பரந்தூர்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவின் லாபவெறிக்கும் போர்வெறிக்கும் பலியிடும் திமுக அரசு
சமரன் சிறப்புக் கட்டுரை
அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டங்கள், குவாட் உள்ளிட்ட இந்தோ-பசிபிக் திட்டங்களுக்கு இந்தியாவை (குறிப்பாக தமிழ்நாட்டை) யுத்தத்தந்திர மையமாக மாற்றி வருகிறது மோடி அரசு. இந்தியாவின் ஏனைய அனைத்து மாநிலங்களைவிட – ஏன்(?!) பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களைவிட – விரைவாக ‘திராவிட மாடல்’ எனும் பெயரில் மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் முன்முனைப்பாக செயல்பட்டு வருகிறது மு.க.ஸ்டாலின் அரசு. சமீப காலமாக அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது எனும் பெயரில் அமெரிக்காவுடன் நேரடியாகவும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக உழைக்கும் மக்களின் வாழ்வாதரங்களை பறித்தும், அவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியும் பாசிச காட்டாட்சியை நடத்தி வருகிறது. அதன் ஒரு நேரடி சாட்சியம்தான் பரந்தூர் விமானநிலையத் திட்டம்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து மக்கள் ஏன் போராடுகிறார்கள்?
சென்னையில் இருந்து 70கி.மீ தொலைவிற்குள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பரந்தூர். இந்த கிராமம் உள்பட வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், தொடரூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் ஆகிய 13 கிராமங்களின் விவசாய நிலங்கள், மக்களின் வாழ்விடங்களை பறித்து புதிய விமானநிலையத்தை அமைக்க முடிவெடுத்துள்ளது திமுக அரசு. 3500 ஏக்கர் நன்செய் விவசாய நிலம், ஏரி, குளம், கால்வாய்கள் நிரம்பிய சுமார் 5400 ஏக்கர் நிலத்தை அபகரித்து வருகிறது. இதற்கான அறிவிப்பை 2022 ஆகஸ்ட் 2ல் வெளியிட்டது. இதில் ஏகனாபுரம் கிராம மக்களின் குடியிருப்புகள் முழுவதையும் கைப்பற்றி அவர்களை பரதேசிகளாக விரட்டியடிக்க முடிவெடுத்துள்ளது. அந்த ஒரு கிராமத்தில் மட்டும் சுமார் 3000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே, இத்திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அப்பகுதி மக்கள் நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களை சேர்ந்த மக்களுடன் இணைந்து இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்; இதை எதிர்த்து 800 நாட்களுக்கும் மேலாக இரவும் பகலுமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். பல்வேறு வகையான கவன ஈர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் மின்சாரத்தைத் துண்டித்தாலும் அதனையும் மீறி மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் கூட போராட்டத்தைத் தொடர்கின்றனர். அப்பகுதியில் போலீசை குவித்து அச்சுறுத்தி போராட்டங்களை ஒடுக்குவது; கிராமங்கள் இணைந்து ஓரிடத்தில் குவிந்து போராடுவதற்கு தடை விதிப்பது; மீறினால் வழக்குப் பதிவு செய்வது போன்ற அடக்குமுறைகளில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு.
2022ம் ஆண்டு இறுதியிலேயே நிலத்திற்கு நிர்ணய விலையிலிருந்து 3.5 மடங்கு கொடுப்பதாக நைச்சியமாக பேசி காலி செய்ய வலியுறுத்தியது. அரசு எவ்வளவு இழப்பீடு அளித்தாலும் இந்த இடத்தை விட்டுப் போக முடியாது என்கின்றனர் அந்த கிராம மக்கள். "நாங்கள் பிறந்த பூமி இது. மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் 13 ஆயிரம் ரூபாய் என வழிகாட்டு மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், பக்கத்திலேயே ஒரு சதுர அடி நிலம் 4 ஆயிரம் ரூபாய்வரை விற்கிறது. ஆக இழப்பீடு என்பதை எந்த அடிப்படையில் தருவார்கள்?" எனக் கேள்வி எழுப்புகிறார் இளங்கோ எனும் கிராமவாசி பிபிசிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவிக்கிறார்.
ஏகனாபுரத்தைச் சேர்ந்த பண்டேரி என்பவர், "நான்கு தலைமுறையாக இந்தப் பகுதியில் நாங்கள் விவசாயம் செய்துவருகிறோம். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். வீட்டை வேறு கடன் வாங்கிக் கட்டிவிட்டோம். நிலத்தையும் வீட்டையும் எடுத்துக்கொண்டால் அம்போவென போய்விடுவோம். இதையே நினைத்துக்கொண்டிருப்பதால் இரவெல்லாம் தூக்கமில்லை. இதுவரை அரசாங்க அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ வந்து எங்களைப் பார்க்கவில்லை. கொரோனா காலகட்டத்தில்கூட நிலமிருந்ததால் பசியில்லாமல் இருந்தோம். எங்களை இங்கிருந்து அடித்து விரட்டினாலும் செத்துப் போவோமே தவிர, ஊரைவிட்டுப் போகமாட்டோம்" என்கிறார் அவர்.
ஆனால் அம்மக்களின் போராட்டங்களை துச்சமாக கருதி நிலத்தைப் பறிக்கும் செயலை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது மு.க.ஸ்டாலின் அரசு.
நிலங்களை பறித்து மக்களை பரதேசிகளாக்குவதை சட்டபூர்வமாக்கியுள்ளது
மக்கள் ஒன்றுதிரண்டு போராடுவதை தடுக்க நிலங்களை முழுவதுமாக கையகப்படுத்தாமல் பகுதி பகுதியாக கைப்பற்றி வருகிறது. முதலில் சிறிய அளவில் நிலங்கள் தேவைப்படும் பகுதிகளை குறிவைத்து மக்களை காலி செய்து வருகிறது. சிறுவள்ளூர், அக்கமாபுரம், பொடவூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணைகள் ஏற்கெனவே வெளியிட்டுவிட்டது. நிலங்களை கைப்பற்ற மக்களிடம் அனுமதி கேட்பதோ; கிராம சபைகளை கூட்டி பேசுவதோ கூட கிடையாது. நேரடியாக நிலங்களை அரசு எடுத்துக் கொள்ளும் என அரசாணை வெளியிட்டுவிட்டு அபகரித்துக் கொள்ளும்; அதை காண்பித்து மக்களை விரட்டியடிக்கும்; தனி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் எழுத்துப் பூர்வமாக கொடுத்துவிட்டு, மக்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுதான் வழக்காட முடியுமே தவிர அரசை நிர்பந்தித்து போராட முடியாது என்ற அவலநிலையை உருவாக்கியுள்ளது. அதை எதிர்த்து மீறிப் போராடினால் தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யும் அளவுக்கு கொடிய ஏற்பாடுகளை செய்துள்ளது திமுக அரசு. அதற்கென்றே பிரத்தியேக அவசர சட்டத்தை - தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டத்தை (Tamilnadu Land Consolidation (for special projects) Act) - சென்ற ஆண்டு ஏப்ரலிலேயே சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. தமிழக அரசின் நீட் விலக்கு உள்ளிட்ட பல கோப்புகளை நிராகரித்து திருப்பி அனுப்பி நாடகமாடிய ஆளுநர், இந்த கொடிய தீர்மானத்திற்கு மட்டும் உடனடியாக அனுமதி அளித்தார்; அது கடந்த ஆண்டு அக்டோபரிலேயே அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கார்ப்பரேட்கள் தொழிற்கூடாரங்களை தொடங்குவதற்கும் அதற்கு தேவையான கனிம வளங்களை தங்குதடையின்றி சுரண்டுவதற்கும் பாசிச முறையில் இச்சட்டத்தை அமல்படுத்த துவங்கிவிட்டது திமுக அரசு. நீர் நிலைகள், வேளாண் பகுதிகளை கார்ப்பரேட்கள் கைப்பற்ற இருந்த சிற்சில தடைகளையும் உடைத்துள்ளது இந்த சட்ட மசோதா. எந்த ஒரு கார்ப்பரேட்டும் 100 ஹெக்டேருக்கு (247 ஏக்கர்) மேலாக தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்தால் மட்டும் போதுமானது. அதில் உள்ள நீர் நிலைகள், வேளாண் பகுதிகள், கனிம வளங்கள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் என அனைத்தையும் அப்படியே தாரை வார்க்க வகை செய்துள்ளது. நிலங்கள் பறிபோவது குறித்து அவர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் அது சட்ட விரோதமாக கருதி அவர்கள் மீது தேச விரோத சட்டங்களும் பாயும் அபாயத்தையும் கொண்டுள்ளது இச்சட்டம். எனவேதான், பகுதி வாழ் மக்களிடம் கலந்தாலோசிக்காமலேயே பல கார்ப்பரேட் நலத் திட்டங்களை இந்த மத்திய –மாநில ஆட்சியாளர்களால் சட்டபூர்வமாகவே அமல்படுத்த முடிகிறது. இந்த மக்கள் விரோத சட்டத்தை நடைமுறைப்படுத்தியே மக்களை அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து -வாழ்விடங்களை பறித்து பரதேசிகளாக விரட்டியடிக்கிறது. இச்சட்டத்தை அமல்படுத்தியே பரந்தூர் வாழ் மக்களையும் விரட்டியடித்து வருகிறது இந்த மக்கள் விரோத அரசு.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் தேவை என்ன?
பரந்தூரில் விமான நிலையத்தை 20000 கோடி ரூபாய் செலவில் கட்டி முடித்து 2030க்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்தது. தற்போது அது சுமார் 33000 கோடி ரூபாய் அளவுக்கு ஆகும் என மறுமதிப்பீடு செய்துள்ளது. அவ்வளவு செலவு செய்து - மக்களின் வாழ்வாதாரங்களை பறித்து - அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏன் திமுக அரசுக்கு வந்தது?
அதற்கு அரசு தரப்பு கூறும் காரணங்கள்
• வரும் காலங்களில் அதிக பயணிகளைக் கையாள வேண்டிய சூழல் ஏற்படும்; அதனால் ஆண்டுக்கு பத்து கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
• சென்னை நகரம் தொழில்நுட்பம், உற்பத்தி உள்ளிட்ட பிற துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து வருவதால் பெரிய விமான நிலையம் அவசியம்
• பெரிய அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள்வதற்கு தற்போது உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இடம் நெருக்கடியாக உள்ளது மேற்கொண்டு 300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது
போன்ற காரணங்களை கூறி புதியதாக அமைக்கவுள்ள விமான நிலையத்தில்
• 4கி.மீ நீளமுள்ள 2 இணையான விமான ஓடுதளங்கள்
• 3 பயணிகள் விமான முனையங்கள்
• 25லட்சம் சதுர அடியில் சரக்கு முனையம்
ஆகியவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக திமுக அரசு கூறுகிறது.
மோடி அரசின் “கதிசக்தி” திட்டங்களின் பகுதியே பரந்தூர் விமான நிலையத் திட்டம்
அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டங்கள் இந்தியாவில் கதிசக்தி திட்டம் எனும் பெயரில் பாரத்மாலா, சாகர்மாலா, உதான் உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், ரயில்வேத் தடங்கள் ஒருங்கிணைந்த வலைபின்னல் போல மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பன்னாட்டு உள்நாட்டு தரகுமுதலாளித்துவ கும்பல்களுக்கும் ஏதுவாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை, டாட்டா, அதானி, அம்பானி போன்ற பெரும் கார்ப்பரேட்களின் கையில் பொருளாதாரத்தை மையப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அகமதாபாத், லக்னோ, மங்களூரு, மும்பை, நவி மும்பை, கவுகாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் அதானியிடமும்; மகாராஷ்டிராவிலுள்ள 5 விமானநிலையங்கள் அம்பானியிடமும், டெல்லி, ஜாம்செட்பூர், நொய்டா உள்ளிட்ட விமானநிலையங்கள் மற்றும் ஏர்-இந்தியா விமானங்கள் முழுவதும் டாட்டாவிடமும் தாரை வார்க்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் காரைக்கால், காட்டுப்பள்ளி, எண்ணூர், கேரளாவில் விழிஞ்சம், குஜராத்தில் முந்த்ரா, தனா, தாஹேஜ், ஹஜீரா, கோவாவில் மொர்முகாவோ, ஒடிசாவில் தம்ரா ஆகிய துறைமுகங்கள் அதானியிடமும், மும்பை, நவி மும்பை, ரேவாஸ், ஜாம்நகர் உள்ளிட்ட துறைமுகங்கள் அம்பானியிடமும், குஜராத் பைபவவ், மேற்கு வங்க சபர்நரேகா, ஒடிசா கோபால்பூர் ஆகிய துறைமுகங்கள் டாட்டாவிடமும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் மென்மேலும் பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு இந்த தரகுமுதலாளித்துவ கும்பல்களின் கையிலும் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல் கையிலும் ஒப்படைக்கும் வகையில் கதி சக்தி திட்டத்தை துரிதமாக நிறைவேற்றி வருகிறது மோடி அரசு.
இந்த திட்டங்கள் மூலம் மக்களின் பயண நேரத்தையும் செலவையும் குறைக்கப் போவதாக மோடி அரசு கதையளக்கிறது. ஆனால் இந்த திட்டங்கள் உண்மையில் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் கொள்ளை நலன்களுக்காகவும் வர்த்தக நலன்களுக்காகவுமே உருவாக்கப்பட்டு வருகின்றன. டாட்டா, ஜிண்டால், வேதாந்தா போன்ற கும்பல் இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் அரிய கனிம வளங்களையும் மூலப்பொருட்களையும் கொள்ளையடிக்கவும், ஏகாதிபத்திய - கார்ப்பரேட் நலன்களுக்கு ஏற்றவாறு உள்நாட்டு உற்பத்தியை மாற்றியமைக்கவும், இறக்குமதி பொருட்களை இங்கு கொட்டிக் குவிக்கும் சந்தை நலன்களுக்காகவுமே இவை உருவாக்கப்படுகின்றன. இதில் மக்கள் நலன் – வளர்ச்சி என்பது துளியும் இல்லை. இதன் ஓர் அங்கமே பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம்.
குவாட் கூட்டமைப்பில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொள்ளைத் திட்டங்கள் அனைத்துக்கும் பசுமை முகமூடி அணிந்து ஏமாற்றி வருகிறது. பசுமை ஆற்றல், பசுமை உற்பத்தி, சேலம் –சென்னை பசுமைவழி சாலைத் திட்டம், பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் என மோசடி பெயர்கள் இட்டு ஏமாற்றி வருகிறது திமுக அரசு. வேளாண் நிலங்களையும், காடுகளையும், நீர்நிலைகளையும் அழித்து விட்டு எங்கே இருக்கிறது பசுமை? மிச்ச மீதமிருக்கும் பசுமையையும் பசுமை என்ற பெயராலேயே ஒழித்துக் கட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டங்களை பாரத்மாலா, சாகர்மாலா, உதான், கதிசக்தி எனும் பெயர்களில் மோடி அரசு அமல்படுத்துகிறது என்றால் பசுமை, யாதும் ஊரே போன்ற பெயர்களில் அத்திட்டங்களை தமிழகத்தில் துரிதமாக நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் கார்ப்பரேட் அரசு.
இன்றைய உலகளாவிய அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான செமிகண்டக்டர் உள்ளிட்ட உதிரிப் பாகங்கள், போர்விமானங்கள் மற்றும் ஆயுத தளவாடங்களின் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான கேந்திர மையமாக (hub) இந்தியாவில் தமிழ்நாடு மாற்றப்பட்டு வருகிறது. வளர்ச்சி எனும் பெயரில் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக – அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் லாபவெறிக்கும் போர்வெறிக்கும் தமிழ்நாடு பலியிடப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளை மட்டுமல்லாது; சரக்குகளை கையாளும் திறன் கொண்ட, சிறப்பு பொருளாதார மண்டலங்களுடனும் இராணுவ முகாம்களுடனும் இணைக்கப்பட்டதொரு வலுவான வலைபின்னல் கட்டமைப்பு தேவைப்படுகிறது. அத்தகைய கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த துடித்து வருகிறது திமுக அரசு.
பரந்தூரை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன?
ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியுள்ள பகுதிகள் வாகன, மின்னணு, தகவல் தொழில்நுட்பம், மற்றும் ஆயுத தளவாட உதிரிப் பாகங்களின் ஹப் ஆக மாற்றப்பட்டு வருகிறது. ஏற்கெனவே செமிகண்டக்டர், மின்னனு வாகனங்கள், மின்கலன்கள் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில கட்டமைப்புத் திட்டங்களையும் அப்பகுதியில் நிறுவ துவங்கியுள்ளது. அவற்றுள் சில:
• மப்பேடில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வரும் பலதரப்பட்ட தளவாட பூங்கா (Multimodal logistics park)
• வல்லம் வடகலில் அமைக்கப்பட்டு வரும் பலதரப்பட்ட ஆளில்லா போர் விமானம் – டிரோன் பரிசோதனை மையம் (Unmanned Aerial systems test facility and Drone Avionics Research and Testing centre)
• ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டு வரும் அதி நவீன போர்விமானங்களை பரிசோதிக்கும் மையம் பாதுகாப்பு கருவிகளையும் தளவாடங்களையும் வடிவமைக்கும் ஏரோஸ்பேஸ் பூங்கா (Electronic warfare test foundation at Aerospace park)
போன்றவற்றை அமைத்து வருகிறது.
அரக்கோணத்திற்கும் தக்கோலத்திற்கும் இடையே இந்திய கப்பற்படையின் போர்விமான தளம் (INS Rajali) அமைந்துள்ளது. (இது இரண்டாம் உலகபோரின்போது போருக்கான இராணுவத் தளமாக நிறுவப்பட்டு செயல்பட்டது. ஆசியாவிலேயே மிக நீளமான ஓடுதளம் கொண்ட கப்பற்படை போர்விமான தளமாக இது விளங்குகிறது.). அடுத்தபடியாக, தக்கோலத்தில், மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின் (CISF) மிகப்பெரிய முகாம் உள்ளது. தக்கோலத்திற்கும் ஸ்ரீபெரும்புதூருக்கும் மையமாக அமைந்திருக்கும் நிலப்பரப்பாக, இவற்றை இணைக்கும் மையப்புள்ளியாக சென்னை – பெங்களூர் (அல்லது வட இந்தியா) தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது பரந்தூர். இதன் காரணமாகவே, பரந்தூரை பசுமை விமானநிலையம் அமைக்கத் தேர்ந்தெடுத்துள்ளது திமுக அரசு.
எனவே, பரந்தூர் விமான நிலையம் பயணிகள் விமான நிலையமாக மட்டுமல்லாமல், அனைத்து விதமான தளவாடங்களையும் கையாளும் ஏரோஸ்பேஸ் ஹப் –ஆகவும், அமெரிக்காவின் போர்வெறிக்கு சேவை செய்யும் போர்விமானத் தளமாகவும் உருவாக்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகத்தின் (TIDCO) கிளை அமைப்பான தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம் (Tamilnadu Defence Industrial Corridor) என்கிற அரசு கழகம், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிற்துறைக் கொள்கையை (Tamilnadu Aerospace and defence industrial policy) 2022ம் ஆண்டில் வெளியிட்டது.
தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிற்துறைக் கொள்கை
இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாக அது கூறுவது 250 பில்லியன் டாலர் (சுமார் 22 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான ஆயுத போர்விமான தளவாடங்களையும் உதிரிப் பாகங்களையும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் கூடாராமாக இந்தியாவை மாற்றுவதற்கு தமிழகம் உறுதுணையாக இருக்கும் என்பதாகும். மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் என்பது உண்மையில் மேக் இன் இந்தியா ஃபார் அமெரிக்காவாக இருப்பது போல திமுக அரசின் இந்த கொள்கை மேக் இன் தமிழ்நாடு ஃபார் அமெரிக்காவாக உள்ளது. மேலும், “யாதும் ஊரே” உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழகத்தை ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் கொள்ளைக் கூடாராமாக மாற்றுவதற்கான பரிந்துரைகளையும் இக்கொள்கையில் சேர்த்துள்ளது.
மேலும்,
• பாதுகாப்புத் தொழிற்துறை உற்பத்தியை 16% சதவிகிதத்திலிருந்து 25% சதவிகிதமாக உயர்த்துவது
• மத்திய அரசின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நடைமுறை சட்டம் 2020ன் படி, உற்பத்தி விநியோகத்தில் தனியார் கார்ப்பரேட்களின் பங்கெடுப்பை விரிவாக்கம் செய்வது (அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தனியார் கார்ப்பரேட்கள் ஏற்கெனவே பாதுகாப்புத் தொழிற்துறை உற்பத்தியில் பங்கெடுத்த வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
• முதலீட்டாளர்கள் தேவையான வசதிகளையும் மானியங்களையும் வாரி வழங்குவது (நிலத்தை கையகப்படுத்தி 50% சதவிகிதம் வரை மானிய விலையில் கொடுப்பது, அவற்றுக்கான பத்திர பதிவுத் தொகை முழுவதுமாக இலவசம், மின் விநியோகத்திற்கு வரி 100% சதவிகித சலுகை, ஆட்களுக்கு டிரெயினிங் கொடுப்பதற்கு உதவித் தொகை இலவசம், மறு சுழற்சி முறை கட்டமைப்புகளை உருவாக்க 25% சதவிகித மானியம், ஆய்வு செய்து தர சான்றிதழ் வழங்குவதில் 50% சதவிகிதம் மானியம், அறிவுசார் சொத்துரிமை பதிவு செய்யக் கூட 50% சதவிகிதம் மானியம், மாநில ஜிஎஸ்.டி வரி திரும்பபெறும் முறைகளை எளிமையாக்குவது, வழங்கப்படும் கடன்களுக்கு 5% சதவிகிதம் வரை வட்டி குறைப்பு போன்றவை அவற்றுள் சில)
• தனியார் பங்கேற்புடன் டிட்கோ மூலமாக அதி நவீன ஆய்வு மற்றும் பரிசோதனை கூடங்களுக்கான கட்டமைப்புகளை (Centre of Excellence) உருவாக்கி கொடுப்பது
• சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் ஆகிய 5 ஆயுத தளவாட கேந்திர மையங்களையும் (TNDIC Nodes) இணைத்து தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத்தை உருவாக்குவது
• இதற்காக ஏற்கெனவே இருக்கும் விமான நிலையங்களை விட கூடுதலாக சென்னை பரந்தூரில் பசுமைதள விமான நிலையமும் (Greenfield airport), ஓசூரில் காக்கித் தள விமான நிலையமும் (Brownfield airport) உருவாக்குவது
இவ்வாறு பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் லாப வெறிக்கும் அமெரிக்காவின் போர்வெறிக்கும் தமிழகத்தை பலியிட பிரத்தியேக கொள்கையை வெளியிட்டு செயல்படுத்திவருகிறது திமுக அரசு. இந்திய அளவில் மோடி அரசு செய்யும் அதே தரகு வேலையை மாநில அளவில் மு.க.ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. அதற்காகவே பரந்தூர் விமான நிலையம் அமைக்க முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பின்புலத்தில் இருந்துதான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழகத்திற்கு வரவழைத்து கலைஞர் நாணயம் வெளியிட்டுள்ளது திமுக அரசு.
பாசிச எதிர்ப்பு எனும் பெயரில் திமுக கும்பலுக்கு முட்டுக் கொடுக்கும் பேர்வழிகள், பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஸ்டாலின் கலைஞரை விட அபாயமானவர் (Stalin is more dangerous than Kalaingar) என்று புளங்காகிதம் அடைகிறார்கள். ஆம் உண்மைதான்; தமிழ்நாட்டை அந்நிய நிதிமூலதன கும்பலுக்கு தாரை வார்ப்பதில் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை விட அபாயமானவர்தான்(!!).
இவ்வாறு பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை வளர்ச்சி எனும் பெயர்களில் உருவாக்கி இங்குள்ள மூலவளங்களை கொள்ளையடிப்பது; உற்பத்தித்துறையையும் சேவைத்துறையையும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் சுரண்டலுக்கு ஏதுவாக மாற்றியமைப்பது, எவ்வித தடையுமின்றி இங்கு வர்த்தகம் செய்வது, மிச்சமீதமிருக்கும் நீர்நிலைகளையும் உறிஞ்சி -வனங்கள் உள்ளிட்ட பசுமையான சூழலை அழித்து நாட்டை வெப்ப மண்டலமாக மாற்றுவது; விவசாய நிலங்களை அழித்து சாம்பல் மேடுகளாக மாற்றுவது; உலகின் குப்பைத் தொட்டியாக மாற்றுவது என இந்தியாவையும் தமிழ்நாட்டையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளிட்ட கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக மாற்றி வருகின்றன மோடி அரசும் மு.க.ஸ்டாலின் அரசும்.
மேலும், ஏற்கெனவே இராணுவத்திற்காக அதிக அளவில் செலவிடும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது இந்தியா. 2025க்குள் 250பில்லியன் டாலர்கள் செலவிட இலக்கு வைப்பதன் மூலம் சீனாவுக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் அமெரிக்காவின் திட்டங்களுக்கு போட்டிப் போட்டு சேவை செய்கின்றன இவ்விரு அரசுகள். அதற்காக இந்திய பொருளாதாரத்தையே கூட்டுச் சேர்ந்து இராணுவ பொருளாதாரமாக மாற்றத் துடிக்கின்றன. தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் அரசியல் –பொருளாதார – இராணுவ திட்டங்களுக்கு இந்தியாவையும் தமிழகத்தையும் பலிகடாவாக்க துடிக்கின்றன.
முன்னாள் மோடியின் எடுபிடி அதிமுக கும்பலும் கூட பகுதிவாழ் மக்களிடம் கலந்து பேசி சமாதானமாக இத்திட்டத்தை நிறைவேற்றதான் திமுக அரசுக்கு ஆலோசனை கூறுகிறதே ஒழிய, இத்திட்டத்தை எதிர்க்கவே இல்லை; எதிர்க்கவும் செய்யாது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பெரும்பாலும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோருவது, மாற்று வாழ்விடங்கள் கோருவது, சுற்றுச்சூழல் சீர்கேடு என்ற அளவோடு மட்டுமே நிற்கின்றன. எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மத்திய மாநில அரசுகளின் ஏகாதிபத்திய – கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை எதிர்த்த போராட்டங்களுடன் இணைக்கப்படும்போதுதான் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் விடிவு கிடைக்கும்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சுதேசியத் தொழில்வளர்ச்சி மூலம் பெருந்திரளான உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாகும். பட்டினிக் குறியீட்டில் மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்தியாவில் இவர்களின் வளர்ச்சி முழக்கம் என்பது ஏகாதிபத்திய – தரகு முதலாளித்துவ கும்பல்களின் வளர்ச்சிக்கான முழக்கமே ஒழிய பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கானதல்ல என்பதையே நிரூபித்து வருகிறது.
ஏகாதிபத்திய நிதிமூலதனம் சுதேசியத் தொழில் வளர்ச்சியை அனுமதிக்காமல் அதை அழித்து வாழும் புல்லுருவித் தனமானதாகும். எனவே, நிதிமூலதன ஆதிக்கத்தையும் அதற்கு சேவை செய்யும் தரகு கும்பலையும் அரசதிகாரத்தில் இருந்து விரட்டியடித்து புதிய ஜனநாயக அரசமைப்பதன் ஊடாக சுதேசிய தொழில் வளர்ச்சியைக் கட்டியமைப்பதன் மூலமே உழைக்கும் மக்களின் உண்மையான வளர்ச்சியை உருவாக்க இயலும்.
- சமரன்