திருத்தல்வாதத்தில் இருந்து கலைப்புவாதத்திற்கு முன்னேறியுள்ள சிபிஎம்

சிதம்பரம் வ.உ.சி

திருத்தல்வாதத்தில் இருந்து கலைப்புவாதத்திற்கு முன்னேறியுள்ள சிபிஎம்

சாதிய சனாதன இந்தியாவில் மார்க்சியம் மட்டுமே பேசமுடியாது.பாஜகவை வீழ்த்த அம்பேத்கரும் பெரியாரும் தேவை. மண்ணுக்கேற்ற மார்க்சியமே தேவை - CPM பாலகிருஷ்ணன். 

அதாவது மார்க்சியம் இந்தியாவிற்கு பொருந்தாது அல்லது போதாமை இருக்கிறது. அம்பேத்கர் பெரியார் கருத்துகளை உள்வாங்கி மார்க்சியம் வளரவேண்டும் என்கிறது CPM. 

சாதி என்பது உழைப்பு பிரிவினையை அடிப்படையாக கொண்டது. அது இந்தியாவின் சாபக்கேடு என்று முதன்முதலில் சாதிய இந்தியா  குறித்து  பேசிய மார்க்ஸ் CPM பேசுவதைக் கேட்டு கல்லறையில் மனம் வெதும்பி  புரண்டு படுத்திருப்பார். 

CPM பேசுவது அப்பட்டமான புதிய இடது பின்நவீனத்துவ கலைப்புவாதமாகும். 

கோர்பசேவ் கலைப்புவாதத்தால்  சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு ஃபிராங்க்பர்ட் பள்ளி மற்றும்  அமெரிக்க, ஐரோப்பிய  ஏகாதிபத்தியங்களால்  மார்க்சியத்தின் மீது நம்பிக்கை இழக்கவும்,கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழித்துக்கட்டவும்  முன்னெடுக்கப்பட்ட கலைப்புவாத கருத்தியலே மார்க்சியத்தில் போதாமை உள்ளது எனும் கருத்தியலாகும். 

சோசலிச ரசியாவே வீழ்ந்துவிட்டது. ஆகவே மார்க்சியத்தில் போதாமை உள்ளது. அந்த போதாமையை இட்டு நிரப்ப அந்தந்த நாடுகளில் ஏற்கனவே உள்ள முதலாளித்துவ கருத்துகளை உள்வாங்கவேண்டும்  எனும் இந்த புதிய இடது பிரச்சாரத்தை ஏகாதிபத்திய  தொண்டு நிறுவனங்கள் உலகெங்கும் முன்னெடுத்தன. 

மீண்டும் ஹெகலியத்திற்கும், காண்டிற்கும் திரும்பவேண்டும் என ஐரோப்பிய மையவாத மார்க்சிய குழுக்கள்   பேசின.  இங்கு பெரியார், அம்பேத்கர், காந்தியின் கருத்துகளை மார்க்சியத்துடன் கலக்கும் துரோகம் முன்னெடுக்கப்பட்டது. இதை அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, முத்துமோகன் போன்றோர் முன்னெடுத்தனர். 

இப்பிரச்சாரங்களால் பல கம்யூனிச இயக்கங்கள்  முதலாளித்துவ இயக்கங்களாக கொள்கையளவில்  சீரழிந்ததன. 

மார்க்சியத்திற்கு எதிரான  ஃபிராங்க்பர்ட் பள்ளியின்  இந்த கலைப்புவாத கருத்தையே CPM  பேசுகிறது. 

மார்க்சியம் என்பது உலகக் கண்ணோட்டத்தைக் கொண்ட விஞ்ஞானம் ஆகும். இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது ஏற்கனவே இயங்கிவந்த இயற்கை மற்றும் சமூகத்தின் வளர்ச்சி விதிகளை கண்டறிந்து கூறிய விஞ்ஞானம் ஆகும். பூமி உருண்டை  என்பதை எவ்வாறு விஞ்ஞானம் கண்டறிந்து கூறியதோ அவ்வாறே மார்க்ஸ் சமூக விதிகளை கண்டறிந்து கூறினார். ஆகவேதான் அது உலகுதழுவியதாக ,  அழிக்க முடியாத விஞ்ஞானமாக உள்ளது. 

எனவே இந்த ஆய்வுக் கண்ணோட்டம் எல்லா நாட்டுக்கும் பொருந்தக் கூடியதே.  இந்தியாவிற்கு பொருத்த முடியாது என்பது கோர்பசேவ் கலைப்புவாதமாகும். நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடியது இந்த ஆய்வுமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டவகைப்பட்ட கட்சிகளின்   செயல்தந்திரம் மட்டுமே.

 ஆனால் மார்க்சியத்திலேயே  போதாமை உள்ளது என்று பிராங்க்பர்ட் மார்க்சியம் பேசுகிறது CPM. 

நிலவுடமை அமைப்பே சாதி நிலவுவதற்கான அடிப்படை என்பதை இந்திய பொதுவுடமை இயக்கம் முதன்முதலில் சரியாக முன்வைத்தது.   ஆனால்  பெரியார் சாதிக்கு காரணம் பார்ப்பனியம் என்றார். அம்பேத்கர் இதை மறுத்து இந்துமதமே சாதிக்கு அடிப்படை என்றார்.  ஆனால் CPM பெரியாரும் அம்பேத்கரும் தேவை என்பதன் மூலம் தமது பழைய நிலைப்பாடுகளை கைவிட்டு ஓடுகிறது. 

உண்மையில் மார்க்சியத்தை கற்றுக்கொள்வதில்தான் இக்கட்சிகளின் போதாமை உள்ளது. மார்க்சியத்தில்  அல்ல. திருத்தல்வாதம்  என்பது கம்யூனிஸ்ட் கட்சியை முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு ஆட்படுத்துவதே என லெனின் கூறுவது இவர்களுக்குத்தான். 

மார்க்சியத்தை வளர்ப்பது என்பது லெனின், ஸ்டாலின், மாவோ ஆற்றிய பங்களிப்பை குறிக்கிறது. ஆனால் இவர்கள் பேசுவது மார்க்சியத்தை ஒரு சீர்திருத்த கோட்பாடாக மாற்றுவதற்கே.  

அவ்வாறெனில்  வர்க்க அரசியல் ??? 

 வர்க்கமாவது? புரட்சியாவது ?? அதெல்லாம் வறட்டுவாதம் !!!  

திருத்தல்வாதம் மார்க்சியம் பொருந்தாது என சொல்லாது. மார்க்சியம் வெல்லும் என சொல்லிக்கொண்டே அதை திருத்தும். ஆனால் கலைப்புவாதம் மார்க்சியம் பொருந்தாது என வெளிப்படையாக பேசும். 

CPM திருத்தல்வாதத்தில் இருந்து கலைப்புவாதத்திற்கு முன்னேறியுள்ளது. எதிர் புரட்சிகர  வாழ்த்துகள் ! 

CPM பாலகிருஷ்ணன் பேசிய வீடியோ இணைப்பு -- 

https://fb.watch/rXnMd9u_kr/?mibextid=Nif5oz

- சிதம்பரம் வ.உ.சி

(முகநூலில்)

https://www.facebook.com/share/p/L9eqEJpugbRcXLix/?mibextid=oFDknk