‘நாடு கடந்த பாசிசம்’ எனும் காவுத்ஸ்கியவாதம்

போல்ஷ்விக் கட்சியின் பத்திரிக்கை செய்தி

‘நாடு கடந்த பாசிசம்’ எனும் காவுத்ஸ்கியவாதம்

I

பத்திரிக்கை செய்தி

இந்தியா கூட்டணியை ஆதரிக்க மக்கள் யுத்தம் போல்ஷ்விக் கட்சியின் பெயரை கேடாக பயன்படுத்தும் பாட்டாளி வர்க்க சமரன் அணி எனும் டிராட்ஸ்கிய கும்பலின் காவுத்ஸ்கிய கலைப்புவாதத்தை எதிர்ப்போம்!

கட்சியின் பெரும்பான்மை ஒப்புதலுடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இந்த டிராட்ஸ்கிய துரோகிகள் கட்சியின் பெயரை கேடாக பயன்படுத்துவதை போல்ஷ்விக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தங்களது பாட்டாளி வர்க்க துரோக அரசியலுக்கு பாட்டாளி வர்க்க கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கிறது. 

ஏ.எம்.கே தலைமையிலான போல்ஷ்விக் கட்சிக்குள் அவர் இருக்கும்வரை ஏகாதிபத்தியம், பனிப்போர், காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள், இந்தியப் புரட்சியின் செயல்தந்திரம், போர் தந்திரம், குறிப்பான திட்டம் உள்ளிட்டு அவரால் முன்வைக்கப்பட்ட கட்சியின் அடிப்படை மார்க்சிய நிலைபாடுகளை கேள்வி கேட்க துணிச்சல் இல்லாத இந்த கும்பல் அவர் மறைந்த அடுத்த நாள் முதல் கட்சியின் நிலைபாடுகளை தூக்கி எறிந்து டிராட்ஸ்கியவாதத்தை பரப்பி கட்சியை உடைக்க கோஷ்டிவாதத்தில் ஈடுபட்டது. கட்சிக்குள் இருந்துகொண்டே டிராட்ஸ்கியவாதத்தின் அடிப்படையில் தனிக்கட்சி கட்ட முயற்சித்ததை அடுத்து கட்சியின் பெரும்பான்மை ஒப்புதலுடனும் மூன்றாம் அகிலத்தின் தீர்மானத்தின் அடிப்படையிலும் இக்கும்பலை கட்சி நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக நீக்கியது. ஆகவே இக்கும்பலுக்கு கட்சியின் பெயரை பயன்படுத்த எவ்வித அதிகாரமும் இல்லை. மாவோ தோற்றார், ஏ.எம்.கே தோற்றார், ஏ.எம்.கேவிற்கு தத்துவ அறிவு இல்லை என பேசிய இக்கும்பல் அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரை மட்டும் பயன்படுத்துவது ஈனத்தனமான பிழைப்புவாதமே அன்றி வேறில்லை. 

முன்பு கட்சிக்குள் இருந்த போது லெனினியத்தின் கொடிய விரோதியான டிராட்ஸ்கியை மாக்சிய - லெனினியவாதி எனவும், மகத்தான லெனினியவாதியான ஸ்டாலினை கலைப்புவாதி - எதேச்சதிகாரி எனவும் இக்கும்பல் கூறியது. ஸ்டாலின் இந்திய - சீனப் புரட்சிகளின் எதிரி, உலகப் புரட்சியின் எதிரி என நம் ஆசான் மீது டிராட்ஸ்கியைப் போன்று வன்மத்தை கக்கியது. லெனின் முன்வைத்த தனியொரு நாட்டுப் புரட்சிக் கொள்கை வெற்றி பெறவில்லை; ஆகவே லெனினியம் பொருந்தாது; டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடுதான் சரி என்றும் லெனினின் உயில் அடிப்படையில் லெனினுக்கு பிறகு டிராட்ஸ்கிதான் தலைவர்; ஸ்டாலின் அல்ல என்றும் லெனினியத்தை தாக்கியது. டிராட்ஸ்கியை புரட்சியாளர் எனவும் ஸ்டாலினை எதிர் புரட்சியாளர் எனவும் கூச்சமின்றி கூறியது. ஜோசப் ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் தவறு எனவும், அவரால்தான் கம்யூனிச இயக்கங்கள் கலைந்தன எனவும் கூறிய இக்கும்பல் தற்போது மு.க.ஸ்டாலினை பாசிச எதிர்ப்பு போராளி என்று கூறி அரசியல் வேசித்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின் முன்வைத்த பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் இடது வலது விலகல்களை கொண்டது என கட்சிக்குள் இருந்த போது ஊளையிட்ட இந்த கும்பல், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பின்பு ஷாங்காய் கூட்டணி மற்றும் காங்கிரசு - திமுக கூட்டணியை ஆதரிக்க ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரமே சரியானது என்று பச்சோந்தித்தனமாக மாற்றிப் பேசி அதை கேடாக பயன்படுத்திவருகிறது. சோசலிச முகாம்களைக் காப்பாற்ற மூன்றாம் அகிலம் இரண்டாம் உலகப்போரின் போது முன்வைத்த செயல்தந்திரத்தை தற்போது காங்கிரசு - திமுகவைக் காப்பாற்ற வறட்டுத்தனமாக, சதித்தனமாக மானவெட்கமின்றி முன்வைக்கிறது. காங்கிரசு - திமுகவிற்கு வாக்குப் பிச்சை கேட்பதெல்லாம் ஐக்கிய முன்னணி என சிறிதும் மானவெட்கமின்றி பேசிவருகிறது. ஒரு புறம் அமெரிக்க எதிர்ப்பு பேசிக்கொண்டே மறுபுறம் அமெரிக்காவின் எடுபிடிகளான காங்கிரசு - திமுக கூட்டணியை ஆதரித்து வருகிறது. இவ்வாறாக அமெரிக்காவின் கைக்கூலிகளாக மாறியுள்ளது மட்டுமின்றி இந்திய, தமிழக தரகு முதலாளிகளின் ஊதுகுழலாகவும் மாறியுள்ளது இந்த டிராட்ஸ்கிய கும்பல். 

பாட்டாளி வர்க்க துரோகியான டிராட்ஸ்கியை ரசியப் புரட்சிகர வரலாறு குப்பையில் தூக்கி எறிந்தது போல இந்த டிராட்ஸ்கியவாத கலைப்புவாத கும்பலையும் போல்ஷ்விக் கட்சி குப்பையில் தூக்கி எறிந்தது. அது தற்போது பாஜக எதிர்ப்பின் பேரில் அறிவாலயத்தின் வாசலிலும் சத்யமூர்த்தி பவன் வாசலிலும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. மருதையன் அணிக்கு அறிவாலயத்திற்குள் நுழையும் வாய்ப்பு கிட்டியது போல தனக்கும் ஒரு வாய்ப்பு கிட்டுமா என நா தொங்க காத்துக்கிடக்கிறது.

ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசம் குறித்து இக்கும்பல் முன்வைக்கும் கருத்துகள் காவுத்ஸ்கிய கலைப்புவாதமே! 

பாட்டாளி வர்க்க சமரன் அணி எனும் பெயரில் செயல்படும் இந்த கும்பல் ஏகாதிபத்தியம், பாசிசம் குறித்து லெனினியத்திற்கு எதிரான காவுத்ஸ்கிய கலைப்புவாத கருத்துகளை முன்வைத்துள்ளது. 

ஏகாதிபத்தியம் என்றாலே முரண்பாடும் யுத்தமும் தவிர்க்கவே முடியாது என லெனினியம் போதிக்கிறது. ஆனால் இக்கும்பல் அமெரிக்கா தலைமையிலான நாடு கடந்த நிதிமூலதனம் (Trans-national finance capital) உருவாகிவிட்டதாக பேசுகிறது. இதில் இருந்து நாடு கடந்த பாசிசம் (Trans-national fascism) எனும் வரையறையை முன்வைக்கிறது. 

நிதிமூலதனம் சர்வதேசத்தன்மை அடைந்துவிட்டதாக கூறி அதன் தேசியத்தன்மையை காவுத்ஸ்கி திட்டமிட்டு மூடி மறைத்து அதீத ஏகாதிபத்தியக் கோட்பாடு பேசினார். அதைத்தான் இக்கும்பலும் தற்போது புதிய கண்டுபிடிப்பு போல பேசுகிறது. இதை லெனின் மறுத்து நிதிமூலதனம் சர்வதேசத்தன்மை அடைந்தாலும் அதன் தேசிய ஒடுக்குமுறை வடிவம் நீடிக்கவே செய்கிறது என்றார். ஆகவே ஒரு ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நாடு கடந்த நிதிமூலதன ஆதிக்கம் எனும் அதீத ஏகாதிபத்தியக் கோட்பாடு மார்க்சியத்திற்கு எதிரான கலைப்புவாதம் என்றார். அது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கான போட்டியை அதாவது காலனிய மறுபங்கீட்டிற்கான போட்டியையும், ஏகாதிபத்திய நாடுகளில் நடக்கும் தேசிய ஒடுக்குமுறையையும் மூடி மறைப்பதாகும் என்றார் லெனின். 

அதாவது நிதிமூலதனத்தின் தேசிய ஒடுக்குமுறை வடிவம்தான் சர்வதேசியத் தன்மை அடைந்துள்ளதாக லெனினியம் நமக்கு போதிக்கிறது. 

காவுத்ஸ்கி நாடு கடந்த நிதிமூலதனம் என்பதன் மூலம் ஏகாதிபத்திய முரண்களையும் மறு பங்கீட்டுக்கான போரையும் மூடி மறைத்தார். பிரிட்டன் தலைமையிலான நாடு கடந்த நிதிமூலதனம் அல்லது அதீத ஏகாதிபத்தியம் உருவாகியுள்ளதாக கூறினார். பிரிட்டன் மட்டுமே உலக மேலாதிக்கத்திற்கு (அதாவது ஒற்றை துருவத்திற்கு) முயல்கிறது என்று கூறினார். இதன் மூலம் மறு பங்கீட்டில் ஈடுபடும் இன்னொரு ஏகாதிபத்தியத்தின் (ஜெர்மன்) நாடு பிடிக்கும் போர்வெறியை ஆதரித்து பாதுகாத்தார். காவுத்ஸ்கி ஏகாதிபத்தியத்தின் அரசியல் பண்பான மேலாதிக்கம் பற்றி மட்டுமே பேசி அதன் பொருளியல் பண்பான மறுபங்கீட்டை மூடி மறைப்பதாக லெனின் சுட்டிக் காட்டினார். அதாவது அரசியலையும் பொருளாதாரத்தையும் பிரிப்பதும், மறு பங்கீடு எனும் பொருளியல் அடிப்படையை மூடிமறைப்பதும் காவுத்ஸ்கியின் கலைப்புவாதம் என்றார் லெனின். மறு பங்கீடு என்றால் தங்கள் எஜமானரான இன்னொரு ஏகாதிபத்தியமும் மறு பங்கீட்டில் ஈடுபடுவதை சொல்ல வேண்டிவரும் என்பதாலாயே மேலாதிக்கம் பற்றி மட்டும் காவுத்ஸ்கி பேசுவதாக லெனின் அம்பலப்படுத்தினார். 

எந்தவொரு ஏகாதிபத்தியத்தின் தலைமையிலும் ஒற்றை துருவ மேலாதிக்க அரசு இதுவரை உருவாகவில்லை. இனியும் உருவாகாது. அமெரிக்கா அதற்கு முயன்றதே ஒழிய அது உருவாகவில்லை. அவ்வாறு உருவானதாக சொல்வது நிச்சயமாக காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய கருத்தேயாகும். இக்கருத்தை முன்வைத்துதான் பிரசண்டா நேபாளப் புரட்சியை காட்டிக் கொடுத்தார். சீனாவும் ரசியாவும் முன்வைக்கும் பல்துருவம் என்பது அவற்றின் மேலாதிக்கத்திற்கானதே ஒழிய அது ஒன்றும் முற்போக்கானது அல்ல; ஒற்றை துருவ மேலாதிக்க முயற்சிகளுக்கு மாற்றுமல்ல. 

எந்தவொரு ஏகாதிபத்திய நாட்டின் நாணயமும் ஒரு நாளும் சர்வதேச நாணயமாக மாற முடியாது. டாலர் ஒரு நாளும் சர்வதேச நாணயம் ஆக முடியாது. அது எப்போதும் அமெரிக்காவின் நாணயமாகவே இருக்கும். எனவே நாடு கடந்த மூலதன ஆதிக்கம் என்பது லெனினியத்திற்கு எதிரானது.

ஆகவே அமெரிக்கா தலைமையிலான நாடு கடந்த நிதிமூலதனம் என்பதும், அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கம் 70 ஆண்டுகளாக மாற்றமின்றி நீடிக்கிறது என்பதும், அமெரிக்கா, சீனா, ரசியா, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் முரண்களை, காலனியாதிக்கப் போட்டியை மூடி மறைத்து சீன - ரசியாவின் காலனியாதிக்கத்தை, போர்வெறியை ஆதரிக்கும் காவுத்ஸ்கியவாதமே என்பது சொல்லாமலே விளங்கும். இது சீன ரசிய ஆதரவு நிலைபாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஏகாதிபத்திய அமைப்பிற்கே ஆதரவான நிலைபாடு ஆகும். பாட்டாளி வர்க்கத்திற்கு துரோகமிழைக்கும் நிலைபாடாகும்.

பாசிசம் என்பது நிதிமூலதன ஏகபோகத்தின் அப்பட்டமான மிகவும் பிற்போக்கான சர்வாதிகாரம் என்று மூன்றாம் அகிலம் வரையறுத்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக பாசிசம் குறித்த கலைப்புவாத கோட்பாட்டை இக்கும்பல் முன்வைத்துள்ளது. 

20 ஆம் நூற்றாண்டு பாசிசம் தேசிய முதலாளித்துவ பிரிவுகளுக்காக உருவானதாக அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் 21 ஆம் நூற்றாண்டு பாசிசம் நாடு கடந்த மூலதன நலன்களுக்கான "நாடு கடந்த பாசிசம்" எனவும் கூறுகிறது. இவ்விரண்டுமே மூன்றாம் அகில வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும். இது அப்பட்டமாக ஏகாதிபத்தியம் குறித்த காவுத்ஸ்கிய நிலைபாட்டில் இருந்து உருவான கலைப்புவாத நிலைபாடாகும். 

அதாவது அமெரிக்கா தலைமையிலான நாடு கடந்த மூலதன ஆதிக்கம் எனும் அதீத ஏகாதிபத்திய கருத்தில் இருந்து நாடு கடந்த பாசிசம் எனும் கலைப்புவாத நிலைபாட்டை முன்வைத்துள்ளது. இதன் உட் பொருள் பாசிசம் குறித்த மார்க்சிய வரையறை இன்று பொருந்தாது என்பதுதான். பாசிசம் இன்று மதவாத பாசிசமாகவே உலகு தழுவியதாக உள்ளது என்று கூறுவது இதை நியாயப்படுத்தவே. இந்துமத பாசிசம் என சொல்லும் போது அது இங்கு பார்ப்பனிய பாசிசமாகவே பார்க்கப்படுகிறது என சொல்வது பாசிசம் குறித்த மார்க்சிய செவ்வியல் வரையறை பொருந்தாது என்பதையே குறிக்கிறது. அதை நேராக சொல்ல துணிச்சல் இன்றி மறைமுகமாக முன்வைக்கிறது. பார்ப்பனிய பாசிசம் எனும் இந்த வரையறை தரகு முதலாளித்துவ கோட்பாடு என எமது போல்ஷ்விக் கட்சி மக்கள் அதிகாரம் குறித்த விமர்சன நூலில் நிறுவியுள்ளது. ஆனால் இந்த டிராட்ஸ்கிய கும்பல் போல்ஷ்விக் கட்சிக்கு எதிரான இந்த நிலைபாட்டை போல்ஷ்விக் கட்சியின் பெயராலேயே முன்வைத்துள்ளது. பார்ப்பனிய பாசிசம் என்பது திமுக ஆதரவு தரகுமுதலாளித்துவ நிலைபாடு என எமது கட்சி அதில் தெளிவாக முன்வைத்துள்ளது. அப்போது அதை ஆதரித்த இக்கும்பல் இன்று கட்சியின் நிலைபாட்டை கைவிட்டு ஓடுகாலியாக மாறி அதே தரகுமுதலாளித்துவ கோட்பாட்டை வாய் கூசாமல் பேசுகிறது. 

நாடு கடந்த மூலதன ஆதிக்கம் என்பது அதன் தேசியத்தன்மையை எவ்வாறு மறுத்ததோ அதுபோலவே பாசிசம் குறித்த இவர்கள் கண்ணோட்டத்திலும் அது வெளிப்படுகிறது. நாடு கடந்த நிதிமூலதனத்தை தேசிய அரசுகளால் கட்டுப்படுத்த முடியாது; அது தேச எல்லைகளை கடந்தது; எனவே நிதிமூலதனம்தான் பாசிசத்தை உண்டாக்கும் என்ற மார்க்சிய செவ்வியல் வரையறை இன்று பொருந்தாது என்று ரெட்ஸ்டார் அமைப்பு கூறுகிறது. அதாவது, முதலாளியத்திற்கு முந்தைய பிற்போக்கான உற்பத்தி முறையும், பார்ப்பனியமும் மதமும் கூட பாசிசத்தை உண்டாக்கும் என்று ரெட்ஸ்டார் அறிக்கை மறைமுகமாக கூறுகிறது. அதையேதான் அச்சுபிசகாமல் இவர்களும் கூறுகிறார்கள். எவ்வாறு மூலதனத்திற்கு தேசியத்தன்மை இல்லையோ அதுபோலவே பாசிசத்திற்கும் தேசியத்தன்மை இல்லை என்பதுதான் அதன் ஒட்டுமொத்த சாரமாகும். 21 ஆம் நூற்றாண்டு பாசிசத்திற்கு அதாவது, புதிய பொருளாதார யுகத்தின் பாசிசத்திற்கு தேசியத்தன்மை இல்லை என இக்கும்பல் கூறுவதன் பொருளும் இதுதான்.

பிரபாத் பட்நாயக் ஏகாதிபத்தியம் –முதலாளித்துவ உச்சக் கட்டம் என்ற லெனின் நூலுக்கு எழுதிய முன்னுரையில் நாடு கடந்த நிதிமூலதன ஆதிக்கம் உருவாகிவிட்டது என்ற காவுத்ஸ்கிய வாதத்தை முன்வைத்துள்ளார். நாடு கடந்த பாசிசம் என்று ரெட்ஸ்டார் கூறுகிறது. எனவே இக்கருத்துக்கள் பாவச அணி கும்பலின் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. சிபிஎம், ரெட்ஸ்டார்-ன் கருத்துக்களையே மீண்டும் வாந்தியெடுக்கிறது. 

பாசிச உருவாக்கத்தை புதிய பொருளாதாரக் கொள்கையில் இருந்து மட்டும் பார்ப்பது ஏகபோக நிதிமூலதனப் பாசிசம் எனும் மார்க்சிய வரையறையை மறுப்பதே ஆகும். பாசிசம் புதிய பொருளாதார கொள்கையால் தீவிரம் பெற்றதே ஒழிய பாசிசத்தின் வேர் அது அல்ல. பாசிசம் நிதிமூலதன ஏகபோகத்தில் இருந்துதான் ஜெர்மனியில் உருவானதே ஒழிய இவர்கள் சொல்வது போல 20 ஆம் நூற்றாண்டு பாசிசம் தேசிய முதலாளித்துவ நலன்களில் இருந்து உருவாகவில்லை. 

நாடு கடந்த சர்வதேச நிதிமூலதனம்! நாடு கடந்த சர்வதேச பாசிசம்! நாடு கடந்த சர்வதேச புரட்சி! அடடா! கற்பனை உலகில் சஞ்சரிக்கும் டிராட்ஸ்கிய - காவுத்ஸ்கியின் மெய்யான வாரிசுகள் இவர்கள்தாம்!

இக்கும்பலின் கலைப்புவாத செயல்தந்திரம் குறித்து 

இவர்களின் சர்வதேச செயல்தந்திரம் அமெரிக்க எதிர்ப்பு ரசிய - சீன ஆதரவு என்பதாக உள்ளது. அப்படியானால் அதன் உள்நாட்டு செயல்தந்திரம் அதற்கு சேவை செய்வதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அமெரிக்காவின் எடுபிடியாக இருந்து கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் காங்கிரசு - திமுகவின் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறது. என்ன ஒரு கேலிக்கூத்து பாருங்கள்! புதிய பொருளாதார கொள்கையில் இருந்துதான் பாசிசம் உருவாவதாக சொல்லும் இவர்கள் அக்கொள்கைகளை அமல்படுத்தும் காங்கிரசு, திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளை பாஜகவிற்கு மாற்றாக சொல்வது மக்களை ஏமாற்றும் துரோகத்தனம் அன்றி வேறு என்ன ?? 

காங்கிரசு ஆட்சிதான் புதிய பொருளாதார கொள்கைகளை முதன்முதலாக அமல்படுத்தி பாசிசத்திற்கு விதை போட்டது. அக்கொள்கையைத்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பாஜகவும் காங்கிரசும் அமல்படுத்தி வருகின்றன. பாஜக நான்கு கால் பாய்ச்சலில் அதை செய்கிறது. இது எட்டு கால் நாய். அது 6 கால் நாய். அவ்வளவுதான் வேறுபாடு. மற்றபடி இரண்டும் அமெரிக்காவின் வேட்டை நாய்கள்தாம். பிறகெப்படி இக்கட்சிகள் பாஜகவிற்கு மாற்றாக அமையும்? 

புதிய பொருளாதார கொள்கைக்கு மனித முகமூடி அணிவிக்கும் கட்சிதான் காங்கிரசும் திமுகவும் என்று அறிக்கையில் இக்கும்பல் கூறிக்கொண்டே அவற்றை ஆதரிக்க சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமே. இந்தியா கூட்டணி இதுவரை பாசிச எதிர்ப்பு திட்டம் ஏதும் வைக்காத நிலையில், அவற்றின் ஒரு சில தேர்தல் வாக்குறுதிகளை காரணமாக காட்டி ஆதரிப்பது என்பது மக்களுக்கு செய்யும் துரோகமே. மாநில தரகு முதலாளித்துவம் அகில இந்திய தரகு முதலாளித்துவ நலன்களுடன் பிண்ணிப் பிணைந்துள்ள நிலையில் திமுக போன்ற மாநில கட்சிகள் பாசிச எதிர்ப்பில் பங்காற்றும் என்பது மக்களை ஏய்க்கும் துரோகம்தான். 

பாசிச எதிர்ப்பு திட்டத்தை இந்த நாள் வரை முன்வைக்காத இந்தியா கூட்டணி எவ்வாறு பாசிச எதிர்ப்பில் பங்காற்றும்? அவ்வாறு பங்காற்றுவதாக சொல்லி மாயையை உண்டாக்குவது அமெரிக்க அடிவருடித்தனம்; தரகு முதலாளித்துவ எடுபிடித்தனம். பாஜகவின் பாசிச ஆட்சிக்கு காங்கிரசு ஆட்சி மாற்றாக விளங்கவே இயலாது. காரணம் இரண்டு கட்சிகளும் அமெரிக்க எடுபிடி கட்சிகளே. இரண்டின் தரகு முதலாளித்துவ நலன்களும் ஒன்றே. 

புதிய காலனிய புதிய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்தும் தரகு முதலாளித்துவக் கட்சிகளை கொண்டு தேசிய ஜனநாயக முன்னணி அரசு என பேசுவது பித்தலாட்டமாகும். தேசிய ஜனநாயக முன்னணி அரசு என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, புதிய பொருளாதார கொள்கை எதிர்ப்பு திட்டத்தைக் கொண்ட தேசிய முதலாளித்துவ அரசாகும். அதாவது வ.உ.சி., சன்யாட்சென் போன்ற தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் இயங்கும் அரசாகும். அத்தகைய அரசு உருவானால் குறைந்தபட்ச திட்டத்தின் மூலம் இடைக்கால தீர்வு எனும் அடிப்படையில் அதை ஆதரிக்கலாம். ஆனால் அத்தகைய தேசிய முதலாளித்துவ வர்க்கம் தற்போது பலமாக இல்லை. ஒரு தரகுமுதலாளித்துவ பாசிச அரசை தேசிய ஜனநாயக அரசு என பொய்யாக காட்டி மக்களுக்கு துரோகம் இழைக்கிறது இக்கும்பல்.

ஆகவே இந்த ஓடுகாலி டிராட்ஸ்கிய கும்பல் எமது கட்சியின் பெயரை கேடாக பயன்படுத்துவதை கண்டிக்கிறது. புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இதை கண்டித்து நிராகரிக்குமாறு போல்ஷ்விக் கட்சி கோருகிறது. அக்கும்பல் தமது துரோகத்தனத்தை சொந்த பெயரில் செய்யட்டும். ஆனால் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்கும் துரோகத்திற்கு எமது கட்சியின் பெயரை கேடாக பயன்படுத்தினால் அதை அனுமதிக்காது எனவும் எச்சரிக்கை விடுக்கிறது.

(இகக (மா.லெ.) (மக்கள் யுத்தம் –போல்ஷ்விக்), தமிழ்நாடு)

- சமரன், ஜனவரி 2024 இதழில்

======================================================================================================

 II 

பின் இணைப்பு: 

பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் குறித்த பாட்டாளி வர்க்க நிலைபாடு

பாசிச அரசு என்பது இடைக்கட்டமா

பாசிச அரசு என்பது கட்டாயமாக முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் இடையில் தோன்றும் இடைக்கட்ட அரசு வடிவம் என்று சிலர் கருதுகிறார்கள். இது தவறாகும் என்கிறார் டோக்ளியாட்டி. பாசிசம் என்பது அவசியமானதொரு இடைக்கட்ட அரசு வடிவம் அல்ல. ஏகாதிபத்திய சகாப்தம் முழுதும் பாசிசம் நிலவுவதில்லை. அது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில், ஏகாதிபத்திய நிதி மூலதனம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், நெருக்கடியை எதிர்த்த உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கும் கட்டியமைக்கப்படும் அரசு வடிவமாகும். எனவேதான் முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகம் போருக்கும் இடையில் பாசிசம் முதன்முதலில் தோன்றி வெற்றி பெற்றது. தற்போதைய சூழல் சோசலிச முகாமோ (அ) வலிமையானதொரு பாட்டாளி வர்க்க இயக்கமோ இல்லாத சூழலாகும். திட்டவகைப்படாத, தன்னியல்பு போராட்டங்களே நடந்து வருகின்றன. அவை இந்த சமூக அமைப்பிற்குள்ளாகவே தீர்வைத் தேடும் போராட்டங்களாக உள்ளன. இது ஏகாதிபத்தியத்திற்கு சாதகமானதும் பாட்டாளி வர்க்கத்திற்குப் பாதகமானதுமான ஒரு சூழலாகும். எனவேதான் பாசிசம் மெல்ல மெல்லக் கட்டியமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சிலர் பாசிச அரசு இடைக்கட்ட அரசு வடிவம் என்று கூறி இடைக்கட்ட ஜனநாயகத் திட்டம் தேவை என்று கருதுகிறார்கள். இது தவறு என்கிறார் டிமிட்ரோவ். அவர் ஐக்கிய முன்னணி தந்திரம் என்ற நூலில் கூறுவதாவது:

"வலது சந்தர்ப்பவாதிகள் ஒரு தனி ஜனநாயக இடைக்கால கட்டத்தை முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்திற்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் இடையில் ஸ்தாபிப்பதற்கு முயல்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் தொழிலாளர்களிடத்தில் ஒரு சர்வாதிகாரத்திலிருந்து மற்றொன்றிற்கு சமாதான முறையில், பாராளுமன்ற முறையின் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்னும் பிரமையை உண்டாக்குவதாகும். இந்த போலியான "இடைக்கால கட்டம்" என்பதை அவர்கள் லெனினுடைய வாசகத்தை மேற்கோள் காட்டி அதன் "இடைமாறுதல் வடிவம்" என்று வாதிட்டார்கள். இந்த மோசடியை அம்பலப்படுத்துவது கஷ்டமல்ல. லெனின் பாட்டாளி வர்க்க புரட்சிக்கான மாறுதல் வடிவம் பற்றிய அணுகுமுறையைப் பற்றி குறிப்பிட்டார். முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிவதற்கான வழிமுறைகளைப் பற்றி குறிப்பிட்டார். முதலாளித்துவ வர்க்க மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இடையிலுள்ள சில இடைமாறுதல் வடிவங்களைப் பற்றி அல்ல" என்கிறார் டிமிட்ரோவ்.

(பாசிசம் பற்றி, செந்தளம் வெளியீடு, ப. 119-120)

எனவே 'பாசிச அரசு' என்பது கட்டாயமான இடைக்கட்டம் என்று கூறி, பாராளுமன்றவாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 'ஜனநாயகத்தை' நிலைநாட்டுவது என்பது அப்பட்டமான வலது சந்தர்ப்பவாதமாகும்.

அடிப்படை வர்க்கங்களுடன் ஐக்கிய முன்னணி என்பது கட்டத்திற்கு கட்டம் மாறாது

அதே போன்று, ஐக்கிய முன்னணியில் தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளிய வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணி என்பதே அடிப்படையாகும். இது கட்டத்திற்குக் கட்டம் மாறுபடுவதில்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவின் பாத்திரமே கட்டத்திற்கு கட்டம் மாறுபடும். இது குறித்து ஏ.எம்.கே கூறுவதாவது:

"எந்தவொரு ஐக்கிய முன்னணியின் அடிப்படையும் தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம் மற்றும் குட்டி முதலாளிய வர்க்கம் என்று அமைய வேண்டும். இது கட்டத்திற்குக் கட்டம் மாறாது. ஐக்கிய முன்னணி பற்றி பேசும் போதெல்லாம், அடிக்கடி முதலாளிய வர்க்கத்துடனான ஒற்றுமை பற்றி சிந்திக்கின்ற ஒரு போக்கு, மேற்கூறிய மூன்று அடிப்படை வர்க்கங்களுடனான இந்த முன்னணியைக் கட்ட வேண்டும் என்ற அவசியத்தை மறுக்கின்ற ஒரு போக்கு நிலவுகிறது. இயக்கத்தின் வெவ்வேறு கட்டங்களில் மாறுவது எதுவென்றால், முதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவின் பாத்திரமேயாகும்".

(கனுசல்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைபாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும், சமரன் வெளியீடு, ப.141)

செயல்தந்திரம் எவ்வாறு வகுப்பது

எந்தவொரு செயல் தந்திரமும் பின்வரும் இரு அம்சங்களிலிருந்து கணிக்கப்பட வேண்டும் என்று மார்க்சியம் கோருகிறது.

1. வர்க்கச் சக்திகளின் உறவுகள் பற்றிய ஒரு சரியான மதிப்பீடு.

இது இயக்கத்தின் அரசியல் பணிகளை (அ) அரசியல் வழிகளைத் தீர்மானிக்கிறது.

2. இயக்கத்தின் அலை ஏற்றத்தையும், அலை இறக்கத்தையும் பற்றிய ஒரு சரியான கணிப்பு.

இது அரசியல் பணியை அதாவது போராட்ட வடிவங்கள், அமைப்பு வடிவங்கள் போன்றவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கிறது.

புதிதாக வகுக்கப்படும் செயல் தந்திரம், போர்த்தந்திரத்தை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். போர்த்தந்திரம் திட்டத்திற்குச் சேவை செய்வதாக இருக்கவேண்டும். இவ்வாறு இல்லாமல் செயல் தந்திரம் ஒன்றை வகுப்பது என்பது சாராம்சத்தில் புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைவிடுவது போன்றதே ஆகும்.

நாம் முன்பே பார்த்தவாறு, ஐக்கிய முன்னணியின் அடிப்படை என்பது, தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், குட்டி முதலாளிய வர்க்கம் ஆகிய அடிப்படை வர்க்கங்களுடனான ஐக்கிய முன்னணி என்பதே ஆகும். ஐக்கிய முன்னணி என்றாலே பூர்ஷ்வா வர்க்கத்துடனான ஐக்கிய முன்னணி என்று கருதுவது வலது சந்தர்ப்பவாதத்தில் சென்று முடியும்.

உதாரணமாக, இந்தியாவில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி பற்றி பேசும்பொழுது, அத்தகையதொரு செயல் தந்திரம் நமது போர்த்தந்திரத்திற்கும், இறுதியில் திட்டத்திற்கும் சேவை செய்வதாக இருக்க வேண்டும்.

இந்திய பாசிசத்தின் இலக்குகளாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதற்குச் சேவை செய்யும் அதிகார தரகு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலவுடைமை வர்க்கத்தின் கூட்டணியும் உள்ளன. இவற்றின் பிரதிநிதிகளாக காங்கிரசும், பாஜகவும் திகழ்கின்றன. மாநில தரகு வர்க்க சக்திகள் இவ்விரண்டு பாசிசக் கட்சிகளுடன் ஒட்டுண்ணி போலச் சார்ந்து வாழும் தன்மையுடையதாக உள்ளன. எனவே இலக்கு சக்தியான காங்கிரசு கட்சியையும் தி.மு.க போன்ற மாநில தரகு முதலாளித்துவ வர்க்க கட்சிகளையும் சமரச சக்திகளாக வரையறுப்பது வலது சந்தர்ப்பவாதமாகும். மேலும் ஐக்கிய முன்னணி என்பதை வெறும் தேர்தல் கூட்டணியாக பார்க்கும் திருத்தல்வாத போக்கு எம்.எல் இயக்கங்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளது. இது காங்கிரசு - தி.மு.க அணிக்கு வாக்கு கேட்பதே ஒரு ஐக்கிய முன்னணிதான் என பிதற்றும் நிலைக்கு தாழ்ந்துள்ளது.

இந்தியாவில் அத்தகைய சமரச சக்திகள் யார்

இது குறித்து ஏ.எம்.கே கூறுவதாவது:

"இந்தியாவில் சமரச சக்திகள், தேசிய முதலாளிய வர்க்கத்தின் வலதுசாரி பிரிவு, குட்டி முதலாளி வர்க்கத்தின் மேல் தட்டுப் பிரிவு, பணக்கார விவசாய வர்க்கத்தின் மேல்தட்டுப் பிரிவு ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கியதல்ல. அரசு அதிகாரத்தில் பங்கு பெற முடியாத தரகு முதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவையும் உள்ளடக்கியதாகும். குறிப்பாக ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுத்துவ வாதிகள் மற்றும் பெரும் தரகு அதிகாரத்துவ முதலாளிகளுடன் தமது சொந்த முரண்பாடுகளின் காரணமாக சில சலுகைகளைப் பெறுவதற்காக ஜனநாயகப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முன்வருகின்ற, தன்மையில் தரகர்களாக உள்ள நடுத்தர முதலாளிய வர்க்கப் பிரிவானது சமரசம் செய்து, இயக்கத்திற்குத் துரோகம் விளைவிக்கிறது. இவையே இந்தியாவின் பிரதான சமரச வர்க்கங்களாகும்".

(அதே நூல், பக்கம் 123-124)

ஆகவே, இந்த சமரச சக்திகளைத் தனிமைப்படுத்துவது என்பது, அவர்களின் திட்டத்திற்கு மாற்றாக மா.லெ அடிப்படையில் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்து அவர்களின் பின்னால் அணிதிரண்டுள்ள அடிப்படை வர்க்கங்களை வென்றெடுப்பது என்பதே சமரச சக்திகளைத் தனிமைப்படுத்துவது என்பதற்கான பொருள் ஆகும். சமரச சக்திகளுடன் அவர்களின் தலைமையில் ஐக்கிய முன்னணி என்ற பொருளில் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும். இவ்வாறு கருதுவது வலது சந்தர்ப்பவாதத்தில் முடியும்.

காங்கிரசு கட்சியும், பாஜகவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதற்குச் சேவை செய்யும் பெரும் தரகு முதாளித்துவ அதிகார வர்க்கங்கள், நிலவுடைமை வர்க்கங்களின் ஒரே முகாமின் இரு சமமான பிரதிநிதிகள் ஆகும். மாநில தரகு அதிகார வர்க்கக் கட்சிகள் (தி.மு.க, அ.தி.முக) இவ்விரு மத்திய பாசிசக் கட்சிகளின் தொங்கு சதைகளாக விளங்குகின்றன. எனவேதான் இவை பாசிசத்தின் இலக்குகளாக உள்ளன. இந்தியாவில் சமரச சக்திகள் யார்? என்று நாம் முன்பே கண்டோம். அதிகாரத்தில் பங்கு பெற முடியாத தரகு முதலாளித்துவ வர்க்கத்தையே சமரச வர்க்கம் என்று கண்டோம். காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதனாலேயே எதிர் கட்சியாக இருப்பதனாலேயே அக்கட்சியை அதிகாரத்தில் இல்லாத தரகு முதலாளித்துவ வர்க்கக் கட்சி என்று கருதுவதும், சமரச சக்தியாக வரையறுப்பதும் சாரம்சத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பையும், இந்திய தரகு முதலாளித்துவ அதிகார வர்க்க - நிலவுடைமை வர்க்க எதிர்ப்பையும் (அதாவது புதிய ஜனநாயகப் புரட்சியை) கைவிட்டு ஓடுவதாகும். காங்கிரசும், பாஜகவும் ஆளுங் கட்சி - எதிர் கட்சிகள் அல்ல. அவை எப்போதும் ஆளும் வர்க்கக் கட்சிகளே.

எனவே, பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல் தந்திரத்தை வகுக்கும்போது, வர்க்க சக்திகளின் உறவுகளைப் பற்றிய மதிப்பீட்டில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வலது (அ) இடது விலகலில் சென்று இயக்கம் அழியும்.

இது பற்றி ஏ.எம்.கே கூறுவதாவது:

"ஒரு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வலது (அ) இடது விலகல் இரண்டுமே ஒரு குறிப்பிட்ட காலத்தின் சூழ்நிலை பற்றிய தவறான தன்னிலைவாதக் கணிப்பிலிருந்து வருகின்றன. அதாவது வர்க்க சக்திகளின் உறவு பற்றிய தவறான மதிப்பீடு, இயக்கத்தின் அலை ஏற்றம் - இறக்கம் பற்றிய தவறான மதிப்பீடு ஆகியவற்றிலிருந்தே வருகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் வர்க்க சக்திகளின் உறவு பற்றி கணிக்கும் போது, முதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவின் பாத்திரம் புரட்சிக்கு எதிராக இருக்கும் போதே, அப்பிரிவை ஒரு கூட்டாளியாகக் கருதும் முடிவிற்கு ஒருவர் வந்தால் இது ஒரு வலது விலகலாகும். அதுபோலவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் வர்க்க சக்திகளின் உறவைக் கணிக்கும் பொழுது முதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவு எதிரிக்கு எதிரானப் போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் போது நாம் அதனுடன் கூட்டு சேராவிட்டால் அது ஒரு இடது விலகலாகும்".

(அதே நூல், பக்கம் 151)

ஏ.எம்.கே மேலும் கூறுவதாவது:

"அதுபோலவே இயக்கத்தின் அலை ஏற்றம்-இறக்கம் பற்றி நாம் சரியாகக் கணிக்கவில்லையென்றால் நாம் வலது (அ) இடதுக்கு ஊஞ்சலாடுவோம். ஒரு புரட்சிகர உயர் அலை இருந்து நாம் அலை இறக்கமாக மதிப்பிட்டால் நாம் ஒரு தற்காப்பு செயல் தந்திரத்தை மேற்கொள்வோம். இது ஒரு வலது விலகல் (அ) திருத்தல்வாதத்தில் முடிகிறது. அலை இறக்கமாக இருந்து நாம் அதை அலை ஏற்றமாகக் கருதி நாம் தாக்குதல் செயல் தந்திரத்தை மேற்கொண்டால் அது ஒரு இடது விலகலுக்கு இட்டுச் செல்கிறது".

 (அதே நூல், பக்கம் ப-152)

தாக்குதல் செயல் தந்திரமாக இருந்தாலும், தற்காப்பு செயல் தந்திரமாக இருந்தாலும் இரண்டிலும் தேர்தலைப் புறக்கணிக்கின்ற செயல் தந்திரத்தையே கையாள வேண்டும் என இந்திய நிலைமைகளுக்கு மார்க்சியத்தைப் பொருத்தி ஏஎம்கே பின்வருமாறு கூறுகிறார்:

"இந்தியாவில் நமது ஜனநாயகப் புரட்சியின் எந்தவொரு கட்டத்திலும் பின்பற்றப்படுகின்ற செயல்தந்திரத்தின் பண்பு எதுவாக இருந்தாலும் இரண்டிலுமே தேர்தலைப் புறக்கணிக்கின்ற செயல் தந்திரத்தை கட்சி பின்பற்ற வேண்டும். இதற்குக் காரணம் போராட்ட வடிவங்கள் இறுதியில் இந்தியாவின் நீண்ட மக்கள் யுத்தத்திற்கே உரிய கூறுகளையும், இராணுவ-அரசியல் போர்த் தந்திரங்களையும் சார்ந்துள்ளன. அவற்றால் வழிகாட்டப்படுகின்றன. செயல்தந்திரம் (அ) போராட்ட வடிவத்தில் உள்ள எந்தவொரு உடனடி மாற்றமும் நமது அடிப்படையான போர்த்தந்திரத்திலிருந்தும் நமது பாதையிலிருந்தும் அதாவது நீண்ட மக்கள் யுத்தத்திலிருந்தும் விலகக் கூடாது"

 (அதே நூல், பக்கம் 153-154)

பாசிசச் சூழலில் புதிய ஜனநாயகப் புரட்சி பற்றி பேசுவது மார்க்சியத்திற்கு எதிரானது என்று சில நவீன-திருத்தல்வாதிகள் கூறுகின்றனர். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி செயல் தந்திரம் என்பது நமது அரசியல்-இராணுவ போர்த்தந்திரத்திற்கும், இறுதியில் இது திட்டத்திற்கும் சேவை செய்ய வேண்டும். ஆனால், திருத்தல்வாதிகள் குறிப்பான திட்டம் - பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி - இடைக்கால சர்க்கார்--ஐக்கிய முன்னணி சர்க்கார் என்பதெல்லாம் செயல்தந்திரம் என்பதை மறுத்து அவற்றை போர்தந்திரமாக முன்வைக்கின்றனர். கலைப்புவாதி பிரசண்டா போலவே புதிய ஜனநாயகப் புரட்சித் திட்டத்தை இரண்டு கட்டங்களாகப் பிரித்து பாராளுமன்றவாத தரகு வர்க்கக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கின்றனர். புதிய ஜனநாயகப் புரட்சிக்கு சேவை செய்யாத குறிப்பான திட்டம்-பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி (அ) ஐக்கிய முன்னணி சர்க்கார் பற்றி பேசுவது அப்பட்டமான வலது சந்தர்ப்பவாதமாகும்.

புரட்சியின் எழுச்சியின் விளைவாகத் தோன்றும் ஓர் இடைக்கால அரசில் பங்கேற்பது பற்றிய லெனினியக் கோட்பாட்டைச் சிலர் திரித்துக் கூறி, "எதிர் புரட்சிகர சூழலில் பாட்டாளி வர்க்க இயக்கம் பலவீனமாக உள்ளதால் அடிப்படை வர்க்கங்களோடு ஐக்கிய முன்னணி சாத்தியமில்லை என்று கூறி முதலாளிய வர்க்கத்தின் தலைமையிலான ஐக்கிய முன்னணிதான் மாற்று" என்கின்றனர். அதாவது பாராளுமன்றவாதக் கட்சிகளின் தலைமையில் ஐக்கிய முன்னணி அமைய வேண்டும் என்று கூறி இயக்கத்தை முதலாளிய வர்க்கத்தின் வாலாக மாற்ற முயல்கின்றனர். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

 

குறிப்பான திட்டம் என்றால் என்ன

ஆளும் வர்க்கங்களும் சமரச சக்திகளும் திருத்தல்வாதிகளும் முன்வைக்கும் அரசியல், பொருளாதார திட்டங்களுக்கு மாற்றாக பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்பான திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்து அவைகளின் செல்வாக்கிலிருந்து மக்களை வென்றெடுப்பதே குறிப்பான திட்டத்தின் மையமான நோக்கமாகும்.

அது பற்றி ஏ.எம்.கே. கூறுவதாவது:

"ஆளும் வர்க்கங்களும், சமரச சக்திகளும் முன்வைக்கும் அரசியல் பொருளாதார திட்டங்களுக்கு மாற்றாகப் பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொரு கால கட்டத்திற்கும் உகந்த குறிப்பான திட்டங்களை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்காகப் போராடுவதன் மூலமாகத்தான், மக்களை அவர்களின் செல்வாக்கிலிருந்தும், தலைமையிலிருந்தும் வென்றெடுக்க முடியும். இவ்வாறு ஒரு குறிப்பான திட்டத்தையும், அரசியல் முழக்கங்களையும் முன்வைக்காமல், ஒவ்வொரு மக்கட் பகுதியினரும், வர்க்கமும் தத்தம் பகுதி நலனுக்கான போராட்டங்களையும், பொருளாதார போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்கும் போதே ஒரு பொதுவான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் (புரட்சிகர) அரசியலைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும், வர்க்கங்களையும் ஒன்றுபடுத்த முடியாது. மக்களுக்கு புரட்சிகர அரிசியல் உணர்வைக் கொண்டு வர முடியாது. அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குத் திரட்டவும் முடியாது. இத்தகைய இயக்கங்கள் பொருளாதார வாதத்திற்கும் தன்னியல்பிற்கும் தலை வணங்கியே தீரும். மக்களை ஆளும் ஆளும் வர்க்க கட்சிகள், சமரசக் கட்சிகள், திருத்தல்வாதக் கட்சிகள் ஆகியவற்றின் செல்வாக்கிலிருந்து மீட்காது. ஒரு பாட்டாளி வர்க்க கட்சி ஒவ்வொரு காலகட்டத்தில் நிலவும் பருமையான சூழ்நிலைக்கு உகந்த அரசியல் நடத்தை வழியின் அடிப்படையில் அமைந்த குறிப்பான திட்டத்தையும், அரசியல் முழக்கத்தையும் முன்வைத்து அவற்றை நிறைவேற்றப் போராடுவதன் மூலமாகத்தான், பாட்டாளி வர்க்கம் சமுதாயத்திலுள்ள அனைத்து மக்கள் பிரிவினரோடு திட்டமிட்ட முறைப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு விரிவுபடுத்த முடியும். அவர்கள் அனைவரையும் புரட்சிகரப் போராட்டங்களுக்கு திரட்ட முடியும்"

 (அதே நூல் பக்கம் 71-72)

நாம் ஏற்கனவே கூறியவாறு, பாசிச அரசு என்பது தனி இடைக்கட்டம் என்று கூறி, தரகு முதலாளிய வர்க்கத்தின் தலைமையிலான இடைக்கால அரசில் பங்கேற்பதும், முதலாளித்துவ ஐக்கிய முன்னணி சர்க்கார் அமைப்பதும் குறிப்பான திட்டம் என்று திருத்தல்வாதிகள் வாதிடுவது உலகு தழுவிய போக்காக உள்ளது.

குறிப்பான திட்டம் பற்றி ஏ.எம்.கே கூறுவதாவது:

"ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டும் பொருந்தக் கூடியது ஒரு குறிப்பான திட்டம். கட்சியின் அரசியல் நடத்தை வழியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வர்க்கச் சக்திகளின் அணிச் சேர்க்கைக்கு ஏற்ப புரட்சிகரச் சக்திகளின் அணிச் சேர்க்கையிலும், எதிர்புரட்சிகரச் சக்திகளின் அணிசேர்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, பிரதான எதிரியை எதிர்த்துப் போரிடும் சக்திகளின் நலன்களைக் கருதி உடனடி கோரிக்கைகள் அடங்கிய ஒரு குறிப்பிட்ட திட்டம் பாட்டாளி வர்க்கக் கட்சியினால் முன்வைக்கப்பட வேண்டும்".

(அதே நூல், பக்கம் 69)

என்று கூறும் ஏ.எம்.கே, இந்த குறிப்பான திட்டம் மக்கள் ஜனநாயகப் புரட்சித் திட்டத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும், அதை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும் எனவும் கூறுகிறார். ஆனால் திருத்தல்வாதிகள் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு தொடர்பில்லாத, அதற்கு எதிரான "குறிப்பான திட்டம்" பற்றி பேசுகின்றனர்.

ஏ.எம்.கே கூறுவதாவது:

"இக்குறிப்பான திட்டம் கட்சியின் குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் (மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்தின் அடிப்படையில்) அமைய வேண்டும். இக்குறிப்பான திட்டம் கட்சியின் குறைந்தபட்ச திட்டத்தின் ஒரு பகுதியாகவும், அதை நிறைவேற்றும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட வேண்டும். அக்கால கட்டத்திற்கு உகந்த சில அரசியல் சமூகப் பொருளாதாரத் துறைகளில் உடனடி கோரிக்கைகள் அடங்கியது; அக் காலகட்டத்தில் விவசாயத் திட்டத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையையோ இந்த குறிப்பான திட்டம் கட்டாயம் உள்ளடக்கியிருக்க வேண்டும். பிரதான எதிரியைத் தூக்கி எறிவதற்கான போராட்டத்தில் நம்முடன் ஐக்கிய முன்னணியில் பங்கு கொள்ள முன்வரும் வர்க்கங்களுக்கு, குறிப்பாக ஆளும் வர்க்கங்களில் ஒரு பிரிவு ஐக்கிய முன்னணியில் பங்கு கொள்ள முன்வருமானால் அவற்றிற்கு சில சலுகைகளைத் தரும் வகையில் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும். எதிரிகளுக்குள்ளே உள்ள முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்வதற்கும், பலருடன் ஜக்கியப்படுவதற்கும், ஒரே நேரத்தில் சிலரை எதிர்த்தும் எதிரிகளை தனித்தனியாக ஒழித்துக் கட்டவும் மாவோ வகுத்துத் தந்த செயல் தந்திர நெறிமுறைகளைச் சரியாகக் கையாளும் நோக்கத்தின்படி குறிப்பான திட்டம் அமைய வேண்டும்" என்கிறார் ஏ.எம்.கே.

(அதே நூல் பக்கம் 69-70)

அதாவது, நாம் ஏற்கனவே கூறியவாறு அடிப்படை வர்க்கங்களுடனான நமது ஐக்கிய முன்னணியில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு பங்கு பெற விரும்பினால் அதற்கேற்ப குறிப்பான திட்டம் அமைய வேண்டும். எதிரிகளை தனித்தனியாக ஒழித்துக் கட்டும் நோக்கில் அமைய வேண்டும். மாறாகத் தத்தமது விருப்பத்திலிருந்து (திருத்தல்வாதிகளின் விருப்பம்) ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் ஐக்கிய முன்னணி அமையக் கூடாது. பாட்டாளி வர்க்கத் தலைமையில் அடிப்படை வர்க்கங்களுடன் வலிமையானதொரு ஐக்கிய முன்னணியை நாம் கட்டியிருந்தால் மட்டுமே ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு நமது ஐக்கிய முன்னணியில் பங்கு பெற முன்வரும். இல்லையெனில் முன்வராது. மாறாக ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் தலைமையில் ஐக்கிய முன்னணியை அமைப்பது என்பது பாட்டாளி வர்க்கத்திற்குச் செய்யும் துரோகமும், முதலாளிய வர்க்கத்தின் வாலாகக் கட்சியை மாற்றுவதுமேயாகும்.

அத்தகையதொரு குறிப்பான திட்டம் பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என்கிறார் ஏ.எம்.கே. அவர் கூறுவதாவது:

"ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உகந்ததாக வகுக்கப்படும் கட்சியின் அரசியல் நடத்தை வழியும் அதனடிப்படையில் அமைந்த குறிப்பான திட்டமும் பிரதான நோக்குடையதாக இருக்கவேண்டும். நீண்ட புரட்சியில் அடுத்து வரும் காலகட்டத்திற்கு தேவையான நிலைமைகளை இந்த காலகட்டத்திற்குள் தோற்றுவிப்பதாக அமைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உகந்த அரசியல் நடத்தை வழிக்கு ஏற்றவாறு வகுக்கப்படும் குறிப்பான திட்டம், அந்த அரசியல் நடத்தை வழிக்கேற்ப அரசியல் அதிகாரத்திற்கான தீர்வை அந்த குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும்." என்கிறார் ஏ.எம்.கே.

 (அதே நூல் பக்கம் 70)

குறிப்பான திட்டம் முன்வைப்பதற்கான நோக்கமே, நிலவும் இந்த சமூக அமைப்பிற்குள் அக்குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்பதை மக்கள் உணரச் செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்கிறார் அவர். இது குறித்து ஏ.எம்.கே. கூறுவதாவது:

"அந்த தருணத்திலுள்ள எதிரிகளிடமிருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் அல்லது ஏற்கனவே உள்ள அரசு எந்திரத்தின் மூலமோ அல்லது அதனிடம் கோரிக்கைகளாக முன்வைத்து நிறைவேற்றக் கூடியதாகவோ ஒரு குறிப்பான திட்டம் அமையக் கூடாது. போலி பாராளுமன்ற ஆட்சி முறை இருப்பதனாலும், ஒழுங்கமைக்கப்பட்ட திருத்தல்வாதக் கட்சிகளின் பிரச்சாரத்தினாலும் இந்த அரசு அமைப்பு முறைக்குள் ஒரு குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் என்ற மாயை தோற்றுவிக்கப்படும். ஆகையால் இந்த அரசு முறை பயனற்றது; இதன் மூலம் ஒரு குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவது இயலாது; இந்தக் குறிப்பான திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இந்த அரசு முறை துடைத்தெறியப்பட வேண்டும் என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டும்."

 (அதே நூல். பக்கம் 70-71)

இதுவே 'குறிப்பான திட்டம்' பற்றிய ஏ.எம்.கே.யின் நிலைபாடாகும்.

பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி சர்க்கார் என்றால் என்ன

"பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி சர்க்கார்" பற்றிய டிமிட்ரோவின் கருத்துகளைத் திரித்து, அத்தகைய சர்க்காரை நிறுவுவதே குறிப்பான திட்டம் எனவும் திருத்தல்வாதிகள் சந்தர்ப்பவாதமாக வாதிடுகின்றனர். ஐக்கிய முன்னணி சர்க்கார் பற்றி டிமிட்ரோவின் கருத்துகள் என்ன? என்பதைப் பார்ப்போம்.

ஐக்கிய முன்னணி தந்திரம் என்ற நூலில் ஐக்கிய முன்னணி சர்க்கார் என்ற தலைப்பில் டிமிட்ரோவ் கூறுவதாவது:

"பகுதி கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு மட்டும் தான் நாம் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும் என்று வாதிடுகிறோம். அல்லது ஐக்கிய முன்னணி அடிப்படையில் ஒரு சர்க்கார் அமைப்பது என்னும் பிரச்சினை வந்தாலும் அந்தப் பொறுப்பிலும் பங்கு கொள்வதற்கு தயாராக இருக்கிறோமா என்று கம்யூனிஸ்ட்டுகளாகிய நம்மிடம் கேள்வி கேட்கப்பட்டால், அப்போது முழு பொறுப்புணர்வுடன் நாம் கூறுகிறோம்: ஆம். ஒரு நிலைமை ஏற்படலாம். அப்போது ஒரு பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணி சர்க்காரோ அல்லது பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சர்க்காரோ அமைக்கப்படும் வாய்ப்பு ஏற்படலாம். அது சாத்தியம் என்பது மட்டுமல்ல. அது பாட்டாளி வர்க்கத்தின் நலவுரிமைகளுக்காக அவசியமும் கூட என்பதை அங்கீகரிக்கிறோம். அப்போது நாம் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அத்தகைய ஒரு சர்க்கார் அமைவதற்குப் போராடுவோம்."

 (பாசிசம் பற்றி, செந்தளம் வெளியீடு - பக்கம் 111)

ஆகவே, ஐக்கிய முன்னணி சர்க்கார் என்பது பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணி (அ) பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சர்க்காரே ஒழிய, தரகு முதலாளிய சர்க்கார் அல்ல என்பதை அறியலாம்.

டிமிட்ரோவ் தொடர்கிறார்.

"ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெற்ற பின்னர் அமையக்கூடிய ஒரு சர்க்காரைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கவில்லை. சில நாட்டில் புரட்சிகரமான வழியில் பூர்ஷ்வா வர்க்கம் தூக்கி எறியப்பட்ட பின்னர் உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சியில் பங்கு கொண்டிருக்கின்ற மற்ற கட்சியும் (அல்லது அதன் இடதுசாரி பகுதியும்) சேர்ந்து ஒரு கூட்டு சர்க்கார் அடிப்படையில் ஒரு சோவியத் சர்க்கார் அமைவது சாத்தியமே. அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ரஷ்ய போல்ஷ்விக்குகளுடைய வெற்றிகரமான கட்சியில் இடதுசாரி சோஷலிஸ்டு புரட்சிக்காரர்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து சோவியத் சர்க்காரில் இருந்தார்கள். இது அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் ஏற்பட்ட முதல் சோவியத் சர்க்காரின் ஒரு குறிப்பிட்ட அம்சமாகும். இத்தகைய விஷயத்தைப் பற்றி நான் கூறவில்லை. சோவியத் புரட்சி நிகழ்ச்சி நிரலில் இருக்கும்போது அதன் வெற்றிக்கு சற்று முன்பாக சாத்தியமாக அமையும் ஐக்கிய முன்னணி சர்க்கார் பற்றி கூறுகிறேன்".

 (அதே நூல், பக்கம் 111 )

என்கிறார் டிமிட்ரோவ். அதாவது அவர் புரட்சிகர எழுச்சியின் விளைவாக (அ) புரட்சிக்குச் சற்று முன்பாக அமையும் ஐக்கிய முன்னணி சர்க்கார் பற்றி டிமிட்ரோவ் கூறுகிறார். புரட்சிகர சூழல் இல்லாத - இயக்கம் அலை இறக்கத்தில் இருக்கின்ற சூழலில், பாராளுமன்றவாத கட்சிகளின் தலைமையிலான ஐக்கிய முன்னணி சர்க்கார் பற்றி அவர் கூறவில்லை. அது தரகு முதலாளிய சர்க்காராக இருக்குமே ஒழிய பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணி சர்க்கார் (அ) பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சர்க்காராக இருக்காது.

இது எந்த வகையான சர்க்காராக இருக்கும்? எந்த சூழ்நிலையில் இத்தகைய ஒரு சர்க்கார் எனும் பிரச்சினை ஏற்படும்? என்பது பற்றி டிமிட்ரோவ் கூறுவதாவது:

"அது பிரதானமாக பாசிசத்தையும் பிற்போக்கையும் எதிர்த்துப் போராடும் ஒரு சர்க்காராக இருக்கும். அது ஐக்கிய முன்னணியின் விளைவாகத் தோன்றும் ஒரு சர்க்காராக இருக்க வேண்டும். அது எந்த வகையிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளையும் தொழிலாளி வர்க்கத்தின் வெகுஜன ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளையும் சுருக்குவதாகவும், கட்டுப்படுத்துவதாகவும் இருக்காது. ஆனால் அதற்கு நேர்மாறாக எதிர்ப்புரட்சி நிதி திமிங்கிலங்களுக்கும் அவர்களுடைய பாசிஸ்ட் ஏஜெண்டுகளுக்கும் எதிரான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.

ஒரு சரியான தருணத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் ஐக்கிய முன்னணி இயக்கத்தைச் சார்ந்து நின்று ஒரு குறிப்பிட்ட நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு திட்டவட்டமான, தீர்க்கமான வரையறுக்கப்பட்ட பாசிச எதிர்ப்புத் திட்டத்தின் அடிப்படையில் அத்தகைய சர்க்கார் அமைவதற்குப் பாடுபடும்" என்கிறார் டிமிட்ரோவ்.

 (அதே நூல், பக்கம் 112)

அதாவது ஐக்கிய முன்னணியின் விளைவாகத் தோன்றும் சர்க்கார் பற்றியே அவர் பேசுகிறார். அந்த சர்க்கார் பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணி சர்க்கார் அல்லது பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சர்க்காராகவே இருக்குமே தவிர பூர்ஷ்வா சர்க்காராக இருக்காது.

எத்தகைய புறச் சூழ்நிலைகளில் அத்தகைய ஒரு சர்க்கார் அமைவது சாத்தியம்? என்ற கேள்வியை முன்வைத்து பின்வருமாறு பதில் அளிக்கின்றார் டிமிட்ரோவ்.

"இந்தக் கேள்விக்கு பொதுவான முறையில் கீழ்க்கண்ட பதிலைக் கூறலாம். ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வலுவாக வளர்ந்து கொண்டிருக்கும் வெகுஜன பாசிச எதிர்ப்பு இயக்கத்தை ஆளும் வர்க்கங்கள் சமாளிக்க முடியாத அளவிற்கு நிலை ஏற்படும்போது சாத்தியப்படும். ஆனால் இது ஒரு பொதுவான தொலைநோக்கு தான் இத்தகைய ஒரு நெருக்கடி இல்லாமல் ஒரு ஐக்கிய முன்னணி சர்க்கார் அமைவதற்கு நடைமுறையில் அனேகமாக சாத்தியமில்லை" என்கிறார் டிமிட்ரோவ்.

(அதே நூல், பக்கம் 112 )

அதாவது, பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி வளர்ச்சியடைந்து ஆளும் வர்க்கங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் அத்தகைய சர்க்கார் அமைவது சாத்தியம் என்கிறார். வளர்ந்துவரும் புரட்சிகர சூழலையும், பலமான ஐக்கிய முன்னணியின் வளர்ச்சியடைந்த சூழ்நிலையும் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். மேலும் அத்தகையதொரு சர்க்கார் அமைவதற்கான முன் தேவைகள் பற்றி டிமிட்ரோவ் பின்வருமாறு கூறுகிறார்.

"முதலாவதாக பூர்ஷ்வா வர்க்கத்தின் அரசாங்க எந்திரம் போதுமான அளவு நிலைகுலைந்து முடங்கி இருக்க வேண்டும். அதனால் பிற்போக்கையும் பாசிசத்தையும் எதிர்த்து ஒரு சர்க்கார் அமைவதை பூர்ஷ்வா வர்க்கத்தால் தடுக்க முடியாமல் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, உழைக்கும் மக்களின் விரிவான ஜன பகுதி குறிப்பாக வெகுஜன தொழிற்சங்கங்கள் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒரு சோவியத் சர்க்காரை அமைப்பதற்கான போராட்டத்தை நடத்த நேரடியாக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை உடனடியாக நடத்துவதற்குத் தயாராக இல்லாவிட்டாலும், பாசிசத்திற்கும் பிற்போக்கிற்கும் எதிரான ஒரு கடுமையான கலகத்தை நடத்தும் நிலையிலாவது இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, ஐக்கிய முன்னணியில் பங்குகொள்ளும் சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் இதர கட்சிகளின் அணிகளில் வேறுபாடு காணுதலும் தீவிரத்தன்மை அடைதலும் ஏற்கனவே குறிப்பிட்ட மேலான கட்டத்தை அடைந்து இருக்க வேண்டும். அந்தக் கட்டத்தில் அவர்களில் கணிசமான பகுதியினர் பாசிஸ்ட்களையும் இதர பிற்போக்காளர்களையும் எதிர்த்து கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு கோரவேண்டும். பாசிசத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும். கம்யூனிசத்தின் மீது பகைமை கொண்டுள்ள அவர்கள் கட்சியில் உள்ள பிற்போக்கு பகுதியினரைப் பகிரங்கமாக எதிர்க்க வேண்டும். அத்தகைய நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்".

(அதே நூல், பக்கம் 113 )

ஆகவே, மேற்கண்ட மூன்று வரையறைகளிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவெனில், புரட்சிகர சூழல் வளர்ந்து கொண்டிருக்கும் புற நிலைமைகள், மற்றும் நமது ஐக்கிய முன்னணியில் பங்குபெறும் சமூக ஜனநாயக அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்து ஐக்கிய முன்னணியுடன் இணைந்து உறுதியாக போராடும் புறநிலைமைகள் நிலவ வேண்டும் என்பதே ஆகும்.

அடுத்து ஐக்கிய முன்னணி சர்க்கார் பற்றி நிலவும் வலது இடது விலகல்கள் பற்றி டிமிட்ரோவ் கூறியுள்ளதைச் சுருக்கமாகக் காண்போம்.

1. ஓர் அரசியல் நெருக்கடி இல்லாத சாதாரண நிலைமைகளிலும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் தொழிலாளர் சர்க்காரை அமைப்பதற்குப் பாடுபடவேண்டும் என்று கூறுவது வலது சந்தர்ப்பவாதமாகும். பூர்ஷ்வா வர்க்கத்தை ஆயுதம் தாங்கிய அழித்தொழிப்பு போராட்டத்தின் மூலமாக மட்டுமே தூக்கி எறிந்து தொழிலாளர் சர்க்காரை அமைக்க முடியும் என்று கருதுவது இடது விலகலாகும்.

2. ஐக்கிய முன்னணி சர்க்கார் அதாவது தொழிலாளர் சர்க்கார் தீவிரமான போர்க் குணமிக்க பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பார்க்காமல், கோட்பாடுகள் அற்ற உபாயங்கள் மூலம் சுத்தமான பாராளுமன்றவாத கட்சிகளின் கூட்டு அடிப்படையில் - சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளும் நிலைக்குத் தாழ்த்தி விடுவது வலது விலகலாகும்..

எதிர் புரட்சிகர சமூக ஜனநாயகவாதிகளுடன் எப்போதும் எவ்வித கூட்டணியும் இல்லை என்று பேசுவது இடது விலகலாகும்.

3. ஐக்கிய முன்னணி சர்க்கார் என்பது தொழிலாளர் சர்க்கார் என்று கருதாமல், சமூக ஜனநாயக சர்க்கார் என்று பேசுவது வலது விலகலாகும். ஏனெனில் சமூக ஜனநாயக சர்க்கார் என்பது முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதற்கு பூர்ஷ்வாக்களுடன் சமரசம் செய்துகொண்டு கூட்டணி சேரும் சர்க்கார் ஆகும். சிலநேரம் சமூக ஜனநாயகவாதிகளின் வலதுசாரி பிரிவினர் ஐக்கிய முன்னணிக்கு எதிராக இருப்பார்கள்; இடதுசாரிப் பிரிவினர் ஐக்கிய முன்னணியின் பக்கம் நிற்பார்கள் இந்த வேறுபாட்டைக் காண மறுப்பது இடது விலகலாகும்.

4. ஐக்கிய முன்னணி சர்க்கார் என்பது (தொழிலாளர் சர்க்கார்) பூர்ஷ்வா ஜனநாயக கட்டமைப்பிற்குள் நின்று செயல்பட வேண்டும் என்று கருதுவது வலது சந்தர்ப்பவாதமாகும். ஐக்கிய முன்னணிக்கான எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது இடது விலகலாகும்.

5. ஐக்கிய முன்னணி சர்க்கார் என்பது நிலைமைக்குத் தேவையான திட்டவட்டமான அடிப்படையான புரட்சிகரமான கோரிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும். இதை மறுப்பது வலது விலகலாகும்.

6. தனி ஒரு ஜனநாயக இடைக்கால கட்டத்தை பூர்ஷ்வா வர்க்க சர்வாதிகாரத்திற்கும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் இடையில் ஸ்தாபித்து தொழிலாளர்கள் மத்தியில் சமாதான முறையில் - பாராளுமன்ற முறையின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற மாயையை உருவாக்குவது வலது சந்தர்ப்பவாதமாகும்.

7. பாசிசத்திலிருந்து இறுதி மீட்சியை சோசலிசப் புரட்சியால் தான் கொண்டுவர முடியும். அதற்கு அடிப்படை வர்க்கங்களை தயார் செய்யவேண்டும் புரட்சிக்கு சற்றுமுன்பு அமையும் இந்த ஐக்கிய முன்னணி சர்க்காரால் இறுதி மீட்சியைக் கொண்டுவர முடியாது. இதை மறுப்பது வலது சந்தர்ப்பவாதமாகும்.

(அதே நூல் 114-117)

ஏகாதிபத்தியம் மற்றும் ஆளும் வர்க்க முரண்பாடுகளை கையாள்வது பற்றி

அடுத்ததாக, வலது சந்தர்ப்பவாதிகள் உள்நாட்டில் பாராளுமன்றவாத தரகு முதலாளிய வர்க்க கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி என்று பேசுவதைப் போலவே, சர்வதேச அளவில் அமெரிக்காவை எதிர்ப்பதற்கு சீன ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து நிற்க வேண்டும் என்று வாதிடுகின்றனர் இது குறித்து ஏ.எம்.கே கூறுவதைப் பார்ப்போம்.

"ஒப்பீட்டளவில், அமைதியான காலங்களில் அதாவது, உலக யுத்தம் இல்லாத வேளையில் சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது அரைக் காலனிகள், நவீன காலனிகளில் தேசிய ஜனநாயகப் புரட்சிகளையும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளையும் மேலும் கொண்டு செல்வது; அதே சமயத்தில் இரு வல்லரசுகள் உலகத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள அவற்றின் ஏஜெண்டுகள் ஆகியோரின் யுத்தக் கொள்கைகளை (பொருளாதாரத்தை இராணுவ மயமாக்கல், யுத்தக் கடன்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள், கட்டாய இராணுவச் சேவை போன்றவை) அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போராடுவதும் ஆகும்.

ஒரு உலக யுத்தத்தின் போது, சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரமனது, அந்த யுத்தத்தை ஓர் உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதாக இருக்கவேண்டும். யுத்தம் பற்றிய பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது யுத்தத்தின் வர்க்க தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது. உலக யுத்தத்தின் போது 'ஐக்கிய முன்னணி' கொள்கையை மேற்கொள்வதா? அல்லது உள்நாட்டு யுத்தக் கொள்கையை மேற்கொள்வதா? என்பது யுத்தத்தின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து இருக்கிறது. யுத்தத்தின் வர்க்கத் தன்மையானது லெனின் கூறுவதைப் போல, "எந்த வரலாற்றுச் சூழ்நிலைகள்" யுத்தத்திற்கு வழிவகுக்கின்றன, எந்த வர்க்கங்கள் அதைத் தொடுத்து இருக்கின்றன, எந்த இறுதி நோக்கங்களுக்காகத் தொடுத்து இருக்கின்றன என்பதால் தீர்மானிக்கப்படுகிறது". (யுத்தமும் புரட்சியும் லெனின் தொகுப்பு நூல்கள், தொகுதி 24 பக்கம் 398)

அது ஒரு ஏகாதிபத்திய யுத்தமாக இருக்குமேயானால், அதாவது மோதுகின்ற இரண்டு பக்கமும் ஏகாதிபத்திய வாதிகளாக இருந்தால், (இரண்டாம் உலக யுத்தத்தின் முதல் கட்டத்திலிருந்தது போல) அப்போது செயல் தந்திரமானது யுத்தத்தை எதிர்ப்பதாகவும், அந்த யுத்தத்தை ஒரு உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதாகவும் அமையும். ஆனால் யுத்தத்தின் வர்க்கத் தன்மை மாறினால், எடுத்துக்காட்டாக, மோதுகின்ற சக்திகளில் ஒரு பக்கம் சோசலிச நாடு இருப்பதாக வைத்துக்கொண்டால், (இரண்டாம் உலக யுத்தத்தின் பிற்பகுதியில் இருந்ததைப் போல) யுத்தத்தின் வர்க்கத் தன்மை, மக்கள் யுத்தமாக மாறுகிறது. சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது, யுத்தத்தில் அந்த சோசலிச நாட்டை ஆதரிக்கின்ற எல்லா சக்திகளுடன் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டுவதன் மூலம் அந்த மக்கள் யுத்தத்தில் பங்கு கொள்வதாக அமையும்.

ஏதாவது ஒரு வல்லரசு, ஏதாவது ஒரு அரைக் காலனி, நவீன காலனி நாட்டுக்கு எதிராக ஆக்கிரமிப்பைத் தொடுக்கும்போது, பாட்டாளி வர்க்கக் கட்சியின் செயல் தந்திரமானது, அந்த ஆக்கிரமிப்பை முறியடிப்பதற்காக நாட்டில் உள்ள எல்லா சக்திகளுடனும் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டுவதாக அமைய வேண்டும்" என்கிறார் தோழர் ஏ.எம்.கே.

"இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரம் செயல் தந்திரம்" (பக்கம் 45-46)

எனவே,

1. யுத்தம் இல்லாத சூழ்நிலையில், இரு ஏகாதிபத்திய முகாம்கள் மற்றும் அவற்றின் தரகு வர்க்க ஏஜெண்டுகளின் (காலனிய அரைக் காலனிய நாடுகளின் ஆளும் வர்க்கங்கள்) யுத்தக் கொள்கைகளை அம்பலப்படுத்தி, புதிய காலனிய - அரைக் காலனிய நாடுகளில் தேசிய ஜனநாயகப் புரட்சியையும் முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சியையும் கொண்டு செல்ல வேண்டும்.

2. உலக யுத்தத்தின்போது அல்லது பனிப்போரின் போது மோதுகின்ற இரு முகாம்களுமே ஏகாதிபத்தியவாதிகளாக இருந்தால் உலக யுத்தத்தை அல்லது பனிப் போரை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதாக நமது செயல் தந்திரம் அமைய வேண்டும்.

3. யுத்தத்தில் மோதுகின்ற சக்திகளின் ஒருபக்கம் சோசலிச நாடு இருந்தால் (இரண்டாவது உலகப்போரின் பிற்பகுதியில் இருந்ததைப் போல்) அந்த யுத்தம் மக்கள் யுத்தமாக மாறுகிறது. எனவே சோசலிச முகாமை ஆதரிக்கின்ற எல்லா சக்திகளுடனும் ஐக்கிய முன்னணி அமைப்பதாக நமது செயல்தந்திரம் இருக்கவேண்டும்.

இன்று உலகில் சோசலிச முகாம் எங்குமே இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது. எனவே இன்றைய இரண்டாவது பனிப்போர் கட்டத்தில், இரு ஏகாதிபத்திய முகாம்களையும் அவற்றின் புதிய காலனிய-அரைக் காலனிய நாடுகளின் ஆளும் வர்க்கங்களையும் எதிர்த்து உள்நாட்டு யுத்தக் கொள்கையை அமல்படுத்துவதை நமது செயல் திட்டமாக வகுத்துக் கொள்ள வேண்டும்.

4. ஏதாவது ஒரு ஏகாதிபத்திய நாடு புதிய காலனிய, அரைக் காலனிய நாட்டின் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடுத்தால், அதை எதிர்த்து உள்நாட்டில் உள்ள எல்லா சக்திகளுடன் ஐக்கிய முன்னணி கட்டி ஆக்கிரமிப்பை வீழ்த்துவதாக இருக்க வேண்டும். அதாவது இதன் பொருள் இன்னொரு ஏகாதிபத்திய முகாமுடன் ஐக்கிய முன்னணி அமைத்து வீழ்த்த வேண்டும் என்பதல்ல.

முதல் உலகப் போரிலும், இரண்டாவது உலகப் போரின் முதல் கட்டத்திலும், முதல் பனிப் போரிலும் மேற்கூறியவாறு மோதுகின்ற இரு சக்திகளும் ஏகாதிபத்திய வாதிகளாக இருந்தன. எனவே உலகப் போரை அல்லது முதல் பனிப்போரை உள்நாட்டுப்போராக மாற்றுவது என்பதாக நமது செயல்தந்திரம் இருந்தது. அதாவது இரு முகாம்களையும் அவர்களின் தரகு வர்க்க ஏஜெண்டுகளையும் (புதிய காலனிய, அரைக் காலனிய நாடுகளின் ஆளும் வர்க்கங்களை) எதிர்ப்பதாக நமது செயல்தந்திரம் அமைந்தது.

1980களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் - சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் வெடித்த முதல் பனிப்போர் கால கட்டத்தில், மக்கள் யுத்தக் கட்சியில் கொண்டபள்ளி தரப்பினர் சோவியத் எதிர்ப்பு முன்னணி எனும் பெயரில் அமெரிக்க ஆதரவு-முதலாளித்துவ சீன ஆதரவு - உள்நாட்டில் என்.டி.ஆர் ஆதரவு நிலைபாடு எடுத்தனர். அதை மறுத்து தமிழக தோழர்கள் ஏ.எம்.கே தலைமையில் சரியான நிலைபாடு எடுத்தனர். அதனால் கொண்டபள்ளி தரப்பு மையக் குழுவை மேலிருந்து பிளவுபடுத்தியது. அதே போன்றுதான் தற்போது அமெரிக்க எதிர்ப்பு முன்னணி எனும் பெயரில் அமெரிக்காவை வீழ்த்த சீன-ரசிய ஏகாதிபத்திய முகாமை சார்ந்து நிற்கவேண்டும் எனும் திருத்தல்வாதக் கருத்து உலகு தழுவிய போக்காக உள்ளது.

தற்போதைய உலக நிலைமைகள் அக்டோபர் புரட்சிக்கு முந்தய நிலைமைக்கு (சோசலிச முகாம் இல்லாத நிலைமைக்கு) தள்ளப்பட்டுவிட்டன. எனவே முதல் பனிப்போரை உள்நாட்டுப் போராக மாற்றுவது எனும் செயல்தந்திரம் வகுக்கப்பட்டது. சீனா முதலாளியப் பாதைக்கு திரும்பிய உடனேயே, ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிச முகாமிற்கும் இடையில் நிலவிய நான்காவது முரண்பாடு முடிந்துவிட்டது என்பதை ஏ.எம்.கே முன்வைத்தார். ஆனால் கொண்டபள்ளி தரப்பினர் இதை மறுத்து சீனா சோசலிச நாடு எனக் கூறினர்.

அது குறித்து "கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைபாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்" எனும் நமது கட்சியின் நூலில் பக்கம் 73இல் கூறப்பட்டுள்ளவை வருமாறு:

" 1) 1980இல் ஆந்திராவில் நடந்த கட்சி மாநாட்டில் சோவியத் எதிர்ப்பு முன்னணி என்ற தீர்மானம் கே.எம். தலைமையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த தோழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உலக யுத்த அபாயத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகிய இரண்டு ஏகாதிபத்தியங்களுமே காரணம் எனவும், இன்றைய மக்கள் சீனம் முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை சோசலிச நாடாக கருதி சோவியத் எதிர்ப்பு முன்னணி கட்டும்படி அறைகூவல் விடுப்பது தவறு என்றும், மேலும் சோவியத் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி என்று கூறுவது முதலாளித்துவ பாதையாளன் டெங் நிலைப்பாட்டிற்கு ஆதரவானது என்றும் கூறி எதிர்த்தனர். அதற்கு தோழர் கே.எஸ் "இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதைப் பொறுத்துதான் நாம் ஒரே கட்சியாக நீடிக்கிறோமா இல்லையா என்பது உள்ளது என்றார்.

2) 1984 ஆம் ஆண்டு ஆந்திராவில் என்.டி.ஆர் ஆட்சி இந்திரா அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. அதற்கு எதிராக விவசாயப் புரட்சியை அச்சாணியாகக் கொண்ட ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதற்கு என்.டி.ஆர்.இன் தெலுங்கு தேசக் கட்சி, பா.ஜ.க உள்ளிட்ட நாடாளுமன்றவாத தரகு முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஆந்திரக் கட்சியின் சார்பாக ஐக்கிய முன்னணிக்கான அழைப்பு விடப்பட்டது. இது முதலாளித்துவ கட்சிகளின் செல்வாக்கிற்கு பாட்டாளி வர்க்க கட்சியை கீழ்படுத்துவது, வர்க்க சமரச பாதை என்று தமிழக தோழர்கள் போராடினர்.

3) சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் 11ஆவது மாநாட்டின் நான்கு நவீனப்படுத்தல்கள் என்ற வரலாற்றுத் தீர்மானம் முதலாளித்துவ பாதையே எனவும், சீனாவை முதலாளித்துவ நாடு என அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக தோழர்கள் போராடினர். அவ்வாறு அவசரப்பட்டு உடனடியாக அறிவிக்க கூடாது என கே.எஸ் கூறினார். மேலும் நான்கு நவீனப்படுத்துதலை தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த மூன்றுலக கோட்பாடு வர்க்க சமரச கோட்பாடாகும். ஆகவே அதை நிராகரிக்க வேண்டும் என கோரியும் போராடினர்."

கே.எஸ் முன்வைத்த டெங்கின் திருத்தல்வாத கோட்பாட்டைத்தான் இன்று திருத்தல்வாதிகள் வெவ்வேறு பெயர்களில் முன்வைக்கின்றனர். இன்று இரண்டு ஏகாதிபத்திய முகாம்களும் 2 வது பனிப்போரில் ஈடுபட்டு வரும்போது, அமெரிக்க எதிர்ப்பு முன்னணி எனும் பெயரில் ரசிய -சீன ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டை முன்வைக்கின்றனர். இந்த சர்வதேச செயல்தந்திரத்தின்படி தேசிய செயல்தந்திரம் சீன -ரசிய ஆதரவு முதலாளித்துவ பிரிவினருடன் தானே இருக்க வேண்டும்? ஆனால் அதற்கு மாறாக சர்வதேச செயல்தந்திரத்திற்கு முரண்படும் வகையில் உள்நாட்டில் அமெரிக்க ஆதரவு காங்கிரசு - திமுக ஆளும் வர்க்க கும்பலை, அமெரிக்க ஆதரவு பாஜகவிற்கு மாற்றாக முன்வைக்கின்றனர். கேலிக்கூத்து!

டெங்கின் திருத்தல்வாத மூன்றுலக கோட்பாடு மீதான நமது கட்சியின் விமர்சன நூலில் இது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஒரு சில பகுதிகளை எடுத்துக் காட்டுகிறோம்.

1) "அதன் தலைவர்கள் (மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்கள்) ஏதேனும் ஒரு ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டு பேரம் பேசவே செய்கின்றனர். ஆனால் மூன்று உலக கோட்பாடோ இந்த உண்மையை மூடி மறைத்து மூன்றாம் உலக நாடுகளின் மக்களை அதன் தரகு தன்மை கொண்ட ஆட்சியாளர்களுடன் சமன்படுத்தி பார்க்கிறது. அது சொல்வதாவது 'இரு வல்லரசுகளின் தலைமை ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கும் காலனியாதிக்கத்திற்கும் எதிராகவும் ஆன போராட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளும் அதன் மக்களும் பிரதான அரணாக திகழ்கின்றனர். இந்த மூன்றாம் உலக நாடுகள் மக்களையும் அதே நேரத்தில் மக்களின் விரோதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளார்கள் என்பதை மூன்றுலக தத்துவவாதிகள் மறந்துவிட்டனர் போலும். அவைகள் ஒடுக்கப்படும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மட்டுமல்லாமல் நிலப்பிரபுக்களையும் தரகு முதலாளிகளையும் ஆளும் வர்க்கங்களாக கொண்டுள்ளன. ஆனால் இது வெறும் மறதி மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக வர்க்க யதார்த்தத்தை மறுப்பதாகும்."   (பக்கம் 19-20)

2) " மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தரகு முதலாளிய வர்க்கத்தினர், அவர்கள் சிறிதளவு முரண்பாடுகளை ஏகாதிபத்தியங்களிடம் கொண்டிருந்தாலும், யுத்தம் தோன்றும் தருணத்தில், அந்த சிறிதளவு முரண்பாடுகளையும் சாதகமாக கொண்டு சாத்தியமான வழிகளில் அடிப்படையில் ஏதேனுமொரு வல்லரசிடம் சரணடையவே பயன்படுத்துகிறார்கள். மூன்றுலக தத்துவமானது தரகு முதலாளிகளால் ஆளப்படுகிற இந்த மூன்றாவது உலக நாடுகளின் மீது மகத்தான நம்பிக்கையை கொண்டிருந்த போதிலும், உலகம் முழுவதிலும் மொத்தமாக இந்த தரகு முதலாளிய ஆட்சியாளர்கள் ஏதேனும் ஒரு வல்லரசுக்கு முழுமையாக சரணடைந்துவிட்டார்கள் என்பதே உண்மையாகும். ஆனால் மூன்றுலக தத்துவமானது இந்த உண்மையை நிராகரிப்பதோடு இந்த மூன்றாம் உலகத்தின் (இரண்டாம் உலகத்தில் கூட) ஆட்சியாளர்களை ஒரு முற்போக்கு வெளிச்சத்தில் சித்திரம் தீட்டிக் காட்டுகிறது. ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவினருடன் கூட்டு சேர்ந்து முன்னணி அமைக்கிறது. வலது திசை விலகலுக்கு வழியமைப்பதே இதன் முடிவாகும். உதாரணமாக, இந்தியாவில் இந்திரா காங்கிரசின் எதேச்சதிகார அரசுக்கு எதிராக போராடுவதன் பெயரில் சில மா-லெ குழுக்கள் ஆளும் வர்க்க எதிர்க் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைப்பதை பற்றி பேசி வருவதோடு திருத்தல்வாத கட்சிகளையும் மாநிலக் கட்சிகளையும் (இவை இரண்டுமே தரகுத்தன்மை கொண்டவை) சாதகமானவையாக பரிவுடன் பார்க்கின்றனர். இந்த செயல்தந்திரமானது மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கத்தை முற்போக்கு வெளிச்சத்தில் சித்திரம் தீட்டிக் காட்டுகிற மூன்றுலக தத்துவ புரிதலுடன் இணைப்புக் கொண்டதாகும்."

எனவே இன்று சில மா-லெ குழுக்கள் மார்க்சியத்தின் பெயரில் காங்கிரசு - திமுக போன்ற தரகு முதலாளித்துவ வர்க்க கட்சிகளை பாஜகவிற்கு மாற்றாக முன்வைப்பது டெங்கின் திருத்தல்வாத கோட்பாட்டின் மறுபதிப்பு என்பது எளிதில் விளங்கும்.

சோசலிச நாடு இருந்த காரணத்தினால்தான் - சோசலிச நாடு தாக்கப்பட்ட   காரணத்தால்தான் அதை காக்கும்பொருட்டு இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை எதிர்த்து ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் இருந்த முரண்பாட்டைப் பயன்படுத்தினோம். சோசலிச நாடு இல்லாவிட்டால் யுத்தத்தில் ஒரு ஏகாதிபத்திய அணியின் முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு இன்னொரு ஏகாதிபத்திய அணியுடன் கூட்டு என்பது சாத்தியம் இல்லை. சோசலிச நாடு இல்லாவிட்டாலும் இன்னொரு ஏகாதிபத்திய அணியுடன் சேர முடியும் என்று கூறினால் அது மிகப்பெரிய விலகலாகத்தான் இருக்கும் என்கிறார் ஏ.எம்.கே. சர்வதேச அரசியல் பொது வழியைத் தீர்மானிப்பது குறித்து ஓர் அறிமுகம் எனும் கட்டுரையில் ஏ.எம்.கே. கூறுவதாவது:

"அன்று போல் இன்று, ஒரு தரப்பு மட்டும் பாசிச முறைகளைக் கையாளக் கூடியதாக இல்லை. இரண்டு தரப்புமே பாசிச முறைகளைக் கையாள்கின்றன. ரஷ்யா ஒரு ஜனநாயக நாடல்ல. மிக மோசமான முதலாளித்துவ வளர்ச்சி பெற்றுள்ள நாடு. அது முதலாளித்துவப் பாதைக்குச் செல்வதற்காக, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிய பாசிசத்தைக் கையாண்டது. சமூக ஏகாதிபத்திய முறைகளைத் தான் கையாண்டது. ஏகாதிபத்தியவாதிகள் பாசிசத்தை நோக்கி எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பது சூழலின் நிலைமைகளைப் பொறுத்துத் தான் அமைகிறது.

ஏகாதிபத்தியங்களின் முரண்பாட்டை சோசலிச நாடு இருந்தால் தான் பயன்படுத்த முடியும். சோசலிச நாடு இல்லாவிட்டால் யுத்தத்தில் ஒரு ஏகாதிபத்திய அணியின் முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு இன்னொரு ஏகாதிபத்திய அணியுடன் கூட்டு என்பது சாத்தியம் இல்லை. சோசலிச நாடு இல்லாவிட்டாலும் இன்னொரு ஏகாதிபத்திய அணியுடன் சேர முடியும் என்று கூறினால் அது மிகப்பெரிய விலகலாகத்தான் இருக்கும்".

சர்வதேச அரசியல் பொது வழியைத் தீர்மானிப்பது குறித்து ஓர் அறிமுகம் -ஏ.எம்.கே. (பக்கம் 58-59)

ஏகாதிபத்திய முரண்பாடுகளையும், ஆளும் வர்க்க முரண்பாடுகளையும் எப்போது கையாள முடியும் என்பது பற்றியும், ஐக்கிய முன்னணி என்பது பாட்டாளி வர்க்கத் தலைமையில் நிறுவப்பட வேண்டும் என்பது பற்றியும் ஏ.எம்.கே. கூறுவதாவது:

ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் ஏகாதிபத்திய முரண்களைக் கையாள்வது பற்றிய சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரம் குறித்து தோழர் ஏ.எம்.கே தனது "பெரும்பான்மை ஆவணத்தில்" கூறியுள்ளார். அதில் "சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரம்" எனும் தலைப்பில் ஏ.எம்.கே. கூறுவதாவது:

"மறைமுக சேமிப்புச் சக்தியாக அமைவது பொதுவாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான முரண்பாடுகளும், குறிப்பாக (அ) இரு வல்லரசுகளுக்கு இடையிலுள்ள முரண்பாடு (அ) ஒருபுறம் ஏதாவது ஒரு வல்லரசுக்கும் மறுபுறம் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு (அ) அரைக்காலனி, நவீன காலனிய நாட்டில் ஒரு வல்லரசுக்கு விசுவாசமான ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவினருக்கும், மற்றொரு வல்லரசு, பிற ஏகாகிபத்திய சக்திகள், நாட்டின் உள்ளேயே உள்ள அவற்றின் ஏஜெண்டுகள் ஆகியோருக்கும் இடையிலுள்ள முரண்பாடும் ஆகும்" என்கிறார் ஏ.எம்.கே.

[இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரமும் ப-44]

அதாவது, ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் ஆளும் வர்க்க முரண்கள் என்பது மறைமுக சேமிப்பு சக்திகள் எனவும், அவற்றைக் கையாள்வது என்பது போர்த்தந்திரமே (அதாவது போர்தந்திர கட்டத்தில் உருவாக்கப்படும் செயல்தந்திரம்) எனவும் ஏ.எம்.கே கூறுகிறார். அதாவது புரட்சியின் முனை ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திருப்பப்படும் போது, அதை எதிர்த்து பிறிதொரு ஏகாதிபத்தியம் மற்றும் அதன் தரகு முதலாளித்துவ ஏஜெண்டுகளுடன் புரட்சிக்கு சாதகமாக அமையும்பட்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஐக்கிய முன்னணி உருவாக்குவது பற்றி பேசுகிறார்.

ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகளை (தரகர்கள்) எப்போது, எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி அவர் பின் வருமாறு கூறுகிறார்:

"தன்மையில் தரகர்களாக உள்ள பெரும் முதலாளிய வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாக சேவைப் புரிகிற அதனால் வளர்க்கப்படுகிற ஒரு வர்க்கமாகும். எனவே தரகுப் பெரும் முதலாளிய வர்க்கத்திற்குள்ளேயே வேறுபட்ட கும்பல்கள் வேறுபட்ட ஏகாதிபத்தியச் சக்திகளால் (குறிப்பாக இரண்டு வல்லரசுகள்) ஆதரிக்கப்படுகின்றன. எனவே, இந்த வல்லரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடையும்போது ஒரு குறிப்பிட்ட சக்திக்கு எதிராகப் புரட்சியின் முனை முக்கியமாக திருப்பப்படும்போது, பிற சக்திகளைச் சார்ந்த பெரும் முதலாளிய வர்க்கக் கும்பல்கள் அந்தக் குறிப்பிட்ட ஏகாதிபத்திய சக்திக்கு எதிரானப் போராட்டத்தில் சில குறிப்பிட்ட எல்லை வரை சில குறிப்பிட்ட காலத்திற்குச் சேரலாம். அப்படிப்பட்ட நேரங்களில் பாட்டாளி வர்க்கமானது எதிரியைப் பலவீனப்படுத்தும் பொருட்டு இந்த பிரிவினருடன் ஒரு ஐக்கிய முன்னணியை அது புரட்சிக்கு சாதகமாக இருக்குமானால் உருவாக்கலாம்" என்கிறார் ஏ.எம்.கே.

                                                                                                                                              (அதே நூல்...பக்கம் 110)

"ஐக்கிய முன்னணியில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை நிறுவப்பட வேண்டும். அதாவது, பாட்டாளி வர்க்கமானது அரசியல், பொருளாதாரக் கோரிக்கைகளைக் கொண்ட தனது குறிப்பான வேலைத்திட்டத்துடன் வரவேண்டும்".

(கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைபாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும், சமரன் வெளியீடு, பக்கம் 126-127, 128)

அதாவது புரட்சிகர எழுச்சிக் கட்டத்தில் புரட்சியின் முனை குறிப்பிட்ட ஒரு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் திருப்பப்படும் போது மற்றொரு ஏகாதிபத்தியம் மற்றும் அதன் தரகர்களுடன் புரட்சிக்கு சாதகமாக இருக்குமானால் ஐக்கிய முன்னணி அமைக்கலாம் என்கிறார். மேலும் அவை ஐக்கிய முன்னணியில் நீடித்தாலும் மிகப் பிற்போக்கானதாகவே நீடிக்கும் எனவும், ஐக்கிய முன்னணியைப் பிளவுபடுத்த ஓயாமல் முயற்சி செய்யும் எனும் எச்சரிக்கையோடு அமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஆனால் திருத்தல்வாதிகள் நேர்முக சக்திகளான அடிப்படை வர்க்கங்களை மறைமுக சக்திகளாகவும், ஆளும் வர்க்க மற்றும் ஏகாதிபத்திய முரண்களை நேர்முக சக்திகளாகவும் கருதி ஏகாதிபத்திய - காலனிய நாடுகளின் தரகு வர்க்க கும்பலின் தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஐக்கிய முன்னணியில் பாட்டாளி வர்க்கத் தலைமையை மறுத்து, கட்சியை முதலாளித்துவ கட்சியாக மாற்றி கட்சி அழிவதற்கு  வழி காட்டுகின்றனர்.

தற்போதைய உலக நிலைமைகள் என்ன?.

இன்று அமெரிக்க - நேட்டோ முகாம் மற்றும் சீன-ரஷ்ய முகாம்களுக்கிடையில் உலக மறுபங்கீட்டிற்கான இரண்டாவது பனிப்போர் துவங்கியுள்ளது. எனவே இக்கட்டத்தில் (முதல் பனிப்போர் கட்டத்தில் எடுத்த நிலைபாட்டைப் போலவே) உள்நாட்டு யுத்தக் கொள்கையையே பின்பற்ற வேண்டும்.

சோசலிச ரஷ்யாவைப் பாதுகாப்பதற்காகவும், வெற்றி பெறும் தறுவாயில் இருந்த சீன சோசலிச முகாமைப் பாதுகாப்பதற்காகவும் இரண்டாம் உலகப்போரின் போது மூன்றாம் அகிலம் முன்வைத்த முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சி, காலனிய நாடுகளில் ஜனநாயகப் புரட்சி என்ற நமது திட்டத்திற்குக் குறைவான குறைந்தபட்ச செயல் திட்டமான "முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, காலனிய நாடுகளில் தேச விடுதலையைச் சாதிப்பது" என்ற செயல் தந்திரம் முன்வைக்கப்பட்டது. எனவே அமெரிக்கா-பிரிட்டன் ஏகாதிபத்திய முகாம்களின் சீர்திருத்தக் கொள்கைகளை (ரூஸ்வெல்டின் புதிய ஒப்பந்தம், கீன்சிய சீர்திருத்தம்) மூன்றாம் அகிலம் ஆதரித்து நிலைபாடு எடுத்தது. இது குறித்து ஏ.எம்.கே. கூறுவதாவது:

"பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புதைகுழியில் சிக்கிக் கொண்ட பிறகுதான், பயங்கரமான இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து தங்களை வெளியே கொண்டுவருவதற்கு கம்யூனிஸ்டுகளுடன் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்துக் கொள்ள முன்வந்தார்கள். ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில் முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சி, காலனி மற்றும் அரைக்காலனி நாடுகளில் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் திட்டத்திற்குக் குறைவான பாசிச எதிர்ப்பு ஜனநாயகம், தேசிய விடுதலைத் திட்டத்தின் அடிப்படையில் ஓர் ஐக்கிய முன்னணி என்ற அரசியல் வழியை முன்வைத்துப் போராடியது சரியான மார்க்சிய லெனினிய நிலைபாடாகும். பாசிசத்தை எதிர்த்து முழுசக்தியுடன் கூடிய தேசிய மற்றும் சர்வதேச முன்னணி அமைப்பது என்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் (கமின்டர்ன்) ஏழாவது மாநாட்டின் அரசியல்வழி இரண்டாம் உலக யுத்தத்தின் பொது யுத்ததந்திரமாக ஆகிவிட்டது. இது உலக கம்யூனிஸ்டு இயக்கத்தின் அரசியல் தலைமை முறையின் சிறப்புக்கு உதாரணமாகும்".

(ஸ்டாலின்: மாபெரும் மார்க்சிய-லெனினியவாதி - ஏ.எம்.கே, சமரன் வெளியீடு, பக்கம் 34)

இரண்டாவது உலகப் போரின் முதல் கட்டத்தில் இந்த ஏகாதிபத்திய முகாமும் சோசலிச ரஷ்யாவை அழிப்பதையே பிரதான நோக்கமாக எண்ணியிருந்தது. ஆனால் பாசிச ஜெர்மனி-இத்தாலி-ஜப்பான் முகாம், பிரிட்டன்-அமெரிக்க முகாமின் காலனிகளையும், ஐரோப்பிய நாடுகளையும் கைப்பற்றத் தொடங்கிய போதுதான், அமெரிக்கா-பிரிட்டன் முகாம் ஸ்டாலினிடம் உதவி கோரின. இருப்பினும் சோவியத் செம்படையே பெருமளவிலான தியாகங்கள் புரிந்து சோஷலிச ரஷ்யாவை பாதுகாப்பதிலும், சீனப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்வதிலும், உலகத்தைப் பாசிசத்திலிருந்து மீட்பதிலும் பெரிதும் பங்காற்றியது. இவ்வாறாக வெற்றி பெற்ற பாட்டாளி வர்க்கத்தின் சோவியத் முகாமையும் (ரசியா), வெற்றி பெறும் தறுவாயில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் (சீனா) புரட்சிகர செந்தளங்களையும் காக்கும் பொருட்டு, பிறிதொரு ஏகாதிபத்திய முகாம் மற்றும் அதன் உள்நாட்டு தரகு வர்க்க (சியாங்கே சேக்) பிரிவுடன் தற்காலிகமாகக் கூட்டணி ஒன்றை "பாட்டாளி வர்க்கத் தலைமையில்" நிறுவி வெற்றிகண்டது.

எனவே வெற்றி பெற்ற சோசலிச முகாம் அல்லது வெற்றி பெறும் தறுவாயில் உள்ள சோசலிச முகாமை பாதுகாக்கும் பொருட்டு, இரண்டாவது உலகப்போரில் மூன்றாம் அகிலம் முன்வைத்த செயல்தந்திரமானது மார்க்சிய லெனினிய அடிப்படையில் சரியானதே. ஆனால் அந்த செயல் தந்திரத்தை சோவியத் முகாம் எங்குமே இல்லாத இன்றைய உலக சூழலுக்கு - எல்லா ஏகாதிபத்திய வல்லரசுகளும் முதலாளிய ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டு பாசிசத்தை கட்டியமைத்து வருகின்ற இன்றைய சூழலுக்கு - அதை வறட்டுத்தனமாக பொருத்தி, இல்லாத முதலாளிய ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பதும் - கீன்சிய பொருளாதார கொள்கையை தீர்வாக முன்வைப்பதும் மார்க்சிய லெனினியத்திற்கு எதிரானதாகும். 2008இல் அமெரிக்காவில் துவங்கிய பொருளாதார நெருக்கடி உலக பொது நெருக்கடியாக பரிணமித்தது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மீண்டும் பொதுத்துறை - தனியார் பங்கேற்பு எனும் கீன்சிய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதே தீர்வு என ஐ.நா அண்மையில் ஆலோசனையாக முன்வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதல் உலகப் போரில் லெனினும், முதல் பனிப்போரில் ஏ.எம்.கே.வும் முன்வைத்த உள்நாட்டு யுத்தக் கொள்கையை இன்றைய சூழலுக்குப் பொருத்துவதே பாட்டாளி வர்க்க நிலைபாடாகும். ஒரு ஏகாதிபத்திய முகாமை வீழ்த்த இன்னொரு ஏகாதிபத்திய முகாமுடன் - அதன் ஏஜெண்டான உள்நாட்டு தரகு வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணி வைத்துக்கொள்வது என்ற நிலைபாடு தற்போது பொருந்தாது. அவ்வாறு பொருத்துவது வலது விலகலில் சென்று முடியும் -சென்று முடிந்துள்ளது (கொண்டபள்ளி தரப்பினரின் நிலைபாட்டைப் போல).

இதனடிப்படையிலேயே, அமெரிக்கா-நேட்டோ மற்றும் சீனா-ரசியா முகாம்களுக்கிடையில் உலக மறுபங்கீட்டிற்கான இன்றைய இரண்டாவது பனிப்போர் கட்டத்தில், பனிப்போரை உள்நாட்டுப் போராக மாற்றுவது என்ற நிலைபாட்டை ஏ.எம்.கே. முன்வைத்தார். அதுவே நமது நிலைபாடு ஆகும். அதாவது, இரு ஏகாதிபத்திய முகாம்களையும், அவற்றின் காலனிய-அரைக் காலனிய நாடுகளின் ஆளும் தரகு வர்க்க ஏஜெண்டுகளையும் எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதே உள்நாட்டு யுத்த கொள்கையாகும். இந்த பாட்டாளி வர்க்க நிலைபாட்டின் அடிப்படையிலேயே - அதாவது உள்நாட்டு யுத்தக் கொள்கையிலிருந்தே நாம் பாசிச எதிர்ப்பு முன்னணி செயல்தந்திரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இதிலிருந்து கீழ்கண்டவற்றை தீர்மானமாக வந்தடைகிறோம்:

1. பாசிசம் பற்றிய மார்க்சிய வரையறை என்பது ஏகாதிபத்திய நிதி மூலதன சர்வாதிகாரம் ஆகும். இந்தியப் பாசிசம் என்பது அமெரிக்க ஏகாதிபத்திய- அதிகார தரகு பெரும் முதலாளித்துவ-நிலைவுடைமை கும்பல்களின் நலன்களுக்குச் செவை செய்யும் பாசிசம் ஆகும்.

2. இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களாக காங்கிரசும் பாஜகவும் திகழ்கின்றன. இந்தியப் பாசிசத்தின் தொங்கு சதைகளாக மாநில தரகு முதலாளித்துவ கட்சிகள் விளங்குகின்றன. இதுவே இந்தியப் பாசிசத்தின் அரசியல் அடிப்படை ஆகும்.

3. 'இந்துத்துவா' என்பது தூய ஆரிய இனவாதக் கோட்பாட்டிலிருந்தும், 'பெருந்தேசியவாதம்' என்பது ஆரிய இன மேன்மைக் கோட்பாட்டிலிருந்தும் வகுக்கப்பட்டுள்ளது. ஆரிய இனவாத மாயையில் இருந்துதான் திராவிட மாயை உருவானது. ஆரியமும் திராவிடமும் ஏகாதிபத்தியத்தின் கள்ளக்குழந்தைகள். ஒன்று வெள்ளைக் குழந்தை. மற்றொன்று கருப்பு குழந்தை. ஆகவே ஆரிய -திராவிட மாயைகளில் மக்களை ஆழ்த்தி அகில இந்திய ஆளும் வர்க்க கட்சிகளுக்கும் திமுக போன்ற மாநில தரகு முதலாளித்துவ கட்சிக்கும் இடையிலான கள்ளக்கூட்டு மூடி மறைக்கப்படுகிறது.

இந்தியப் பாசிசத்தின் இரு வடிவங்களின் சித்தாந்த வேரும் தி.மு.கவின் (திராவிட மாடல் பாசிசம்) சித்தாந்த வேரும் ஒன்றே. அந்த வேர் காலனிய இனவியலில் பொதிந்துள்ளது.

4. பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும், அரசியல் அதிகாரம் மையப்படுத்துதல், பாசிசத்திற்கும் இட்டுச் செல்கிறது. 1975இல் இந்திரா ஆட்சியில் முதலில் பாசிசம் கட்டியமைக்கப்பட்டு, 1980களில் ராஜீவ் ஆட்சியில் நிலைநிறுத்த துவங்கியது. 2008 அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்க ஏகாதியத்திய நிதி மூலதன கும்பல்கள் - அதிகார தரகு பெரு முதலாளிகள் - நிலவுடமை வர்க்கங்களின் நலன்களிலிருந்து இந்தியப் பாசிசம் கட்டியமைக்கப்பட்டு வரும் போக்குகள் தீவிரமடைந்து வருகிறது. மோடி கும்பலின் ஆட்சியில் அது இந்துத்துவ பாசிச வடிவத்தில் நிலைநிறுத்த துவங்கியுள்ளது. இந்தியப் பாசிசம் என்பது வளரும் பாசிசமாகும். இதுவே இந்தியப் பாசிசத்தின் பொருளியல் அடிப்படையாகும். பாசிசத்தின் இந்த பொருளியல் அடிப்படையை பாதுகாத்துக்கொண்டு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது பாசிசத்தின் வடிவங்களில் சிற்சில மாற்றங்களை கொண்டுவரலாமே ஒழிய பாசிசம் ஒழியாது. அதாவது மதச்சார்பற்ற பாசிசமாகவோ, பெருந்தேசியவாத பாசிசமாகவோ, இடது மாடல் பாசிசமாகவோ (கேரள மாடல்), திராவிட மாடல் பாசிசமாகவோ இருக்கலாமே ஒழிய பாசிசம் ஒழியாது.

5. சர்வதேச அளவில் இரு ஏகாதிபத்திய முகாம்களையும் எதிர்த்து உள்நாட்டு யுத்தக் கொள்கையை பின்பற்றுவது நமது சர்வதேசிய செயல்தந்திரம் ஆகும். இந்த உள் நாட்டு யுத்தக் கொள்கைக்கு சேவை செய்யும் வகையில் நாம் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைக்க வேண்டும். அதாவது அது இந்திய - தமிழக ஆளும் வர்க்க கட்சிகளை வீழ்த்துவதை இலக்காக கொண்டு செயல்படும் பாட்டாளி வர்க்க தலைமையிலான தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், தேசிய முதலாளிகள் மற்றும் ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி ஆகும்.

மேற்கண்ட நிலைப்பாட்டின் அடிப்படையில் கீழ்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் அணிதிரளுமாறு அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்:

  • ·       பாசிச பாஜக ஆட்சியைத் தூக்கி எறிவோம்!
  • ·       பாஜகவிற்கு மாற்று காங்கிரசு - திமுக அல்ல!
  • ·       பாசிச அரசுக்கு மாற்று மக்கள் ஜனநாயக குடியரசே!!

இகக (மா.லெ.) (மக்கள் யுத்தம் –போல்ஷ்விக்), தமிழ்நாடு