மிசா: காண வேண்டிய கருத்து! - சிறு குறிப்பு
துரை. சண்முகம்
இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் என்பதே முதலாளிகளுக்கான ஒடுக்குமுறை ஜனநாயகத்தைக். கொண்டதாகத்தான் பிறப்பைக் கொண்டது. இதில் " மிசா " என்பதெல்லாம் கட்சிகளின் கூட்டுக் குடும்பத்தில் ஒன்னுவிட்ட ஒன்னுவிட்ட அண்ணன் தம்பி மாதிரி.
1947 க்குப் பிறகு அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்ட காங்கிரஸ் தலைமையிலான ஆளும் வர்க்கம்
ஜனநாயகத்தை வாழ விட்டதாக வரலாறு கிடையாது.
இந்தியா சுதந்திரம் பெற்றதாக சொல்லப்பட்ட அடுத்த பொழுதுகளிலேயே பிரிட்டிஷ்காரனைப் போலவே இந்திய மக்களை எப்படியெல்லாம் முதலாளித்துவச் சுரண்டலுக்கு உட்படுத்தி ஒடுக்குவது என்பதற்கான சட்டப் பாதுகாப்பில் இறங்கிவிட்டது.
மிசாவுக்கு முன்பே 1950இல் கொண்டு வரப்பட்ட முன்னெச்சரிக்கை தடுப்பு காவல் சட்டம் 1969இல் காலாவதியானது.
உடனே ஆளும் வர்க்க முன் எச்சரிக்கையாக காங்கிரஸ் அரசால் இதை விடவும் வலுவான தடுப்புக் காவல் சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனும் வழிமுறையில்தான் 1971இல் மிசா சட்டம் கொண்டுவரப்பட்டது.
தேசப் பாதுகாப்பு கூச்சலோடு காங்கிரசின் இந்த சட்டத்திற்கு கூட்டாளி கட்சிகள் சிலர் ஆதரவு அளித்தனர். சிபிஎம் எதிர்த்தது.
சிபிஐ அந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் என்ன நிலைபாடு என்பது நினைவில் இல்லை.
அப்போது இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டணியிலிருந்து தமிழ்நாட்டில் திமுக தான். அந்தக் கொடிய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் போது கடுமையாக கண்டித்து ஜனநாயக உரிமைக்கு எதிராக வரும் என்று முன்னறிந்து திமுக சண்டை போட்டு இருக்கலாம், ஜனநாயகத்திற்காக கூட்டணியை விட்டு வெளியேறியும் இருக்கலாம்.
ஆனால் கூட்டணி தர்மம் என்ற பெயரில் கூடியிருந்ததுதான் திமுக.
பிற்பாடு இதே நிலைமை தேசிய ஜனநாயக கூட்டணி கொடிய " பொடா" கொண்டு வந்த போதும் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டாலும் கூட்டணி தர்மத்திற்காக இந்தக் கொடியே சட்டத்திற்காக உறவை முறித்துக் கொண்டு வெளியேறவில்லை திமுக. வைகோ இந்தக் கொடிய கருப்பு சட்டத்தை ஆதரித்து அவரே அந்த சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளப்பட்டது எல்லாம் தனிக்கதை.
எனவே கொள்கைக் கூட்டணி என்பது எல்லாம் ஓட்டு கட்சிகளை பொறுத்தவரை பம்மாத்து. ஆட்சி அதிகார பங்கு பேர கூட்டணிதான் அனைத்து கட்சிகளின் பின்னணியையும் இயக்குவது.
அவ்வப்போது ஒன்றிய அரசுகள் கொண்டு வரும் ஒடுக்குமுறை சட்டங்களை பயன்படுத்தி போராடும் இயக்கங்களை ஒடுக்குவதிலும் இவர்கள் கூட்டாளிகள்தான்.
உள்நாட்டு பாதுகாப்பு வங்கதேச பிரிவினை பாகிஸ்தான் சதி போன்ற காரணங்களை சொல்லிக்கொண்டு "இந்திரா" காங்கிரஸ் மிசா சட்டத்தை அப்போது திணித்தது.
உண்மையில் அதைவிட உண்மையான காரணங்கள் புறநிலையில் நிலவியது. 70களில் தொடர்ச்சியாக இடதுசாரிகளின் அரசியல் அலை மேலோங்கி அடித்தது. குறிப்பாக உழவர் பேரெழுச்சிகளை உருவாக்கிய நக்சல்பாரி இயக்கம் நகரங்களில் மாணவர் போராட்டங்கள் ஆகவும் படர்ந்தது. பெருவாரியாக இளைஞர்களின் அரசியல் ஆற்றலாக தீண்டியது. தொழிற்சங்கப் போராட்டங்கள் ஆர்த்து எழுந்தன!
இடதுசாரிகள் அரசியல் எழுச்சி,
தேசிய இன உரிமை அரசியல் போக்கை தடுப்பது, என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த பாதுகாப்புச் சட்டம் தீட்டப்பட்டது.
இந்தச் சூழலில்தான் இந்திய ஆளும் வர்க்கம் தங்களது ஜனநாயக வேடத்தை கலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.
இன்றைக்கு எப்படி கம்யூனிசம் நக்சல்பாரி அரசியலை உள்நாட்டு தீவிரவாதம் என மோடி அரசு வரையறுத்து அஞ்சுவது போல,
மோடிக்கு டாடியாக அன்று காங்கிரஸ், ஆளும் வர்க்க ஒடுக்கு முறையை சட்ட வகையிலேயே செய்தது.
சட்டபூர்வ பாசிசம் மோடி கொண்டு வந்துவிட்டார்! என இதை கட்சிகளின் பிரச்சனையாக லாவணி பாடுகிறார்கள் போலி முற்போக்காளர்கள். இந்திய ஆளும் வர்க்கத்தின் முதல் எடுபிடியான காங்கிரசும் சட்ட விரோத சட்ட பூர்வ வகையில் பாசிச அடி எடுப்புகளை துவங்கிய கட்சிதான்.
இந்திய பாசிசத்தின் இரு முகங்களாக/ இரு துருவங்களாக காங்கிரசும் பாஜகவும்.
இந்த இரு துருவ அரசியலுக்கு உள்ளேயே சுழற்றி அடிக்கும் வேலையைத்தான் அரசியல் சட்ட பாதுகாப்பு ஜனநாயகம் என மாய்மாலம் செய்கின்றார்கள் போலி ஜனநாயகவாதிகள்.
இரண்டுக்கும் மாற்றாக மூன்றாவதான மக்கள் ஜனநாயகத்திற்கான கம்யூனிச அரசியல் பாதையை உருவாக்க வேண்டிய தேவையைத்தான் மிசா காலம் தொட்டு வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/1112335558139906/?rdid=dDCsvoALnLOtCHqI
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு