பி ஜே பி -க்கு மாற்று காங்கிரஸா? காங்கிரஸுக்கு மாற்று பி ஜே பி-யா?

தெய்வசுந்தரம் நயினார்

பி ஜே பி -க்கு மாற்று காங்கிரஸா? காங்கிரஸுக்கு மாற்று பி ஜே பி-யா?

(முகநூலின் வேறு ஒரு தளத்தில் நான் முன்வைத்த கருத்தை இங்கும் முன்வைக்கிறேன்)

பிஜேபி-யின் அரசாங்கம் முழுப் பெரும்பான்மையுடன் அமைக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு சூழல் இன்று! அடித்தட்டு வர்க்கங்கள் இன்று மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உட்பட்டு உள்ளன! அடிப்படையிலேயே ஒரு மாற்றம் ஏற்படாமல் இந்தப் பிரச்சனை தீராது! 

இதற்குமுன்னர் இந்தியாவை 60 ஆண்டுகளுக்குமேலாக ஆண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. 

இந்தியாவில் இன்று நீடிக்கிற ஏகாதிபத்தியச் சுரண்டல் பொருளாதாரத்தை முழுமையாகக் கட்டி அமைத்த கட்சி காங்கிரஸ் கட்சி. சீக்கியர்களின் போராட்டத்தை இராணுவம்கொண்டு அடக்கிய கட்சி காங்கிரஸ் கட்சி. காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்தது காங்கிரஸ் கட்சி. சிக்கிம் நாட்டைப் பாதித்து, தன்னுடைய எல்லை விரிவாக்கத்தைச் செயல்படுத்தியது காங்கிரஸ் கட்சி. வடகிழக்கு தேசிய இனங்களின் போராட்டங்களை இராணுவம்கொண்டு அடக்கி வந்தது காங்கிரஸ் கட்சி. 1975-இல் இந்தியாவில் முதன்முதலாக அவசரநிலைப் பிரகடனத்தைப் பிறப்பித்து, பாராளுமன்ற ஜனநாயகத்திற்கே உலை வைத்தது காங்கிரஸ் கட்சி. நக்சல்பாரியில் உதித்த புரட்சிகரப் பொதுவுடமைக் கட்சியின்மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டு, பத்தாயிரக்கணக்கான போராளிகளைச் சாகடித்தது காங்கிரஸ் கட்சி. இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய தமிழ் மக்களின்மீது அடக்குமுறையை ஏவியது காங்கிரஸ் கட்சி. 

சிங்கள இன ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய ஈழத்தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துபோகச் செய்ய உதவியவர்கள் யார்? ஈழப்போராளி மதிப்பிற்குரிய பிரபாகரன் அவர்களைச் சுற்றிவளைத்து இலங்கை அரசு கொடூரமாக்க் கொலைசெய்வதை வேடிக்கை பார்த்த கட்சி எது?  போராளியின் புதல்வராகப் பிறந்த ஒரே காரணத்தினால் பிரபாகரன் புதல்வன் கொடுமையாகக் கொலைசெய்யப்பட்டதை மறக்கமுடியுமா?  

இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம் பாசிசக் காங்கிரஸ் கட்சியின் கொடுமைகளைப்பற்றி! . பட்டியல் நீளும்! 

இந்தியாவின் இன்றைய அனைத்துப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையே 60 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதாரக் கொள்கையே.

எனவே பிஜேபி கட்சியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியை ஒரு முற்போக்குக் கட்சியாகக் காட்ட முயல்வது சரியா? ராகுல் தலைமையில் காங்கிரஸ்கட்சியை ஆட்சிபீடத்தில் உட்கார வைக்கும் முயற்சி சரியா? 

இந்த இரண்டுமேதான் இந்திய மக்களின் இன்றைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்! அவ்வாறு இருக்க . . . இந்த இரண்டுமே ஏகாதிபத்திய ஆதரவுப் பிற்போக்குக் கட்சிகளே என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டிய ஒரு காலகட்டத்தில் காங்கிரசையும் ராகுலையும் ''புனிதர்களாக'' காட்டுவது சரியா?

இந்த இரண்டு கட்சிகளின் மக்கள் விரோதக் கொள்கையையும் தோலுரித்துக்காட்டவேண்டிய ஒரு கட்டம் இது! பிஜேபிக்கு மாற்று காங்கிரஸ் கட்சி இல்லை! அதுபோலக் காங்கிரஸ்கட்சிக்கு மாற்று பிஜேபி இல்லை! 

இதை மக்களுக்கு எடுத்துக்காட்டவேண்டிய பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு உண்டு! காங்கிரஸ்கட்சியைப் ''புனிதப்படுத்தக்கூடாது''! உண்மையைத் தைரியமாக முன்வைக்கவேண்டும்! 

- தெய்வசுந்தரம் நயினார்

(முகநூலில்)