பாசிசம் பற்றிய மார்க்சிய வரையறையும் மார்க்சியத்திற்கு எதிரான வரையறைகளும்
இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 1
முன்னுரை
இந்தியப் பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் எனும் இந்த அறிக்கை இந்திய பாசிசம் பற்றி மார்க்சிய அடிப்படையில் வரையறுத்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைத்து பாசிசத்தை வீழ்த்தும் நோக்கத்திற்கான இ.க.க. (மா.லெ) (ம.யு. - போல்ஷ்விக்) கட்சியின் தீர்மானமாகும்.
இந்த அறிக்கையானது, ஏ.எம்.கே வின் 'காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்', 'இந்தியப் பாசிசத்தின் பொருளியல் அடிப்படை', 'ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும் திராவிடமும் ஒன்றே', 'இந்தியப் புரட்சியின் போர் தந்திரம் செயல் தந்திரம்', 'கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்', 'சர்வதேச அரசியல் பொதுவழி பற்றிய தீர்மானம் ஓர் அறிமுகம்' எனும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும், டிமிட்ரோவின் ஐக்கிய முன்னணி தந்திரம், டோக்ளியாட்டியின் பாசிசம் பற்றிய விரிவுரைகள் போன்ற நூல்களை அடிப்படையாகக் கொண்டும் எழுதப்பட்டுள்ளது. மட்டுமன்றி மேற்கூறிய நூல்களின் வாக்கியங்கள் அறிக்கையின் பெரும்பான்மையான இடங்களில் அவ்வாறே எடுத்து கையாளப்பட்டுள்ளது. காங்கிரசு பாஜக ஆட்சிகளின் அரசியல் பொருளாதார கொள்கைகள் பற்றிய மஜஇகவின் பிரசுரங்களும் எடுத்து கையாளப்பட்டுள்ளது.
பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை அடிப்படை வர்க்கங்களுடன் கீழிருந்து கட்டியமைக்க வேண்டிய பிராதன பணியின் அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. ஆளும் வர்க்கங்கள் - சமரச சக்திகள் - திருத்தல்வாதிகளின் அரசியல் பொருளாதார திட்டங்களுக்கு மாற்றாக மார்க்சிய திட்டம் ஒன்றை முன்வத்து அவர்களின் செல்வாக்கிலிருந்து மக்களை வென்றெடுப்பதே குறிப்பான திட்டத்தின் நோக்கம் என்பதையும், அடிப்படை வர்க்கங்களுடன் ஐக்கிய முன்னணி கட்டத்திற்கு கட்டம் மாறாது; மாறாக முதலாளிய வர்க்கத்தின் எவ்வித மாற்றுக் கொள்கையுமில்லாத, பாசிச எதிர்ப்பு திட்டமில்லாத காங்கிரசை பாஜகவிற்கு மாற்று என முன் நிறுத்தப்படும் சூழலில்... ஒரு பிரிவின் பாத்திரமே கட்டத்திற்கு கட்டம் மாறுபடுகிறது என்பதையும் இந்த அறிக்கை ஆழமாக வலியுறுத்துகிறது.
இரண்டாம் உலகப் போரில் ஏகாதிபத்திய முகாம், பாசிச முகாம் என்ற இரு முகாம்கள் இருந்தன. மேலும் மோதுகின்ற இரு பக்கத்தில் ஒரு பக்கம் சோசலிச ரஷ்யா இருந்தது. எனவே ஐக்கிய முன்னணி கொள்கை எனும் மார்க்சிய லெனினிய செயல்தந்திரம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த நிலைமைகள் தற்போது இல்லை. தற்போது எல்லா ஏகாதிபத்திய நாடுகளும் பாசிசத்தை கட்டியமைத்து வருகின்றன. ஆகவே பாசிச எதிர்ப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாக உள்ளது. மேலும் சோசலிச முகாம் இல்லாத இன்றைய சூழலில், இரு ஏகாதிபத்திய முகாம்களின் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போர் நடைபெற்று வருவதால் அன்றைய ஐக்கிய முன்னணி கொள்கை தற்போது பொருந்தாது. உள்நாட்டு யுத்தக் கொள்கையே இன்று பொருத்தமானதாகும். அதாவது இரு ஏகாதிபத்திய முகாம்கள், அவைகளின் புதிய காலனிய ஆளும் வர்க்க ஏஜெண்டுகளை எதிர்த்து செயல் தந்திரம் அமைத்துக் கொள்ள வேண்டும் என இந்த அறிக்கை மார்க்சிய லெனினிய அடிப்படையிலிருந்து வலியுறுத்துகிறது.
இந்திய அளவில் பாசிசம் குறித்து ஒரு சரியான அரசியல் நிலைபாட்டினை இ.க.க. (மா.லெ.) (ம.யு. போல்ஷ்விக்) கட்சி வந்தடைந்திருக்கிறது. பாசிச எதிர்ப்பை முன்னெடுக்கும் மாலெ அமைப்புகள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள், பல்வேறு வர்க்க அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு சரியான முடிவை வந்தடைவதற்கான அறிக்கையாக இது இருக்கும் என்பதால் இதை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் கருதி சமரன் இதை பதிப்பிக்கிறது.
சமரன்
I
பாசிசம் பற்றிய மார்க்சிய வரையறையும் மார்க்சியத்திற்கு எதிரான வரையறைகளும்
பாசிசம் பற்றிய மார்க்சிய வரையறையை டோக்ளியாட்டி பின்வருமாறு வரையறுத்து தந்துள்ளார்.
"பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்தியவாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்"
(பாசிசம் குறித்த ஆய்வுரைகள் -டோக்ளியாட்டி)
இதுவே கம்யூனிஸ்ட் அகிலத்தின் விரிவான நிர்வாகக் குழுவின் 13வது கூட்டத்தின் தீர்மானமும் ஆகும்.
இந்த வரையறையிலிருந்து மாவோ சீனப் பாசிசத்தை ஜப்பான்-அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் தரகு முதலாளிய நிலக்கிழமை பாசிசம் என வரையறுத்தார்.
டோக்ளியாட்டி மற்றும் மாவோவின் வரையரைகளிலிருந்து இந்தியப் பாசிசத்தை ஏ.எம்.கே பின்வருமாறு வரையறுத்து தந்துள்ளார்.
இந்தியப் பாசிசம் என்பது அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதனம் மற்றும் அதன் சேவகனான இந்தியப் பெரும் தரகு அதிகார வர்க்க மூலதனத்தின் நலன்களுக்காகவும் நிலவுடைமைக் கும்பல்களின் நலன்களுக்காகவும் கட்டியமைக்கப்படும் பாசிசமாகும். சாதிவெறிமிக்க - மதவெறி மிக்க - தேசிய இனவெறி மிக்க இந்துத்துவம் மற்றும் பெருந்தேசிய வெறி எனும் இரு வடிவங்களில் வெளிப்படும் இந்திய பாசிசம் என்பது குறிப்பிட்டதொரு வரலாற்று சூழலில் அமெரிக்க ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்கத்திற்குச் சேவை செய்யும் தரகு முதலாளித்துவ - நிலவுடைமை உற்பத்தி முறையின் மேற்கட்டுமான அரசு வடிவமாகும்.
இந்த வரையறையிலிருந்தே நாம் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். அதாவது பாசிசக் கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவுக் கட்சிகளை இலக்காகக் கொண்டு, பாசிசத்தால் ஒடுக்கப்படும் அடிப்படை வர்க்கங்கள் மற்றும் அவர்களது இயக்கங்களை நட்பு சக்திகளாகக் கொண்டு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முண்ணனியினை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும்.
பாசிசம் முதலாளிய வர்க்கத்தினருக்கு ஏன் தேவைப்படுகிறது? என்று கேள்வி எழுப்பி டோக்ளியாட்டி பின்வருமாறு பதில் தருகிறார்:
"இதற்கான விடையை லெனினிடமிருந்தே பெறலாம். ஏகாதிபத்தியம் பற்றி அவர் எழுதியுள்ளவற்றில் நீங்கள் காணலாம். ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால் பாசிசம் என்ன என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது.
ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அம்சங்களை நீங்கள் அறிவீர்கள். லெனின் அளிக்கும் விளக்கமும் உங்களுக்குத் தெரியும். ஏகாதிபத்தியம் என்பது பின்வருமாறு குணாம்சப்படுத்தப்படுகின்றது. (1) உற்பத்தி மற்றும் மூலதனக் குவிப்பு. பொருளாதார வாழ்வில் ஒரு தீர்மானகரமான பங்கை வகிக்கக் கூடிய ஏகபோகங்களின் உருவாக்கம். (2) வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் இணைக்கப்படுதல். நிதி மூலதனத்தின் அடிப்படையில் நிதியாதிக்க கும்பல்கள் உருவாதல். (3) மூலதன ஏற்றுமதி மூலம் அடையப்படும் பெரும் முக்கியத்துவம் (4) சர்வதேச முதலாளித்துவ ஏகபோகங்களின் தோற்றம் (5) பெரும் முதலாளித்துவ நாடுகளிடையே உலகை பங்கீடு செய்யும் பணி பூர்த்தியடைதல்.
இவைதான் ஏகாதிபத்தியத்தின் அம்சங்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிற்போக்கான உருமாற்றத்தை அடையும் போக்கும் அனைத்து முதலாளிய அரசியல் அமைப்புகளிலும் காணப்படுகிறது. இதையும் கூட லெனின் எழுத்துகளில் நீங்கள் காணலாம். இத்தகைய அமைப்புகளைப் பிற்போக்கானதாக ஆக்க வேண்டுமென்ற போக்கு உள்ளது. இந்தப் போக்கு பாசிசத்துடன் மிகவும் இணக்கமான வடிவங்களில் தோன்றுகிறது. ஏன்?
ஏனென்றால் வர்க்க உறவுகள் மற்றும் தங்களுடைய இலாபங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையை வைத்துப் பார்க்கும் பொழுது, தொழிலாளிகள் மீது மிகுந்த நிர்ப்பந்தம் செலுத்துவதற்கான வடிவங்களை முதலாளியவர்க்கம் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மேலும், ஏகபோகங்கள் அதாவது முதலாளிய வர்க்கத்தின் தலையாய சக்திகள், குவிப்பின் மிக உயர்ந்த கட்டத்தை அடைகின்றன. அப்போது ஆட்சியின் பழைய வடிவங்கள் அவற்றின் விரிவாதிக்கத்திற்கு தடைக் கற்கள் ஆகிவிடுகின்றன. இதனால் முதலாளிய வர்க்கம் தான் உருவாக்கியதற்கு எதிராகவே திரும்ப வேண்டியுள்ளது. ஏனென்றால் ஒரு சமயம் அதனுடைய வளர்ச்சிக்கான அம்சமாக இருந்தது. இன்று முதலாளித்துவ சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு இடையூறாகவே இருக்கிறது.
இதன் காரணமாகத் தான் முதலாளிய வர்க்கத்தினர் பிற்போக்காளர்களாக மாறி பாசிசத்தை கடைபிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்" என்கிறார் டோக்ளியாட்டி.
அதாவது, ஏகாதிபத்தியங்கள் தங்களது இலாபங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தொழிலாளர்கள் மீது மென்மேலும் நிர்ப்பந்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதற்கு பழைய அரசு வடிவங்கள் பொருந்தாமல் போகவே "பாசிசம்" எனும் பிற்போக்கான அரசு வடிவத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக- பிற்போக்கானதாக மாறிய பிறகு, நெருக்கடி முற்றும் போது - பாசிசத்தைக் கடைபிடிக்கிறது.
இது பற்றி டிமிட்ரோவ் கூறுவதாவது:
"ஏகாதிபத்திய வட்டாரங்கள் தமது நெருக்கடியின் சுமை முழுவதையும் உழைப்பாளர்களின் முதுகிலேயே சுமத்தி வைக்க தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு பாசிசம் அவசியப்படுகிறது.
அவர்கள் பலவீனமான நாடுகளை அடிமைப்படுத்துவதன் மூலமும், காலனிய ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், ஒரு யுத்தத்தின் மூலமும், உலகை மீண்டும் புதியதாக பங்கு போட்டுக்கொள்வதன் மூலமும் தமது சந்தைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு பாசிசம் அவசியப்படுகிறது.
அவர்கள் புரட்சிகரமான தொழிலாளர்கள் விவசாயிகள் இயக்கத்தை அடித்து உலகப் பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலனான - சோவியத் யூனியனுக்கு எதிராக ஒரு இராணுவ தாக்குதல் நடவடிக்கையை எடுப்பதன் மூலம்- புரட்சிகர சக்திகளின் வளர்ச்சியை முன் கூட்டியே தடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு பாசிசம் அவசியப்படுகிறது" என்கிறார் டிமிட்ரோவ்.
இந்தியாவில் பாசிசம் கட்டியமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் பாசிசம் வெற்றி பெறவில்லை. பாசிசத்தின் வெற்றியின் குணாம்சம் என்ன? என்பது பற்றி டிமிட்ரோவ் பின்வருமாறு வரையறுக்கிறார்:
"பாசிசத்தின் வெற்றியின் குணாம்சம் என்ன? இந்த வெற்றி ஒரு பக்கம் பாட்டாளி வர்க்கத்தின் பலவீனங்களை எடுத்துக் காட்டுகிறது. முதலாளிய வர்க்கத்துடன் வர்க்க சமரசம் செய்து கொண்டு அதனுடன் கூட்டாளியாக நிற்கும் சமூக-ஜனநாயகத்தின் சீர்குலைவுக் கொள்கையின் காரணமாய் ஸ்தாபன ரீதியில் வலுவிழந்து பாட்டாளி வர்க்கம் சிந்தி சிதறி சின்னா பின்னமாகிக் கிடப்பதைக் காட்டுகிறது. மறுபக்கத்தில் முதலாளிய வர்க்கம் தன்னுடைய பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் உருவாவதைக் கண்டு பயப்படுகிறது. புரட்சியைக் கண்டு பயப்படுகிறது. முதலாளிய வர்க்கம் தனது சர்வாதிகாரத்தை தங்கள் பழைய முறைகளில் முதலாளிய ஜனநாயகம், பாராளுமன்ற முறைகள் மூலம் நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது".
[பாசிஸ்ட் தாக்குதலும், பாசிசத்திற்கெதிராக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கடமைகளும்]
டிமிட்ரோவின் வரையறைகளிலிருந்து இந்தியாவில் பாசிசம் கட்டியமைக்கப்படும் பணி மெல்ல மெல்ல நிலை நிறுத்தப்பட்டு வருகிறது என்பதையும், பாசிசம் இன்னும் முழுமையாக வெற்றியடையவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இதற்கேற்றாற் போல நமது செயல் தந்திரங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். பாசிசமே இல்லை என்று வரையறுப்பதும், பாசிசம் வெற்றி பெற்று விட்டது என்று கருதுவதும், பாசிசம் வெற்றி பெற்றால் அவ்வளவு தான்; அது நிலையானது என்று கருதுவதும் நம்மை தவறான திசை வழியில் விட்டுவிடும். இந்தியாவில் பாசிசத்தை அதன் துவக்க நிலையிலேயே முறியடிப்பது அவசியமாகும். மத்திய மாநில அரசுகளின் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளால் ஒடுக்கப்படும் வர்க்கங்களிடையே பாசிச எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி அவர்களை அணி திரட்ட வேண்டும்.
பாட்டாளி வர்க்க தலைமையில் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள், பணக்கார விவசாயிகள், மாணவ-மாணவிகள், பெண்கள், மீனவர்கள், புரட்சிகர ஜனநாயக சக்திகள், தேச பக்தர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்டவர்களைக் கொண்ட ஒரு "தேச பக்த ஜனநாயக முன்னணியை" அமைக்க வேண்டும்.
பாசிசம் என்பது பொருளாதாரத் துறையில் ஏகாதிபத்தியத்தின் பலவீனத்தைக் காட்டினாலும், அந்த பொருளாதார நெருக்கடியினால் மக்களிடையே வலுப்பெறும் சாதி, மத, இன உணர்வுகளைத் திரட்டி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாசிசம் தனக்கான பலமான சமூக அடித்தளத்தை (மக்களின் ஆதரவை) உருவாக்கிக் கொள்கிறது. இந்து மதத்திலுள்ள பிற்போக்கு சக்திகளையும், அனைத்து சாதியிலுமுள்ள பின் தங்கிய சக்திகளையும் தன்பால் ஈர்த்துக் கொள்கிறது.
பாசிசம் மக்களிடையே செல்வாக்கு பெறுவதற்கான காரணம் என்ன?
பாசிசம் மக்களை கவர முடிந்ததற்கு காரணம் அது மக்களுடைய ஆக அவசர அவசியமான தேவைகளையும் கோரிக்கைகளையும் பற்றி ஆவேசமாக வாய்ச்சவடால் அடித்துப் பேசி வேண்டுகோள் விடுக்கிறது. மோடி கும்பல் வளர்ச்சி, வல்லரசு, டிஜிட்டல் இந்தியா, நவீன இந்தியா, ஆஸ்பிரேஸனல் இந்தியா என வாய்ச்சவடால்கள் மூலம் மக்களை இவ்வாறே ஈர்க்கிறது.
பாசிசம் மக்களுடைய உள்ளங்களில் ஊறிப் போயிருக்கிற வெறுப்புகளையும் தப்பெண்ணங்களையும் கிளறித் தூண்டிக் கிளப்பிவிடுவது மட்டுமல்ல, மக்களுடைய நல்லுணர்வையும், நியாய எண்ணங்களையும், சில சமயங்களில் புரட்சிகரமான பாரம்பரியங்களைக் கூட பயன்படுத்திக் கொள்கிறது. பெரும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கூலிகளான, சோசலிசத்தின் ஜென்ம விரோதிகளான ஜெர்மன் பாசிஸ்ட்டுகள் மக்கள் மத்தியில் தங்களை சோசலிஸ்ட்டுகள் என்றும், தாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது பெரும் புரட்சி என்றும் ஏன் தங்களை கூறிக் கொண்டார்கள்? காரணம் ஜெர்மனியின் பரந்த உழைக்கும் மக்களின் உள்ளங்களில் உயிர்த் துடிப்புடன் இடம் பெற்றுள்ள புரட்சியின் பால் அவர்களுக்குள்ள நம்பிக்கை, சோசலிசத்தின் பால் அவர்களுக்குள்ள ஆர்வம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டார்கள். இந்துத்துவப் பாசிச கும்பல்கள் மக்களிடம் உள்ள தேச பக்தியை பயன்படுத்த தாங்கள் தேசபக்தர்கள் போல அவ்வாறே நாடகமாடுகிறார்கள்.
பாசிசத்தின் குறிக்கோள் மக்களை எந்தவிதமான தங்குதடையுமின்றி ஆகக் கடுமையாகச் சுரண்டுவதாகும். ஆனால் அது பேசுவதெல்லாம் முதலாளித்துவ எதிர்ப்பு வாய் வீச்சாகும். ஊழல் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, கருப்பு பண மீட்பு என பாசிசம் வாய்ச்சவடால் அடிக்கிறது. மக்களுக்கு முதலாளித்துவ வர்க்கத்தின் மேலுள்ள வெறுப்பை பயன்படுத்திக் கொள்கிறது. தனி நபர்களின் நலன்களைக் காட்டிலும் தேச நலன்கள் உயர்ந்தவை என வெற்று முழக்கத்தை முன்வைக்கிறது. ஊழலற்ற அரசு அமைக்கப்போவதாகச் சொல்லி மலிந்து போன ஊழல் அரசை அமைக்கிறது.
பாசிசம் அந்தந்த நாட்டின் சிறப்பியல்புகளுக்கு தக்கபடியும், இன்னும் ஒரே நாட்டில் பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கு தக்கபடியும் தனது வாய்ச் சவடால்களை அமைத்துக் கொள்கிறது. மாணவர்கள், வணிகர்கள், நடுத்தர விவசாயிகள் போன்ற குட்டி முதலாளிய பிரிவினரும், தொழிலாளர்களில் ஒரு பகுதியினரும் கூட இல்லாமை, வறுமை, வேலை வாய்ப்பின்மை, வாழ்க்கை பாதுகாப்பின்மை ஆகிய கொடுமைகளால் அவதிப்பட்டு விரக்தி அடைந்து பாசிசத்தின் தேசியவெறி பிடித்த வாய்ச்சவடாலுக்கு பலியாகிவிடுகின்றனர்.
பாசிச சித்தாந்தம் ஒரு கதம்ப கூட்டாகத்தான் வெளிப்படுகிறது. ஒரு வெறித்தனமான தேசியவாத தத்துவம் என்பது அனைத்து இடங்களிலும் அனைத்து பாசிச இயக்கங்களுக்கும் ஒரு பொதுவான அம்சமாகும்.
கதம்பக் கூட்டானது, உழைக்கும் வெகுஜனப் பகுதியினர் மீது சர்வாதிகாரத்தை திணிப்பதற்கான போராட்டத்தில் பலதரப்பட்ட கோஷ்டிகளையும், வர்க்கங்களையும் இணைப்பதற்கும் இதன் பொருட்டு ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்குவதற்கும் இது பயன்படுகிறது. இது வாய்ப்பு கிடைத்தால் கழிசடைப் பிரிவை மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கத்தில் உள்ள பின் தங்கிய சக்திகளையும் திரட்டிக் கொள்கிறது.
தேசியவாத தத்துவம் என்பது நேரடியாகவே முதலாளித்துவ வர்க்கத்துக்கு தொண்டு செய்கிறது: மற்றொரு பகுதி ஒரு பிணைப்பாகச் செயல்படுகிறது.
பாசிச சித்தாந்தம் மிக உறுதியான, முழுமையான, ஒரே சீரான சித்தாந்தம் என்று கருதும் போக்கு தவறானது. பச்சோந்தியைப் போன்று நேரத்திற்கு தகுந்தாற் போல் வடிவத்தை எடுப்பதில் பாசிச தத்துவத்தை விட வேறெதுவும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம் எய்த விரும்பும் குறிக்கோள்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீர்கள் என்கிறார் டோக்ளியாட்டி.
ஆனால் பாசிசம் எந்த முகமூடியுடன் ஆட்சிக்கு வந்தாலும், அது...
முதலாளித்துவம் உழைக்கும் மக்கள் மீது மிகவும் கொடூரமாக கோரமாக நடத்தும் தாக்குதல் ஆகும்.
பாசிசம் என்பது கடிவாளம் இல்லாத தேசியவெறியும் இனவெறியும் சாதிவெறியும் மத வெறியும் ஆதிக்க வெறியும் பிடித்த யுத்தமாகும்.
பாசிசம் என்பது வெறி பிடித்த பிற்போக்குத் தனமும் எதிர் புரட்சியுமாகும்.
பாசிசம் தொழிலாளி வர்க்கத்தின், சகல உழைக்கும் மக்களின் கொடிய விரோதியாகும்.
பாசிசம் ஆட்சிக்கு வந்த பிறகு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கற்றுப் போகிறது. காரணம் அதன் பொருளியல் அடிப்படையை அதனால் மாற்ற முடிவதில்லை. ஜெர்மனியில் அது யூதர்களை மட்டுமல்ல, ஜெர்மானிய உழைக்கும் மக்களையும் கொடூரமாக வேட்டையாடியது.
இந்துத்துவப் பாசிசம் இசுலாமியர்களை மட்டுமல்ல இந்துக்களின் இரத்தத்தையும் குடிக்கும் என்பதை கோத்ரா, குஜராத், டெல்லி கலவரங்கள் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன.
5 இலட்சம் விவசாயிகள் இதுவரை தற்கொலைக்கு தள்ளப் (கொல்லப்) பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே.
பாசிசத்தின் வளர்ச்சியும் பாசிச சர்வாதிகாரமும் பல்வேறு நாடுகளில் பல்வேறுபட்ட வடிவங்களில் வந்திருக்கின்றன. அந்தந்த நாட்டு வரலாறு, சமுதாயம், பொருளாதாரம் ஆகிய நிலைமைகளுக்கு தக்கபடி தேசிய தனித்தன்மைகளுக்கும் குறிப்பிட்ட நாட்டின் சர்வதேச தன்மையை பொறுத்தும் பாசிசம் உருவமெடுக்கிறது. முதலாளித்துவ நாடுகளில் அரசிடமிருந்து மதம் பிரிக்கப்பட்டதால் அங்கு மத வடிவம் எடுக்காமல் இனவடிவம் எடுக்கின்றன. இந்தியா போன்ற காலனிய நாடுகளில் அரசுடன் மதம் பிணைக்கப்பட்டிருப்பதாலும், சாதி முறை நிலவுவதாலும், தேசிய இனப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதாலும் சாதி, மத, தேசிய இன வடிவம் எடுக்கின்றன.
பாசிசத்தின் வெற்றி தவிர்க்க முடியுமா? என்பது கீழ்கண்ட விசயங்களைப் பொறுத்துள்ளது:
1) தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். தொழிலாளி வர்க்கம் பாசிசத் தாக்குதல்களை எதிர்த்து நின்று போரிட தயாராக இருக்க வேண்டும். மேலும் விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், குட்டி முதலாளிய வர்க்கம், அறிவு ஜீவிகள் போன்ற வர்க்கங்களை வென்றெடுக்க வேண்டும்.
2) ஒரு பலமான புரட்சிகரக் கட்சி இருக்க வேண்டும். அக்கட்சி பாசிசத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் போரட்டத்தை மிகச் சரியாக தலைமை தாங்கிச் செல்ல வேண்டும்.
3) தொழிலாளி வர்க்கம் விவசாயிகள் மற்றும் குட்டி முதலாளிய வர்க்கங்களின் பால் ஒரு சரியான கொள்கையை அனுசரிக்க வேண்டும். அந்த வர்க்கங்கள் எப்படி இருக்கிறதோ அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டுமே ஒழிய நாம் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதிலிருந்து அல்ல. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியின் ஊடாகவே அவர்களின் ஊசலாட்டம் போகும். அவர்களின் அரசியல் உணர்வு திடப்பட பாட்டாளி வர்க்கம் அரசியல் உதவி செய்யவேண்டும்.
4) புரட்சிகரமான பாட்டாளி வர்க்கம் மிகவும் முன்னெச்சரிக்கையோடு இருந்து சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசிசம் தனக்கான சக்திகளை வென்றெடுக்கும் முன்பாக அதற்கு மரண அடி கொடுக்க வேண்டும். பாசிசம் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. பாசிசம் வென்றாலும் அதை முறியடிக்க வேண்டும்.
இவைதான் பாசிசம் வளர்வதையும், அதிகாரத்திற்கு வருவதையும் தடுப்பதற்கு பிரதான நிபந்தனைகளாகும். பாசிசம் ஒரு கொடிய ஆனால் நிலையற்ற ஆட்சி அதிகாரம் என்கிறார் டிமிட்ரோவ்.
இவற்றிலிருந்து பாசிசம் இந்தியாவில் வெற்றி பெறுமா? இந்தியாவில் நிலவும் நிலைமைகள் என்ன? என்பதைப் பார்ப்போம்
1) தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு பலம் வாய்ந்ததாய் இல்லை. மேலும் அது விவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள் போன்ற வர்க்கங்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ளது.
2) ஒரு பலமான புரட்சிகரக் கட்சி இல்லை. புரட்சிகரக் குழுக்கள் மார்க்சியத்திலிருந்து விலகியும் பிளவுபட்டும் உள்ளன. புரட்சிகரக் குழுக்கள் பாட்டாளி வர்க்கத்திடமும் விவசாயிகளிடமும் தனக்கான அடித்தளத்தை இன்னும் உருவாக்கவில்லை.
3) சிபிஎம், சிபிஐ போன்ற திருத்தல்வாத இயக்கங்களும் உழைக்கும் வர்க்கத்திடமிருந்து தனிமைப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் அவற்றிற்கு அடித்தளம் இல்லை.
எனவே மேற்சொன்ன இவ்வர்க்கங்களை பாசிசம் ஈர்த்து வருகிறது.
4) மக்களின் போராட்டங்கள் தன்னியல்பாகவும், இந்த சமூக அமைப்பிற்குள்ளாகவே தீர்வை தேடும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன.
இக்காரணங்களால் பாசிசம் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இந்தியப் பாசிசம் வளரும் தன்மை கொண்டதாக உள்ளது. எனவே இந்தியப் பாசிசத்தை வளரும் பாசிசம் என வரையறுக்கலாம். இந்த நிலைமைகள் தொடர்ந்தால் பாசிசம் வெற்றி பெறும் நிலை ஏற்படும். எனவே பாசிசத்தை முறியடிக்க வேண்டுமாயின் மேற்கூறிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் பாசிசம் வெற்றி பெற்றுவிட்டால் அதற்கான அறிகுறிகள் எவ்வாறு இருக்கும்?
1) நீதித்துறை, சிறைத்துறை, காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட முப்படைகள், அதிகார வர்க்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் பாசிச மயமாக்கப்பட்டிருக்கும்.
2) மார்க்சிய லெனினிய இயக்கங்கள் மீது மட்டுமின்றி, திருத்தல்வாத அமைப்புகள், அனைத்து ஜனநாயக அமைப்புகள் மீதும் கடும் ஒடுக்குமுறை நிலவும். அவை தடை செய்யப்படும்.
3) கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் முற்றாக பறிக்கப்படும். ஊடகங்களின் அனைத்து வடிவங்களும் தடை செய்யப்படும்.
4) ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவின் மீதே ஒடுக்குமுறை இருக்கும்.
5) அனைத்து துறைகள் மீதான மாநில அரசுகளின் உரிமைகள் அனைத்தும் முற்றாகப் பறிக்கப்பட்டிருக்கும்.
6) சாதி, மத, இனக் கலவரங்கள் அன்றாட நிகழ்வுகளாக இருக்கும்.
7) இசுலாமியர்கள், தாழ்த்தப்பட்டோர்--பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து சாதியிலுமுள்ள உழைக்கும் மக்கள் மற்றும் பெண்கள் மீதான கொடூரமான தாக்குதல்கள் -படுகொலைகள் ஒரு போக்காகவே இருக்கும்.
8) அரைகுறை சுதந்திரம், இந்திய அரசியல் சட்டம் எல்லாம் தூக்கிஎறியப்பட்டு வெளிப்படையான பயங்கரவாத ஆட்சி முறை அரியணையில் இருக்கும்.
9) தேசிய இனங்கள் சாதி, மத ரீதியாக பிளவுபடுத்தப்படும். தேசிய மொழிகள் மீதான ஒடுக்குமுறை தீவிரம் பெறும். ஆங்கில- இந்தி- சமஸ்கிருத மொழிகள் அனைத்து துறைகளிலும் கோலோச்சும். தேசிய வெறி கட்டவிழ்த்து விடப்படும்.
10) கல்வி, மருத்துவம், வங்கி உள்ளிட்ட சேவைத் துறைகள் முழுதும் கார்ப்பரேட்மயம்-பாசிசமயமாக்கப்படும்.
11) வேளாண் துறை, மூலப்பொருட்கள், இயற்கை வளங்கள் அனைத்தும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் பிடியில் இருக்கும்.
12) தொழிலாளர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வெகுஜன வர்க்க ஸ்தாபனங்களும் தடை செய்யப்படும்.
13) அண்டை நாடுகள் மீதான மத்திய அரசின் விஸ்தரிப்புவாதம்-அகண்ட பாரதக் கொள்கைகள் நடைமுறைக்கு வருவது உச்சத்தில் இருக்கும்.
14) அமெரிக்க ஏகாதிபத்திய ஓநாய்களின் மேலாதிக்க மற்றும் ஆக்கிரமிப்பு போர் முயற்சிகளுக்கு இந்திய அரசு தெற்காசியாவில் அமெரிக்காவின் போர்தந்திரக் கூட்டாளியாக செயல்படுவது தீவிரமாக இருக்கும்.
15) மதச் சிறுபான்மையினரின் குடியுரிமை, வழிபாட்டுரிமை பறிக்கப்படும்.
16) நிலவுகிற போலிப் பாராளுமன்ற-சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டிருக்கும்.
17) ஒற்றைக் கட்சி சர்வாதிகார ஆட்சிமுறை இருக்கும்.
பாசிசம் வெற்றி பெற்றால் நிலைமைகள் மேற்கண்டவாறே இருக்கும்.
பாசிசம் ஆட்சிக்கு வந்தாலும் அது நிலையற்றது. காரணம் என்ன?
1) முதலாளித்துவ வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் பூசல்களையும் பாசிசம் கூர்மைப்படுத்துகிறது. சட்டபூர்வக் கட்சிகளைக் கூட அழிக்க முயல்வதன் மூலம் பாசிசக் கட்சி தனது ஏகபோகத்தை நிறுவ முயற்சிக்கிறது. இருப்பினும் தலைமறைவாக அக்கட்சிகள் தொடர்ந்து இயங்கவே செய்கின்றன. ஆனால் அதனால் வர்க்க முரண்பாடுகளை தீர்க்க முடிவதில்லை. எனவே வர்க்க முரண்பாடுகளின் அடிப்படைகளில் பாசிசத்தின் அரசியல் ஏகபோக ஆதிக்கம் நிச்சயம் வெடித்து உடைந்தே தீரும்.
2) பாசிஸ்ட் சர்வாதிகாரத்தின் நிலையற்ற தன்மைக்கு மற்றொரு காரணம் அது முதலாளித்துவ எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு என வாய்வீச்சாடினாலும், ஆட்சிக்கு வந்தவுடன் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு அவை எடுபிடிகளாக இருப்பதும், ஊழலில் திளைப்பதும் என பாசிசம் தன்னை அம்பலப்படுத்திக் கொள்கிறது. மேலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கற்றுப் போவதாலும் அது தன்னை அம்பலப்படுத்திக் கொள்கிறது.
3) பாசிசம் மக்களின் ஆழமான வெறுப்பையும் கோபாவேசத்தையும் கிளப்பி விடுகிறது. மக்களை புரட்சிகரமாக்குவதற்கு உதவி செய்கிறது. பாசிசத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணிக்கு ஒரு வலுவான உத்வேகத்தை அளிக்கிறது.
4) பாசிசம் ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் பொருளாதாரம் முழுவதையும் சீரழித்துவிடுகிறது. சொந்த நாட்டு உழைக்கும் மக்களை வேட்டையாடுகிறது. மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போகிறது.
5) ஆனால் பாசிசம் தானாக தோல்வி பெறும் எனும் பிரம்மையில் இருப்பது மிகவும் தவறாகும். பாசிசம் தானாக வீழ்ச்சியடையாது.
நாம் பாசிச எதிர்ப்பு மக்கள் ஜனநாயக ஐக்கிய முன்னணியை உருவாக்கி அடிப்படை வர்க்கங்களை வென்றெடுக்க வேண்டும். முதலாளித்துவ முகாம்களுக்கு இடையிலான முரண்பாடுகளை பாட்டாளி வர்க்கம் சரியாக கையாளவேண்டும். பாசிசக் கொள்கைகளை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் பாசிசத்தை வீழ்த்த முடியும்.
வரலாற்றில் பாசிசத்தின் முதல் தோற்றம்:
ஏகாதிபத்திய சகாப்தம் முழுவதும் பாசிசம் இருக்காது என கண்டோம். பாசிசம் முதலில் தோன்றியதையும், அதன் வீழ்ச்சியையும் குறித்து காண்போம்.
வரலாற்றில் பாசிசம் முதலில், முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையில் தோன்றியது. ஏன்?
1. முதல் உலகப் போரில் ஈடுபட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் கடும் நிதி மூலதன நெருக்கடி ஏற்பட்டது. மீளமுடியாத முதலாளித்துவ நெருக்கடிகளுக்குள் சிக்கிய இந்நாடுகளுக்கு தமது நெருக்கடியைத் தீர்ப்பதற்கு காலனிய உடைமைகள் தேவைப்பட்டன. எனவே இத்தாலியில் தேசிய வெறி, ஜெர்மனியில் இனவெறி வடிவங்களில் பிரதேச ஆதிக்கங்களில் முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகள் ஈடுபடுவதற்கு தடையாக மாறின. எனவே இந்நாடுகள் முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு பாசிச ஆட்சியை நிறுவின. (முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்த போதே தனது முற்போக்கு பாத்திரத்தை இழக்கத் துவங்கிவிட்டது).
2. முதல் உலகப்போருக்கு பின்பு ருஷ்யாவில் முதல் பாட்டாளி வர்க்க சோசலிச அரசு உருவாகியிருந்தது. இது ஐரோப்பிய நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்க இயக்கங்களுக்கு பெரும் உந்துதலைத் தந்தது. அந்நாடுகள் மா-லெ அடிப்படையிலான பாட்டாளிவர்க்க இயக்கங்கள் புரட்சிப் பாதையில் பயணிக்கத் துவங்கின. இவற்றை கண்டு ஏகாதிபத்திய நிதி ஆதிக்க கும்பல்கள் அஞ்சின. எனவே அந்நாடுகளில் பாட்டாளி வர்க்க எழுச்சியை அடக்குவதற்கும் 'பாசிச அரசு வடிவமைப்புக்கான' தேவை ஏகாதிபத்திய வாதிகளுக்கு ஏற்பட்டது.
ஜெர்மனியிலும் இத்தாலியிலும் மேற்கூறிய இரண்டு காரணங்களால்தான் வரலாற்றில் பாசிசம் தோன்றியது. பாட்டாளி வர்க்க இயக்கங்கள் லெனினிய அடிப்படையிலிருந்து விலகி கிராம்ஸ்கிய-காவுட்ஸ்கிய-டிராட்ஸ்கிய வாதத்திற்கு பலியாகி பலவீனப்பட்டதால் அந்நாடுகளில் பாசிசம் வெற்றி பெற்றது. குறிப்பாக இத்தாலியில் பாசிசம் பற்றிய கிராம்ஸ்கியின் மார்க்சிய விரோத வரையறுப்புகளால் பாசிசத்தை புரிந்துகொள்ள முடியாமல் போனது. கிராம்ஸ்கி பாசிசத்தை நிலவுடைமை பாசிசம் எனவும்; கலாச்சார மேலாதிக்கம் எனவும் வரையறுத்தார். நிதி மூலதன ஆதிக்கத்திலிருந்து பாசிசம் கட்டமைக்கப்படுகிறது என்பதை காண மறுத்தார்.
ஜெர்மனியில் காவுத்ஸ்கியவாதம் தலைதூக்கி இருந்தது; அது பாசிசத்திற்கு தலை வணங்கியது. மார்க்சிய லெனினியத்தை கைவிட்டு ஓடியது. பாட்டாளி வர்க்க இயக்கம் பலவீனப்பட்டது. காவுத்ஸ்கி 'அதீத ஏகாதிபத்தியம்' எனும் அமைதி வழி முதலாளித்துவப் பாதையை முன்வைத்தார். ஏகாதிபத்திய நிதி மூலதன நெருக்கடியே ஜெர்மன் பாசிசத்திற்கு காரணம் என காண மறுத்தார். பாட்டாளி வர்க்கத்திற்கு துரோகம் இழைத்தார்.
மேற்கூறிய காரணங்களால் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிசம் வெற்றி பெற்றது.
1922ஆம் ஆண்டு இத்தாலியின் பிரதமரான முசோலினி 1925இல் சர்வாதிகாரி என்று தன்னை தானே அறிவித்துக் கொண்டான். இத்தாலியின் அனைத்து முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகளையும் கலைத்தான். ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பழைய ரோமானிய ராஜ்யத்தை, இத்தாலிய ஆட்சியை நிறுவுவதே தனது பாசிசக் (திணீ௳நீவீ௳௴) கட்சியின் லட்சியம் என பகிரங்கமாக அறிவித்தான். இத்தாலியர்களே உலகில் நாகரீகமானவர்கள் என இனவாதம் பேசினான். இத்தாலிய தேசிய வெறியூட்டி பிற்போக்கு கும்பல்களை ஒருங்கிணைத்தான். 'கருப்புச்சட்டை' எனும் பெயரில் பாசிச குண்டர் படையை உருவாக்கினான். அதற்கு ஆயுதப்பயிற்சி வழங்கினான். பாசிச அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பாசிச குண்டர் படைகள் மூலம் ஆட்சிக்கு எதிராகப் போராடுபவர்களையும், கம்யூனிஸ்டுகளையும், ஜனநாயக சக்திகளையும், ஜனநாயக நிறுவனங்களையும், தொழிற் சங்கங்களையும் மிகவும் கடுமையாக ஒடுக்கினான். பாசிச ஆட்சியை நிறுவினான்.
ஜெர்மனியில் பாசிசம் 1933இல் அரியணை ஏறியது. யூத வெறுப்பு, தேசிய வெறி, இனவெறி வடிவங்களில் ஜெர்மனியில் பாசிசம் வெற்றிபெற்றது. ஜெர்மனியில் ஹிட்லர் 'தூய ஆரிய இன மேன்மை' கோட்பாட்டின் அடிப்படையில் பாசிசத்தை கட்டியமைத்தான். ஜெர்மானிய நிதி மூலதன கும்பல்களின் நலனுக்காக ஜெர்மனியில் உழைக்கும் வர்க்கம் ஒட்டச் சுரண்டப்பட்டது. ஜெர்மானியர்களின் நெருக்கடிகளுக்கு யூதர்களே காரணம் என்று யூத வெறுப்பை பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தான் ஹிட்லர். ஐரோப்பிய காலனியாதிக்க வாதிகள் உருவாக்கிய 'தூய ஆரிய இன மேன்மை' கோட்பாட்டை தனது வழிகாட்டும் சித்தாந்தமாக வரித்துக் கொண்டது ஹிட்லரின் நாஜி கட்சி. 'ஆரிய இனமே ஆளப்பிறந்த இனம்' என்று ஆரிய இன மேன்மை கோட்பாடு கோபினியூ என்பவரால் 'தூய ஆரிய இனவாதக் கோட்பாடாக' வளர்த்தெடுக்கப்பட்டது. ஆரியத்தின் தாயகம் ஜெர்மனி எனவும், ஆரியரில் ஜெர்மனிய இனம்தான் ஆள பிறந்த இனம் எனவும்; மற்ற இனம் அடிமைப்பட்ட இனம் எனவும் 'தூய இனவாதம்' பேசியது ஹிட்லரின் நாஜி கட்சி. ஜெர்மனிய இனம் யூத இனத்துடன் கலந்ததன் காரணமாகவும், யூதர்களின் குடியேற்றத்தாலும் நாடு சீரழிந்து விட்டது எனவும்; முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றதற்கு யூதர்கள்தான் காரணமெனவும், இன்னும் பலவாறாகவும் யூத வெறுப்பு - ஜெர்மனிய தேசிய வெறியை ஊட்டி வளர்த்தான் ஹிட்லர். இப்பாசிசப் பிரச்சாரத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தான் ஹிட்லர். ஆட்சியில் அமர்ந்தவுடன் அனைத்து அரசு அமைப்புகளையும் பாசிச மயமாக்கினான். யூதர்கள் அனைத்துப் பதவிகளிலிருந்தும், பணிகளிலிருந்தும் நீக்கப்பட்டார்கள். 'நூரம்பர்க்' குடியுரிமைச் சட்டங்கள் மூலம் நாடற்றவர்களாக மாற்றப்பட்டார்கள். "ஆரிய இனத்தை சுத்திகரிக்கிறோம்" என்ற பெயரில் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை படுகொலை செய்தது ஹிட்லர் கும்பல். இவ்வாறு ஜெர்மனியில் பாசிசத்தை நிறுவினான்.
வெற்றிபெற்ற பாசிசம் இரண்டாவது உலகப் போரில் ஸ்டாலின் தலைமையிலான ருஷ்ய பாட்டாளி வர்க்கத்தாலும் மாவோ தலைமையிலான சீனப் பாட்டாளி வர்க்கத்தாலும் சவக்குழிக்கு அனுப்பப்பட்டது.
பிரிட்டன், அமெரிக்கா அரசுகள் அப்போது பாசிசக் கொள்கைகளைக் கடைபிடிக்கவில்லை. காரணம் முதல் உலகப்போரில் அவை வெற்றி பெற்றிருந்ததால் பொருளாதார நெருக்கடி எழவில்லை. மேலும் சோவியத்தின் செல்வாக்கு பரவுவதைத் தடுக்க வேண்டியிருந்ததால் முதலாளித்துவ சீர்திருத்தங்களை அமல்படுத்தின.
பாசிசம் பற்றி நிலவும் மார்க்சியத்திற்கு எதிரான வரையறைகள்
1. பாசிசம் என்பது பாட்டாளி வர்க்கம் மற்றும் முதலாளித்துவ வர்க்கம் ஆகிய இரு வர்க்கங்களுக்கும் அப்பால் தனித்து நிற்கும் அரசாங்கத்தின் வடிவம் என்று கருதுவது தவறாகும். இது ஆட்டோ பவர் என்பவரின் கருத்தாகும்.
2. குட்டி முதலாளித்துவ வர்க்கம் எழுச்சி பெற்று கலகம் செய்து அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றுவது பாசிசம் என்பது தவறாகும். இது டிராட்ஸ்கி, பிரிட்டிஷ் சோசலிஸ்ட் பிரெயல்ஸ் போர்டு போன்றோரின் கருத்தாகும்.
3. பாசிசம் என்பது வர்க்கங்களுக்கு அப்பால் உள்ள அரசு; பாசிசம் என்பது குட்டி முதலாளித்துவ அரசு; பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மேல் நிற்கும் கழிசடைப் பாட்டாளி வர்க்க பகுதியின் அரசு போன்றவை மார்க்சியத்திற்கு எதிரான கருத்துகளாகும்.
4. பாசிசம் என்பது பின் தங்கிய நிலவுடைமை உற்பத்தியின் வெளிப்பாடு; பாசிசத்தின் சாரம் என்பது எதுவுமில்லை போன்ற கருத்துகள் கிராம்சியவாதமாகும். எஸ்.வி.ஆர் போன்ற புதிய இடதுகளின் மார்க்சிய விரோத கருத்துக்கள் ஆகும்.
5. பாசிசம் என்பது தனி மனிதர்களின் உளவியல் கோளாறு என்றுக் கருதுவது எண்ணமுதல்வாதமாகும். அது பிராய்டிசம் ஆகும்.
6. "பாசிசம் என்பது ஆரிய வகைப்பட்டது; பாசிசம் என்றால் இந்தியாவில் பார்ப்பனிய பாசிசமாக வெளிப்படுகிறது" என்று கருதுவது எண்ணமுதல்வாதமாகும். இது எம். என். ராயின் கருத்தாகும்; பார்ப்பனிய எதிர்ப்பை முன்வைத்து ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுத்த பெரியாரின் கருத்துகளுக்கு வலு சேர்ப்பதாகும்.
7. "பாசிசம் என்பது மத வகைப்பட்டது" என்று கருதுவதும் எண்ணமுதல்வாதமாகும். இது இந்து மதம் தான் சாதியம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காரணம் என்ற தவறான கருத்திலிருந்து உதிப்பதாகும். உண்மையில் மதம் ஆளும் வர்க்கத்திற்கு ஒரு சுரண்டல் கருவியாக - ஆன்மீக ஒடுக்குமுறை கருவியாக பயன்படுகிறது. அது மட்டுமே ஒடுக்குமுறை அல்ல. ஏகாதிபத்திய நாடுகள் காலனிய நாட்டு ஆளும் வர்க்கங்களின் மூலம் மதத்தை ஒரு செயற்கருவியாக பயன்படுத்துகின்றன. சாதியின் இருப்புக்கு இந்து மதமே காரணம் என்ற அம்பேத்கரின் எண்ணமுதல்வாதக் கருத்திற்கு இக்கருத்துகள் வலு சேர்க்கும்.
8. "பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம்" என்ற மார்க்சிய வரையறை இந்தியாவிற்கோ (அ) எல்லா நாடுகளுக்கோ அப்படியே பொருத்த முடியாது என்று பேசுவது எஸ். வி. ஆர். போன்ற புதிய இடதுகளின் கலைப்புவாத கருத்தாகும். மார்க்சியத்திற்கு நேர் எதிரானதாகும். பாசிசம் என்பது நாட்டிற்கு நாடு வடிவங்களில் மட்டுமே வேறுபடுகிறது. அதன் பொருளியல் அடிப்படையான "நிதி மூலதனத்தின் பிற்போக்கான சர்வாதிகாரம்" என்பது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதே. நிதி மூலதன சர்வாதிகாரத்தின் கீழ் உள்ள இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதே.
9. "நிலவுடைமை மன்னராட்சி காலத்திலும் ஏகாதிபத்தியம் இருந்தது; ரோமப் பேரரசு, சோழப் பேரரசு போன்றவை ஏகாதிபத்தியங்களே; எனவே நிலவுடைமை உற்பத்தி முறையிலும் பாசிசம் வரும்" என்று கருதுவது லெனினியத்திற்கு எதிரானதாகும். 'இன்றைய ஏகாதிபத்தியம் நிதி மூலதன ஏகாதிபத்தியம்' என்பதே லெனினியமாகும்.
10. 'கீழ் நிலைப் பாசிசம்' (ஷி௵தீ-ஹிறீ௴மீக்ஷீஸீ திணீ௳நீவீ௳னீ) என்ற கருத்து புதிய இடது கருத்தாகும். அதாவது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க ஆட்சியில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் பா.ஜ.க.வை மட்டும் எதிர்ப்பது கீழ்நிலையில் பாசிசமாகும். ஏனெனில், கீழ்நிலையில் அதாவது மக்களிடத்தில் களப்பணி செய்து பிரச்சாரத்தின் மூலமாகவே பாசிசத்தைக் கட்டியமைக்கும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது ஒரு வகையில் கிராம்சியின் 'கலாச்சார மேலாதிக்கம்' என்ற எண்ணமுதல்வாத கருத்துடன் இணக்கம் காண்கிறது. அதாவது பொருளியல் அடிப்படை இல்லாமலேயே, நெருக்கடிகள் இல்லாமலேயே ஆளும் வர்க்கம் பிரச்சாரத்தின் மூலமாகவே மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் என்று கருதும் எண்ணமுதல்வாத கோட்பாடாகும். இது கட்சிகளையும் ஆளும் வர்க்கங்களையும் பாசிசத்தையும் பிரித்து அணுகும் புதிய இடது போக்காகும்.
ஆர்.எஸ்.எஸ்.சின் தோற்றத்திலிருந்து மட்டுமே பாசிசத்தின் தோற்றத்தை பார்ப்பதும் மேற்கண்ட கருத்துக்கு வலு சேர்ப்பதாகும்.
11. பாசிசம் என்பது 'போனாபார்ட்டிஸம்' என்று கருதுவது - அதாவது தனிநபர் சர்வாதிகாரம் - ஹிட்லர் சர்வாதிகாரம், மோடியின் சர்வாதிகாரம் என்று பேசுவது டிராட்ஸ்கியவாதமாகும். பாஜக என்ற கட்சியை - தனி ஒரு கட்சியை மட்டும் (அதன் வர்க்க நலன்களை பற்றி பேசாமல்) பாசிச கட்சியாகக் குறிப்பிடுவதும் டிராட்ஸ்கிய வாதமாகும்.
12. காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என வகைப்படுத்தி ஆளும் கட்சிதான் பாசிசக் கட்சி என்று மதிப்பிடுவது தவறானதாகும். இக்கட்சிகள் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிரதிநிதிகளே. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எதுவுமில்லை; எல்லாமே ஆளும் வர்க்கக் கட்சிகளே. ஆட்சியில் இல்லை என்றாலும் அவை தாம் சார்ந்த தரகு வர்க்க நலனுக்காகவே தொடர்ந்து இயங்குகின்றன. இது மாநிலக் கட்சிகளுக்கும் பொருந்தும்.
மாநில தரகுமுதலாளித்துவ மூலதனம் அகில இந்திய தரகு முதலாளித்துவ மூலதனத்தை சார்ந்துதான் இயங்கிவருகின்றது. ஆகவேதான் மாநிலக் கட்சிகள் அகில இந்திய கட்சிகளைச் சார்ந்து இயங்குகின்றன. இதன் காரணமாகவே அவை இந்தியப் பாசிசத்திற்கு மாற்றாக விளங்கமுடியவில்லை.
பாசிசத்தின் பொருளியல் அடிப்படையை பாதுகாத்துக்கொண்டு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது பாசிசத்தின் வடிவங்களில் சிற்சில மாற்றங்களை கொண்டுவரலாமே ஒழிய பாசிசம் ஒழியாது. அதாவது மதச்சார்பற்ற பாசிசமாகவோ, பெருந்தேசியவாத பாசிசமாகவோ, இடது மாடல் பாசிசமாகவோ (கேரள மாடல்), திராவிட மாடல் பாசிசமாகவோ இருக்கலாமே ஒழிய பாசிசம் ஒழியாது.
13. பாசிசம் என்பது சாரத்தில் ஒன்றுமே இல்லை; இந்தியாவில் பாசிசம் இல்லை என்று கருதுவது கிராம்ஸ்கியவாதமெனில், பாசிசம் வந்துவிட்டால் நிலையானது; அவ்வளவுதான் என்று கருதுவது சூனியவாதம் ஆகும். பாசிசம் நிலையற்றது என்று மார்க்சியம் கூறுகிறது.
14. "இந்தியாவில் மதவாதம் மட்டுமே உண்டு; பாசிசம் இல்லை. எனவே மதவாதத்தை வீழ்த்த பெரியார், அம்பேத்கர் மற்றும் மார்க்சிய கருத்துகளை ஒன்றிணைக்க வேண்டும்" என்று பேசுவது அப்பட்டமான கலைப்பு வாதமாகும். இது பாஜகவை மதவாதக் கட்சி என்று வரையறுத்து காங்கிரஸ் திமுக மதச்சார்பற்ற கட்சி என்று கூறி அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதில் சென்று முடிகின்றது. இது சிபிஎம் சிபிஐ போன்ற திரிபுவாதக் கட்சிகளின் நிலைபாடு ஆகும்.
15. முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகத்தை (பாராளுமன்ற முறைகளை) தூக்கி எறிந்துவிட்டு பாசிசம் ஆட்சிக்கு வந்தது. முதலாளித்துவ நாட்டுப் பாராளு மன்றங்களைப் போன்றே, இந்தியா போன்ற புதிய காலனிய நாட்டுப் பாராளுமன்றங்களையும் மதிப்பிடுவது தவறாகும். இந்தியாவில் ஒரு சிறு கும்பலின் சர்வாதிகாரத்திற்கு பாராளுமன்றம், இந்திய அரசியலமைப்பு சட்டம் போன்றவை மூடு திரையாக உள்ளன. எனவே பாராளுமன்ற பங்கேற்பின் மூலம் அல்லது பாராளுமன்றவாதக் கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என கருதுவது வலது சந்தர்ப்பவாதம் ஆகும். அதாவது முதலாளித்துவ நாட்டு பாராளுமன்றங்களைப் போலவே, இந்தியா போன்ற புதிய காலனிய நாட்டுப் பாராளுமன்றங்களைப் பயன்படுத்த முடியாது என்று காணத் தவறுவது; அவ்வாறு காணத் தவறி பாராளுமன்ற பங்கேற்பு முறைகளில் (அ) பாராளுமன்ற ஐக்கிய முன்னணி சர்க்கார் பற்றி பேசுவது வலது சந்தர்ப்பவாதம் ஆகும். பாராளுமன்ற முறைகளின் மூலமாகவே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்ற பாராளுமன்ற மாயையில் மக்களை ஆழ்த்துவதாகும். ஐக்கிய முன்னணி சர்க்கார் என்பது புரட்சிகர எழுச்சியின் விளைவாக அமைக்கப்படும் - பாட்டாளி வர்க்க பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியின் விளைவாக அமைக்கப்படும் தொழிலாளர்கள் - விவசாயிகள் சர்க்கார் என்று டிமிட்ரோவ் கூறுகிறார். பாராளுமன்றவாதம் மூலம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பது வலது விலகல் எனில், ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பது இடது விலகல் ஆகும்.
16. "காலனியாதிக்கம் முற்றுப்பெற்றுவிட்டது; இந்தியா போன்ற நாடுகள் சுதந்திரம் பெற்று விட்டன; எனவே இந்தியாவில் பாசிச ஆட்சி வராது" என்று கருதுவது குருசேவின் நவீன திருத்தல் வாதமாகும்.
17. இந்தியா சுதந்திரம் பெற்று முதலாளித்துவ நாடாகி; ஏகாதிபத்திய நாடாகவே மாறிவிட்டது. எனவே இந்திய ஏகாதிபத்திய நிதி மூலதன நலன்களில் இருந்து பாசிசம் தேசிய இனங்கள் மீது ஏவப்படுகிறது. எனவே தேசிய இனங்கள் அனைத்தும் தனி அரசு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசுவது குருசேவின் நவீன திருத்தல்வாதம் மட்டுமல்ல; புதிய காலனிய நாடான இந்தியாவை ஏகாதிபத்திய நாடு என்பதன் மூலம் இந்தியா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனி ஆதிக்கத்தை மூடிமறைக்கும் கலைப்புவாத நிலைபாடாகும்.
18. ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவினரை ஒடுக்குவது தான் பாசிசம்; எனவே காங்கிரஸ் - திமுக போன்ற கட்சிகளோடு கூட்டணி தேவை என்ற கருத்தும் நிலவுகிறது. பாசிச கட்சியான காங்கிரசையும், பாசிசத்தின் தொங்கு சதையான திமுகவையும் ஆட்சியில் வைத்து அழகு பார்ப்பது நமது கடமையல்ல; அது திருத்தல்வாதிகளின் கடமையாகும். மேலும், ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவு ஒடுக்கப்படுவது என்பது பாசிசத்தின் ஒரு அம்சம் மட்டுமே ஆகும். டிமிட்ரோவ் கூறுவதுபோல பாசிசம் என்பது பல்வேறு கதம்பக் கூறுகளைக் கொண்ட சித்தாந்தம் ஆகும்.
19. கருத்துரிமையைப் பறிப்பதும், புரட்சிகர கட்சிகளைத் தடை செய்வதும் தான் பாசிசம் என்று பேசுவது தவறாகும். அவை பாசிசத்தின் ஒரு அம்சம் மட்டுமே.
20. கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற வரையறை தவறாகும். அது பாஜகவை மட்டுமே பாசிச கட்சியாக வரையறுத்து, காங்கிரஸ் கட்சியை அதிலிருந்து விலக்கி விடுகிறது. ஆட்சியிலிருக்கும் கட்சியை ஒரு ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக கருதாமல், அதை வெறும் ஆளும் கட்சியாக மட்டுமே பார்க்கிறது. ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளையும் அதன் வர்க்கத் தன்மையிலிருந்து பிரித்து விடுகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆளும் தரகு முதலாளித்துவ - நிலவுடைமை வர்க்க மற்றும் அதன் எஜமானனான ஏகாதிபத்திய நிதி மூலதன நலன்களுக்காக செயல்படும் கட்சிகளே ஆகும். ஆட்சியில் இல்லாதபோதும் இவை பாசிச பிரச்சாரம் செய்யும் என்றாலும், அவற்றை ஆளும் கட்சி அனுமதிப்பது என்றே பொருள்படும். அவ்வாறான பரஸ்பர புரிதலோடு பாசிசத்தின் இரு முகங்களாக காங்கிரசும் பாஜகவும் செயல்படுகின்றன. கார்ப்பரேட் காவி பாசிசம் என்பது பாஜகவிற்கு மாற்றாக காங்கிரஸ்-, திமுக கூட்டணியை மறைமுகமாக முன்னிறுத்துகிறது.
கார்ப்பரேட் என்பது பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளை குறிக்கிறது. பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் என்பவை ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களையும், உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் தரகு முதலாளிய-நிலவுடைமை கும்பல்களையும் குறிக்கிறது.
ஆனால் கார்ப்பரேட் காவி பாசிசம் என்பது ஒரு புறம் இந்தியா ஓர் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் நாடு -பார்ப்பனிய ஏகாதிபத்திய நாடு என்ற வரையறையிலிருந்து வைக்கப்படுகிறது. பார்ப்பனிய ஏகாதிபத்தியம் என்பது ஆரிய இன மேன்மைக் கோட்பாட்டிலிருந்து உருவாகிறது. இது நிலவுடைமை உற்பத்தியை மறுத்து இந்தியா சுதந்திர முதலாளிய நாடு எனும் பொருளில் வைக்கப்படுகிறது. இது விதி விலக்கின்றி அனைத்து தேசிய இனங்களும் தனி அரசு அமைக்க வேண்டும் என்பதில் முடிகிறது. இது முதலாளித்துவ தேசியவாதமாகும்.
கார்ப்பரேட் காவி பாசிசம் என்பதில் காவி என்பது பாஜகவையும், கார்ப்பரேட் என்பது நிறுவனங்களை மட்டுமே (பாஜக ஆதரவு) குறிக்கிறது. கார்ப்பரேட் ஆதிக்கம் என்பது வெறும் 'நிறுவனமாக' பார்க்கப்படுகிறது. கார்ப்பரேட் எதிர்ப்பு என்பது ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவன எதிர்ப்பாக குறுக்கப்படுகிறது. இது தவறாகும். அதாவது இது பாசிசத்தை ஒரு நிறுவனப் பாசிசமாகவும், பாஜகவை மட்டும் பாசிச கட்சியாகப் பார்க்கும் வலது சந்தர்ப்பவாத நிலைபாடாகும். காரணம் இது மறைமுகமாக ஒரு நிறுவனத்தை எதிர்த்து இன்னொரு நிறுவனத்தை மாற்றாக (உ.ம் ரிலையன்ஸ், கோக் எதிர்ப்பு இயக்கம்) முன்வைக்கிறது. நிறுவனப் பாசிசம் என்பது தவறாகும். மேலும் இது பாசிசத்தை உலகமய கொள்கைகளின் கட்டத்திலிருந்து மட்டுமே காண்கிறது.
'பாசிசம்' என்றால் காங்கிரசு, பாஜக இரண்டையும் ஒரே பொருளில் குறிப்பிட வேண்டும். இந்துத்துவப் பாசிசம், பெருந்தேசிய வெறி பாசிசம் இரண்டும் இந்தியப் பாசிசத்தின் இரு வடிவங்கள் ஆகும். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள் என்பதை கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற வரையறை மறுக்கிறது.
புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கார்ப்பரேட் பாசிசம் என்ற பொருளை, கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற பதம் உணர்த்தவில்லை. அது வெறும் பாஜகவை மட்டுமே பாசிச கட்சியாக வரையறுத்து, பாசிச கட்சியான - இந்திய பெரும் தரகுவர்க்க கட்சியான காங்கிரசையும், பாசிசத்தின் தொங்கு சதையான - மாநில தரகு வர்க்கக் கட்சியான திமுகவையும் மறைமுகமாக மாற்றாக முன்னிறுத்துகிறது. எனவே கார்ப்பரேட் காவி பாசிசம் என்பது தரகு முதலாளித்துவக் கோட்பாடாகும்.
21. பார்ப்பனிய-பனியா பாசிசம் என்ற வரையறையும் கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற வரையறையைப் போன்றதே ஆகும். அதாவது பார்ப்பனிய பாசிசம் கார்ப்பரேட் - காவி பாசிசம் இரண்டும் தரகு முதலாளித்துவக் கோட்பாடுகளே ஆகும். ஏனெனில் இது பார்ப்பன எதிர்ப்பு எனும் பெயரில் பார்ப்பனரல்லாத அதிமுக- திமுக-மாயாவதி போன்ற பாசிச சக்திகளை ஆதரிக்கிறது; அதாவது காங்கிரஸ், திமுக போன்ற தரகு முதலாளித்துவக் கட்சிகளை ஆதரிப்பதால் இதுவும் தரகு முதலாளித்துவக் கோட்பாடே ஆகும்.
கார்ப்பரேட் காவிப் பாசிசமும், பார்ப்பனிய பாசிசமும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டிற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஆரிய இனவாத மாயையில் இருந்துதான் கார்ப்பரேட் காவி பாசிசம் மற்றும் பார்ப்பனிய பாசிசம் எனும் கருத்துக்கள் உதிக்கின்றன.
பார்ப்பனியப் பாசிசம் என்பது எண்ண முதல்வாத கருத்தாகும். நிலவுடைமை உற்பத்தி முறையின் மேற்கட்டுமானக் கருத்தியலான பார்ப்பனியத்தையும், நிதி மூலதன சர்வாதிகார அரசின் மேற்கட்டுமான கருத்தியலான பாசிசத்தையும் ஒன்றாக இணைக்கிறது. அதாவது நிலவுடைமைப் பாசிசம் எனும் கிராம்சியத்தை முன்வைக்கிறது.
பார்ப்பனிய ஏகாதிபத்திய அரசு என்பது இந்தியாவை ஏகபோக நிதி மூலதன சர்வாதிகார அரசு என்ற பொருளில் குறிக்கிறது. இந்தியா மீதான ஏகாதிபத்திய - புதிய காலனிய அரசியல் -பொருளியல் அடிப்படையை மூடி மறைக்கிறது.
பார்ப்பனிய - பனியா பாசிசம் என்ற வரையறையும் இந்தியாவை பார்ப்பனிய ஏகாதிபத்திய நாடு என்றே குறிக்கிறது. பார்ப்பன - பனியாக்கள் அல்லாத தரகு முதலாளிகளை ஆதரிக்கிறது. பார்ப்பனர் அல்லாத நிலவுடைமை கும்பலை ஆதரிக்கிறது. எனவே இது தரகு முதலாளித்துவக் கோட்பாடு ஆகும்.
பார்ப்பனியம் என்பது நிலவுடைமைக்கு சேவை செய்கின்ற கருத்தியலாகும். இந்துத்துவா என்பது ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்ற கருத்தியலாகும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மேற்கட்டுமான கருத்தியல்களான பார்ப்பனியம், நால்வர்ண கோட்பாட்டை இந்துத்துவம் உள்வாங்கியுள்ளது. பார்ப்பனியத்தின் பொருளியல் அடிப்படையான இந்த உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டாமல் பார்ப்பனியத்தை மட்டும் தனியாக வீழ்த்திவிட முடியாது. உற்பத்தி முறையை பற்றி பேசாமல் பார்ப்பனிய எதிர்ப்பு மட்டும் பேசுவது பார்ப்பனியத்தைப் பாதுகாக்கவே செய்யும். ஆகவே பார்ப்பனிய பன்னாடைத் தனத்தை ஒழிப்பதற்கு நிலவுகிற உற்பத்தி முறையை ஒழிப்பது அவசியமாகிறது.
22. பாசிசத்தை ஆரிய இனவாதப் பாசிசமாக வரையறுப்பதன் மூலம் திராவிட இனவாதத்தை மாற்றாக முன்னிறுத்துவது ஏற்கக் கூடியதல்ல. ஆரியத்திற்கு மாற்று திராவிடம் அல்ல. ஆரிய இனவாதம், திராவிட இனவாதம் இரண்டும் ஜோன்ஸ், கால்டுவெல் போன்ற காலனியாதிக்க வாதிகளின் கற்பனையான எண்ணமுதல்வாதக் கோட்பாடுகள் ஆகும்.
ஆரிய இனவாத மாயையில் இருந்தே கார்ப்பரேட் காவி பாசிசம் மற்றும் பார்ப்பனிய பாசிசம் என்ற கருத்து நிலைகள் உதிக்கின்றன. ஆகவேதான் காங்கிரஸ் -- திமுக ஆதரவு; பெரியாரிய அம்பேத்கரிய ஆதரவு நிலைபாட்டில் இயல்பாகவே சென்று முடிகின்றன.
23. உலகமய காலகட்டத்தில் மூலதனம் சர்வதேசிய மயமாக்கப் பட்டுவிட்டது என்று கூறி சர்வதேசிய ஏகாதிபத்தியம் அல்லது அதீத ஏகாதிபத்தியம் அல்லது ஒருங்கிணைந்த ஏகாதிபத்தியம் எனும் காவுத்ஸ்கியவாதம் முன்வைக்கப்பட்டு அதிலிருந்து சர்வதேச அல்லது ஏக கால பாசிசம் எனும் வரையறை முன்வைக்கப்படுகிறது. இது தனியொரு நாட்டில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியையும் புரட்சியையும் மறுக்கிறது. இது தவறாகும். காவுத்ஸ்கியவாதம் ஆகும்.
24.உலகமயம் மற்றும் ஆக்கிரமிப்பு போர்களை மட்டும் ஏகாதிபத்தியம் என வரையறுத்து அதிலிருந்து பாசிசத்தை பார்ப்பது லெனினியத்திற்கு மாறானதாகும். இது அமைதி வழியிலான புதிய காலனியாதிக்கத்தையும் அதன் மூலம் கட்டப்படும் பாசிசத்தையும் மறுக்கிறது.
25. நிலப்பிரபுத்துவ எதேச்சதிகாரம் உள்ளிட்ட முதலாளித்துவத்துக்கு முந்தய ஒடுக்குமுறைகளை பாசிசம் என கருதுவது தவறாகும். பாசிசம் என்பது ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம் ஆகும்.
26. முதலாளித்துவ ஜனநாயத்திற்கும், பாசிசத்திற்கும் இடையில் வேறுபாடு இல்லை; இரண்டும் ஒன்றே என கருதுவது தவறாகும். இந்த தவற்றை போர்டிகா (இத்தாலி) முன்மொழிந்தார்.
27. பாசிச வடிவிலான அரசை நோக்கிச் செல்லும் போக்கு அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது. என்றாலும் ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சர்வாதிகாரம் அவசியம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று இதற்குப் பொருளாகாது. அதாவது முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பாசிச சர்வாதிகார காலகட்டம் வரும் என்று கருதுவது தவறாகும். அப்படி ஒரு இடைக் கட்டம் என்று ஏதும் இல்லை.
28. இந்தியாவில் பாசிசமே இல்லை, மதவாதம் மட்டுமே உண்டு என்ற சி.பி.எம்., சி.பி.ஐ. (திருத்தல்வாதக்) கட்சிகளின் நிலைபாடு வலது சந்தர்ப்பவாதமாகும். இது காங்கிரசு - தி.மு.க கட்சிகளை மதச் சார்பற்ற கட்சிகள் என வரையறுப்பதிலும் அவைகளோடு கூட்டணி அமைப்பதிலும் சென்று முடிகின்றன.
29. கிளாரா ஜெட்கின் பாசிசத்தை குட்டி முதலாளிய வர்க்கத்தின் பண்பு என்று நான்காவது உலக காங்கிரசில் உரை நிகழ்த்தினார். இது தவறான கருத்தாகும்.
30. இன்றைய சூழலில் ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தும் தமது நாடுகளில் விதிவிலக்கின்றி முதலாளிய ஜனநாயகத்தை தூக்கி எறிந்துவிட்டு பாசிசக் கொள்கைகளை கடைபிடித்து வருகின்றன. எனவே, பாசிச எதிர்ப்பையும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாக -பிரிக்கக் கூடாததாக உள்ளன. அவ்வாறு பிரிப்பது ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இன்னொரு ஏகாதிபத்திய முகாமை சார்ந்து நிற்க வேண்டும் எனும் வலது சந்தர்ப்பவத நிலைபாட்டிற்கு அது இட்டுச் செல்லும்.
31. ஏகாதிபத்தியம் என்றாலே முரண்பாடும் யுத்தமும் தவிர்க்கவே முடியாது என லெனினியம் போதிக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நாடு கடந்த நிதிமூலதனம் உருவாகிவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். இதில் இருந்து நாடு கடந்த பாசிசம் எனும் வரையறையை முன்வைக்கிறார்கள். மட்டுமின்றி நாடுகடந்த நிதிமூலதன ஆதிக்கம் என்று சொல்வதன் மூலம், நிதிமூலதனம் தனியொரு நாட்டின் தேசிய எல்லைகளை கடந்துவிட்டதால் அந்நாட்டில் நிதிமூலதனத்தில் இருந்துதான் பாசிசம் வரும் என்று சொல்ல முடியாது; அந்த நாட்டில் உள்ள பிற பிற்போக்கு அம்சங்கள் (சாதி, மதம், இனவாதம்) கூட பாசிசத்தின் அடிப்படையாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இது காவுத்ஸ்கி/டிராட்ஸ்கியவாதமாகும்.
நிதிமூலதனம் சர்வதேசத்தன்மை அடைந்துவிட்டதாக கூறி அதன் தேசியத்தன்மையை காவுத்ஸ்கி திட்டமிட்டு மூடி மறைத்து அதீத ஏகாதிபத்தியக் கோட்பாடு பேசினார். இதை மறுத்து லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் நூலில், நிதிமூலதனம் சர்வதேசத்தன்மை அடைந்தாலும் அதன் தேசிய ஒடுக்குமுறை வடிவம் நீடிக்கவே செய்கிறது என்றார். ஆகவே ஒரு ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நாடு கடந்த நிதிமூலதன ஆதிக்கம் எனும் அதீத ஏகாதிபத்தியக் கோட்பாடு மார்க்சியத்திற்கு எதிரான கலைப்புவாதம் என்றார். அது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கான போட்டியை அதாவது காலனிய மறுபங்கீட்டிற்கான போட்டியையும், ஏகாதிபத்திய நாடுகளில் நடக்கும் தேசிய ஒடுக்குமுறையையும் மூடி மறைப்பதாகும் என்றார் லெனின்.
அதாவது நிதிமூலதனத்தின் தேசிய ஒடுக்குமுறை வடிவம்தான் சர்வதேசியத் தன்மை அடைந்துள்ளதாக லெனினியம் நமக்கு போதிக்கிறது.
காவுத்ஸ்கி நாடு கடந்த நிதிமூலதனம் என்பதன் மூலம் ஏகாதிபத்திய முரண்களையும் மறு பங்கீட்டுக்கான போரையும் மூடி மறைத்தார். பிரிட்டன் தலைமையிலான நாடு கடந்த நிதிமூலதனம் அல்லது அதீத ஏகாதிபத்தியம் உருவாகியுள்ளதாக கூறினார். பிரிட்டன் மட்டுமே உலக மேலாதிக்கத்திற்கு (அதாவது ஒற்றை துருவத்திற்கு) முயல்கிறது என்று கூறினார். இதன் மூலம் மறுபங்கீட்டில் ஈடுபடும் இன்னொரு ஏகாதிபத்தியத்தின் (ஜெர்மன்) நாடு பிடிக்கும் போர்வெறியை ஆதரித்து பாதுகாத்தார். காவுத்ஸ்கி ஏகாதிபத்தியத்தின் அரசியல் பண்பான மேலாதிக்கம் பற்றி மட்டுமே பேசி அதன் பொருளியல் பண்பான மறுபங்கீட்டை மூடி மறைப்பதாக லெனின் சுட்டிக் காட்டினார். அதாவது அரசியலையும் பொருளாதாரத்தையும் பிரிப்பதும், மறுபங்கீடு எனும் பொருளியல் அடிப்படையை மூடிமறைப்பதும் காவுத்ஸ்கியின் கலைப்புவாதம் என்றார் லெனின். மறுபங்கீடு என்றால் தங்கள் எஜமானரான இன்னொரு ஏகாதிபத்தியமும் மறுபங்கீட்டில் ஈடுபடுவதை சொல்ல வேண்டிவரும் என்பதாலாயே மேலாதிக்கம் பற்றி மட்டும் காவுத்ஸ்கி பேசுவதாக லெனின் அம்பலப்படுத்தினார்.
எந்தவொரு ஏகாதிபத்தியத்தின் தலைமையிலும் ஒற்றைத் துருவ மேலாதிக்க அரசு இதுவரை உருவாகவில்லை. இனியும் உருவாகாது. அமெரிக்கா அதற்கு முயன்றதே ஒழிய அது உருவாகவில்லை. அவ்வாறு உருவானதாக சொல்வது நிச்சயமாக காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய கருத்தேயாகும். இக்கருத்தை முன்வைத்துதான் பிரசண்டா நேபாளப் புரட்சியை காட்டிக் கொடுத்தார். சீனாவும் ரசியாவும் முன்வைக்கும் பல்துருவம் என்பது அவற்றின் மேலாதிக்கத்திற்கானதே ஒழிய அது ஒன்றும் முற்போக்கானது அல்ல; ஒற்றைத் துருவ மேலாதிக்க முயற்சிகளுக்கு மாற்றுமல்ல.
எந்தவொரு ஏகாதிபத்திய நாட்டின் நாணயமும் ஒரு நாளும் சர்வதேச நாணயமாக மாற முடியாது. டாலர் ஒரு நாளும் சர்வதேச நாணயம் ஆக முடியாது. அது எப்போதும் அமெரிக்காவின் நாணயமாகவே இருக்கும். எனவே நாடு கடந்த மூலதன ஆதிக்கம் என்பது லெனினியத்திற்கு எதிரானது.
ஆகவே அமெரிக்கா தலைமையிலான நாடுகடந்த நிதிமூலதனம்; நாடுகடந்த பாசிசசம் என்பதும், அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கம் 70 ஆண்டுகளாக மாற்றமின்றி நீடிக்கிறது என்பதும், அமெரிக்கா, சீனா, ரசியா, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் முரண்களை, காலனியாதிக்கப் போட்டியை மூடி மறைத்து சீன - ரசியாவின் காலனியாதிக்கத்தை, போர்வெறியை ஆதரிக்கும் காவுத்ஸ்கியவாதமே என்பது சொல்லாமலே விளங்கும். இது சீன-ரசிய ஆதரவு நிலைபாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஏகாதிபத்திய அமைப்பிற்கே ஆதரவான நிலைபாடு ஆகும். பாட்டாளி வர்க்கத்திற்கு துரோகமிழைக்கும் நிலைபாடாகும்.
32. காவல்துறை, இராணுவம் சிறை, நீதித்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் பாசிசமயமாக்கப்படுவதை காண மறுத்து ஆட்சி வடிவத்தை மட்டும் பாசிசமாக பார்ப்பது தவறாகும். இது ஆட்சி மாற்றங்களால் பாசிசம் ஒழியும் என்ற தவறான கருத்திற்கு இட்டுச் செல்லும்.
(தொடரும்)
இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 2
- சமரன்