அரசியல் விமர்சனப் போக்கு ஊக்கப்படுத்த வேண்டியதே
துரை. சண்முகம்
மார்க்சிய -லெனினிய குழுக்கள் குறிப்பாக,
ம.க.இ.க, ம.ஜ.இ.க, புரட்சி பண்பாட்டு இயக்கம் போன்றவர்கள் இடது வலது கம்யூனிஸ்ட் கட்சிகளை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து உள்ளார்கள்.
சி.பி.ஐ. சி.பி.எம். இடதுசாரி அமைப்புகளை மா.லெ. குழுக்கள் விமர்சிக்கும் போது திராவிட இயக்கத்தவர் சேர்ந்து ரசித்தனர்.
ஆனால் பெரியார் மற்றும் திராவிட இயக்கம் மீதான அரசியல் விமர்சனங்களை இதே குழுக்கள் வைக்கும்போது
இது இடதுசாரி ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் என்று பதறுகிறார்கள்.
முன்னவர்கள் தங்கள் மீதான விமர்சனம் வைத்த குழுக்களை அமெரிக்காவின் ஏஜெண்டுகள் என்றார்கள்.
பின்னவர்கள் மா.லெ குழுக்கள் பார்ப்பனிய ஆட்கள் என்கிறார்கள்.
தங்களது அரசியல் நோக்கில் சமீபத்தில் செந்தளம் குழுவினர் பெரியார் பார்வைகள் பற்றிய ஒரு தொகுப்பு நூலை கொண்டு வந்தார்கள். அதன் கட்டுரைகளை எடுத்து பரப்புரை செய்கிறார்கள்.
பதிலுக்கு தாராளமாக அந்த நூலை பிரித்து மேய்ந்து பகுத்து எழுதலாம்.
பதிலாக, அதை பரப்புரை செய்வதையே கடும் குற்ற கோட்பாடாக்கி பார்ப்பன கம் யூனிஸ்டுகள் என்று சிபிஐ சிபிஎம் இடதுசாரிகளை உள்ளடக்கிதான் தாக்குகிறார்கள்.
இது இடதுசாரி ஒற்றுமைக்கு பங்கம் இல்லை போலும்!
சரியாகச் சொன்னால் எழுதும் குழுக்களை கொள்கை ரீதியாக தாக்குவதற்கு வழியின்றி, இவர்களே சொல்லிக் கொள்ளும் நட்பு சக்தியான இடது வலது கம்யூனிஸ்டுகளை
உதாரணம் காட்டி தாக்குகிறார்கள்.
இடதுசாரிகள் மீதான விமர்சனத்துடன் அவர்கள் தலைவர்களின் தவறான அரசியல் கண்ணோட்டங்களை அம்பலப்படுத்தி அதே வேலை அவர்கள் பின்னணியில் நடந்த மக்கள் திரள் எழுச்சிகளின் சரியான விசயங்களை ஆதரிக்கவும் செய்கிறோம்.
ஜீவா போன்ற தோழர்களின் பிழைகள் குறைபாடுகளை விமர்சித்து அவரின் சரியான போராட்ட உணர்வை சிந்தனை வெளிப்பாட்டை ஆதரிப்பது போல்தான், பெரியாரிடம் வெளிப்பட்ட மத எதிர்ப்பு மூடநம்பிக்கைக்கு எதிரான சரியான கருத்துக்களை அங்கீகரிப்பதுடன் தவறான அரசியல் நிலைப்பாடு பார்வைகளை எடுத்துக்காட்டி அடுத்த தலைமுறை விலக்க வேண்டி உள்ளது.
பெரியாரோ அல்லது இடதுசாரிகளோ சொல்லிவிட்டதாலயே தவறான அரசியல் பார்வையை நிலை பெற்றதாக கருதும் போக்கை மறுக்க வேண்டியுள்ளது.
ஜீவா கம்யூனிஸ்டுகள் என்றால் சகட்டுமேனிக்கு நக்கல் அடிக்கலாம், பெரியார் என்றால்!
பிழைகள் இல்லாமல் இல்லை!
என்று பொதுவாக ஒத்துக் கொள்வது, குறிப்பான பிழைகளை குறிப்பிட்டால் எரிச்சல் அடைவது என்பதாக பெரியார் பக்தர்களின் நிலைமை உள்ளது.
" இந்த நேரத்தில்!" என்று கொஞ்சம் பார்த்து பதமா அணுகுங்க! என்பதாகவும் என்ன வகை ஜனநாயகமோ?!
பெரியாரே சொல்லாத, பெரியார் வழியில் பாசிசத்தை ஒழிப்போம்! என்று கூவும் போது பெரியார் அடையாளத்தை வைத்து பின் திராவிட பிழைப்புவாத அரசியலை தோலுரிக்க தான் வேண்டியிருக்கிறது.
தனிநபராக ஆபாசமாக இழிவு செய்வதை நாம் ஏற்க முடியாது. ஆதரிக்க முடியாது. அரசியல் ரீதியாக யாரைப் பற்றியும் அணுகலாம். இழிவு செய்தலை தவிர்த்து விட்டு அரசியல் விமர்சனப் போக்கு ஊக்கப்படுத்த வேண்டியதே.
சமீப காலத்தில் பெரியார் மீதான அரசியல் விமர்சனப் போக்குக்கு அடிப்படையாக இருப்பது அனைத்தையுமே பெரியார்தான் செய்தார்! என்று ஒரே அடியாக வரலாற்றை அடித்து விட்டதிலிருந்து தொடங்குகிறது.
எல்லாத்துக்கும் பெரியார்தான் காரணம் என்று ஏத்தி விட்டு இப்போது எத எடுத்தாலும் எதற்கு பெரியார் இடம் வருகிறீர்கள் என்பது நகைமுரண்.
தேரை இழுத்து தெருவில் விட்டவர்கள்தான் இதற்கு காரணம்.
எப்படியாயினும் சமூக அரசியல் விமர்சனப் போக்கில் ஆர்வமுள்ள பொறுப்புள்ள தோழர்கள் பெரியார் அவர்களை இழிவு செய்தல் எனும் போக்கில் அல்லாமல்,
பாட்டாளி வர்க்க அரசியல் இயக்கத்தின் நோக்கில் பெரியார் மட்டுமல்ல நமக்கு முன்னே இருந்த எந்த இயக்கப் போக்கின் தலைவர்களிடமிருந்தும் அங்கீகரிக்கக் கூடியது இருந்தால் அங்கீகரித்தும்,
சமூகத் தடைகளாக கருத்தியல் இருந்தால் அவைகளை விமர்சித்து கடந்து செல்லவும்
கற்றுக்கொடுத்தல் முற்போக்கு அரசியல் இயக்கங்களின் ஒரு பகுதியாகும்.
இதை கருத்தியல் முரண்களாக, ஆமாம் தனிநபர் சண்டைகளாக அல்ல, வாதிக்கும் எந்தத் தரப்பையும் வரவேற்போம்.
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு