தேசிய கல்விக் கொள்கையை அங்குமிங்குமாக நகல் எடுத்து தருவது தான் தமிழ் நாட்டிற்கான கல்வி கொள்கையா?
சாவித்திரி கண்ணன்

நான் மட்டுமே சொல்லவில்லை. இதோ கல்வியாளர்கள் பலர் பேசத் தொடங்கிவிட்டனர்...!
தமிழ்நாடு கல்விக் கொள்கை வெளியானதில் இருந்து அதிர்வுகளை கிளப்பி வருகிறது.
இந்த கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான கல்வியாளர் ஜவஹர் நேசன் சிதம்பரம் பல்கலையில் மட்டுமின்றி அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உயர் கல்வி கற்றவர்.
அமெரிக்காவிலும், மலேசியாவிலும் பல்கலைக் கழகத்தின் இயக்குனர், செனட்டர் போன்ற உயர் பதவிகளை வகித்தவர். மைசூர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்.
வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன் கூடிய உயர்கல்வி பதவிகளை புறம் தள்ளிவிட்டு இவர் மக்களுக்கான கல்வியை வலுப்படுத்தும் செயல்பாட்டாளராக இந்தியா முழுமையும் பயணித்து பல்கலைக் கழகங்களிலும் சான்றோர் அவைகளிலும், மக்கள் மன்றங்களும் ஓயாது உரையாற்றி வருபவர்.
தமிழ் நாட்டிற்கான கல்வி கொள்கை உருவாக்கக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பேற்று சுமார் ஓராண்டாக பல ஆய்வு கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்தி மிகவும் சின்சியராக ஜவகர் நேசன் கல்வி கொள்கை உருவாக்கத்தில் இடைக்கால அறிக்கையாக 258 பக்கத்தை தயார் செய்த நிலையில் முதல்வரின் அன்றைய முதன்மைச் செயலாளர் உதய சந்திரன் இவரை அழைத்து, ''தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒத்திசைவானதாக தமிழக கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும்'' என வற்புறுத்தியைத் தொடர்ந்து, ''அத்தகைய அழிவுக் கொள்கை உருவாக்கவா? நான் இத்தனை நாட்களாக என்னை அர்பணித்திருந்தேன். ஆகாது ஐயா, என்னால் முடியாது'' எனக் கூறி அந்தக் குழுவில் இருந்து வெளியேறினார்.
அதன் பிறகு அப்போது அவரை அழைத்து சென்னை பிரஸ் கிளப்பில் ஒரு செய்தியாளர் சந்திப்பை அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் உதவியோடு நாங்கள் ஏற்பாடு செய்தோம். அவர் விலகி வந்த பிறகு, அந்தக் கல்வியாளர் குழு ஜவஹர் நேசன் தந்ததை உள்வாங்கி மேலும் 520 பக்கங்களுக்கு விரிவாக்கி தமிழக கல்வி கொள்கை உருவாக்கி தந்தது.
அதை பொதுவெளியில் கூட வைக்காமல் ஓராண்டாக கிடப்பில் போட்டுவிட்டு, கடைசியில் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத ஒன்றை 'கல்விக் கொள்கை' என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.
இந்த தமிழக கல்வி கொள்கை குறித்து அக்குவேறு, ஆணிவேறாக அலசி, விரிவாக, ஆழமாக ஒரு கட்டுரையை ஜவகர் நேசன் நமது அறம் இணைய தளத்தில் எழுதியுள்ளார். வாய்ப்புள்ளவர்கள் அறம் ஆன்லைன் சென்று வாசிக்கலாம்.
நேற்று, பிரஸ் கிளப்பில் அனல் தெறிக்க ஒரு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. நானும், அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி நண்பர்கள் சுதாகர், காந்தி ராஜாவும் உடன் இருந்தோம்.
ஒரு மளிகை கடை பில்லை போன்றதா கல்விக் கொள்கை?
தேசிய கல்விக் கொள்கையை அங்குமிங்குமாக நகல் எடுத்து தருவது தான் தமிழ் நாட்டிற்கான கல்வி கொள்கையா?
என்றெல்லாம் வினவினார். சுமார் 20 தொலைக்காட்சியில் இருந்து வந்து கவரேஜ் செய்த போதிலும், அதிகாரமட்டத்தில் தந்த அழுத்தம் காரணமாக மிகச் சிலர் மட்டுமே ஒளிபரப்பினார்கள்!
வதைபடுகிறது ஊடக சுதந்திரம்! வாழ்க, தமிழ் நாட்டின் ஜனநாயகம்!
- சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/31770457095878446/?rdid=v17kccA68mnlAyP5
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு