"திராவிட நாடு”- ஒரு கற்பனை கோஷம்! - ப.ஜீவானந்தம்

கதிர்நிலவன் தமிழன்

"திராவிட நாடு”- ஒரு கற்பனை கோஷம்! - ப.ஜீவானந்தம்

"திராவிட நாடு”- ஒரு கற்பனை கோஷம்!

ஐக்கிய கேரளம், ஐக்கிய தமிழகம், விசால ஆந்திரம், சம்யுக்த கன்னடம், ஐக்கிய மகாராஷ்டிரம், மகாகூர்ஜரம், ஐக்கிய பாஞ்சாலம் என்று, குமரி முதல் இமயம் வரை மொழி ராஜ்யக் கிளர்ச்சி நடப்பதே இன் றைய யதார்த்த நிலைமை. 

இந்த கிளர்ச்சி எதைக் காட்டுகிறது?

இந்தியாவில் மொழிவழியில் புதிதாக உருவாகியுள்ள தேசீய இனங்கள் சிதறிக்கிடக்கும் தங்கள் தாயகங்களை முறையாகச் சீரமைத்துக் கொள்ளும்பொருட்டு, சிதறுண்ட நிலையே சீரான நிலை எனக்கூறு வோரை எதிர்த்துப் போராடுகின்றன என்பதையே காட்டுகிறது. இந்த மொழி ராஜ்ய ஜனநாயகக் கிளர்ச்சியில், தென்னிந்தியாவிலும் சரி, வட இந்தியாவிலும் சரி, எங்கும் "திராவிட-ஆரிய இன"ப் பேச்சு எழுந்ததில்லை; எழவில்லை.

பொதுவான மொழி, பொதுவான நிலப்பரப்பு, பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுவான கலை, கலாச்சாரப் பண்பாடுகளுடையதும் சரித்திர பூர்வமாகப் பரிணமித்ததுமான நிலையான சமுதாயத்தையே தேசிய இனம் என்று நவீன சமுதாய விஞ்ஞானிகள் வரையறுத்துக் கூறுகிறார்கள். 

இத்தகைய தேசிய இனங்கள் (Nationalities) அல்லது மொழிவழி இனங்கள்தான் இன்றிருக்கின்றன. வருண வழி இனங்கள் (Races) இன்றில்லை.

இன்று திராவிடர் என்று ஓர் இனத்தாரில்லை. தமிழர், ஆந்திரர், கன்னடியர், கோனியர் (மலையாளிகள்) போன்ற தேசிய இனத்தார்கள் தான் இருக்கின்றனர். 

இன்று ஆரியர் என்று ஓர் இனத்தாரில்லை, மராட்டியர், குஜராத்தியர், பாஞ்சாலத்தார், இந்துஸ்தானியர், இரா ஜஸ்கானியர், பீகாரியர், வங்காளியர், ஆஸாமியர், ஒரியர் போன்ற தேசீய இனத்தார்கள் தான் இருக்கிறார்கள்.

"திராவிடநாடு" கோஷமோ, சரித்திரத்தில் மங்கி மறைந்து போன ஒரு புராதன மூலக் குழுவை ஜீவாதாரமாகக் கொள்ள கால வெள்ளத்தில் பிடிவாதமாக எதிர் நீச்சல் நீந்துகிறது. அதே பொழுதில், இந்த ஜனநாயக சகாப்தத்தில் கண்கூடாக மலைபோல் வளர்த்து நிற்கும் தேசிய இனங்களை ஏற்க மறுக்கிறது.

எனவே, "திராவிட நாடு" யதார்த்தத்தில் இல்லாத ஒரு கற்பனை கோஷம்.

1938ல் நீதிக்கட்சித் தலைவர்களாக இருந்த இன்றை திராவிட இயக்கத் தலைவர்கள், "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினர்.

1944லிலிருந்து “திராவிடநாடு திராவிடருக்கே" என்று முழங்குகிறார்கள். 38-வது வருஷத்திய "தமிழ்நாடு" 44-லிலிருந்து “திராவிடநாடு" ஆகவேண்டிய வகையில், யதார்த்தச் சூழ்நிலையில் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது? ஒன்றுமில்லை.

"ஜின்னா பாகிஸ்தான் கேட்டார்- கிடைத்தது. நாங்கள் திராவிடஸ்தான் கேட்கிறோம் - கிடைக்கும்" என்கிறார்கள்.

3 கோடி ஆந்திரர்கள் சென்ற 40 ஆண்டுகளாக விசால ஆந்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்; அதுபோல், தமிழர்களும், கன்னடியர்களும், மலையாளிகளும் முறையே ஐக்கிய தமிழகத்தையும், சம்யுக்த கன்னடத்தையும், ஐக்கிய கேரளத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த உலகறிந்த உண்மையை, திராவிட இயக்கத் தலைமை கணக்கிலெடுக்கத் தயாராயில்லை. இந்த மொழி ராஜ்யக் கோரிக்கைகள் சரித்திரபூர்வமாக உருவாகி வருவதையும் அவர்கள் மதிக்கத் தயாராயில்லை. 

ஜின்னாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, பாகிஸ்தான் பாதையில் "திராவிடநாடு" பெற வழிகோலுகிறார்கள்.

"திராவிடநாடு" கோஷம், சரித்திர வளர்ச்சியை, யதார்த்தச் சூழ்நிலையை, மக்கள் தேவையை மதிப்பிட்டு ஏற்க மறுக்கிறது.

இந்த கோஷம், தி.க., தி.மு.க. தலைவர்களின் கற்பனையிலிருந்து உதித்த கோஷமே தவிர, மூன்று கோடித் தமிழர்களின் அல்லது 10 கோடி தென்னிந்தியர்களின் நடைமுறை வாழ்வில் உருவாகியதல்ல. 

எனவே, "திராவிடநாடு திராவிடருக்கே!" கோஷத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மற்றப்படி, "கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை, அதனாலேயே திராவிட நாடு கோஷத்தை அது ஏற்க மறுக்கிறது" என்பதும் சரியுமல்ல. ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பு, வெறுப்பிற்கு இதில் இடமில்லை.

நித்திய நிகழ்ச்சிகள் திராவிடநாடு கோஷத்தை உறுதிப்படுத்தவில்லை. புதிய ஆந்திர ராஜ்யத்தின் பிறப்பு எதைக் காட்டுகிறது? 

ஐக்கிய கேரளம், சம்யுக்த கன்னடம் என கேரள, கன்னட மக்கள் தனி ராஜ்யங்கள் அமைக்கக் கோருவதன் அர்த்தமென்ன? "திராவிடநாடு" கோரிக்கைக்கும் பிரத்தியட்ச நிலைமைக்கும் வெகு தூரம் என்பதே. நம்நாட்டு மக்களின் நடைமுறை வாழ்விலிருந்து அது தோன்றியதல்ல என்பதே.

"திராவிடநாடு" வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட  கோஷம். இந்தக் கோஷம் சரித்திரத்தை உருவாக்குவதில் மக்களுக்குள்ள முதற்பெரும் பங்கை மறுக்கிறது. பெரியார்களும், அறிஞர்களும் சர்வ வல்லமையுடையவர்களென்று நிர்ணயிக்கிறது. "அடிக்கிற காற்றுக்கு ஆடுகிற நாணற் புல்" மாதிரி மக்களை மதித்து, அவர்களை எப்படி வேண்டுமாயினும் ஆட்டிப் படைக்கலாமென்று கருதுகிறது. 

இதன் விளைவாக, இதர மக்கள் கட்சிகளையும், இதர மொழிவழி மக்களையும், அவர்களுக்குரிய உரிமைகளையும் மதிக்கத் தவறுகிறது.

(ப.ஜீவானந்தம் எழுதிய "ஐக்கிய தமிழகம்" நூலிலிருந்து)

https://www.facebook.com/share/1FTmny4Uxq/

=====================================

திராவிடம் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டா?

"திராவிட நாடு" கோஷத்தை நியாயப்படுத்த பழைய இலக்கியங்களிலிருந்து சான்றுக் காட்டப்படுகிறது. பழைமையான தமிழ் இலக்கியம் எதிலாவது தமிழனை, திராவிடன் என்று குறிப்பிட்டிருக்கிறதா?

"திராவிடன்" என்ற சொல் தமிழ் சொல்லுமல்ல; பழைய இலக்கியம் எதிலும் அது காணப்படவுமில்லை. ஆகவே தொல் காப்பியம், புற நானூறு போன்ற சங்க நூல்கள், திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் பயிலப்படும், சிறந்த பழக்க வழக்கங்கள், அருமந்தன்ன சாதனைகள், உயர்ந்த ஒழுக்கங்கள் ஆகியவற்றை திராவிடப் பண்பாடு என்றும், திராவிடர் நாகரிகம் என்றும் கூறுவது ஆதாரமற்ற கருத்துரைகள்.

"திராவிடர்" என்ற சொல், 'ழ'கரம் வராத சமஸ்கிருதப் பண்டிதர்கள் தமிழரை அழைத்த சொல்.

(ப.ஜீவானந்தம் எழுதிய "ஐக்கிய தமிழகம்" நூலிலிருந்து)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02iPVq4qB2VFJeb58UboNzfxvX3Xa8tKo9pDAai7yRTdWjLLN6maKMtwDGrt7Q6Jh3l&id=61558922956619&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f

- கதிர் நிலவன் 

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு