சர்க்காரியா - மிசா - அவசர நிலை ஆகியவற்றில் அம்பலப்பட்டதா திமுக?
அறம் இணைய இதழ்
அவசர நிலை பிரகடனத்தை திமுக எதிர்த்ததா? எதிர்த்தது போல பாவனை காட்டியதா? ஸ்டாலின் மிசா காலத்தில் கைதானால் மிசா தியாகியாவாரா? மிசா கணேசன், மிசா பாண்டியன் என்ற வரிசையில் ஏன் ஸ்டாலின் சேர்க்கப்படவில்லை? சர்காரியா கமிஷன் விசாரணையில் திமுகவின் ஊழல்கள் அம்பலப்பட்டதா?
சர்க்காரியா கமிஷனை பற்றி சென்ற தலைமுறை மறந்து போன நிலையில்< இன்றைய தலைமுறை சர்க்காரியா என்றால் என்னவென்றே அறிந்திராத வேளையில் மீண்டும் இப்பொழுது சர்க்காரியா ஆணையம் பற்றியும் அதன் பரிந்துரைகளை் பற்றியும் அறிந்து கொள்ள தமிழக மக்களிடையே மிகப்பெரிய ஆவல் ஏற்பட்டுள்ளது.
எல்லோரும் மறந்து போன ஒரு சம்பவத்தை முதல்வர் மீண்டும் கிளப்புகிறாரே என திமுக பதறுவதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இதை பற்றி எழுதுபவர்கள், கருத்து கூறுபவர்கள் அனைவரும் திமுக மீது “களங்கம்” கற்பிக்கிறார்கள், திமுக மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள் என குற்றஞ்சாட்டுவது முறையா?
எம்ஜிஆரும் , கல்யாணசுந்தரமும், வேலூர் ஜி. விசுவநாதனும் மற்றும் பலரும் கொடுத்த கருணாநிதி அரசு மீதான ஊழல் புகார்களை விசாரித்து,மேல் நடவடிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு நீதிபதி திரு. ரஞ்சித் சர்க்காரியா அவர்களுக்கு பணிக்கப்பட்டது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் , குற்றச்சாட்டுக்களை வரிசை படுத்தி விசாரித்து, நான்கு பகுதிகளை (volume) கொண்ட பரிந்துரையை மத்திய அரசிற்கு கொடுத்தது.
பகுதி1 -ல் முதன் நிலை அல்லது இடைக்கால அறிக்கை ஆகும்!
பகுதி 2 இறுதியான அறிக்கை ஆகும்
பகுதி 3 & 4 சாட்சிகளின் பதிவுகள் மற்றும் ஆவண சாட்சியங்களின் பதிவேடுகள் கொண்டதாகவும் உள்ளது.
இத்தகைய பகுதிகளை கொண்ட அறிக்கையை சமர்ப்பித்த நீதிபதி சர்க்காரியா , இங்கு விஞ்ஞான பூர்வமாக ஊழல் நடைபெற்றுள்ளது என தனது கருத்தை பதிவு செய்து அரசு இவ்வறிக்கை மேல் உரிய நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைத்தார் என்பது வரலாறு.
நாம் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம் சர்க்காரிய அறிக்கையை கருணாநிதிக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பாக யாரும் கருதவுமில்லை, கூறவுமில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டிய அறிக்கையை கிடப்பில் போடப்பட்டது ஏன? இதனால் நன்மை அடைந்தவர்கள் யார்? என்பவை தான் இப்பொழுது எழுப்ப படும் கேள்விகளாகும்.
சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை நீதிமன்ற தீர்ப்பல்ல என்று வரிந்து கட்டிக் கொண்டு வரும் மேதாவிகள் ஒரு விடயத்தை மறந்து விடுகின்றனர். ‘நாங்கள் ஊழல் செய்யவில்லை’ என்றும், ‘குற்றமற்றவர்கள்’ என்று கூறிக்கொள்ளும் திமுகவினர் குற்றமற்றவர்கள் என்றால் அதை நீதிமன்றங்களில் நிலை நாட்டி மார் தட்டலாம் அல்லவா?
பார்த்தேன் ,படித்தேன், ரசித்தேன் என்று எகத்தாளம் பேசிவிட்டு, சர்க்காரியா அறிக்கை மீது மத்திய அரசு எந்த சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் இருக்க கருணாநிதி செய்த அரசியல் சமரசங்கள் ஒன்றா, இரண்டா?
புதிதாக ஆட்சிக்கு வந்த ஜனதா ஆட்சியில் , பிரதமர் மொரார்ஜி தேசாய் ஜார்ஜ் பெர்டாண்டஸ் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றதை, தனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதை முரசொலியில் , ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு ஒரு நீதி , இந்த பாவி கருணாநிதிக்கு ஒரு நீதியா.. என்று எழுதவில்லையா?
சர்வாதிகார சண்டாளி, ஜனநாயக கொலைகாரி, முக்காடு போட்ட முசோலினி …. என இந்திரா காந்தியை 1978-ல் வசை பாடிவிட்டு காங்கிரசை இந்த மண்ணிலிருந்து ஒழிக்கவே இந்தக்கருணாநிதி உயிரோடிருக்கிறேன் என்று வீர வசனம் பேசிவிட்டு சில மாதங்களில் , மொரார்ஜி கையை விரித்தவுடன் , நேருவின் மகளே வருக , நிலையான ஆட்சி தருக என காங்கிரஸ் கூட்டணியை ஏன் கருணாநிதி நாடினார்?
மிசா சட்டம் (Maintenance of Internal Security Act) முதலில் நிறைவேற்றப்பட்ட காலமான ஜூலை 1971ல் ஆளும் இந்திரா காங்கிரசுடன் கருணாநிதி கூட்டணியில் இருந்தார். இச்சட்டம் அவசர சட்டமாக (ordinance) இயற்ற பட்ட போது திமுக உறுப்பினர்களின் உதவியோடு தான் பிரதமர் இந்திரா ஆட்சியில் இருந்தார்.
இச்சட்டத்தை கருணாநிதி அரசு தமிழ்நாட்டில் உபயோகித்து தமக்கு வேண்டாதவர்களை கைது செய்ய தயங்கியது இல்லை. கருணாநிதி அரசால் மிசா வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் நபர் எம் ஜி ஆரின் விசுவாசி, ஜேப்பியார் தான்.
தொழிற்சங்க தலைவர் ஆர்.குசேலர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் வி.பி. சிந்தனையும் கருணாநிதி அரசு மிசா சட்டத்தை வைத்தே கைது செய்தது.
1971-1975 காலங்களில் ஆட்சியை பிடித்த தி மு க வினர் மாணவர்கள் ஆட்சியாளர்களை கேள்வி கேட்டால் அடித்து நொறுக்கும் கொடுமையை செய்தனர்.மாணவர் போராட்டங்களை காவல்துறையைக் கொண்டு கடுமையாக ஒடுக்கினர்.
சென்னையில் சிம்சன் தொழிலாளர்கள் நீண்ட நெடிய போராட்டத்தைகுசேலர் தலைமையில் நடத்திய போது கருணாநிதி அரசின் காவல் துறையும்,திமுகவினரும் கொடூர தாக்குதல்களை நடத்தினர்.
கருணாநிதியின் இத்தகைய அரசியலில் முற்போக்கும், சமூக நலனும், ஜனநாயக முறையும் எங்கே உள்ளது?
1972-75 காலகட்டத்தில் வட இந்தியாவில் அரசியல் சூழல்கள் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் இயங்கின. நேருவின் மறைவிற்கு பின்னர் 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தாலும் பல மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது, வெற்றி பெற்ற மாநிலங்களிலும் அதனுடைய சமூக அடித்தளம் ஆட்டம் கண்டு இருந்தது.
குஜராத்தில் பீகாரில் நடத்தப்பட்ட நவ நிர்மாண் போராட்டத்தில் சங்கரஷ சமிதி ( போராட்ட குழுக்களின்) தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவை பெரிதாக பரபரப்பாக பத்திரிக்கைகளிலும் பேசப்பட்டன. குஜராத்தில் படித்த நகரத்தாரும், மாணவர்களும் ஊழலை எதிர்த்தும்,விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் தன்னெழுச்சியாக 1974 ஜனவரி முதல் மார்ச் வரை தீவிரமாக போராடினர். இந்த நவ நிர்மாண் போராட்டம் காங்கிரஸ் முதல்வரை பதவி இறக்கியது.
பீகாரில் 1973 ஜனவரி 21ல் சிபிஐ கட்சி அழைப்பு விடுத்து நடத்திய “பந்த் “போராட்டம் தான் பீகார் இயக்கத்தின் ஆரம்ப புள்ளியாகும் . பின்னர் இந்த போராட்டத்தில் மாணவர்கள் பங்கு கொண்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசியல் சந்நியாசத்திலிருந்து வெளியேறி பிகார் மற்றும் குஜராத் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
1975 ல் டெல்லியில் நடந்த மக்கள் பேரணியில் , “சிம்மாசனத்தை விட்டு இறங்கு, மக்கள் வருகிறார்கள்” , டில்லியின் ராணியே உன் இஷடத்திற்கு ஆட்சி செய்ய உன்னை இனி அனுமதிக்க மாட்டோம் “ என்ற இந்திரா எதிர்ப்பு கோஷங்களே பேரணியில் அடிப்படை அம்சமாக இருந்தது. இவர் அமைத்த போராட்ட குழுக்களில் – வலதுசாரி சக்திகளே- ஜனசங்கம், பாரதிய கிரந்தி தள், சோசலிஸ்டுகள் மற்றும் உயர் சாதி இளைஞர்கள் மட்டுமே இருந்தனர். இதைக் கண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி CPI ஜே பி இயக்கத்திலிருந்து விலகி நின்றது. மார்க்சிஸ்டு கட்சியும் எம் எல் கட்சியினரும் ஜே பி இயக்கம் ஜனநாயகத் தன்மையுடன் உள்ளது முற்போக்கான எண்ணம் கொண்டது என்ற எண்ணத்தில் இவ்வியக்கத்தில் ஈடுபட்டனர்.
ஜேபி இயக்கம் மக்களின் ஆதரவை திரட்டும் நிலையில் காங்கிரஸ் கட்சியிலும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் தங்கள் குரலை எழுப்ப தொடங்கினர். இவர்கள் ஜேபி இயக்கத்தின் பால் அக்கறை உடையவர்களாயும் இருந்தனர். இவர்கள் காங்கிரஸ் கட்சியின் இளந்துருக்கியர்கள் (Young Turks) என்றுஅறியப்பட்டனர். சந்திரசேகர், மோகன் தாரியா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கியமான இளந்துருக்கியர்களாவர்.
இந்திராவிற்கு எதிரான மக்கள் கூட்டணிக்கு கட்சிகளை இழுக்க ஜேபி இயக்கம் முனைந்த வேளையில் ஜனசங்கம் மத்திய பிரதேசத்திலும், அகாலி தளம் பஞ்சாபிலும் , ஸ்தாபன காங்கிரஸ் குஜராத்திலும், பாரதிய லோக்தள் வட இந்தியா முழுவதும் வலுப்பெற்றன, காங்கிரசின் அடித்தளம் இதனால் ஆட்டம் கண்டது.
இந்த சமயத்தில் ஜேபி இராணுவத்தினருக்கும், காவலர்களுக்கும் “அரசு உத்தரவிற்கு அடி பணியாதீர்” என்ற அறைகூவலை விடுத்தார். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் அலகாபாத் நீதிமன்றம் பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து பதட்டம் நாட்டை கவ்வியது.
இதையடுத்து அவசரநிலையைப் பிரகடனம் செய்தார், இந்திரா காந்தி. ஆர் எஸ் எஸ் இயக்கம், ஆனந்த மார்க்க இயக்கம், ஜமாய்த் இ இஸ்லாமிய இயக்கம் நக்சலைட் குழுக்கள் என 14-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தடை செய்யபட்டன. திமுக தடை செய்யப்படவில்லை. வட இந்தியாவில் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், அத்வானி, ஜார்ஜ் பெர்ணாண்டஸ், சரண்சிங், லல்லுபிரசாத் யாதவ், நிதீஸ்குமார், முலாயம்சிங் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் கைதாகினர். திமுகவின் முக்கியமான முன்னணித் தலைவர்களான கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற முதல் நிலைத் தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
பத்திரிக்கை தணிக்கை அமலுக்கு வந்தது, அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள், ஸ்டிரைக் போன்றவற்றிற்கு தடை வந்தது. காரணம் ஏதும் கூறாமல் எவரையும் அரசு தடுப்பு காவலில் வைக்கலாம் என்றும் , தனி மனித உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அரசுக்கு இந்த பிரகடனம் அனுமதி கொடுத்தது.
ஆர் எஸ் எஸ், ஆனந்த மார்கி மற்றும் சிமி போன்ற மதவெறி அமைப்புக்களை தடை செய்ததும் முதலாளித்துவ ஆதரவு சக்திகளான சுதந்திரா கட்சி தலைவர்கள், ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள், மற்றும் சோசலிச தலைவர்களை கைது செய்த விடயமும் நாட்டில் பதற்றத்தை உருவாக்கியது. இத்துடன் விலைவாசி குறைப்பு, நிலச்சீர்திருத்தம், ஏழை எளியோருக்கு வீடு கட்டி தருதல், நிலம் கொடுத்தல் போன்ற மக்கள் நலனை முன்னிறுத்தும் 20 அம்ச திட்டத்தையும் இந்திரா அறிவித்தது மக்களிடம் வரவேற்பை பெற்றது, அரசியல் கட்சிகளை குழப்பத்தில் ஆற்றியது.
அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவசரநிலை பிரகடனத்திற்கு ஆதரவு தெரிவித்தது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் இதை வரவேற்றார். கூட்டணி கட்சியான திமுக இருதலை கொள்ளி எறும்பாக செயல்பட்டது. கட்சியின் செயற்குழு அவசரநிலையை எதிர்ப்பதாக தீர்மானம் போட்டாலும் , திமுக அரசு 20 அம்ச திட்டத்தை முழு மனதுடன் வரவேற்பதாக தொடர்ந்து கூறிவந்தது.
சட்டமன்றத்தில் பெ. சீனிவாசன் திமுக அரசு ஏன் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி.
“திமுக ஜனநாயகத்திற்காக வாளும் கேடயமும் ஏந்தி களத்தில் நிற்கிறது எப்பொழுது வாளை உயர்த்துவது, எப்பொழுது கேடயத்தை உயர்த்துவது என்று தலைமை முடிவு செய்யும் “ என்று கூறினார் . இந்த பதிலை ஒரு துண்டு பிரசுரமாகவே திமுக அந்த நாட்களில் வெளியிட்டது. இது திமுக வின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத்தை பறைசாற்றுகிறதே ஒழிய கொள்கை பிடிப்பை இந்த பதில் வெளிப்படுத்தவில்லை.
அன்றைய (1972-1975) கருணாநிதி அரசு ஜனநாயக உரிமைகளை மறுத்தது. அன்றைய அரசு எதிர்கட்சியான அஇஅதிமுக அவசர நிலையை ஆதரித்ததால், அரசியல் ரீதியாக திமுக ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என முடிவெடுக்க முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் ஊசலாடியது.
அவசர நிலையை வட இந்தியத் தலைவர்கள் எதிர்த்த அளவுக்கு தமிழகத்தில் எதிர்க்கவில்லை. அவசர நிலையை எதிர்த்து திமுக சார்பில் மக்கள் திரள் போராட்டத்தையோ, அல்லது பொதுக் கூட்டத்தையோ நடத்தவில்லை. பத்திரிக்கையாளர்கள் பேட்டிகளில் கருணாநிதி அவசர நிலையை எதிர்த்து எந்த கடும் விமர்சனத்தையும் சொல்லவில்லை. அதே சமயம் திருமண நிகழ்வுகளில் காங்கிரசையும், இந்திராகாந்தியையும் விமர்சித்தார்.
ரயில்கள் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வருவதும் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் செவ்வனே பணியாற்றுவதும் , பதுக்கல்காரர்கள், கள்ள சந்தை வியாபரிகள் கைது செய்யப்பட்டதும் மக்களிடம் வரவேற்பை பெற்றன. இதயசுத்தியோடு இருபது அம்ச திட்டத்தை நிறைவேற்றுவதில் திமுக அரசு முன்னணியில் நிற்கிறது என கூறிய கருணாநிதி இந்திராகாந்தியை எதிர்த்தார் என்பதெல்லாம் கட்டுக்கதை. மிசா கைதுகளை கண்டித்து உள் அரங்கு கூட்டங்களை நடத்துவதற்கு கூட கருணாநிதி அரசு அப்போது அனுமதி அளிக்கவில்லை.
ஆர் எஸ் எஸ் இயக்கத் தலைவர் இந்திரா காந்திக்கு உறுதி மொழிகளை கொடுத்து ஆர் எஸ் எஸ் மீதான தடையை விலக்க கோரினார். வன்முறை மற்றும் சதிவேலைகளில் ஆர் எஸ் எஸ் பங்கு பெறாது என உறுதியும் அளித்து கடிதங்கள் எழுதினார்.
சரண் சிங் மேலும் சில வட இந்திய தலைவர்களுடன் இணைந்து இந்திரா காந்தியுடன் ஒரு சமரசத்தை எட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை, துவக்கியது. ஜேபி மருத்துவ சிகிச்ணைக்காக மருத்துவமனை செல்ல ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டன.
சஞ்சய் காந்தியின் வரவால் அதிகார குவிப்பும் அதிகார அத்துமீறலும் , தொழிலாளர் அடக்குமுறையும் பெருகின. கட்டாய குடும்ப கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் ஏழை எளிய மக்களிடம் வெறுப்பையும் அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்பையினரான இஸ்லாமியர் ஆதலால் அரசியல் களம் மாறத் தொடங்கியது.
தமிழகத்தில் தனது செல்வாக்கிற்கு போட்டியாகத் திகழ்ந்த காமராஜரின் மறைவால் கட்டவிழ்ந்த பிரதமர் இந்திரா கருணாநிதி அரசின் மறைமுக அரசியல் சீண்டல்களை எதிர் கொள்ள தயாரானார். வட இந்தியாவில் எதிர்கட்சி எம் பிக்கள் இரா. செழியன் வீட்டில் கூட்டிய கூட்டத்தில் எதிர்கட்சிகள் ஒற்றுமையாக இந்திரா அரசை எதிர்ப்பதற்கு ஓரணியை உருவாக்க திட்டமிட்டனர்.
இரா . செழியன் இந்த கூட்டத்தை தனக்கு ஜேபியுடனும் ஏனைய தலைவர்களுடனும் இருக்கும் நட்பை பயன்படுத்தி கூட்டினார். திமுக தலைமையின் அறிவுறுத்தலில் இக்கூட்டம் கூட்டப்படவில்லை. ஏனெனில் திமுக தலைமை முரசொலி மாறனை முன்றிறுத்தியதே ஒழிய, இரா.செழியனை அல்ல.
தி.க. தலைவர் கி.வீரமணியின் முயற்சியில் அவசர நிலையை விமர்சித்து ஒரு கூட்டம் வட இந்தியத் தலைவர்களை அழைத்து ஏற்பாடகி நடந்த நிலையில் அன்றைய கருணாநிதி அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தக் கூட்டம் ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே கலைக்கப்பட்டது.
எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது ஜூன் 26,1975. அந்த எமர்ஜென்சிக்கு கையெழுத்திட்ட அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அகமது அலியை ஜனநாயகத்தை பலி கொடுத்தவர் என எல்லோரும் பழித்த சமயத்தில் அவரது தலைமையில் ஆகஸ்ட் 20, 1975 ஆம் ஆண்டு தன் மகன் ஸ்டாலின் திருமணத்தை நடத்தியவர் கருணாநிதி என்பதிலேயே திமுக எமர்ஜென்சியை எதிர்க்கவில்லை என்பது உறுதிப்படுகிறதே.
இவ்வாறு இந்திரா காந்தியையோ, அவசரநிலை பிரகடனத்தையோ எதிர்த்து எந்த துரும்பையும் எடுத்து போடாத திமுக பதவிக்காலம் முடிய ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் கலைக்கப்பட்டது ஏதோ ஜனநாயகத்திற்காக கருணாநிதி போராடியதற்கு கிடைத்த தண்டனையாக சித்தரிப்பது கேலி கூத்தாகும். கருணாநிதியின் சுயநலத்தால் விளைந்த அரசியல் தடுமாற்றமே 1975 ஜூன் முதல் 1976 ஜனவரி வரையில் திமுக அடக்கி வாசித்ததற்கான காரணமாகும்.
கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டவுடன் திமுகவினர் பலர் மிசா சட்டத்தில் கைதானார்கள். அதில் முக்கியமானவர் அன்றைய குருவிக் குளம் பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்த வை கோபால்சாமி ஆகும். அதே சமயம் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருந்த அன்றைய திமுகவில் இருந்த ரவுடிகள் பலரும் போலீசாரால் அள்ளி எடுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். ஆனால், மிசாவில் கைதான வலதுசாரி, இடதுசாரி அரசியல் கைதிகள் அனைவரும் கண்ணியமாகவே நடத்தப்பட்டனர்.
மு.க ஸ்டாலின் கைது செய்ய பட்டது மிசா சட்டத்தின் கீழ் அல்ல என்பதை ஆவணங்கள் சுட்டி காட்டுகின்றன. அவர் கைது செய்யப்பட்டதற்கு பாலியல் அத்துமீறல்கள் போன்ற விடயங்களை பல்வேறு தரப்பினர் தெரிவிக்கும் சூழலில், கைது செய்யப்பட்டதற்காக ஒவ்வொரு கைதிக்கும் தரப்பட்டிருக்கும் டிடென்சன் காப்பியை ஸ்டாலின் ஏன் காட்ட மறுக்கிறார்? கருணாநிதியையோ, முரசொலி மாறனையோ, மு.க.முத்து, மு க அழகிரி ஆகியோரையோ கைது செய்யாமல் அரசியலுக்கே வராத ஸ்டாலினை ஏன் காங்கிரஸ் அரசு கைது செய்ய வேண்டும்?
எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா இருக்கும் வரை ஸ்டாலினை மிசா தியாகியாக ஸ்டாலின் அழைக்கப்படவில்லையே ஏன்? கருணாநிதியே ஸ்டாலினை மிசா தியாகி எனக் கூறவில்லை. மிசா கணேசன், மிசா பாண்டியன் என பல திமுகவினர் அடைமொழியுடன் வலம் வந்த பொழுது மிசா ஸ்டாலின் என்று “தளபதி”க்கு அடைமொழியை ஏன் திமுக கொடுக்கவில்லை?
2026-ல் பழைய கதைகளை தமிழக மக்கள் மறந்திருக்கும் வேளையில், மீண்டும் சர்க்காரியாகமிஷன் சுட்டிகாட்டிய கருணாநிதி அரசின் ஊழலை மக்களின் கவனத்திற்கு விஜய் கொண்டு வருவது திமுகவினரின் பதட்டத்தை கூட்டுகிறது.
மிசாவையே சந்தித்தவர்கள் என்று சவடால் பேசி , ஆளுங்கட்சியினரை தற்குறிகளாக காட்ட நினைத்த
திமுக வினருக்கு ஸ்டாலின் கைது பற்றி கேள்வி கேட்டவுடன் கோபம் பொத்துக் கொண்டு வருவது நமக்கு புரிகிறது. ஆதாரமில்லாமல் எத்தனை நாள் கதையளக்க முடியும்?
ச.அருணாச்சலம்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/32956/emargency-era-misa-dmk/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு