தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்து என்.டி.ஏவை நீக்க வேண்டும்
சாவித்திரி கண்ணன்
உலகம் என்பதே ஒரு நாடக மேடை!
அதில் உச்ச நீதிமன்றமும் தனக்குரிய பாத்திரத்தை திறம்படச் செய்கிறது!
நீட் தேர்வை நடத்தும் நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்ஸி கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையாம். இது வருத்தமளிக்கிறதாம்! - உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு!
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மோசடிகள் அரங்கேறுகின்றன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்து தேசிய தேர்வு முகமை எனப்படும் என்.டி.ஏவை நீக்க வேண்டும்’’ என அகில இந்திய மருத்துவர் சங்க கூட்டமைப்பு வழக்கு தொடுத்தற்கு உச்சநீதிமன்றத்தின் ரியாக்ஷன் இது.
இந்த தேர்வை கல்வியாளர்களைக் கொண்டு நமது அரசாங்கம் நடத்தவில்லை. என்.டி.ஏ எனப்படும் தனியார் ஏஜென்ஸி தான் இதை நடத்துகிறது. அந்த ஏஜென்சி தொடர்ந்து தில்லுமுல்லுகளை தில்லாகச் செய்கிறது. இதன் மூலம் தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கி, சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிரையுமே துச்சமாக மதிக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்!
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எனப்படும் தனியார் ஏஜென்ஸி. வினாத்தாள் விற்பனை மூலம் பல கோடிகள் ருசி பார்க்கிறார்கள். கருணை மதிப்பெண் என்ற வகையில் 1500 மாணவர்களுக்கு ரசசியமாக கூடுதல் மார்க் தந்து பல கோடிகள் பார்க்கிறார்கள். இந்த மோசடிகள் மீண்டும், மீண்டும் நிருபணமான நிலையில் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸியை ஏன் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் இப்படி வினாத்தாள் வெளியாகும் போது அது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வருவதும் அது குறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைப்பதும், அந்தக் குழுவிடம் பரிந்துரைகள் பெற்று அதனை அப்படியே மூலையில் தூக்கி கடாசிவிட்டு அடுத்த ஆண்டு அநீதிகளை அரங்கேற்றுவதும் வாடிக்கையாகிவிட்டதே.
அப்படியானால் இந்த நிபுணர் குழு, பரிந்துரைகள் என்பதெல்லாம் அந்த நேர கொந்தளிப்பை மட்டுப்படுத்த போடும் நாடகங்கள் தானே!
முதலாவதாக நீட் தேர்வு என்பது தகுதி தேர்வுக்கானது என்ற மாயையை உச்ச நீதிமன்றம் உடைக்கத் தயாரா?
கஷ்டப்பட்டு தேர்வு எழுதி 700-க்கு 650-க்கும் அதிகமாக மார்க் வாங்கிய மாணவன் நிராகரிக்கப்பட்டு, மேனேஜ்மெண்ட் கோட்டாவில் வெறும் 135 மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவன் பல கோடிகள் தந்து படிப்பில் சேர வழிவகுத்து தருகிறது, இந்த நீட் தேர்வு. ஆக, இது மருத்துவ கல்வி வணிகத்திற்கு தான் வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெறுமனே வருத்தப்படத் தான் முடியும் என்பது எத்தனை பெரிய அவலம்…!
தகுதியான, திறமையான மருத்துவர்களை உருவாக்க மறுப்பதும்,
லஞ்ச, ஊழல் முறைகேடுகளை வளர்ப்பதும்
நீட் தேர்வின் நோக்கமாக உள்ளது!
2016 முதல் 2026 வரை நீட் தேர்வில் நடந்து வரும் முறைகேடுகள் இதனை அப்பட்டமாக உணர்த்துகின்றன. கல்வியிலும், மருத்துவத்திலும் மனிதாபிமானமற்ற தனியார் மயத்தை தீவிரப்படுத்தும் வணிக நோக்கம் தான் நீட் தேர்வின் உள்ளார்ந்த நோக்கம்.
இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கான குற்றத்தை செய்ததே உச்ச நீதிமன்றம் தான்!
உச்ச நீதிமன்றம் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டால் தான் தீர்வு.
சாவித்திரி கண்ணன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு