நொய்டா முதல் ஃபாக்ஸ்கான் வரை: இந்திய அரசு யாருக்கானது?
செந்தளம்
நொய்டா பெருநகரத்தில் அறை வாடகை, உணவு, மருத்துவம் என ஒரு குடும்பத்தின் உண்மையான மாதாந்திர வாழ்க்கைச் செலவினம் ரூ.30,000-ஐத் தாண்டிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால், நாளொன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் உழைத்தும் வெறும் ரூ.11,000 முதல் ரூ.13,000 மட்டுமே பெற்றுவந்த தொழிலாளர்கள், தங்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.20,000 ஆக உயர்த்த வேண்டும்; சட்டப்பூர்வ 8 மணி நேரத்திற்கு மேல் செய்யப்படும் வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்; மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் முழுக் கூலியையும் வழங்கி ஒப்பந்த முகவர்களின் ஊதிய மோசடிகளைத் தடுக்க வேண்டும் ஆகிய நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 13 அன்று போராட்டத்தில் குதித்தனர். பட்டினிக்கும் பிழைப்புக்கும் இடையிலான மெல்லிய எல்லையில் ஊசலாடிக் கொண்டிருந்த அவர்களின் இந்தப் போராட்டமும், அதன் மீது ஏவப்பட்ட அடக்குமுறையும், நான்கு மாதங்களாகத் தொடரும் அவர்களின் வாழ்வாதார நெருக்கடியும் ஏதோ ஒரு குறிப்பிட்ட நகரின் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. நவீன இந்தியத் தொழில்துறை கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ள கூலியுழைப்புச் சுரண்டலை இவை அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. அத்துடன், நிதி மூலதன ஆதிக்கத்தின் லாப வெறிக்காக, அரசு எந்திரமானது எவ்வாறு 'சலுகைகளையும் ஒடுக்குமுறையையும்' (Carrot and Stick) ஒருசேரப் பயன்படுத்தி ஆளும் வர்க்கத்தின் பிடியைக் இறுக்கிக் கொள்கிறது என்பதற்கான முதன்மையான அரசியல்-பொருளாதாரச் சான்றாகவும் இப்பிரச்சனை அமைந்துள்ளது.
'சட்ட நடைமுறையே தண்டனை': கார்ப்பரேட்டுகளின் அடியாளாகும் காவல் துறை
நொய்டா தொழிலாளர் போராட்டத்தின் பின்னணியையும், அதற்குப் பிந்தைய பொருளாதாரப் பாதிப்புகளையும் 'தி இந்து' நாளிதழின் செய்திக் குறிப்பு விரிவாகப் பதிவு செய்கிறது. பிணை பெறவும், நீதிமன்ற வாய்தாக்களுக்குச் செல்லவும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைக் கடனாகப் பெற்று பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ள அவலத்தை இத்தரவுகள் தோலுரித்துக் காட்டுகின்றன.
போராட்டம் நடந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து, சேமிப்பைத் தொலைத்து, வறுமையின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 8, 2026 அன்று 'தி இந்து' நாளிதழ் வெளியிட்ட கள ஆய்வறிக்கையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் அளித்த சாட்சியங்களின்படி, சூரஜ்பூர் நீதிமன்றத்திற்கும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும் அலைந்து திரிவது, பிரமாணப் பத்திரங்கள் (Affidavits), சான்றளிக்கப்பட்ட ஆவண நகல்கள் (Certified copies), நோட்டரி கட்டணங்கள் என வெறும் ஆவண தயாரிப்பு வேலைகளுக்கு மட்டும் ஒரு குடும்பம் குறைந்தபட்சம் ரூ.15,000 முதல் ரூ.27,500 வரை செலவிட வேண்டியுள்ளது. சில தொழிலாளர்களுக்கு வழக்கறிஞர்கள் இலவசமாக வாதாடிய போதிலும் இந்த அளவிற்குச் செலவாகியுள்ளது; இன்னும் சில தொழிலாளர்களோ, ஒரு வாய்தாவிற்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை கட்டணமாக வாங்கிக்கொண்டு நீதிமன்றத்திற்கு வராமல் நழுவிய தரகர்களால் ஈவிரக்கமின்றி ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அரசு எந்திரம் தொழிலாளர்களை எவ்வாறு அமைப்புரீதியாக ஒடுக்குகிறது என்பதற்கு, ஒரே சம்பவத்திற்காக வெவ்வேறு காவல் நிலையங்களில் அடுத்தடுத்து பல FIR-களைப் பதிவு செய்யும் தந்திரமே சான்றாக விளங்குகிறது. இதுபோன்ற அடக்குமுறையால், கைதான கரண் என்ற தொழிலாளியின் மாமா அளித்த பேட்டியை 'தி இந்து' நாளிதழ் சுட்டிக்காட்டுகிறது. அச்செய்தியின்படி, இவரை பிணையில் எடுக்க அவரது குடும்பம் ரூ.2.5 லட்சம் வரை செலவிட்டுள்ளதுடன், அவர் சிறையிலிருந்த நான்கு மாதங்களுக்கும் அறை வாடகையையும் வாகனக் கடனையும் (EMI) தண்டத் தொகையோடு கட்ட வேண்டிய கட்டாயத்திற்கும் அக்குடும்பத்தினர் உள்ளாகியுள்ளனர்.
தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுத்தவர்களின் நிலைமை இன்னும் கொடூரமானது. அவர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் (NSA) பாய்ந்துள்ளதோடு, ஒவ்வொருவரும் சுமார் 10 FIRகளை எதிர்கொள்கின்றனர். செயல்பாட்டாளர் ஆதித்யா ஆனந்தின் சகோதரர் கேசவ் ஆனந்த் அளித்த தகவலின்படி, இவர்களுக்கான சட்டப் போராட்டச் செலவு ரூ.7 முதல் ரூ.10 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், நண்பர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் திரள் நிதியையும் (Crowdfunding), பெருங்கடனையுமே அவர்கள் நம்பியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, "சட்ட நடைமுறையே ஒரு தண்டனையாக" மாற்றப்பட்டதில் தப்பிப் பிழைத்து வெளியே வந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலை தேடிச் செல்லும்போது, அவர்கள் மீது போடப்பட்ட காவல்துறை வழக்குகளைக் காரணம் காட்டி கார்ப்பரேட்டுகள் அவர்களுக்கு வேலை வழங்க மறுப்பது, அப்பட்டமான பொருளாதாரப் ஒடுக்குமுறையாகவே உருவெடுத்துள்ளது.
வாழ்வூதிய மறுப்பும் ஆளும் வர்க்கத்தின் மாயச் சலுகையும்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்படாமல் தேங்கிக் கிடந்த நிலையில், அண்டை மாநிலமான ஹரியானாவில் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டதும், ஒரே நிறுவனத்தில் ஒரே மாதிரியான வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இடையே 35 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய வேறுபாடு நிலவியதுமே இந்தப் போராட்டத்தின் உடனடிக் காரணியாக அமைந்தது என 'தி இந்து'வின் மற்றொரு ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அங்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் டெல்லி வாழ்வூதிய ஆய்வறிக்கை ஒரு குடும்பத்தின் வாழ்வூதியம் (Living Wage) மாதம் ரூ.22,494 எனக் குறிப்பிட்டாலும், டெல்லி-நொய்டா பெருநகரப் பகுதியில் ஒரு சிறிய ஒற்றை அறை வாடகைக்கே ரூ.6,000 முதல் ரூ.9,000 வரை செலவிட வேண்டியுள்ள நிலையில், இந்தத் தொகை ஒரு தனிமனிதனின் அடிப்படைத் தேவைகளுக்கே பற்றாக்குறையான ஒன்றாகும். சில தனியார் ஆய்வு நிறுவனங்கள் வெளியிடும் புள்ளிவிவரங்கள்கூட எந்த அளவிற்கு எதார்த்த நிலையிலிருந்து விலகியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உண்மையான 'தேவை அடிப்படையிலான' குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிட, 1957-ஆம் ஆண்டு நடந்த இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் (ILC) 15-வது அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரெப்டாகோஸ் ப்ரெட்' (Reptakos Brett - 1992) தீர்ப்பு ஆகியவை வழங்கிய வழிகாட்டுதல்களே சட்டப்பூர்வ பேரப்பேச்சுகளில் முதன்மையாக எடுத்தாளப்படுகின்றன. 3 நுகர்வு அலகுகள் கொண்ட ஒரு தொழிலாளியின் குடும்பத்திற்கு (4 நபர்கள்) நாளொன்றுக்கு 8,100 கலோரி உணவளிக்க வேண்டும் என்பது டாக்டர் ஆய்கிராய்டின் (Dr. Aykroyd) ஊட்டச்சத்து விதிமுறையாகும். இதனுடன் உடை, வீட்டு வாடகை, எரிபொருள் ஆகியவற்றுக்கான செலவுகளையும்; குழந்தைகளின் கல்வி, மருத்துவம், முதியோர் பராமரிப்பிற்கான 25 சதவீதக் கூடுதல் தொகையையும் சேர்த்துக் கணக்கிட்டால், இன்றைய பணவீக்கச் சூழலில் ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 முதல் ரூ.31,000 வரை இருக்க வேண்டும் என்பதே முதலாளித்துவ அறிஞர்களின் வாதமாக இருக்கிறது. தொழிற்சங்கங்களும் இதை ஒத்த ஊதியத்தையே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்று 'தி இந்து' நாளிதழும் பதிவுசெய்கிறது. ஆனால், உத்தரப் பிரதேச அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமோ, இந்தத் தேவை அடிப்படையிலான கூலியில் மூன்றில் ஒரு பங்கைக் கூட எட்டவில்லை.
இந்த அமைப்புரீதியான உழைப்புச் சுரண்டலை மூடிமறைக்கவும், தொழிலாளர்களின் கொந்தளிப்பு புரட்சிகரமான வர்க்கப் போராட்டமாக உருவெடுத்துவிடாமல் தடுப்பதற்காகவே, போராட்டம் துவங்கிய அடுத்த நாளே 21 சதவீத இடைக்கால ஊதிய உயர்வை அறிவித்து ஒரு தற்காலிகச் சலுகையை (Carrot) அரசு வீசியது. இந்தச் சலுகை என்பது தொழிலாளர் நலன் மீதான அக்கறையினால் வழங்கப்பட்டதல்ல; மாறாக, தொழிலாளர்களின் கோபத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்டுவது போலக் காட்டி, தங்குதடையற்ற நிதி மூலதனக் குவிப்பிற்கு உகந்த சூழலை மீண்டும் உருவாக்குவதற்காக அரசு பயன்படுத்திய ஒரு தந்திரமாகும்.
சுருக்குக்கயிறாகும் சட்டங்கள்: குற்றவாளியாக்கப்படும் உழைக்கும் வர்க்கம்
உழைக்கும் வர்க்கத்தை 'நிரந்தரத் தொழிலாளர்கள்' என்றும் 'ஒப்பந்தத் தொழிலாளர்கள்' என்றும் அமைப்புரீதியாகப் பிளந்துவைக்கும் இரட்டை வேலைவாய்ப்பு முறையும்கூட, இந்த உழைப்புச் சுரண்டலைத் தாங்கிப் பிடிக்கும் பிரதான தூணாக விளங்குகிறது. மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் 'இந்தியத் தொழில் கணக்கெடுப்பு' (ASI) தரவுகளைச் சுட்டிக்காட்டும் 'தி வயர்' (The Wire) கட்டுரை, இந்திய உற்பத்தித் துறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு 42 சதவீதமாக உச்சம் தொட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது. ஒரே தொழிற்சாலையில் ஒரே மாதிரியான உழைப்பைக் கொட்டினாலும், இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களை விட 30 முதல் 50 சதவீதம் வரை குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது; இவர்களுக்குப் பணிக்கொடையோ (Gratuity), முறையான வருங்கால வைப்புநிதியோ (EPF/ESI) கிடையாது.
தங்களின் அடிப்படைப் பிழைப்பிற்காக இவர்கள் ஒன்றுதிரள முயன்றால், 'தொழிற்துறை உறவுகள் தொகுப்புச் சட்டம், 2020'-ன் பிரிவு 62 (Industrial Relations Code, Section 62) சுருக்குக்கயிறாக மாறுகிறது. வேலைநிறுத்தம் செய்வதற்கு 14 நாட்களுக்கு முன்பே கட்டாய முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என்ற கெடுபிடியால், தொழிற்சங்கமற்ற இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தும் தன்னிச்சையான திரள் போராட்டங்கள் (Wildcat Strikes) அனைத்தும் நொடிப்பொழுதில் "சட்டவிரோத வேலைநிறுத்தங்களாக" முத்திரை குத்தப்படுகின்றன.
இதையொட்டி, தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்கள் எப்படி நேரடியாகக் குற்றவியல் வழக்குகளாக உருமாற்றப்படுகின்றன என்பதைப் 'ஸ்க்ரோல்' (Scroll.in) செய்தி ஊடகமும் அம்பலப்படுத்தியுள்ளது. கூலி உயர்வு கேட்டுத் தொழிற்சாலை வாசலில் கூடும் தொழிலாளர்கள் மீது 'சட்டவிரோதக் கூடுதல்' (Unlawful Assembly - BNS 189 / IPC 143) எனவும், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினால் 'கிரிமினல் அத்துமீறல்' (Criminal Trespass - BNS 329 / IPC 441) எனவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பாய்கின்றன. தொழிலாளர் நலச் சட்டங்களின் நிர்வாகப் பரிசீலனையிலிருந்து முற்றிலுமாக விலக்கப்படும் இத்தகைய நியாயமான போராட்டங்கள், பெருநிறுவனங்களின் மூலதனக் குவிப்பைப் பாதுகாப்பதற்காகக் குற்றவியல் சட்டங்களின் ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்டு ஈவிரக்கமின்றி நசுக்கப்படுகின்றன.
உழைப்பைச் சுரண்டி ஊதிப் பெருக்கும் பங்குச்சந்தை லாபம்
தொழிலாளர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கைகளுக்குப் பணிந்து தமது லாபத்தைக் குறைத்துக் கொள்வதற்குப் பதிலாக, ஒடுக்குமுறைக்கான ஒட்டுமொத்தச் செலவையும் கார்ப்பரேட்டுகள் பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் காவல் துறையின் மீதே சாதுரியமாகச் சுமத்துகின்றன. பன்னாட்டு ஏகபோக மூலதனத்தின் வலைப்பின்னலில், தங்களின் மூலதனச் சுழற்சியை வேகப்படுத்தி, தொழிலாளர்களின் உபரி மதிப்பைத் தங்கு தடையின்றிக் கொள்ளையடிப்பதை உத்தரவாதப்படுத்தவே காவல் துறையைத் தங்களின் கூலிப்படையாகக் கார்ப்பரேட்டுகள் ஏவிவிடுகின்றன. அரசு எந்திரத்தின் துணையோடு நடத்தப்படும் இந்த அப்பட்டமான வன்முறையை நியாயப்படுத்தவே, 'சர்வதேச விநியோகச் சங்கிலியைப் (Global Value Chain) பாதுகாக்கிறோம்', 'உரிய நேரத்து விநியோக (Just-in-Time delivery) ஒப்பந்தங்களை நிறைவேற்றுகிறோம்' என்பது போன்ற புதிய-தாராளமய அலங்காரச் சொற்களின் பின்னால் கார்ப்பரேட்டுகள் ஒளிந்துகொள்கின்றன. காவல் துறையின் இந்த ஒடுக்குமுறைதான் பெருநிறுவனங்களின் கணக்குப்புத்தகங்களில் நேரடி லாபமாக மாறுவதற்கு அடிகோலுகிறது.
2023-24 ஆம் ஆண்டிற்கான 'இந்தியத் தொழில் கணக்கெடுப்பு' (ASI) தரவுகள் இந்த ஈவிரக்கமற்ற சுரண்டலைத் தோலுரித்துக் காட்டுகின்றன. இந்திய உற்பத்தித் துறையில் ஒரு தொழிலாளியின் மூலம் கிடைக்கும் 'மொத்தக் கூடுதல் மதிப்பு' (Gross Value Added - GVA) ஆண்டுக்கு ரூ.15.84 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், அந்தத் தொழிலாளிக்கு வழங்கப்படும் சராசரி ஆண்டு ஊதியமோ வெறும் ரூ.2.16 லட்சமாகவே தேங்கிக் கிடக்கிறது. இந்த மொத்த மதிப்பில் மூலதனப் பங்கைக் கழித்த பின்னர் கணக்கிடப்படும் 'நிகரக் கூடுதல் மதிப்பை' (Net Value Added - NVA) அளவுகோலாகக் கொண்டாலும் கூலி விகிதம் குறைந்தே காணப்படுகிறது. ஆண்டுத் தொழில் கணக்கெடுப்பு (ASI) தரவுகளின்படி, உழைப்பால் உருவாக்கப்பட்ட இந்த நிகரக் கூடுதல் மதிப்பில் (NVA) தொழிலாளர்களின் 'ஊதியப் பங்கு' வெறும் 15.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநேரத்தில், அந்த நிகர மதிப்பில் முதலாளிகளின் 'லாபப் பங்கு' 51.9 சதவீதமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, ஒரு தொழிலாளி உருவாக்கும் புதிய மதிப்பில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே அவனுக்குக் கூலியாகத் திரும்பக் கிடைக்கிறது; பாதிக்கும் மேற்பட்டவை மூலதன லாபமாக அப்பட்டமாக பறித்தெடுக்கப்படுகிறது.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பும், மனிதவள மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட 'இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை - 2024' (India Employment Report 2024), கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளர்களின் உண்மையான உற்பத்தித்திறனுக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் உண்மையான ஊதியத்திற்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.
தொழிலாளர்களுக்குச் செல்ல வேண்டிய இந்த கூடுதல் மதிப்பைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், கார்ப்பரேட்டுகள் தங்களின் 'இயக்க லாபத்தை' (EBITDA) நேரடியாகப் பெருக்கிக் கொள்கின்றன. இத்தகைய கட்டமைப்புரீதியான கூலிக் குறைப்பும், ஒடுக்குமுறையும் நிறுவனங்களின் 'பங்கு மூலதனத்தின் மீதான வருவாயையும்' (Return on Equity - ROE), 'ஒரு பங்கிற்கான ஈவுத்தொகையையும்' (Earnings Per Share - EPS) செயற்கையாக ஊதிப் பெருக்குகின்றன. இதன்மூலம் தனியார் பங்கு முதலீட்டாளர்களும் நிறுவன முதலீட்டாளர்களும் அடங்கிய நிதி மூலதனக் கும்பல் தங்களின் பங்குச்சந்தை மதிப்புகளை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாத்துக் கொள்கிறது.
நீதித்துறையின் அப்பட்டமான வர்க்கச் சார்பு
தொழிலாளர் நலச் சட்டக் கட்டமைப்பிற்குள் நடக்கும் தனிநபர் பணிநீக்கம் அல்லது ஊதிய நிலுவை தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக தொழிலாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தாலும், ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூட்டுப்பேர போராட்டங்கள் என்று வரும்போது நீதிமன்றங்களின் வர்க்கச் சார்பு அப்பட்டமாக வெளிப்படுகிறது. ஆலை நிர்வாகங்கள் தங்களின் உற்பத்தி தடைபடுமெனக் கூறி நீதிமன்றங்களை அணுகும்போது, வேலைநிறுத்தங்களுக்கும் தொழிற்சாலை வாசலில் கூடுவதற்கும் எதிராகச் சிவில் நீதிமன்றங்கள் வெறும் 24 மணி நேரத்திற்குள் தடையாணை (Injunctions) வழங்கி, நிர்வாகத்தின் மூலதனப் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன என 'சுப்ரீம் டுடே' என்ற சட்ட ஆய்விதழ் விளக்குகிறது.
கண்ணியமான வாழ்வூதியத்தைக் கேட்கும் தொழிலாளர்களை அரசு பயங்கரவாதிகள் போல நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உரைத்ததாக 'தி இந்து' செய்தி அறிக்கை பதிவுசெய்கிறது. ஆனால், இத்தகைய வெற்று உபதேசங்களுக்கு நேர்மாறாக, கீழமை நீதிமன்றங்களில் தொழிலாளர்களின் பிணை மனுக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு, அவர்களின் சிறைக்காவல் பல மாதங்களுக்கு ஈவிரக்கமின்றி நீட்டிக்கப்படுகிறது.
ஒரே சம்பவம் தொடர்பாகப் பல்வேறு காவல் நிலையங்களில் அடுத்தடுத்துப் பல முதல் தகவல் அறிக்கைகள் (FIRs) பதியப்படுகின்றன; கடுமையான பிணைப் பத்திரக் கெடுபிடிகளும் தொடர்கின்றன. இதற்கிடையே, கார்ப்பரேட்டுகளும் களத்தில் நின்ற தொழிலாளர்களைத் தங்களின் மறைமுகத் தடைப் பட்டியலில் (Blacklisting) தள்ளி வேலைவாய்ப்பை முற்றிலுமாகப் பறிக்கின்றன. அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் இந்தத் தாக்குதல்கள் தொழிலாளர்களைப் பொருளாதார ரீதியாக எவ்வாறெல்லாம் முடக்கி, அவர்களின் கூட்டுப் பேரம்பேசும் உரிமையை நசுக்குகின்றன என்பதை 'நியூஸ்லாண்ட்ரி' (Newslaundry) ஊடகச் செய்தியிலும்கூட அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய சலுகைகளை வழங்கிப் போராட்டத்தைத் தணிக்கும் அதேவேளையில், அதன் தலைமையைக் குற்றவியல் வழக்குகளில் சிக்கவைத்து வேட்டையாடுவதே தரகு-முதலாளித்துவ அரசின் ஒருங்கிணைந்த ஒடுக்குமுறை உத்தியாகும்.
சாம்சங் முதல் ஃபாக்ஸ்கான் வரை: மூலதனத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத்தான் இந்தக் கதி என்றால், பன்னாட்டு மூலதனத்திற்குச் சேவை செய்வதற்காக, 2024 செப்டம்பர் – அக்டோபரில் நடந்த ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை பாசிச திமுக அரசு எப்படியெல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது என்பதை நினைத்துப் பார்த்தாலே, இந்த அரசுகள் யாருக்கானது என்பது அப்பட்டமாகப் புரியவரும்.
பட்டினிக்கும் பிழைப்புக்கும் இடையிலான இந்தத் தொழிலாளர்களின் போராட்டமும், அதன் மீதான ஒடுக்குமுறையும் நொய்டாவிலோ அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களுடனோ முடிந்துவிடுவதில்லை. கடந்த காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தொழிலாளர் போராட்டங்களும், அவற்றை அரசு எந்திரம் ஈவிரக்கமின்றி நசுக்கிய வரலாறும் இதற்குத் இரத்த சாட்சியாக விளங்குகின்றன.
2005-இல் குருகிராம் ஹோண்டா ஆலையில் அமைதிவழியில் பேரணி நடத்திய தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட கொடூரத் தடியடியில் 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
2009-இல் கோயம்புத்தூர் பிரிகால் ஆலையில் 42 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ததற்காக 1,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, 8 தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கீழமை நீதிமன்றம் முதலாளித்துவ விசுவாசத்தைக் காட்டியது.
2012-இல் மானேசர் மாருதி சுசுகி ஆலையில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஒடுக்கப்பட்டதும், 2020-இல் கோலார் விஸ்ட்ரான் ஐபோன் ஆலையில் உறுதியளிக்கப்பட்ட ரூ.15,000 ஊதியத்திற்குப் பதிலாக ரூ.8,000 மட்டுமே வழங்கிய நிர்வாகத்தின் ஊதியத் திருட்டைக் தட்டிக் கேட்டதற்காக 156 தொழிலாளர்களைச் சிறையிலடைத்து, 10,000 பேரின் வேலைவாய்ப்பை ஒரே இரவில் பறித்ததும் இதே அரசு எந்திரங்கள்தான்.
2021-இல் ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலையில் தரமற்ற உணவால் 250-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு உணவு நச்சு ஏற்பட்டதைக் கண்டித்துப் போராடிய செயல்பாட்டாளர்களைக் கைது செய்து, பெண் தொழிலாளர்களை விடுதிகளில் வலுக்கட்டாயமாக அடைத்து நிர்வாகத்தின் நற்பெயரைக் காப்பாற்றியதும் இதே காவல் துறைதான்.
தரகு-முதலாளித்துவ அரசை வீழ்த்துவதே பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை
மார்க்சிய-லெனினியம் அறுதியிட்டு கூறுவது போல, முதலாளித்துவ அரசு என்பது வர்க்க முரண்பாடுகளைச் சமரசம் செய்யும் நடுநிலையான அமைப்பல்ல; மாறாக, அது ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கவும் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி ஒடுக்கவும் பயன்படும் கருவிதான் என்பதே மீண்டும் மீண்டும் நிரூபனமாகி வருகிறது. அரசு வழங்கும் சிறிய ஊதியச் சலுகைகளும், ஒப்பந்தக்காரர்கள் மீது எடுக்கப்படும் பெயரளவிற்கான நடவடிக்கைகளும் முதலாளித்துவக் கட்டமைப்பைக் காப்பாற்றப் பயன்படும் கேடயங்களே தவிர, தொழிலாளர் நலனுக்கானவை அல்ல.
முதலாளித்துவ நீதிமன்றங்களும், காவல் துறையும், தொழிலாளர் நலச் சட்டங்களும் இறுதியாகவும் முதன்மையாகவும் நிதி மூலதனத்தின் தனிச்சொத்துடைமையையும் லாப வீதத்தையும் பாதுகாக்கும் வரம்புகளுக்குள்ளேயே இயங்குகின்றன. தொழிலாளர்கள் தங்களின் கூலி உயர்வுக்காக நடத்தும் தன்னிச்சையான தொழிற்சங்கப் போராட்டங்கள் முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் சில தற்காலிக ஊதியச் சலுகைகளைப் பெற்றுத் தந்தாலும், கூலி அடிமைத்தனத்தையும் மூலதனத்தின் ஆதிக்கத்தையும் முழுமையாக ஒழிக்க முடியாது என்பதையே மேற்கண்ட செய்திகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்கள் வெறுமனே பொருளாதாரச் சீர்திருத்தக் கோரிக்கைகளுடன் நின்றுவிடாமல், தரகு-முதலாளித்துவ அரசின் சலுகை மாயைகளையும், நீதிமன்றங்களின் வர்க்கச் சார்பையும் உணர்ந்து, பாட்டாளி வர்க்க உணர்வுடன் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தையும் அதன் ஒடுக்குமுறை எந்திரத்தையும் வீழ்த்தும் புரட்சிகர அமைப்பாய் திரள்வது மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான விடுதலையைச் சாத்தியமாக்கும்.
- செந்தளம்