பாரதியை அவதூறு செய்யும் 'எச்சரிக்கை பகுத்தறிவுகளுக்குப்' பதில்
பாரதி கடவுள் பக்தி உள்ளவர். அதைவிடவும் நாட்டின் விடுதலை வேட்கை மிக்கவர். தன்னுடைய அக உலக கருத்தியல் தத்துவக் கண்ணோட்டத்தில் இருந்து அவருடைய விடுதலை வேட்கையின் வெளிப்பாடும் அமைந்தது.
கடவுள், மதம், காலனிய ஆதிக்க எதிர்ப்பு எனும் பொருளில் அவருடைய வாழ்க்கையின் வெகுவான நாட்கள் காலனி ஆதிக்க எதிர்ப்பு என்பதாகவே இருக்கிறது.
அந்த வகையில் நில உடமை பிடிமானங்களுக்கும் முதலாளிய ஜனநாயக உரிமைக்கும் உள்ள முரண்களின் ஊசலாட்டத்தில் வாழ்ந்தவராகவே பாரதியாரும் இருக்கிறார்.
இதில் வெறுமனே பார்ப்பனிய மற்றும் பார்ப்பனர் அல்லாத பிரிட்டிஷ் பேரடிமைகளாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், அன்று நாட்டின் முதன்மை முரண்பாடாக நிலவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் தனக்கிருந்த தேசிய கண்ணோட்டத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்க்கும் திசையில் கவிதை, பல்வேறு கண்ணோட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இணைந்து போராடிய ஒரு தலைமுறையின் மரபு என்ற வகையில் பாரதியாரும் மதிப்புக்குரியவராகிறார்.
கண்ணெதிரே தெரிந்த எதிரியை எதிர்த்தவரை, ஏதோ இந்து மதத்துக்காக போராடியதால் வெள்ளையரால் வெறுக்கப்பட்டவர் போல அவரை ஒரு இந்துத்துவவாதியாக மட்டும் அடையாளப்படுத்துவது ஆரிய திராவிட அரசியல் கண்ணோட்டத்தின் மதிப்பீடாக அமைகிறது.
பாரதியை அவருடைய எல்லா கண்ணோட்டங்களுடனும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மறுத்து ஒதுக்க வேண்டியதை மறுக்கும் உரிமை நமக்கு உண்டு.
ஆனால், ஏகாதிபத்திய அடிமை காலகட்டத்தில் அதற்கு எதிரான அவருடைய குறிப்பிடத் தகுந்த நடத்தைகள் மதிப்புக்குரியவை. மனம் கொள்ளத்தக்கவை.
மிகவும் பழமைவாத ஒரு குடும்பப் பண்பாட்டுச் சூழலில் வளர்க்கப்பட்டு, தன்னளவில் பல சம்பிரதாய தளைகளைக் களைந்து முதலில் தன் குடும்ப அளவிலேயே தன் மனைவி உட்பட பெண்களை மதிக்கும் அவருடைய நடத்தைகளைப் பார்த்து வெளிப்படையாக மகிழ்ந்து ஆதரித்து பாரதியை எதிரிகள் பக்கம் விட்டுக் கொடுக்காமல், பாரதியின் நடத்தையிலிருந்து அவரது புதுவை வாழ்க்கையை பார்த்து பூரித்து எழுதியிருக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும்.
சிறைப்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி வ.உ.சி அவர்களை, கடும் அடக்கு முறையும் அரச உளவாளிகளும் வேட்டைகளும் நிலவிய அந்த காலத்தில் அஞ்சாமல் சிறை சென்று பார்த்தவர் பாரதி. பார்த்தது மட்டுமல்ல பல இடங்களில் கண்டனக் கூட்டங்களை நடத்தும் ஏற்பாட்டாளராகவும் பேச்சாளராகவும் இருந்ததைவரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.
அவருடைய கடவுள் மதம் தொடர்பான பிற்போக்கு கண்ணோட்டங்கள் வரலாற்றுக்கு வழங்க வேண்டிய இந்த முக்கியமான எந்த கடமையையும் தடை செய்யவில்லை. வ. உ. சி. யின் எந்த குறிப்புகளிலும் கூட பாரதியை ஒரு பின்தங்கிய சக்தியாக கருதி இழக்க ஏதுமில்லை.
பாரதியின் ஒரு நாள் வாழ்க்கையை கூட வாழ துணியாத அல்லது வாழத் தகுதி இல்லாத சொத்துடமை வர்க்கப் பேர்வழிகள், அரசை எதிர்த்து வாழ்க்கையை இழக்க விரும்பாத 'எச்சரிக்கை பகுத்தறிவுகள்' பாரதியை உள்ளது உள்ளபடி கூட மதிப்பதையும் அவரிடம் உள்ள மதிப்புக்குரிய நடத்தைகளை கொண்டாடுவதையும் கூட பிற்போக்காக சித்தரிப்பது பிறழ் மனநிலை அன்றி வேறென்ன?
- துரை. சண்முகம் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு