உதிரிச் சமூக விரோதிகள் யார்? அவர்களின் ஊற்றுக்கண் எது?
தெய்வ சுந்தரம் நயினார்
இன்று மது, கஞ்சா, போதை மருந்து ஆகியவற்றின் கைகளில் சிக்கி, மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுபற்றி நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
தன் குடும்பத்தினரை . . . நண்பர்களை . . . அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்துகிற அல்லது கொலையே செய்கிறவர்களைப்பற்றிய செய்திகள் நாள்தோறும் நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'கூலிப்படை' என்னும் சொல் அதிகமாகத் தென்படுகிறது!
இந்த வகையான நபர்களின் தோற்றமும் நீடிப்பும் சமுதாயத்தில் புதிது இல்லை! சமூக உற்பத்தியில் நீடிக்கமுடியாத . . . உழைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிற நபர்களே இதுபோன்றவர்களாக மாறி அமைகின்றனர். இவர்கள் ஒருவகையான 'உதிரிக் கூட்டமே'. வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் ஆட்டிப் படைக்கிற சமுதாயத்தில் இதுபோன்ற உதிரிக்கூட்டம் தோன்றி வளர்கிறது. ஆகவே இவர்கள் தற்போதைய பிற்போக்குச் சமுதாயத்தின் 'விளைபொருள்களே'. இவர்களின் தோற்றத்தை நான் தனிநபர் பிரச்சினையாகப் பார்க்கவில்லை!
1970-களில் சென்னையில் தொழிலாளர்கள் மத்தியிலேயே . . . அவர்களின் போராட்டங்களைத் தடுப்பதற்காக . . . 'குண்டர் படைகளை' உருவாக்கியது தெரிந்ததே. சென்னையில் அன்று முதன்மையான தொழிற்சங்கத் தலைவராக இருந்த தோழர் குசேலர் கைதுசெய்யப்பட்டு, காவலர்களால் சிறைக்குக் கொண்டுசென்றபோது, காவலர்கள் முன்னாலேயே அவர் மிகக் கொடுமையாகத் தாக்கப்பட்டார்! அன்று தொழிற்சங்கத்தினர் அரசின் அடக்குமுறையோடு, இதுபோன்ற உதிரிச் சமூக விரோதிகளின் தாக்குதலையும் எதிர்நோக்கினர்!
மேலும் கிராமங்களில் விவசாயிகள்மத்தியில் புரட்சிகர இயக்கத்தைக் கட்டுவதற்காக, தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் துச்சமெனக் கொண்டு செயல்பட்டவர்களை மிரட்டுவதற்காகவும், மக்கள் அவர்களுக்கு எந்தவகை உதவியும் செய்யக்கூடாது என்பதற்காகவும் நிலப்பிரபுக்கள், உயர்சாதிகளைச் சேர்ந்த பணக்காரர்கள், கந்துவட்டிக்காரர்கள் இதுபோன்ற உதிரிகளைத் திட்டமிட்டே உருவாக்கி நடமாட வைத்தனர்.
மேலும் புரட்சியாளர்கள்பற்றிய செய்திகளைத் திரட்டுவதற்காகக் காவல்துறையினரும் இந்த உதிரிகளின் நீடிப்புக்கு 'ஆதரவு அளித்தனர். ஒரு கிராமத்தில் யாராவது புதிதாக வந்தால் - அவர் ஒரு புரட்சியாளராக இருக்கலாம் என்ற அடிப்படையில் - அவரைப்பற்றிய செய்தியைக் காவல்துறைக்குத் தெரிவிக்கும் 'உளவாளிகளாகவும்' இந்த உதிரிகள் செயல்பட்டனர். இந்தச் செய்திகள் எல்லாம் நான் நாளிதழ்களில் படித்த செய்திகள் இல்லை! நேரில் பார்த்து உணர்ந்தவன்! 'அனுபவ வரலாறு' எனக்கு உண்டு!
இதுபோன்ற உதிரிக் கூட்டத்தை - உழைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கூட்டத்தை - அவர்களுடைய வறுமையைப் பயன்படுத்தி - அவர்களை வளர்ப்பதில் ஆளும்வர்க்கங்கள் அதிகக் கவனம் செலுத்தின. இன்றும் செலுத்திவருகின்றன. கள்ளச் சாராயம், கஞ்சா விற்பனைகளைக் கண்டிக்கும் சாதாரண மக்கள் பயமுறுத்தப்படுகின்றனர்; கொலையும் செய்யப்படுகின்றனர். இது இன்றைய உண்மை!
போதை மருந்துகள் பெரும்பாலும் அயல்நாடுகளில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தியாளர்களுக்கு உலகம் முழுவதும் தொடர்பு உண்டு. இந்தப் போதை மருந்துகள் கப்பல்கள், விமானங்கள்மூலம்தான் கடத்தி வரப்படுகின்றன. இந்தக் கடத்தல்தொழிலை ஒரு சாதாரண குப்பனும் சுப்பனும் செய்யமுடியாது. பெரும் பணக்காரக்கூட்டமே - ஆளும் வர்க்கங்களின் பகுதியினரே - இத்தொழிலைச் செய்யமுடியும். கோடியே கோடி வருமானம் இந்தத் தொழிலில்!
உயர் வர்க்கத்தினரும் திரை உலகத்தினர் போன்றவர்களும் இந்தப் போதைப்பொருள்களைப் பயன்படுத்துபவர்களாக இருந்தாலும், மேலே நான் குறிப்பிட்ட உதிரிக் கூட்டத்தினருக்கும் இது தாராளமாகக் கிடைக்கிறது. இந்தத் 'தாராளமயத்திற்குத்' துணைபோகிறவர்கள் யார்? இன்றைய ஆளும் வர்க்கத்தினர்தான்! இவர்களுக்கு நடுவண் அரசு, மாநில அரசுகள் இரண்டிலும் பங்கு வகிக்கும் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினரும், அதிகாரிகளும் காவல்துறையினரும் துணைபோகின்றனர்.
போதை மருந்துப் பாதிப்பிற்கு உட்பட்டவர்கள், அதை வாங்குவதற்குக் காசு இல்லையென்றால், குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். திருட்டு, வழிப்பறி, கொலை, பெண்கள்மீதான வன்முறை ஆகியவற்றைச் செய்வதற்கு இக்கூட்டம் தயங்குவது இல்லை! இதையே நேற்று நான் பதிவுசெய்திருந்தேன். இரண்டுவயதுக் குழந்தையைச் சுவற்றில் தூக்கி அடித்துக்கொன்று . . . குழந்தையின் தாயையும் சீரழித்துக் கொன்று . . . கணவரையும் கொலைசெய்யத் துணிந்துள்ளார்கள்!
எனவே, இதுபோன்ற போதை மருந்து, கஞ்சா , மது ஆகியவற்றிற்கு அடிமையாகியுள்ள உதிரிக்கூட்டம் . . . மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவது இன்று அதிகரித்துள்ளது. இவர்களின் 'வன்முறையிலிருந்து' தங்களைக் காத்துக்கொள்ள 'தனிப் பாதுகாவலர்ப் படைகளையே (bouncers) ' வைத்துக்கொள்ளும் வசதி படைத்தவர்கள் - உயர்மட்டத்தினர்கள் - கதை வேறு!
ஆனால் சாதாரணப் பொதுமக்கள் என்ன செய்வது? எல்லா இடங்களிலும் சமூக உணர்வுள்ள - சமூகப் போராட்டங்களில் ஈடுபடுகிற - இயக்கங்கள், அமைப்புகளின் வளர்ச்சியே மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கமுடியும். இதில் ஐயமே இல்லை!
எனவே நேற்றைய எனது பதிவு . . . தமிழகத்தின் இன்றைய ஆளுங்கட்சிக்கு முட்டுக்கொடுப்பதோ அல்லது நடுவண் அரசைத் தலையிடக் கூறி ''வேண்டுவதோ'' இல்லை! எந்தவொரு தேர்தல் அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் , அது இந்த உதிரிப் போதைக் கூட்டத்தை 'வளர்க்கவே' முயலும்! ஆனால் அதற்காக, நடுவண் அரசு, மாநில அரசுகளின் 'பாராமுகத்தை' சுட்டிக்காட்டமல் இருக்கமுடியாது! அவற்றின் திட்டமிட்ட 'ஆதரவை' வெளிப்படுத்தாமல் இருக்கமுடியாது!
ஆளும்வர்க்கங்களின் அரசு பயங்கரவாதத்தை - பாசிசத்தை - எதிர்க்கிற அதேவேளையில் . . . மக்கள்விரோத உதிரிக் கூட்டத்தினரின் ரவுடித்தனத்தையும் எதிர்த்துக் குரல்கொடுக்கவேண்டும் . பெரிய எதிரி அரசு பாசிசம்தான். அதை நான் மறுக்கவில்லை! அதற்கு எதிராகப் போராடும்போது, அதனால் 'வளர்த்துவிடப்படுகிற' இந்த மக்கள் விரோதக் கூட்டத்தையும் - 'கூலிப்படைகளையும்' - எதிர்த்துக் குரல்கொடுக்கவேண்டும்! இதைத் 'தேர்தல் அரசியலோடு இணைத்துப் பார்க்கவேண்டாம்!
இதுபற்றி இவ்வாறு எழுதுவதற்கு உபி.க்கும் குஜராத்துக்கும் செல்லவேண்டும் என்பது இல்லை! என் கண்முன்பே நடந்தவற்றை நான் எழுதுகிறேன். ''இந்த உதிரிக் கூட்டம் இங்கு இல்லை. உபி, குஜராத்தில்தான் இருக்கின்றன என்று சொல்லுங்கள். நான் அங்கு சென்று பார்க்கிறேன். நாடு முழுவதும் இந்த நிலைதான்! 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பது இதில் இல்லை!
- தெய்வ சுந்தரம் நயினார்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு