பயன்பாட்டுக்கு உட்படாத மொழியை காப்பாற்ற முடியுமா?
அறம் இணைய இதழ்
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், அது ஏன் சாத்தியமே இல்லாமல் போய்க் கொண்டுள்ளது. நவீன அறிவியல் யுகத்துடனும், வணிக யுகத்துடனும் இணைந்திருக்கிறதா தமிழ்? நம் அலுவலக செயல்பாடுகளிலும், புழக்கத்திலும் தமிழை எந்த அளவு பயன்படுத்துகிறோம்? தமிழை பயன்பாட்டு மொழியாக்க செய்ய வேண்டியது என்ன?
வணிக நடைமுறைகளிலே இணைந்து உலக அளவில் பேசப்பட்டு வளர்ச்சியடைந்திருக்கிறதா, தமிழ்? நம் தமிழ் மொழி அறிவியல் துறையிலாவது சற்று சாதித்திருக்கிறது.
ஆனால், நம் தமிழ் மொழி நமது வணிகத்தில் இருக்கிறதா? அது ஏன் இல்லை? தமிழன் நடத்தும் தொழில் நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் தமிழ் மொழி முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறதா? இல்லையே….! தமிழன் நடத்தும் நிறுவனம், தமிழர்கள் வேலை செய்யும் நிறுவனம், தமிழ் மக்களே வாடிக்கையாளர்கள். அப்படி இருக்க ஆங்கிலமே வணிகத்தில் கோலோச்சுகிறது! உண்மையாக தமிழ்மொழி மீது தமிழனுக்கு அக்கறை இருக்குமேயானால் அவன் தமிழைத் தான் தன் வாணிப மொழியாக கொண்டிருக்க வேண்டும்.
ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே தொலைநோக்கு பார்வை இருந்திருந்தால், அவர்கள் தமிழை அறிவியல் துறையிலும், வாணிபத் துறையிலும் அல்லவா வளர்த்திருக்க வேண்டும். தற்போதைய யதார்த்த நிலை என்ன? தமிழர்கள் எல்லாம் ஆங்கிலம் கற்றால் தான் பொது அறிவு கிடைக்கும், வேலை கிடைக்கும் (அல்லது) தொழில் நடத்த முடியும் என்று நம்புகிறார்கள். இது உண்மையல்ல.
இதற்கு காரணம் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் தான். அரசு எந்த மொழியை ஆதரிக்கிறதோ அதைத் தான் மக்கள் பின்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஒரு முறை தமிழறிஞர் தமிழண்ணல் கூறியது போல், ‘எந்த மொழி சோறு போடுமோ அந்த மொழிதான் தொடர்ந்து நவீன யுகத்தில் நிலைத்து நிற்கும். மற்றவை எல்லாம் பேச்சு வழக்கற்று ‘சமஸ்கிருதம்’ போன்று காலப் போக்கில் அழிந்து போகும்’ என்று கூறினார்.
நம் மக்கள் தமிழ்மொழி சோறு போடாது, நம் வாழ்க்கைக்கு வருமானத்தை ஈட்டித் தராது (அல்லது) வாழ்வு தராது என்று நம்பி தம் குழந்தைகளை மழலை பள்ளியிலிருந்து உயர் கல்வி வரை தமிழை ஒரு பாடமாக கூட படிக்காமல், ஆங்கில வழி கல்வி கற்க அனுமதித்து தமிழையே ஒழுங்காக பேச, எழுத வராத உணர்வற்ற தமிழர்களை உருவாக்கி வருகிறோம்.
ஒரு பிரச்சினையின் ‘மூல வேரை’ கண்டறிய வேண்டுமானால் நிர்வாகத்தில் ஒரு வழிமுறையாக ‘ஏன் ஏன் என்று’ (Why Why Analysis Theory) கேள்வி கேட்டு வரும் விடைகளுக்குள் திரும்ப திரும்ப 5 முறை கேட்டுப்பார்த்தால் கடைசியாக சரியான விடை (அல்லது) தீர்வு கிடைக்கும் எனச் சொல்வார்கள். இதன்படி தமிழன் தமிழ் மொழி மூலம் கற்காமல் ஏன் ஆங்கில வழியில் கற்கிறான்? என்று 5 முறை உங்களுக்குள் வரும் விடைகளுக்குள் வைத்து கேட்டுக் கொண்டே வந்தீர்களேயானால், தமிழ் மொழிக்கான தேவை நிறுவனங்கள் செய்யும் வணிகத்தில் இல்லை என்பதால் தான் நம் தமிழ் மொழி நவீனயுகத்திற்கேற்ப வளரவில்லை எனத் தெளிவாக புரிவதுடன் ‘தேவைக்கும் – அளிப்புக்குமான (Demand & Supply) கோட்பாட்டை புரிந்து கொள்வீர்கள்.
இங்கே ஆங்கில மொழிக்கான தேவை (Demand) தான் வணிகத்தில் இருக்கிறது. தமிழுக்கு இல்லை. எங்கே தேவை இருக்கிறதோ அதற்குத்தான் அளிப்பு (Supply) வந்து கொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் நடத்தும் தொழில் துறையில் (போதாக்குறைக்கு உலக மயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கல் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு வேறு!) முழுக்க முழுக்க ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் தமிழுக்கான தேவை எங்கிருக்கும்?
எனவே தமிழ் மொழி மூச்சு திணறி எழுத்து, பேச்சு வழக்கற்று போகாமல் இருக்கவும், சுயமாக சிந்திக்கும் திறனை பெறவும் மொழி பிரச்சினையை கீழிருந்து மேலாக (“Bottom to Top’ Approach) பார்க்காமல், மேலிருந்து கீழாக (‘Top to Bottom’ Approach) பார்க்க வேண்டும். தெளிவாக சொல்ல வேண்டுமானால், தமிழ் வழி கல்வி கொடுத்து அளிப்பை (Supply) உருவாக்கும் முன்பு தமிழ் வழி தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தி தமிழ்மொழிக்கான தேவையை (Demand) முதலில் உருவாக்க வேண்டும். ஒரு இடத்தில் ‘தேவை’ ஏற்பட்டுவிட்டால் ‘அளிப்பு’ தானாகவே எங்கிருந்தாலும் (மேட்டிலிருந்து பள்ளத்திற்கு தானாகவே நீர் பாய்வதை போல) வந்து சேர்ந்துவிடும். இதனால் தமிழ்மொழி வழி கல்விக்கான தேவை தானகவே உருவாகிவிடும்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும், வியாபாரத்திலும் அதன் நடைமுறைகளிலும் தமிழை பயன்பாட்டு மொழியாக்க வேண்டும். ரசீது புத்தகங்கள் தமிழில் அச்சிட வேண்டும். வற்புறுத்தியோ, வரி சலுகை தந்தோ தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். இதற்காக தமிழக அரசை வலியுறுத்தி எல்லா தமிழ் இயக்கங்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன் வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனியார் நிறுவன முதலாளியும் மற்றும் அதன் நிர்வாகமும் தமிழை தன் அலுவலக மொழியாக (Official Language) தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டு, தமிழை ஒவ்வொரு நிறுவனத்தின் முக்கிய துறைகளான ‘கணக்கியல் மற்றும் நிதி’ (Accounting & Finance), ‘உற்பத்தி (அல்லது) சேவை’ (Production (or) Service), ‘விற்பனை’ (Sales & Marketing) ‘மனித வளம்’ (Human Resource) மற்றும் ‘செயலகம் மற்றும் சட்டம்’ (Secretarial & Legal) ஆகிய துறைகளில் அமல்படுத்தி, தமிழுக்கான தேவையை, ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்தி தமிழ் வழிமூலம் நிறுவனத்தை நடத்தி வருமானத்தை ஈட்ட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்படி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வணிக செயல்களிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டு அதனை செயல்படுத்த தேவையான தமிழ் வழி கல்வியை நாம் அனைத்து படிப்புகளிலும் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டு அதனை முழுமையாக நிறைவேற்ற முடியும்.
இதனை புதிய தொழிற்கொள்கையாக (மொழி கொள்கையாக) தமிழக அரசு அறிவித்து நடைமுறைபடுத்துவதுடன் தொழிலக கூட்டமைப்புகளையும், இனி புதிதாக களத்தில் இறங்கும் தொழில் முனைவோர்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதே நமக்கு முன் உள்ள சவால் நிறைந்த பணியாகும். ஆரம்ப காலங்களில் இது மிகவும் கஷ்டமாகவும், முடியாத காரியமாகவும் இருக்கலாம். ஆனால் காலப் போக்கில் இது பழகிவிடுவதால் தமிழனே செய்துவிடுவான். அரசு அலுவலகங்களின் பெயர் பலகையில் மட்டும் தமிழ் இருந்தால் போதாது. அங்கு அலுவல் மொழியாகவும், பேச்சு மொழியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆண்டுதோறும் வருமானவரி கணக்கு மற்றும் செயலக பணிகளை அவரவர் விருப்பப்பட்ட மொழியில் தாக்கல் செய்யவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் ஒரு நிறுவனம் அரசாங்கத்துடன் செய்து கொள்ளும் பரிவர்த்தனைகள் மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் முழுக்க முழுக்க அவரவர் விருப்பப்பட்ட மொழிகளில் அதாவது மத்திய அரசானால் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும், மாநில அரசானால் தமிழ் மூலம் தாக்கல் செய்வதாக இருக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் அலுவலக மொழியானது (Official Language) உற்பத்தி செய்யும் பொருட்கள் (அல்லது) செய்யும் சேவைகள் தொடர்பான தகவல்கள் மாநில அளவில் மட்டுமேயானால் அவை தமிழிலும், அதன் வியாபாரம் இந்திய அளவில் இருந்தால் தமிழ் மற்றும் ஆங்கிலம், இந்தி ஆகியவற்றையும் ஓரு சேர பயன்டுத்த வேண்டும். அதுவே நிறுவனம் சர்வதேச அளவில் வியாபாரம் செய்து வந்தால் அலுவலக மொழியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டையும் ஒரு சேர அமல்படுத்த முன்வர வேண்டும்.
இது எப்படி சாத்தியப்படும் எனக் கேட்பவர்களுக்கு ஓர் சீன பொருட்களையோ, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய பொருட்களையோ வாங்கி பாருங்கள். அப்பொருட்களில் அவரவர் தாய் மொழியுடன் ஆங்கிலத்திலும் தகவல்களானது, விளக்க குறிப்புகளிலும், கையேடுகளிலும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆக அவர்களால் அதை திறம்பட செய்யும் போது நம்மாலும் மனமிருந்தால், (மனமிருந்தால் மார்க்கம் உண்டு) நம் தமிழ்மொழி மறைந்தொழியாமல் இதைச் செய்ய முடியும்.
இது ஒன்று தான் தமிழை ‘இனி தமிழ் மெல்லச் சாகாமல் தடுக்கும்’ ஒரு ஆராய்ந்தறிந்த தீர்வாக இருக்க முடியும். இது கடினமாக வழியாக முதலில் தோன்றலாம். ஆனால் எந்த ஒரு விஷயமும் கொஞ்சம் காலம் பழகிவிட்டால் பின்னர் நடைமுறைக்கு எளிதாக வந்துவிடும். எனவே நாம் ‘தாய் மொழி வழி வணிகத்திற்கும் மற்றும் அறிவியலுக்கும்’ முன்னுரிமை கொடுத்து அதை செயல்படுத்திட வாருங்கள்.
ஒவ்வொரு தமிழனும் (தமிழ் பேச தெரிந்த எவரும் கூட) தங்கள் தாய்மொழியான தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய கற்றுக் கொள்ள முன் வர வேண்டும். ஏனென்றால் உலகம் கணினியில் அடங்கிவிட்ட பிறகு தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய தெரிந்து விட்டால் நாம் நம் தமிழ் மொழியை மின்னஞ்சலிலும், மற்றும் இணையத்திலும் கணிப்பொறி தட்டச்சு மூலம் எளிதாக பயன்படுத்த தொடங்கி விடலாம்.
இன்றைக்கு தமிழ் மொழி பேசுபவர்கள், பயன்படுத்துபவர்கள் உலகளவில் அதிகமாக (சுமார் 10 கோடிக்கு மேல்) இருப்பதால் தான் ‘Discovery Channel, National Geographic Channel’ போன்ற வெளிநாட்டு தொலைக்காட்சிகளும் மற்றும் ‘Facebook, Wikipedia’ போன்ற இணைய தகவல் தொடர்புகளும் தமிழ்மொழியில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால் நாம் இங்கே தமிழர்களை ஆங்கில வழி கல்வி கொடுத்து ஆங்கிலேயர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம்..
தாய் மொழியில் ஒரு குழந்தை குறைந்த பட்சம் ஆரம்பக் கல்வியாவது கற்றால் தான் சுய சிந்தனையுடனும், சிறந்த பலவகை ஆற்றலுடனும், திறனுடனும் விளங்க முடியும் என்பதை பல உலக மொழியியலறிஞர்கள் மற்றும் உளவியலறிஞர்கள் அறிவியல் பூர்வமாக கூறி வருகின்றனர். இதனை பொது மக்களும், அரசும் உணர்ந்து உடனே நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
பா.ஞான பிரகாசம், MBA, ACS
அறம் இணைய இதழ்
https://aramonline.in/32973/usage-of-tamil-our-soceity/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு