பின்னை மார்க்சியம் - எனும் பித்தலாட்டம்
குருசாமி மயில் வாகனன்
1
பேராசான் கார்ல் மார்க்ஸ் காலத்திலேயே அவரது கருத்துக்கள் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டன. அப்போது திரிபுவாதம், திருத்தல்வாதம், பிற்போக்குவாதம் என அவற்றை வகைப்படுத்தி அவரும் பேராசான்கள் எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ உள்ளிட்ட பலரும் அம்பலப்படுத்தித் தோலுரித்துள்ளனர்.
20 மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளில் பல நாடுகளைச் சேர்ந்த மார்க்சியத் தத்துவப் பேராசிரியர்கள் மற்றும் கட்சியினரும் இத்தகைய திரிபுவாத, பிற்போக்குவாதப் போக்குகளை அம்பலப்படுத்தி வந்துள்ளனர்.
மனித சமூகம் இயங்குகின்ற அடிப்படை விதிகளைக் கண்டுபிடித்து நிரூபித்த மார்க்சியம் ஒரு சமூக அறிவியல் தத்துவமாகும். மார்க்சியம் கண்டடைந்த சமூக இயக்க விதிகளை மறுத்து, வேறொரு சமூக இயக்க விதிகளை அதன்பின்னர் இதுகாறும் வரையிலும் மனித குலம் அறியவில்லை.
மார்க்சியம் முன்வைத்த சமூக இயக்க விதிகளின் மூலமாக மனித சமூகத்தின் எதிரிகளான சுரண்டும் வர்க்கத்தினர் அடையாளம் காணப்பட்டனர். காலங்காலமாக தங்களின் சுரண்டலை இயற்கையானது என்றும் இயல்பானது என்றும் சமூகத்தைக் கருத வைத்து ஏமாற்றி வந்த சுரண்டும் வர்க்கத்தினர் தங்களது சுரண்டலை அம்பலப்படுத்தி தன்னை வீழ்த்த வந்திருக்கும் மார்க்சியத்தின் வருகையைக் கண்டு பயந்தனர். அதை ஒழித்துக்கட்ட முனைந்தனர்.
அதற்காகப் பல்வேறு உத்திகளை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். அவற்றுள் ஒன்றுதான் மார்க்சியத்தைத் திரிப்பதும் குழப்புவதுமாகும். இந்த வேலையை அவர்கள் மார்க்சிய ஆய்வாளர்கள் என்ற போர்வையிலேயே செய்வதற்கு முடிவு செய்தனர்.
இதற்காக கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு பெயர்களில் இயங்கும் அறக்கட்டளைகளின் வாயிலாக, குறிப்பாக (ஃபோர்டு ஃபவுண்டேசன்) ஆண்டுதோறும் செலவு செய்து வருகின்றன.
அத்தொகைகள் உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்கள் சார்ந்த கல்விப்புலங்களில் கொட்டப்படுகின்றன. அரசியல், பொருளாதரம், வரலாறு, தத்துவம் போன்ற துறைகள் மட்டுமல்லாது, கலை, இலக்கியம், நவீன சமூக ஊடகவியல் போன்ற துறைகளிலும் அவர்கள் தங்களுக்கான ஆட்களை வலை வீசிப் பிடித்தனர். அவர்கள் பெரும்பாலும் பேராசிரியர்களாகவும் ஆய்வு மாணாக்கர்களாகவும் இருந்தனர். இந்த மார்க்சியத் திரிபாளர்கள் அவ்வப்போது குறிப்பாக, முதலாளித்துவ நெருக்கடிகள் குறித்த பரிசீலனைகள் மேலெழும்போதெல்லாம் மார்க்சிய ஆய்வு எனத் தடபுடலாகத் தங்களது திருப்பணியைத் தொடங்கி விடுவார்கள்.
இந்த மார்க்சியத் திரிபாளர்கள் கடைவிரித்த கருத்துக்களின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தி தமிழகத்தில் பல மார்க்சிய ஆய்வாளர்கள் அவ்வப்போது எழுதியும் பேசியும் வந்துள்ளனர். நா. வானமாமலை, எஸ். தோத்தாத்திரி, எஸ். பாலச்சந்திரன், வசுமித்ர போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் தவிர பல மார்க்சிய கட்சிகளும் மார்க்சிய - லெனினிய அமைப்புகளும் இதில் பங்காற்றியுள்ளன.
இச்சூழலில் மார்க்சியத்தின் பெயரால் மீண்டும் அவ்வாறான அவதூறுகளைக் கடைவிரிக்கும் விதமாக, “பின்னை மார்க்சியம் அறிமுகம் - மார்க்சியத்தின் மறுவாசிப்பும் புதிய இடதுசாரிச் சிந்தனையும்” என்ற நேரடியான திரிபுவாதத் தலைப்பில் ஒரு நூல் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்நூலை மதுரைக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலத் தலைவரான முனைவர் இரா. முரளி எழுதியுள்ளார்.
இதுபோன்ற மார்க்சியத் திரிபு நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள என்.சி.பி.ஹெச் நிறுவனமே இந்நூலையும் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.
கார்ல்மார்க்ஸின் படத்துடன் 12 பெயர்களுடன் பெண்ணிய மார்க்சியம், இனம், சாதி, அடையாளம், என்ற சொற்களும் அட்டையில் இடம் பெற்றுள்ளன.
“மார்க்சியத்தை அறிந்தவர்களுக்கு இது ஒரு மறுவாசிப்பாகவும், பின்னை மார்க்சியத்தை அறிய விரும்புபவர்களுக்கு ஓர் அறிமுகமாகவும், சமகால இடதுசாரி அரசியலின் சாத்தியங்களைப் பற்றிச் சிந்திப்போருக்கு ஒரு விவாதத் தொடக்கமாகவும் இந்நூல் அமையும் என நம்புகிறேன்.” என நூலாசிரியர் தனது முன்னுரையில் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கையை நாசமாக்க வேண்டிய கடமை மார்க்சியவாதிகளுக்கு உள்ளது.
மார்க்சியத்தின் பேரால் குழப்புகின்ற திரிபாளர்களை (தமிழக மார்க்சியத் திரிபு அறிஞர்களது மற்றும் பேரறிஞர்களது பெயர்கள் விடுபட்டிருந்தாலும்) ஒன்றுசேரத் தொகுத்தளித்திருப்பதால் அவர்களை அடையாளம் காணுவதற்கும் அவர்களது கருத்துக்களிலுள்ள அபத்தங்கள் மற்றும் ஆபத்துக்களை அறிந்து கொள்வதற்கும் எதிர்மறை நோக்கில் நமக்கு இந்நூலானது பயன்படுகிறது.
பதிப்புரை, முன்னுரை தவிர 16 அத்தியாயங்கள் இந்நூலிலுள்ளன. அவைகள் பெரும்பாலும் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்ட மார்க்சிய விரோதக் கருத்துக்கள்தான். அவ்வாறு அம்பலப்படுத்தப்பட்ட கருத்துக்களை இந்நூலானது கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவற்றை, “மார்க்சியத்திலிருந்து விலகல்” என்று ஒரே சொல்லில் நிராகரிப்பது தவறு” எனச் சொல்லி ஒரே வாக்கியத்தில் நிராகரித்துவிடுகிறது.
‘மார்க்சியத்திலிருந்து விலகல்’ என ஏன் சொல்லப்படுகிறது என்பதையும் முன்வைத்துப் பதிலளிக்கப்பட்டிருக்குமேயானால், ஒருவேளை இந்நூலையும் நாம் பரிசீலித்திருக்க முடியும். அப்படியான முயற்சிகள் ஏதுமில்லாமல், அரைச்ச மாவையே மீண்டும் அரைத்திருப்பதானது, புதிய பரிசீலனைக்கான தகுதியை இந்நூலிற்குக் கொடுக்கத் தவறிவிடுகிறது.
இதுகுறித்துப் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். அவர்களை நாம் வரவேற்கிறோம். நம்மைவிடவும் மிகச் சரியாக இது குறித்துப் பேசுபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் எதன் பொருட்டும் அமைதி காத்திட வேண்டாம் எனக் கோருகிறோம்.
நாம் இந்நூலின் மூலமாக நூல் முன்வைக்கின்ற சில பொதுவான விசயங்களைக் குறித்துத் தொடர்ந்து பேசவிருக்கின்றோம்.
1) அர்த்தத்தைக் குழப்புகின்ற அல்லது அநர்த்தமான சொற்றொடர்கள் (அதாவது சொல்-டான்ஸுகள் - சொல்லாடல்கள்) இந்நூலில் ஏராளமாக உள்ளன.
வாசகர்களைக் குழப்புகின்ற இந்த ‘அறிவு‘அ’ஜீவி, சொல்-டான்ஸுகள் குறித்து வாசகர்களும் தோழர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு ‘மார்க்சியத்தின் குறைந்தபட்ச அடித்தளம்’ எனும் சொல்-டான்ஸ் ஓரிடத்தில் வருகிறது. இதன் பொருளை யோசியுங்கள்.
சரியான பொருளுரைப்பவர்களுக்கு, ஒருகாலத்தில் சுடசுடப் பரிமாறப்பட்டு தற்காலத்தில் ஊசிப்போய்விட்ட பின்-நவீனத்துவ போண்டா வழங்கப்படும்.
அதுபோல இன்னொரு சொல்-டான்ஸ்தான் ‘மறு-வாசிப்பு’.
ஒருவர் சொல்கிறார், “நான் சிறுவயதில் அல்லது முன்பு, இந்தப் புத்தகத்தைப் வாசித்திருக்கிறேன். அப்போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது வாசிக்கையில்தான் நன்றாகப் புரிகிறது.” இதன் பொருள் என்ன?
அந்தப் புத்தகத்தில் உள்ள விசயங்களைப் புரிந்துகொள்ளும் அளவிற்கான புரிதல் மட்டம் சிறுவயதில் அல்லது முன்பு, அவருக்குப் போதுமானதாக இல்லை. பின்னர் வயதும் அறிவும் வளர்ந்ததும் அவரது புரிதல் மட்டம் உயர்ந்தபின், அதே புத்தகம் அவருக்குப் புரிகிறது என்பதுதான்.
சிறுவயதில் அல்லது முதலில் அவருக்குப் புரியாததற்கான காரணம் அந்தப் புத்தகத்தில் இல்லை. புரிந்துகொள்ளக்கூடிய அவரது அறிவு மட்டத்தில்தான் இருக்கிறது.
ஆனால், ஆள் வளர்ந்தபோதும் அறிவு மட்டம் வளராத ஒருவர் மீண்டும் அந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது, அப்போதும் அவருக்கு அப்புத்தகம் புரியாமல்தான் இருக்கும். இப்படி வாசிப்பவர்கள்தான் அந்த வாசிப்பை ‘மறு-வாசிப்பு’ எனக் கொண்டாடுகிறார்கள்.
ஒருவேளை நாளை மறு-மறு-வாசிப்பு செய்து வேறொன்றையும் சொல்லக்கூடும்.
இப்படித்தான் அறிவு மட்டம் வளராத நிலையில், அரைகுறையாக வாசித்துவிட்டு மார்க்சியத்தில் அதுஇல்லை; இதுஇல்லை; அதுபோதவில்லை; இதுபோதவில்லை; அதைவிட்டுவிட்டார்; இதைவிட்டுவிட்டார்; என அளந்தளந்து அள்ளிக்கொட்டிக் கவலைப்படுகிறார்கள். இந்நூலும் அவ்வாறே கவலைப்படுகிறது. எனவே இத்தகைய மறு-வாசிப்பாளர்களிடமும் வாசகர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நூலிற்குள்ளே போகுமுன் ஒன்றைச் சொல்லி இப்போதைக்கு நிறுத்துகிறேன்.
மார்க்சியம் ஒரு சமூக அறிவியல் தத்துவம். அது உலகம் முழுவதிலுமுள்ள எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியான தத்துவம்தான். ஆனால், மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த முயல்கின்ற (பொருளுற்பத்தி முறை மாற்றம்) வழிமுறையானது எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அது அந்தந்த நாடுகளின் சமூகத் தன்மைகளுக்கேற்ப மாறுபடும்.
மார்க்சியக் கொள்கையின் வளர்ச்சி (மாறுபாடு அல்ல) என்பது அதை நடைமுறைப்படுத்தும் அம்சத்தில்தான் முதன்மையான தேவையாக இருக்கும். இத்தேவையின் அடிப்படையில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தவர்கள்தான் பேராசான் லெனின், ஸ்டாலின், மாவோ போன்றோர். இதில் லெனினது கொள்கைளை மட்டுமே லெனினிசம் என்று குறிப்பிடுகிறோம். ஸ்டாலின், மாவோ போன்றவர்களுக்கு அதுவும் பொருந்தாது. ஆனால், இவற்றை லெனின் மார்க்சியம்; ஸ்டாலின் மார்க்சியம்; மாவோ மார்க்சியம் என்று ஒருபோதும் குறிப்பிடுவதில்லை. அது இயம் என்கிற தத்துவத்தை வரையறை செய்வதினடிப்படையில் கூறப்படுவதாகும்.
ஆனால், இந்த மார்க்சிய நடிகர்கள் கிராம்சியிசம்; ஃப்ராங்பர்ட்டிசம்; சார்த்தரிசம் . . . என்று குறிப்பிடாமல் இவர்களின் பெயரோடு மார்க்சியம் என்கிற பின்னொட்டை இணைக்கிறார்கள். இவர்களின் குழப்பும் தன்மைக்கு இதுவே சான்று.
மார்க்சியம் முன்வைக்கின்ற ‘நடைமுறை’ குறித்து இவர்கள் ஒருபோதும் பேசுவதில்லை. அதைப் பற்றி அவர்களுக்கு நூலளவும் தெரியாது. தத்துவமும் நடைமுறையும் இணைந்ததுதான் மார்க்சியம். நடைமுறை இல்லாமல் மார்க்சியம் இல்லை.
இத்தகைய பித்தலாட்டங்களின் நோக்கமே நடைமுறையினைக் குழப்புவதுதான். எனவே மார்க்சிய ஆய்வாளர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தப் பின்னை-மார்க்சியப் பித்தலாட்டத்தைக் கட்டாயம் அம்பலப்படுத்த வேண்டும்.
2
இந்தப்பதிவு வேறு மாதிரியான முத்திரையை நம்மீது குத்துவதற்கு வழி வகுக்கக்கூடும் என்பதை அறிந்தே இதை இடுகிறோம்.
பின்னை மார்க்சியம் அறிமுகம் - நூலின் இரண்டு இடங்களில் டாக்டர் அம்பேத்கரது சிந்தனைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. வேறு இடங்களிலும்கூட இருக்கலாம்.
1] பெண்ணிய மார்க்சியம்: உற்பத்தி, ஆணாதிக்கம், மற்றும் சமூக மறு உற்பத்தி என்ற 13ஆவது அத்தியாயத்தில், ‘மார்க்சியத்தில் மறைக்கப்பட்ட உழைப்பின் கேள்வி’ [கவனிக்க] என்ற உட்தலைப்பினுள் பக்கம் 288இல், “இங்கே அம்பேத்கரின் சிந்தனை மிகவும் முக்கியமானதாகிறது..” என்று தொடங்கப்படும் பத்தியிலும்;
2] அடையாளம், இனம், சாதி, மற்றும் மார்க்சியம் எனும் 14ஆவது அத்தியாயத்தில் இந்தியாவில் பிரச்சினை: இனத்திற்குப் பதிலாகச் சாதி எனும் உட்தலைப்பினுள் பக்கம் 299இல், “இந்த இடத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிந்தனை மார்க்சியத்துக்கு ஒரு முக்கியமான சவாலை முன்வைக்கிறது.” எனத் தொடங்கப்படும் பத்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்சியத்திற்கு சவால் விடுகின்ற இரண்டாவதாக உள்ளதைப் பார்க்கலாம். அதன் முழுப்பகுதி இது.
“இந்த இடத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிந்தனை மார்க்சியத்துக்கு ஒரு முக்கியமான சவாலை முன்வைக்கிறது. அம்பேத்கர் பொருளாதார சமத்துவத்தின் தேவையை நிராகரிக்கவில்லை; ஆனால் பொருளாதார சமத்துவம் மட்டுமே சமூக விடுதலையை ஏற்படுத்தாது என்பதை வலியுறுத்தினார். சாதி ஒழிப்பு (Annihilation of Caste) நூலில் இந்தியப் பாட்டாளி வர்க்கம் வெறும் பணக்காரர் - ஏழை என்ற வேறுபாட்டின் அடிப்படையில் ஒன்றுபடுகிறதா என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். சமூகத்தின் ஏழைகளுக்குள்ளேயே சாதி வேறுபாடு நீடித்தால், ஒரு சோசலிசப் புரட்சிக்குப் பிறகும் சமத்துவமும் சகோதரத்துவமும் தானாக உருவாகாது என்பதே அவரது அடிப்படை எச்சரிக்கை. சொத்துச் சமத்துவத்திற்காக மனிதர்கள் புரட்சியில் பங்கேற்பதற்கு முன், புரட்சிக்குப் பிறகு தாங்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கூற்று இங்கு மிகவும் பொருத்தமானது. இந்திய மார்க்சியத்தின் முன் அம்பேத்கர் வைக்கும் கேள்வி இதுதான்: வர்க்கச் சுரண்டலை ஒழிப்பது மட்டும் போதுமா, அல்லது மனிதர்களுக்கிடையிலான சமூக உறவுகளின் படிநிலையையும் அழிக்க வேண்டுமா? இதுவே அம்பேத்கரை வெறும் "சாதி சீர்திருத்தவாதி" என்ற வரம்பிற்குள் அடைத்துவிட முடியாததற்கான காரணமாகும். அவருடைய சிந்தனையில் சமத்துவம் என்பது பொருளாதாரப் பகிர்வு மட்டுமல்ல; அது சமூக மரியாதை, சகோதரத்துவம், அரசியல் உரிமை மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இதனால் அம்பேத்கர் மற்றும் மார்க்சியம் இடையேயான உரையாடல் இந்தியச் சூழலில் மிகவும் முக்கியமான ஒன்றாகிறது” என இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான புரிதலில்தான் இங்கே மார்க்சியத்தின் போதாமை என்பது பரப்பப்படுகிறது. பொருளாதார சமத்துவம்; பொருளியல் அடிப்படை; பொருளாதார நிர்ணயவாதம், என்பதில் தொடங்கி வயிற்றைப் பற்றித்தான் மார்க்சியம் பேசுகிறது மானத்தைப் பற்றிப் பேசவில்லை; எங்களுக்கு மானம்தான் முக்கியம்; சுயமரியாதைதான் முக்கியம் என்பதுவரையிலுமான அரைவேக்காட்டுக் கூப்பாடுகளைப் பல ஆண்டுகளாகப் பலரும் கூவிவருகின்ற நிலையில்; இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அவற்றின் அமைப்புகளும் மார்க்சிய ஆய்வாளர்களும் பலவிதமான விளக்கங்களும் கொடுத்துள்ள நிலையில்; அவைகளைப் பற்றி எதுவுமே அறியாமல் அல்லது அவற்றை அப்படியே மறைத்து, ‘மார்க்சியத்திற்கு ஒரு முக்கியமான சவாலை முன்வைக்கிறது’ என்கிற அபத்தமான கூற்றை என்னவென்று சொல்வது?
முதலில், “பொருளாதார சமத்துவம் மட்டுமே சமூக விடுதலையை ஏற்படுத்தாது” என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
ஒரு சமூகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கான அடிப்படை என்ன?
ஒரு சமூகத்திற்குத் தேவையான ‘பொருட்களின் உற்பத்திதான்’ அந்தச் சமூகம் இயங்குவதற்கான அடிப்படை என மார்க்சியம் சொல்கிறது.
அடுத்து, அச்சமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணம் என்ன?
அந்தப் பொருட்களை மனிதர்கள் உற்பத்தி செய்யக்கூடிய முறையில் உள்ள சிக்கல்கள்தான் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணம் என மார்க்சியம் சொல்கிறது.
அடுத்து, அப்பிரச்சினைகளைத் எப்படித் தீர்ப்பது?
அப்பிரச்சினைகள் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ள, பொருளுற்பத்தி முறையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்; தீர்க்க வேண்டும் என்று மார்க்சியம் சொல்கிறது.
மார்க்சியம் சொல்கின்ற இந்தப் பொருளுற்பத்தி முறையைத்தான் வெறுமனே, ‘பொருளாதாரம், பொருளாதாரம்’ என்று இந்த பீனாமானாக்கள் உள்ளிட்ட பற்றாக்குறைவாதிகள், அவதூறுவாதிகள் அனைவரும் குறிப்பிடுகின்றனர்.
புராதான பொதுவுடமைச் சமூக உற்பத்தி முறையைத் தனக்கேற்ற வகையில் மாற்றியவாறே ஆண்டான் அடிமைச் சமூக உற்பத்தி முறை உருவானது. ஆண்டான் அடிமைச் சமூக உற்பத்தி முறையைத் தனக்கேற்ற வகையில் மாற்றியவாறே நிலவுடமைச் சமூக உற்பத்தி முறை உருவானது. நிலவுடமைச் சமூக உற்பத்தி முறையைத் தனக்கேற்ற வகையில் மாற்றியவாறே முதலாளித்துவச் சமூக உற்பத்தி முறை உருவானது. முதலாளித்துவச் சமூக உற்பத்தி முறையைத் தனக்கேற்ற வகையில் மாற்றியவாறே சோசலிச சமூக உற்பத்தி முறை உருவானது.
இந்த ஒவ்வொரு வகையான பொருளுற்பத்தி முறை மாற்றமுமே புரட்சிதான். இதுதான் வரலாற்று விதி.
ஆக, சோசலிசப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்கமானது, தனக்கேற்ற சோசலிச உற்பத்தி முறையை அமுல்படுத்துவதற்காக முதலாளித்துவச் சமூக உற்பத்தி முறையை மாற்றத் தொடங்குவதுதான்.
ஆக, பொருளுற்பத்தி முறையை மாற்றுவதன் மூலமாக மட்டுமே சமூகத்திலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று மார்க்சியம் சொல்கிறது.
சாதிப் பிரச்சினைக்கான தீர்வையும் சமூகத்தின் பொருளுற்பத்தி முறையை மாற்றுவதன் மூலமாகத்தான் தீர்க்க முடியும் என்று மார்க்சியம் சொல்கிறது.
ஆனால் டாக்டர் அம்பேத்கர் சாதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறையை சமூகத்தின் பொருளுற்பத்தி முறையை மாற்றுவது எனும் அடிப்படையில் சொல்லவில்லை. பிரச்சினையை அவர் அணுகும் முறை வேறு; பிரச்சினையைப் அவர் புரிந்துகொள்ளும் தன்மை வேறு; பிரச்சினைக்கு அவர் முன்வைக்கும் தீர்வும் வேறு. அவற்றை நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவரது அணுகுமுறையும் தீர்வும் மார்க்சியம் சொல்வதற்கு மாறானது மற்றும் முரணானது.
நீங்கள் டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த வழிமுறையின்படி சாதிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நம்பினால் அதன்படி தீர்த்துக் கொள்ளலாம். அதை இங்கே யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால் அந்த வழிமுறைகளின்படி சாதிப் பிரச்சினயைத் தீர்க்க முடியாது என்பதுதான் மார்க்சியவாதிகளின் கொள்கை.
இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் சொன்னபடி மார்க்ஸ் சொல்லவில்லை, எனவே சாதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மார்க்சியத்திற்குள் இடமில்லை; அல்லது சாதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மார்க்சியத்தால் முடியாது; அல்லது மார்க்சியம் போதாது என்றெல்லாம் சொல்வது மார்க்சியத்தை அறியாத வெற்று உளறல்களே!
இதை அறியாமல், “டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிந்தனை மார்க்சியத்துக்கு ஒரு முக்கியமான சவாலை முன்வைக்கிறது” என்றெல்லாம் முழங்குவதை அறியாமை என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?
அடுத்து, “இந்தியப் பாட்டாளி வர்க்கம் வெறும் பணக்காரர் - ஏழை என்ற வேறுபாட்டின் அடிப்படையில் ஒன்றுபடுகிறதா என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.” என்று நூல் குறிப்பிடுகிறது. “ஒன்றுபடுத்தப்பட வேண்டும், ஒன்றுபடுத்த முடியும்” எனும் பதிலை மார்க்சியம் அவருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறது.
இன்று இந்தியப் பாட்டாளி வர்க்கமானது, கட்சிகள், சாதி, மதம், இனம் என எத்தனையோ அமைப்புகளில் திரண்டிருக்கிறது. அங்கெல்லாம் ‘ஏழைகளுக்குள்’ என்கிற வேறுபாடும் இருக்கிறது, ‘ஏழை - பணக்காரர்’ என்கிற வேறுபாடும் இருக்கிறது. எப்படி அங்கெல்லாம் அவர்களால் திரண்டிருக்க முடிகிறது?
ஒரு கட்சியில், ஒரு கழகத்தில், ஒரு சங்கத்தில் அவ்வாறு வேறுபாடில்லாமல் திரண்டிருக்கும்போது பாட்டாளி வர்க்கம் எனும் அடிப்படையில் மட்டும் ஏன் அவர்களை ஒன்று திரட்ட முடியாது? முடியும் என்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய இரு பெரும் கட்சிகளும்; அதன் துணை அமைப்புகளும்; தொழிற்சங்கங்களுமே கண்முன் சாட்சியாக உள்ளன.
பாட்டாளி வர்க்கம் தானாக ஒன்றுபடாது. அதை ஒன்றுபடுத்த வேண்டியதுதான் கம்யூனிஸ்டுக் கட்சியின் பணி. அவ்வாறு ஒன்றுபடுத்துவதற்காக கம்யூனிஸ்டுகள் வேலை செய்து வருகிறார்கள். அதேசமயம் அவர்களை ஒன்றுபட விடக்கூடாது என்று சாதியவாதிகளும் கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். அவ்வாறு அவர்கள் செய்து வருகின்ற வேலைகளில் ஒன்றுதான் கம்யூனிசத்தின்மீது இம்மாதிரியான அவதூறுகளைப் பரப்புவது.
அடுத்து, “சமூகத்தின் ஏழைகளுக்குள்ளேயே சாதி வேறுபாடு நீடித்தால், ஒரு சோசலிசப் புரட்சிக்குப் பிறகும் சமத்துவமும் சகோதரத்துவமும் தானாக உருவாகாது என்பதே அவரது (டாக்டர் அம்பேத்கர்) அடிப்படை எச்சரிக்கை” என நூல் குறிப்பிடுகிறது.
சோசலிசப் புரட்சி என்பதை ஏதோ தற்போது இங்கு நாம் காணுகின்ற ஒரு கட்சிபோய் இன்னொரு கட்சி வருகின்ற ஆட்சி மாற்றம் என்பதுபோலக் கருதுவதால்தான் இவ்வாறான கற்பனைகள் உருவாகின்றன.
ஆனால் உண்மை அதுவல்ல, சோசலிசப்புரட்சி என்பது கட்சிகளின் ஆட்சி மாற்றம் போன்றதல்ல, மாறாக அது சமூகத்தில் ஏற்கனவே நிலவிக் கொண்டிருக்கின்ற பொருளுற்பத்தி முறையை மாற்றுவதற்கான தொடக்கமாகும். எனவே பொருளுற்பத்தி முறை மாற்றப்படும்போது “சமத்துவமும் சகோதரத்துவமும் தானாக உருவாக்கப்படும்”
அடுத்து, “மனிதர்கள் புரட்சியில் பங்கேற்பதற்கு முன், புரட்சிக்குப் பிறகு தாங்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கூற்று இங்கு மிகவும் பொருத்தமானது.” என்று நூல் குறிப்பிடுகிறது.
அதேசமயத்தில் புரட்சியை நடத்த விரும்புகின்ற கம்யூனிஸ்டுக் கட்சிகளில் தீண்டத்தகாத சாதியினர் சேரக்கூடாது என்று அறிவுறுத்தியதும் டாக்டர் அம்பேத்கர்தான் என்பதை நூல் ஏனோ குறிப்பிடவில்லை.
அடுத்து, “இந்திய மார்க்சியத்தின் முன் அம்பேத்கர் வைக்கும் கேள்வி இதுதான்: வர்க்கச் சுரண்டலை ஒழிப்பது மட்டும் போதுமா, அல்லது மனிதர்களுக்கிடையிலான சமூக உறவுகளின் படிநிலையையும் அழிக்க வேண்டுமா?” என நூல் குறிப்பிடுகிறது.
பொருளுற்பத்தியில் ஈடுபடுகின்ற சமூகக் குழுக்களைத்தான் நாம் வர்க்கங்கள் என்கிறோம். அந்த வர்க்கங்களுக்கிடையேயான சமூக உறவுகளில் ஒரு அடையாளம்தான் சாதி. வர்க்கங்களின் முரண்பாட்டினை அதாவது ஒரு சில வர்க்கங்கள் பிற வர்க்கங்களைச் சுரண்டுவதை, பொருளுற்பத்தி முறையினை மாற்றுவதன் மூலமாக (புரட்சி) ஒழிக்கும்போது, வர்க்கங்களின் சமூகப் படிநிலையும் நிச்சயம் அழியும்.
ஆனால், இவ்வாறு பொருளுற்பத்தி மாற்றத்தினைச் செய்வதற்காக ஒன்றாய் அணி திரள வேண்டிய பாட்டாளி வர்க்கத்தினை, அதனுள்ளேயுள்ள சாதி அடையாள முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி, ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு, அதில் குளிர்காய்கின்ற மார்க்சிய விரோத சக்திகளில் சிலர் இங்கே மார்க்சியவாதிகள் என்கிற போர்வையில் மார்க்சிய முகாம்களில் உலா வருகின்றனர்.
இத்துடன் இதை முடித்துக் கொள்வோம். “சமத்துவம் என்பது பொருளாதாரப் பகிர்வு மட்டுமல்ல; அது சமூக மரியாதை, சகோதரத்துவம், அரசியல் உரிமை மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது” என நூல் குறிப்பிடுகிறது.
ஆனால், உண்மையான சமத்துவம் என்பது மேலே நாம் சொன்ன பொருளுற்பத்தி செய்வதற்கான கருவிகள் அனைத்தும் பொருளுற்பத்தியில் ஈடுபடுகின்ற வர்க்கங்கள் அனைத்திற்கும் சமமான உரிமையுடையதாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அதில்லாமல் மரியாதை, பழக்க வழக்கம், மனமாற்றம், கடுஞ்சட்டம், உள்ளிட்ட பல்வேறுவிதமான சொல்-டான்சுகளில் சொன்னாலும் அங்கே சமத்துவம் என்பது போலியானதாகத்தானிருக்கும்.
(தொடர்வோம்)
https://www.facebook.com/share/p/18aQmmm3pS/
https://www.facebook.com/share/p/1JAayDWNtd/
குருசாமி மயில் வாகனன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு