கூலிப்படை கலாச்சாரம் இன்று ஒரு சமூக அதிர்ச்சியாக வெளிப்படுத்தப்படுகிறது
துரை. சண்முகம்

கூலிப்படை கலாச்சாரம் இன்று ஒரு சமூக அதிர்ச்சியாக வெளிப்படுத்தப்படுகிறது.
வழிப்பறி ரவுடிகள் சாராய ரவுடிகள் என ஏற்கனவே பழைய சமூக அமைப்பு முறையில் வேர்விட்டு இருந்தது.
இப்போது இது திடீரென தானாக தோன்றியது அல்ல.
உண்மையில் திட்டமிட்ட தனியார்மய தாராளமய உலகமய பொருளாதார கட்டுமானத்துடன் தோன்றிய தொழில் முறை கூலிப்பட்டாளமாக இதை மூலதனத்தின் சமூக விரோதத் தன்மை வளர்த்தெடுத்துள்ளது.
விவசாயம் அழிக்கப்பட்டு நிலங்கள் பொருளாதாரப் பண்டமாக பன்னாட்டு கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் கைமாற்றப்படும் இந்தச் சூழலில், ஆளும் வர்க்கத்தின் அடியாள் படையான அரசுக்கும் கீழான இந்தத் தனியார் கூலிப்படைகள் கட்சிகள், காண்ட்ராக்டர்கள், பெரு முதலாளிகள், அதிகார வர்க்கம், போலீசு வலைப்பின்னல் என்று ஆளும் வர்க்கத்தின் சமூக பொருளாதார தேவையில் இருந்து இந்தக் கூலிப்படை இயங்கி வருகிறது.
தாராளமயத்திற்கு பிறகான பல்வேறு மூலதனச் சுரண்டலின் சேவைகளுக்கு இதுவும் ஒரு வெளிப்படையாக அங்கீகரிக்கப்படாத தொழில்முறையாக இயங்கி வருகிறது. கம்பெனிகளுக்கு நிலம் பிடித்துக் கொடுப்பது, கம்பெனிகளில் காண்ட்ராக்ட் எடுப்பது, ஸ்க்கிராப் பிசினஸ், அரசு நிறுவன ஒப்பந்தங்களை பெறுவது என அனைத்திலும் இவைகளின் தேவை இருக்கிறது.
இதற்குள் ஏற்கனவே சமூக அமைப்பில் இருக்கும் சாதி வர்க்க இன மத அடையாளங்களும் உண்டு.
அரசாலும் அரசப் படைகளாலும் இவைகள் ஒழிக்கப்பட முடியாதவை அல்ல.
இந்த அரசு கட்டிக் காத்து இயங்கும் அரசு எந்திர அமைப்பு முறை சுழற்சியின் கிரீஸ் ஆக கூலிப்படைகளும் ஒட்டிக்கொண்டு இயங்க தேவைப்படுகிறது என்பதுதான் நாம் அறிய வேண்டிய உண்மை.
மக்களுக்கான அரசியல் அதிகார இயக்கங்களின் மக்கள் திரள் நடவடிக்கைகள் இல்லாமல் இவைகளை ஒழிக்க முடியாது.
கூலிப்படை 'தலை'கள் மெல்ல மெல்ல வட்டம் மாவட்டம் அண்ணன்களாக வளர்ந்து கட்சிகளில் உயர் பொறுப்புகள்,
மக்களை ஆளும் மாண்புமிகுகள் வரை இந்தியா முழுக்க வளர்ந்து வந்துள்ளார்கள்.
ஓட்டுக் கட்சிகளிடம் போய் இவர்களை ஒழிப்பார்கள் என எதிர்பார்ப்பது திருடர்களிடமே பூட்டு தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதற்கு இணையானது.
கூலிப்படைகளுக்கான அரசியல் சமூக அடிப்படைகள புரிந்து கொள்ளாமல், ஆளும் வர்க்கத்தின் போக்கில் அவ்வப்போது அவர்களுக்குள் கணக்கு தீர்த்துக் கொள்வதை பார்த்து மகிழ்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை!
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு