புதிய தலைமை செயலக திட்டத்தால் போர்க்கோலமான மீனவர்கள்!

அறம் இணைய இதழ்

புதிய தலைமை செயலக திட்டத்தால் போர்க்கோலமான மீனவர்கள்!

பழவேற்காடு முதல் கோவளம் வரை உள்ள மீனவ  குப்பங்கள் கொந்தளிக்கின்றன! – முதல்வர் விஜய்யின் புதிய தலைமைச் செயலக திட்ட அறிவிப்பால்! ஒட்டு மொத்த மீனவர்களும் செப்.15 ல், பட்டனப்பாக்கத்தில் கூடி, தமிழக அரசையே கதிகலங்க வைக்கும் பெரும் போராட்டத்திற்கு ஆயுத்தமாகி வருகின்றனர்.  மத்திய கோஸ்டல் மேனேஜ்மென்ட் அதாரிடி அனுமதி கிடைக்குமா? என்ன நடக்கிறது..?

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என மீனவ சங்கங்கள், அதிமுக, பாமக, இந்திய கம்யூனீஸ்ட் கட்சிகள், மற்றும் அப் பகுதிவாழ் மக்கள் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து எதிர்ப்புகளையும் கண்டு கொள்ளாமல் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைப்பதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளதானது பெரும் அதிர்ச்சி தருகிறது…!

மீனவ மக்கள் வசிக்கும் நெரிசலான இந்தப் பகுதியில்  20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலக கட்டடம் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3 தனித்தனி குழுக்கள் அமைக்க உள்ளதாகவும் அரசாணை கூறுகிறது.

தவெக ஆட்சியை  ஆதரிக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, செப்டம்பர் 12, 2026 அன்று மெரீனா சுற்றுவட்டார மீனவர்களைக் கொண்டு ஒரு ” எதிர்ப்பு போராட்டத்தை” நடத்தி விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால்,  “நொச்சிகுப்பம், நொச்சி நகர், டூமிங் குப்பம், செல்வராஜபுரம், ராஜிவ்காந்தி நகர், பவானி குப்பம், முள்ளிமா நகர், முள்ளிக்குப்பம்,சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் ” ஆகிய அனைத்து மீனவ கிராமங்களும், விஜய் கட்சியை ஆதரித்து, ” விசில்” சின்னத்திற்கு வாக்களித்தவர்கள். இனி முதல்வர் ஜோசப் விஜய்தான் முடிவெடுக்க வேண்டும்.!

தற்போது, புதிய ஆட்சியில் மீனவப் பகுதிகளில்  “தலைமைச் செயலகக் கட்டிடம்” திட்டம் ஏதிர்பார்த்திராத பெரும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது. அதிகாரிகள் சிலர், தங்களது  “ஆசைக் கனவுகளை” அரங்கேற்றத் துடிக்கிறார்கள்.

மெரினா கரையோரம், என்பது “சிஆர்.இசட். 1 ” விதிக்கு உட்பட்டதாகும்.  இங்கு கடலில் நடைபெறும் ஆமைகள் உற்பத்தியை தடுக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. கரையின் உட்புறம், இப்போது திட்டமிடும் பகுதி, “சி.ஆர்.இசட். 2க்கு” உட்பட்டது என்பதால்,  “கோஸ்டல் மேனேஜ்மென்ட் அதாரிடி” அனுமதி பெற்றால் மட்டுமே கட்ட முடியும்.  இந்தக் குழுவின், சென்னை மாவட்ட பிரிவில் உள்ள மீனவப் பிரதிநிதிகள் அனுமதிக்கத் தயாராயில்லை. இத் திட்டத்தால் இங்கே வாழும் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், ” பத்து மீனவக் கிராமங்கள், இங்கே  “தலைமைச் செயலகம்” வருவதை எதிர்க்க  எத்தகையை தியாகத்தை செய்யவும் தயாராகி விட்டனர்.

இந்தப் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட பள்ளிக் கூடங்கள், தேவாலயங்கள் இருக்கின்றன.   மேலும், போக்குவரத்து நெரிசலான இடத்தில் ஏன் இவ்வளவு  பெரிய திட்டத்தை  திணிக்கிறார்கள்?

1971 ல்  இந்த மீனவர்கள் வசிக்கும் இடத்தை, கலைஞர் ” குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகளை” கட்டித்  தந்தது தொடங்கி இந்த மீனவ குப்பங்கள் அரசுக்கு சொந்தமானவை. அரசாங்கம் இங்கே என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தேவைப்பட்டால் இந்த மீனவ குப்பங்களை அரசு பயன்பாட்டுக்காக தூக்கலாம் என்ற மனப்போக்கு வந்துவிட்டது. அதனால்தான், கடலோரம் அவர்கள் வசிக்கும் இடத்தில், “அரசாங்கம் அல்லது மாநகராட்சி” உள்ளே நுழைந்து,  “மீனவக் குடியிருப்புகளுக்கு இடையே உள்ள ஊடாடலுக்காக போடப்பட்ட சாலையை,”,  தங்களது சவுகரியத்திற்காக, ” லூப் சாலை” எனப் பெயரிட்டு, அதை   பொதுப் போக்குவரத்துக்காக  பெரிதும் பயன்படுத்துகின்றனர். இதனால் இங்கே மீனவப் பெண்கள் சுதந்திரமாக, மீன் வியாபாரம் செய்வதே கேள்விக்குறியானது. கடற்கரையிலிருந்து இவர்களை அகற்றி,  “மாநகராட்சி கட்டிய மீன் அங்காடி” க்குள், அவர்களை “திணிக்க” முயன்றபோது, மீனவப் பெண்கள் எதிர்ப்பு கொடுக்கிறார்கள்., கடல்சார் பழங்குடிகளான மீனவர்களை  புரிந்து கொள்ள மறுத்து பொதுச் சமூகம். கடற்கரை,  “தங்களது சுற்றுலா பகுதி” என்று நினைக்கிறது.

அதுவே,இங்கு வாழும் மக்களிடம் கருத்துக் கேட்காமலேயே அரசுத் திட்டங்களை, ஆளும் அரசாங்கங்கள் அனுமதிக்கின்றன. இப்படி, “அவர்களது பூமியில்” ஆக்கிரமிப்பு செய்வதனால் தான், மீனவ மக்களுடன் ” உரசல்கள்” வருகின்றன. அதுவே, ” நாசகார ஆலைகள், நச்சுப் புகை ஆலைகள், மாசுபடுத்தும் ஆலைகள், இறால் பண்ணைகள்” ஆகியவை மக்கள் வாழ்விடங்களில் இறங்கும் போதெல்லாம் தகராறு வருகிறது.

1996 ல், மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக இருந்தார். சாந்தோம் நெடுஞ்சாலை என்ற இன்றைய காமராஜர் சாலை போக்குவரத்து நெருக்கடி என்பதால், “நொச்சிக்குப்பம் மீனவ முன்னோடிகளை, போக்குவரத்துக் காவல்துறை மூலம் அணுகி, தான் அவர்களது குப்பம் வழி சாலையில் செல்ல ஒரு மணி நேரத்திற்கு அனுமதி பெற்று” மறைந்த பெரியவர் ருத்திரமூர்த்தி உட்பட மீனவ தலைவர்களிடம் கையெழுத்து வாங்கி, பயணம் செய்தார். அதேபோல, 2006 ல், ஸ்டாலின் துணை முதல்வராக வந்தபோது, இதே பாதையைப் பயன்படுத்த, போக்குவரத்து காவலர்கள் மூலம் அணுகி, ” இரண்டு மணி நேரம் அந்தப் பாதை வழி பயணம் செய்ய அனுமதி பெற்றார்.” இந்த வரலாறு. இப்போதுள்ள அதிகாரிகளுக்கு இது தெரியாது. அதனால் புரிவதில்லை.

2000,2001 ஆம் ஆண்டுகளில், சாந்தோம் நெடுஞ்சாலையின் இருபக்கமும்  குடியிருப்பவர்கள்  அதிரடியாக சாலையை சற்று ஆக்கிரமித்து குடியிருப்புகளை விரிவுபடுத்தினர். சாலை சுருங்குவதைக் கவனித்து, அதற்கு காரணமான அகற்ற, இருபுறமும் உள்ள வீடுகள், பள்ளிகள், தேவாலயம் ஆகியவை  செய்த ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த ஒரு தீர்மானத்தை சென்னை மாநகராட்சி போட்டது . ஆனால், அதை இன்று வரை அமலாக்கம் செய்யவில்லை. ஏன் தயங்குகிறார்கள்? எதற்காக, ” லூப் சாலை” என்று போக்குவரத்தை, மீனவர் குடியிருப்புக்குள் நுழைக்கிறார்கள்?

தென் சென்னை மீனவர்களின் போராட்ட வரலாறு;

, 1985 ல், டிசம்பர் 4 ல், எம்.ஜீ.ஆர். ஆட்சியில்,  “கடற்கரையை அழகுபடுத்துகிறோம்” என்ற பெயரில், மீனவர்களது தொழில் உபகரணங்களான, ” படகுகளையும், வலைகளையும்” கடற்கரையிலிருந்து அகற்றியபோது, காவல்துறையுடன் மோதல் ஏற்பட்டு, வால்டர் தேவாரம் வரை இறங்கி, துப்பாக்கிச் சூட்டிற்கு 7 மீனவர்கள் பலியாகி, உச்சநீதிமன்ற தடை மூலம், மீனவர் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டது. அப்போது எதிர்த்துப் போராடியவர்களுக்கு தலைமை தாங்கிய,  “சென்னை  செங்கை கட்டுமர மீனவர் பாதுகாக்கப் சங்கம்” பொதுச் செயலாளர் ஆர்.விஸ்வநாதன் தீவிர எம்.ஜீ.ஆர். ரசிகர்!.

அடுத்து, ஜெயலலிதா ஆட்சியில், 2003 ஆம் ஆண்டு ஜனவரியில், “மலேசிய அரசின் கட்டுமான நிறுவனம்” டத்தோ சாமுவேல் மூலம்,  “கலங்கரை விளக்கம் முதல், பட்டினப்பாக்கம்” வரை, அந்நிய நாட்டு தூதரகங்களையும், நட்சத்திர ஓட்டல்களையும் கட்ட திட்டமிட்ட போது, 15 மீனவ மிராமங்கள், ” அமைதி வழியில் ஒவ்வொரு வாரமும் கூடி,  எதிர்ப்பு கூட்டங்களை  நடத்தியது கண்டு, ஜெயலலிதா அரசு தனது திட்டத்திலிருந்து பின்வாங்கியது!.

அடுத்து, 2004 ஆம் ஆண்டு  சுனாமி பேரழிவுக்கு பிறகு,  சிறப்பு அதிகாரிகள், ஆர். வி.சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ்.,  சங்கர் ஐ.ஏ.எஸ்.இருவரும், மீனவர் உட்பட அனைவரும் கடலிலிருந்து 500 மீட்டர் தள்ளியே சுனாமி குடியிருப்பு என வாழ வேண்டும் என்று  சுற்றறிக்கை அறிவித்த போது, 2005 ஆம் ஆண்டு, மார்ச் 16 ல், ” தமிழ் நாடு புதுச்சேரி மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு” நடத்திய பேரணியும், முதல்வருக்கு மனு கொடுத்ததாலும், முதல்வர் ஜெயலலிதா, 2005, மார்ச் 30 ல், 110 விதியின் கீழ், ” மீனவர்கள் கடற்கரையோரம் வீடு கட்டி வாழ்ந்தால் தான், கடலிலே எந்நேரமும் வரும்  “மீன் கும்பலை ( மாப்)”  உணர்ந்து, படகை எடுத்துக் கொண்டு விரைந்து வேட்டையாட செல்ல முடியும்” என்று அறிவித்து,  “கரையோரம் மீனவர்கள் வாழ்வதற்கான” நியாயத்தை புரிய வைத்தார்.

அடுத்து, 2008 ஆம் ஆண்டு, கலைஞர் ஆட்சியில்,  “கலங்கரை விளக்கு முதல் அடையாறு” வரை,  “பறக்கும் பாலம்” திட்டமிட்டபோது, மீனவர்கள் எதிர்த்தவுடன், ஜெயலலிதாவே அதை எதிர்த்து, போராட்டம் நடத்தி, 2011 ஆட்சிக்கு வந்ததும்,  சொன்னபடியே அந்தத் திட்டத்தை ரத்து செய்தார்.

பிறகு, ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு, ” ரோப் கார்” திட்டமிட்டபோது, மீனவர்கள் எதிர்த்து, திட்டமிடவந்த “அதிகாரிகளை தடுத்தனர்”. ஒன்றிய அரசின்,  “நீலக்கொடி திட்டம்” ஸ்டாலின் அரசால்  “மெரினாவிற்கு கொண்டுவரப் பட்டபோது”, எதிர்ப்பை சமாளிக்க,  “கடலோர ஒழுங்குமுறை மண்டல” விதிகள்படி,  “கடற்கரை உள்சாலைக்கு கிழக்கே,காங்கிரீட் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்பதால், மூங்கிலால் அலங்கார வளைவுகள்” கட்டுகிறார்கள். அதையும் ” விதி புரியா அதிகாரிகள்” மீறுகிறார்கள்.

ஆலோசனையின்றி அவசர கதியில் பட்டிணப்பாக்கத்தில் அறிவிக்கப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிட திட்டத்தை – மக்கள் எதிர்ப்புக்கு மதிப்பளிப்பது – கைவிடுவதே, தவெக அரசுக்கு உத்தமமாகும்.

டி.எஸ்.எஸ். மணி, சமூக செயற்பாட்டாளர், அரசியல் விமர்சகர்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/32930/new-secretariat-people-protest/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு