விண்வெளிஇறையாண்மை விற்பனையில்! துகிலுரியப்பட்ட பாஞ்சாலியை போல பாரத மாதாவின் பாதுகாப்பு! ISRO-வின் PSLV தொழில்நுட்பம் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பு
சமரன்
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ 1969ல் கட்டியமைக்கப்பட்டு அது முதல் 60 ஆண்டுகளாக இந்திய மக்களின் வரிப் பணத்தில் அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டஒரு பொதுத்துறைநிறுவனமாகும். இது சந்திரயான், மங்களயான், கார்ட்டோசாட் என்று உலகின் கவனத்தை ஈர்க்கும் பல விண்வெளி தயாரிப்புகளை செய்து வருகிறது.
ஆனால், 2020 முதல் 2026 வரையிலான ஆறே ஆண்டுகளில், விண்வெளி கொள்கை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பல தசாப்தங்களாக பொதுப் பணத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், ஒன்றன்பின் ஒன்றாக தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் 2026 இன் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. இஸ்ரோ தனது எஸ்.எஸ்.எல்.வி (SSLV - Small Satellite Launch Vehicle) ஏவுகணையின் முழுமையான வடிவமைப்பு தொகுப்பையும் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு மாற்றியுள்ளது.இதன்மூலம்இஸ்ரோவின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஏவுகணை முற்றிலும் இஸ்ரோவின் எவ்வித பங்கே இல்லாமல், தனியார் கார்ப்பரேட்டுகளால் தயாரிக்கப்பட்டு ஏவுதலுக்குத் தயாராகியுள்ளது என்பதுதான்.
உலகிலேயே எந்த நாடும் செய்யத் துணியாத விசயத்தை, இந்திய அரசின் விண்வெளி நிறுவனம், தனது ஏவுகணையின் முழு தொழில்நுட்ப வடிவமைப்பையும் ஒரு தனியாருக்கு வணிக நோக்கோடு மாற்றிக் கொடுத்தது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம், 2026 முதல் ஏவுகணைகளை வணிக ரீதியாக விற்கவும், லாபம் ஈட்டவும் கார்ப்பரேட்டுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்காக ரூ.1,000 கோடி மதிப்பிலான ஊக மூலதன நிதிக்கு (Venture Capital Fund) ஒப்புதல் அளித்து, அதை இந்த ஆண்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட்டது. இது தனியார் துறைக்கு நிதி முதலீடாகத்தான் மாற்றப் போகிறார்கள். இந்தியாவில் விண்வெளித் துறை சார்ந்த தனியார் நிறுவனங்களின் (Space Startups) எண்ணிக்கை 400 ஐத் தாண்டியுள்ளது என்பதே அதற்கு ஆதாரம்.
தற்போது இஸ்ரோவின் எல்லையை குறுக்கிக்கொண்டு,இனி வணிக ரீதியான செயற்கைக்கோள்களையோ, ஏவுகணைகளையோ தயாரிப்பது தனது வேலையில்லை என முடிவெடுத்துவிட்டது. அது 'ககன்யான்' (மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்) மற்றும் 'விண்வெளி நிலையம்' (BAS-01) போன்ற அதிக நிதி தேவைப்படும், லாபமில்லாத ஆராய்ச்சி வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என மாற்றிக்கொண்டது.
இதை ஏன் தனியாருக்கு கொடுக்கவில்லை என்றால், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு லாபம் இல்லாத இஸ்ரோவின் ஆராய்ச்சி பணிகளை செய்வதும், அந்த ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கும் தொழில்நுட்பங்களை எல்&டி, டாடா, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்து அதன் மூலம் அது லாபம் சம்பாதிக்க வழிவகுப்பதும்தான் நோக்கம். இஸ்ரோ தனது 71 முக்கிய தொழில்நுட்பங்களை (Technology Transfers) இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு இதுவரைத் தாரைவார்த்துள்ளதே அதற்கு ஆதாரம்.
2019 முதல் படிப்படியாக தனியார் துறைக்கு மாற்றிய பாஜக ஆட்சி
2019ல் தான் தனியார் மயத்தை புகுத்தி வணிக நோக்கங்களுக்காக இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை (NewSpace India Limited - NSIL) உருவாக்கியது. எளிதான தொழில் முனைவை உருவாக்கும் பொது கொள்கையின் அடிப்படையில் (Ease of doing business) 2020ல் தனியார் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர (Single Window) அனுமதிக்கான வழிமுறையை எளிதாக்கியது. அதற்கு தோதாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe - Indian National Space Promotion & Authorization Centre) என்ற அமைப்பை அமைத்தது. இதுதான் கதவை உடைத்து அகலத் திறந்துவிடுவதற்கான வழிமுறையாக மாறியது.
எச்.ஏ.எல்-எல்&டி நிறுவனத்திற்கு 2022ஆம் ஆண்டு ரூ. 860 கோடி மதிப்பிற்கு முழுமையான 5 பி.எஸ்.எல்.வி – எக்ஸ்.எல் (PSLV-XL) ஏவுகணைகளை தயாரிக்க கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்த்தது.
இதன் தொடர்ச்சியாக கார்ப்பரேட்டுகள் முறையாக கொள்ளையடித்து பங்கு போட்டுக்கொள்ள புதிய வழிமுறையை இந்த காலனிய தாசன் மோடி கும்பல் கொள்கை வகுத்தது. இந்திய விண்வெளி கொள்கை 2023 (Indian Space Policy 2023) என்ற கொள்கையை வரையறுத்தது. இதன் நோக்கம் மேற்கண்டவாறு கூறியபடி இனி இஸ்ரோவின் பணி ஆராய்ச்சிப் பணி மட்டுமே என கட்டுப்படுத்தியது. உற்பத்தி, வணிகம், சேவை என அனைத்தையும் கார்ப்பரேட்டுகளிடம் கொடுத்துவிட்டது.
இதே காலத்தில்தான் மோடி அமெரிக்காவிற்கு சென்று அங்கு நாசாவிடம் ஆர்டெமிஸ் ஒப்பந்தத்தில் (Artemis Accords) கையெழுத்திட்டு அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு இந்திய விண்வெளித்துறையை வைத்து சூதாடியாது.
இதன் அடிப்படையில்தான் அந்நிய மூலதனத்தை முழுவதும் திறந்துவிடுவது என்று 2024ல் அறிவித்தது. இதன்படி விண்வெளி உதிரிபாகங்கள் தயாரிப்பில் 100%, செயற்கைக்கோள் தரவில் 74%, ஏவுகணைகளில் 49% அளவிற்கு அந்நிய மூலதனம் (FDI) அனுமதித்து ஏகாதிபத்தியத்தின் பிடிக்கு கொண்டு செல்ல வழிவகுத்தது.
இதன் பிறகு ரூ. 511 கோடி மதிப்பிலான எஸ்.எஸ்.எல்.வி. தொழில்நுட்பத்தை HAL நிறுவனத்திற்கு மாற்றியது. அதாவது 16 ராக்கெட்டுகள் அவர்கள் தயாரித்து விற்பனை செய்துகொள்ள வழிவகை செய்தது. டாடா மேம்பட்ட அமைப்புகள் (TASL) கார்ப்பரேட்டின் கீழ் TSAT-1A இராணுவ செயற்கைக்கோள் மற்றும் பாதுகாப்பு தரவு இராணுவ ஒப்பந்தங்களை உருவாக்கியது. அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு SSLV தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உதிரிபாகங்கள் தயாரிப்பையும், ரிலையன்ஸ் ஜியோ SES நிறுவனத்திற்கு செயற்கைக்கோள் பிராட்பேண்ட் அலைக்கற்றை ஆகியவைற்றையும்தாரைவார்த்தது.
அதன் தொடர்ச்சியாகத்தான் 2026ஆம் ஆண்டான இப்போது இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe)- விருப்ப வெளிப்பாட்டு கோரிக்கை ஆவணத்தை (Expression of Interest – EOI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதாவது, பி.எஸ்.எல்.வி (PSLV) தொழில்நுட்பத்தை, தகுதியுள்ள ஒரு இந்தியத் தனியார் நிறுவனத்திற்கு அல்லது நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு (Consortium) முழுமையாகத் தாரைவார்ப்பதுதான் (Technology Transfer) இதன் நோக்கம். தொழில்நுட்பத்தைப் பெறும் அந்தத் தனியார் கார்ப்பரேட் நிறுவனம் இனி சொந்தமாகவே ஏவுகணையைத் தயாரிக்கும், இயக்கும் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை ஏவி வணிக ரீதியாக முழு லாபத்தையும் எடுத்துக்கொள்ளும்.
இந்த தொழில்நுட்பத்தை பெறுகின்ற நிறுவனம் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தும் வரை, அவர்களுக்கு வேலை செய்யும் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் 30 மாதங்கள் அரசு உதவித் தொகையை பெறுவார்கள். அந்த நிறுவனம் சொந்தமாக 2 PSLV ஏவுகணைகளைத் தயாரித்து ஏவும் வரை அவர்களுக்குப் பின்னணியில் இருந்து அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அரசு செலவில் வழங்குவார்கள். ISRO தலைவர் V. நாராயணன் அவர்கள் 2025ல் 'இரண்டு வெற்றிகரமான ஏவுதல்களுக்கு பிறகு PSLV-ன் 50% தொழில்நுட்பத்தை தனியாருக்கு மாற்றுவோம்' என அறிவித்தார்.
அதாவது அவர்களை நட்டம் அடையாமல் பார்த்துகொண்டு முழு லாபத்தை அடைவதற்கான அனைத்து வேலைகளையும் இவர்களே செய்து முடித்து அவர்களிடம் லாபம் பெறுவதற்காகவே ஒப்படைப்பார்கள்.கார்ப்பரேட்டுகள் உமியை கொண்டுவருவார்கள்; மக்கள் வரிப்பணித்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரசு அரிசியை கொண்டு வரும். இதை ஊதி ஊதி கார்ப்பரேட்டுகள் லாபமாக அரசியை கொண்டு போய்விடும். என்ன ஒரு மக்கள் நலன், தேச நலன் என்பதை அறியும் போது தேச பக்தி பொங்குகிறது!
அமெரிக்க ஏகபோகங்களின் பிடியில் இந்திய விண்வெளி நிறுவனம்
முதன்மையானதும் வளர்ந்து வருவதுமான தொழில்நுட்பங்களுக்கான முன்னெடுப்பு (iCET - Initiative on Critical & Emerging Technology) கொள்கை அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் நுழைவாயிலாக மாற்றப்பட்டுள்ளது.
2023 ஜூன், மோடியின் அமெரிக்கப் பயணத்தில் இந்தியா ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம் நிலவு மற்றும் விண்வெளி ஆய்வில் நாசா தலைமையை ஏற்பது; தெற்காசியாவில் ரஷ்ய-சீனாவை போட்டியை தகர்க்க இந்தியா இதுவரை வளர்த்தெடுத்த தொழில்நுட்பத்தை தனியாருக்கு தாரைவார்த்தல், இனி கைவிடுதல்; விண்வெளியில் இந்தியா சேர்க்கும் தரவுகளை அமெரிக்க அமைப்புகளுடன் பகிர்தல் ஆகியவற்றை ஏற்றது.
அமெரிக்க அரசு – கார்ப்பரேட் கூட்டில் உருவான டிரம்ப்-எலான் மஸ்க் தலைமையிலான டாகி (DOGE) பாசிசத்தின் கொள்கையாக ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ், புளூ ஆரிஜின் போன்ற சிலிக்கன் வேலி அமெரிக்க தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகள் விண்வெளியில் உள்ள கோள்களை ஏகபோக மண்டலங்களாக மாற்றுவதற்கான ஒப்பந்தமாகும். இதன் படி நிலவில் உள்ள அரிய தனிமங்களை ஏகபோகம் பெறுவதற்கான தன் தலைமையில் ஒரு அச்சு நாடுகளை உருவாக்குதவற்கான திட்டமாகும். விண்வெளித் தரவுகளை அமெரிக்காவோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். ஸ்டார் லிங்க் போன்ற செயற்கைகோள் வலைப்பின்னல்கள், கிளவுட் கம்பியூட்டிங் ஆகியவை இந்த டாகி கார்ப்பரேட்டுகளிடமே உள்ளது.இந்த அமெரிக்க டெக்னோ கார்ப்பரேட்டுகள் மற்ற நாடுகளை இந்த ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவந்து, தன் நலனை பலவந்தமாக திணித்து அடிமைப்படுத்துகிறது.
ஐசெட் (iCET)மற்றும் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை (Artemis Accords) ஆகிய இரண்டும் தனித்தனி ஒப்பந்தங்கள் போலத் தோன்றினாலும், இவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
நம் நாட்டின் இஸ்ரோவை உலகளாவிய கார்ப்பரேட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் தள்ளுவதில் இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து, ஒன்றை ஒன்று பூர்த்தி செய்கின்றன.
விண்வெளி, AI, செமிகண்டக்டர், குவாண்டம் போன்ற முக்கிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் இந்திய-அமெரிக்க தனியார் கார்ப்பரேட்டுகளை ஒன்றிணைப்பதுவே இதன் நோக்கம். இது முற்றிலும் வணிக மற்றும் கார்ப்பரேட் சார்ந்த (Commercial & Corporate) கட்டமைப்பாகும். பென்டகனும் இந்தியப் பாதுகாப்புத் துறையும் கார்ப்பரேட்டுகளுக்குப் முகவர்களாகச் செயல்படுகின்றன. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ், லாக்ஹீட் மார்ட்டின், புளூ ஆர்ஜின் போன்ற ஏகபோக நிறுவனங்கள் இந்திய விண்வெளிச் சந்தைக்குள் நுழைந்து, இந்திய ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்கிறது. இதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த உற்பத்தி ரகசியங்களையும், உளவுத் தரவுகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன. இறுதியில், இந்திய நாட்டு நிறுவனங்கள் பெயரளவுக்கு மட்டுமே இருப்பார்கள்; ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரமும் பாதுகாப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளுக்குச் சென்றுவிடும்.
இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப்களான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) ரூ. 1,300 கோடிகளுக்கும் மேலாக ராம் ஸ்ரீராமின் செர்பாலோ வென்ச்சர்ஸ் (Sherpalo Ventures), அமெரிக்கநிதிமூலதன பிணைப்பிலுள்ள சிங்கப்பூரின் GIC, டெமாசெக் (Temasek) மற்றும் பிளாக்ராக் (BlackRock) ஆகியவற்றின் நிதிமூலதனத்தினை பெற்று இயங்குகிறது.
பிக்சல் Pixxel நிறுவனம் ரூ. 790 கோடிகளுக்கும் மேலாக சீரிஸ்-பி (Series B) அமெரிக்காவின் கூகுள் (Google) நிறுவனம், அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ரேடிகல் வென்ச்சர்ஸ் (Radical Ventures), சிலிக்கான் வேலியின் லைட்ஸ்பீட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் (Lightspeed Venture Partners) மற்றும் அமெரிக்காவின் கிளேட் புரூக் கேபிடல் (Glade Brook Capital) ஆகியவற்றின் நிதிமூலதனத்தை பெற்று இயங்குகிறது.
சென்னை ஐஐடி-யில் (IIT Madras) தொடங்கப்பட்ட அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) ரூ 620 கோடிகளுக்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு அமைப்பான செலஸ்டா கேபிடல் (Celesta Capital) மற்றும் மேஃபீல்டு இந்தியா (Mayfield India) போன்ற நிதி மூலதன நிறுவனங்களிடமே முதலீடுகளைப் பெற்று இயங்குகிறது.
100% FDI அனுமதித்ததன் மூலம் வால் ஸ்டீரீட் நேரடியாக இந்திய விண்வெளி நிறுவனங்களை கட்டுப்படுத்தலாம்; இந்திய தொழில்நுட்பம் ஏகாதிபத்தியத்தின் பிடிக்குச் செல்கிறது.
இந்த நிதிமூலதன ஆதிக்கத்தில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல், இராணுவ மேலாதிக்கத்தையும் நிறுவுகிறது.
இந்திய விண்வெளியிலும்அமெரிக்காவின் புதியகாலனியாதிக்கம்
ISRO சோவியத் சமூக ஏகாதிபத்திய உதவியுடன் உருவாக்கப்பட்டதுதான். 1991-ல் ரஷ்யாவின் கிளாப்கோஸ்மோஸ் அமைப்புடன் இஸ்ரோ மேற்கொண்ட கிரியோஜெனிக் இன்ஜின் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு ஒப்பந்தத்தை, MTCR விதிகளைக் காரணம் காட்டி அமெரிக்கா ரஷ்ய-இந்திய நிறுவனங்கள் மீது இரண்டு ஆண்டுகள் விண்வெளி தொழில்நுட்பங்களை, உபகரணங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யக்கூடாது என்ற வர்த்தகத் தடையை விதித்து முடக்கியது.
அமெரிக்காவின் அழுத்தத்தால் 1993-ல் ரஷ்யா தொழில்நுட்பம் தர மறுத்தாலும், 7 கிரியோஜெனிக் இன்ஜின்களை (KVD-1 / RD-56) மட்டும் வழங்கியது. இந்தத் தடைகளை முறியடிக்க 1994-ல் இஸ்ரோ "கிரியோஜெனிக் மேல்நிலைத் திட்டப்பிரிவை" (CUSP) தொடங்கி, ரஷ்ய இன்ஜின்களை அடிப்படையாகக் கொண்டு (Reverse Engineering) உள்நாட்டிலேயே CE-7.5 இன்ஜினை உருவாக்கி 2014ல் GSLV-D5 ஏவுகனையை ஏவியது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பிரம்மாண்ட LVM3 ராக்கெட்டுக்காக முற்றிலும் சொந்த தொழில்நுட்பத்தில் (Gas-generator cycle) அதிக சக்தி வாய்ந்த CE-20 இன்ஜினை இஸ்ரோ வடிவமைத்தது; இந்த இன்ஜின்தான் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்தளவுக்கு வளர்ந்திருந்த விண்வெளித் துறையை பாஜக அமெரிக்க அடிவருடிக் கொள்கையால் அதன் கட்டுப்பாட்டிற்குள் இந்திய விண்வெளித் துறையை கொண்டு செல்கிறது.
இந்தியாவின் விண்வெளித் துறையில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றம் என்பது உள்நாட்டில் ஏற்படும் மாற்றம் மட்டுமல்ல. இது உலகளாவிய ஏகாதிபத்திய மறுபங்கீட்டுப் போட்டியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, தன் 'இந்தோ-பசிபிக் யுத்த தந்திரத்தின்' (Indo-Pacific Strategy) மூலம் சீனாவின் மேலாதிக்கத்தையும், விண்வெளியில் போட்டியிடும் பிற ஏகாதிபத்திய நாடுகளையும்ஓரம்கட்டவும், கட்டுப்படுத்தவும்தனக்கான ஒரு வலையமைப்பை பின்னுகிறது. இந்தியா அதில் ஒரு 'இளைய பங்காளியாக' (Junior Partner) மாற்றுவதே அதன் நோக்கம்.அதற்காகவே உருவாக்கப்பட்டதே 2023 ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையாகும்.
இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் தரவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்தும். அதே போல் விண்வெளி ஆய்வு தரவுகளை அமெரிக்க அமைப்புகளுடன் பகிர்வது கட்டாயமாகிறது.
இந்த பகிர்வு தரவு ஒப்பந்தங்களை ஏற்கெனவே போடப்பட்டுள்ள நான்கு அடிப்படை இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்களுடன் (Four Foundational Agreements) இணைத்து பார்க்க வேண்டும். விண்வெளித் தரவுகளுடன் இவை நேரடியாகத் தொடர்புடையது.
இதில் மிக ஆபத்தான ஒப்பந்தம் BECA. (Basic Exchange and Cooperation Agreement - 2020). இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும் அமெரிக்காவும் தங்களின் புவிசார் உளவுத் தரவுகளை (Geospatial Intelligence) பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதில் அதிநவீன செயற்கைக்கோள் வரைபடங்கள், கடல்சார் தரவுகள் மற்றும் எல்லையோர உளவுத் தரவுகள் அடங்கும்.
COMCASA (Communications Compatibility and Security Agreement - 2018) இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் இராணுவ மற்றும் விண்வெளித் தொடர்பு சாதனங்களை ஒன்றோடொன்று இணைப்பதற்கானதாகும். பாதுகாப்புத் துறைக்காகத் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்கள் (Military Satellites) அமெரிக்கத் தொழில்நுட்பப் பின்னணியுடன் உருவாக்கப்படும் போது, அவை COMCASA-இன் கீழ் அமெரிக்காவின் குறியாக்கப்பட்ட (Encrypted) தகவல் தொடர்பு அமைப்புகளுடன் இணைக்கப்படும்.
LEMOA (Logistics Exchange Memorandum of Agreement - 2016) இது இரு நாட்டு இராணுவங்களும் பரஸ்பரம் தங்களின் தளவாடங்கள், துறைமுகங்கள் மற்றும் விமானத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தமாகும். விண்வெளித் துறையில், இந்தியாவின் ஏவுதளங்கள் (ஸ்ரீஹரிகோட்டா மற்றும் குலசேகரப்பட்டினம்) மற்றும் இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையங்கள் (Ground Stations) ஆகியவற்றைப் பாதுகாப்புத் தேவைகளுக்காக அமெரிக்க விண்வெளிப் படை (US Space Force) பயன்படுத்திக் கொள்ள இது மறைமுகமாக வழிவகை செய்கிறது.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பொதுவான இராணுவத் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் (GSOMIA - General Security of Military Information Agreement - 2002), மிக ஆபத்தான இராணுவ ரகசியங்களைப் பகிர்வதற்கான இந்த ஒப்பந்தத்தில், 2019 ஆம் ஆண்டு தொழில்துறை பாதுகாப்பு இணைப்பு (ISA - Industrial Security Annex) என்ற இணைப்புச் சட்டம் சேர்க்கப்பட்டது. விண்வெளித் தனியார்மயமாக்கலில் இதுவே மிக முக்கியமான கட்டுப்பாட்டுச் சட்டமாகும்.
இதுவரை அமெரிக்க -இந்திய அரசுகளுக்கு இடையே மட்டுமே நடந்த ரகசியப் பகிர்வானது, தனியார் விண்வெளி கார்ப்பரேட்டுகளுக்கு இடையே ரகசியத் தரவுகளைப் பகிர்வதற்கு இந்த ISA வழிவகை செய்தது. உதாரணமாக Lockheed Martin, Boeing கார்ப்பரேட்டுகளுடன் இந்தியாவின் L&T, டாடா, அதானி ஆகிய நிறுவனங்கள் இரகசியத்தை பகிர்ந்துகொள்ளலாம்.இதுவும் ஒருதலைப் பட்சமானது. அமெரிக்காவின் இரகசியம் அந்த நாட்டின் கார்ப்பரேட்டுகள் இந்தியாவின் கார்ப்பரேட்டுகளுடன் பகிரக் கூடாது. ஆனால் இந்தியா அவர்களுடன் பகிர வேண்டும்.
அரசு திறமையின்மையால் நட்டம், தனியார் பங்குபெற்றால்தான் வளர்ச்சி என்ற பேய்க் கதை
இஸ்ரோ ரூ.450 கோடியில் மங்கள் ஆர்பிட்டர் மிஷன் நிறைவேற்றியது. அதே திட்டத்தை நாசாவின் (NASA) Mars Reconnaissance Orbiter மிஷனை நிறைவேற்ற ரூ.7,218 கோடியை செலவிட்டது. இந்தியா 15 மடங்கு குறைவான செலவில் நிறைவேற்றியது. இஸ்ரோவின் 'திறமையின்மை' என்பது ஏமாற்று. மாறாக, திறமையான பொதுத்துறை நிறுவனம் தனியாரின் லாபத்திற்கு இல்லை என்பதுதால் 'திறமையின்மை' என கதையளக்கிறது. இதுவரை PSLV 58 ஏவுதல்களில் 56 வெற்றியடைந்தது. வெற்றி விகிதம்96.6% ஆகும்.
சதித்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை நேரடியாக விற்காமல், படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கும் நுட்பமான கொள்கை வழிமுறைகளை மோடி அரசு பின்பற்றுகிறது. உற்பத்தியை அவுட்சோர்ஸ் செய்து கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பது, தொழில்நுட்பத்தை அறிவுசார் சொத்துரிமையை தனியாரிடம் தாரை வார்ப்பது, சந்தை கட்டுப்பாட்டை தனியாரிடம் ஒப்படைப்பது என்று பிரித்து செயல்படுத்துகிறது. ஆகையால் ISRO-வின் 'திறமையின்மை' என்பது ஒரு பேய்க் கதை.
இதே காலத்தில், அமெரிக்க SpaceX நாசாவின் ஆய்வு & அரசு ஒப்பந்தம் மூலமே அரசே $4 பில்லியன் கொடுத்துSpaceXஐ வளர்ந்தது. இது தனியார் ஏகபோகத்திற்கு வழிவகுத்தது. ரஷ்ய விண்வெளி, தனியார்மயமாக்கலுக்கு பிறகு எனர்ஜியா போன்ற நிறுவனங்கள் ஊழல்களில் மூழ்கின. பல விண்வெளி திட்டங்கள் தாமதமடைந்தன. சீனா அரசு படிப்படியாக தனியார்மயத்தை புகுத்தி வருகிறது. இதுவரை CNSAவின் தலைமை மாறவில்லை. தேசிய பாதுகாப்பு தரவுகளில் தனியார் இல்லை. ஆனால் இந்தியாவில் 100% நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்ததின் மூலம் ஏகபோகத்தை ஊக்குவிக்கிறது, ஊழலை பல மடங்கு உயர்த்தப் போகிறது.
நாட்டின் பாதுகாப்பும் மக்களின் நலன்கள் பலியிடப்படுவதும்
விண்வெளி என்பது 21ஆம் நூற்றாண்டின் முதன்மையான யுத்தக் களமாக மாறிவிட்டது. சமீபத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் மோதல் ஆபரேசன் சிந்தூர், அமெரிக்க-இஸ்ரேல் ஈரான் மீதான போர் ஆகியவையே நவீன ஆதரமாகும். நவீன யுத்தம், நாவிகேஷன், ஆளில்லா விமானங்கள், துல்லியமான ஏவுகணைகள் அனைத்திற்கும் செயற்கைக்கோள் தரவுகள் முதன்மையானவை. இந்த தரவுகளை கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் யார் என்பது இராணுவ பலத்தை தீர்மானிக்கும். இதை அமெரிக்காவின் காலடியில் கிடத்திவிட்டு அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நாடாக இந்தியாவை மாற்றும் பாசிச பாஜக ஆட்சி எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இனி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை, கடலோர கண்காணிப்பும் கட்டண சேவையாக மாறும்; விவசாய நில-நீர் கண்காணிப்பு தரவுகள் தற்போது இலவசமாக இருக்கிறது.இனி விவசாயிகளிடம் கட்டணம் வசூல் செய்வார்கள்; தொலைதூர கல்வி (EDUSAT), ஆன்லைன் கல்வி, வர்ச்சுவல் கல்விகள் அனைத்திற்குமான சேவைகளுக்கு நம்மிடம் வசூல் நடத்துவார்கள்; பேரிடர் மேலாண்மையான சுனாமி, பூகம்பம், புயல், வெள்ளம் எச்சரிக்கைகள் எல்லாம் கட்டண சேவையாக மாற்றப்படும். அதன் சுமைகளை நம் தலையில் கட்டுவார்கள். அதன் தரவுகளை தாமதப்படுத்தவும் செய்யலாம். இது மக்களின் உயிருக்கு வேட்டு வைப்பதாகும்.
தனியாரிடம் சென்றால் தொழிலாளர் ஒப்பந்த முறை புகுத்தப்படும், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், சுகாதார பயன்கள் அனைத்தும் பறிக்கப்படும். தொழிற்சங்க உரிமைகள் ஒழிக்கப்படும். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு நீக்கப்படும்.மனித வளத்தை குறைந்த கூலியில் அதீத லாபத்தை சுரண்டுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
ஒட்டுமொத்தத்தில் விண்வெளி தனியார்மயம் என்பது ஏகாதிபத்திய பிடியில் கொண்டு செல்வது. இது நாட்டின் பாதுகாப்பு, மக்களின் உயிரோடும் உரிமையோடும் விளையாடுவதாக மாறிவிட்டது.
ஏகபோகமும், அரசியல் ஆதிக்கமும் இந்தியாவை இருண்ட நாடாக மாற்றும்
விண்வெளி சந்தையின் மதிப்பு 8 பில்லியன் டாலரிலிருந்து44 பிபில்லியன் டாலராக வளர்த்தெடுக்க இலக்கு வைத்திருக்கிறார்கள்.இது ஏகாதிபத்தியஊக நிதிமூலதன ஹோல்டர்களிடம் குவிக்கப் போகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பால், மக்களின் வரி வருவாயால் உருவான விண்வெளித் துறை கார்ப்பரேட் லாபமாக மாறிக்கொண்டிருக்கிறது. HAL, L&T, NSIL சிண்டிகேட்டுகள் மூலம் PSLV உற்பத்தியும் சந்தையில் ஏகபோகம் அடையப் போகிறது. ஸகைரூட், பிக்செல், அக்னிகுல் மூலம் அமெரிக்க ஊக நிதிமூலதனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செல்லப்போகிறது. 100% அந்நிய நேரடி மூலதனம் அனுமதித்ததன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்திய மூலதன ஏற்றுமதியானது இந்திய விண்வெளி சந்தையை கட்டுப்படுத்தப் போகிறது. 2023 ஆர்டெமிஸ் ஒப்பந்தம் மூலம் விண்வெளியை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் தனது மேலாதிக்க நலனுக்கான இந்தியாவாக மாற்றியமைக்கபோகிறது.
புதியகாலனிய தாசன் மோடி தலைமையிலான பாசிச பாஜகவின் விண்வெளிக் கொள்கையை எதிர்த்துப்போராடுவோம்
- PSLV, SSLV மற்றும் அனைத்து ISRO தொழில்நுட்பங்களும் பொதுத்துறையிலேயே தொடர வேண்டும். ஏற்கனவே மாற்றப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யப்பட வேண்டும்.
- நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கூட வைக்காமல் கொண்டுவரப்பட்ட Indian Space Policy 2023-ஐ உடனடியாக சுதேசிய திட்டத்தின் அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும்.
- தனியார்மயத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ள IN-SPACe கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
- விண்வெளி துறையில் 100% FDI அனுமதி திரும்பப் பெறப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு சார்ந்த துறைகளில் கட்டாயம் வெளிநாட்டு முதலீடு முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.
- புதியகாலனிய சுரண்டலை அங்கீகரிக்கும், அமெரிக்க சீன பனிப் போரில் இந்தியாவை இளைய பங்காளியாக மாற்றும் ஆர்ட்டிஸ் ஒப்பந்தம் 2023ஐ கைவிட வேண்டும். இறையண்மையை பாதுகாக்கும்ஏகாதிபத்திய சார்பற்ற சுதேசியக் கொள்கையை கட்டியமைப்போம்.
- அனைத்து NSIL ஒப்பந்தங்களின் தகவல்களையும் வெளிப்படையாக தாக்கல் செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் அனைத்தும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.
- இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களின் வேலை நிரந்தரம், இடஒதுக்கீடு மற்றும் தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- விண்வெளித் துறையினை நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். அதன் வருமானம் மீனவர்கள், விவசாயிகள், கிராமப்புற மக்களுக்கான சேவைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்;
- உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டும்
- அமெரிக்காவின் பிடிக்குள் இந்தியாவை மாற்றும் புதிய காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.
- கார்ப்பரேட்டுக்கு சேவை செய்யும் பாசிச பாஜக ஆட்சியை தூக்கியெறிவோம்.
- சமரன்
(ஜூன் - ஜூலை 2026)