குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே! - பகுதி-2

உலகமய, தாராளமய கொள்கைகளுக்குச் சேவை செய்வதில் குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே!

குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே!  - பகுதி-2

(பகுதி-1 ன் தொடர்ச்சி)

மாநில கல்வி கொள்கை - விதேசிய கல்வி கொள்கையின் மொழிபெயர்ப்பு

தமிழகத்தில் 2021 இறுதியில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் "இல்லம் தேடிக் கல்வி" என்ற திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார். கொரோனா நோய் தொற்றினால் பள்ளிக் குழந்தைகளின் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறி வந்தாலும் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட அகஸ்தியா (Agastya International Foundation) என்ற பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்திற்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளது. இது ஆர்.எஸ்.எஸ்-ன் அமைப்புகளான சேவா பாரதி - வித்யாபாரதி நடத்தி வரும் ஏகல் வித்யாலயா கல்வித் திட்டத்தின் அடிப்படையைக் கொண்டுள்ளது

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளையும் பெற்றோர் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் பள்ளி மேலாண்மை குழுவை உருவாக்கியுள்ளது. பள்ளிகளின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து விலகி வருகிறது அரசு. இடைக்கால பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது. குறிப்பிட்ட கட்டத்திற்குமேல், பள்ளி மேலாண்மை குழுவால் பராமரிக்க முடியாத சூழலில் தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் கல்வி முழுவதும் தானாகவே கைமாறும். கல்வியில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களைப் புகுத்திவிட்டு, தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு என மோசடி செய்கிறது. மேலும், தேசியக் கல்விக் கொள்கையின் படி, 3, 5, 8, 10 ஆகிய வகுப்புகளுக்குத் தகுதித் தேர்வு (NAS – National Achievement Survey - Exam) நடத்தவும், பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களின் கிளைகள் தமிழ்நாட்டில் திறக்கப்படும் எனவும் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 

ஒருபுறம், கடந்த அதிமுக ஆட்சியை போலவே திமுக ஆட்சியிலும் தனுஷ், கனிமொழி, சௌந்தர்யா என நீட் படுகொலைகள் தொடர்கின்றன. மறுபுறம், நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களும் பயனடைகின்றனர் என்ற மாயையை ஊடகங்கள் மூலம் தோற்றுவித்து அதை நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. உண்மையில், நீட் தேர்வு பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்காக உலக வர்த்தக கழகத்தால் திணிக்கப்பட்டது. அது உழைக்கும் வர்க்கங்களுக்கு நன்மை பயிர்க்காது.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நாடகமாடி, இல்லம் தேடி கல்வித் திட்டம், ஏகலைவர் உண்டு-உறைவிட பள்ளிகள், மாதிரி பள்ளிகள், 10 மற்றும் 12 ம் வகுப்பினருக்கு கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள், எண்ணும் எழுத்தும் திட்டம், தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தும் பயிற்சி திட்டம் உள்ளிட்ட அதன் ஒவ்வொரு திட்டத்தையும் மறைமுகமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த திமுக அரசு இன்று அதையே மாநில கல்விக் கொள்கையாக மொழிபெயர்த்துள்ளது.

மொழிக்கொள்கையிலும், அடிப்படை ஜனநாயக உரிமையான தாய்மொழிக் கொள்கை - ஒரு மொழிக்கொள்கைக்குப் பதிலாக இந்தித்திணிப்பை மட்டும் எதிர்த்து இருமொழிக்கொள்கை எனும் பெயரில் ஏகாதிபத்திய ஆங்கில அடிமைத் தனத்திற்குச் சேவை செய்து வந்தது. தற்போது மாநில கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியை விருப்ப பாடமாக தேர்ந்தெடுப்பதன் மூலம் மறைமுகமாக இந்தி மொழி திணிப்பையும்  அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.  

கல்வி மருத்துவத்தை மாநில பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சிக்காமல் நீட்விலக்கு மசோதா, பல்கலைக் கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான மசோதா நிறைவேற்றுவது போன்றவை கிடப்பில் போடப்படும் என்று தெரிந்தே சட்டவாத மாயைகளில் மக்களை ஆழ்த்துகிறது.

உள்ளடக்கம்தான் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்பதற்கு பொருத்தமாக புதிய காலனிய உற்பத்தி முறைக்கு ஏற்ற கல்விக் கொள்கையை உருவாக்கி, கல்வியையும் மாணவர்களையும் சந்தையின் பண்டங்களாக மாற்றியுள்ளது. இவ்வாறு தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட்மய கல்வி கொள்கையை அமல்படுத்தி ஏகாதிபத்திய அடிமைத்தனத்தில் மோடிகும்பலுடன் போட்டி போடுகிறது திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் அரசு.

இந்துத்துவ பாசிசத்துடன் சமரசவாதத்தைக் கடைபிடிக்கும்  'சமூக நீதி' திமுக அரசு

மோடி அரசு, தான் அமல்படுத்திவரும் தேச விரோதக் கொள்கைகளுக்கெதிரான மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு உழைக்கும் மக்களை சாதி - மத ரீதியில் பிளவுபடுத்தி நாடெங்கும் இந்துத்துவ பாசிசத்தைக் கட்டியமைத்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்துத்துவ பாசிச பாஜக கும்பலுக்கு மாற்றாக திருத்தல்வாதிகளால் தாங்கிப்பிடிக்கப்பட்ட திமுக அரசு புதிய காலனியப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமின்றி மதத்துறையிலும் இந்துத்துவ பாசிசத்துடன் சமரசவாதத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு வால் பிடித்த கருணாநிதியை போலவே மு.க.ஸ்டாலின் அரசும் பின்வருமாறு இந்துத்துவத்திற்குச் சேவை செய்கிறது

• இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 340 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மதத்தை கல்வியிலிருந்து பிரிக்க வேண்டும் எனும் ஜனநாயக கோரிக்கையையும் சமூக நீதியையும் காற்றில் பறக்கவிட்டு அறநிலையத் துறை மூலம் கல்லூரிகள் துவங்கி இந்து மதவாதத்தை புகுத்துகிறது

• கோவில்களின் சொத்துகளை மீட்பதாக கூறி இந்துத்துவத்திற்கு தீவிர சேவை செய்கிறது, இருப்பினும் ஜக்கி போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் வளர்ச்சிக்கு எவ்வித பங்கமும் வராமல் பார்த்து கொள்கிறது

• அரசு விழாக்களில், ஆர்.எஸ்.எஸ்.ன் சேவாபாரதி உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளை அழைத்து பூஜையில் ஈடுபடுவது மற்றும் பல்வேறு துறைகளில் அவற்றுடன் இணைந்து செயல்படுவது

• பாரத் மாதாவிற்கு சிலை திறந்து அழகு பார்ப்பது

•மதக்கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சிக்கு அனுமதியளிப்பது

• அரியலூர் மாணவி லாவண்யா மரணத்தையொட்டி மதக்கலவரத்திற்கு தூபமிட்ட வானதி சீனிவாசன், அர்ஜூன் சம்பத், அண்ணாமலை உள்ளிட்ட சங்பரிவார கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பாதுகாப்பது

• கோவையில், காந்தியின் நினைவு நாளில் அவர் கோட்சேவால் கொல்லப்பட்டார் என்று பேசிய சிபிஎம் கட்சியினரிடம் காவல்துறையில் உள்ள கோட்சேவின் வாரிசுகள் அராஜகமாக நடந்துக் கொண்டதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. மறுபுறம் தொடரும் லாக்கப் படுகொலைகள், ஜனநாயக சக்திகள் மீது ஒடுக்குமுறையை ஏவி விடுவதன் மூலம் காவல்துறையை பாசிசமயமாக்கி வருவது

• கர்நாடகாவில் ஹிஜாப் தடை, வர்த்தக தடை உள்ளிட்ட இசுலாமியர்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்பாமல் மௌனம் காத்து வருவது 

• திமுக அரசின் அமைச்சர்கள் நாங்களும் இந்துக்கள்தான் இந்து மதத்திற்கு எதிரானவர்களல்ல எனக்கூறி கார்ப்பரேட் சாமியார்களிடம் ஆசி பெறுவது.

• தருமபுர ஆதினத்துக்கு சங் பரிவாரங்களுடன் சேர்ந்து பல்லக்கு தூக்குவது

கடவுள் மறுப்புக் கொள்கையில், பெரியாரையும் கூட தூக்கியெறிந்துவிட்டு இந்துத்துவாவிற்கு பல்லக்குத் தூக்கும் இந்த திமுக அரசைத்தான் போலி முற்போக்காளர்கள் மதச்சார்பற்ற அரசு என துதிபாடுகின்றனர். ஆகம விதிகளுக்கான அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்கப் போராடாமல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் என்பதும் கூட கண் துடைப்பே ஆகும். 

திராவிட மாடல் திமுக அரசு அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசு எனக் கூறிக் கொண்டாலும் பெரியாரின் நீதிக்கட்சியின் பரிணாமமாக பார்ப்பனர், தாழ்த்தப்பட்டோர் அல்லாத இடைநிலை ஆதிக்கச் சாதிகளிலுள்ள மேட்டுகுடிகளுக்கான கட்சியாகவும்தான் இன்றும் இருந்து வருகிறது. அதனடிப்படையிலேயே தாழ்த்தப்பட்டோர் மீதான சாதி வெறி தாக்குதல்களை தலைமையேற்று நடத்தி வருகிறது

• கும்பகோணம் பந்தநல்லூரில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர் பிராபகரனை படுகொலை செய்த வன்னிய ஆதிக்க சாதிவெறி திமுக சீத்தாபதியை பாதுகாத்தது, அதற்கெதிரான இயக்கங்களை பாசிச ரீதியில் ஒடுக்கி வருவது.

• கன்னியாகுமரி தோவாளையில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர் சுரேஷ்குமாரை படுகொலை செய்த கும்பலை பாதுகாப்பது.

• தொடரும் ஆணவப்படுகொலைகளுக்கு காரணமான சாதிவெறி அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் கும்பலை தடை செய்யாமல் அவைகளை பயன்படுத்துவது.

இவ்வாறு மோடி கும்பலால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்துத்துவ பாசிசத்திற்கு திராவிட மாடலும் 'சமூக நீதி' வேடமிட்டுக் கொண்டு சேவைச் செய்தே வருகிறது. மறுபுறம் சாதிய மோதல்களை தானே தலைமை தாங்கி நடத்துகிறது. இதைத்தான் இந்துத்துவ பாசிசத்திற்கு மாற்று திமுக தவிர ஏதுமில்லை எனக் கூறி திருத்தல்வாதிகள் பலர் முட்டுக்கொடுத்தனர். சங் பரிவாரங்களுக்கு  திமுக பல்லக்கு தூக்குகிறது, திமுகவிற்கு திருத்தல்வாதிகள் பல்லக்கு தூக்குகின்றனர்.    

மத்திய-மாநில அரசு மாடல்களின் வர்க்க நலன்

மத்திய அரசு அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களிலிருந்தும் இந்திய தரகு பெரும் முதலாளித்துவ வர்க்க நலன்களிலிருந்தும் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. அம்பானியும் அதானியும் உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்துள்ளனர். கொரோனா கால நெருக்கடியிலும் கூட மக்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்கு கடுமையாகப் போராடி வந்த சூழலில் அம்பானி, அதானி, டாட்டா கும்பலின் சொத்துமதிப்பு மட்டும் விண்ணைதொடும் அளவுக்கு உயர்ந்தே வந்துள்ளது. மென்மேலும் அவர்களுக்கு கடன் தள்ளுபடி, வரிச்சலுகை அளித்து அதை பிற வர்க்கங்கள் மீது சுமத்துகிறது. உள்நாட்டு உற்பத்தியும் பொருளாதாரமும் அதலபாதாளத்தில் சென்றுள்ளது. இது ஊகவாணிப மற்றும் பங்குச்சந்தை சூதாடிகளுக்கான அரசாகவே உள்ளது.

தொழிலாளர்களை மேலும் சுரண்டி கொழுக்க கொத்தடிமைகளாய் மாற்றி வருகிறது. சிறுகுறு உற்பத்தியாளர்கள் தங்கள் மூலதனத்தை இழந்து கடன்பட்டு உற்பத்தியிலிருந்து வெளியேறி வருகின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்ததால், கடைக்கு வாடகை கூட கட்டமுடியாத சூழலில் சிக்கித் தவிக்கின்றனர் சிறு வணிகர்கள். விவசாயிகள் விலை நிலங்களிலிருந்து விரட்டப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடுத்தர வர்க்க மக்கள் பெரும் வரிச்சுமைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வால் அல்லல்படுகின்றனர். வறுமை, வேலைவாய்ப்பின்மையால் ஏழை எளிய மக்கள் இலவசங்களை நோக்கி காத்திருக்கும் நிலையில், இருக்கும் மானியங்களை வெட்டுவதுடன் இலவசத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதன் மூலம் அவர்களை நடுத்தெருவில் நிறுத்துவதோடு பட்டினி சாவுகளுக்கும் கொண்டுவிடுகிறது. மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கி அவர்களைத் தூக்கில் ஏற்றுகிறது.

அனைத்து துறைகளிலும் மத்திய அரசு அமல்படுத்தும் புதிய காலனிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டும் மாநில அரசோ, மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை சுயேச்சையான பொருளாதாரத்தை கட்டியமைக்கும் நோக்கில் எதிர்த்துப் போராட தயாரில்லை, அது அவர்களின் திட்டமும் இல்லை. மாறாக டிவிஎஸ், அமால்கமேஷன், மாறன் சகோதரர்கள், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட மாநில அளவிலான தரகு முதலாளித்துவ கும்பல்களின் நலன்களிலிருந்து தானே நேரடியாக பேரம் பேசுவதையும், அந்நிய மூலதனத்திற்கு பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்பதையும் 'சமூக நீதி' 'ஒன்றிய அரசு' என்ற கூப்பாடுகளின் மூலம் நியாயப்படுத்துகிறது. 'சமூக நீதி' என்பது முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தம் கூட இல்லை, படுமோசமான மிதவாத சீர்திருத்தம்தான். அதைக் கூட காற்றில் பறக்கவிட்டு மத்திய அரசைப் போலவே மாநில அரசும் சந்தை நலக் கோட்பாட்டை கடைப்பிடித்து உழைக்கும் மக்களுக்குத் துரோகம் இழைக்கிறது.

நாட்டை நாசமாக்கி வரும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்த தொடங்கியதே காங்கிரஸ் கட்சிதான். மாறி மாறி மோசடி முழக்கங்களை முன்வைத்து ஆட்சியிலேறிய காங்கிரஸ், பா.ஜ.க கும்பல்கள் நாட்டை மென்மேலும் அடிமைப்படுத்துவதில் தீவிரம் காட்டியே வந்தன. முதலாளித்துவ உலக பொது நெருக்கடியின் காரணமாக ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான முரண்பாடுகள் கூர்மையடைவதால், இந்தியாவில் பாசிசமயமாக்கலும் தீவிரமடைகிறது. இதற்கு காங்கிரஸ்-பாஜக கும்பல்களின் தொங்குச்சதைகளான மாநில தரகுமுதலாளித்துவ கட்சிகளும் மாறிமாறிச் சேவை செய்தே வருகின்றன.

அந்நிய நிதி மூலதனத்தால் தொழில் வளர்ச்சி ஏற்படாது புதிய ஜனநாயகப் புரட்சியே தீர்வு

இந்தியா மீதான அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் நிதி மூலதனம் மற்றும் ஊக மூலதன கும்பல்களின் ஆதிக்கம் நாட்டின் அனைத்துத் துறைகளையும், மூலப்பொருட்களையும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு வழி ஏற்படுத்தித் தந்துள்ளது. நாட்டின் உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளே இதற்கு நேரடி சாட்சியாக நம் முன்னே உள்ளது.

ஏகாதிபத்திய நிதி மூலதனம் புல்லுருவித் தனமான மூலதனமே, நிதி மூலதனம் என்றாலே பிற்போக்கு அழுகல் தன்மைக் கொண்டது என்கிறார் லெனின். சர்வதேச அளவில் ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கு இடையிலான முரண்பாடுகளும், போட்டியும், பனிப்போர் நிலைமைகளும் நிதிமூலதன நெருக்கடியின் தீவிரத் தன்மையையும் அழுகலையும் குறிக்கிறது. லாபவெறியின் அடிப்படையில் அமைந்த முதலாளித்துவ வளர்ச்சியால் ஏற்படும் மிகு உற்பத்தி நெருக்கடியானது மூலப்பொருட்களின் தேவையையும், அதற்கான போட்டியையும். வேட்கையையும் தீவிரப்படுத்துவதால் காலனிய நாடுகளில் அவற்றை கொள்ளையடிப்பதற்கான போட்டியும் தீவிரம் பெற்று வருவதே. ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலகை மறுபங்கீடு செய்வதற்கான 'பனிப்போர்' நிலைமைகள் உருவானதற்கான பொருளியல் அடிப்படையாகும். அதாவது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பது எப்போதும் தவிர்க்க இயலாதது என்பதும், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான சமாதான வழியிலான மறுபங்கீட்டு காலம் போர் நிறுத்த ஒப்பந்த காலம்தான் என்பதும் ஏகாதிபத்தியங்கள் தமது பலாபலத்தை இறுதியில் யுத்தத்தின் வாயிலாகவே தீர்த்துக்கொள்ளும் என்பதும், அதன்படியே தற்போது அமெரிக்க-நேட்டோ மற்றும் சீன-ரஷ்ய ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் 'பனிப்போர்' தீவிரமடைந்துள்ளது என்பதும் லெனினியத்தை நிதர்சனமாக்கியுள்ளது.

எனவே, ஏகாதிபத்திய நிதி மூலதனம் சுதந்திர தொழில் வளர்ச்சியை அனுமதிக்காது. நிதிமூலதனம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முதல் நிபந்தனையே தனது காலனிய நாட்டின் சுதேசிய தொழில் வளர்ச்சியை அழிப்பதுதான். தற்போது உக்ரைன் மற்றும் இலங்கையில் நம் கண் முன்னே நடந்து வரும் புதிய காலனியாதிக்க கொடூரங்களுமே நமக்கு இதை நிரூபித்து வருகின்றன. இதை விடுத்து அந்நிய நிதி மூலதனத்தால் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்பது ஏகாதிபத்திய அடிமைத்தனம் ஆகும். இவ்வாறிருக்க மோடி கும்பல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனவும் மு.க.ஸ்டாலின் கும்பல் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனவும் வாய்ச்சவடால் அடிக்கின்றன. ஏகாதிபத்திய தரகு வர்க்கக் கும்பலின் வளர்ச்சியைத்தான் ஒரு நாட்டின் வளர்ச்சியாக ஆளும் வர்க்கம் முன்னிறுத்துகிறது.

அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பலுக்கு குஜராத் மாடலை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மோடி கும்பலும், திராவிட மாடலை முன்வைக்கும் மு.க.ஸ்டாலின் கும்பலும் மண்டியிட்டுச் சேவை செய்கின்றன. இந்தப் புதிய காலனிய ஆட்சி முறையை புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் தூக்கியெறிவதுதான் சுதேசிய தொழில்துறை வளர்ச்சியை சாத்தியப்படுத்தும்.

மேலும், மோடி கும்பல் தலைமையில் கட்டியமைத்து வரும் பாசிசத்தை வீழ்த்த காங்கிரஸ்-திமுக கும்பல்களுக்கு வாலாக மாறாமல் கீழிருந்து அனைத்து அடிப்படை வர்க்கங்களுடன் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதும், மேலிருந்து பாசிச எதிர்ப்பில் ஊன்றி நிற்கும் அனைத்து ஜனநாயக சக்திகளுடன் செயல்தந்திர அடிப்படையில் ஒன்றிணைந்து போராடுவதும் இன்றைய உடனடி கடமையாக உள்ளது.

சமரன் – 2022 - ஏப்ரல்-மே இதழ்

(முற்றும்)

முந்தைய பகுதியை படிக்க...