பாபர் மசூதி இடிப்பு வழக்கு : ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் கரசேவகனாக, இந்துத்துவ பாசிசத்தின் கைக்கூலியாக உச்சநீதிமன்றம்!

சமரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் கரசேவகனாக, இந்துத்துவ பாசிசத்தின் கைக்கூலியாக உச்சநீதிமன்றம்!

கடந்த நவம்பர் 9, 2019 அன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில், மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலத்தை, மசூதியை இடித்து தள்ளிய ஆர்எஸ்எஸ்-பாஜக கிரிமினல்களிடமே ஒப்படைப்பதற்கான இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, இசுலாமியர்களின் வழிப்பாட்டு தலங்களையும் வழிப்பாட்டு உரிமையையும் மறுக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கியெரிந்துவிட்டு இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் ஒருமித்த தீர்ப்பை ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ளது. 

இத்தீர்ப்பானது, உச்ச நீதிமன்றம் என்பது “ஆகாயத்தின் தேவதூதர்களைக் கொண்டு அந்தரத்தில் கட்டப்பட்ட உயர்ந்த சனநாயக அமைப்பு” என்ற மாயைகளை தகர்த்தெறிந்து விட்டது. அம்மன்றம் ஏகாதிபத்திய நிதி மூலதனம் மற்றும் இந்திய பெரும் தரகு வர்க்க மூலதன நலன்களில் இருந்து கட்டமைக்கப்படும் பாசிசத்தின் ஒடுக்குமுறைக் கருவி மட்டுமே என்பதை உலகிற்கு பறைசாற்றி விட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாரம் என்ன?

“பாபர் மசூதியானது காலி நிலத்தில் கட்டப்படவில்லை. அவ்விடத்தில் இருந்த ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர். எனவே மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலம் உள்ளிட்டு சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தையும் ராமர் கோவில் கட்டுவதற்கான அதிகாரம் கொண்ட அறக்கட்டளையை மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். வக்பு வாரியம் விரும்பும் வேறொரு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் அவர்களுக்கு வழங்கப்படும்; மத நல்லிணக்க அடிப்படையில் இந்த தீர்ப்பு நடுநிலையோடு வழங்கப்படுகிறது” என்பதே இத்தீர்ப்பின் சாரமாகும். 

இந்துக்களின் நம்பிக்கை எனும் பெயரில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு, இஸ்லாமியர்களின் நம்பிக்கையைப் பற்றி துளியும் அக்கறை காட்டவில்லை. மசூதி கட்டப்பட்ட 1528ம் ஆண்டு முதல் 1857ம் ஆண்டு வரை அங்கு தொழுகை நடந்ததற்கான ஆதாரங்களை இஸ்லாமிய தரப்பு ஒப்படைக்கவில்லை என்று கூறி வக்பு வாரியத்தின் மனுவையும், ‘நிர்மோஹி அகாரா’ என்ற மற்றுமொரு இந்து அமைப்பின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், கோவில் கட்டும் பணியை மசூதியை இடித்த ஆர்எஸ்எஸ் பாஜக சங்பரிவார பண்டார பரதேசி கும்பலிடமே ஒப்படைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

‘சட்டத்தின் முன் அனைத்து மதத்தினரும் சமம் அல்ல; இந்து மத நம்பிக்கை மற்றும் இந்து மதம்தான் மேலானது’ என்றும், நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல; இந்து மதத்தின் ஆட்சி எனவும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும், இந்திய அரசும் மதச் சார்புடையவை எனவும், ‘ராம ராஜ்ஜியம்’ எனும் பெயரில் ‘அமெரிக்க மாமன் ராஜ்யம்’ நடப்பதையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. கருப்புத் துணியைக் கழற்றி எறிந்துவிட்டு காவித் துணி உடுத்தி இஸ்லாமியர்களின் ரத்தத்தில், இந்துமத வெறியர்களின் சூலாயுதத்தில் எழுதப்பட்டுள்ள இத்தீர்ப்பு, மதநல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாகவும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் முதலாளித்துவக் கட்சிகளும் அதன் ஊடகங்களும் கேடுகெட்ட முறையில் லாவணி பாடுகின்றன.

காசி, மதுராவில் உள்ள மசூதிகள், தாஜ்மஹால் மற்றும் 3000 மசூதிகள் அனைத்தும் இந்துக் கோவில்களை இடித்து கட்டப்பட்டுள்ளதாக தாங்கள் நம்புவதாகவும் அவைகள் இந்துக்களுக்கு உரியவை எனவும் ஏற்கனவே வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் பண்டாரங்கள் ஊளையிடத் தொடங்கி விட்டன. இந்த படுபாதகச் செயல்களையும் ‘இந்துக்களின் நம்பிக்கையின்’ பெயரில் உச்சநீதிமன்றம் அனுமதிக்கப் போகிறதா? ஆம்! தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இவற்றை அனுமதிப்பதற்கு வழிகாட்டுகிறது; இந்து-முஸ்லிம் கலவரங்களுக்கு தூபம் போடுகிறது. எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு தேவையான தீர்ப்பை எழுதி வாங்கியுள்ள பாஜக ஆர்எஸ்எஸ் கும்பலை எதிர்த்தும் நாம் என்ன செய்யப்போகிறோம்? என்பதே நம்முன் உள்ள கேள்வி.

உச்சநீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இந்துத்துவப் பாசிசத்திற்கும், அதன் மூலம் புதிய காலனியாதிக்கத்திற்கும் கூச்சமின்றி சேவை செய்கிறது என்பதை காணும் முன்பு, பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சனை உருவாகிவந்த வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம். 

1) பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சினையின் தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் வரலாற்று சுருக்கம் 

இந்தியத் துணைக் கண்டத்தைச் சுரண்டும் பொருட்டு இங்கு வந்த ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் இந்திய வரலாற்றை மறுகட்டமைப்பு செய்தனர். பாபர் மசூதி அமைந்துள்ள அயோத்தியா வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. 

காலனியாதிக்கவாதிகள் வட இந்தியாவில் இந்து இசுலாமிய கலவரங்களுக்கு வித்திடும் கருத்துகளையும், தெற்கில் ஆரிய திராவிட இனவாத மாயைகளையும் கட்டியமைத்து மக்களை பிளவுபடுத்தினர். 1850 களில் நெருக்கடி தீவிரம் பெற்று இந்தியாவெங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் எழுச்சி பெற்றதால் காலனியாதிக்கம் ஆட்டம் கண்டது. எனவே காலனிய எதிர்ப்பு போராட்டங்களை திசை திருப்பவே இவ்வாறு செய்தனர். 1857 இல் சிப்பாய் கலகம் வெடித்தது. இருப்பினும் மதக் கலவரங்களை கட்டியமைத்து பிரிட்டிஷ் அரசு காலனியாதிக்கதை வலுவாக நிறுவியது. இது குறித்து மார்க்ஸ், பிரிட்டிஸ் அரசு காலனிய நலன்களிலிருந்து மதக் கலவரங்களை அந்த அரசு கட்டியமைக்கின்றது என இந்தியாவைப் பற்றிய கட்டுரைகளில் எழுதினார். 

இதுகுறித்து கே.என்.பணிக்கர் என்ற வரலாற்று ஆசிரியர் கூறுவதாவது: “பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல்தான் ராமர் வழிபாடு என்பது பிரபலமடையத் தொடங்கியது. 15, 16ஆம் நூற்றாண்டுகளில் கூட ராமர் சிலைகள் அயோத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படவில்லை. 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ராமர் சிலைகளும், கோவில்களும் நிறுவப்படத் தொடங்கின” என்கிறார். (வரலாற்று ரீதியான மறுஆய்வு, கே.என்.பணிக்கர் பக்கம் 22-80, பெங்குயின் அச்சகம்)

மேலும் “ராமர் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்பது சமீபகால நம்பிக்கையாகும். இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை காலனி ஆட்சியாளர்கள் மறுகட்டமைப்பு (Re-construction) செய்த 18ஆம் நூற்றாண்டில் தான் பிரச்சனையின் வேர் அடங்கியுள்ளது. இந்த வரலாற்று மறுகட்டமைப்பு தான் பல்வேறு மதப் பிரிவினருக்கும் இடையிலான கருத்து மோதல்களும், பூசல்களும் குவிமையம் பெறத் தொடங்கின” என்கிறார். (மேற்படி நூல் ப-29).

கிழக்கிந்திய கம்பெனி வியாபாரியான வில்லியம் பின்ச் (William Finch)  என்பவர் 1611இல் “அயோத்தியில் ராமரின் கோட்டையும், வீடுகளும் யாத்திரீகர்களால் பார்வையிடப்பட்டன” என்று பதிவு செய்துள்ளார். கிறித்துவ மத போதகரான ஜோசப் டிஃபெந்தலர் (Joseph Tiefenthaler) என்பவர் 1770ஆம் ஆண்டு “ராமர் கோவிலை இடித்து மூன்று முகப்பு பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது” என்று முதன்முதலில் இந்து முஸ்லீம் கலவரங்களுக்கு துவக்கப் புள்ளியாக அமைந்த கருத்தை பயணக் குறிப்பு ஒன்றில் எழுதியுள்ளார். இதையடுத்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியான பிரான்சிஸ் புகானென் (Francis Buchanan 1804-12) என்பவர் “ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது” என்று கூறினார். 

ராமர் அயோத்தியில் பிறந்தார் என்று ஸ்கந்த புராணத்திலுள்ள கருத்தை திரித்து, ராமர் அயோத்தியில் மசூதி அமைந்துள்ள இடத்தில்தான் பிறந்தார் என்று முதன் முதலில் காலனியாதிக்க வாதிகள் தான் பொய்யான கதைகளை பரப்பினர். இக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தூண்டப்பட்ட மதக் கலவரங்களும் அவற்றின் மீதான வழக்கில் சேமியர், டபள்யூ. யங் போன்ற ஆங்கிலேய நீதிபதிகளின் தீர்ப்புகளும்தான் இன்று வரையிலான பாபர் மசூதி பிரச்சினகளுக்கும், அதன் மீதான தீர்ப்புகளுக்கும் அடிப்படையாக உள்ளன. அதாவது இப்பிரச்சினை பழைய காலனியத்திற்கு மட்டுமின்றி புதிய காலனியத்திற்கும் சேவை செய்கிறது. 

அ) அயோத்தியில் இந்து-முஸ்லீம் பிரச்சினைகளுக்கு வித்திட்ட பிரிட்டிஷ் காலனியாதிக்கம்

பாபர் மசூதியானது 1528-1530ஆம் ஆண்டுகளில் பாபரின் உத்தரவின் பேரில் அவரது ஆளுநர் மீர் பாகி என்பவரால் கட்டப்பட்டதாக அரசு ஆவணங்களும் மசூதியின் சுவர்களிலுள்ள கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன. முகலாயர் ஆட்சி, நவாப் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த மசூதியின் பராமரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்து வந்துள்ளன. 

அவாத் நகரத்தில் (அயோத்தியில்) ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும், சற்று தொலைவில் உள்ள அனுமன்கர்ஹி கோவிலானது மசூதியை இடித்துக் கட்டப்பட்டுள்ளது என்றும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் திருச்சபை பாதிரியார்கள் மூலம் பொய் பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டு 1855-இல் நவாப் ஆட்சிக் காலத்தில் இந்துக்களையும் இசுலாமியர்களையும் தூண்டிவிட்டனர். அது பெரும் இரத்தக்களரியில் முடிந்து பல இசுலாமியர்களும் இந்துக்களும் கொல்லப்பட்டனர். இதுவே அயோத்தியில் நடந்த முதல் மதக் கலவரமாகும். நவாப் ஆட்சியை வீழ்த்தி கம்பெனி ஆட்சியை நிறுவுவதற்கே இந்த ஈனத்தனமான காரியத்தில் காலனியாதிக்கவாதிகள் ஈடுபட்டனர். 

அயோத்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு, 1855இல் பாபர் மசூதியின் வெளிமுற்றத்தின் வடக்குப் பகுதியில் மற்றொரு கதவை இந்துக்களுக்கு பிரிட்டிஷ் அரசுதான் முதன்முதலில் திறந்து விட்டது. ராமர் கோவில் இடிக்கப்பட்டே பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்ற கருத்திற்கு இந்துக்களை தயார்படுத்தி அதற்கு பிரிட்டிஷ் அரசு இவ்வாறு நடைமுறை வடிவம் தந்தது. இவ்வாறு அனுமதித்த நிகழ்வானது, மசூதிக்கு வெளியே ராமர் பீடம் ஒன்றை இந்துக்கள் 1855இல் உருவாக்குவதற்கு வழிவகுத்தது. இரு மதப் பிரிவினரையும் அருகருகில் இவ்வாறு அனுமதித்த நிகழ்வுதான் இன்று வரையிலான மத முரண்பாடுகளுக்கு தோற்றுவாயாக இருந்தது. அதாவது இந்த நடவடிக்கை வெளிமுற்றத்தின் மீது இந்துக்கள் உரிமை கோருவதற்கும், பின்னாட்களில் உள்முற்றத்தின் மீது (மசூதியின் மீது) உரிமை கோருவதற்கும் வழிவகுத்தது. மசூதியின் சுவரில் இந்துக்கள் “ராம் ராம்“ என்று எழுதினர். இதை எதிர்த்து மசூதியின் நிர்வாகப் பொறுப்பாளர் முகமது அஸ்கர் ரிட் மனு தாக்கல் செய்தார். இதைத் தீர்த்து வைப்பதன் பெயரில் உள்முற்றத்திற்கும், வெளிமுற்றத்திற்கும் இடையில் 1855 இல் தடுப்புச் சுவர் ஒன்றை எழுப்பி மத மோதலுக்கு தூபம் போட்டது பிரிட்டிஷ் அரசு. இஸ்லாமியர்கள் தங்களுடைய தொழுகைக்கு இந்துக்கள் இடையூறு செய்வதாக அடிக்கடி ரிட் மனுத்தாக்கல் செய்தனர். 

ராமர் பீடம் அமைந்துள்ள இடத்தில் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி 1883இல் ஏப்ரல் மாதத்தில் பைசாபாத் துணை ஆணையாளரிடம், வெளி முற்றத்தில் பூஜை செய்து வந்த “நிர்மோஹி அகாரா” அமைப்பு விண்ணப்பம் தந்தது. முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

நிர்மோஹி அகாராவைச் சேர்ந்த மகந்த ரகுபார் என்பவர் “பீடம் அமைந்த இடம் ராமர் பிறந்த இடம்; நிலம் எங்களுக்கே சொந்தம்” என்று உரிமை கோரி 1885 ஜனவரி 28ஆம் தேதி சிவில் நீதிமன்றத்தில் முதலாவது மனுவைத் தாக்கல் செய்தார். பீடம் இருக்கும் பகுதியிலிருந்து மனுதாரர் வெளியேற்றப்படாததால் அவர்களுக்கு உரிமை உண்டு என்ற வாதமும், கோவில் கட்ட அரசு பலமுறை அனுமதி மறுத்திருப்பதாக முகமது அஸ்கர் தரப்பு வாதமும் முன்வைக்கப்பட்டது. நீதிபதி பண்டிட் ஹர்கிஷன் “மசூதிக்கு வெளியே உள்ள ராமர் பீடம் இந்துக்களுக்கு பாத்தியப்பட்டவை எனவும், ஆனால் கோவில் கட்டினால் மோதல் உருவாகும்” எனவும் தீர்ப்பளித்து மகந்த் ரகுபாரின் மனுவை நிராகரித்தார்.

பிறகு, ஆங்கிலேய நீதிபதி சேமியரின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர் “இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடத்தின் மீது மசூதி கட்டப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது; ஆனால் இச்சம்பவம் 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளதால் தீர்ப்பு சொல்வதற்கு காலம் கடந்துவிட்டது; பீடம் அமைந்துள்ள இடம் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்நிலையை மாற்றினால் பாதிப்பு ஏற்படும்” என தீர்ப்பளித்தார்.

பின்பு நிர்மோஹி அகாரா அமைப்பு, ஆவாத் (அயோத்தியா) நீதி ஆணையர் நீதிமன்றத்தில் இரண்டாவது மனுவைத் தாக்கல் செய்தது. நீதிபதி டபிள்யூ.யங் “ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்பும் புனித இடத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் வேண்டுமென்றே மசூதி கட்டியுள்ளார்” என்று 1886ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தீர்ப்பளித்தார். மேலும் அவர் “அந்த இடத்தில் குறைவான பயன்பாட்டு வசதி மட்டுமே இந்துக்களுக்கு உள்ளது. அந்த எல்லையை அதிகரித்து தர வேண்டும் என இந்துக்கள் கோருகின்றனர். சீதா ரசோய், பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் எனவும் இந்துக்கள் விரும்புகிறார்கள்; ஆனால் அந்த இடம் தங்களுக்குச் சொந்தமான இடம் என நிரூபிக்க அவர்களிடம் போதிய ஆதாரம் இல்லை” எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

1930களில் மசூதி யாருக்கு என்று முஸ்லிம்களின் ஷியா-சன்னி பிரிவினரிடையே காலனியாதிக்க அரசு முரண்பாட்டை உண்டாக்கி மதக் கலவரத்தைத் தூண்டியது. 

இந்தியாவில் பிரிட்டனின் பழைய காலனியாதிக்கம் முடிவுக்கு வரும் தருவாயில், பீடம் அமைந்துள்ள இடத்தில் கோவில் கட்டுவதற்கான முயற்சிகளை இந்துக்கள் மீண்டும் துவங்கினர். 1915இல் உருவாக்கப்பட்ட இந்து மகா சபையும் , 1925இல் உருவக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் இதன் பின்புலமாக இருந்தன. மாஜிஸ்ட்ரேட் ஷாஃபி “பீடமுள்ள இடத்தில், நிரந்தர கட்டுமானமோ சிலைகள் நிறுவவோ கூடாது என்றும், அப்போதுள்ள நிலையே தொடர வேண்டும்” என்றும் தீர்ப்பளித்தார். இருந்த போதிலும் அங்குத் தொழுகை நடத்துவதற்கு இந்து சாதுக்கள் இடையூறு செய்வதாக இசுலாமியர்கள் தொடர்ந்து ரிட் மனுக்களைத் தாக்கல் செய்து வந்தனர்.

ஆ) ராமர் கோவில் பிரச்சனையை தேர்தல் ஆதாயத்துக்காக இந்து மகா சபை உதவியுடன் முதன் முதலில் பயன்படுத்தியது காங்கிரசு கட்சியே:

ஆர்.எஸ்.எஸ் கும்பலால் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, காங்கிரசிலிருந்து விலகிய “நேரு சோசலிசவாதியான” ஆச்சார்யா நரேந்திர தேவ் உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் சட்டமன்ற பதவியையும் ராஜினாமா செய்யவே, 1948இல் அயோத்தியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆச்சார்யாவை வீழ்த்த காங்கிரசு கட்சி இந்து மகா சபையின் உதவியை நாடியது. அப்போது இந்துமக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த இந்து மகாசபையின் பாபா ராகவ் தாஸ் என்பவரை உ.பியின் (காங்கிரசு) முதல்வர் கோவிந்த் வல்லபாய் பந்த் வேட்பாளராக நிறுத்தினார். அயோத்தியாவில் கோவில் கட்டுவதை தேர்தல் பிரச்சனையாக முன்வைத்து ‘ஆச்சார்யாவிற்கு ராமர் கோவில் மீது நம்பிக்கை இல்லை’என்று தனது தேர்தல் பிரச்சாரங்களில் முதல்வர் பந்த் கூறினார். காங்கிரசு வெற்றி பெற்றது. இவ்வாறு ராமர் கோவில் பிரச்சனையை தேர்தல் ஆதாயத்திற்காக காங்கிரசு கட்சியே முதன் முதலில் இந்து மகா சாபை உதவியுடன் கையில் எடுத்தது.

பாபா ராகவ் தாஸின் வெற்றி ராமர் கோவில் கட்டும் முயற்சியில் இந்து மகா சபைக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது. 1949 ஜுலை மாதம் பீடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி கேட்டு உ.பி அரசுக்கு கடிதம் எழுதியது இந்து மகா சபை. இந்தப் பிரச்சனை குறித்து விரிவானதொரு அறிக்கையை ஆட்சியர் கே.கே.நாயர் அவர்களை (ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்) அனுப்புமாறு உ.பி அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் “மசூதிக்கு வெளியே உள்ள இடம் ராமர் பிறந்த இடம்;எனவே அங்கு பிரமாண்டமான கோவில் கட்ட வேண்டும் என இந்துக்கள் விரும்புகின்றனர். அங்கு கோவில் கட்ட அனுமதிப்பதில் எவ்வித பிரசனையும் இல்லை” என்று அறிக்கை அனுப்பினார்.

இ) மசூதிக்குள் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்த இந்து மகா சபையினர்:

1949 நவம்பர் 24இல் மசூதிக்கு எதிரே உள்ள இடத்தில் இந்து மகா சபையைச் சேர்ந்த அபய் ராம்தாஸ் மற்றும் அவருடைய சகாக்கள் கே.கே நாயரின் உதவியுடன் தடுப்புச் சுவர் ஏறிக் குதித்து மசூதிக்குள் திருட்டுத்தனமாக ராமர்,ஜானகி,லட்சுமணன் சிலைகளை வைத்துவிட்டு “ராமர் அங்கே சுயம்புவாக காட்சி தந்து, தான் பிறந்த இடத்தைத் தானே எடுத்துக் கொண்டார்” என்று பிரச்சாரம் செய்தனர். அந்த வாரத்தில் வெள்ளிக் கிழமையன்று முசுலிம்களுக்கு மசூதிக்குள் தொழுகை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

காவல் துறையைச் சேர்ந்த காவலர் மாட்டா பிரசாத் அளித்த தகவலின் பேரில் அயோத்தி காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக இருந்த ராம்தேவ் துபே ஒரு வழக்குப் பதிவு செய்தார். மசூதி சேதப்படுத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டிருந்தார். இதன் பேரில் கூடுதல் மேஜிஸ்டிரேட், தண்டனைச் சட்டம் 1945-வது பிரிவின் கீழ் அந்த இடத்தை கைப்பற்றுமாறு உத்தரவிட்டார். நேரு உ.பி முதல்வர் பந்த்திற்கு பிரச்சனையை தீர்க்குமாறு கடிதம் எழுதினார்.மாவட்ட நிர்வாகம் ஏன் இதை தடுக்கவில்லை எனவும், காலையில் சிலைகள் ஏன் அகற்றப்பட வில்லை எனவும் உ.பி அரசு மாவட்ட நிர்வாகத்தை பெயரளவிற்கு கண்டித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நகர மாஜிஸ்டிரேட் குருதத் சிங் “இந்து தலைவர்களை கைது செய்தால் நிலமை மோசமடையும்” என்று தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து வகுப்புக் கலவரங்கள் நாடெங்கும் நடந்த காலத்தில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபையினர், அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வாக்குவங்கியை தயார் செய்தனர். இதற்கு உத்தரப்பிரதேச அரசு பக்கபலமாக இருந்தது. இதுகுறித்து நேரு  “உபி-யின் காங்கிரஸ் தலைவர்கள் வகுப்புவாதச் சிந்தனையில் செயல்படுகிறார்கள்” என்று கூறினார்.

ஈ) சிலைகளை அகற்றக் கூடாது என்று சிவில் வழக்கு தொடுத்த இந்து மகா சபையினர்:

கோபால் சிங் விசாரத் (இந்து மகாசபை) தொடர்ந்த வழக்கில் “சிலைகளை அகற்றக் கோரும் இஸ்லாமியர்களின் முயற்சிகளை அனுமதிக்கக்கூடாது” என்று கூறினார். சிவில் நீதிபதி அன்றே தடை உத்தரவு பிறப்பித்தார். தடை உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐந்து ஆண்டுகள் நடந்த அவ்வழக்கில், புதிய மாவட்ட மேஜிஸ்ட்ரேட் ஜே.என்.உக்ரா, “சர்ச்சைக்குரிய நிலம் பாபர் மசூதி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. நீண்டகாலமாக இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை நடத்தி வருகின்றனர். ராமர் சிலைகள் தவறான முறையில் டிசம்பர் 22 அன்று கள்ளத்தனமாக வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

ராமர் சிலைகள் வைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து நிர்மோகி அகாரா அமைப்பு மூன்றாவது வழக்கை தாக்கல் செய்தது. ராமர் கோவிலில் பூஜை செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் நிர்மோகி அகாரா அமைப்பு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1961இல் சன்னி வக்பு வாரியம் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ஒன்பது இஸ்லாமியர்கள் மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்திற்கு உரிமை கோரி நான்காவது வழக்கை தொடர்ந்தனர். இவ்வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் சுமார் 20 ஆண்டுகள் நடந்தன.

உ) “பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவோம்” என்று முதன்முதலில் முழங்கிய விஎச்பி!

விஷ்வ ஹிந்து பரிஷத் (க்ஷிபிறி) அமைப்பானது 1964 ஆகஸ்ட் 29-30இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் துவங்கப்பட்டது. இந்திரா ஆட்சியின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்த்து நாடெங்கும் மக்கள் போராட்டம் வெடித்து கிளம்பியது. இதை ஒடுக்குவதற்கு ‘பாசிச’ இந்திரா எமர்ஜென்சி ஆட்சியை அறிவித்தார். நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தபிறகு ஜனசங் (பாஜக) மற்றும் இதர கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கி, 1977 தேர்தலில் இந்திராவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு ஆட்சிக்கு வந்தது. உட்கட்சி முரண்பாடுகளால் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. 1980 இல் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

அரசியல் ரீதியாக இந்துக்களை திரட்டி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஆர்எஸ்எஸ், ஜனசங், விஹெச்பி கும்பல்கள் ஈடுபடத் துவங்கின. 1984 ஆம் ஆண்டு மத்தியில் வி.ஹெச்.பி பஜ்ரங் தள் அமைப்பை உருவாக்கியது. ஏப்ரல் 8-1984இல் விஹெச்பி, “பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவோம்” என்று அறைகூவல் விடுத்தது. 1855 முதல் மசூதிக்கு வெளியே கோயில் கட்டுவது என்ற முழக்கம் தான் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக விஹெச்பி தான் முதன்முதலில் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவது என்ற முழக்கத்தை முன்வைத்தது. அதற்கென ஓர் இயக்கத்தை துவக்கியது. பாபர்மசூதி மட்டுமின்றி, வாரணாசி மற்றும் மதுராவில் உள்ள மசூதிகளையும் இடித்து கோவில் கட்டும் திட்டத்தை அறிவித்தது.

இதற்கென ராமஜென்ம பூமி முக்தி யாகியா கமிட்டி 1984 ஜூலை 27 இல் ஆர்எஸ்எஸ் -விஎச்பி கும்பலால் உருவாக்கப்பட்டது. ராமர், ஜானகி சிலைகள் சிறைக்குள் இருப்பதுபோன்ற ரதம் தயாரிக்கப்பட்டது. சிறையிலுள்ள ‘கடவுள்களை’ கண்டு இந்துக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. மசூதியின் கதவுகளில் போடப்பட்டுள்ள பூட்டுகளை அகற்றி கோவில் கட்ட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தது. ராம ஜென்மபூமி நியாஸ் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த யாத்திரைக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

இந்திராவின் மறைவிற்குப் பிறகு அவரது சீமந்த புத்திரன் ராஜீவ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். ஏகாதிபத்திய நலன்களுக்கான புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்த துவங்கினார். இதை திசை திருப்ப காங்கிரசும் பாஜகவும் கள்ளக் கூட்டணி அமைத்தன. மசூதியின் கதவுகளை திறக்க விஹெச்பி போராட்டங்களை தீவிரப்படுத்தியது. 1986 மார்ச் 6ஆம் தேதி சிவராத்திரிக்கு மசூதியின் கதவுகளை திறக்காவிட்டால் பலவந்தமாக திறப்போம் என்று அறிக்கை விட்டது. ராஜீவ் அரசு இந்துத்துவ சக்திகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து மசூதியின் கதவுகளை ராமர் பூஜைக்கு திறக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய சமூகத்தினர் முகமத் அசம் கான் மற்றும் கிலானி தலைமையில் போராட்டங்களை துவக்கினர். பாஜக - விஹெச்பி - பஜ்ரங் தள் கும்பலும் , காங்கிரசு கும்பலும் கள்ளத்தனமாக கைகோர்த்துக் கொண்டு இவ்வாறு புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தப் போராட்டங்களை, இந்து இஸ்லாமிய முரண்பாடுகளை தீவிரப் படுத்தியதன் மூலம் திசை திருப்பின.

மசூதியை தாங்களும், மசூதிக்கு வெளியே உள்ள ராமர் பீடத்தை இந்துக்களும் வைத்துக்கொள்வது என்று இஸ்லாமிய அமைப்புகள் முன்வைத்த சமரச உடன்பாட்டை ஆர்எஸ்எஸ் நிராகரித்துவிட்டது. 1989 ஜூன் 11இல் பாலம்பூர் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ராமர்கோவில் திட்டத்தை ஆதரித்து தீர்மானம் போட்டது பாஜக.

இப்பிரச்சனை தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பைசாபாத் நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரி உ.பி காங்கிரசு அரசு மனுதாக்கல் செய்தது. அதன்பேரில் 1989 ஆகஸ்ட் 14ஆம் தேதி உயர் நீதிமன்றம் வழக்கு முடியும்வரை முந்தைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் பொருட்டு இரண்டாவது கட்ட ரத யாத்திரையை சங் பரிவாரங்கள் அறிவித்தன. நவம்பர் 9 1989 ஆம் தேதி அன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப் போவதாக விஹெச்பி அறிவித்தது. இந்துக்களின் வாக்குகளை பெற ராஜீவ் காந்தியும், ‘ராமராஜ்யம்’ அமைக்கப் போவதாக அறிவித்தார். அதே சமயத்தில் விஹெச்பி மசூதி அருகில் அடிக்கல் நாட்டுவதற்காக கொடியை நட்டது. இதை உ.பி காங்கிரஸ் அரசு அனுமதித்தது.

அன்றைய காலகட்டத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங் தலைமையில் மூன்றாவது அரசியல் சக்தியாக ஜனதாதளம் உருவானது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்க, பாஜக, இடது சாரிகளின் ஆதரவுடன் விபி சிங் பிரதமரானார். தற்போது ராமர் கோவில் போராட்டத்தை பாஜக அத்வானி தலைமையில் வெளிப்படையாக தலைமை தாங்கி நடத்தியது. 1990 செப்டம்பர் 25 அன்று சோம்நாத் ஆலயத்திலிருந்து அயோத்தியை நோக்கி அத்வானி ரத யாத்திரையைத் துவக்கினார் (மேற்குவங்க இடதுசாரி அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது). ரத யாத்திரை ரத்த யாத்திரையாகி நாடெங்கும் மதக் கலவரங்கள் வெடித்தன. அக்டோபர் 30-ஆம் தேதி அயோத்தியில் யாத்திரை முடிவடைந்தவுடன் மசூதியின் மீது கரசேவகர்கள் ஏறினர். கலவரத்தை அடக்கும் பொருட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 16 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதனால் விபி சிங் அரசுக்கு தந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் பிற்படுத்தப்பட்ட இந்துக்களை வென்றெடுக்கும் பொருட்டும், தனது அரசின் அரசியல் பொருளாதாரக்  கொள்கைகளை எதிர்த்து நடந்த போராட்டங்களை திசை திருப்பும் பொருட்டும் மண்டல் அறிக்கையை விபி.சிங் கையிலெடுத்தார். 1991 தேர்தலின்போது ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். நரசிம்மராவ் பிரதமர் ஆனார். உபி தேர்தலில் பாஜக கல்யாண்சிங் தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது. கல்யாண்சிங் பதவியேற்றதும், மசூதிக்கு எதிரே 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றுலா மேம்பாடு எனும் பெயரில் கையகப்படுத்தினார். காங்கிரஸ் ஆட்சியில் ராம் கதா பூங்காவிற்கு கையகப் படுத்தப்பட்ட 42 ஏக்கர் நிலத்தை விஹெச்பிக்கு வழங்கினார். உபி தேர்தலில் பெற்ற வெற்றியால் மத்தியில் ஆட்சி அமைக்கும் உத்வேகம் பாஜகவிற்கு ஏற்பட்டது. எனவே ராமர் கோவில் கட்டும் பணிகளைத் தீவிரப்படுத்தியது.

1992 டிசம்பரில் கரசேவை அறிவிக்கப்பட்டது. டிசம்பர் ஆறாம் தேதி சங்பரிவார பண்டார கும்பல்களுடன் அத்வானி, ஜோஷி போன்றவர்கள் கல்யாண் சிங் அரசின் தலைமையில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், பாராளுமன்றம், சட்டமன்றம், இந்திய ராணுவம், ராவ் அரசு என அனைத்தின் கள்ளக் கூட்டோடு , சிறுபான்மை மதம் ஒன்றின் வரலாற்றுப் புகழ்பெற்ற மசூதியை இடித்து தள்ளிவிட்டு, தற்காலிக கோவில் ஒன்றையும் நிறுவினர். பாராளுமன்றத்தில் இது குறித்த வாதம்தான் நடந்தது. புதிய பொருளாதாரக் கொள்கைப் பற்றிய வாதம் நடைபெறவில்லை. இதையொட்டி நடந்த இந்து முஸ்லிம் கலவரங்களாலும், குஜராத் கோத்ரா கலவரம், கோவை கலவரங்கள் என ரத்தம் தோய்ந்த வரலாற்றின் மூலமும் மோடி கும்பல் குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தது.

பிறகு, “உ.பி அரசு நிலம் கையகப்படுத்தியது சட்டவிரோதம்” என உயர் நீதிமன்றம் கூறியது. நிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்டு 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது ராவ் அரசு. ஆனால் பாஜகவின் அனைத்துவித காட்டுமிராண்டித்தனங்களையும் புதிய பொருளாதாரக் கொள்கைப் பற்றிய வாதத்தில் இருந்து திசை திருப்பும் பொருட்டு ஆதரித்தது.

மசூதிக்கு கீழ் ராமர் கோவில் இருந்ததா என்பதை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொல்லியல் துறையின் இயக்குனரும் ஆர்எஸ்எஸ் ஐ சேர்ந்தவருமான பி.பி.லால் மசூதிக்கு கீழ் கோவில் இருந்ததற்கான  ‘தூண் தளங்கள்’ (றிவீறீறீணீக்ஷீ ஙிணீsமீs) உள்ளதாக ஓர் பொய்யான அறிக்கையை 1989இல் ஆர்எஸ்எஸ் இதழில் (மந்தன்) வெளியிட்டார். அதை அடிப்படையாகக் கொண்டே இந்திய தொல்லியல் துறை 2003இல் பொய்யான அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதைக் கொண்டும், காலனிய வாதிகள், இந்து புராணங்கள் மற்றும் முக்கியமான இந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டும், நிலத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுக்கும் தீர்ப்பை 2010 செப்டம்பர் 30 அன்று அலகாபாத் உயர் நீதி மன்றம் வழங்கியது. ராமர் கோவிலை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து பச்சையாக இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மீதுதான் தற்போது தீர்ப்பு வழங்கி ஆர்எஸ்எஸ்-விஹெச்பி-பஜ்ரங்தள் வரிசையில் சேர்ந்துகொண்டது உச்சநீதிமன்றம்.

2) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்துத்துவப் பாசிசத்திற்கு எவ்வாறு சேவை செய்கிறது?

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறு என்று நிராகரித்துள்ள உச்சநீதிமன்றம், அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதற்கு ஆதாரமாகக் கொண்ட - சங்பரிவாரங்கள் முன்வைத்த ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகள் கருத்தையும், இந்துக்களின் மத நம்பிக்கை மற்றும் புராண இதிகாசங்கள் மற்றும் இந்திய தொல்லியல் துறையின் உண்மைக்கு மாறான அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டே தனது தீர்ப்பையும் வழங்கியுள்ளது. ஸ்கந்த புராணம் அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று கூறியுள்ளதை, அயோத்தியில் மசூதி அமைந்துள்ள இடத்தில் ராமர் பிறந்தார் என்று திரித்துப் புரட்டி கதையளந்த காலனியாதிக்கவாதிகளின் கருத்துகளும் தீர்ப்புகளுமே உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையாகும். 

அலகாபாத் நீதிமன்றம் நிலத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுத்தது மட்டுமே தவறு என்கிறது உச்சநீதிமன்றம். எனவே தான் சங் பரிவாரங்களின் நம்பிக்கையை ‘இந்துக்களின் நம்பிக்கை’ எனும் பெயரில் மசூதியை இடித்து தள்ளிய கிரிமினல்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறி இந்துத்துவ நீதியை நிலைநாட்டி உள்ளது உச்ச “அநீதி” மன்றம். 

இந்திய தொல்லியல் துறையில் தலையிட்டு தனக்கு தேவையான அறிக்கையை சமர்ப்பித்து, உச்சநீதிமன்றத்தில் தனக்கு சாதகமானதொரு தீர்ப்பைப் பெற்றுள்ளதன் மூலம் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் இந்து ராஜ்யத்தை கட்டியமைப்பதில் மற்றுமொரு அடியை எடுத்து வைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க மாமன் ராஜ்ஜியத்தை கட்டியமைத்து வெள்ளை மாளிகைக்கு கர சேவை செய்வதில் காங்கிரசுக்கு சளைத்த கட்சி அல்ல என்பதை நிரூபித்துள்ளது. மோடி ஆட்சி ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கு ‘கால்’சேவை செய்ய ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் விளைபொருளான இந்துத்துவப் பாசிசத்திற்கு கரசேவை செய்கிறது உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை பின்வருவனவற்றை ஆதாரமாகக் கொண்டு வழங்கியுள்ளது.

1. ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், கிறித்துவப் பாதிரியார்கள், ஆங்கிலேயரின் பயணக்குறிப்புகள் மற்றும் பிரிட்டிஷ் காலனிய அரசின் ஆவணங்கள்.

2. வரலாறு நெடுகவும் சர்ச்சைக்குரிய (மசூதி) இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று நம்பும் இந்துக்களின் நம்பிக்கை.

3. அயோத்தியா பற்றிய மத இதிகாசங்கள், வால்மீகி ராமாயணம், ஸ்கந்த புராணம், ஸ்ரீராம் சரித் மனாஸ் (Sri Ram Charith Manas)

4. இந்திய தொல்லியல் துறையின் அகழாய்வு அறிக்கை - 2003. 

ஐரோப்பிய பாதிரியார் ஜோசப் டிஃபெந்தலர் குறிப்பையும், மோண்ட்கோமரி மார்ட்டின் (Montgomery Martin) என்பவரின் குறிப்பையும் மேற்கோள் காட்டி அவை பின்வருவனவற்றை உணர்த்துவதாக நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர்:

1. பிரச்சனைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே நிலவி வந்துள்ளது.

2. பிரச்சனைக்குரிய இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீதா ரசோய் (Sita Rasoi), ஸ்வர்க்த்வார் ((Swargdwar -மோட்சம்), பேடி ((Bedi தொட்டில்), போன்றவை ராமர் பிறந்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டு இந்துக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளன.

3. அங்கு யாத்திரீகர்கள் பரிக்கிரமா (Parikrama) உள்ளிட்ட சடங்குகளை செய்யும் வழக்கம் நடைமுறையில் நிலவி வந்துள்ளது.

4. அவாத் நகரை (இன்றைய அயோத்யா) பிரிட்டிஷ் அரசு கைப்பற்றி, 1857இல் தடுப்புச்சுவர் (உள்முற்றத்திற்கும், வெளி முற்றத்திற்கும் இடையில் அதாவது மசூதிக்கும் ராமர் பீடத்திற்கும் இடையில்) எழுப்பப்படுவதற்கு முன்பே, பிரச்சினைக்குரிய இடத்தில் 1528 முதல் 1857 வரையிலான காலகட்டத்தில் இந்துக்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். ஆனால் இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் மசூதியில் தொழுகை நடந்ததற்கான ஆதாரம் இல்லை. என்கின்றனர் நீதிபதிகள்.

மேலும் பிரிட்டிஷ் காலனிய அரசின் ஆவணங்களை எடுத்துக்காட்டி “பிரிட்டிஷ் அரசாங்கம் மசூதியின் வெளி முற்றத்தில் வடக்குப் பகுதியில் மற்றுமொரு கதவை திறந்து விட்டது. இதுவே இந்துக்கள் உள்ளே சென்று வெளி முற்றத்தை நிர்வகிக்க வழி ஏற்படுத்தி தந்தது” என்றும் “ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட (ஆங்கிலேயரின்) குறிப்புகள் உறுதிப்படுத்தும் சான்றாதாரங்கள் ஆக சிறப்பாக திகழ்கின்றன” என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கையே மதப் பூசல்களை தீர்த்து வைத்ததாக என்று கூறி காலனியாதிக்க அடிமைப் புத்தியை வெளிப்படுத்தியுள்ளது மட்டுமின்றி, தமது தீர்ப்பிற்கும் அவ்வாறே நியாயம் கற்பிக்கின்றனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். அதாவது மதப் பூசல்களுக்கு தீர்வு பெரும்பான்மை மதத்திற்கு சிறுபான்மை மதம் அடி பணிவதே என்கின்றனர்.

இது குறித்து தீர்ப்பு கூறுவதாவது: “ராமர் பிறந்த இடத்தில் இந்துக்கள் வழிபட்டு வந்ததை யாரும் தடுக்கவில்லை; 1856-57 நிகழ்வுகளுக்கு முன்பிருந்தே வழிபாடு தொடர்ந்து நடந்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கையை மசூதியின் கட்டிடம் அசைத்து விடவில்லை” எனவும், “இரண்டு பாதைகள் இருந்தபோதும் இந்துக்கள் கருவறைக்கு மரியாதை செலுத்துவதற்காக உள்முற்றத்திற்கும், வெளி முற்றத்திற்கும் இடையில் நின்றார்கள்” எனவும் கூறி இந்து மதச் சார்பை வெளிப்படுத்துகின்றனர் நீதிபதிகள். 

“1857இல் உள்முற்றத்திற்கும், வெளி முற்றத்திற்கும் இடையில் காலனி ஆட்சியாளர்கள் தடுப்புச் சுவர்கள் எழுப்பிய பிறகும் மசூதியை சுற்றியுள்ள இடங்களில் சாமி கும்பிடுவதற்ககான முயற்சிகளை இந்துக்கள் மேற்கொண்டார்கள் எனவும், வெளிமுற்றத்தின் உரிமை இந்துக்களின் பிரத்தியேகமானதாகவும், தடுக்கப் படாமலும் இருந்ததை மெய்ப்பிக்க முடியும்” எனவும் நீதிபதிகள் கூறுகிறார்கள். 

இந்துக்களின் பூஜை தங்கள் தொழுகைக்கு இடையூறாக இருப்பதாகவும், “இந்துக்களுக்கு பீடம் உரிமை இல்லை: கோவில் கட்டவும் அனுமதி இல்லை” எனவும் இசுலாமியர்கள் பல முறை ரிட் மனு தாக்கல் செய்ததற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் காலனிய ஆவணங்களிலேயே ஆதாரம் இருந்தாலும் அவற்றை மூடி மறைக்கின்றது உச்ச நீதிமன்றம். 1857 வரை மசூதியை சுற்றியுள்ள வெளி முற்றத்தில் இந்துக்களின் வழிபாடு நடந்துள்ளதை இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்கிறது உச்ச நீதி மன்றம். ஆனால் 1528 முதல் இன்று வரை கண்முன்னே நிற்கும் மசூதி நீதி மன்றத்தின் காவிக் கண்களுக்கு தெரியவில்லை.

ஆர்.எஸ்.எஸ் கும்பல் பாபர் மசூதியில் தொழுகை நடக்கவில்லை என்று கூறுவது அறிவிலித்தனமா? வரலாற்றைப் புரட்டும் அயோக்கியத்தனமா? அல்லது இரண்டுமா? இந்த காட்டுமிராண்டிகளின் வாதத்தை ஏற்று தீர்ப்பு எழுதியுள்ளதன் மூலம் உச்ச நீதிமன்றம் இந்துத்துவப் பாசிசத்தின் கைப்பாவையாக செயல்படுவது பச்சையாக தெரியவில்லையா? 

இந்துக்களின் உரிமையை அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வலியுறுத்துவதன் மூலம் இசுலாமியர்களுக்கு மசூதியின் மீதான பிரத்தியோக உரிமை ஏதுமில்லை என்பதாக தீர்ப்பு சொல்லாமல் சொல்கிறது. மேலும் “1857 வரை மசூதியில் தொழுகை நடந்ததற்கான ஆதாரங்களையும், உள் முற்றத்தினை தங்களின் பிரத்தியோக உரிமையாக வைத்திருப்பதற்கான ஆதாரங்களையும் இசுலாமியர் தரப்பு தாக்கல் செய்யவில்லை” எனவும் கூறியுள்ளது. இதிலிருந்தே மசூதி மீது இசுலாமியர்களுக்கு உரிமை இல்லை எனும் முடிவிற்கு வருகிறது உச்ச நீதிமன்றம். அது குறித்து தீர்ப்பில் “உள் முற்றம், வெளி முற்றம் உள்ளிட்ட ஒட்டு மொத்த இடத்தின் உரிமை எனும் வகையில்; இசுலாமியர்களின் சாட்சியத்தை விடவும், இந்துக்களின் சாட்சியம் சிறப்பானதாக உள்ளது” என்று நீதிபகள் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, குறிப்பிட்ட அந்த 2.77 ஏக்கர் நிலத்திற்குள் தான் ராமர் பிறந்தார் என்று கூறி மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒட்டுமொத்த 67 ஏக்கர் நிலத்தையும் சங் பரிவார குண்டர்களை உள்ளடக்கிய அறக்கட்டளைக்கு வழங்க பாஜக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். 

இந்துக்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன? இந்துக்களின் நம்பிக்கை! கண் முன்னே நிற்கும் மசூதி? அது மாயை! அது ஆதாரம் இல்லை! 

இசுலாமியர்களின் இரத்தம் குடித்த கலவரங்கள்? இசுலாமிய கர்ப்பிணித் தாயின் பிறப்புறுப்பில் கை நுழைத்து கருவறுத்து சிசுவை வெளியே எடுத்து வீசிய காட்டுமிராண்டித்தனம்? அவை ஆர்.எஸ்.எஸ்-வி.ஹெச்.பி குண்டர்களின் மத உரிமைப் போராட்டங்கள்! 

முத்தாய்ப்பாக, 1949 இல் மசூதிக்குள் ராமர்-சீதை சிலைகள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதும், 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் சட்ட மீறல்-கிரிமினல் குற்றம் என்று கூறிவிட்டு (நாடகமாடிவிட்டு), கிரிமினல் குற்றவாளிகளை தண்டிக்க வழி காட்டாமல் அவர்களிடமே மசூதியை முழுவதுமாக இடித்து ராமர் கோவிலை கட்டும் அதிகாரத்தையும் வழங்குகிறது உச்ச நீதி மன்றம். பாபர் மசூதியை முழுதாக இடிக்காதது கிரிமினல் குற்றம் என்றல்லவா இதன் பொருள்? ஆகவேதான் 1992 இல் சரியாக இடிக்கப்படாத மசூதியை தற்போது முழுதாக இடித்து தரை மட்டமாக்க சட்ட அங்கீகாரம் தந்துள்ளது உச்ச நீதிமன்றம். 

ஜோசப் டிஃபென்தலர் மற்றும் மார்ட்டின் போன்ற கிறித்துவ மத போதகர்களின் குறிப்புகள் ஆதாரமற்றவை; அவை வெறும் வதந்தி என்று ஏ.ஜி.நூராணி போன்ற நீதிபதிகளும், இர்பான் ஹபீப், டி.என்.ஜா போன்ற மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். காலனியாதிக்க வாதிகளின் கருத்துகள் பொய்யானவை எனவும், அவை காலனியாதிக்க நலன்களில் இருந்து இந்து இஸ்லாமியர் மதக் கலவரங்களுக்கு இட்டுச்சென்றது என்பதையும் நாம் ‘வரலாற்றுச் சுருக்கம்‘ தலைப்பில் பார்த்தோம்.

மேற்கூறியவாறு, இந்துக்களின் நம்பிக்கை எனும் பெயரில் ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பொருட்டு தனது தீர்ப்பிற்கு ஆதாரமாக இந்திய தொல்லியல் துறையின் பொய்யான அறிக்கையை எடுத்துக் காட்டுகிறது உச்ச நீதிமன்றம். 2002இல் வாஜ்பாய் ஆட்சியில் அகழாய்வு தொடங்கப்பட்டு , 2003இல் காங்கிரசு ஆட்சியில் அலகாபாத் நீதி மன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தான் தற்போது உச்ச நீதி மன்றமும் எடுத்துக் காட்டுகிறது. 

அறிக்கையின் சுருக்கம்: 

1)ஒரு மேற்கு சுவர்: இசுலாமிய முறையிலான கட்டிட அமைப்பு 

2)50 தூண் தளங்கள் (Pillar bases): உடைந்த செங்கற்களால் ஆனவை (கோவிலுடன் தொடர்புடையவை) 

3)மசூதியின் கீழ் கோவில் இல்லை. ஆனால் இசுலாமிய முறை சாராத கட்டிட அமைப்புகள் உள்ளன... அங்கு கல் கோவில் (stone temple) ஒன்று இருந்துள்ளது. 

போன்றவை கண்டெடுக்கப்பட்டதாக அகழாய்வு அறிக்கை கூறுகிறது. 

1989 இல் இத்துறையின் இயக்குனரும் ஆர்.எஸ்.எஸ் எடுபிடியுமான பி.பி.லால் என்பவரின் “மசூதிக்கு அருகில் கோவில் இருந்தது” எனும் பொய் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை (2003) தயாரிக்கப்பட்டுள்ளது. மசூதியின் கீழ் இசுலாமிய அமைப்புக் கட்டிடம் இல்லை என்று கூறுவதன் மூலம் அது இந்துக் கோவிலாகாத்தான் இருக்கும் எனும்படியான “நடுநிலை வேட” அறிக்கையை தொல்லியல் துறை அளித்துள்ளது. காங்கிரசு, பாஜக கட்சிகளின் தலையீடே இதன் காரணமாகும். 

இந்த அறிக்கை முரண்பாடான அறிக்கை என்று கூறி வக்பு வாரியம் மறுத்து விட்டது. தொல்லியல் ஆய்வாளர்களான சுப்ரியா வர்மா மற்றும் ஜெயா மேனன் இருவரும் 2010 இ.பி. டபுள்யூ இதழில் இந்த அறிக்கையையும் அதனடிப்படையில் வழங்கப்பட்ட அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பையும் மறுத்து எழுதினர். இந்திய தொல்லியல் துறையானது மசூதிக்கு கீழ் கோவிலை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற முன்முடிவோடு செயல்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அரசியல் தலையீட்டின் காரணமாக அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வர்மா “தொல்லியல் துறை எவ்வித விதிகளையும் பின்பற்றவில்லை எனவும், மசூதிக்கு அருகில் கோவில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை எனவும், உண்மையில் பழைய மசூதிகளை இடித்தே பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது” எனவும் கூறுகிறார்.

அகழ்வாய்வின் போது பார்வையாளராக அனுமதிக்கப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.ஷி.அலி நதிப் ரெஜாவி கூறுவதாவது “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புராதன நினைவுச் சின்ன பாதுகாப்புச் சட்டம் 1904, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் அகழாய்வு இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1954க்கு எதிரானதாகும். வழிபாட்டு இடங்கள் (சிறப்பு பிரிவு) சட்டம் 1991 அயோத்தியாவிற்கு விதிவிலக்கு அளித்துள்ளது. ஆனால் இது பிற மசூதிகள் மீதான உரிமை கோரல்களுக்கு துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது” என்கிறார். அவர் மேலும் “தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது; அவர்களின் முடிவுகளுக்குப் பொருந்தாதவற்றை மூடி மறைத்தனர்; பெருமளவில் விலங்குகளின் எலும்புகளும் தோண்டி எடுக்கப்பட்டன. மசூதியின் கீழ் முன்பு கோவில் இருந்தது எனில் விலங்குகளின் எலும்புகளுக்கு அங்கு என்ன வேலை ? இத்துடன் சைனா வேர் (china ware) மற்றும் மினுமினுப்பான கண்ணாடி (glazedware pottery) போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் இஸ்லாமிய காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். கோவில் சம்பந்தப்பட்டவையோ அல்லது இந்து மதம் சார்ந்த கட்டிட அமைப்பைச் சார்ந்தவையோ அல்ல” என்று குறிப்பிடுகிறார். 

இதுகுறித்து மார்க்சிய வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப் “1528-க்கு முந்தைய கட்டிட அமைப்பு பற்றி தொல்லியல் துறையின் முடிவுகள் தவறானவை என்பதை நீதிமன்றம் பார்க்கத் தவறிவிட்டது” என்கிறார். மேலும் அவர் “இந்து மத நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பு என்பது வெறும் கற்பனையான நீதி ஆகும்; ராமர் அயோத்தியில் பிறந்தார் என்று நம்பிக்கை நிலவுகிறது; ஆனால் குறிப்பிட்டு எந்தவொரு இடத்திலும் பிறந்தார் என்ற நம்பிக்கை ஏதும் நிலவவில்லை; ராமர் பிறந்தது பற்றி ஸ்கந்த புராணம் குறிப்பிட்டிருந்தாலும் குறிப்பிட்ட இடம் என்று எதையும் குறிப்பிடவில்லை; மேலும் அது மசூதி கட்டப்பட்ட பிறகு 1600களில் தொகுக்கப்பட்ட புராணமாகும். இதை விஹெச்பியின் சாட்சியும் சமஸ்கிருத ஆய்வாளரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான டி.பி.வர்மாவே ஒப்புக்கொண்டுள்ளார். மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என ஸ்கந்த புராணம் கூறவில்லை” என்கிறார். 

‘வகுப்புவாத வரலாறும், ராமரின் அயோத்தியும்’ என்ற தனது நூலில் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர் ஆர்.எஸ் சர்மா கூறுவதாவது: மத்திய காலகட்டத்தில்தான் அயோத்தியா மதம் சார்ந்த புனித ஸ்தலமாக மாறியது. விஷ்ணு ஸ்மிருதியின் அத்தியாயம் 85இல் பட்டியலிடப்பட்ட புனித ஸ்தலங்களில் அயோத்தியாவை புனித ஸ்தலமாக குறிப்பிடவில்லை. 1574இல் துளசிதாஸ் தான் எழுதிய ‘ராம்சரித் மனாஸ்’-ல் அயோத்தியா புனித ஸ்தலம் என குறிப்பிடவில்லை. இவை பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில் கோவில் ஏதுமில்லை என்பதையே காட்டுகின்றன என்கிறார்.

மற்றுமொரு புகழ்பெற்ற மார்க்சிய வரலாற்றாய்வாளரான டி.என்.ஜா பின்வருமாறு கூறுகிறார்: “நான் உட்பட சூரஜ் பான், அதன் அலி, ஆர்.எஸ் சர்மா நான்கு வரலாற்று ஆய்வாளர்களும் ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப் படவில்லை என்பதை ஆதாரபூர்வமாக அறிக்கையாக அரசுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அரசு அதை கண்டு கொள்ளவேயில்லை” என்கிறார். மேலும் அவர் “தொல்லியல் ஆய்வு தூண் தளங்கள் (Pillar bases)  பற்றி கூறுகிறது. இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் பி.பி.லால்(B.B.Lal) முதலில் அயோத்தியாவில் அகழாய்வு செய்தவர் ஆவார். 1988-ல் அளித்த அறிக்கையில் ‘தூண் தளங்கள்’ பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஆனால் 1989 நவம்பரில் லால் தலைகீழாக மாறி, அக்டோபர் 1990-ல் ஆர்.எஸ்.எஸ் வெளியீடான ‘மந்தன்’  (Manthan)இல் “தூண் தளங்கள்” (கோவில் தொடர்புடைய) பற்றி எழுதுகிறார். இதையொட்டியே தற்போதைய தொல்லியல் ஆய்வறிக்கையும் அமைந்துள்ளது. இது முன்முடிவுகளுடன் செய்யப்பட்ட ஆய்வாகும். 2002-2003ஆம் ஆண்டுகளில் நடந்த அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட விலங்கு எலும்புகள், மினுமினுப்பான பாண்டங்கள் மற்றும் ஓடுகள் போன்ற ஆதாரங்கள் (இஸ்லாமிய காலகட்டத்தைச் சேர்ந்தவை) மறைக்கப்பட்டன. எனவே குறிப்பிட்ட 2.77 ஏக்கரில் தான் ராமர் பிறந்தார் என்பது நிரூபிக்கப்பட முடியாத ஒன்றாகும். இதில் எந்த தர்க்க நியாயத்தையும் காண முடியவில்லை. வரலாறு நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்படக் கூடியதல்ல” என்கிறார். 

“பி.பி லால் ஆர்.எஸ்.எஸ் இதழில் வெளியிட்ட அறிக்கையானது அத்வானியின் இரத யாத்திரையின் போது வெளியிடப்பட்ட அறிக்கையாகும்” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் எஸ்.அலி நதீப் ரெஜாவி. 

எனவே, தொல்லியல் துறையில் துவக்கம் முதலே ஆர்.எஸ்.எஸ். தலையீடு இருந்து வந்துள்ளது என்பதையும், அதை அடுத்தடுத்து வந்த காங்கிரசு ஆட்சியும் ஆதரித்து வந்துள்ளது என்பதையுமே மேற்கண்ட அறிஞர்களின் கூற்றுகள் நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 

உச்ச நீதி மன்றம் அகழாய்வு அறிக்கையை எடுத்துக் காட்டினாலும், இதையும் உறுதியான ஆதாரமாகக் கொள்ளவில்லை. முழுக்க முழுக்க இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்துக்களின் நம்பிக்கை எனும் பெயரில் சங் பரிவார இந்து மத வெறியர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் பொருட்டு தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதி மன்றம். இது 500 ஆண்டுகால இந்துக்களின் நம்பிக்கை என்று கூறுவதன் மூலம் , மசூதி இடிப்பிற்கு காரணம் வி .ஹெச்.பி -பஜ்ரங்தள்-பாஜக குண்டர் படைகள் அல்ல என்பதை மறைமுகமாக சொல்கிறது. இதன் மூலம் சங்பரிவாரங்களின் கரசேவகனாக, இந்துத்துவப் பாசிசத்தின் கைக்கூலியாக-ஒடுக்குமுறைக் கருவியாக உச்ச நீதிமன்றம் மாறியுள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. 

3) காங்கிரசு கட்சி மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் நிலைபாடு என்ன?

தரகு முதலாளித்துவ பெருந்தேசியவெறி பாசிச காங்கிரசு கும்பல் தீர்ப்பை வரவேற்றுள்ளது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் ஆர்எஸ்எஸ்-பாஜக பண்டார குண்டர்களின் ‘இந்துத்துவப் பாசிசத்தின்’ பாதுகாவலனாக காங்கிரஸ் கட்சி துவக்கம் முதலே செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் பாஜக கட்சிகளுக்கு இடையிலான ‘கள்ளக்காதல்’ தான், ஏகாதிபத்திய புதிய காலனி ஆதிக்கத்திற்குச் சேவை செய்ய (பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை பெற்று) ஆட்சியில் அமரும் பொருட்டு சிறுபான்மை முஸ்லிம் மதத்தினர் மீதான பாசிச ஒடுக்குமுறைக்கு காரணமாக இருந்து வருகிறது. ஆகவேதான் பாசிச எதிர்ப்பு முன்னணியின் பிரதான இலக்குகளாக இவ்விரு கட்சிகளும் விளங்குகின்றன.

திமுக, அதிமுக போன்ற மாநில தரகு முதலாளித்துவ திராவிட கட்சிகள், இந்துத்துவப் பாசிசத்தின் தொங்கு சதைகளாக விளங்குவதால் தீர்ப்பை ஆதரிக்கின்றன. ஆம் ஆத்மி, மாயாவதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட அநேக மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகள் தீர்ப்பானது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி இந்துத்துவப் பாசிசத்திற்கு வால் பிடிக்கின்றன. காரணம் ஏகாதிபத்திய புதிய காலனிய-பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதில் பாஜக-காங்கிரஸ் போன்ற அகில இந்திய பாசிசக் கட்சிகளுக்கும், மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

சிபிஎம், சிபிஐ போன்ற திருத்தல்வாதக் கட்சிகளும் இத்தீர்ப்பை ஆதரித்துள்ளன. சிபிஎம் கூறுவதாவது, “ஒரு மதச்சார்பற்ற குடியரசில் பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு ஒரே வழி நீதித்துறையின் மூலம் தீர்வு காண்பதே ஆகும். ஆகவேதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது ஆழமான கருத்து வேறுபாடுகள் இருப்பினும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது” எனவும், “விமர்சனங்கள் இருந்தாலும் பிரச்சனையை தீர்க்கும் நோக்கத்தோடு வழங்கப்பட்டுள்ளதால் தீர்ப்பை ஏற்கிறோம்” எனவும் கூறுகிறது. மேலும், “இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தாலும்ஞ் ஆகவே தீர்ப்பை ஏற்றுக் கொண்டாலும்ஞ் சமரசம் என்ற பொருள் ஆகாது” என நெளிகிறது சிபிஎம். என்ன சங்கடம்? உச்சநீதிமன்றம் ஜனநாயக முகமூடியை கழற்றி விட்டு அம்மணமாய் நிற்பது சங்கடமாக உள்ளது போலும். சமரசம்! ஆனால் சமரசம் இல்லை! தங்களுக்குள்ள ‘நீதிமன்ற மோகத்தை’ பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறி மக்கள் மீது திணிப்பதுதான் சகிக்க முடியாததாக உள்ளது. 

இது மதச்சார்பற்ற குடியரசா? அரசுக்கும் மதத்துக்கும் நெருக்கமான உறவு இருப்பது தெளிவாக தெரியவில்லையா? உச்ச நீதிமன்றம்தான் உயர்ந்தபட்ச அமைப்பா? வரலாற்றை தீர்மானிப்பது மக்களா? உச்சநீதிமன்றமா? அரசு வர்க்கச் சார்பற்றதா? இந்தியாவில் பாசிசமே இல்லை. மதவாதம் தான் உள்ளது என்று கூறி காங்கிரசு, திமுக, அதிமுக முதல் தேமுதிக வரை பாரபட்சமில்லாமல் அவற்றிற்கு முட்டுக்கொடுத்த சிபிஎம், சிபிஐ கட்சிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதில், மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதில் கேரள அரசுக்கும் பாஜக அரசுக்கும் என்ன வேறுபாடு?

இந்த தீர்ப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறதாம்!! சிபிஐ சொல்கிறது! இவ்விரு கட்சிகளும் பாராளுமன்ற மாயை-உச்சநீதிமன்ற மாயைகளில் மூழ்கித் திளைக்கின்றன. பாசிசத்திற்கு சேவை செய்கின்றன. உழைக்கின்ற வர்க்கங்களுக்கு துரோகம் செய்கின்றன. பாசிச எதிர்ப்பு முன்னணியில் இடம் பெறுவதற்கான தகுதியை இழந்து நிற்கின்றன. 

4) எம்-எல் அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும் 

எம்எல் அமைப்பு எனப்படும் ரெட் ஸ்டார் ‘சமநிலைத் தீர்ப்பு’ (Balanced Order) என்று கூறுகிறது. சிபிஎம் கட்சியை போன்றே விமர்சனம் செய்து விட்டு தீர்ப்பை ஆதரிக்கிறது.

மக்கள் அதிகாரம், பு.இ.மு போன்ற அமைப்புகளும், தோழர் தியாகுவின் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய பேரியக்கம், தமிழ் தேச மக்கள் கட்சி,நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் தேசிய அமைப்புகளும், தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பும் இத்தீர்ப்பை கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

சன்னி வக்பு வாரியம் தீர்ப்பை ஏற்கவில்லை என்றாலும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் இத்தீர்ப்பை கண்டித்துள்ளன. ஆனால் அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 

எங்களுக்கு தேவை நீதி தான்; ஐந்து ஏக்கர் நிலம் அல்ல என்று இசுலாமியர்கள் கூறுவது மிகவும் சரியே. இது வெறும் கட்டிட பிரச்சனை அல்ல; இது சிறுபான்மை மதத்தினரின் மத உரிமை-மத சுதந்திரம் பற்றிய பிரச்சினையாகும். இதற்காக பல ஆயிரம் இஸ்லாமியர்கள் சங் பரிவாரங்களால் கொல்லப்பட்டுள்ளனர்; வீடிழந்து நிற்கின்றனர்; இஸ்லாமிய சமூகம் இதற்காக பெரும் விலை கொடுத்துள்ளது. அச்சமூகத்தின் ஜனநாயக உரிமைக்காகப் போராடுவது அனைத்து ஜனநாயக அமைப்புகளின் கடமையாகும். அதே போன்று இஸ்லாமிய அமைப்புகளும், உச்சநீதிமன்றம், காங்கிரசு, திமுக போன்ற மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகளின் மீதான மாயைகளில் இருந்து வெளியே வரவேண்டும். மா-லெ இயக்கங்கள் பிற ஜனநாயக அமைப்புகள் மற்றும் பரந்துபட்ட உழைக்கும் மக்களைச் சார்ந்து நின்று போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

பாட்டாளி வர்க்க நிலைபாடு 

ராமர் கோவில் கட்டுவதால் இந்தியாவின் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடுமா?

ராமர் கோவில் கட்டுவதால்.....

1.கல்வி நிறுவன கொலைகளால் மாண்டு வரும் பாத்திமாக்களுக்கு நீதி கிடைக்குமா?

2.நடூரில் ‘தீண்டாமைச் சுவரால்’ படுகொலை செய்யப்பட்ட 17 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்து விடுமா? சாதி ஒழியுமா ?

3.இரண்டு சதத்திற்கும் கீழே வீழ்ந்து போன தேசிய உற்பத்தி விகிதம் உயருமா? வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நீங்குமா?

4.விவசாயிகளின் தற்கொலையும், பட்டினிச் சாவுகளையும், தொழிலாளர்களின் கொத்தடிமைத்தனமும் நின்றுவிடுமா? வறுமை, வேலைவாய்ப்பின்மை ஒழியுமா?

5.நாடு அந்நிய நிதி மூலதனத்திற்கும், பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுக்கப்படுவது நின்று விடுமா? 

எதுவும் நடைபெறப் போவதில்லை. உண்மையில் இதைப் பற்றிய விவாதங்களையும், போராட்டங்களையும் திசை திருப்புவதற்கே ‘ராமர் கோவில் திட்டம்’ சேவை செய்கிறது. 

ராமராஜ்யம் அமைப்பதும், ராமர் கோவில் கட்டுவதும் பலகோடி இந்துக்களின் கோரிக்கையா? நிச்சயம் இல்லை; அது அனைத்து இந்துக்களின் கோரிக்கையும் அல்ல; இந்து மதத்தில் உள்ள பின்தங்கிய மத வெறி சக்திகளின் கோரிக்கை அது. ஆர்எஸ்எஸ் விஹெச்பி சங்பரிவார பண்டார குண்டர்களின் கோரிக்கை. நிலபிரபுத்துவ மன்னாரட்சியில் நடந்த மத மோதல்களுக்கு, சனநாயக காலத்தில் (இவர்கள் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும்) பழி தீர்ப்பது பேதமையாகும். இவர்கள் தங்கள் ஆட்சியின் மக்கள் விரோத அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்த போராட்டங்களை மடை மாற்றவே ராமர் கோவில் பிரச்சனையை எழுப்புகின்றனர். ‘ராம ராஜ்யம்‘ எனும் பெயரில் அமெரிக்க மாமன் ராஜ்ஜியம் அமைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கால்களை நக்கிப் பிழைக்கவே ‘ராமராஜ்யம், இந்து ராஷ்டிரம்‘ என்றெல்லாம் முழங்கி பாசிச ஆட்சியை கட்டியமைக்கின்றனர். 

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஆக்டோபஸ் கரங்கள் எங்கெல்லாம் நீள்கிறதோ அங்கெல்லாம் பாசிசத்தை கட்டி அமைப்பது ஆளும் வர்க்கங்களுக்கு அவசியமாகவும், தேவையாகவும் இருக்கின்றது.அமெரிக்க நேட்டோ முகாமிற்கும், சீன ரஷ்ய முகாமிற்கும் இடையில் உலகை மறுபங்கீட்டிற்கான பனிப்போர் நிலைமைகள் உருவானதையடுத்து, ஏகாதிபத்தியவாதிகள் தமது நாடுகளிலும், தம் காலனிய நாடுகளிலும் உள்ள மக்கள் மீது தமது நிதி மூலதன நெருக்கடியின் சுமைகளை சுமத்துகின்றனர். இதை எதிர்த்து மக்கள் சாதி கடந்து மதம் கடந்து இனம் கடந்து வர்க்கமாக அணி திரண்டு போராடுவது உலகளாவிய போக்காக மாறி வருவதால் அவை ஆளும் வர்க்கங்களை ஆட்டம் காணச் செய்கின்றன. பிரான்ஸ், சிலி, இந்தியா என உலகெங்கும் போராட்ட கோலம்! இந்த வர்க்க அணிச் சேர்க்கையை சாதி வெறி, மதவெறி, தேசிய வெறி, நிறவெறி உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகளின் மூலம் பிளவுபடுத்தி சிதைக்கின்றன ஆளும் வர்க்கங்கள். இந்து முஸ்லிம் கலவரங்களையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினருக்கு இடையில் மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவினருக்குள்ளேயும் கூட சாதிக் கலவரங்களையும் தூண்டுகின்றன. தேசிய இனங்களுக்குள் பகைமையை ஊட்டுகின்றன. காங்கிரசு பாஜக கட்சிகள் இதன் பொருட்டே பாசிசத்தை கட்டி அமைக்கின்றன. அதற்கு மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகள் ஆதரவு தந்து அண்டிப் பிழைக்கின்றன.

ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களின் போர் வெறியும், பாசிசமும் தீவிரமடைந்து வருவதால், ‘மதம்’ பிடித்து அலையும் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்கள், காலனிய நாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளிலுள்ள ‘மதங்களை’ கருவியாகப் பயன்படுத்தி மத மோதல்களைக் கட்டி யமைக்கின்றன. இலங்கையில் தேவாலயம் மீதான தாக்குதல், சிங்கள பௌத்த பேரினவாதம், ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் சியா- சன்னி மதப் பூசல்கள், இந்தியாவில் இந்து முஸ்லிம் கலவரங்கள் என அனைத்துவித ‘மதப் பூசல்களையும்’ ராஜீவ்காந்தி, மோடி, ராஜபக்சே, கோத்தபயா போன்ற தங்களது கைக்கூலிகள் மூலம் ஊட்டி வளர்க்கின்றன. தமது காலனியாதிக்கத்தை நிலை நிறுத்தவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை திசை திருப்பவும் இவ்வாறு செய்கின்றன.இதன் ஒரு பகுதியாகவே, பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சினையைக் காண வேண்டும். 

இப்பிரச்சினை பழைய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்தது போலவே, தற்போதைய புதிய காலனியாதிக்கத்திற்கும் சேவை செய்கிறது. எனவே சாதி, மத, தேசிய இனப் பகைமைகளின் அரசியல் பொருளாதார அடிப்படையான புதிய காலனியத்தை எதிர்த்தப் போராட்டமும் பாசிசத்தை எதிர்த்தப் போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். பாசிசத்தால் ஒடுக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், சிறு குறு நடுத்தர தேசிய முதலாளிகள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பிற புரட்சிகர, சனநாயக சக்திகள் அனைவரையும் உள்ளடக்கி கீழிருந்து ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்டியமைக்க வேண்டியது அவசியமாகும்.

இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்தும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பைப் திரும்பப் பெறக் கோரியும், பாபர் மசூதியைப் புனரமைத்து இசுலாமியர்களிடம் ஒப்படைக்கச் சட்டமியற்றக் கோரியும் நாடு முழுவதும் மக்கள் இயக்கங்களைக் கட்டி அமைப்பதும் போராடுவதும் நமது உடனடிக் கடமையாக மாறியுள்ளது.

சமரன்

டிசம்பர் 2019