ராஜ்ஜியமாகவே இருக்கும். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இக்ககலவரங்களை பயன்படுத்தியே ஆட்சியைப் பிடிக்கவும் திட்டமிட்டுள்ளது பாஜக. மோடி கும்பலின் இந்த சதிகளை வெறும் மதவாதமாக சுருக்கி பார்க்காமல், சாதி மதம் கடந்து அனைத்து உழைக்கும் மக்களும் உணரச் செய்யும் வகையில் இயக்கங்களை கட்டியமைக்க வேண்டியது நமது கடமையாகியுள்ளது.
மேலும், பெரும் தொழில் நிறுவனங்களை அரசுடமையாக்கி, சுதேசிய தொழிலையும் உற்பத்தியையும் கட்டியமைப்பதன் மூலமே நாட்டின் வளங்கள் கொள்ளைப் போவதை தடுக்க முடியும். அப்போதுதான் இதுபோன்ற பாசிச திட்டங்களுக்கு உண்மையில் முடிவு கட்டமுடியும். இன்று இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாடு பிரதான முரண்பாடு அல்ல. அது கம்யூனிச சமூகத்திற்கு பிறகுதான் முன்னிலைக்கு வரும். ஆனால் தொண்டு நிறுவன அரசியல் அதை பிரதானப்படுத்தி ஏகாதிபத்திய சுரண்டலை மூடி மறைக்கின்றன; அல்லது ஒரு ஏகாதிபத்திய சார்பு நிலையிலிருந்து மற்றொரு ஏகாதிபத்திய சுரண்டலை மட்டும் எதிர்த்து பேசுவது என மக்களை ஏமாற்றுகின்றன. இவை சுதேசிய நலன்களுக்கான தொழிற்துறை வளர்ச்சியையும் முடமாக்கி பின்தங்கிய உற்பத்தி நிலையிலேயே நாட்டை தக்கவைக்க முயல்கின்றன. மக்களின் நலன்களுக்கு தேவை¬யான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது அதை பாதுகாப்பாக செயல்படுத்துவது என்பதற்கும்கூட எதிராக உள்ளன. ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளையும்; ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை மூடிமறைக்கின்றனர். எனவே இந்த தொண்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிராக போராடுவதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தளையையும் உடைத்தெறிய அணிதிரள வேண்டும்.
- சமரன்
(செப்டம்பர் 2023 இதழில்)