ரயில் பயணம்: உழைப்பாளர் என்ற சகோதர ஒற்றுமைக்கு மாறாய் இனவாத வேற்றுமை வேர்பிடிப்பதை எண்ணி அச்சப்படாமல் எப்படி இருக்க முடியும்?
ஞாலன் - செந்தளம்
ரயில் பயணங்களில் பல நேரங்களில் மறுபிறப்பே எடுத்தது போல் ஆகிவிடும் இறங்குவதற்குள்.
முன்பதிவில்லா அந்த சில பெட்டிகளில் முன் அறியா மனித முகங்களுடன் திணித்து நெறித்து பல நேரங்களில் கீழே அமரக்கூட வழியின்றி நின்றுகொண்டே பல மணிநேரங்களை கடப்பதெல்லாம் அவ்வளவு சுலபமானதல்ல.எளியத்தொழிலாளர்கள் பல வேலைகளில் இப்படித்தான் பயணம் செய்கின்றனர்.
ரயில் ஏற காத்திருக்கும் போது முன்பதிவில்லா பெட்டி வந்து நிற்கும் இடத்தில் குவிந்திருக்கும் கூட்டம் ஒருபக்கம் மலைப்பை தர முன்பதிவில்லா பெட்டி வந்து நிற்கும் போது அதனுள் முண்டி முனங்கி கொண்டிருக்கும் கூட்டத்தோடு இருக்கும் கூட்டமும் ஏறும் போது பீதியே ஏற்பட்டு விடும்.
விழாக்காலங்கள் என்றால் அவ்வளவுதான்!
அப்படிதான் தற்போது ஒரு பயணம். முன் பதிவில்லா பெட்டி நிற்கும் இடத்தில் வடமாநிலத்தொழிலாளர்களின் பெருங்கூட்டம்.வண்டி வந்து நின்றப்போதும் உள்ளே ஏகப்பட்ட கூட்டம் கிட்டதட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வடமாநில தொழிலாளர்கள்தான்.பண்டிகைக்காக ஊருக்கு செல்கிறார்கள்.ரயில் நிற்கும் இடங்களிலெல்லாம் மூட்டை முடிச்சுகளுடன் ஏறினர்.கிட்டதட்ட அனைவரிடமும் உழைப்பின் கலைப்பு தெரிந்தது.ஒழுங்காக வாராத தலைகள் அழுக்கான ஆடைகள் அதோடு வியர்வை நெடியும் வீசியது.
ரயிலில் ஏ...அப்பா...எவ்வளவு பேரு ஏறுரான்ங்க...இவனுங்களுக்கெல்லாம் எவ்வளவவு திமிரு...விட்டா நம்மளையே அடிச்சிடுவான்க போல என தமிழ் பயணிகள் சிலர் பேசினர்.பலவாறு பேசியதை அப்படியே எழுத முடியாது.
ஏய் தள்ளி நின்னு தொட்டுப்புடாதே என்று நம்ம ஊர் ரேசன் கடைகளில் தள்ளி நிற்க சொல்லும் அதே போன்ற மனநிலையில் இவ்வளவு கூட்டத்திலும் வடமாநில தொழிலாளர்கள் உடல் தங்கள் மீது படுவதை எதிர்த்து கர்ஜித்தன தமிழ்க்குரல்கள்.அவர்களின் பாடு பரிதாபமாக இருந்தது.அவர்களது முகம் ஒருவாறு இரைஞ்சுவது போல் இருந்தது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...யாதும் ஊரே யாவரும் கேளீர்! என்றெல்லாம் கூறிய தமிழர்கள் நிலையா இது. தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. விசால பார்வையால் உலக மக்களை நேசி! மானிட சமுத்திரம் நானென்று கூவு!என்று கூவச்சொன்னதெல்லாம் என்னவானது என்று பரிதவிப்புக்குள்ளாகவே நேர்ந்தது.
உழைப்பாளர் என்ற சகோதர ஒற்றுமைக்கு மாறாய் இனவாத வேற்றுமை வேர்பிடிப்பதை எண்ணி அச்சப்படாமல் எப்படி இருக்க முடியும்?
"நம்ம வேலையெல்லாம் வடநாட்டுகாரன்க வந்து பறிச்சிட்டானுங்க..." இந்த குரல்கள் இப்போது அதிகமாக கேட்கிறது.
அதானியின் மூலதனத்தின் மீது வராத வடநாட்டு எதிர்ப்பு,உழைப்பு பிழியப்பட்டு வாடி வதங்கிபோயிருக்கும் தொழிலாளி மீது வருவது ஞாயம் தானா?
இந்தியாவில் நாட்டிற்குள்ளேயே கிட்டதட்ட 50 கோடி பேர்வரையில் புலம்பெயர்ந்தவர்களாக உள்ளனர். ஆதாவது மூன்றில் ஒருவர் புலம்பெயர்ந்தோர்.அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் இந்தியாவின் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகம்.
இந்திய நாட்டில் பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலும், ஒரு தேசிய இனத்திற்குள்ளேயும் விவசாயிகளும் தொழிலாளர்களும் புதிய காலனிய பொருளாதார கொள்கைகளாலும் கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளாலும் இடம் பெயர்ந்து உள்நாட்டிற்குள்ளேயே அகதிகளாகியுள்ளனர்.
தமிழர்கள் மும்பை-கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்வதற்கும், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட்,ராஜஸ்தான், ஆந்திரம், தெலங்கானா மற்றும் வடகிழக்கிலிருந்தும்
தமிழ்நாட்டிற்குள் மக்கள் இடம் பெயர்வதற்கும் மத்திய, மாநில அரசுகளின் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணமாகும்.
கூலியுழைப்பை மேலான விலைக்கு விற்பதற்கே இந்த இடப் பெயர்வுகள் நிகழ்கின்றன.
இவ்வாறு இடம் பெயர்ந்து பிழைப்புத் தேடிவரும் வரும் உழைக்கும் மக்களை எதிரிகளாக பார்ப்பதும் தமிழர்களின் வேலை பறிக்கப்படுவதற்கு அவர்களை காரணமாக கட்டமைப்பதும் உண்மையான எதிரியை காணாமல், பிறதேசிய இனத்து சகோதர்களுடன் வஞ்சம் தீர்ப்பதில்தான் முடியும். ஆளும் வர்க்கங்கள் இத்தகைய இனவாத திசை திருப்பல்கள் மூலம்தான் ஆட்சி நடத்த விரும்புகின்றன.
நிலவுகின்ற புதியகாலனிய-தரகு-முதலாளித்துவ- நிலவுடைமை உற்பத்தி முறையினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான் மாநிலங்களுக்கிடையிலும் ஒரு மாநிலத்திற்கு உள்ளேயுமே பாராதூரமான ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இப்படியான சமசீரற்ற வளர்ச்சியால் ஏற்படும் நெருக்கடி மக்களுக்கு வேலையற்ற நிலையையும் வறுமையையும் கொடுக்கிறது.இதன் விளைவாக மக்கள் பிழைப்பிற்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு புலம் பெயர்ந்து ஓடி வருவது நடக்கிறது.
புதிய காலனிய கார்ப்பரேட் வேளாண் கொள்கையினால் கிராமங்களிலிருந்து துரத்தப்பட்டு மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நகரங்களில் தஞ்சமடைவது தொடர்கதையாகி விட்டது.
இப்படியான நிலையில் சென்னை திருப்பூர் கோவை என பிழைப்பு தேடிவரும் தொழிலாளர்களுக்கு எதிராக திரும்புவது மிக மோசமானதாகும்.
வடக்கன்ஸ் என்ற பெயரில் இழிவாக மிக இயல்பாக இங்கே வடமாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்பு கட்டமைக்கப்படுகிறது.தமிழ்தேசியம் பேசுவதாக கூறி இனவாதத்தை முன்னெடுக்கும் அமைப்புகளின் கருத்தாக்கங்கள் இப்போக்குகளுக்கு உரமிடுகின்றன.பிற மாநில தேசிய இனத்து தொழிலாளி மீது இனப்பகைமையுடன் நடந்துகொண்டால் மறு முனையில் தாக்கரே கும்பல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனவெறிக்குக்கூட ஞாயம் சேர்க்கும்.வாட்டால் நாகராஜ் போன்ற இனவெறியன்கள் செய்வதுகூட சரிதான் என்றாகிவிடும்.அரைக்கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழ்கின்றனர் என்பதை பார்க்காமல் இனவாத சகதியில் மூழ்குவது தமிழர்களுக்கும் எதிரானதாகும்
"கடுமையான வறுமை மட்டுமே மக்களை தங்கள் பூர்வீக நிலத்தை கைவிட கட்டாயப்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை, மற்றும் முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மிகவும் வெட்கமின்றி சுரண்டிக்கொள்கிறார்கள். ஆனால் நாடுகளின் இந்த நவீன குடியேற்றத்தின் முற்போக்கான முக்கியத்துவத்திற்கு பிற்போக்குவாதிகள் மட்டுமே கண்களை மூடிக்கொள்ள முடியும். முதலாளித்துவத்தின் மேலும் வளர்ச்சியின்றி, அதை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் போராட்டமின்றி மூலதனத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலை சாத்தியமில்லை. இந்த போராட்டத்தில்தான் முதலாளித்துவம் முழு உலகிலும் உழைக்கும் மக்களை இழுத்துச் செல்கிறது, உள்ளூர் வாழ்க்கையின் வலிமையான, உற்சாகமான பழக்கங்களை உடைக்கிறது தேசியத் தடைகளையும் தப்பெண்ணங்களையும் உடைக்கிறது, அனைத்து நாடுகளிலிருந்தும் தொழிலாளர்களை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பல வளர்ந்த நாடுகளின் மிகப்பெரிய தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் ஒன்றிணைக்கிறது.
முதலாளித்துவ வர்க்கம் ஒரு தேசத்தின் தொழிலாளர்களை இன்னொருதேசத்தின் தொழிலாளர்களுக்கு எதிராகக் தூண்டுகிறது. முதலாளித்துவத்தால் அனைத்து தேசியத் தடைகள் உடைக்கப்படுவது தவிர்க்க முடியாதது மற்றும் முற்போக்கானது என்பதை உணர்ந்த வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள், பின்தங்கிய நாடுகளிலிருந்து தங்கள் சக ஊழியர்களை அறிவூட்டவும் ஒழுங்கமைக்கவும் உதவ முயற்சிக்கின்றனர்".என்ற லெனினது கூற்றிலிருந்து இந்தியாவிலுள்ள பல தேசிய இனத்தின் கலப்பை பார்ப்பதும் அதன் படி உழைக்கும் வர்த்தின் ஒற்றுமையை கட்டமைப்பதுமே அவசிய கடமையாகும்.
(தோழர் ஞாலனின் பயண அனுபத்திலிருந்து)
- செந்தளம்