மார்க்ஸ் - சிலையாக நின்று பாவமன்னிப்பு வழங்கும் கடவுள் அல்ல

த சிவக்குமார்

மார்க்ஸ் - சிலையாக நின்று பாவமன்னிப்பு வழங்கும் கடவுள் அல்ல
சென்னை கன்னிமாராவில்
மார்க்சுக்கு சிலை.
மார்க்சின்
சிலை எங்கும் ரத்தக்கறை.
மார்க்சின் முதுகிலும்...
மார்க்சின் முகத்திலும்...
மார்க்சின் மார்பிலும்...
ரத்தம் கசிகிறது.
சென்னை விம்கோ
துப்பாக்கிச் சூட்டில்
திமுக அரசால் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் ரத்தம்...
மின்கட்டணத்தை
குறைக்கச்சொல்லி
கருணாநிதியின்
துப்பாக்கிக்குப் பலியான
விவசாயிகளின் ரத்தம்...
தாமிரபரணி ஆற்றில்
கருணாநிதியின்
கருணையினால் செத்துப்போன
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்
தொழிலாளரின் ரத்தம்...
அதோ! அதோ!
ஒரு பாவமும் அறியாத
ஒரு சின்னஞ்சிறு
குழந்தையின் ரத்தமும்...
துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்ட
மதுரை லீலாவதியின் ரத்தமும்...
...மணல் கொள்ளையைத் தடுக்க
****குண்டர்களால்
உயிர்க்கொலை ஆன
அந்தத் தோழரின் ரத்தமும்...
கள்ளச்சாராயத்தை ஒழிக்க
***வியாபாரிகளால்
துடிதுடித்துச் செத்துப்போன
இந்தத் தோழரின் ரத்தமும்...
அந்தக் கருணா மூர்த்திக்குப் பிறந்த
காவல்துறை அமைச்சர் ஸ்டாலினது
குண்டாந் தடியால்
மண்டை பிளக்கப்பட்ட
அரசு ஒப்பந்த ஆசிரியரின் ரத்தம்...
அரசு ஒப்பந்த ஊழியர்களின் ரத்தம்...
....இன்னும்
...இன்னும்
எத்தனை எத்தனையோ
உழைக்கும் மக்களின்
ரத்தக் கறை படிந்த
கருப்புக் கரங்களால்
தொழிலாளி வர்க்கத்தின்
மாபெரும் தலைவனுக்கு
ஒரு சிலையா?
அதோ! அதோ!
உடல் முழுவதும் வடிந்தோடும்
அந்த - இந்த
அத்தனை ரத்தத்தின் பிசுபிசுப்பில்
மார்க்சின் கண்களில்
வழியும் ரத்தக்கண்ணீர்
யார் கண்ணுக்கும் தெரியவில்லை.
மார்க்ஸ் -
சிலையாக நின்று
பாவமன்னிப்பு வழங்கும்
கடவுள் அல்ல.
தொழிலாளி வர்க்கத்திற்குப்
பாவம் செய்தவர்களைப்
பலியெடுக்கும்
கோடிக்கால் பூதம் அவர்.
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு