ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி - கம்யூனிச காதலன் - தோழர் உத்தம் சிங்!
துரை. சண்முகம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி
கம்யூனிச காதலன்
தோழர் உத்தம் சிங்!
பிறந்தநாள்- 1899 டிச 26.
இந்திய விடுதலை இயக்க வரலாற்றின் ஒளி வீசும் நட்சத்திரம் தோழர் உத்தம்சிங். 41 ஆண்டுகள் தான் இந்த உலகில் அவர் வாழ்ந்திருக்கிறார். இளம் பருவம்
என 15 வயதை கழித்து விட்டு பார்த்தால் 26 ஆண்டுகளில் இந்தியப் புரட்சிகர சூழலுக்கு இடைவிடாது வீசிய அரசியல் காற்றாய் அவர் உயிரூட்டிய அரசியல் வீச்சு மகத்தானது.
சிறையில் அமீர் ஹைதர்கானை கண்டு எப்படி சீனிவாசராவ் மலர்ச்சியும் எழுச்சியும் பெற்றது போல, பகத்சிங்கை சிறையில் சந்தித்த பிறகு அவரை தனது மதிப்பு உயர் தோழனாக மனதார தழுவி எப்போதும் தனது சட்டைப்பையில் பகத்சிங் படத்தை வைத்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் துணை நின்ற துணை நிலை ஆளுநர் மைக்கேல் ஓ டயரை காத்திருந்து லண்டனில் சுட்டுக்கொன்றார் என்பது ஒரு பகுதிதான். முழுமையாக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் தன்னை கெதர் கட்சியோடு இணைத்துக் கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக திசை எங்கும் இயங்கியவர் உத்தம் சிங்.
பாட்டாளி வர்க்கப் பார்வை அரசியல் அறிந்தபின் அதற்காக வாழ்க்கை துணிந்தபின் தன் மேல் சுமத்தப்பட்ட மத அடையாளங்க ளையும் உதறி எறிந்தார் உத்தம் சிங். சாதி அரசியலை முன்வைத்து ஏகாதிபத்தியத்திடம் நயந்து கொள்ளும் நயணங்கள் அவரிடம் இல்லை.
அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க கம்யூனிச இயக்கத் தோழர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இந்தியாவுக்கு வெளியே பிரிட்டிஷ் ஏகாதிபக்திய எதிர்ப்பு மற்றும் உலகத் தொழிலாளர்களுக்கான
அரசியல் இயக்கம் என்ற வகையில் எல்லாம் அவர் வாழ்ந்திருக்கிறார். இந்திய மக்களின் மீது தாக்குதல் தொடுத்த
ஒருவனை பழி தீர்த்துக் கொண்ட போராளியாக மட்டுமல்ல, இந்தியாவில் ஒரு கம்யூனிச அரசி யலை உருவாக்கி தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்திலான விடுதலை வேண்டும் என்று இளம் நாட்களில் இந்திய விடுதலைப் புரட்சிக்கு வழங்கிய கம்யூனிச காதலன் அவன்.
வர்க்க கண்ணோட்டத்தில், நடந்த திசையெங்கும்
கிளைகளை உருவாக்கும் ஒரு ஜீவ நதியைப் போல மாபெரும் அரசியல் அமைப்பாளன் அவர்.
தன் முன்னே கிடைத்த பிழைப்பதற்கான அத்தனை வாய்ப்புகளையும் வெறுத்து ஒதுக்கி விட்டு, தொழிலாளர்வர்க்க
விடுதலையின் இந்தியப் புரட்சியை விரும்பி ஏற்றவன் அவன்.
தாயற்று தந்தையற்று தாழ்த்தப்பட்டு ஒரு அனாதை போல அலைந்து திரிந்து புரட்சிகர அரசியலில் மலர்ந்த மலர் உத்தம் சிங். பிழைப்பதை மட்டுமே குறியாகக் கொண்ட அரசியல் அனாதைகளைப் போல இல்லாமல்
உலகத் தொழிலாளர் வர்க்கத்தின்
உறவாக உயர்ந்தவன் உத்தம் சிங்!
பாட்டாளி வர்க்க பார்வையில் இந்தியப் புரட்சியை வேண்டும் எல்லோர் மனங்களிலும்..
இறவா அரசியலுடன்
உறவாக மீண்டும் மீண்டும் பிறக்கிறான்..
தோழன் உத்தம் சிங்!
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு