ஒரு மிகப் பெரிய வரலாற்று எழுச்சியில் திளைக்கிறது வட இந்தியா!
சாவித்திரி கண்ணன் - இரா. முருகவேள்
1
ஒரு மிகப் பெரிய வரலாற்று எழுச்சியில் திளைக்கிறது வட இந்தியா!
உக்கிரமான போராட்டங்களின் உச்சத்தை அங்கே நாளும் பார்க்கிறோம்.
இதோ பக்கத்து மாநிலத்தில் பெங்களுரும் சிலிர்த்து களம் கண்டுள்ளது.
கேரள சட்டமன்றத்தில் ஞானேஷ்குமாரை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது!
ஆனால், தமிழ்நாடு மட்டும் இதில் மிகவும் பின் தங்கியுள்ளது.
நாம் நம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது;
தமிழகத்தின் பிரதான மூன்று மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்றும் முடங்கி கிடக்கின்றன. அவமானம்!
தில்லியில் கடுமையான அடக்குமுறைகளைக் கடந்து இளம் தலைமுறை வீறு கொண்டு போராடுகிறது. பல மோசமான தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள், இளைஞர்களும், அரசியல் தலைவர்களும். இவற்றை பார்க்கையில் சிலிர்க்கிறது. நெஞ்சம் நெகிழ்கிறது.
தேர்தல் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் கட்சி மாச்சரியங்களை மறந்து பலதரப்பட்ட கட்சிகளும் அங்கு ஒன்று திரண்டு போராடும் காட்சிகள் ஒரு மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது.
இது வரை பல சந்தர்ப்பங்களில் தேர்தல் கமிஷனை அனுசரித்தும், அரவணைத்தும், பாதுகாப்பு தந்தும் உச்சநீதிமன்றம் பேசியுள்ளது, தீர்ப்பளித்துள்ளது.
செத்துப் போனவர்கள் என்று தேர்தல் கமிஷனால் சொல்லப்பட்ட சிலரை அழைத்துச் சென்று சுயராஜ்யா கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் நிறுத்திய போதும் கூட நீதிமன்றம் தேர்தல் கமிஷனிடம் கடுமை காட்டவில்லை.
''வெளிநாட்டிலிருந்து ஊடுருவியர்கள் என்று சொல்லி பல லட்சம் பேரை நீக்கி உள்ளீர்கள். நல்லது. அதற்கான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்'' என்று உச்ச நீதிமன்றம் கேட்டவுடன் ஜகா வாங்கி, 'கப்சிப்' ஆனதே தேர்தல் கமிஷன், அப்போது கூட உச்ச நீதிமன்றம் உக்கிரம் காட்டவில்லை.
ஆனால், இனியும் அப்படி நடந்து கொண்டால் தேர்தல் கமிஷனுக்கு எதிரான கோபம் உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான கோபமாகவும் வளர்வதற்கு வாய்ப்புள்ளது என்பதை தற்போது நீதிபதிகள் நன்குணரத் தொடங்கியுள்ளனர்.
அதன் விளைவே நேற்று, ''அமைதி வழியில் போராடும் உரிமைகளை மறுக்கக் கூடாது. ஜனநாயக செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவது அவசியம்'' என்றும், எதிர்கட்சிகளை சந்திக்க மறுத்தாலும், ''எதிர்கட்சிகள் வழக்கு தொடுக்கலாம். விசாரிக்கப்படும்'' என தலைமை நீதிபதி பச்சை கொடி காட்டியதுமாகும்.
இதோ இன்றைய தினம் (அக்டோபர் 13, 2026) ரபேல் விமானம் வாங்கியதில் நடந்த ஊழல்களை சொன்ன ராகுல் காந்தி மீதான பாஜக பிரமுகரின் அவதூறு வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் தடை கொடுத்துள்ளது.
அரசியல் விவகாரங்களை களத்தில் எதிர்கொள்ள வேண்டியது அந்தந்த கட்சிகளின் வேலையாகும். இது போன்ற வழக்குகளை இனி நீதிமன்றம் விசாரிக்காது என்று ஒரு கொள்கை முடிவெடுத்தால் தான் பாஜக, திமுக போன்ற கட்சிகளுக்கு மக்கள் தீர்ப்பெழுத முடியும். அரசியல் கட்சித் தலைவர்களின் யோக்கியதை என்னென்பது மக்களுக்கு தெரியும். அவரவர்களின் மானம் என்பது அவரவர்களின் நடத்தை, பேச்சுக்களில் வெளிப்பட்ட பிறகு அதை மறுக்கவோ, காப்பாற்றவோ வேண்டிய அவசியம் நீதிமன்றத்திற்கு இல்லை.
நேற்றைய தினம் தில்லி விஞ்ஞான் பவனில் நடை பெற்ற நிகழ்வில், ’'இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகம் ஒவ்வொரு நிமிஷமும் அக்னி பரிட்சையை எதிர்கொள்கிறது’’ என தேசிய மனித உரிமை ஆணைய நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் சொன்னதும், அதற்கு பதில் சொல்லும் விதமாக தலைமை நிதிபதி சூர்யகாந்த், ''மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பது தான் தற்போதைய அரசமைப்பு சட்டத்தின் முக்கிய கேள்வியாகும்'' என்று உரைத்ததும் நீதிபதிகள் மக்கள் பக்கம் நிற்க ஆயுத்தமாகிவிட்டார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
மணிப்பூரிலும், ஜார்கண்டிலும், நாகலாந்திலும் நடைபெறும் பல கொடூர மனித உரிமை மீறல்களுக்கு பெரிதாக எதிர்வினையாற்ற மறுத்தவரான தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியனுக்குமே கூட தற்போது ஏதோ லேசாக மனசாட்சி உறுத்த ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்க மாற்றமே!
இது போன்ற உச்ச பதவிகளை எட்ட ஆளும் தரப்பு காட்டிய அனுசரணைக்காக எத்தனை காலம் தான் நீதிபதிகளும் தங்கள் மனசாட்சியை அடகு வைக்க முடியும்? தங்களுடைய பிள்ளைகளையொத்த இளம் தலைமுறையினர் தேசத்தின் ஆன்மாவான தேர்தல் கமிஷனை மீட்க களம் கண்டு அடி உதைபடும் போது, இவர்கள் இன்னும் எவ்வளவு காலம் தான் மெளனிக்க முடியும்…?
நிச்சயமாக தற்போதைய போராட்டங்கள் ஏதோ இரண்டாம் சுதந்திரப் போராட்டம் தொடங்கிவிட்டதோ..என்ற உணர்வைத் தான் தோற்றுவிக்கிறது. இந்தச் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுக்காமல் தற்காப்பு அரசியலையே தலையான கொள்கையாக கொண்டுள்ளது அவலமானதாகும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இங்கு உண்மையிலேயே மக்கள் எழுச்சியை ஏற்படுத்திய வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரணிய சிவாவும், மகாகவி பாரதியாரும் போதுமான முக்கியத்துவம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டனர். ..என்பதைப் பார்த்தோம்.
அப்போது விடுதலை போராட்டத்திற்கு பஞ்சாப் தான் அளப்பரிய தியாகங்களை செய்தது. அப்போது பிரிட்டிஷ் அரசு மூர்க்கமாக பஞ்சாபியர்களை எதிர்கொண்ட போது அம்பேத்கார் எழுதியதை அவரது தொகுப்பில் படிக்க நேர்ந்த போது நான் அதிர்ந்தேன். ''பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே, பஞ்சாபியர்களை நீங்கள் தமிழர்களை போல எண்ணிவிடாதீர்கள். அடக்க நினைத்தால் திமிருவார்கள். இன்னும் வீறு கொண்டு போராடுவார்கள்’’ என்றெழுதி இருந்தார்.
இங்கு நாம் வ.உ.சி யின் வாரிசாக, பாரதியின் பரம்பரையாக, சுப்பிமணிய சிவாவின் வழித் தோன்றல்களாக நம்மை வரித்துக் கொள்ளாத வரை, என்றும் தமிழினத்திற்கு மீட்சியில்லை.
ஆம், இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். மதவெறியர்களிடம் இருந்தும் நாட்டை சூறையாடுபவர்களிடம் இருந்தும் மக்களுக்கு விடுதலை வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/40192562183667853/?rdid=ygoG0MJzJ0IkbWuj
==================================
2
கரப்பான் பூச்சி மக்கள் கட்சி 10 ஆம் தேதி டெல்லியில் நடத்திய போராட்டம் அரசால் கடுமையாக அடக்கி ஒடுக்கப் பட்டது. 245 ரயில்கள் ரத்து செய்யப் பட்டன, 58 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. பல்லாயிரம் பேர் கைது செய்யப் பட்டனர். அடித்து நொறுக்கப் பட்டனர்.
12 ஆம் தேதி காங்கிரசும் இந்தியா கூட்டணி கட்சிகளும் நடத்திய பேரணி அரசால் அனுமதிக்கப் பட்டது. 7 கிலோ மீட்டர் தூரம் பேரணி கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. தலைவர்கள் பேச அனுமதிக்கப் பட்டனர்.
பதிலாக கரப்பான் பூச்சி தலைவர்கள் போராட்டம் நடத்துவதில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டதாக செய்திகள் பரப்பப் பட்டன. எடிட் செய்ய வீடியோக்கள் வெளியாகின.
இன்று கரப்பான் பூச்சி தலைவர்களான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் தடையை மீறி ஜந்தர் மந்தரில் நுழைந்து போராடி கைதாகி உள்ளனர். இந்த இளைஞர்கள் கொஞ்சம் எலைட் பின்னணி, வெளிநாட்டு படிப்பு என்றாலும் போராட்டத்துக்கும் அடக்குமுறைக்கும் அப்படியொன்றும் பயந்தது போலத் தெரியவில்லை.
கரப்பான் பூச்சி மக்கள் கட்சி முறையான வடிவம் இல்லாதது. பல்லாயிரம் இளைஞர்களை திரட்டி வைத்துள்ளது. Volatile, wild ஆனால் காங்கிரஸ் கட்சி அமைதியான பாராளுமன்ற கட்சி என்று ஆளும் தரப்பினர் இந்த மாறுபட்ட அணுகு முறைக்கு காரணம் கூறுகின்றனர்.
காங்கிரஸ் தாங்களும் ஆவேசமான புரட்சிக்காரர்கள் தான் என்று காட்டிக் கொள்ள நேஹா போராவை இணைத்துக் கொள்கின்றனர். ராகுல் நேஹாவுக்கு வழி ஏற்படுத்துகிறார். அகிலேஷ் ஒரு செங்கொடியை நேஹா கையில் கொடுக்கிறார். நேஹா மனதுக்குள் சிரித்து இருப்பார். AISA போராடும் இரு தரப்புடனும் இணைந்து நிற்பது என்ற நிலை எடுக்கிறது.
கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் இன்னொரு பரிமாணமும்
எடுத்துள்ளது. அபிஜித் திப்கே தலித், அம்பேத்காரின் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால் அவரது தலைமை பிகார், உபி, மத்திய பிரதேசம் பகுதிகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தலித் மக்களின் துயரங்களுக்கு எந்தப் பொறுப்பும் எடுத்துக் கொள்ளாத அரசியல் தலைவர்கள் மீதான வெறுப்பு இந்தப் பகுதி
தலித் இளைஞர்களை அபிஜித் தீப்கேவை நம்பிக்கைக்கு உரிய தலைவராகக் பார்க்க வைத்துள்ளது. இந்த விதத்தில் முதல் ஜந்தர் மந்தர் போராட்டங்களின் இருந்து கரப்பான் பூச்சி கட்சி மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் காரணமாகக் பிஜேபி கூட்டணியில் உள்ள தலித் தலைவர் சிராக் பாஸ்வான் கரப்பான் பூச்சி கட்சி மீது அரசு நடத்தும் அடக்குமுறைகளை அடிக்கடி கண்டிக்கிறார். முரண்படுவது போலக் காட்டிக் கொள்கிறார்.
எனவே ஆளும் பிஜேபி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இரண்டும் கரப்பான் பூச்சியை போட்டியாக, எதிராக கருதுகின்றன.
இந்த சூழ்நிலை கரப்பான் பூச்சி கட்சியை கொஞ்ச காலத்துக்காவது வழக்கமான தேர்தல் கட்சியாக மாற விடாது, அது அரசு எதிர்ப்பு பிளாட் பார்ம்
ஆக தொடரக் கூடும். நம்மைப் பொறுத்தவரை தனித்த ஓநாய்கள் அன்புக்கு உரியவை. ( ஆம் ஆத்மி ஒரு கணக்கில் சேராது).
- இரா. முருகவேள்
https://www.facebook.com/1714910257/posts/10217248723646200/?rdid=37Ok2YxC7H5Nl2DM
=======================================================
3
கரப்பான் பூச்சியிடமிருந்து தப்பி வருபவர்களுக்கு எல்லாம் விஜய்ண்ணா சரணாலயமாக இருக்கிறார்.
ஜோக்ஸ் அபார்ட் டெல்லியில் அவ்வளவு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது ராகுல் காந்திக்கு சென்னையில் என்ன வேலை என்ற தோழர்களின் கோபமான பதிவுகள் நிறைய பார்க்க முடிந்தது.
சில யூடியுப் சேனல்களைப் பார்த்த போது கொஞ்சம் வேறு விதமான பிரச்சினை இருக்கும் போலிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி CJP தனது ஓட்டை பிரிக்கப் பார்க்கிறது, ஆம் ஆத்மி உடன் நெருக்கமாக இருக்கிறது என்கிறது. அதன் கீழ் மட்டம் CJP - AAP - RSS- CIA கூட்டு என்று செய்தி பரப்புகிறது.
வேறு ஒரு செய்தி என்னவென்றால் இப்போது நடப்பதற்கு முந்தைய மாணவர் குரல் நிகழ்வில் தேச விரோதிகள் பட்டியலில் காங்கிரஸ் அம்பானி படத்தை சேர்க்கவில்லை என்கிறார்கள். அம்பானி நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும், பிஜேபி சார்பில் ராஜ்ய சபை எம்பியாக இருக்கும் ஒருவரின் மகனுக்கு சமாஜ் வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம் பி பதவி வழங்கப் பட்டுள்ளது.
ஒருவேளை ஆட்சி மாற வாய்ப்பு ஏற்பட்டால் எல்லா கட்சிகளிலும் ஆட்கள் வேண்டும் என்று அம்பானி கள் விரும்புகிறார்கள் என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியானது அம்பானிகளை தனக்கு சாதகமாக மாற்றுவது அல்லது நடுநிலைக்கு தள்ளுவது என்ற திட்டத்துடன் இயங்குகிறது என்கிறார்கள்.
CJP கட்சி இடதுசாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், கட்சி சாராத முற்போக்காளர்கள், காலம் காலமாக அநீதியாக இயங்கும் அரசு இயந்திரம்
மீது கோபம் கொண்ட இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கான தளமாக இருப்பதால், அதைவிட காங்கிரசு கட்சி ஆளும் வர்க்கத்துக்கு நம்பகமான கூட்டாளி என்று நிலைநாட்ட ராகுல் CJP இடமிருந்து விலகி இயங்குகிறார். நாளை காங்கிரஸ் போராட்டமாம்.
இதில் கொஞ்சம் உண்மை இருக்கக் கூடும். கமெண்ட் பகுதியில் இரண்டு லிங்க் கொடுத்து உள்ளேன். கண்ணால் காண்பதும் பொய்.....தொடர்ந்து கவனிப்போம்.
இரா. முருகவேள்
https://www.facebook.com/story.php?story_fbid=10217236541701659&id=1714910257&rdid=xB5zHqcIZ7VpEuqv
==============================================
4
ஒரு மக்கள் எழுச்சி ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு செல்ல ஐந்து கட்டங்களை கடக்க வேண்டும் என்று வண்ணப் புரட்சிகளை ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
1. மக்களின் கோபம் ஒரு முழக்கத்தில் குவிக்கப் படுவது
2. அலை அலையாக போராட்டங்கள் வெடிப்பது
3. சிவில் நிர்வாகம் குலைந்து போவது.
4. ஆளும் கட்சியில் பிளவுகள் உருவாவது
5. அதிகார வர்க்கமும், படைகளும் எதிராகத் திரும்புவது.
இங்கே கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் சர்வாதிகாரத் தன்மை கொண்ட பிஜேபி அரசு சீர்குலைத்துள்ள ஆட்சி அமைப்பு முறையை சரி செய்வதற்கானதாகும்.
இந்த எழுச்சி system ஐ மாற்றும் புரட்சி அல்ல. சீர் செய்யும் அமைதிவழி போராட்டம். இங்கே அரசு நிர்வாகம், படைகள் எழுச்சியில் பங்கு கொள்வது அவசியமில்லை.
முதலாளித்துவ அமைப்புகளும், ஆட்சியாளர்களும் மிகவும் அஞ்சுவது சிவில் நிர்வாகம் குலைந்து போவதற்குதான்.
பிஜேபி அரசு தானே முன்வந்து சிவில் நிர்வாகத்தை குலைத்து
விட்டது. 245 ரயில்கள் ரத்து செய்யப் பட்டன. 45 மெட்ரோ ஸ்டேஷன்கள் மூடப்பட்டன. இணையம் முடக்கப் பட்டது. பல பகுதிகளில் அன்றாட வாழ்க்கை தடம் புரண்டது.
எனவே போராட்டத்தின் நோக்கம் பெருமளவுக்கு நிறைவேறி விட்டது. போராட்டம் நடக்கும் பகுதிகளில் எல்லாம் பொதுமக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இவ்வளவு பெரிய, வீரமும், அர்ப்பணிப்பும் கொண்ட இளைஞர் படை இதற்கு முன் நினைவு தெரிந்த காலத்தில் திரட்டப் பட்டது போலத் தெரியவில்லை.
பிஜேபி யால் தனது ஆதரவாளர்களை திரட்டி நிறுத்த முடியவில்லை. எதிர்ப் பிரச்சாரம் நடத்த முடியவில்லை. அதன் தலைவர்கள் பேசி தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
தீர்மானகரமான தருணத்தில் பிஜேபி கட்சி அரசியல் ரீதியாக தோல்வி அடைந்து விட்டது. இனி அதைச் சரிசெய்ய முடியும் என்று தோன்றவில்லை. முன்பே சொன்னதுதான். முடிவின் தொடக்கம்.
இரா. முருகவேள்
https://www.facebook.com/story.php?story_fbid=10217229666609786&id=1714910257&rdid=2JzMI0suv7hiWmXo
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு