மக்கள் நல அரசுக்கான தகுதியை தமிழக அரசு இழந்து வருகிறது - சிஐடியு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார்

மக்கள் நல அரசுக்கான தகுதியை தமிழக அரசு இழந்து வருகிறது - சிஐடியு

மக்கள் நல அரசு என்று சொல்வதற்கான தகுதியை தமிழக அரசு இழந்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது சமூக வலைதள பதிவு:

ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி உயர்வு வழக்கில் கோவை அலுவலர் சங்கம் பெற்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்துள்ளனர்.

அகவிலைப்படி உயர்வை மறுக்க பல கோடி செலவு செய்யும் தமிழக அரசின் நடவடிக்கை மிகவும் கொடூரமானது. தன்னிடம் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கு அரசு மிகப்பெரும் அநீதி இழைத்து வருகிறது. தமிழக அரசு மக்கள் நல அரசு என்று சொல்வதற்கான தகுதியை இழந்து வருகிறது.

சட்டப்பேரவையில் ஒரு முறை, "தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வந்தால் மேல்முறையீடு செய்யும் அற்ப புத்தி இந்த அரசுக்கு கிடையாது" என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். பலமுறை நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் மேல் முறையீட்டை தொடர்ந்து செய்யும் இந்த அரசு கருணாநிதியின் பெயரை சொல்வதற்கும் தார்மீக ரீதியான உரிமை உண்டா என்பதை சிந்திக்க வேண்டும்.

அரசை பொது வெளியில் அம்பலப்படுத்துவதன் மூலம் நமது உரிமைகளை வென்று காட்ட வேண்டும். அரசின் அநீதிக்கு முடிவு கட்ட சென்னையில் அணி திரள்வோம் என தெரிவித்துள்ளார்.

- வாட்சப் பதிவிலிருந்து

Disclaimer: இந்தப் பகுதி பதிவாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு