ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும்-திராவிடமும் ஒன்றே!!

ஏ.எம்.கே

ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும்-திராவிடமும் ஒன்றே!!

இன்றைய காலகட்டத்தில் இந்த ஆரிய-திராவிட இனம் குறித்த விவாதத்தின் தேவை என்ன? பதில் எளிமையானது.

ஒரு புறம், இந்து ராஷ்டிரம்-இந்துத்துவப் பாசிசம் போன்ற மிகப் பிற்போக்கான அபாயகரமான ஜெர்மானிய வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆரிய இனவாதம் தீவிரம் பெற்றுவருகின்றது. மறுபுறம், அதை எதிர்ப்பது என்ற பேரில் பிற்போக்கான திராவிட இனவாதம் முன்வைக்கப்படுகிறது. ஆரிய குத்தீட்டிக்கு எதிராக திராவிடத்தை முன்வைத்த கால்டுவெல்லை போர்வாளாக முன்வைப்பது என்ற போக்கு தலைதூக்குகிறது. ஆனால், இவ்விரண்டு இனவியல் கோட்பாடுகளுமே ஏகாதிபத்திய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்கின்றன; இவை ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இந்துத்துவப் பாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்டத் தடையாக உள்ளன. எனவேதான் இந்த இனவியல் கோட்பாடுகளின் பொருளியல் அடிப்படையைப் புரிந்து கொண்டு விவாதிப்பதும், அம்பலப்படுத்தி அவற்றை முறியடிப்பதும் அவசியமானது. ஆகவே, ஏகாதிபத்திய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்த ஆரிய-திராவிட மொழியியல்-இனவியல் கோட்பாடுகளின் தோற்றம் பற்றி வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியமாதலால் அது குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

காலனிய இனவியல் கோட்பாட்டுக்கான பொருளியல் அடிப்படை

15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ ஆட்சிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் டச்சு உள்ளிட்ட 15 நாடுகளில் முதலாளித்துவ ஆட்சிகள் உருவாயின. அந்த 15 நாடுகளிலும் தத்தமது தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட 15 தேசிய அரசுகள் உருவாயின. அந்நாடுகளில் கிழக்கிந்திய கம்பெனிகள் போன்ற முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அத்தகைய நிறுவனங்கள் அனைத்தும் வணிக முதலாளித்துவப் பிரிவுகள் ஆகும். அவை நாடு பிடிக்கும் போரில் இறங்கின. காலனிய நாடுகளுக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் பணி புராதன மூலதனச் சேர்க்கையில் ஈடுபட்டதாகும். புராதன மூலதனச் சேர்க்கை என்பது முதலாளித்துவ வழியில் மூலதனம் சேர்ப்பது அல்ல. அதாவது முதலாளித்துவ முறையில் மூலதனம் போட்டு தொழிலாளர்களின் கூலி உழைப்பின் ஒரு பகுதியை மூலதனமாகச் சேர்ப்பது என்ற கோட்பாட்டிற்கு மாறான வழியில் இரு வர்க்கங்களை உருவாக்கினார்கள். ஒன்று கொள்ளையடிப்பதன் மூலம் மூலதனத்தைக் குவித்து முதலாளி வர்க்கத்தையும், அடிமை முறைகளை உருவாக்குவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தையும் உருவாக்கினார்கள்.

முதலில் முதலாளிகளை உருவாக்குவது என்பதை, காலனிய நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடித்து அதன்மூலம் முதலீடு செய்யும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கங்களை உருவாக்கினர். இது ஆதி திரட்சி எனப்படும். அதாவது செல்வங்களைக் கொள்ளையடித்து மூலதனத்தைக் குவித்தனர். இரண்டாவதாக மனிதர்களைக் கொள்ளையடித்து அடிமைத் தொழிலாளர்களை உருவாக்கினர். இத்தகைய தொழிலாளர்களை உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருந்தன. ஒன்று, ஐரோப்பாவைப் பொறுத்த வரை நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து முதலாளித்துவ வர்க்கத்தை உருவாக்குவதன் வாயிலாக விவசாயிகளின் உடமைகளை நீக்கி தொழிலாளர்களை உருவாக்கினர். அது முற்போக்கானதும் புரட்சிகரமானதும் ஆகும். அது நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயகப் புரட்சி எனும் அடிப்படையில் அமைந்ததாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட காலனிய நாடுகளில் நுழையும்பொழுது தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதன் மூலம் அடிமைத் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கும் வேலையைச் செய்தனர். அவர்களை சிறைப்பிடித்து கொட்டடியில் அடைத்து தமது நாடுகளுக்கும் பிற காலனிய நடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார்கள். இவ்வாறாக ஓர் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். இந்த அடிமை வியாபாரத்தை நியாயப்படுத்துவதற்கென்றே இங்கு இனவாதத்தை முன்வைத்தார்கள்.

இது குறித்து, கார்ல் மார்க்ஸ், தனது மூலதனத்தின் முதல் தொகுப்பில் 31-வது தலைப்பில் ப-1011-இல் புராதன மூலதனச் சேர்க்கை என்ற பகுதியில், விரிவாக எழுதியுள்ளார். அதில் காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமை முறைகளை உருவாக்கியதற்கான பொருளியில் அடித்தளம் பற்றி விளக்குகிறார். கொள்ளையடிப்பதன் மூலம் மூலதனத்தை சேர்ப்பதையும், அடிமைப்படுத்துவதன் மூலம் கூலித்தொழிலாளர்களை உருவாக்குவதையும் விளக்குகிறார். தொழிலாளர்களை, அடிமை வியாபாரத்தின் மூலம் ஏற்றுமதி செய்யும் முறைகளைப் பற்றி மார்க்ஸ் கூறுகையில், நேரடியாக “கிறிஸ்துவ காலனியாதிக்கம்” என்ற வாக்கியத்தைப் பயன்படுத்துகிறார். கிறிஸ்துவ பாதிரியார்களின் வாதங்களையே மேற்கோள்காட்டி, “கிறிஸ்துவ காலனியம்” என்பதை விளக்குகிறார். திருச்சபைகளே அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டதை எடுத்துக்காட்டுகிறார். கிறிஸ்துவத்தையே தனது வாழ்வாகக் கொண்ட வில்லியம் ஹோவிட் எனும் பாதிரியார், கிறிஸ்துவ காலனியாதிக்கம் பற்றிக் கூறியதை பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார் மார்க்ஸ்.

"கிறிஸ்துவ இனத்தார் எனப்படுவோர் உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டிச் செயல்களையும், வெறித்தனமான அட்டூழியங்களையும் புரிந்துள்ளனர். வேறு எந்த இனத்தாரும், அவர்கள் எவ்வளவு தான் மூர்க்கமானவர்களாகவும், நெறி புகட்டப் பெறாதவர்களாகவும் இருந்தாலும், கருணை வெட்கம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களாக இருந்தாலும் சரி, உலக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இவற்றிற்கு இணையான அட்டூழியங்கள் புரிந்ததில்லை.”

இவ்வாறு தொழிலாளர்களைக் கைது செய்து, அவர்களை ஏற்றுமதி செய்து கிறிஸ்துவத் திருச்சபைகள் ஏலம் விடுவது எவ்வளவு கொடூரமானது என்பது வரலாற்றுரீதியாக விளக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கு அனுப்பியது பற்றி வரலாற்றுரீதியாக எடுத்துரைக்கப்படுகிறது. இதை முதலில் போர்த்துகீசியர்கள் தான் பரங்கிப்பேட்டையில் ஆரம்பித்தனர் என கூறப்படுகிறது. காலனிய முறை என்பது எவ்வாறு இனவாதத்தால் உருவாக்கப்பட்டது என்பதும், இனவாதத்தின் மூலம் எப்படி அடிமைமுறைகள் உருவாக்கப்பட்டன என்பதும் விளக்கப்படுகிறது.

காலனிய இனவாதத்தை முன்வைக்கும் இவர்கள் யார்? அவர்கள் வணிக முதலாளித்துவவாதிகள், தொழில் முதலாளித்துவப் பிரிவினர் அல்லர். இவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள்? எதன் அடிப்படையில் செய்தார்கள்?

முதலாளித்துவ முறைக்கு விரைவாக மாறிச்செல்லும் பொருட்டு, அதாவது நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் நிகழ்வுப்போக்கை விரைவுபடுத்தும் பொருட்டே இத்தகைய காலனிய முறைகளைப் பயன்படுத்தினர். காலனிய இனவியலை விமர்சனம் செய்யும் பல ஆய்வாளர்களும் இனவியலின் இந்தப் பொருளியல் அடித்தளத்தை எடுத்துக் காட்டுவதில்லை. அதை வெறும் மத அடிப்படையில், மத ஒடுக்குமுறை வடிவமாக மட்டுமே இக்கொள்கைகள் செயல்படுத்தப்படுவதாக பார்க்கின்றனர்.

கிழக்கிந்திய கம்பெனிகள் போன்ற வணிக முதலாளித்துவப் பிரிவினர் இத்தகைய அடிமை முறைகளை உருவாக்குவதற்கு இனவாதத்தை எத்தகைய முறைகளில் கட்டியமைத்தனர்? முதலாவதாக உடலியல் கூறுகளைக் கொண்டு அதாவது நிறம், முகத்தோற்றம், மூக்கின் நீளம் ஆகியவற்றைக் கொண்டு மக்களை ஆண்டான்-அடிமைகள் என வகைப்படுத்தினர். இதன் மூலம் அடிமைமுறைகளைப் புகுத்தினர். இந்த அடிமைமுறைகளுக்கான அடிப்படை பழைய ஏற்பாட்டின் பைபிள் கதைகளிலேயே அடங்கியுள்ளது. நோவா பெருவெள்ளம், ஹாம் சந்ததியினர் மீதான சாபம், பேபல் கோபுரம் போன்ற பழைய ஏற்பாட்டின் பைபிள் கதைகளை காலனியாதிக்கக் கொள்கைகளாகப் பயன்படுத்தினர். பெருவெள்ளம் வடிந்த பிறகு, திராட்சை இரசம் அருந்தி ஆடையின்றிக் கிடந்த நோவாவைப் பார்த்து பரிகசித்துவிட்ட அவரது மகன் ஹாமும் அவரது சந்ததியும், மற்ற இரு மகன்களான ஷெம், ஜெப்பேது-வின் சந்ததியினருக்கு அடிமைகளாகக் கடவது என்பதே சாபம். ஹாம் சந்ததியினர் கருப்பு நிறத்தார், அழகற்ற உடலியல் கூறுகளைக் கொண்டவர்கள்; அவர்கள் வெள்ளைநிற, அழகான உடலியல் கூறுகளைக் கொண்ட அவரது சகோதரர்களின் வம்சத்திற்கு அடிமைகளாக சேவை செய்து தமது பாவத்தை போக்கிகொள்ள வேண்டும் என்று கூறினர். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பித்த மோசேவின் இனவியல் தர்மம், மனுவின் வர்ண தர்மத்திற்கு நிகரானது.

இரண்டாவதாக, கிழக்கிந்திய கம்பெனி அரசுகள், மக்களை இனவாத வழியில் பிளவுபடுத்துவது, முரண்பாடுகளை உருவாக்கி அம்முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்ற வழியில் தங்களது அரசு அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். மேற்கண்டவாறு நிறம் உள்ளிட்ட உடலியல் கோட்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துதலைத் தொடர்ந்து மூலமொழி மற்றும் மொழிக் குடும்பம் போன்ற மொழியியலில் கோட்பாடுகளை முன்வைத்து இனங்களை வகைப்படுத்தினர்.

ஆரிய இனவாதம்

வில்லியம் ஜோன்ஸ் எனும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதி Third Anniversery Discourse Asiatic Reasearches vol-1, 1788 pages 415-431 எனும் நூலில் ஒரே வேர்ச்சொல், மூலச் சொற்கள் என்று ஆய்வு செய்து, ஒரே மூலச்சொற்களைக் கொண்டவைகளையெல்லாம் ஒரு மொழிக் குடும்பம் என்று வரையறுத்தார். அந்த வரையறையின்படி இந்தோ ஆரிய மொழிகள் (Indo-Aryan Languages) ஒரே மொழிக் குடும்பமாக வகைப்படுத்தினார். இந்த வகைப்படுத்துதலுக்கு அவர் “பேபல் கோபுரக் கதைகளையே” அடிப்படையாகக் கொண்டார். விவிலியத்தின் பேபல் கோபுரக் கதையின்படி, ஆண்டவருக்கு எதிராக பாபிலோனியர்கள் பேபல் கோபுரத்தை கட்டியதாகவும், அங்கு ஒரே மொழியை பேசியவர்கள் மத்தியில் பல மொழிகளை ஏற்படுத்தி குழப்பத்தை தோற்றுவித்து உலகம் முழுதும் பல பகுதிகளுக்குப் பிரிந்து செல்லுமாறு ஆண்டவர் செய்தார் என்பதே இந்த ஐதீகக் கதையின் சுருக்கமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே மூல மொழிக் கொள்கை மற்றும் மொழிக் குடும்பக் கொள்கையை உருவாக்கினார். ஆரிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி சமஸ்கிருதம் என்று கூறினார். இம்மொழிகளைப் பேசுவோர் ஒரே இனம்; இந்தோ ஆரிய இனம் என மேக்ஸ் முல்லர் தனது “The Languages of the seat of war in the east -London-william Norgate 1855” எனும் நூலில் வரையறுத்தார். இவ்வாறு இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்பது ஆரிய மொழிக் குடும்பமாக வகைப்படுத்தப்படுகிறது. வேர்ச் சொற்களின் ஒற்றுமை என்ற அடிப்படையில் ஆரிய மொழிக் குடும்பத்தை வரையறை செய்ததோடு மட்டுமின்றி, காலனியாதிக்கத்தை திணிப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் ஆரிய மேன்மை-ஆரிய மேலாதிக்கக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அதாவது ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள்; ஆளப்பிறந்தவர்கள்; அவர்கள்தான் உலகத்தில் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கொண்டுவந்தவர்கள் என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இங்ஙனம் ஐரோப்பிய காலனிய மேலாதிக்கத்திற்கு ஆரிய மேன்மை என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆரிய மொழிக் குடும்பத்தின் மூலமொழித் தேடலின்போது, சமஸ்கிருதமே மூலமொழி என்று கூறி இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தில் சமஸ்கிருதத்தையும் இணைத்துக்கொண்டு, இந்தியாவிலிருந்த ஆரியரையும் இணைத்துக் கொண்டு ஆரிய மேன்மை பேசினர்.

பின்பு காலனிய ஆதிக்கமும்-காலனிய ஆட்சியும் தோன்றிய பிறகு, இனத்தூய்மை பேசி ஜெர்மன் இனம்தான் உண்மையான ஆரிய இனம் என்று கூறி, இந்தியாவிலுள்ள ஆரியர்களை-அதாவது பார்ப்பனர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம்-அதாவது பார்ப்பனர்களிடையே சாதிமுறையும், உருவ வழிபாடும் தோன்றி எல்லாவிதப் பிற்போக்கும் வந்து விட்டதால் இவர்களை ஆரியர்களாக ஏற்க முடியாது என்றனர்; அதாவது ஆரியத் தூய்மையை இழந்துவிட்டனர் என இவர்களை கீழ்நிலைக்குத் தள்ளி இவர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். ஜெர்மனியில்தான் ஆரியத் தூய்மை நிலவுகிறது; எனவே உலகத்தை ஆளப் பிறந்த இனம் ஜெர்மானிய இனம்தான் எனும் கோட்பாட்டை நிறுவினர். ஆரிய மொழி அல்லாத பிற மொழிகளையும், பிற மொழிக் குடும்பங்களையும், இந்தியாவைச் சார்ந்த பார்ப்பனர்களையும் ஆரியர்களுக்கு அடிமைகளாகவே பார்த்தனர். ஆனால் பார்ப்பனர்களோ தாங்களும் ஆரியர்கள்தான் என்று உரிமை கோரி பெருமை கொண்டாடுகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள் இவர்களை எட்டி உதைத்தாலும் உதைத்த காலை நக்கிப் பிழைக்கிறார்கள். காலனியாதிக்கத்தின் நுகத்தடிக்குள் பார்ப்பனர்களைக்கொண்டு வந்து அடிமைப்படுத்தவேண்டும் என்பதால் அவர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. காலனியாதிக்கவாதிகள் இவர்களை கீழ்நிலைக்குத் தள்ளினாலும் தாங்களும் ஆரியர்கள்தான் என உரிமை கோருவது இவர்களிடம் உருவான தரகுசித்தாந்தத்தையே காட்டுகிறது. பார்ப்பனர்கள் உயர்மட்டத்தில் இருந்த நிலை என்பது போய் அவர்கள் ஆரியர்கள் இல்லை என அவர்கள் இழிவுபடுத்தினாலும் நாங்களும் ஆரியர்கள்தான் என இவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் ஆரியர் என்றால் அது ஐரோப்பிய ஆரியர்களைத்தான் குறிக்கும். பார்ப்பனர்களை அல்ல.

இக்கோட்பாட்டிற்கு பலம் சேர்க்கும் விதமாக “தூய இனவாதத்தை” கோபினியு தனது “மனித இனங்களின் சமத்துவமின்மை குறித்த கட்டுரைகள் (1853-55)” எனும் நூலில் முன்வைத்தார். அவர் பின்வருமாறு கூறுகிறார்: “வெள்ளை இனம்தான் அனைத்து பண்டைய நாகரிகங்களுக்கும் ஆதாரமானது. வெள்ளை இனத்துடன் பிற இனங்கள் கலந்ததே அனைத்து நாகரிகங்களும் அழிவதற்குக் காரணம். இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மானிய இனம் மட்டுமே தூய்மையானது”. இந்தக் கோட்பாடே, நாஜிக் கட்சி உருவாவதற்கு காரணம் ஆனது. இதைக் கொண்டே கோல்வால்கர் இங்கு இனத்தூய்மையைப் பேண இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என இந்துத்துவப் பாசிசம்-இந்து ராஷ்டிரத்தை முன்வைத்தார்.

இந்தியாவிற்கு வரும்பொழுது, ஆரிய மொழிக் குடும்பம்-சமஸ்கிருதம் அல்லாமல் பிற மொழிகள் பேசுவோரும்  வாழ்ந்து வந்தனர். அம்மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல. அவை ஆரிய மொழிக் குடும்பத்திற்கு கீழானவைகளாக கருதப்பட்டன. அதேபோன்று காலனியாதிக்கவாதிகள் பல நாடுகளுக்குச் சென்றனர்; ஆப்பிரிக்க கண்டத்திற்குச் சென்றனர். இந்த நாடுகளிலுள்ள மக்களை இந்த ஆய்வு அடிப்படையிலான இனவாதக்கோட்பாட்டின் அடிப்படையில்தான் அடிமைகளாக மாற்றினர். அத்துடன் ஆரிய மூலத்திற்கு பழைய ஏற்பாட்டின் மூன்று ஐதீகக் கதைகளைப் பயன்படுத்தினர். நோவா, ஊழிப்பெருவெள்ளம், பேபல் கோபுரம் போன்ற கதைகளின் அடிப்படையில் காலனியாதிக்கக் கோட்பாடுகளை உருவாக்கி காலனியாதிக்கத்தை-காலனிய அரசுகளை நிறுவினர்.

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் உலகின் பல இடங்களில் காலனிகளை உருவாக்கிய பொழுது, அவர்களின் மிஷினரிகளும் வியாபாரிகளும் மேற்கின் பண்பாட்டிற்குத் தொடர்பற்ற வேறு விதமான கலாச்சாரங்களையும் மனித சமுதாயங்களையும் எதிர்கொண்டனர். நோவாவின் மூன்று மகன்கள் மற்றும் அவர்களுடைய சந்ததிகள் குறித்த ஐதீகக் கதைகளுக்குள் உலகின் பிற பண்பாட்டு சமுதாயங்களை அடைக்கும்படியான விவரணைகளை அவர்கள் உருவாக்கினார்கள்.

உதாரணமாக, இந்தியாவின் பூர்வகுடி ஆரியர்கள் ஹாமின் சந்ததிகள் எனவும், பெரு வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் இந்தியாவிற்கு குடியேறினர் எனவும், பிரிட்டிஷ் காலனியாதிக்கம் என்பது அவர்களை மீண்டும் விவிலியத்திற்குள் மீட்கவே எனவும் கதைகளைப் புனைந்தனர். இராமனை ஹாமின் சந்ததியான ராஹ்மா-உடன் ஒப்பிட்டு, வெள்ளம் வடிந்த பிறகு இராமன் தலைமையில் இந்திய மக்கள் இங்கு குடியேறினர் எனவும், பேபல் கோபுரத்தைக் கட்டிய நிம்ரோத் மன்னனே விஷ்ணு அவதாரம் எனவும் கதைகள் எழுதினர்.

ஒவ்வொரு பண்பாடும் தம் தோற்றம் பற்றியும் தன்மைகள் பற்றியும் கொண்டிருந்த தொன்மங்களும் வழக்குகளும் மூடநம்பிக்கைகள் எனவும், முட்டாள்தனமான கதைகள் எனவும் தூக்கி எறியப்பட்டன. ஐரோப்பியர் அல்லாத ஒவ்வொரு பண்பாட்டிற்குமான உண்மையான வரலாற்றை உருவாக்கும் பொறுப்பும் தார்மீகக் கடமையும் ஐரோப்பியர்களின் வரலாற்றுக் கடமை என்று கருதப்பட்டது, இந்த கடமையை நிறைவேற்றும் பொழுது கருப்புத் தோல் கொண்ட மக்கள் அனைவரும் ஹாமின் சந்ததிகளாக வகைப்படுத்தப்பட்டு நாகரீகமற்ற, உயர் பண்பாடு அற்ற, ஒழுக்கத் தன்மையற்ற, அதே சமயத்தில் தந்திரபுத்தியும் வஞ்சகமும் கொண்ட அடிமைகளாக அடக்கி ஆளப்பட வேண்டியவர்களாகக் கருதப்பட்டனர்.

நூல்கள் : ஏகாதிபத்தியம் உருவாக்கிய இனக் கொள்கை ஆரிய திராவிட இனவாதம் குறித்து

'திராவிட' நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1916-1946' ஜெ.பி.பி. மொரே

திராவிட இனவாதம்

இந்தியாவில் அதன்பிறகு ஒரு பிரச்சினை எழுகிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில் ஆரியர்கள் நுழையும் முன்பே சிந்துசமவெளி நாகரீகம் இருந்தது என 1924-இல் கண்டறியப்பட்டது. இங்கு பூர்வகுடிகளான தமிழர்கள், மங்கோலியர்கள் போன்ற இனங்கள் வசித்து வந்தன. இவர்களின் நாகரீகம் ஆரியரின் நாகரீகத்தை விட மேலானதொரு நாகரீகம் ஆகும். ஆரியர் வருகையில் இங்கு நாகரீகம் மேம்பாடு அடையவில்லை. வெள்ளையர் நாகரீகத்தால் இவர்கள் மேன்மையடையவில்லை. மாறாக அவர்களின் வருகையால் இவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். ஆகவே, ஆரிய மேன்மைக் கோட்பாடு அடித்து நொறுக்கப்பட்டது.

எல்லிஸ் எனும் காலனியாதிக்கவாதி “தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஒரே வேர்ச்சொல்லைக் கொண்டவை. அவை சமஸ்கிருதத்தில் இருந்து வேறுபட்டவை” என வகைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதியும், சமய பரப்பாளருமான ராபர்ட் கால்டுவெல் என்பவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளையும் உள்ளடக்கி “திராவிட மொழிக்குடும்பம்” என “தென்னிந்திய(அ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலில் வகைப்படுத்தினார். இம்மொழிகளைப் பேசுவோர் திராவிட இனம் என சொன்னார். இந்த வாதத்தை ஆந்திராவைச் சேர்ந்த மமடி வெங்கையா எனும் அறிஞர் மறுக்கிறார். “திராவிட தமிழ் மொழியைச் சார்ந்தது அல்ல தெலுங்கு மொழி” என்கிறார் அவர். அதாவது தெலுங்கு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் வேர்ச் சொற்கள் வேறு வேறு; திராவிட மொழிகளிலிருந்து தெலுங்கு வந்ததல்ல; தனித்தனி மொழிகள்தான். ஒரு மொழிக் குடும்பம் என்ற கோட்பாட்டை அவர் ஏற்கவில்லை. ஆரியக் கோட்பாட்டில் ஜோன்ஸ் கும்பலால் என்ன முன்வைக்கப்பட்டதோ அதே கோட்பாட்டையே கால்டுவெல் பேசுகிறார். எனவே திராவிட மொழியியல்- இனவியல் கோட்பாடு ஆரிய மொழியியல்-இனவியல் கோட்பாட்டிற்கு மாறானது அல்ல. அந்த கோட்பாட்டின் அடிப்படையிலியே கால்டுவெல் இக்கோட்பாட்டை முன்வைக்கிறார். நாம் ஜோன்ஸ்-கால்டுவெல் கும்பலின் ஆரிய, திராவிட மொழியியல்-இனவியல் கோட்பாட்டை நிராகரிக்கிறோம்.ஒரே வேர்ச்சொல், இலக்கண ஒற்றுமை என்பதன் அடிப்படையில் ஒரே மொழிக்குடும்பம் (அ) மூல மொழிக்கொள்கை என வரையறுப்பது மார்க்சியத்திற்கு புறம்பானது என ஸ்டாலின் “மொழியியல் குறித்து மார்க்சியம்” J.V Stalin -Marxism on Linguistics- 1950 July 20) எனும் நூலில் கூறுகிறார்.

மார்க்சியமும் மொழியியலும் : ஒரு சுருக்கம்

இந்நூலை பெற: மார்க்சியமும் மொழியியலும் வி.ஐ.லெனின், ஜே.வி.ஸ்டாலின் - தமிழில்: பாரதி

அதன் பிறகு, பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்கள் குறிப்பாகச் சொன்னால் ரிக் வேத கால ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா? இங்கேயே பிறந்தவர்களா? வெளியில் இருந்து வந்தவர்கள் எனில் படையெடுத்து வந்தார்களா? ஊடுருவினார்களா? ஆகிய கேள்விகள் எழுந்தன.

கால்டுவெல், ஜோன்ஸ், முல்லர் போன்ற காலனியாதிக்கவாதிகள் ஆரியர்கள் இங்கேயே இருந்தவர்கள் அல்ல என்றும், வெளியில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் என்ற நிலைபாட்டை முன்வைத்தனர். ஆரியர்கள் திராவிடர்கள் என இரண்டு இனங்களாக வரையறுத்து, இந்திய வரலாற்றையே ஆரிய-திராவிட வரலாறாக முன்வைத்தனர். இவர்கள்தான் மொழியியல் அடிப்படையில் இனத்தை வகைப்படுத்தியவர்கள் ஆவர். அதாவது ஆரிய மொழிகள் பேசுவோர் ஆரிய இனம், திராவிட மொழிகள் பேசுவோர் திராவிட இனம் என வகைப்படுத்தினர். இதனடிப்படையில்தான் பூலேவும், பெரியாரும் நிலை எடுத்தனர். அதாவது ஆரியர்கள் வந்தேறிகள்; படையெடுத்து வந்து இந்திய பூர்வகுடிகளை வென்று அடிமைப்படுத்தினார்கள்; ஆரிய திராவிடப் பகைமை தான் இந்திய வரலாறு என்ற காலனியாதிக்க கோட்பாட்டை ஏற்றனர். பெரியார் மற்றும் பூலேவின் வாதத்தை மறுத்து அம்பேத்கார் சரியான நிலையை எடுத்தார்.

காலனிய இனவாதத்தை மறுக்கும் அம்பேத்கார்

அம்பேத்கார் இது குறித்து “சூத்திரர் யார்?” என்ற நூலில் விரிவாக பின்வருமாறு கூறுகிறார்:

1) ஆரிய இனக் கோட்பாடு அதன் ஒவ்வொரு அம்சத்திலும் தோல்வியடைந்து வருகிறது. அது அறிவியல் கண்டுபிடிப்புகளின் வக்கிரம்.

2) ஆரிய இனம் போன்ற எத்தகைய இனத்தையும் வேதங்கள் அறிய மாட்டா.

3) ஆரிய இனம் இந்தியாவின் மீது படையெடுத்துவந்து இந்தியாவின் பூர்வகுடிகளான தாசர்கள் மற்றும் தஸ்யூக்களை வென்று கீழ்படுத்தினார்கள் என்பதற்கு வேதங்களில் எவ்விதச் சான்றுகளும் இல்லை.

4) ஆரியர்கள், தாசர்கள், தஸ்யூக்கள் இடையிலான வேறுபாடு இன வேறுபாடு என்பதற்கான சான்றுகள் இல்லை.

5) ஆரியர்கள் மேனி வண்ணத்தில் தாசர்கள் தஸ்யூக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்ற வாதத்தை வேதங்கள் ஏற்கவில்லை.

Dr Ambedkar rejected Aryan Invasion Theory with facts and logic

மேலும் “மொழிக் குடும்பம் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் இனக்கோட்பாடு தவறு. இவை அனைத்தும் புராணக் கதைகளின் அடிப்படையில் பேசுவது; அறிவியல் பூர்வமானதல்ல. இது இன வகைப்பட்டதல்ல” என்று இந்த நிலைபாட்டை எதிர்க்கிறார். மேலும் ரிஸ்லே என்பவர் “வர்ணம்-சாதியே இனம்” என்ற கோட்பாட்டை முன்வைத்தார் (H H Risley 1841, 259). அதையும் அம்பேத்கார் மறுக்கிறார். “சாதியே இனமாகாது; மாறாக சாதி சமூக வகைப்பட்டது” என்கிறார். “பஞ்சாபைச் சேர்ந்த பார்ப்பனருக்கும் மதராஸைச் சார்ந்த பார்ப்பனருக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? அதேபோல் மதராஸைச் சேர்ந்த பார்ப்பனரும் பறையரும் ஒரே மரபினம் தான்” என மறுக்கிறார். ஆனால் அம்பேத்காருடைய ஆய்வு முறையானது மதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பொருளியல் அடிப்படையில் அவர் ஆய்வு செய்யவில்லை. இருப்பினும் அம்பேத்கார் சாதியை இன வகையாகப் பார்க்காமல் சமூக வகையாகவே பார்க்கிறார். இது ஒரு சரியான அம்சமாகும். ஆனால் அவரும் தன்னுடைய ஆய்வு முறையில் சமூக பொருளாதார ஆய்வு முறைகளை எடுத்துக்கொள்ளாமல் மதத்தையும், மத இலக்கியங்களையும் மட்டுமே எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யும் முறையை மேற்கொள்கிறார். அவர் எண்ணமுதல்வாத முறைகள் மூலமே ஆய்வு செய்கிறார். இருப்பினும் இனவாதக் கோட்பாட்டை மறுப்பதன் மூலம் ஒரு நேர்மறையான பாத்திரம் வகிக்கிறார்.

காலனிய இனவாதத்தின் விளைவே ஆரிய மாயை திராவிட மாயை

1) ஆரிய மாயையால், காங்கிரஸில் திலகர் முதல் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையார் வரை, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும், பிற்போக்கையும் நிலைநாட்டினார்கள்.

2) ஆரிய மேன்மை, தூய இனவாதத்தால் உருவான ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்துத்துவம், ஜெர்மன் பாசிசத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு இந்துத்துவப் பாசிசமாக வடிவம் பெற்றது. இந்து என்பவன் யார்? என்ற பிரசுரத்தில் சாவர்க்கர் தரும் விளக்கம் வருமாறு:

“இந்து என்பவன் இந்தியாவை தந்தை நாடாகவும் (பித்ரு பூமி) புனித நாடாகவும் கருதவேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் புனித பூமி அரேபியாவிலும், பாலஸ்தீனத்திலும் இருப்பதால், அவர்கள் பித்ரு பூமியை புண்ணிய பூமியாக கருத இயலாது. கம்யூனிஸ்டுகளுக்கு நாடென்பதே கிடையாது. ஆகவே இவர்களை வெளியேற்றவேண்டும்.”

அதன் பிறகு, 1930களில், ஜெர்மன் மற்றும் இத்தாலிய பாசிச சக்திகளுடன் கூட்டு வைத்தது இந்த கும்பல். இனத்தூய்மை எனும் பெயரில் யூதர்களைக் கொன்றொழித்தது போலவே, இங்கு இஸ்லாமியர்களைக் கொன்றொழிக்கவேண்டும் என்று கோல்வால்கர் கூறுகிறார். இதை “நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல்” எனும் நூலில் அடால்ப் ஹிட்லர் பாணியில் அவர் விளக்குகிறார்:

“இன்று எல்லோரும் ஜெர்மனியின் தேசிய கர்வத்தைப் பற்றி பேசுகிறார்கள். தன் தேசிய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்கவைத்துக்கொள்ள, ஜெர்மனி செமிட்டிக் இனங்களை (யூதர்களை) அழித்து உலகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அங்கே மிக உயர்ந்த அளவில் தேசிய கர்வம் காணப்படுகிறது. அடிப்படையில் வேறுபாட்டை கொண்டுள்ள இனங்களும் கலாச்சாரங்களும் ஒற்றுமையுள்ள ஒரே அமைப்பாக சேர்ந்து வாழ்வது அநேகமாக முடியாது என்பதையே ஜெர்மனி எடுத்துக் காட்டுகிறது. இந்துஸ்தானில் இருக்கும் நமக்கு கற்கவும் லாபம் அடையவும் அது ஒரு நல்ல பாடம்.”

இந்த பிற்போக்கான தத்துவத்தைக் கொண்டே இசுலாமியர்களைக் கொன்றொழித்து வருகிறது இந்தக் கும்பல்.

3) திராவிட மாயை மற்றும் திராவிட இனவாதத்தின் விளைவாக தமிழ் தேசிய இனத்திற்கும், அதன் சுயநிர்ணய உரிமைக்கும் பெருங்கேடு ஏற்பட்டது. பெரியார், காங்கிரசில் இருந்தபொழுது தேசியவாதியாக இருந்தார். அக்கட்சியில் இருந்த பிற்போக்குத்தனம் மற்றும் பார்ப்பனிய ஆதிக்கத்தால் வெளியேறி சுயமரியாதை இயக்கம் துவங்கினார். வர்ணாசிரம எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை போன்ற அவரது நடவடிக்கைகள் சரியான ஒன்றே ஆகும். பிறகு சிங்காரவேலர் மற்றும் ஜீவாவின் நட்பால் சோஷலிச சமதர்ம கருத்துகள் பேசத்துவங்கினார். ரசிய பயணத்திற்குப் பிறகு அது தீவிரமடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு சென்றார். இதுவும் அவரின் சரியான அம்சமே ஆகும். சீர்திருத்தவாதியாக இருந்தவரை அவரை அனுமதித்த பிரிட்டிஷ் அரசு, அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகளை அனுமதிக்கவில்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோஷலிசக் கருத்துகளை அவர் கைவிட்டார். பிறகு நீதிக்கட்சியில் இணைந்து ஏகாதிபத்திய தாசராக மாறினார். சமதர்மப் பாதையைக் கைவிட்டதற்கான காரணம் குறித்து பெரியார் இவ்வாறு கூறுகிறார்:

“சர்க்கார் வலிமையானது. அது நம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் இனி புத்தியுடன் செயல்படவேண்டியுள்ளது. ....ஆகவே சுயமரியாதை இயக்கமே இன்றைய தேவை. ....இது ஜீவா மற்றும் சிங்காரவேலருக்கு பிடிக்காது. என்ன செய்வது? வேறு வழி இல்லை”

என தனது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தினார். இவ்வகையில் காவுத்ஸ்கி, பிரசந்தா, பெரியார் மூவரும் ஒன்றே. தனது ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு பின்வருமாறு விளக்கம் தந்து, தனது சுயமரியாதையின் வர்க்கப் பண்பை வெளிப்படுத்துகிறார்:

“வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலை விட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட கால்-சுத்தமாக இருக்கும். இதை நக்குவதைவிட அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் தனக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்து பதில் சொன்னார்.” (வீரமணி, மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர். தி.மு.க வெளியீடு.பக்கம் 65) ஆம்! கொள்கையைத் துறப்பதற்கும் துணிவு வேண்டும் அல்லவா?

ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் இரத்தச் சரித்திரம் எழுதிக் கொண்டிருந்த பொழுது, நீதிக்கட்சியும், ஆர்.எஸ்.எஸ்-சும் எச்சில் சரித்திரம் எழுதிக் கொண்டிருந்தன.

இங்கு ஏற்கனவே நிலவிவந்த பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் பூசல், கால்டுவெல் வருகைக்கு பின்பே ஆரிய-திராவிட இனவாத வடிவம் பெற்றது. இரண்டுமே காலனி ஆதிக்க அடிமைத் தத்துவங்களே. கற்பனையான பழைய பிற்போக்கு பைபிள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு காலனி ஆதிக்கவாதிகள் உருவாக்கிய இந்த ஆரிய-திராவிட இனவாதத் தத்துவங்களை நீதிக்கட்சியும், பெரியாரும், அண்ணாதுரையும் வரித்துக் கொண்டனர்.

இந்த திராவிட இனவாதம்தான், இந்தியாவை மூன்றாகப் பிரிக்கும் இந்துஸ்தான், திராவிடஸ்தான், பாகிஸ்தான் எனும் இனவெறிக் கோட்பாடுகளுக்கு இட்டுச்சென்றது. பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்ட பிறகு, மொழிவழி மாநிலம் அமைந்தது. பொது மொழியும் பிரதேசமும் அற்ற திராவிட தேசியம் காலாவதியான பிறகு அண்ணா துரையால் திராவிட இனவாதம் பின்வருமாறு மறுவரையறை செய்யப்பட்டது: “வர்ணாசிரமத்தை ஏற்பவர்கள் ஆரியர்கள். ஏற்காதவர்கள் திராவிடர்கள்” என முன்வைக்கப்பட்டது.

குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே! - பகுதி-1

குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே! - பகுதி-2

இவ்வாறு, காலனியாதிக்க ஆதரவு திராவிட மரபினவாதம், தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் பெருங்கேடு ஏற்படுத்தியது. இந்தி மொழி எதிர்ப்பு எனும் பெயரில் Hindi Never English Ever என்று ஆங்கில மொழி அடிமைத்தனத்திற்கும், ஆங்கில மொழியை நிலையான ஆட்சி மொழியாக்கும் நிலைக்கும் இட்டுச் சென்றது. மேலும் செம்மொழி எனும் கூப்பாடு தமிழுக்கு இவர்கள் செய்த துரோகத்தை மூடிமறைப்பதேயாகும். திராவிடக் கட்சிகள் இந்துத்துவப் பாசிச கும்பலுடன் கைகோர்த்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என காலனி ஆதிக்கத்திற்கு சேவை செய்கின்றன.

ஆகவே, ஆரிய-திராவிட மாயை இரண்டுமே அன்றும் இன்றும் என்றும் காலனிய இனவியலுக்கு சேவை செய்பவையே ஆகும். அன்று பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு சேவை செய்தன; இன்று அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் சேவை செய்கின்றன. வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றன. ஆரியம் திராவிடம் இரண்டும் ஏகாதிபத்தியம் கள்ளத்தனமாக ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் ஆகும். ஒன்று வெள்ளைக் குழந்தை; இன்னொன்று கருப்புக் குழந்தை. ஒன்று காவி மடம்; இன்னொன்று கருப்பு மடம். இவையிரண்டையும் முறியடிப்பதன் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்க தேசியத்தை கட்டியமைக்க முடியும்; கட்டியமைக்க வேண்டும்.

- ஏ.எம்.கே